Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன்-நாயகன்7

முத்துவிற்கு நினைப்பு அனைத்தும் அவள் அக்கா மேல் இருக்க.. மகிழிடம் புலம்பியபடியே வந்து கொண்டிருந்தாள்.. நேராக முத்துவின் வீட்டிற்குச் சென்றவர்கள்.. அவள் அம்மா சொல்லியபடி அனைத்தையும் எடுத்துக் கொண்டு முகிலனுடன் அவளை அனுப்பிவிட்டு.. தன் வீட்டிற்குச் சென்றாள்.

      முத்து அவள் எண்ணத்திலேயே சுழன்று கொண்டிருந்ததால்.. முகிலனைப் பற்றிக் கூட அவளால் யோசிக்க முடியவில்லை.. இவர்கள் இருவரும் மருத்துவமனையை அடையவும்.. சரியாக முத்துவின் அப்பாவும் வந்து சேர்ந்தார்.

     மூவரும் வேகமாக உள்ளே செல்ல.. அங்கு அமர்ந்திருந்த தனத்திடம் சென்று அக்காவைப் பற்றிக் கேட்டாள் முத்து.. அதற்குள் நர்ஸ் வந்து பெண்குழந்தை பிறந்ததை அறிவித்துவிட்டுச் செல்ல.. அப்போது தான் மூச்சே வந்தது அனைவருக்கும்.

“ரொம்ப நன்றி மாப்ளை.. நீங்க இருந்ததுனால சரியாப் போச்சு.. இன்னமும் நாள் இருக்குன்னு தான் ஒரு அவசர வேலையா போனேன்.. இது மட்டும் தமிழ் மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்” என அவர் கண்களில் நீரே கோர்த்துக் கொண்டது.



Advertisement

[the_ad id=”6605″]

அவர்களை நெருங்கிய தனம் “நல்லாருக்குண்ணா.. நீங்க பாக்க வளந்த பையனுக்கு நன்றியா.. வாங்க குழந்தையைப் போய் பாக்கலாம்.. வா முத்து” என அவர்களை அழைத்துச் சென்றார்.

       முத்துவும் குழந்தையைப் பார்த்துவிட்டு வெளியே வந்து அமர்ந்தாள்.. காலையிலிருந்து அலைச்சல்.. மாலை திடீரென ஏற்பட்ட டென்சன் என அவளால் நிற்கவே முடியவில்லை.. கொஞ்சம் காற்றோட்டமாக இருக்க வெளியே வந்தாள்.

Advertisement

      கண்களை மூடி அமர்ந்திருந்தவளை காஃபியின் மணம் கலைக்க.. கண் திறந்தவள் எதிரே கப்புடன் நின்றிருந்தான் முகில்.. ஒன்றும் பேசாமல் அவளிடம் நீட்டவும்.. அவளும் அமைதியாய் வாங்கிக் கொண்டாள்.. அப்போது நந்தாவும் அவன் அம்மாவும் வர.. முகிலன் தன் அம்மாவோடு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டான்.

Advertisement

அடுத்த நாள் பிரின்சிபல் அழைத்து மகிழை விசாரித்து இனி இப்படி செய்ய வேண்டாம் என அவளுக்கு அறிவுரை வழங்கி அனுப்பினாலும்..
வினிதாவிற்குத் தான் மகிழ் மேல் ஆத்திரம் கனன்று கொண்டே இருந்தது.. அவள் எது செய்தாலும் குற்றம் குறை கூறிக் கொண்டே இருந்தார்.

அன்றும் அது போல அவளையும் இன்னொரு ஆசிரியரையும்.. பள்ளி முடிந்தவுடன் அருகில் இருக்கும் அரசுப்பள்ளி ஒன்றிற்கு செல்லச் சொல்லிவிட்டுச் சென்றுவிட.. மகிழுக்கு ஒன்றும் புரியவில்லை ‘சும்மா மொட்டைத் தாத்தன் குட்டையில விழுந்தான்’னு சொல்லிட்டுப் போனா என்ன அர்த்தம் என அவரை மனதுள் வைதுவிட்டு.. அவளோடு வரவிருக்கும் ஆசிரியரை அணுகி என்ன விஷயம் எனக் கேட்டாள்.. அவர் சொன்னதைக் கேட்ட போது அவள் என்ன மாதிரி உணர்ந்தாள் என்றே தெரியவில்லை.

