Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன்-நாயகன்9

ரகுவிற்கு முன்பாகவே தியாகு அங்கு காத்திருக்க இவனைக் கண்டதும் “ப்ளீஸ் நீங்க எப்படியாவது ரேவதியை கல்யாணம் பண்ணிக்கோங்க” என அவள் கையைப் பிடித்தபடி கேட்க.. ரகு குழம்பிப் போனான்.

     அவன் கையை உதறியவன் “என்னங்க பேசறிங்க.. இப்படி ஒன்னு சொல்லுவிங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன்” என அவன் விலகப் பார்க்க..

      அவனைத் தடுத்த தியாகு “ப்ளீஸ்.. நான் சொல்றது கேளுங்க.. நான் ஒரு பொண்ணை விரும்பினேன்.. ஆனா எங்க வீட்ல ஜாதி அந்தஸ்த்துன்னு பாத்து என்னை மிரட்டி ரேவதியை கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.. ஆனா என்னால ஏத்துக்க முடியலை.. அவ என்னை விட ரொம்ப சின்னப் பொண்ணு.. அவ வாழ்க்கை வீணாப் போகக்கூடாது.. உங்களை கெஞ்சிக் கேட்கறேன்” என அவனிடம் கெஞ்சினான்.

      ரகுவிற்கு அய்யோ என்றிருந்தது.. இதெல்லாம் நடக்கும் விஷயமா.. இவரை எப்படி மனம் மாற்றுவது என அவன் நினைக்க.. அவன் யோசனையைக் கண்ட தியாகு “நீங்க என்ன நினைக்கறிங்கன்னு புரியுது.. இதுவரை ரேவதி மேல என் விரல் நகம் கூடப் படலை” என்றவனை அதற்கு மேலும் பேசவிடாதபடி



Advertisement

      “அய்யோ.. கடவுளே.. என்ன இது.. உளறாதிங்க.. கல்யாணம் ஆன ஒரு பொண்ணை பத்தி பேச நினைக்க என்ன இருக்கு.. இப்படி எல்லாம் பேசாதிங்க.. நீங்க உங்க காதலியை மறந்துட்டு ரேவதி கூட வாழுங்க.. அவ ரொம்ப நல்ல பொண்ணு.. இனிமேல் இதைப்பத்தி என்கிட்டப் பேசாதிங்க” என்றவன் அவன் பதிலை எதிர்பாராமல் நடந்தான்.

      “ரகு” என்ற தியாகுவின் உரத்த குரலில் இவன் திரும்ப.. அதிர்ந்து போனான்.. தியாகு கிணற்று திண்டின் மேல் ஏறி நின்றிருக்க “ஐயோ என்ன பண்றிங்க.. இது ரொம்ப மோசமான கிணறு.. இறங்கி வாங்க” என அவன் அருகில் ஓட.. தியாகுவோ “அவளே போயிட்டா இனி எனக்கென்ன இருக்கு.. இவ்வளவு நாள் கோழையா இருந்தேன்.. ரேவதி வாழ்க்கைக்காக சாகறது எனக்கு சந்தோஷம் தான்.. நான் இல்லாம போன நீங்க சந்தோஷமா வழ்விங்க தானே” என்றபடியே கிணற்றில் குதித்துவிட்டான்.

     புதுமாப்பிள்ளையைக் காணவில்லை என தேடி வந்த சரவணன் மற்றும் ராகவனின் காதில் தியாகுவின் ‘நான் இல்லாம போனா நீங்க சந்தோஷமா வாழ்விங்க தானே’ என்ற கடைசி வரி மட்டும் கேட்டது.

Advertisement

[the_ad id=”6605″]

Advertisement

     ராகவன் தியாகு குதித்த அதிர்ச்சியில் உதவிக்கு சுற்றி யாராவது இருக்கிறார்களா எனத் தேட.. அனைவரும் வந்து கிணற்றில் இருந்து அவனை மீட்க..  பாறையில் தலையின் பின்பக்கம் மோதி.. உள்ளேயே இறந்திருந்தான்.

        ஒரே வாரத்தில் தங்கையின் மணவாழ்க்கை முடிவுக்கு வந்ததை எண்ணி சரவணன் மனம் வெதும்ப.. அருகில் கலங்கிய கண்களோடு நின்றிருந்த ரகுவைக் கண்டதும் இன்னும் கோவம் அதிகாமாகியது.

