நாயகனோ நானறியேன் – நாயகன்25
ஐந்து வருடங்களுப் பிறகு..
மஞ்சள் வெயில் சொரியும் மாலை வேளை.. நந்தாவின் வீடு ஏதோ விசேஷத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தது போல இருக்க.. அவன் வீட்டிற்குள் வெள்ளிச் சலங்கைகள் அணிந்த ஒரு ஜோடி பாதம் ‘ஜல் ஜல்’ என்ற சப்தங்களை வாரி இறைத்தபடி ஓடி வர.. அந்தக் சலங்கை அணிந்தவளோ “ஆலு.. ஆலு” என குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள்.
திண்ணையில் அமர்ந்து தாம்பூலப் பைகள் போட்டுக் கொண்டிருந்தோருடன் தானும் கூட செய்து கொண்டிருந்த சாரதா அப்பத்தா.. அந்த சப்தத்தில் நிமிர்ந்து “ஆருடி ஆளு.. இவ தான் பேரு வச்ச மாதிரி ஆளாமா.. ஆளு.. என்னடி வச்சிருக்க என்ற பேரனுக்கு” என அவளை கிண்டல் செய்யவும்..
அவரைக் கண்டு கொள்ளாமல் உள்ளே சென்று தேடியவள்.. தான் தேடிய ஆள் இல்லாமல் போகவும்.. சகுந்தலை அழைப்பதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் வெளியே வந்தாள்.. அப்போதும் அப்பத்தாவைக் கண்டு கொள்ளாமல் வெளியே நடக்க..
Advertisement
அவரோ “நில்லுடி.. மெதுவாப் போ” என அவர் கத்தியபடியே பின்னால் ஓட.. அந்த சின்னப் பாதங்களுக்குச் சொந்தக்காரியோ அவரைத் திரும்பி முறைத்து “நீ ஏன் வர.. நீ வராதே” என்றது கடுகடுப்பாய்.
தன் முழங்கால் அளவு இருக்கும் அவளை முறைத்தபடி “ஏன்டி நான் வரக் கூடாது” என அவர் கேட்க.. அதுவோ “அது எம்பட ஊடு.. நீ வரக் கூடாது” என்றது கோபமாய்.
மகன், மருமகள் என அனைவரையும் தன் சொல்லுக்கு மறு பேச்சுப் பேசாமல் வைத்திருக்கும் சாரதா அப்பத்தாவும் இந்த காப்படி ஆழாக்கும் பேச ஆரம்பித்தால் ‘சபாஷ் சரியான போட்டி’ எனலாம்.
Advertisement
அந்த ஆழாக்கு முகில் முத்துவின் மூன்று வயது அரும்பு அமிழ்தா.. பேசவே யோசிக்கும் முகிலுக்கும்.. பேசவே தெரியாத முகிலுக்கும் இப்படி வாய் காது வரை கொண்ட ஒரு பிள்ளை.. எல்லாம் அவள் அத்தையைக் கொண்டு வந்த வாய்.. என அந்த நிலையிலும் பேரன் மனைவியை எண்ணி சலித்துக் கொண்டார் சாரதா.. ஆனானப்பட்ட மகிழையே வாயடைக்க வைத்துவிடும் சாரதா அப்பத்தாவிற்கே சவாலாக இருந்தாள் மகிழின் மருமகள்.
Advertisement
இருவரும் முறைத்து நிற்கவே அப்போது தான்.. மாலை நேர நடைப் பயிற்சிக்குச் சென்ற சரவணனும் ராகவனும் வந்தனர்.. அவர்கள் இருவரின் கைகளைப் பிடித்து தொங்கியபடியே வந்தான் யாழ்.. நந்தா மகிழின் நான்கு வயது மைந்தன்.
