Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்24

மகிழ் பள்ளி விட்டு வீட்டுக்குச் சென்ற போது.. அவள் அவ்வாவும் அப்பத்தாவும் ஜாலியாக திண்ணையில் அமர்ந்து.. வீதியில் சென்ற ஒரு பெண்ணை கூப்பிட்டு வைத்து கலாய்த்துக் கொண்டிருக்க.. மகிழ் முறைக்கவும் அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தவர்கள் இவளைக் கண்டு கொள்ளாதது போல ஏதோ பேசவும் “ரொம்ப சௌகர்யமாப் போச்சு ரெண்டு பேருக்கும் வம்பு பேச.. என்ன ஒரு நடிப்பு” எனக் கேலியாக வினவ..

“எங்க மருமகளுங்களே எங்களை ஒன்னும் சொல்லலை.. நீ என்னடி எங்களை அதட்டுற.. ஏன் அமிர்து இவ அப்படியே உன் சின்ன மாமியார் தான் ஒரு கிடையில உட்கார விடாமாட்டிங்கிறா.. போடி பணியாரம் சாப்பிடு.. போ” என மகிழைக் கலாய்க்கவும்..

அமிர்து அவ்வாவும் ஆமாம் சாமி போட.. இதற்கு மேல் நின்றால் நிச்சயம் பங்கமாக எதாவது கலாய்க்கக் கூடும் எனப் புரிய..  உள்ளே ஓடித் தப்பித்தாள்.

அன்று அதிசயமாக நந்தாவும் நேரமாக வீட்டிற்கு வர.. அவனுக்கு காஃபி கொடுத்தவளின் கையைப் பற்றி அருகில் அமர்த்தியவன் “நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லையே” என சீண்ட.. மகிழ் முறைத்தவாறே “நா என்னோட தாய்மொழியில விஷ் பண்ணேன்.. இதுல என்ன குத்தம்” என பதிலளித்தாள்.



Advertisement

அவளுக்கு எப்போதுமே ஆங்கிலத்துடன் தகறாறு தான்.. இப்போது தான் கொஞ்சம் பரவாயில்லை.. ஆனாலும் பேச தயக்கம் இருக்கத்தான் செய்கிறது..

அவள் முறைப்பில் இன்னும் குதூகலமாக “இங்க்லீஷ்ல என்ன கஷ்டம்.. நான் வேணா உனக்கு டெய்லி கிளாஸ் எடுக்கவா” எனக் கேட்க..

“இங்க்லீஷ் கஷ்டம்னு நான் சொல்லலையே.. தமிழ் கன்வீனியன்ட்னு சொல்றேன்”

Advertisement

“எப்படி.. எப்படி கன்வீனியன்ட்” என்றவனின் கேள்விக்கு.. மகிழ் அமைதியான முகத்துடன் “உங்களுக்கும் எனக்கும் ஆறு வயசு வித்தியாசம்ல” என சம்பந்தமில்லாமல் மகிழ் கேட்க.. ‘என்னவோ ரெடி பண்ணிட்டா’ என நினைத்தவன்.. குழப்பமாக அவளைப் பார்த்தான்.

Advertisement

“நான் மாமான்னு கூப்பிடாம.. மரியாதையா உங்களை அங்கிள்னு கூப்பிட்டா எப்படி இருக்கும்” எனக் கேட்க.. நந்தாவிற்குத் தான் காஃபியில் கடலைமாவு மிக்ஸ் ஆன ஃபீல்.

அவன் முகம் போன போக்கை திருப்தியாக ரசித்தவள் “என்ன பதிலே காணோம்” என்க.. அவனும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதாவதெங்கும் காணோம்” என்றான் டைமிங்காக.

அதில் சிரித்தவள் “இனி வைஃப் கிட்ட  கேள்வி கேட்கும் போது ஜாக்கிரதையா இருங்க டாக்டர் சார்” என கருத்து சொல்லிவிட்டு.. அவன் கையில் இருந்த டம்ளரை வாங்கியபடி.. தன் அத்தைக்கு உதவ சமையலறை சென்றுவிட்டாள்.

Advertisement

நாட்கள் இதுபோலவே ஏட்டிக்குப் போட்டியாகப் பேசியபடியும்.. ஒருவரின் குறும்பை மற்றவர் ரசித்தபடியாகவும்  இனிமையாக நகர.. வீட்டில் இருந்தவர்களுக்கு மனதில் இருந்த சிறு நெருடலும் அகன்றது..

அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த பள்ளி திறப்பு விழாவும் வந்தது.. மகிழின் கையால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு விழா ஆரம்பிக்க கல்வித்துறை மந்திரி கட்டிடத்தை திறத்து வைத்தார்.. நந்தா எதிர்பார்த்ததை விடவும் விழா சிறப்பாக முடிய.. அப்போது தான் அவனுக்கு இயல்பாக மூச்சே வந்தது.