        தியாகுவின் கடைசி வரியில் அவன் தான் மாப்பிள்ளையிடம் ஏதோ இல்லாததும் பொல்லாததுமாக சொல்லியிருக்கிறான் என எண்ணியவர் அவன் சட்டையைக் கொத்தாகப் பற்றி “உனக்கு என்னடா பாவம் பண்ணோம்.. என் தங்கச்சி வாழ்க்கையை இப்படி பாழுங் கிணத்துல தள்ளிட்டியே” என அவனை சரமாரியாக அடித்தார்.

Advertisement

      ராகவனால் ஒன்றும் சொல்ல முடியாத நிலை.. அவரும் தியாகுவின் இறுதி வாக்கியத்தைக் கேட்டார் தானே.. மனதைக் கல்லாக்கியபடி நிற்க.. சரவணனின் சொந்தங்கள் அவனை அடிக்க.. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்.. கூட்டத்தை விலக்கி.. அவனை தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டார்.

     சரவணன் ராகவனை முறைத்து “என்னடா ரத்தபாசமா.. இவனால தான் என் தங்கச்சி வாழ்க்கை போச்சு.. அவனை விடு.. இன்னைக்கு அவனை கொன்னு போட்றேன்” என ஆக்ரோஷமாக ரகுவை அவரிடம் இருந்து இழுக்க

      ராகவன் “டேய்.. ரகு தப்பானவனா இருந்திருந்த கல்யாணத்திலயே பிரச்சனை பண்ணியிருப்பான்.. அவன் நைனா பேச்சுக் கேட்டு ஒழுங்கா ஒதுங்கித் தான் போனான்.. என்ன நடந்ததுன்னு விசாரிக்கலாம்.. முதல்ல ஆக வேண்டிடதைப் பாப்போம்” என சற்றே அவரை அமைதிப் படுத்த முயன்றார்.

       “நிறுத்துடா.. இதுக்கு மேல விசாரிச்சு என்ன ஆகப் போகுது.. நீயும் தானே மாப்பிள்ளை பேசுனதைக் கேட்ட.. இவனை உண்டு இல்லைன்னு பண்ணிட்டுத்தான் என் மாப்பிள்ளையை வீட்டுக்கு எடுத்துட்டுப் போவேன்டா” என வரிந்து கட்டிக் கொண்டு அவனை அடிக்கக் கிளம்பினார்.

      தன் தோளில் சாய்ந்திருக்கும் தம்பி ஏற்கெனவே குற்றுயிராய் இருக்க.. இதற்கு மேலும் அவன் அடி தாங்கமாட்டான் என அவருக்குப் புரிந்தது.. அவரால் உறுதியாக கூற மட்டுமே முடிந்தது.. ரகு அப்படி இல்லை என.. ஆனால் சூழ்நிலை அவனுக்கு எதிராக அல்லவா அமைந்துள்ளது.

      “அது உன்னால முடியாது.. என் தம்பியை எவன் அடிக்கறான்னு பாக்கறேன்” என சுற்றி இருந்தவர்களை பார்க்க.. ராகவனின் கோவம் கண்டு அனைவருமே பின்னோக்கி நகர.. அதற்குள் ஊருக்குள் விஷயம் கேள்விப்பட்டு இரண்டு குடும்பத்தினரும் பதறியடித்துக் கொண்டு வந்திருந்தனர்.

[the_ad id=”6605″]

     ரேவதி பிரமை பிடித்தவள் போல் கணவனின் உயிரற்ற உடலைக் காண.. அவள் பால் முகம் கண்டு சரவணனுக்கு இன்னும் ஆத்திரம் அதிகமாக “இன்னைக்கு உன் வீட்லையும் எழவு விழனும்டா” என ராகவனை அறைந்து தள்ளிவிட்டு ரகுவை நெருக்க.. சுதாரித்த ராகவன் அவரை தடுக்கப் பார்க்க.. அந்த இடமே போர்க்களமாகிப் போனது.

      பெரியவர்கள் இருவருக்கும் யாரை நோவதென்றே தெரியவில்லை.. ஊரார் இருவரையும் விலக்கி விட.. சரவணன் தன் குடும்பத்துடன் தியாகுவின் சடலத்தை ஏந்திச் செல்ல.. ராகவன் ரகுவை அழைத்துச் சென்றார்.. அன்றோடு இரு குடும்பத்திற்கும் இருந்த பிணைப்பு அடியோடு அறுந்தது.

      புதுமாப்பிள்ளையாய் வந்தவன்.. பிணமாய்த்தான் ஊர் திரும்பியதைக் கண்டு அவனது வீட்டில் ரேவதியை ராசி இல்லாதவள் என ஒதுக்கி வைத்துவிட.. அவள் பெற்றோர் அவளை தம்முடனே அழைத்து வந்துவிட்டனர்.

