Skip to content
Post Views: 4,743
தன்னை துச்சமென கருதும் அவனது பேச்சில் மனமுடைந்து போனவளுக்கு அழுகை பெருகியது. படிப்பு, அழகு தான் ஒருவரின் வாழ்க்கையையே தீர்மானிக்கும் சக்தி கொண்டுள்ளது போல.
உண்மையான அன்பு, பாசம், நேர்மைக்கு எல்லாம் இவ்வுலகில் இடமில்லை என்பதை மீண்டும் அவள் முகத்தில் அறைந்து.
“எனக்கு தெரியும் உங்களுக்கோ உங்க குடும்பத்துக்கோ நான் எந்த வகைலயும் ஏத்தவ இல்ல தான்”
இந்த பித்து பிடித்த காதல் மட்டும் இல்லை என்றால் இவனிடம் தன்னையே தோற்று நிற்கும் இந்த நிலை வந்திருக்காதே என்பதிலே அவளுக்கு கண்ணீர் முட்டி நின்றது, “அதுக்காக நீங்க என்ன இவ்ளோ கேவலமா நடத்தணும்னு அவசியம் இல்லங்க”
Advertisement
அவனுக்கு பதில் கொடுத்து குளியலறை சென்று உடையை மாற்றி விட்டு வாசல் நோக்கி இலக்கியா செல்ல வேகமாக எழுந்து நின்றான் அர்ஜுன், “எங்க போற” என்னும் கேள்வியோடு.
நின்றுவிட்டாள் அர்ஜுனை பார்த்து. உதட்டில் சிறு கசந்த புன்னகை, வருத்தத்தின் அளவுகோலோடு, “கண்டிப்பா சாக மாட்டேன். என் அப்பாவை பாக்க போறேன். என் வருத்தத்துக்காக பாக்காம, எனக்காக மட்டுமே வாழுற என் அப்பாவுக்காக ஆவது நான் உயிரோட இருக்கணும்ல”
வாசலை திறந்து சென்றவள் முதுகை வெறித்து அமர்ந்திருந்த அர்ஜுனின் மனம் கதறியது, ‘ஒரு சாரி சொல்லிடு அர்ஜுன், அவளை போக விடாத’ என்று.
Advertisement
அவனுள் இருந்த மருத்துவரின் அகம்பாவம் விடவில்லை. தன் மேல் அவள் இல்லாத குற்றத்தை எல்லாம் சுமத்தினாள், இவளிடம் நான் சென்று சமாதான வார்த்தைகளை உதிர்க்கவா என்கிற அழுத்தம் அவனை நிறுத்தியது.
Advertisement
இருந்தும் வாயில் வரை செல்வதும், வருவதுமாக இருந்தான். அவள் சென்று பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியது. என்ன செய்வதென புரியாமல் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டிருந்தவன் கண்களுக்கு மனைவியின் கைபேசி கிடைத்தது.
அவளை சென்று பார்ப்பதற்கு அது ஒன்று போதுமே. ஓடினான் அந்த இரவில் அவளை தேடி. நாளை காலை மருத்துவமனையில் கூட ஒப்படைக்கலாம் என்பதும் மறந்தான்.
காரணம் எப்பொழுது வேணாலும் விழ நான் தயார் என நின்ற அவளது கண்ணீர் துளிகளின் தாக்கமும், அந்த கருவிழிகளின் வேதனையும்.
Advertisement
அவளது இல்லம் சென்றதில்லை, ஓரளவிற்கு பெற்றோர் பேசி, இவள் பேசி கேட்டதை வைத்து விசாரித்து சென்றுவிட்டான். வெறும் கையேடு செல்ல விரும்பாமல் சில பழ வகைகளை வாங்கிக்கொண்டான் வரும் வழியிலேயே.
அவனுக்காக எதேச்சையாக வாயிலிலேயே மணிகண்டன் நின்றார். இரவு டியூட்டி போல. வராத மாப்பிள்ளையை, அதுவும் இரவு ஒன்பது மணிக்கு மேல் பார்க்கவும் துள்ளி குத்திக்காக குறையாக ஓடி வந்தார்.
“வாங்க வாங்க மாப்பிள்ளை, இலக்கியா வரலையா?” வாகனத்தினுள்ளே கண்கள் தன்னாலே தேடி, அவள் இல்லை எனவும் உடனே வாடிய அவரது முகத்தை பார்த்ததும் சற்று நேரம் முன்பு மனைவி கூறியது நினைவு வந்தது.
அந்த கண்களிலே அத்தனை பாசம் தெரிந்தது அவரின் மகள் மேல்.கூடவே பயம் ஏன் அவள் இன்னும் வரவில்லை என. அவன் கணக்கின்படி அவள் வந்து குறைந்தது கால் மணி நேரமாகியிருக்க வேண்டும்.
“இல்ல இங்க தான் வர்றதா சொன்னா” என்றான் திருதிருத்து.
