Post Views: 6,514
சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதி அந்த இடம். நெசப்பாக்கம். சென்னை என்றாலே பரபரப்பும் போக்குவரத்தும் தான் நினைவில் வந்து நிற்கும் மக்களுக்கு.
அந்த முக்கிய நகரத்தின் நெசப்பாக்கத்தில் இருந்த கே.கே. நகரில் நடுத்தர மக்கள் வசித்து வரும் பகுதியில் தான் அமைத்திருந்தது அந்த சூர்யா அபார்ட்மெண்ட்ஸ்.
மொத்தம் நான்கு மாடிகள் இருந்த அந்த குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திற்கும் ஆறு வீடுகள் வீதம் மொத்தம் முப்பத்தி இரண்டு வீடுகள். கீழே பெரிய கார் பார்க்கிங் வசதி அமைந்திருந்தது.
ஐந்தாவது மாடியில் ஒரு சிறு வீடு. ஒரு சிறிய குளியலறை, ஒரு கட்டில் போக ஒருவர் நடக்க கூடிய அளவே உள்ள சின்ன படுக்கையறை, ஒரு ஹால், அந்த ஹாலின் ஒரு மூலையிலே சமையலறை வசதி செய்யப்பட்டிருந்தது.
Advertisement
ஒரு பர்னர் மட்டுமே இருந்த அந்த அடுப்பில் சிறிய பால் சட்டியில் இருந்த பாலை பிளாஸ்க்கில் ஊற்றி கொண்டிருந்தவள் உதடுகள் கந்த சஷ்டி கவசத்தை தொலைக்காட்சியோடு முணுமுணுத்தது.
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
அவள் இலக்கியா. மூன்று வருடங்களுக்கு முன்னாள் பி.எஸ்சி நர்சிங் முடித்து தற்பொழுது சென்னையிலே புகழ்பெற்ற ராமகிருஷ்ணன் குரூப் ஆப் ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தில் வேலை செய்துவருகிறாள்.
Advertisement
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பாயுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனகசபைக்கோர் அரசே
Advertisement
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்..!
பாடல் முடிந்ததும் தொலைக்காட்சி பெட்டியை அணைக்க ரிமோட்டை எடுத்து ஆப் பட்டனை அழுத்த, உடைந்திருந்த அது இந்த நேரம் வேலை செய்யவில்லை.
பல வருடங்களாக வீட்டில் இருக்கும் அரசு கொடுத்த இலவச தொலைக்காட்சியின் பட்டனை அழுத்தி ஆப் செய்து மீண்டும் சமையலில் இறங்கினாள் இலக்கியா. வீட்டில் மொத்தமும் பழைய பொருட்கள் தான் அதிகம் இருக்கும். அது இது நாள் வரை பெரிய குறையாக கூட தெரியவில்லை அவளுக்கு.
Advertisement
“இலக்கியா சாப்பாட பாக்ஸ்ல வச்சிட்டு ம்மா… அந்த மிலிட்டரிகார் வீட்டுல கொஞ்சம் ஒதுங்க வக்கிர வேலை இருக்காம் நான் முடிச்சிட்டு வந்து சாப்ட்டுக்குறேன்” என்றார் அவள் தந்தை மணிகண்டன்.
“சரி ப்பா… பால் மட்டும் கையோட எடுத்துக்கோங்க. நான் வீட்டு சாவிய கணேஷ் அண்ணன் கைல ஒப்படைச்சிட்டு போறேன். எனக்கு சாம்பார் சட்னி எடுத்துக்குட்டேன், நீங்க நல்லா சாப்புடுங்க ப்பா” அவர் கண் முன்பே அவருக்கு தேவையான அனைத்தையும் அடுக்கி வைத்து காட்டிவிட்டாள்.
மணிகண்டன் சரி என்று பிளாஸ்கில் இருந்த பாலை மட்டும் எடுத்து கீழே சென்றிட கதவை அடைத்து தான் தினம் மருத்துவமனைக்கு உடுத்தும் வெள்ளை நிற சேலை எடுத்து குளியலறைக்குள் புகுந்தாள். சென்ற பத்தே நிமிடத்தில் வெளியே வந்து வேகமாக தன்னுடைய உணவையும், தண்ணீர் பாட்டில் ஒன்றையும் எடுத்து பையில் திணித்து, தலை வாரி அவசரமாக வெளியில் வந்தாள்.