தந்தையின் கையில் இருந்து வாங்கிய பின் அவனாக எடுத்து வைக்கும் முதல் அடி.. சற்றே பெரிய ஏற்பாடும் கூட.. நல்ல தொடக்கம் பாதி வெற்றி அல்லவா.. எனவே கொஞ்சம் பதட்டமாகத் தான் இருந்தது.

விழா முடிந்து அனைவரையும் வழியனுப்பி வைத்து நந்தா வீட்டிற்கு வரவே.. மணி ஏழாகியிருந்தது.. அவன் பாதி வழியில் வரும் போதே மழை பிடித்திருக்க.. முழுக்கவே நனைந்திருந்தான்.

அப்பத்தா, சகுந்தலை மற்றும் ரேவதி மூவரும் பக்கத்து கோவிலில் பிரதோஷ வழிபாட்டிற்குச் சென்றிருக்க.. சரவணன் இன்றைய அலைச்சலில் அப்போதே உறங்கச் சென்றிருந்தார்.

நந்தாவின் பைக் சத்தம் கேட்டதும் மகிழ் வெளியே எட்டிப் பார்க்க.. முழுக்க நனைந்து வந்தவனை முறைத்தவள் டவலை அவன் கையில் கொடுத்துவிட்டு.. அவனுக்குப் பாலைக் காய்ச்ச சமையல் அறையில் நுழைந்தாள்.. பாலைக் காய்ச்சியவள் அவன் குடிக்கும் பதத்திற்கு ஆற்றியவள்.. அதை எடுத்துக் கொண்டு அவர்கள் அறைக்குச் சென்றாள்.

டிரஸிங் டேபிள் முன் நின்று தலை துவட்டிக் கொண்டிருந்தான் நந்தா.. உள்ளே வருபவளையே காட்சிப்பேழை வழியாக பார்த்தவன் கண்களில் ரசிப்போ ரசிப்பு.. காலையில் மென்பட்டுப் புடவையில் இருந்தவள் இப்போது அவள் வழக்கமான ஸ்கர்ட், டாப்பில் இருக்க ‘இந்தப் பாழாப் போன கெமிஸ்ட்ரியே எனக்கு வரலை’ எனப் புலம்பிய பதின்ம வயது மகிழை நினைவுருத்தினாள்.

அவன் பார்வை மாற்றத்தையெல்லாம் உணராமல் மகிழ் பாட்டிற்கு “அப்படி மழையில வரனும்னு என்ன இருக்கு.. பச்சப்பிள்ளையா நீங்க” என முணகியபடியே அவன் மாற்றியிருந்த உடைகளை அதன் இடத்தில் போட்டவள்.. அவன் அசையாமல் இருக்கக் கண்டு “பால் ஆறிடறதுக்குள்ள குடிச்சிடுங்க” என்றபடியே.. சார்ஜில் இருந்த தன் ஃபோனை எடுக்க அவன் அருகில் சென்றாள்.

அதை எடுத்தாலும் அங்கிருந்து நகராமலேயே மொபைலில் எதையோ பார்த்து சிரிக்க.. நந்தாவை சோதிக்கிறோம் என்பது புரியாமலேயே தன் போக்கில் இருந்தவள்.. திடீரென எதுவோ தோன்ற அருகில் இருந்தவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் நிமிர்ந்ததும் “மயிலு” என்று அழைத்தவனின் குரலில் வழிந்த உணர்வு இன்னது தான் என அவளால் இனம் பிரிக்கவே முடியவில்லை.. அந்தளவு காதலும் தாபமும் போட்டி போட்டது.

அவள் புரிந்தும் புரியாமலும் அவனைக் குழப்பமாகவே பார்க்க.. அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன் “அழகுமயிலு.. இன்னும் கெமிஸ்ட்ரியில பயங்கர வீக்கா இருக்க.. மாமன் கிளாஸ் எடுக்கவா டி செல்லம்” என அவள் மூக்குத்தியை தன் விரல்களால் மெதுவாக வருட.. மகிழுக்கோ  மழையின் குளிரை விட அவன் தொடுகையில் உறைநிலையை அடைந்தாள்.

அவள் ஃபோனை வாங்கி மீண்டும் அதே இடத்தில் வைத்தவன்.. அவள் அதரங்களில் அரிச்சுவடி எழுத ஆரம்பித்தான் தன் இதழ்களால்.. அவள் முகம் முழுக்க அவன் இதழ்கள் இட்ட முத்தக் கோலங்களுக்கு.. அவள் வதனம் செஞ்சாந்து வண்ணம் பூச.. அவள் வெட்கத்தில் இன்னும் பித்தாகித் தான் போனான் நாயகன்.

தொடர்ந்த நொடிகள் எல்லாம் காதல் பூசிக் கொண்டு நகர.. அவள் தான் அவனின் அந்தாதி என அன்பின் ஆலாபனைகளால் பறைசாற்றி.. கூடலின் நேசப் பக்கங்களை அழகியலால் நிரப்பியிருந்தான் மகிழின் நந்தா.. வெளியில் மழையும் தன் ஆனந்த தாண்டவத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை.. நந்தாவுக்கு முதலில் விழிப்பு வர.. கூடவே காதற் பொழுதுகளும் நினைவு வர.. அருகில் பெரும் நிறைவும் சிறு அயர்வுமாய்.. தன் இதழோரச் சிரிப்புடன் உறங்கிக் கொண்டிருந்தவளின் இமைகளின் மீது முத்தமிட்டான்.

