Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன்-நாயகன்9

பௌர்ணமிக்கு அடுத்த நாளைய பால்நிலா.. சற்றே சோபை குன்றி.. தன் சோம்பல் கதிர்களால் பூமியை வருடிக் கொண்டிருக்க.. தன் அவ்வாவின் மடியில் படுத்திருந்த மகிழின் முகமும் அதைப் போலவே வாட்டமாகவே இருந்தது.

       மனதில் இன்று பள்ளியில் நடந்த நிகழ்வே ஓடிக் கொண்டிருந்தது.. அவர்கள் கதை ஊரறிந்த ரகசியம் தான்.. நந்தா ஒன்றும் அவளை கந்தர்வ மணம் புரிந்து கொள்ளவில்லையே.. அனைத்தையும் மறைத்து வைப்பதற்கு.. ஊராரின் முன்னால் தாலி கட்டி.. நாட்கணக்காக இருந்தாலும் அவன் வீட்டில் வாழ்ந்தாள் தானே.

       இந்த ஊரில் தான் அவள் அப்பாவிற்கும் நந்தாவின் வீட்டிற்கும் பயந்து யாரும் அவளை முகத்திற்கு நேராக ஒன்றும் சொல்லியதில்லை.. ஆனால் மற்றவர்கள் அப்படி இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லையே.. அதன் சான்று தான் இன்று பள்ளியில் நடந்தது.

       நந்தா மட்டும் சற்றுப் பொறுமையாக இருந்திருந்தால்.. தனக்கு இன்று இந்த அவப்பெயர் வந்திருக்காதே.. அவன் செய்த அனைத்தையும் மறந்து உரிமையுள்ள மனைவியாய் அவனை நெருங்கவும் முடியாமல்.. மற்றொருத்தியின் பார்வைக்குக் கூட அவனை விட்டுத் தரமுடியாமல்.. அவ்வளவு ஏன் இதை வெளியில் யாரிடமும் மனம் விட்டுச் சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பை அவள் மட்டுமே அறிவாள்.



Advertisement

      கண்கள் கலங்கியபடியே இருக்க.. அவ்வாவின் முதிய கரங்கள் அதைத் துடைத்தது.. மாலை பள்ளியில் இருந்து வந்ததில் இருந்து அவள் அப்படியே தான் இருக்கிறாள்.. உணவு உண்ணவில்லை என்றால் சந்தேகம் வருமே என பெயருக்கு இரண்டு வாய் கொறித்துவிட்டு அவ்வாவின் மடியில் தலைசாய்த்துக் கொண்டாள்.


அப்படியிருந்தும் வீட்டினருக்குத் தெரியாதா அவளைப் பற்றி.. இதற்கு மேலும் அங்கிருக்க முடியாதவாளாய் தன் அறை நோக்கிச் சென்றாள்.. கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவளுக்குப் புரிந்தது.. இன்று எப்படியும் உறக்கம் வரப் போவதில்லை என.

      கட்டில் எதிரில் இருந்த ட்ரெஸிங் டேபிள் கண்ணாடியில் அவள் முகம் தெரிய.. இரவு விளக்கின் ஒளியில் மூக்குத்தி மின்ன.. அதில் அவள் நினைவுகள் மெல்லப் பின்னோக்கிச் சென்றது.

Advertisement

[the_ad id=”6605″]

Advertisement


மகிழின் தாத்தா நாரயண சாமியும், நந்தாவின் தாத்தா குமாரசாமியும் பிறந்தது முதற்கொண்டே நண்பர்கள்.. ஆரம்பப் பள்ளி முடித்த பின்.. அதற்கு மேல் படிப்பில் நாட்டம் செல்லாமல் இருக்க.. கரைகண்ட சொத்து இருந்தாலும்.. அவற்றைக் கட்டிக் காக்க அனுபவம் தேவை என இருவரையும் அவர்கள் தகப்பன் பக்கத்து ஊரில் பண்ணையத்தில் சேர்த்துவிட.. வீட்டை விட்டு பிரிந்த இருவருக்கும் மற்றவரே உறவாகிப் போயினர்.

       அடுத்த ஈரைந்து ஆண்டுகளில் இருவரின் பிணைப்பும் நன்றாக இறுதியது.. பெற்றவர்களின் முதுமை காரணமாக ஊர் திரும்பிய இருவரும் தங்கள் நிலத்தில் பாடுபட ஆரம்பிக்க.. அடுத்தடுத்து திருமணம், குழந்தைகள் என வாழ்வு அதன் போக்கில் சென்றது.