வெளியே வந்த பொழுது தான் நினைவே வந்தது. அங்கு தான் வைத்திருந்த செடிகளுக்கு இன்று தண்ணீர் ஊற்ற மறந்து. தலையில் அடித்து குளியரை சென்று வாளியில் தண்ணீர் நிரப்பி அனைத்து செடிகளுக்கும் ஊற்றியவள் அரக்க பறக்க வீட்டை போட்டுவிட்டு படியிறங்கி வந்தாள்.
ஐந்தாவது தளத்தில் இருந்து நான்காவது தளத்திற்கு மின்தூக்கி வசதி இல்லை. படியேறி இறங்கி தான் செல்வார்கள். நான்காவது தளத்தில் வந்து மின்தூக்கிக்காக சில நிமிடங்கள் காத்திருக்க, கதவு திறந்ததும் வீர் என்ற சத்தம் அவள் காதுகளை அடைத்தது.
மொத்தம் ஒன்பது வாண்டுகள் அந்த மின்தூக்கியில். அனைவர் முகத்திலும் அத்தனை சந்தோசம், இவளை பயம் காட்டிய மகிழ்ச்சியில். சனிக்கிழமை ஆக இருக்க, முக்கால்வாசி குழந்தைகளுக்கு இன்று விடுமுறையாக இருந்தது.
அத்தனையும் எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருக்கும். ஆனால் அத்தனையும் அருந்த வால். இலக்கியாவை பார்த்ததும் ஒரு சிறுவன் வந்து அவள் கையிலிருந்த சாப்பாட்டு கூடையை பறித்துக்கொண்டு படிகளில் இறங்கி ஓட,
“கிருஷ்ணா நில்லுடா” என அவள் அழைக்கும் முன்பு அவன் பத்து படிக்கட்டுகளை தாண்டியிருந்தான்.
அவள் அழைப்பில் நின்றவன் திரும்பி முறைத்து, “கால் மீ க்ரிஷ்” என்ற ஆணையுடன் மீண்டும் கீழே ஓட, அதற்குள் அவள் சிகையை சிக்க வைத்திருந்த ரப்பர் பேண்டை ஒருவன் எடுத்துக்கொண்டு மூடாயிருந்த மின்தூக்கியினுள் மறைந்துவிட்டான்.
இரண்டு பக்கத்தில் எந்த பக்கத்தை நோக்கி ஓட என தெரியாமல் விழித்த இலக்கியா திறந்திருந்த படி பாதையை தேர்வு செய்து வேகமாக ஓடினாள். கீழ் இறங்கியவளது இடை நீண்ட பிண்ணியிராத கூந்தல் காற்றில் பறந்து ஆட, சரியாக மூன்றாவது தளத்தை தொட்டதும் இவளை பார்த்த ஒரு பெண், “ஐயோ பேய்” என்று மொத்த இடமும் அதிரும் வகையில் கத்திவிட்டார்.
அவரை விட மேலும் பயந்தவள் கூந்தலை கையால் முடிந்து, “ஆண்ட்டி நான் தான்… இலக்கியா தான். சாரி சாரி” என விட்ட வேலையை துவங்கினாள்.
ஒவ்வொரு தளம் வரும் பொழுதும் எந்த வாண்டாவது கண்ணில் பட்டுவிடாதா என பார்க்க, எங்கும் அவர்கள் இல்லை.
மூச்சு வாங்க தரை தளம் வந்து தன்னுடைய பையிலிருந்த இன்னொரு ரப்பர் பேண்ட் எடுத்து தலையை முடிந்தவள், வீட்டின் சாவியை அங்கிருந்த கணேஷ் வாட்சமேனிடம் ஒப்படைத்து, “பசங்கள எங்கையாவது பாத்திங்களா அண்ணா?” என்றாள்.
“எல்லாரும் வெளிய தான் பாப்பா ஓடுனாங்க, பார்க்கு போயிருக்கலாம். என்ன பாப்பா இன்னைக்கும் உன்ன ஒரண்டை இழுத்துட்டாங்களா?” என்றவர் அவள் கையில் ஒரு கிளாஸ் தண்ணீரை கொடுத்தார்.