ராகவன் மற்றும் சரவணன் நட்பு மீண்டும் துளிர்விட ஆரம்பித்திருந்தது யாழின் பிறப்பில் இருந்து தான்.. யாழ் பிறந்தவுடன் கொண்டு வந்து குடும்பத்தினரிடம் காண்பிக்க.. மகனின் கையில் இருந்து அவன் மகனை வாங்கிய சரவணன் அருகில் இருந்த ராகவனிடம் “அப்பா டா” என்றார் உணர்ச்சிவசப்பட்டவராகி.
அதற்கு மேலும் ஒதுங்கி நிற்க முடியாத ராகவன்.. மெதுவாக சரவணின் தோளில் அழுத்த.. மீண்டும் நட்பு கிரகணம் நீங்கிய ஆதவனாய் ஒளிர ஆரம்பித்திருந்தது.
Advertisement
புருவம் சுருக்கி.. முகத்தை சுருட்டி மூக்கில் மேல் வைத்து தன் அன்னையை முறைத்துக் கொண்டிருந்த பேத்தியைக் கண்டதும் சரவணன் புன்னகை படிந்த முகத்துடன் “சின்னக் கண்ணாளுக்கு என்ன கோவம்” என தூக்கிக் கொள்ள..
சாரதா அப்பத்தா “உம்பேத்திக்கு வேலை என்ன.. நில்லு நில்லுனு சொல்றதுக்குள்ள குதிங்கால் நிலத்துல முட்டாம ஓடி வாரா.. நாம் போய் வேலையைப் பாக்கறேன்” என அவர் வீட்டிற்குள் சென்றார்.
அவரிடமிருந்து வழுக்கி இறங்கியவள் “ஆலு.. இந்தா” ‘யாழ்’ என்ற பெயரை உச்சரிக்க வராமல் அதன் மீது புல்டோசரை ஏற்றியபடி தன் கையில் வைத்திருந்த இரண்டு லாலிபாப்பில் ஒன்றை அவன் கையில் கொடுத்தாள்.
அதை தாத்தாக்களிடம் கொடுத்து பிரிக்கச் சொல்ல.. அதன்படி செய்த ராகவனும் சரவணனும்.. பின் விளையாட அனுப்பிவிட்டு.. அவர்களைக் கவனித்தபடியே மீண்டும் வாசலில் இருந்த சேரில் அமர்ந்து இருவரும் கதையளைக்க ஆரம்பித்தனர்.
அப்போது ரகு வர.. இரு குழந்தைகளும் பாசமாக அவன் மீது தொற்றிக் கொள்ள.. இருவரையும் கையில் ஏந்தியபடி தன் அண்ணன் மற்றும் மச்சினனின் அருகில் சென்றான் ரகு.
ரகுவுக்கும் ரேவதிக்கும் மூன்று வருடங்கள் முன்பு தான் திருமணம் நடந்திருந்தது.. நந்தாவின் குற்றவுணர்வு மகிழுக்கு அவன் வீட்டிற்கு வந்த பின் நன்றாகவே விளங்கியது.. முப்பத்து ஐந்து வயதில் சன்யாச வாழ்வு வாழும் ரேவதியைக் காண்கையில் அவளுக்கு நெஞ்சம் கலங்கித் தான் போனது.
அவள் மனதை மாற்றியதில் பெரும்பங்கு மகிழுக்குத் தான்.. ரேவதிக்கு அவள் கணவன் முகம் கூட நியாபகம் இல்லை.. இருபது வருடங்கள் கடந்து விட்டபின்.. ரகுவுடனே திருமணமா.. யாரேனும் எதாவது பேசுவார்கள் என பயக்க.. பின் ரகுவோடு பேசி.. இருவரிடையே இருந்த மெல்லிய புரிந்துணர்வை ஆதாரமாக வைத்து இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
ரகுவும் தன் குற்றவுணர்ச்சியைப் போக்கவும்.. ரேவதி அவனோடான வாழ்க்கைக்குப் பழக்கப்படவும் ஒருவருக்கொருவர் தேவையான கால அவகாசம் எடுத்துக் கொள்ள.. இப்போது இருவர் வாழ்வும் சீராகப் பயணிக்கத் துவங்கியுள்ளது.
