Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்21

புள்ளினங்களின் இனிய அலாரத்தில் கண் விழித்த நந்தா கண்டது.. தன் அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியைத் தான்.. இவன் புறம் திரும்பிப் படுத்திருக்க.. அவன் கண்ணில் பட்டது எல்லாம் அவள் மச்சமும் மூக்குத்தியும் தான்.

எதைப் பார்ப்பது.. எதை விடுப்பது எனக் குழம்பியவன் கண்கள் அவள் மூக்குத்தியை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க.. ஒரு விரலால் அதை வருடினான்.

அவனை விட்டுப் பிரிந்து சென்றாலும் அவன் பரிசளித்த மூக்குத்தியைத் தான் அணிந்திருக்கிறாள் என கோவிலின் சந்திப்பிலேயே அவன் உணர.. அதை அறிந்த மகிழ் அவனைத் தள்ளி நிறுத்தியதும் நியாபகம் வர.. ஒரு கிறுக்குத் தனமான புன்னகை அவன் உதட்டில்.

அவன் வருடலில் முகத்தை சுழித்தவள் விழித்துக் கொள்ள.. இத்தனை அருகில் அவனைப் பார்த்தவள் நன்றாக விழித்து அமர.. “குட் மார்னிங் மயிலு” என்றான் நந்தா உற்சாகமாக.



Advertisement

அவளும் “குட்மார்னிங் மாமா.. இன்னைக்காவது இருப்பியா.. இல்லை.. நேத்து மாதிரி எவனுக்கோ வந்த விருந்து மாதிரி எங்கேயாவது ஓடிருவியா” எனக் கேட்க.. “நோ.. நோ.. இன்னைக்கு ஃபுல்லா என் லவ்வபிள் வைஃப் கூடத்தான்.. நோ வொர்க்” என இளித்தவனிடம்.. “பேச்சு எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. பாக்கலாம்.. சீக்கிரமா ரெடி ஆகுங்க.. அப்பாரு சமாதிக்கு போய்ட்டு வந்துடுவோம்.. நேத்தே போகனும்னு அம்மத்தா சொல்லுச்சு” என அவனிடம் சொல்லிவிட்டு அவள் குளிக்கச் சென்றாள்.

மகிழ் அவனை ரெடியாகி வரச் சொல்லிவிட்டு கீழே சமையலறைக்குச் சென்றாள்.. அங்கே அவ்வளவு காலையிலேயே சகுந்தலையும் சரவணனும் அனைவரையும் அழைக்கவும்.. ரேவதி கோவிலுக்குச் சென்றுவிட்டு.. அப்படியே தனக்கு துணி தைக்க வேண்டிய பொருட்களையும் வாங்கச் சென்றிருக்கவும் அப்பத்தா தான் அமர்ந்திருந்தார்..

பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு.. அவரிடம் “காஃபி குடிச்சியா அம்மத்தா” எனக் கேட்டவாறே சமையலறையில் நுழைய.. அவளை பார்வையால் அளந்தவாறே “இப்பத்தான் தோட்டம் போய்ட்டு வரேன்டி” என்கவும்.. அவருக்கு காஃபி எடுத்து வந்து தந்தவள்.. அவர் சொல்லாமலேயே காலை உணவைத் தயாரிக்க ஆரம்பிக்க.. சென்ற முறைக்கும் இந்த முறைக்கும் அவளிடம் இருக்கும் வித்தியாசம் நன்றாகவே அவருக்குத் தெரிந்தது.

Advertisement

பெண் தன் விருப்பத்தின் பேரில் வீட்டிற்குள் வந்தால் தானாய் ஒரு ஒட்டுதல் வந்துவிடும் போல.. நிதானமாக வேலை செய்தவள் அவள் கணவன் வரவும் அவனுக்கும் டீ எடுத்து வந்து தந்தாள்.