“ஆமா அண்ணா. டிபன் பாக்ஸ் எடுத்துட்டு போய்ட்டாங்க. நான் பாக்குறேன். அப்பாகிட்ட சொல்லிடுங்க” என்று சிரித்த முகத்தோடு செல்பவளை வியந்தபடி வேளையில் இறங்கினார்.
இலக்கியாவின் இரண்டாவது வயதில் உடல் நல குறைபாடால் இறந்துவிட்டார் அவள் அன்னை. மனைவியின் மருத்துவத்திற்கு ஊரெங்கும் வாங்கிய கடனை அடைக்கவே மணிகண்டனுக்கு இருவது வருடங்கள் பிடிக்க, தன்னுடைய படிப்பு செலவை பள்ளி வரை மட்டுமே அவரால் பார்க்க முடியும் என்று தெரிந்து தானே படிப்பில் கவனத்தை செலுத்தி நல்ல மதிப்பெண்கள் பெற்று நர்சிங் சேர்ந்துகொண்டாள்.
ஒரு வயதிற்கு மேல் மணிகண்டன் உடலும் ஒத்துழைக்காமல் போக, அவரின் முதலாளி தன்னுடைய அபார்ட்மெண்டில் வாட்ச்மேன் வேலை போட்டுக்கொடுத்து மேலே இருந்த சிறிய வீட்டை இவர்களுக்கு லோன் போட்டு வீட்டையும் கொடுத்தார்.
அதுவே மணிகண்டனுக்கு சொர்கமாய் இருக்க, மன நிம்மதியுடன் மகளோடு அங்கேயே தங்கிக்கொண்டார். ஆனால் எந்த வயதிலும் தனக்கான தேவை இதுவென்று இலக்கியா இதுவரை ஒன்றும் வாங்கியதில்லை, அன்றாடம் உடுத்தும் உடையிலிருந்து, உணவு வரை.
நெற்றியை துடைத்துக்கொண்டே பக்கத்து தெருவிலிருந்த பார்க்கிற்கு சென்று இலக்கியா பார்க்க, மொத்த கூட்டமும் வெளியிலிருந்த ஐஸ்கிரீம் தள்ளுவண்டி ஒன்றை பிடித்து அங்கிருந்த ஸ்டோன் பெஞ்ச்சில் அமர்ந்து உல்லாசமாக வகை வகையான ஐஸ் கிரீமை ருசித்துக்கொண்டிருந்தனர்.
‘இத எப்படி நான் கெஸ் பண்ணாம போனேன்’ என தலையில் அடித்தவள் சிரிப்போடு அவர்கள் அருகில் சென்று நின்றாள்.
“இலக்கியா… உனக்கு என்ன ஐஸ்கிரீம் வேணும்?” என்றது ஒரு வாண்டு.
அந்த சிறுமியின் மூக்கை பிடித்து ஆட்டியவள், “ஏய் சேட்டை… உங்க அம்மா இதெல்லாம் சாப்புட கூடாதுன்னு சொல்லிருக்காங்கல்ல?” வினவினாள் செல்ல கோபத்துடன்.
“இன்னைக்கு ஒன் டே மம்மி பெர்மிஸ்ஸின் கொடுத்துட்டா” என்றது அந்த சின்ன பெண்.
“குடுத்தாங்க-னு சொல்லணும்” திறுத்தினாள் இலக்கியா.
“சாரி சாரி…” தன்னுடைய கப்பிலிருந்து ஒரு ஸ்பூன் ஐஸ் எடுத்து அவள் முன் நீட்ட, அந்த சிறியவள் மூக்கை பிடித்து ஆட்டி, “எனக்கு வேணாம் நீ சாப்புடு” என்றாள்.
“யாருடா என்னோட லஞ்ச் எடுத்தது?” இடுப்பில் கை வைத்து புருவத்தை தூக்கி ஒரு முகத்தை மட்டும் குறி வைத்து இலக்கியா பார்க்க, அந்த கூட்டத்தில் மொத்தமும் அமைதி.