மடியில் ஐந்து நிமிடம் அமர்வதற்குளாகவே ரகுவின் ஃபோனைக் கேட்டு யாழுக்கும் அமிழ்தாவிற்கும் சண்டை வர.. அவன் பேச்சுக் குரல் கேட்டு அவனுக்கு டீ எடுத்து வந்த ரேவதி அவனைப் பார்த்து சிரித்தாள்.
அவளைப் பாவமாகப் பார்த்தவள் “சிரிக்காதிங்க.. யாராவது ஒருத்தரை வாங்குங்க” எனக் கெஞ்ச.. அமிழ்தாவை வாங்கியவள் அவன் கையில் டம்ளரை கொடுத்துவிட்டு அவளை வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.
அதன்பின் யாழை அவன் தாத்தாக்களிடம் விட்டுவிட்டு இவர்கள் கிளம்பும் நேரம் வந்த மகிழ் மற்றும் நந்தா இருவருடன் சேர்த்து அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு ரகுவும் ரேவதியும் கிளம்பிச் சென்றனர்.
நந்தா மீதம் இருந்த வேலைகளைப் பற்றி அப்பாவிடமும் மாமனாரிடமும் பேசியபடி அங்கேயே நிற்க.. மகிழ் வீட்டினுள் சென்றாள்.
அங்கே அமிழ்தா சகுந்தலையை ‘என்ன செய்தி’ என ஓட்டம் காட்டிக் கொண்டிருக்க.. மகிழைக் கண்டதும் சமர்த்தாக கையைத் தூக்கி எடுக்கச் சொல்லி இடுப்பில் அமர்ந்து கொண்டது.
அவளைத் தூக்கியவாறே மகிழ் “கல்யாணப் பொண்ணு ரெஸ்ட் எடுக்காம என்ன விளையாடுறிங்க” என்கவும்.. அவளை முறைத்த சகுந்தலை “எப்படித்தான் வாயே பேசாத முத்துவுக்கு இப்படி ஒரு வாயாடிச் செல்லக்கா பொறந்தாளோ.. ஆளுக்கு மட்டும் தான் சாக்லேட்டாம்.. சின்ன வயசுல நீயும் இப்படித்தான்.. எதாவது கேட்டா ‘தீந்து போயிந்தி அத்தை’னு நடிப்ப” என குழந்தையின் கன்னத்தில் இடிக்க.. அவள் அவரை முறைத்தவள்.. மகிழிடம் இருந்து இறங்கி.. அவரைப் பற்றி நந்தாவிடம் கம்ப்ளெய்ண்ட் செய்ய ஓடிவிட்டாள்.
நாளை சரவணனுக்கும் சகுந்தலைக்கும் தான் அறுபதாம் கல்யாணம்.. நந்தாவின் திருமணம் விமர்சையாக செய்யவில்லை என சாரதா அப்பத்தா ஒரே புலம்பல்.. எனவே தன் பெற்றோருக்கு செய்து பார்க்க முடிவு செய்தான்.
கதிரவன் தன் செம்பொற்கரங்களால்.. பூமிக் காதலியை ஆரத் தழுவ ஆரம்பித்திருந்த பூம்பொழிலின் அழகிய காலைப் பொழுது அது.
மனைவி கையில் கரண்டியுடன் வராத அதிகாலைக் கனவு போலும் நந்தாவிற்கு.. சிரிப்புடன் உறங்கிக் கொண்டிருந்த அவன் நெற்றியில் இதழ் பதித்த மகிழ் “பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாவா” என்றாள்.
அவள் வாழ்த்தில் விழி திறந்தவன்.. அவளைப் பார்த்து “பிறந்தநாள் எல்லாம் சாதாரண மனுசங்களுக்கு.. எனக்கு இன்னைக்கு அவதார தினம்” என்றான் மன்மதப் புன்னகையுடன்..