      அவர்கள் பள்ளியின் டிரஸ்ட் மூலமாக.. கடந்த இரண்டு ஆண்டுகளாக.. அருகில் இருக்கும் அரசுப்பள்ளியில் மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான வகுப்புகள்.. இந்தப் பள்ளியில் இருந்து எடுக்கப்படுவதாகவும்.. சென்ற ஆண்டு ஒரு மாணவன் அதில் தகுதி பெற்றுச் சென்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

Advertisement

குழப்பத்துடனே அவரோடு சென்றவள்.. அன்றைய அறிமுக வகுப்பு முடிந்து அவள் வெளியே வரும்போதே மணி ஐந்தரை என்றது அவள் கையில் இருந்த ஃபாஸ்ட் ட்ராக்.. ‘இவன் நல்லவனா கெட்டவனா.. மாறிட்டானோ’ என தன் நாயகனைப் பற்றி யோசித்தபடியே மெதுவாய் அவள் நடந்து கொண்டிருக்க.. அவளை உரசியபடி அருகில் நின்ற புல்லட்டின் ஓசையில் அதிர்ந்தவள் திரும்பிப் பார்க்க.. முகம் கொள்ளாப் புன்னகையுடன் நின்றிருந்தான் முத்துக்குமரன்.

[the_ad id=”6605″]

அவனை சட்டை செய்யாமல் அவள் நடக்கத் துவங்க “மகிழ் இங்க என்ன பண்ற.. வீட்டுக்குத் தானே நான் அங்க தான் போறேன் வா” என சுவாதீனமாக அழைக்க.. ஒன்றும் பேசாமல் மௌனமாய் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

      “போலீஸ்காரனையே இத்தனை சந்தேகமாப் பாக்கறியே செல்லம்.. நான் உன்னை கடத்திட்டு எல்லாம் போக மாட்டேன்.. அதுக்கு அவசியம் இன்னும் வரலை” என்றவனின் பதிலில்.. மகிழ் பார்வையில் இப்போது நக்கலும் சற்றே தெரிந்தது.

     “நீ நினைக்கற மாதிரி இல்லை செல்லம்.. இது நானா கஷ்டப்பட்டு படிச்சு வாங்கின வேலை தான்.. போஸ்டிங்கிற்கு மட்டும் உன் தாத்தா நேம் யூஸ் பண்ணிகிட்டேன்.. சரி சரி வா.. டைம் ஆச்சு போலாம்” என வெகு உரிமையாகக் கூப்பிட.. “பஸ்ல போய்க்கறேன்” என்றவாறே அவனை விட்டு விலகி நடந்தாள்.

       ‘எத்தனை நாளைக்குன்னு பாக்கறேன்டி.. சீக்கிரமா இந்த அம்மத்தாவைப் பேசச் சொல்லனும்’ என நினைத்தவன் வந்த வழியே சென்றான்.

      மகிழினி சற்று தூரம் நடந்திருக்க.. மீண்டும் அதே சத்தம் கேட்க.. ‘இவன’ என ஆத்திரமாகத் திரும்பியவள் அங்கே நந்தாவைக் கண்டதும்.. ஒரு கணம் கண்கள் விரிய.. மறுகணமே ‘எத்தனை வருஷம் ஆனாலும் இந்த ரெண்டு எருமை மாட்டுக்கும் இதே வேலை தான்’ என சலிப்பாக எண்ணிவிட்டு நடக்க.. “மயிலு என்னோட வா.. உன்ட்ட கொஞ்சம் பேசனும்” என அழைக்க.. அவனை விட இவனது பேச்சில் தான் அவளுக்கு ஏக எரிச்சல் வந்தது.

      வழக்கம் போல அவனைக் கண்டு கொள்ளாமல் நடக்க “நீ தான் நம்மளைப் பத்தி பேச வேண்டாம்னு சொல்லிட்டியே.. இது அப்பாரு சம்பந்தப்பட்ட விஷயம் தான்டி வா” என சற்றே கெஞ்சலாக அழைக்க.. தன் தலையெழுத்தை நொந்தபடியே அவனோடு சென்றாள்.