விழி திறந்ததும் வெட்கத்தின் சாயலுடன் தயக்கமாக அவனைப் பார்த்தவளைக் கண்டு சிரித்தவன் “சீக்கிரமா ரெடியாகி வா மயிலு.. கோவிலுக்குப் போய்ட்டு வரலாம்” என்க.. அவளும் தலையாட்டியபடி குளிக்கச் சென்றாள்.

இருவரும் கிளம்பி வரவும்.. சமையலறை சென்று நந்தாவிற்கு காஃபி கொடுத்துவிட்டு.. பூஜைப் பொருட்களை எடுத்து வைத்தாள்.. அனைவரிடமும் சொல்லியவள்.. இவர்கள் கிளம்பும் போது எதிர்வர வேண்டாம் என தனது அறையின் உள் அமர்ந்திருந்த ரேவதியிடமும் மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்ல.. சாரதா அப்பத்தாவிற்கு அப்படி ஒரு மகிழ்வு.. தான் இல்லாமல் போனாலும் மகிழும் நந்தாவும் அவளைப் பார்த்துக் கொள்வார்கள் என.

கோவிலுக்கு வந்தவர்கள் மனதாற அம்மனைத் தரிசித்துவிட்டு குளக்கரையில் சென்று அமர்ந்தனர்.. நந்தா அப்போது தான் தன் நெடுநாளைய சந்தேகத்தை மகிழைப் பார்த்துக் கேட்டான் நந்தா.

“ஏன் மயிலு.. உங்கப்பா ஏன் எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்” என்கவும்.. மகிழ் முறைத்தபடி “இன்னும் பத்து வருஷம் கழிச்சுக் கேக்கலாம்ல” என்றாள்.

“அதுக்கில்லடி.. உங்கப்பா மறுத்த காரணம் எல்லாம் அப்படியே தானே இருந்துச்சு.. ரேவதி அத்தை.. ரெண்டு குடும்பத்துக்கும் இருந்த தகராறு எல்லாம்” என நிஜமாகவே குழம்பித் தான் கேட்டான்.

அவனைப் பார்த்து சிரித்தவள் “ஏன்னா.. அவர் பொண்ணுக்கு உங்களைப் பிடிச்சிருக்கே அதான்.. கழுதையைக் கட்டி வச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டார்” என்க.. அவள் காதைத் திருகியவன் “நான் கழுதையாடி” என மிரட்டினான்.

அவன் கையிலிருந்து தன் காதை விடுவித்து தேய்த்துக் கொண்டவள் “நான் பிடிச்சிருக்குன்னு சொன்னது விளங்கலை.. ஆனா கழுதைன்னு சொன்னது மட்டும் காதுல ஏறியிருக்கு.. என்ன டிசைனோ” என முகத்தைச் சுருக்க..

அவள் கையோடு தன் கையைக் கோர்த்தவன் “அந்த நம்பிக்கை தான்டி தயங்காம என்னைத் தப்பு செய்யச் சொல்லுச்சு.. நாலு வருஷம் உன் முகத்தைப் பாக்கலைன்னா கூட நெஞ்சு முழுக்க உன்னையே சுமந்துச்சு.. நீ திரும்ப வந்தப்ப உன்னை கைக்குள்ளையே வச்சுக்கனும்னு சொல்லுச்சு” என உணர்வுப்பூர்வமாக அவன் சொல்லச் சொல்ல.. அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் மகிழ்.

“இன்னும் என்ன சொல்லுச்சு” என மகிழ் அவனிடம் கேட்க.. “ம்ம்.. இப்படியே காலம் முழுசும் உன்னை தோள்ல சாய்ச்சுக்க சொல்லுது.. அப்புறம்” என அவளைத் தன்னில் இருந்து விலக்கி சுற்றும் முற்றும் பார்க்க.. மகிழ் அவனைக் குழப்பமாகப் பார்த்தாள்.

“அப்புறம்.. செம டைமிங்.. உன் பொண்டாட்டி மெல்ட்டா இருக்கா.. ஒரு கிஸ் கொடுத்துடுன்னு சொல்லுது” என அவள் முகத்தைக் கையில் ஏந்தியவன் நெஞ்சில் கை வைத்து விலக்கியவள்.. எழுந்து “ம்ம்.. ஆனா மயிலு என்ன சொல்லுது தெரியுமா.. போயா மங்குனி மாமான்னு சொல்லுது” என அவனிடமிருந்து விலகி ஓட.. அவனும் “மயிலு.. நில்லு டி.. மாமா பாவம்ல” என்றபடி அவளைத் துரத்தினான்.

நாயகன் வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!