“பார்றா.. அவதார் குட்டி மாதிரி இருந்துட்டு.. அவதார தினமாம்ல.. எழுந்திரிங்க.. காலையில காமெடி பண்ணிகிட்டு” என நக்கலடித்து நகரப் பார்த்தவளை.. மின்னல் வேகத்தில் எழுந்து.. தன் கைகளுக்குள் சிறையெடுத்தவன்.. காலையிலேயே குளித்து புதுமலராய் நின்றிருந்த மனைவியை என்றும் தீரா ஆசையுடன் ரசித்தவன் “பயமில்லையா” எனக் கேள்வியாகக் கேட்க..
உதட்டைச் சுழித்து இல்லையென்பது போலத் தலையசைக்க.. “அவ்வளவு ஆகிடுச்சா” என அவளை நெருங்கவும்.. படாரென்று கதவைத் திறந்து வந்த நந்தாவின் மினியேச்சர் உருவத்தைக் கண்டவன் மனைவியிடம் இருந்து பின்வாங்கினான்.
அவனைப் பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்த மகிழ் “யாழிருக்க பயமேன்” என தன் மகனைத் தூக்கி முத்தமிட்டாள்.
அவனோ அன்னையின் தோளில் நன்றாகச் சாய்ந்தவாறே “அப்பா இன்னும் ரெடி ஆகலையா” என்றான் நந்தாவை மேலும் கீழும் பார்த்தபடி..
மகிழும் அவனைப் பார்த்து “உங்கப்பா எதைத்தான் சரியான நேரத்துக்கப் பண்ணார்.. ஒன்னு ரொம்ப முன்னாடி.. இல்லை ரொம்பவும் பின்னாடி.. வச்சாக் குடுமி அடிச்சா மொட்டை” என கலாய்க்க..
இருவரையும் முறைத்த நந்தா “வேலையெல்லாம் நான் பாத்துட்டு லேட்நைட் வந்தா.. நான் வர வரை வெய்ட் பண்ணாம ஆத்தாளும் மகனும் குறட்டை விட்டு தூங்கிட்டு.. இப்ப பேச்சு வேறையா.. ஓடுங்க” எனத் துரத்திவிட்டு குளிக்கச் சென்றான்.
குளித்து முடித்து ரெடியாகிக் கொண்டிருக்க.. மீண்டும் அறைக்குள் ஓடி வந்த யாழ் அவன் காலைக் கட்டிக் கொண்டபடி “ஆப்பி.. பர்த்டேப்பா” என்க.. அவனும் தன் நகலை அள்ளி எடுத்து முத்தமிட்டான்.
அதன்பின் அவனையோ அமிழ்தாவையோ கண்டுகொள்ள யாருக்கும் நேரமில்லை.. வீட்டிலேயே திருமண ஏற்பாடு செய்யப்பட.. தனம் சகுந்தலையுடன் இருக்க.. முத்துவும் மகிழும் தான் இரு பாட்டிமார்களிடமும் கேட்டு ஒவ்வொன்றாக செய்து கொண்டிருந்தனர்.
அதன்பின் புரோகிதர் வந்துவிட சடங்குகள் ஆரம்பமாயின.. பின்னர் கலசத் தண்ணரை மகன், மருமகள் பேரன், தங்கை என குடும்பத்தார் ஊற்ற.. உடை மாற்றி வந்த பின்னர் முதலில் மகிழின் தாத்தா அவ்வாவை அமர வைத்து பாதபூஜை செய்து அவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்ட பின்.. அமிழ்தாவை அமர வைத்து பூஜை செய்து இனிப்பு ஊட்டினர்.
அதன் தொடர்ச்சியாக.. இருவரும் மாலை மாற்றிய பின் சரவணன் சகுந்தலைக்கு இரண்டாம் முறையாக மங்கள நாணை அணிவித்தார்.. அவர்கள் மகிழின் தாத்தா பாட்டியிடமும்.. சாரதா அப்பத்தாவிடமும்.. ரகுவின் அப்பாவிடமும் ஆசி பெற்றுக் கொண்டனர்.