Advertisement

நந்தா அதை ருசித்தபடி மனைவியைப் பார்வையால் தொடர்ந்த அப்பத்தாவிடம் “என்ன அப்பத்தா என் பொண்டாட்டியை ரொம்ப சைட் அடிக்கிற.. ஏன் இன்னைக்கு உன் தோழியைக் கூட்டிட்டு எங்கையும் துள்ளித் துள்ளி விளையாடப் போகலையா” எனக் கேட்க..

“நேத்து வரை அம்மா முந்தானைக்குள்ள இருந்தவ இன்னைக்கு எப்படி பெரிய மனுசி ஆனான்னு பாக்கறேன்.. அமிர்து அண்ணனோட ஊர் அழைக்கப் போயிருக்கா” எனப் பேரனுக்குப் பதிலளித்தார்.

நந்தாவிற்கு அதற்குள் இரண்டு மூன்று ஃபோன் கால்கள் வர.. மனைவியை எட்டிப் பார்த்தபடி பின்வாயிலுக்குச் செல்ல.. அனைத்தையும் கவனித்த சாரதா ‘எப்படியோ நல்லா இருந்தா சரி தான்’ என பேரன் வாழ்வு மலர்ந்துவிட்ட திருப்தியில் மகிழுக்கு உதவச் சென்றார்.

Advertisement

முதல்முறை சமைப்பதால் இனிப்புடன் காலை உணவை அவள் செய்து முடித்திருக்க.. சாரதாவை அமர்த்திப் பறிமாறியவள் “எப்படி இருக்கு” என ஆர்வமாக வினவ.. அவரும் நன்றாக உள்ளதாய்க் கூற.. “அம்மத்தா எனக்கு சலங்கைப் பணியாரம் செஞ்சு தா.. நீ செய்யறது செமையா இருக்கும்.. ஒருவாட்டி மாமா கொண்டு வந்து தந்துச்சு” என்றவள் கணவனைத் தேடிப் பின்வாசலுக்குச் சென்றாள்.

அப்போதும் அவன் ஃபோனிலேயே மூழ்கியிருந்தான்.. ஏதோ கட்டிட இறுதி வேலைகள் போல.. அதற்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தான்.. ‘ஃபோனாட இந்தாளுக்கு லவ்வு ஓவர் டைமாவுல்ல போகுது’ என தலையில் அடித்துக் கொண்டவள்.. அவன் முன் சென்று.. இல்லாத சேட்டையெல்லாம் செய்து அவனை அழைத்து வந்து.. அவனுக்கும் பறிமாறி அவளும் உண்டாள்.

பின்னர்.. அப்பத்தாவிடம் அப்பாரு சமாதிக்குச் சென்று வருவதாய் சொல்லிக் கொண்டிருக்க.. அப்போது தனமும் ராகவனும் வந்தனர்.. பக்கத்து வீடு தான் என்றாலும்.. மகள் எப்படி இருக்கிறாளோ என பயந்து கொண்டே வந்த தனத்திற்கு.. மகிழுக்கு தலை துவட்டிக் கொண்டிருந்த சாரதாவைக் காண்கையில் ‘அப்பாடா’ என்றொரு நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது.

இருவரையும் வரவேற்றவளை தனம் கண்டு கொள்ளாது சாரதாவிடம் “ஏம்மா.. ஒழுங்கா இருந்தாளா.. இல்லை.. ஏதாவது குரங்கு சேட்டை பண்ணாளா” என வினவ.. ராகவன் மகளின் தலை வருடி “கண்ணா.. நல்லாருக்கியா” என ஆதூரமாக வினவ.. மகிழ் புன்னகையுடன் தலையசைத்தாள்.. நந்தா ‘மக.. ஒரே நாள்ல இளைச்சுடுவாளோ’ என கடுப்பானான்.

பின் அம்மாவைத் திரும்பி முறைத்தவள் “ம்மா.. நீ எப்பவும் என்னை நம்பவே மாட்டியா.. இன்னைக்கு நான் தான் சமையல் செஞ்சேன் தெரியுமா” என பெருமையாகச் சொல்ல..

உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் “ம்க்கும்.. ஒருநாளைக்குப் பண்ணிட்டா போதுமா.. தினமும் பண்ணனும்” என அவள் அம்மா கூற.. மகிழ் ஏதோ கூற வருவதற்குள் நந்தா இருவரையும் உணவுண்ண அழைக்க.. அவர்கள் மறுக்க.. மகிழ் இருவருக்கும் தன் கையால் செய்த இனிப்பைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

ராகவன் நாக்கில் பட்டும் படாததற்கு முன்பே நன்றாக இருப்பதாகக் கூற மகிழ் முகம் மலர்ந்தது.. அவளின் மகிழ்வைக் கெடுக்க விரும்பாததாலும்.. உண்மையிலேயே அந்த கேசரி நன்றாக வந்திருந்ததாலும் தனமும் பாராட்டிவிட.. மகிழுக்கு உச்சி குளிர்ந்து போனது.

அவளுக்கு தலைபின்னி பூ வைத்துவிட்ட தனம் நிறைவோடே கிளம்பினார்.. அதன்பின் மகிழும் நந்தாவும் அப்பத்தாவிடம் விடைபெற்றுக் கொண்டு சமாதிக்குச் சென்றனர்.

பைக்கில் போகும் போதே நந்தா கேட்டான் “அதென்ன அத்தை நல்லாருக்குன்னு சொன்ன உடனே மூஞ்சி ப்ரைட் ஆகுது.. மாமா சொன்னப்ப லைட்டா இருந்துச்சு” என வினவ..

“அதுவா.. நைனா நான் எவ்வளவு மொக்கையா சமைச்சாலும் அருமையா இருக்குன்னு சொல்வாரு.. அம்மா கூட சொல்லும் நான் உப்பு பத்தாம போட்டாலே எரிஞ்சு விழற மகராசன்.. மக உப்பை அள்ளிக் கொட்டினாலும் மூக்கு முட்ட சாப்பிட்டு தள்ளி வந்து தண்ணி குடிப்பார்னு” என ஆனந்தமாய் சொல்லிக் கொண்டிருக்க

“ஓஓ.. அப்ப.. நீ இந்த டல்கோனா காஃபி போடற டாட்ஸ் லிட்டில் பிரின்சஸா.. ஆனாலும் மீசைக்கு என்ன ஒரு கொழுப்பு.. நேத்துக் கட்டிக் கொடுத்துட்டு இன்னைக்கு உன்கிட்ட நல்லாருக்கியான்னு கேட்கறார்.. ஏன் நான் நல்லாப் பாத்துக்க மாட்டேனா” என்றான் சற்று ஆதங்கமாகவே..

“ஐயோ மாமா.. இதுக்கெல்லாம் கோவமா.. அப்பாவா இருந்து பாத்தாத்தான் அதெல்லாம் தெரியும் போல.. நைனாவை மரியாதை இல்லாம பேசாதிங்க” என அவன் முதுகில் அடித்தவளிடம்..

“அப்ப நானும் மாமனார்ட்ட டியூசன் போறேன்.. நாளைக்கு என் பொண்ணும் இப்படி என்னை விட்டுக் கொடுக்காம பேசினா செமையா இருக்கும்ல” என்றான் ஆசையாக.

அவள் மௌனப் புன்னகையுடன் அமைதியாகிவிட “டன் தானே மயிலு.. ரெண்டு பாப்பா வேணும்” என்றவனிடம்.. “ம்ம்.. ஒழுங்கா வண்டியை ஓட்டுங்க” என்றாள் தன் நாணத்தை மறைத்தவாறே.

நினைவு மண்டபமும் வந்துவிட.. இருவரும் அதற்கு பூ வைத்து வணங்கிவிட்டு.. மகிழ் மேல் திண்ணையிலும்.. நந்தா அதன் கீழ்ப் படியிலும் அமர்ந்திருக்க “நான் தானே மயிலு அப்பாரைக் கொன்னுட்டேன்” என்றான் நந்தா இத்தனை நேரம் இருந்த மகிழ்வு கலைந்து போய்..