“என்ன பேச்சையே கானம்?” – இலக்கியா
“என்கிட்ட இல்ல இலக்கியா நான் பேண்ட் மட்டும் தான் எடுத்தேன்… வருண் அவன்கிட்ட பேக் இருக்குறத சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டான்” நண்பனை சரியாக கிருஷ்ணா போட்டுக்கொடுத்துவிட்டான்.
அவன் பேச்சில் மற்றவர்கள் நெற்றியில் கை வைத்து அவனை முறைக்க, “நான் தான் சொலலல?” என்றான் க்ரிஷ் அப்பாவியாக.
“க்ரிஷ் யு ஆர் அன் இடியட்” என்றாள் ரக்ஷிதா என்னும் சிறுமி.
“சாரி ரக்ஸ்” – க்ரிஷ்
“டோன்ட் செ சாரி” என்றான் இன்னொருவன் முறைப்புடன்.
க்ரிஷ் முகமோ மொத்தமாய் வாட, “ஓகே நான் எதுவும் சொல்ல மாட்டேன். சண்டை போடாதீங்க. ஏண்டா ஐஸ்கிரீம் வேணும்னு சொல்லிருந்தா நானே வாங்கி தந்துருப்பேன்ல”
ஐஸ்கிரீம் விற்பவரிடம், “அண்ணா எவ்ளோ ஆச்சு?” பையிலிருந்த பணத்தை எடுத்து அவரிடம் நீட்டினாள்.
“எல்லாரும் சாப்பிட்டு அமைதியா வீட்டுக்கு ஓடிடனும் சரியா?” அனைவரும் சரி என்க, தன்னுடைய பையை வாங்கி வேகமாக பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தாள்.
நல்ல வேளையாக சரியான நேரத்திற்கு வந்ததால் தான் வழக்கமாக ஏறும் பேருந்தை பிடித்தாயிற்று. தினமும் பேருந்தில் சென்று, பேருந்தில் வந்து பழகியவளுக்கு அந்த கூட்டமும், நெரிசலும் பழகியிருந்தது. அந்த பேருந்தின் பின் கதவில் இவள் வரவிற்காகவே காத்திருந்த நெடுஞ்செழியன் அவள் கண்ணில் படும் படி வாகாக நிற்க, அவன் நோக்கத்தை புரிந்தவள் அந்த பக்கமே திரும்பாமல் இருந்துவிடுவாள்.
இது தான் தினம் தினம் நடப்பதும். இலக்கியா, ஐந்தடி நான்கு அங்குலம் உயரம். அன்னையிடமிருந்து வந்த மாசு மருவற்ற நல்ல நிறம், சாந்தமான அழகு முகம், மெல்லிய தேகமும் அல்லாமல் பூசிய உடல் வாகும் இல்லாமல் பார்க்க அழகாக இருப்பவள் அழகுக்கு அவன் கடந்த ஒரு வருடமாக அடிமையாகியிருந்தான்.
ஆனால் காதலை அவனிடம் நேரில் சொல்ல தான் பயம், அதையும் மீறி தன்னை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் அவன் பார்வை அவன் மனதை அவளுக்கு எடுத்து காட்டிவிட்டது. எதற்கும் பயம் கொள்ளாதவள் அமைதியாய் பார்த்துவிட்டு செல்லும் அவனையும் பார்த்து பயம் கொள்ளவில்லை, அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கவில்லை.
நேரில் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டாயிற்று. “ராமகிருஷ்ணா ஹாஸ்பிடல்” என கண்டக்டர் விசில் அடிக்கவும் ஒரு கூட்டம் இறங்க, இலக்கியாவும் இறங்கி நடையின் வேகத்தை கூட்டினாள்.
இன்று பேருந்து பத்து நிமிடம் தாமத்தித்தது ட்ராபிக்கால். உள்ளே சென்றவள் வேகமாக தன்னுடைய வருகை நேரத்தை பதிவு செய்ய பிங்கர்பிரிண்ட் ஸ்கேணரில் கை வைத்து தங்களது உடைமைகளை வைக்கும் லாக்கர் ரூம் சென்று கை கடிகாரத்தை பார்க்க, அவள் டூட்டி துவங்க இன்னும் ஐந்து நிமிடம் மீதம் இருந்தது.