பின் வரிசையாக நந்தா மகிழ் யாழ், முகில் முத்து தங்கள் மகள் அமிழ்தாவோடும்.. ரகுவும் ரேவதியும் என ஒன்றன் பின் ஒன்றாக அனைவரும் அவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டனர்.. யாழ் அந்த சிறிது நேரம் கூட முடியாமல் தன் அப்பாரின் மடியில் ஏறி அமர.. அமிழ்தாவும் அவனோடு போட்டு போட்டபடி சகுந்தலையின் மடியில் அமர்ந்து கொண்டாள்.
ஆண் நன்று.. பெண் இனிது
குழந்தை இன்பம்.
இளமை இனிது.. முதுமை நன்று..
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மகிழின் தாத்தாவிற்கு தன் நண்பனின் நியாபகம் அழையாமல் வந்தது.. ரேவதி முதல் மகிழ் வரை அனைவரின் வாழ்வும் சரியாகிவிட்டது.. கொள்ளுப் பேரனும் கொள்ளுப் பேத்தியும் துள்ளி விளையாடும் அழகையும் கண்டாயிற்று.. இனி இறைவன் அழைக்கும் நேரம் செல்லத் தயார் தான்.
அவர் அருகில் அமர்ந்திருந்த விஸ்வநாதனுக்கும் அதே எண்ணம் தான்.. ரகுவின் வாழ்வு மீண்டும் தழைத்தது அவருக்கு பெரும் நிம்மதி.. அதனோடு தன் மனைவிக்கு மங்கை விஷம் வைத்தது தெரிய வர “நீ இந்த வீட்லையே கிட.. நீ செத்தா இனி காடு சேர்க்கறது என் கடமை.. அதைச் செய்வேன்.. உனக்கும் முன்னாடி நான் போனா.. எம்பையன் உனக்குச் செய்வான்.. அவனுக்கு யாரையும் கெடுத்து வாழத் தெரியாது.. ஆனா இனி உன் கையால பச்சைத்தண்ணி கூட வேண்டாம்” என அவரை ஒதுக்கிவிட்டார்.
திருமண விருந்தும் நன்றாக முடிய.. தாம்பூலம் கொடுத்து அனைவரையும் நிறைவாக வழியனுப்பி வைத்தனர்.
அன்று முழுவதும் போட்ட ஆட்டத்தில் யாழும், அமிழ்தாவும் உறங்கிவிட.. இரு குடும்பத்தின் ஒற்றுமை அனைவருக்கும் இன்று பேசு பொருளாகியிருக்க.. சாரதா அப்பத்தா அனைவருக்கும் சுற்றிப் போட்டார்.
வட்டமேசை மாநாடு முடிந்து அனைவரும் கிளம்ப.. நந்தா தன் தந்தையின் காதில் ஏதோ உரைத்துவிட்டு.. மகிழிடமும் பார்வையால் அழைப்பு விடுத்து வெளியே வர.. முகில் அவனை நக்கல் சிரிப்புடன் எதிர் கொண்டான்.
‘இவன்ட்டயா மாட்டிகிட்டோம்’ என அவனைப் பாராதது போல பைக்கில் கையை ஊன்றியபடி நந்தா மகிழ் வருகிறாளா என எட்டிப் பார்க்க “இப்ப நான் இங்க நிக்கிறது உனக்கு தெரியாது அப்படித்தானே” என அவன் கேட்க..
நந்தா அவனைப் பார்த்து அசட்டு சிரிப்பு சிரிக்க “இன்னுமாடா கெமிஸ்ட்ரி படிக்கிறிங்க.. இதெல்லாம் ஓவரா இல்லை உங்களுக்கு.. எனக்கு மட்டும் ரொமென்சே வரலையே” எனப் புலம்பினான் முகில்.
அவன் அருகில் வந்த முத்து அமிழ்தாவை அவன் கையில் இருந்து வாங்கியபடியே “நீங்க இன்னும் சாமியாரா இருக்க யார் என்ன பண்ணுவாங்க” என கண்களாலேயே காறித் துப்பிவிட்டு அவனைக் கடந்து செல்ல..