அவனைத் தடுத்து “நான் தான் மாமா.. என் பிடிவாதம் தான் காரணம்.. நான் கேட்டதுக்காக அவர் இப்படிப் பண்ணுவார்னு நான் நினைக்கலையே மாமா” என மகிழ் அழ ஆரம்பிக்க..

நந்தா தன் கைக்குட்டையால் அவள் கண்கள் துடைத்தவன் “மயிலு.. இதோட லாஸ்ட்.. இனி நீயோ நானோ இதைப்பத்தி பேச வேண்டாம்.. நிறைய மனக் கஷ்டத்துக்கு அப்புறம் நாம சேர்ந்துருக்கோம்.. அதையெல்லாம் சரி பண்ணனும்.. முடிஞ்சா அத்தைக்கும்.. ரகுக்கும் அவங்க வாழ்க்கையில அடுத்த ஒரு வாய்ப்பு கொடுக்கனும்.. அப்பாவையும் மாமாவையும் சேர்த்து வைக்கனும்.. உன்னோட ஆசைப்படி பணம்ன்ற காகிதம் யாரோட படிப்புக்கும் தடையா வராதபடி திறமை இருக்கறவங்களை முன்ன கொண்டு வரனும்.. இப்படி நிறைய இருக்கு செய்ய.. இதை விட்றலாம்.. சரியா.. போலாம் வா” என அவளை அழைத்துச் செல்ல.. அவள் அவனேயே பார்த்தபடி பின் தொடர்ந்தாள்.

வீட்டிற்குச் சென்றதும் நந்தா முகிலுடன்.. நாளைய பொழுதுக்குத் தேவையான பொருட்களை வாங்க ஆட்களுடன் அவர்கள் இருவருமே செல்ல.. மகிழ் ரேவதியுடன் மதிய உணவைத் தயாரிக்கச் சென்றாள்.

மாலையில்.. வேலைகளில் உதவியாக இருக்கும்படி முத்துவை அவள் அம்மா அனுப்பி வைத்திருக்க.. இருவரும் வேலை என்ற பெயரில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.. நந்தாவும் முகிலும் வந்துவிட.. மகிழ் தண்ணீர் எடுக்க உள்ளே செல்ல.. முத்து முகம் திருப்பியபடி அப்பத்தாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

நந்தா சிரித்தபடி “நீ இன்னும் வளரனும் தம்பி” என வெறுப்பேற்ற.. முகில் “புள்ளைப்பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்” என்க.. மகிழ் அவன் தலையில் கொட்டி “ரெண்டும் உலக ஃப்ராடுங்க.. எங்கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டிங்க.. அவ தனியா மாட்ட மாட்டிங்கறா.. அப்புறம் இருக்கு அவளுக்கு கச்சேரி” என கருவ.. முகில் இளித்து வைத்தான்.

இதே கலகலப்புடன் அடுத்த நாள் விருந்து ஆரம்பமாகியது.. நந்தா வீட்டுப் பின்புறம் நெல் காய வைப்பதற்காக வாசல் பெரிதாக இருக்க.. அங்கே தான் நடந்தது.. ராகவனும் சரவணனும் இரண்டே நாட்களில் பெரிய கூட்டத்தையே சேர்த்திருந்தனர்.. அனைவரிடமும் குனிந்து நிமிர்ந்து ஆசி பெற்றுக் கொள்வதற்குள்ளேயே போதும் போதும் என்றானது இருவருக்கும்.

நந்தா ஒருபுறம் ‘தங்கமயிலு’ ‘வைரமயிலு’ என மகிழை அழைத்து.. ராகவனை வெறுப்பேற்றிக் கொண்டிருக்க.. இங்கே முகிலும் அத்தனை வேலைகளுக்கு இடையிலும்.. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல தன் வேதாளத்தை சாரி முத்துவைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தான்.