       ‘கொஞ்சம் மாறிட்டான் தான் போல.. கெஞ்சவெல்லாம் தெரியுதே.. அந்த க்ளாஸ் பத்தி கேட்காலாமா’ என நினைத்தவாறே அவள் வர.. வெகுநாளைக்குப் பின்னான அவளது அருகாமையில் அவன் க்ராவிட்டி மீதே சந்தேகம் கொண்டான்.. மிதப்பது போலவே தோன்றியது.. அவர்கள் ஊருக்குச் செல்லும் வழியில் இருக்கும் பெரிய வாய்க்காலில் வண்டியை நிறுத்தினான் நந்தா..

     ஒரு அக்மார்க் அரசு ஊழியன் போல.. தன் கடமையை முடித்த கதிரவன் வீடு செல்ல ஆயத்தமாக.. அவன் வருகையை எண்ணி இப்போதே முகம் சிவந்தாள் வானமகள்..

       அந்தி நேரத்தின் அடையாளமாய் புள்ளினங்கள் பெரும் ஆரவாரத்துடன் தன் கூட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்க..  மேய்ச்சல் முடித்து கால்நடைகளை பலர் வீட்டுக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்க…. ‘சுழலும் ஏர் பின்னது உலகம்’ என்பதை மெய்ப்பிப்பதைப் போல.. அருகில் இருக்கும் வயல்களில் இந்த வாரத்தில் நாற்று விடுவதற்காக நாற்றாங்கால்கள் எருக்க இலை, வேப்ப இலை மற்றும் வேப்பம் புண்ணாக்கோடு.. உழவிடப் பட்டவாறே தயாரகிக் கொண்டிருந்தது.

[the_ad id=”6605″]

      அவன் வண்டியை நிறுத்தியதும் இறங்கி அவனுக்கு எதிராக வந்து நின்றவள்.. சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்தாள்.. நான்கு புறமும் இரும்புக் கம்பிகள் கொண்ட சிறு திண்டு போன்ற அமைப்பில் ‘ஏரி மினியப்பன்’ காவலாய் நின்றிருந்தார்.

        அவளாக எதுவும் கேட்கமாட்டாள் என்பதை உணர்ந்த நந்தா அவனாகவே “அப்பாருக்கு வர சனிக்கிழமை திதி வருது.. நீ இதுவரைக்கும் கருப்புக்கோ, முப்பிறை கும்பிடவோ, வருஷம் ஆனப்பவோ.. எதுக்குமே வரலை.. அதனால இந்த தடவை கட்டாயம் வரனும்” என சிறு கண்டிப்புடன் உரைத்தான்.

       ‘கூப்பிடும் போது இருந்த பணிவென்ன.. இப்ப மிரட்டல் என்ன.. திமிரு தான்.. இவனைப் போய் மாறிட்டான்னு நினைச்சனே’ என ஒரு மனம் கூற.. மறு மனம் ‘பின்னே நீ எதுக்கும் வரலை தானே.. சொல்லத்தான் செய்வாங்க’ என்றது.

         “என்ன யோசிக்கிற.. வருவியா.. இல்லை நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கறதுன்னு எப்பவும் போல எங்கையாவது போய்டுவியா” என குத்தலாகக் கேட்க

        அதில் வெகுண்டவள் அவனை முறைத்து ஏதோ சொல்ல வர.. அதற்குள் ஒரு டிராக்டர் இடையே வந்தது.. வண்டித்தடம் சற்று சிறிதாக இருக்கவே.. டிராக்டருக்கு வழிவிட மகிழ் சற்றே பின்னால நகர.. புடவை கால் செருப்பில் மாட்டிக் கொள்ள.. காலை மேலும் நகர்த்தினாள்.. வாய்க்காலின் ஈர மண் பெயர்ந்து அவளை தள்ளிவிட.. அருகில் பிடிக்க பிடிமானம் இன்றி வாய்க்கால்த் தண்ணீரிலேயே பின்புறமாக விழுந்துவிட்டாள்.