முகில் ஏதோ சொல்ல வருவதற்குள் நந்தாவே “அவ என்ன சொன்னான்னு கேட்கலை.. ஆனா.. துப்பின சாரல் இங்க வரை அடிக்குது” என கேலி செய்ய.. இளித்தபடியே முத்துவின் பின்னால் சென்றான் அவன்.
‘இன்பம் வேண்டில் வானைக் காண்பீர்’ என்ற முண்டாசுக் கவி எவ்வளவு தூரம் அனுபவித்துச் சொன்னானோ.. தங்கள் பிருந்தாவனத்தில் தன் நந்தகுமாரனுடன்.. இரவின் ஏகாந்தத்தை அனுபவித்தபடி.. தோட்டத்து வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த மகிழ் உணர்ந்தாள்.
கீற்றுகளின் வழி தாவிக் குதித்து ஓடிவரும் நிலவின் கதிர்களையும்.. அங்கொன்று இங்கொன்றாய் கண் சிமிட்டிய நட்சத்திரங்களையும் பார்த்தவாறே “சாரி பாவா.. இந்தவாட்டி கிஃப்ட் வாங்கலை” என தலையைக் குனிந்து கொள்ள.. அவளை தன் மேல் சாய்த்துக் கொண்ட நந்தா “நான் கேட்ட கிஃப்ட் தான் நீ கொடுக்கலையே.. போ” என முகத்தை தூக்கிக் கொண்டான்.
அவன் எதைச் சொல்கிறான் எனத் தெரிந்தவள் “வரும் போது வரும்” என்க.. அவளை முறைத்தவன் “டூ க்யூட் பாப்பாஸ் கேட்டேன்.. நீ ஒரு பையன் தான் கொடுத்த.. அவனும் எனக்குப் போட்டியா வளந்து நிக்கிறான்” என்க.. மகிழும் சிரித்து சமாளித்து வைத்தாள்.
சிறிது நேரம் அவள் கெமிஸ்ட்ரி படிக்க மூக்கால் அழுததை சொல்லிச் சிரித்தவன்.. திடீரென “தங்கமயிலு.. நிஜமாவே நான் பண்ண கேனைத்தனமான வேலையை நீ மறந்துட்டியா” எனக் கேட்க..
“இன்னும் எத்தனை வருஷம் இதையே கேப்பிங்க.. மறந்துட்டேனா இல்லையா தெரியலை.. ஆனா நினைக்கறது இல்லை.. அப்படியே நினைச்சாலும் எல்லாம் எனக்காகத் தானேன்னு தோணும்” எனத் தோளைக் குலுக்கினாள்.
இன்னும் ஒரே ஒரு கேள்வி எனச் சொல்லியவன் “நாலு வருஷத்துக்கு அப்புறமா மறுபடியும் நீ என்னை உன் காலேஜ்ல பாத்தப்ப என்ன தோணுச்சு” எனக் கேட்கவும்.. அவனைப் பார்த்து குறும்பாகச் சிரித்தவள் “காசிக்குப் போனாலும்” என நிறுத்த.. நந்தா “ஓடறதுக்கு ரெடியா இருந்துட்டு சொல்லு” என மிரட்ட.. சிரித்தவள் அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள்.
“அழகுமயிலு.. அப்ப உனக்கு நியாபகம் இல்லை அப்படித்தானே” என்றவன் அவனுக்குத் தெரிந்த வகையில் அவள் இதழ்களைத் தண்டிக்கத் துவங்கினான் தன் இதழ்களால்.
நாயகனா வில்லனா எனக் குழம்பிய அவன் மயிலின் வாழ்வில்.. உன்னை மட்டுமே வேண்டும் அன்பனடி நான் என அழுத்தமாகத் தன் தடத்தைப் பதித்த.. நாயகன் வந்தான்.