       சரவணனுக்கு தன் தங்கை வாழ்க்கை பலியாகி இருக்க.. நண்பன் தம்பியைத் தானே காத்தான் என அவர் மீது ஆத்திரம் திரும்பியது.. அதுவும் பதினேழு வயதில் கைம்பெண்ணாய் இருந்த ரேவதியின் நிலை அதை எந்நேரமும் விசிறிவிட்டபடியே இருந்தது.

       முகிலனும் நந்தாவும் நன்றாக விபரம் புரிந்த வயது ஆதலால்.. தாங்களும் அமைதியாக விலகிவிட.. மகிழினி இரண்டும் கெட்டான் நிலையில் இருக்க.. அவள் மனதில் பதிந்தது தன் பாசமிகு சரவணன் மாமா தன் தந்தையை அறைந்தது தான்.. அவளால் அதை மறக்கவே முடியவில்லை.

     பெரியவர்களோடு தானே சத்தம்.. குழந்தை என்ன செய்யும் என கோவிலிலோ தெருவிலோ மகிழ் விளையாடும் போது சரவணன் அழைத்தால் முறைத்துவிட்டு வீட்டுக்குள் ஓடிவிடுவாள்..

     வருடங்கள் கடந்தன.. தங்கள் மகன்களின் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுத்தோ.. இல்லை ஒருவரை ஒருவர் தவிர்க்க விரும்பியோ என்னவோ நந்தாவின் தாத்தாவும் மகிழின் தாத்தாவும் பேசிக் கொள்வது இல்லை.

      நந்தாவிற்கு தன் அத்தையின் இந்த நிலைக்கு ரகுவே காரணம் என மனதில் பதிந்திருக்க.. மற்றது எதையும் அவன் யோசித்திருக்கவில்லை.. அதை உணர்த்தவே.. கருவலூர் மாரியம்மன் கோவில் திருக்குடமுழுக்கு வந்தது..

       கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துவர அனைவரும் செல்ல.. மகிழினியும் எடுப்பதாக இருந்தது.. பெரியவர்கள் அனைவரும் குடங்களில் நீர் நிரப்பிக் கொண்டிருக்க.. கண்டு கொள்ள ஆள் இல்லாமல் குழந்தைகள் ஆற்றில் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.

      நந்தாவும் முகிலனும் தீர்த்தக் குடங்களை கரையில் வைத்துக் கொண்டிருக்க.. அனைவரும் மேலேறி இருந்தனர்.. ஆனால் மகிழைத் தவிர.. அவள் தலையில் தான் முதல் குடம் வைக்கவேண்டும் என்பதாய் தேட.. ஆளைக் காணவில்லை.

      நீரில் அடித்துச் சென்றவாறே அவள் கை விரல் மட்டும் தெரிய.. நந்தா சற்றும் யோசிக்காமல் ஆற்றில் இறங்கி.. அவள் ஒருபுறப் பின்னலைப் பிடித்து இழுத்து வந்துவிட்டான்.. முகில் அவனிடமிருந்து தங்கையைப் பறித்து அவள் முதுகு கை கால் என நீவி விட.. நந்தா சற்றே நகர்ந்து சென்றான்.

     நடக்கவிருந்த விபரீதத்தை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. இத்தனை நாள் அவளைக் கண்டு கொண்டதில்லை.. ஆனால் இன்று அவன் மட்டும் பார்க்காமல் இருந்திருந்தால்.. என எண்ணிய போதே கண்கள் நீரைப் பொழிய.. அவனுக்கே தன்னைக் குறித்து ஆச்சரியம் தான்.

      அதன்பின் அனைவரும் தீர்த்தம் எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றனர்.. விஷயம் கேள்விப் பட்ட ராகவன் வீட்டிற்கு வேகமாகச் சென்று யோசிக்காமல் மனைவியை அறைந்தார்.. அது தான் அவர் வாழ்நாளில் முதலும் கடைசியுமாக மனைவியை அடித்தது.

       அதிர்ச்சியில் இருந்த மகளை அப்போது தான் தட்டி உறங்க வைத்த தனம் கணவனின் அறையில் பேந்தப் பேந்த விழிக்க “புள்ளையைப் பாத்துக்கறது தவிர என்ன வேலை உனக்கு.. அவகூட தீர்த்தத்துக்கு போக வேண்டியது தானே நீ” என கர்ஜித்தார்.