    இருவரின் மனைவியர் வந்த பின்னும் அந்த நட்பு சொந்தமாகவே மாறத் துவங்கியது.. சாரதாவும் அமிர்த்துவும் பதினாறு, பதினேழு வயதில் திருமணம் செய்து கொண்டு வர.. காட்டில் வேலை பழகுவதும், நடு இரவில் வீட்டை ஏமாற்றிவிட்டு அரிச்சந்திரன், நல்லதங்காள் கதை பார்க்கச் செல்வதுமாக இருக்க.. இரு குடும்பமும் நல்ல ஒற்றுமையுடனே இருந்தது.

Advertisement

      தந்தைக்கு மிஞ்சிய தனையன்களாக ராகவனும் சரவணனும் தங்கள் நட்பை வளர்த்துக் கொண்டிருந்தனர்.. வேறு வேறு இனமாக இருந்த போதிலும்.. அதன் பொருட்டு ஊருக்குள் நிறைய பிரச்சனைகள் வந்த போதிலும் இருவரும் எந்த சூழ்நிலையிலும் தங்கள் பிணைப்பை விட்டுத் தர முன்வந்தது இல்லை..

     நந்தாவின் கூற்றுப்படி அனைத்தும் ரகுவிடம் இருந்து ஆரம்பித்தது தான்.. இன்னும் சரியாகச் சொல்வதெனில் ரகுவின் அப்பா ரங்கநாதனிடம் இருந்து ஆரம்பித்தது தான்.

       ரகுவின் தந்தைக்கு திருமணமாகி வெகு நாட்களாக பிள்ளை இல்லாமல் போய்.. இரண்டு மாமியாரிடமும் அவன் அம்மா கோதை ஏச்சும் பேச்சும் வாங்கி நொந்த பின் தான் கடவுள் புத்திர பாக்கியம் கொடுத்தான்.. ஆனால் அடுத்த மூன்றே வருடங்களில் கோதை இறந்து விட்டார்.

      அதன்பிறகு யாரிடமும் எதுவும் சொல்லாமல் ரகுவின் அப்பா பத்து வயது மகளுடன் விதவையாய் இருந்த குமாரசாமியின் ஒன்றுவிட்ட தங்கை மங்கையை திருமணம் செய்து கொள்ள இரு குடும்பத்திற்குமே அதிர்ச்சி தான்.

      “செத்த பிள்ளைக்கு இன்னும் வருஷேந்திரம் கூட பண்ணலை.. அதுக்குள்ள புது மாப்பிள்ளை ஆகிட்ட நீஎன நாரயண சாமி தம்பியை முழுமையாக வெறுத்தே விட்டார்.

      ரகு மூன்று வயது பாலகனாகய் ஒன்றும் தெரியாமல் தன் தாயை நினைத்து ஏங்கி அழ.. அமிர்தம்மாள் அவனை தன்னோடு அழைத்துச் சென்று வளர்த்தார்.

       மகனுக்காகத் தான் திருமணம் என சப்பைக் கட்டுடன் மீண்டும் ரகுவை தன்னுடவே அவன் தந்தை அழைத்துக் கொண்டு வந்துவிட.. ரகு மீண்டும் ஏங்கிப் போனான்.. மாற்றாந்தாயிடம் கிடைக்காத தாய்ப்பாசம் அவனுக்கு மாற்றாந்தாயின் பெண்ணிடம் கிடைத்தது.

      புதுத் தந்தையை ஏற்க முடியாமல் இருந்த மங்கையின் பெண் மீனாட்சி ரகுவை தன் சொந்தத் தம்பியாக எண்ணி வளர்க்க.. அவனும் சூழ்நிலை உணர்ந்து வளர ஆரம்பித்தான்.. அனைத்திலும் குறை வைத்த அவனுக்கு இயற்கை அறிவை வாரி வழங்கியிருந்தது.. எப்பேர்ப்பட்ட கணக்கையும் நிமிடத்தில் போடுவான்.

     மீனாட்சிக்குப் பெருமையில்லாத பெருமை.. அவளது இந்த குணத்தை எண்ணி தலையிலேயே அடித்துக் கொள்வார் மங்கை.. ஆனாலும் நம் கை மீறி ஒன்றும் நடக்காது என இறுமாப்புடன் இருவரையும் கவனித்து வந்தார்.. வருடங்கள் கடந்தன.

       தான் இனம் மாறி மறுதிருமணம் செய்திருப்பது மீனாட்சியின் வாழ்வை பாதிக்கும் என்பதால் சொந்தத்திலேயே வெகுவிரைவாக அவளுக்கு மணம் முடித்து வைக்க.. முத்துக் குமரனும் பிறந்தான்.