       சரியாக டிராக்டர் இவர்கள் இருவரையும் கடக்கும் நொடி அவள் நகர்ந்து விழுந்திருக்க.. டிராக்டரில் இருந்தவர் “தம்பி பாப்பா தண்ணியில விழுந்துடுச்சு” என நந்தாவை நோக்கி கத்த.. மின்னலென தண்ணீரில் பாய்ந்தான்.

        ஆடி மாதம் என்பதால் வாய்க்காலில் நீரின் வரத்து சற்று அதிகமாகவே இருக்க.. மகிழ் விழுந்த நொடியே இழுத்துச் செல்லப்பட்டாள்.. தண்ணீரில் விழ்ந்தாலும் கூட.. நம் இயல்பு போல கையை ஊன்றி எழவே பார்ப்போம்.. ஆனால் நீரின் வேகத்திற்கு உடல் நகர்ந்து தான் செல்லும்.

          அவள் புடவை முந்தானை மட்டும் தெரிய.. அதை நோக்கியே நீந்தியவன்.. அவளை பிடித்தும் விட்டான்.. கரைக்கு அழைத்து வந்தவன்.. அவள் உடையை சரிசெய்து விட.. மூக்கில் ஏறிய நீரின் காரணமாக இருமிக் கொண்டிருந்தாள் மகிழ்.

       அந்த டிராக்டர் ஓட்டுபவரும் கரையில் நின்றிருக்க.. இருவரும் பத்திரமாக மேலே வரத்தான் அவருக்கு மூச்சே வந்தது.. நந்தாவிடம் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு அவர் நகர்ந்து சென்றுவிட.. நந்தா பயத்துடன் அவளை அணைத்துக் கொண்டான்.

      இதே போன்று ஒரு சூழலில்.. இதே வாய்க்கால் தான் அவளது முக்கியத்துவத்தை அவனுக்குச் சொல்லியது.. காலங்கள் கடந்தும் மீண்டும் அதே போல ஒரு நிகழ்வு.. அவனுக்கு உயிரே ஒரு கணம் நின்றுவிட்டது.. தண்ணீரில் விழுந்தவள் பனைமரத்திலோ அல்லது மதகிலோ மாட்டியிருந்தால் என்னவாகி இருக்கும்.. தண்ணீரில் அடித்துச் சென்றதால் கவனிக்க முடிந்தது.

       “ஏன்டி எப்பப்பாரு எங்கையாவது போய் விழுந்துகிட்டே இருக்க.. ஒரு நிமிஷம் செத்துப் போயிட்டேன் தெரியுமா” என பிதற்றியபடியே அவளை இறுக அணைத்துக் கொள்ள.. அதுவே சொன்னது அவன் மனக் கலக்கத்தை.

       அவள் நடுக்கத்தை உணர்ந்தவன் தன்னிடம் இருந்து பிரித்து அவள் கை, கால்களைத் தேய்த்து விட்டான்.. எதைப்பற்றியும் கவலையின்றி தன் காலருகே அமர்ந்து கொண்டிருந்தவனைக் கண்டவளுக்கு ‘இவன் ஏன் பொய்த்துப் போனான்’ என்ற கேள்வி தோன்ற.. அதை மனதில் வைத்துக் கொள்ளவும் முடியாமல் “இப்படி எல்லாம் பண்ணிட்டு மறுபடியும் என்னை ஏமாத்திடுவியோன்னு எனக்கு பயமா இருக்கு மாமா” என மெல்லிய குரலில் அவளது சொற்களில் அவன் கை அந்தரத்திலேயே நிற்க.. அவனைக் கண்டு கொள்ளாமல் எழுந்து “போலாமா” எனக் கேட்க.. அவனும் இறுகிய முகத்துடன் தலையசைத்தான்.

       ஊருக்குள் செல்லாமல்.. மறுவழியாகச் சென்று.. மகிழினி வீட்டின் பின்புற வாயிலில் இறக்கி விட்டவன்.. அவளை திரும்பியும் பாராமல் பறந்து விட்டான்.. அவன் வேகத்திலேயே அவன் கோவம் உணர்ந்தவளுக்கு ஒன்றும் செய்ய முடியாத நிலை.

நாயகன் வருவான்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!