       அவரைத் தடுத்த அமிர்து அவ்வா “நாந்தான்டா வேண்டாம்னு சொன்னேன்.. உங்க நைனா.. உம்பையன் ரெண்டு பேர் போறாங்கள்ள.. உம்புள்ளை என்ன சாமியா ஆடப்போறான்னு தான் நாங்க வீட்டு வேலை பாத்தோம்.. மாரியாத்தா கூட்டிட்டு வந்துட்டால்ல உம்புள்ளயை.. போய் வேலையப் பாரு” என அவரை அதட்டிவிட்டு கணவனை நோக்க.. அவரும் அரண்டு போய்த்தான் அமர்ந்திருந்தார்.. நந்தா மட்டும் இல்லையெனில் பேத்தி.. நினைக்கவே பயமாக இருந்தது.

[the_ad id=”6605″]

      இத்தனை பேருக்கும் பயம் காட்டிவிட்டு மகிழினி நீச்சல் அடித்த டயர்டில் உறங்கிப் போயிருந்தாள்.

கும்பாபிஷேகம் முடிந்த அடுத்த நாள்..

ஒன்னாங்கல்லு ஒசந்த கல்லு
இரண்டாங்கல்லு ராட்டினகம்பி
மூனாங்கல்லு முத்தரையன் பேட்டை
நாலாங்கல்லு நாகமலைச் செண்டு
ஐஞ்சாங்கல்லு பஞ்சவர்ணம்
ஆறாங்கல்லு பாறைக்கல்லு
ஏலேலம்மா எனக்கொரு கல்லு

என்றவாறே முத்துவோடு பேசியபடியே மகிழினி கல்லைத் தூக்கிப் போட.. அவளை முந்திக் கொண்டு.. அந்தக் கல்லை பிடித்தான் நந்தா..

நிஷ்டூரமாக அவனை முறைத்தவள் “கல்லை குடு நான் போகனும்” என கத்த.. காதை அடைத்துக் கொண்டவன் “ஏன்டி இப்படி கத்துற.. பாவாக்கு காது போய்டுச்சுன்னா.. அப்புறம் உனக்கு தான் கஷ்டம்.. பாத்துக்கோ” என்றான் நந்தா அவளை விஷமமாக பார்த்து சிரித்தவாறே..

“உன் மூஞ்சி.. நீ ஒன்னும் எனக்கு பாவா இல்லை.. அந்த கல்லை உன் அப்பத்தாட்ட கொடுத்து பொறிச்சு சாப்பிடு நான் போறேன்” என நகர்ந்தவளை.. “பாதி விளையாட்டுல எங்க எந்திரிச்சு போற.. இந்தா” என கையிலிருந்த கல்லை கொடுக்க..

அதை தட்டி விட்டவள் “ம்ம்.. சத்தியமங்கலம் காட்டில புலி மேய்க்க போறேன்.. உன்கூட பேசறதை என் அவ்வா பாத்தா.. சங்கு தான் எனக்கு” என கைகளில் மீதம் இருந்த கல்லையும் கீழே எறிந்துவிட்டு.. முத்துவையும் இழுத்துக் கொண்டு ஓடிச் சென்றுவிட்டாள் மகிழினி.

      செல்லும் அவளையே பெருமூச்சுடன் பார்த்தான் நந்தா.. இரட்டைப் பின்னலில் மல்லிகைச் சரமாக மலர்ந்திருக்க.. கோவில் விசேஷத்திற்காக காதில் குடியேறியிருந்த ஜிமிக்கியோடு.. பதிமூன்று வயதிற்கு இன்னும் குழந்தை முகம் மாறாமல் பட்டுப்பாவாடை சரசரக்க அவள் ஓடி விளையாட.. நந்தா தான் தன் எண்ணப் போக்கு உணர்ந்து தன்னை நொந்து கொண்டான்.

      ‘அவ குழந்தை’ என தனக்குத் தானே சொல்லியவன்.. தன் இளங்களைப் படிப்பை முடித்து.. பதின்பருவத்தில் இறுதியில் இருந்தான்.. மகிழ் நீரில் செல்லக் கண்டு.. தன் உயிர் வரை ஆடிப் போனவனுக்குப் புரிந்தது.. அந்த உயிர் எங்கு இருக்கின்றது என.

      அவள் வயதும்.. குடும்பப் பிரச்சனைகளும் அவன் கண் முன் நிழற்படமாக ஓட.. அவளை விட்டு விலகுவதே நல்லது என எண்ணி தன் முதுகலைப் படிப்பைக் காரணம் காட்டி பெங்களூர் சென்றான்.

நாயகன் வருவான்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!