ஒரு சமயம் எதையோ எடுப்பதற்காக அவள் கிட்சனை நோக்கிச் செல்லவும்.. அவள் யோசிக்கும் முன் அவள் கரம் பற்றி.. அங்கிருந்த சிறிய ஸ்டோர் ரூமுக்குள் இழுத்துக் கொண்டு வந்தான் முகில்.

அவள் செல்ல முடியாதபடி நிலவில் கையை குறுக்காக வைத்து நின்றவன் “ஏன்டி ஓவராப் படுத்திட்டு இருக்க.. சொல்ற பேச்சையே கேட்க மாட்டியா” என சலிப்பாகக் கேட்கவும் “நான் ஏன் கேட்கனும்.. நான் என்ன உங்க தங்கச்சி உங்களுக்குப் பாத்த பொண்ணா.. தேவையில்லாம என்னைத் தொல்லை பண்ணாதிங்க.. இப்ப வழியை விடுங்க” என அவள் சிடுசிடுக்கவும்..

“ஏய்.. இத்தனை நாளா நீ என்னை ஸ்டாக்(stalk) பண்ணிட்டு இப்ப தொல்லை பண்ணாதிங்களா.. என்ன நியாயம்டி உங்க நியாயம்” என கடுப்புடன் மொழிந்தவன்.. அவள் அருகில் நெருங்கி “அவங்க திடீர்னு பொண்ணுப் பாப்பாங்கன்னு நான் நினைக்கலை தமிழ்.. அதான் எதுவும் ஆரம்பிக்கும் முன்னாடியே நிறுத்திட்டேனே.. என் அழகியில்ல.. சீக்கிரமா சமாதானம் ஆகிடுடா” என அவள் தாடை பற்றிக் கொஞ்ச..

அதில் காதல் கொண்ட மனம் மயங்கினாலும் “உங்க பாட்டி தான் எனக்கு சமத்து பத்தாதுன்னு சொன்னாங்களே.. நீங்க அவங்க சொல்ற மாதிரி எதாவது நல்ல கரடியாக் கத்துற புள்ளையை கட்டிக்கோங்க” என முகத்தை வெட்ட..

அவள் வெடுக்கெனச் சொல்லியதில் சிரிப்புடன் “அச்சோ தமிழ்ம்மா.. எனக்கு இந்த பூனைக்குட்டி குரல் தானே பிடிக்குது.. உனக்குத் தெரியலைன்னா என்ன நான் எதுக்கு இருக்கேன்.. சொல்லிக் கொடுக்கறேன்டி” என்க

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “நீங்க பொய் சொல்றிங்க.. பிடிக்கும்னா ஏன் பாக்கறப்ப எல்லாம் திட்டினிங்க” என முகத்தைத் தூக்க..

“சாரிடி.. முதல்ல எப்ப உன்னோட பார்வையை உணர்ந்தேனோ.. அப்பவே உன்னை எனக்குப் பிடிக்கும்.. உன்னோட நிதானம், பொறுமை எல்லாம்.. ஆனா மகிழ் வாழ்க்கை இப்படி இருக்கையில.. நாம புத்தி கெட்டுப் பண்ணலாமான்னு தோணும்.. பாத்துட்டே போறவ வர்றவ.. கிட்ட வந்து பேசினா என்னனு தோணும்.. அது மாதிரி ஏதோ சூழ்நிலைக் காரணம்டி.. இப்ப மகிழ் வாழ்க்கை சரியான அப்புறம் தான்.. வீட்ல எல்லாருக்குமே சந்தோஷம்.. என் மனசும் என் தமிழைத் தேடிப் பறந்து வந்துடுச்சு” என நிறைவாய்ப் புன்னகைத்தவனை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

‘உன் தங்கச்சிக்காக என்னை விடப் பாத்தியா’ எனக் கேட்கத் தோணவில்லை.. அவன் அப்படி எல்லாம் விடமாட்டான் என்ற நம்பிக்கை பரிபூரணமாய் அவளுக்கு இருக்க.. அவளும் தெளிந்த முகமாய் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!