        அப்போது ரகு அருகில் இருந்த கல்லூரியில் பியூசி படித்துக் கொண்டிருந்த சமயம்.. ரேவதியின் அமைதியான சுபாவத்தையும்.. அவளது பொறுமையையும் கண்டு காதல் கொண்டான்.

       அன்று ஊரில் இருந்து வந்திருந்த அக்காவிடம் தன் விருப்பத்தைச் சொல்ல.. மிரண்ட மீனாட்சி சுற்றும் முற்றும் பார்த்தபடிஅய்யோ என்னடா உளர்ற.. யாராவது காதில விழப் போகுது.. இதெல்லாம் இந்த வயசுல வரது தான்.. ஒழுங்கா படிக்கிற வழியை மட்டும் பாரு.. ஏதாவது பிரச்சனை ஆகிடப் போகுதுஎன தமக்கையாய் அவனைத் தடுத்தாள்.

[the_ad id=”6605″]

      ஆனால் அவனோ விடாப்பிடியாய்அக்கா.. ஏன்க்கா.. எனக்கு ரேவதியை ரொம்பப் பிடிக்கும்க்கா.. நான் அவளை நல்லா வச்சுப்பேன்க்காஎன அவளை சரிக்கட்டவே பார்த்தான்.. 

      “டேய்.. நீயே யோசி.. இதெல்லாம் சரிப்பட்டு வருமா.. நம்மளை அவங்க ஒதுக்கி வச்சதுக்கு காரணமே நம்ம வீட்டுப் பெரியவங்க பண்ண தப்புத்தான்.. அதையே நீயும் செய்யப் போறியா.. நல்லா இருக்க ஊருக்குள்ள சண்டையை இழுத்து விட்டுடாதே.. அதுவும் ரேவதி ரொம்ப பயந்த சுபாவம்.. நீ போய் பேசினாலே அவ மிரண்டு போய்டுவா.. பொறுமையா இருஎன அவளும் தன்னால் முடிந்த வரையில் அவனுக்கு புத்தி சொல்லிச் சென்றாள்.. ஆனால் அது யார் காதை எட்டக் கூடாதோ அவரின் காதுகளையே எட்டியது.

       அவனும் அதற்கு மதிப்பளித்து அமைதியாக இருக்க.. அதற்கும் தடையாய் வந்தது.. ரேவதியின் திருமணச் செய்தி.. அவளுக்கு சிறு வயது தான் என்றாலும் காலம் சென்று பிறந்த பெண் என்பதால் சீக்கிரமே திருமணம் முடிக்க எண்ணி வரன் பார்த்து பேசி முடித்தனர்.

      இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாதவனாய் ரகு.. முருகன் கோவிலில் விளக்கு ஏற்ற வந்தவளிடம் தன் விருப்பத்தைச் சொல்ல.. அது சாரதாவின் காதில் விழுந்தது.. அவனிடம் எச்சரிக்கை செய்து அனுப்பியவர் வீட்டில் கணவனிடமும் மகனிடமும் விரைவாக திருமண ஏற்பாட்டை கவனிக்கச் சொன்னார்.

       ஆனால் இளம் கன்று பயமறியாதே.. திரும்பவும் அவளை தொல்லை செய்ய.. இதற்கு மேல் முடியாமல் நாராயணசாமியே தலையிட்டு அவனிடம் பேசினார்.. என்னதான் நட்பாக இருந்தாலும்.. அவர்கள் உள்ளும் இனப்பற்று இருக்கவே செய்தது.

      அதைவிட ரகுவின் வயது.. பதினெட்டு வயதில் பெண் கேட்டால் யார்தான் கொடுப்பார்கள்.. எவ்வித சத்தமும் காட்டாமல் ரகுவிடம் பேசி அவனை விலகிவிடச் சொன்ன கையோடு அவசரமாக ரேவதியின் திருமணத்தை நடத்தினர்.

       ரேவதி திருமணத்திற்குப் பின் ஒருவாரம் கழித்து கோவில் திருவிழா.. முதல் நோம்பி என்பதால் ரேவதி அவள் கணவன் தியாகுவுடன் வந்திருக்க.. ரேவதியின் முகத்தில் புதுப்பெண்ணிற்குரிய எவ்வித பூரிப்பும் தென்படவில்லை.. அதைக் கண்ட சாரதாவிற்கு அடிவயிற்றைப் பிசைந்தது.. அமிர்துவிடம் சொல்லிப் புலம்பக் கூட நேரம் இல்லாமல் வேலை இருந்தபடியே இருந்தது.