டிபன் பாக்ஸை எடுத்து அவசரத்தில் அரை இட்லி வாய்க்குள் சென்றிருக்கும், அதற்குள் அவளை காண வந்த ஜோதி என்னும் செவிலியர்,
“சிஸ்டர் ஆபரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுவிங்களாம். ஒரு எமெர்ஜென்சி ஸ்ட்ரோக் கேஸ்” என்றதும் உண்பதை நிறுத்திவிட்டு கையை கழுவி கொடுத்த வேலையில் இறங்கினாள்.
கையை கழுவி முகத்தில் மாஸ்க் அணிந்து ஆபரேஷன் தியேட்டர் உள்ளே நுழைந்தவளுக்கு ஒரு ஆபரேஷன் கோட் ஒரு செவிலியர் அணிவிக்க, “தேங்க்ஸ்” என அவசரமாக ஆபரேஷன்க்கு தேவையான அத்தனை கருவிகளையும் எடுத்து சரி பார்த்தவள், அறுவை சிகிச்சை கருவிகளை சரி பார்க்க, இறுதியாக லைட்டை போட்டு பார்த்து அதுவும் சரியாக இருக்கவும் நிம்மதி மூச்சுவிட்டாள்.
மீண்டும் ஒரு முறை தேவையானவை இருக்கின்றதா என்பதை பார்க்க பம்பரமாய் சுழன்ற நேரம் கதவு திறக்கப்பட்டு வேகமாக ஒரு பேஷண்ட் உள்ளே அழைத்து வரப்பட்டார்.
ப்யூன் ஒருவர் உள்ளே நுழைந்த நிமிடமே இலக்கியா கையில் ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் சிலவற்றை கொடுக்க வாங்கி வைத்து அதை பார்வையிட்ட நேரம் இரண்டு மருத்துவர்கள் உள்ளே நுழைந்தனர்.
“எல்லாம் ரெடியா இலக்கியா?” – மதுமிகா
சிறு வயது பெண் தான் அந்த மருத்துவர், ஆறு மாதங்கள் முன்பு திருமணம் நடந்திருக்க, இரண்டு வாரங்கள் முன்பு தான் தன்னுடைய வயிற்றில் கருவை சுமந்திருப்பது தெரிந்து முக்கியமான அறுவை சிகிச்சைகளில் மட்டும் பங்குகொள்வாள்.
“எல்லாம் ரெடி மேடம்” என பேஷன்டின் உடலில் எலக்ட்ரோட்ஸ் (electrodes) வயர்களை கார்டியாக் ஈவென்ட் மானிட்டரில் பொருத்தினாள் இலக்கியா. அந்த இரண்டாவது மருத்துவர் பெயர் பிரதாப். நல்ல அனுபவமுள்ள அனஸ்தீசியாலஜிஸ்ட்.
“சார் நீங்க ஸ்டார்ட் பண்ணிடுறிங்களா?” என மதுமிதா கேட்க, “அர்ஜுன் இன்னும் வரல” என்றார் வாயிலை நோக்கி.
“வந்துடுவார் சார். நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க” என கூறிய நேரம் சரியாக இலக்கியாவின் கண்கள் கதவினை அடைந்தது.
அடுத்த சில நொடிகளில் மின்னல் வேகத்தில் கதவை திறந்து உள்ளே வந்தவரிடம் விரைந்த இலக்கியா அவனுடைய கோர்ட்டை ஆறடி உயரமிருந்தவனுக்கு அணிவிப்பதில் சற்று சிரமமாக தான் இருந்தது. நுனி காலில் எக்கி நின்று தான் மேலே இருந்த கயிற்றை போட முடிந்தது.
அவள் தன்னுடைய வேலையை முடித்ததும் அவன் கையில் சர்ஜரிக்கல் க்ளவ்ஸ் இரண்டை கொடுத்தவள், அடுத்து மாஸ்க் இரண்டையும் அவன் கையில் கொடுத்தாள். அதன் பிறகு IOL எனப்படும் இன்ட்ராஓக்யூலர் லென்ஸ் கண்ணாடியை அவனிடம் ஒப்படைத்தாள். அவன் முகத்தை பார்க்க கூட நேரமில்லை பெண்ணுக்கு.
அவ்வளவு வேகம் அவனிடம் எப்பொழுதும் இருக்கும். அவனுடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க இலக்கியாவால் மட்டுமே முடியுமென்பதால் அவன் இங்கு உள்ளே நுழைந்தாலே அவள் இருக்க வேண்டும் அவனுக்கு.
“ரிப்போர்ட்ஸ்?” அவன் கேட்கும் முன்பே அவன் முன் நீட்டினாள். முழுதாய் ஒரு நிமிடம் அவன் ஆயாரயும் முன்பே அனஸ்தீசியா கொடுத்திருந்தார் பிரதாப்.
“அர்ஜுன் ஸ்டார்ட் பண்ணலாம்” நோயாளியின் இதயத்துடிப்பையும், பல்ஸ் ரேட்டையும் பார்த்து கூறினார் பிரதாப்.
அவரிடம் தலை அசைத்தவன் நோயாளியின் தலை பக்கம் சென்று நின்ற பொழுது அவனுக்கு அருகில் ஒரு ட்ரேவில் சிகிச்சைக்கு தேவையான அத்தனை பொருட்களையும் எடுத்து வந்து நின்றாள் இலக்கியா.
லைட் எறியவும், “மது நீ இன்செஷன் பண்ணி ஸ்கேல்ப் கட் பண்ணு” அவளிடம் பொறுப்பை கொடுத்து அர்ஜுன் விலகி நிற்க அவள் செய்வதை கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்தான்.
சில நொடிகளிலேயே அவள் வேலையை முடித்து விலகி நிற்க, “பேபி கிரோத் எப்படி இருக்கு?”
“குட் சார், பானு மேம் தான் பாக்குறாங்க” – மதுமிகா
“உன் ஹஸ்பன்ட் எப்போ வரான்?… சக்ஷன்” பேச்சு மதுமிகாவிடமும், கை இலக்கியாவிடம் நீண்டு பொருளை வாங்கி கசிந்த ரத்தத்தை உரிந்தது.
“இந்த வீக் எண்ட் வர்றாங்க சார்”
“சா ஹாண்டில்… டயட் எல்லாம் இருக்கியா?” அவள் கையிலிருந்த கருவியை வாங்கி அவன் கேட்டதை இலக்கியா கொடுத்தாள்.
“அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு” பொதுவாக இது போன்ற இதமான பேச்சுகள் தான் இந்த நேரத்தில் ஓடும்.
என்ன தான் அனஸ்தீசியா கொடுத்திருந்தாலும் நோயாளிகளுக்கு சுயநினைவு இருந்துகொண்டே தான் இருக்கும், ஆதலால் அவர்களின் இதய துடிப்பை சமநிலையில் வைத்திருக்க மருத்துவர்கள் இந்த முறையை தான் கையாள்வார்கள்.
இலகுவான பேச்சுகளோடும், உன்னிப்பான கவனிப்பாலும் அடுத்த இரண்டரை மணி நேரத்தில் நரம்பிலிருந்த ரத்த நாளத்தின் பிரச்னையை சரி செய்துவிட்டு தையலிட்டான்.
“பல்ஸ் ரேட்?” – அர்ஜுன்
அங்கிருந்த இன்னொரு செவிலியர், “122” எனவும் தலையை செய்தவன், “வெள் டன் எவ்ரிஒன்” என்ற பாராட்டோடு சென்றான் அறையைவிட்டு.
அவன் சென்றதும் தான் மூச்சே வந்தது இலக்கியாவிற்கு. அர்ஜுன் என்றால் மொத்த மருத்துவமனையும் அதிக கவனுடத்தான் தான் இருப்பார்கள், அதில் இலக்கியா மட்டும் விதிவிலக்கல்ல.
கையை எல்லாம் சுத்தம் செய்து மூன்றாவது தளத்தில் இருக்கும் அவனுடைய அறைக்கு சென்றாள். வெளியில் கருப்பு நிறத்தில் இருந்த அந்த பெயர் பலகையில் தங்க நிற எழுத்துகளில் மிளிரியது ‘அர்ஜுன் சக்கரவர்த்தி’ என்னும் அவன் பெயர்.