      மணமக்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு மங்கையும் அத்தை முறைக்காக அவர்களை விருந்துக்கு அழைக்கச் சென்றார்.. அவருக்கு இரு குடும்பங்களின் ஒற்றுமை என்றுமே கண்ணை உறுத்திய ஒன்று தான்.. யாரேனும் பிரச்சினை பண்ணிவிடக் கூடும் என்று தான் ரகுவின் தந்தையிடம் ஏதேதோ கூறி அவசரமாக திருமணம் செய்து கொண்டு அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக மாறினார்.. ஆனாலும் அவரால் இவர்களைப் பிரிக்க முடியவில்லை.

      ரேவதியைப் பார்ப்பதாகச் சொல்லி அவளிடம் வந்தவர்.. தியாகு சற்றே தள்ளி நிற்பதை கவனிக்காதது போலஎன் தங்கம்.. நீ சந்தோஷமா இருக்கியா.. ஆனா இந்தப் பாவிப்பய தான் உன் வாழ்க்கையை கெடுக்கப் பாத்தானே.. உன் நினைப்பாவே இருக்கான் போல.. அவனும் நல்லா இல்லை சாமி.. ஏனோ தானோன்னு இருக்கான்.. கண் கொண்டு பாக்க முடியலை.. எல்லாம் சரியா இருந்திருந்தா நீ இந்த அத்தை வீட்டுக்கு வந்திருப்பஎன அவள் கணவன் காதில் விழுமாறு ரேவதியிடம் பேச..

   பதினேழு வயதுப் பெண்.. ஏற்கெனவே புகுந்த வீடு மற்றும் கணவனின் ஒட்டாத தன்மையில் அவள் குழம்பியிருக்க இவர் சூட்சுமத்தை பற்றி எல்லாம் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.. ஆனால் ரகுவைப் பற்றிப் பேசுவது தவறு என்பது மட்டும் புரிய

     “என்ன அத்தை.. இப்படியெல்லாம் பேசறிங்கஎன முகத்தை சுழித்தாள்.. அவள் இதுவரை ரகுவிடம் அதிகாமகப் பேசியது கூட இல்லை.. 

       “உள்ளதைத் தானே சொன்னேன்.. அதை விடு.. நோம்பி முடிஞ்சு மறுநாள் நீ நம்ம வீட்டுக்கு வரனும்.. சரியா.. உன் புருஷன்கிட்டையும் சொல்லுஎன்றவர் நகர.. அவர் எதிர்பார்த்தது போலவே அவள் கணவனும் மங்கையிடம் வந்து இவ்வளவு நேரம் அவர் பேசியதைப் பற்றிக் கேட்டார்.

[the_ad id=”6605″]

      விஷமச் சிரிப்பை மறைத்தவாறே மங்கையும்அதெல்லாம் எதுக்கு தம்பி.. ஏதோ சின்னஞ்சிறுசுக.. அறியாத வயசு.. தெரியாம பண்ணிட்டாங்க.. நான் யாருக்குன்னு பாப்பேன் ஒரு பக்கம் மகன்.. ஆனா எங்க பொண்ணு தங்கம் தம்பி.. ஒரு குறை சொல்ல முடியாதுஎன ரகுவும் ரேவதியும் விரும்பியது போல கதை கட்டினார்.

     ரேவதியின் கவலை படிந்த முகத்திற்கான காரணமாகவும் அதையே எண்ணிய தியாகு.. திருவிழா முடிந்த அடுத்த நாள் ரேவதியையும் அழைத்துக் கொண்டு மங்கையின் வீட்டிற்குச் சென்றான்.

     தன் தாயின் கெட்டெண்ணத்தை சரியாக உணர்ந்த மீனாட்சி.. ரகுவை வீட்டிலியே இருக்க விடவில்லை.. ஏதேனும் வேலை கொடுத்து வெளியே அனுப்புவதிலேயே குறியாக இருந்தாள்.. ஆனாலும் அதையும் மீறி தியாகு ரகுவிடம் ரேவதியைப் பற்றிப் பேச வேண்டும் எனக் கூறி.. பத்து மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு கூறிவிட்டுச் சென்றான்.

      ரகு பயந்தே போனான்.. தான் யோசிக்காமல் செய்த வேலையால்.. ரேவதிக்கு அவள் கணவனோடு ஏதேனும் சண்டையோ என.. இன்று இரவு அவரிடம் அனைத்தையும் தெளிவாகப் பேசிவிட வேண்டும் என எண்ணியவாறு இரவு அவன் குறிப்பிட்ட நேரத்திற்கு தியாகுவைப் பார்க்கச் சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!