“அப்டியா, இருங்க மாப்பிள்ளை நான் போன் அடிக்கிறேன்” அவர் கைபேசியை எடுத்து, “நீங்க உள்ள வாங்க” என்றார் மாப்பிள்ளையை விட்டுவிடாமல்.
“இல்ல அவ போன் என்கிட்ட இருக்கு” தந்தை சிரித்துக்கொண்டார், “புள்ள பஸ் ஸ்டாப்ல தான் இருப்பா. இங்க ரெண்டு தெரு தள்ளி ராத்திரி நேரத்துல கொஞ்சம் நாய் தொல்லை அதிகம் மாப்பிள்ளை. அதுக்கு பயந்துட்டே பஸ் ஸ்டாப்ல நின்னுடும். நீங்க வாங்க நான் உங்களுக்கு வீட்டை காட்டிட்டு போய் கூட்டிட்டு வர்றேன்”
அவன் அவ்விடத்தை தாண்டி தானே வந்தது, ஆள் நடமாட்டமே இல்லையே. அவரை விட அவனுக்கு இப்பொழுது இலக்கியாவை பார்க்கும் வேகம் வந்தது, “இல்ல நீங்க இருங்க, நான் பாக்குறேன்” அவரை யோசிக்க கூட விடாமல் இவனே சென்றான்.
வாகனத்தில் ஏறி அமர்ந்தவன் நேரத்தை பார்க்க ஒன்பது நாற்பதை தாண்டியிருந்தது. தெருவில் ஆள் நடமாட்டம் கூட அதிகம் இல்லை. பேருந்து நிறுத்தம் வர, அங்கு அமர்ந்திருந்தாள் அவன் மனைவி.
கைப்பையை நெஞ்சோடு அணைத்து, கால்கள் இரண்டையும் ஆட்டிக்கொண்டிருந்தவள் கண்கள் இரண்டும் பயத்தில் எந்நேரமும் சுதாரிப்பாக இருந்தது.
அர்ஜுனின் வாகனம் அவள் முன்பு வந்து நிற்க அதனுள்ளே அமர்த்திருந்தவனை கண்ணாடி வழியே பார்த்தவள் உடனே முகத்தை திருப்பிக்கொண்டாள்.
சுற்றி ஒருவர் கூட இல்லை, கும்மிருட்டாக தனியாக அமர்வதற்கு முற்றிலும் பொருத்தமில்லாத இடம். வாகனத்திலிருந்து இறங்கி அவளை நெருங்கி வந்த அந்த மூன்று நொடிகளுக்குள் மனைவியை தலை முதல் கால் வரை ஆராய்ந்துவிட்டான்.
கோவத்தில் புடவையை கூட நேர்த்தி இல்லாமல் கட்டியிருக்க, தரையை சுத்தம் செய்துகொண்டிருந்தது அவள் புடவை.
கையில் அவள் தினம் வீட்டிற்கு வந்து அணியும் வளையல் கூட இல்லை, அவசரத்தில் தாலியை எடுத்து போட்டு வந்தவள் நெற்றியில் குங்குமம் கூட வைக்கவில்லை.
கண்கள் சிவந்து, கன்னம், மூக்கெல்லாம் சிவப்பேறி வந்த வழி எங்கும் சுற்றம் மறந்து அழுதிருக்கிறாள் என்பதும் தெரிந்தது.
அந்த உணர்வே அவனது இதயத்திற்கு எதற்கு வேதனை கொடுக்கிறதென மருத்துவன் அறிந்துகொள்ள முற்படவில்லை. கொட்டிக்கிடக்கும் அன்பை தான் கண்களை மூடி குருடர்களாக மனிதர்கள் வாழ்கின்றனர்.
இவனும் விதிவிலக்கல்ல, வேண்டாம் வேண்டாம் என்பவன் எதற்காக இந்நேரம் அவளை தேடி ஓடி வந்துள்ளோம் என்பதையும் மறந்து போனான்.
“வா போகலாம்” என்றான் உடனே.
“இல்ல நீங்க போங்க, நான் எங்க வீட்டுக்கு போறேன்” அவனை பார்க்கவே இல்லை இலக்கியா.
“எப்படி போவ?”
“நடந்து தான்”
“ரொம்ப சமத்தான பதில் தான். உன் அப்பாவை பாத்துட்டு தான் வர்றேன்”
“நீங்க எதுக்கு இங்க வந்திங்க, போங்க. ஏதாவது உதவி செய்யணும்னு ஆசை இருந்தா உங்க போன் மட்டும் தாங்க, அப்பாக்கு பேசிக்கிறேன்” என்றாள் அவன் அருகே வந்து கையை நீட்டி.
“நான் வராம போயிருந்தா என்ன பண்ணிருப்ப விடிய விடிய இங்கையே இருந்திருப்பியா?” அவள் கேட்டதை கொடுக்காமல் இன்னும் கேள்விகளை வைத்தான்.
“ஏன் உலகத்துலயே நீங்க மட்டும் தான் இருக்கீங்களா? எனக்கு தெருஞ்ச ஒரு அண்ணா பத்து மணிக்கு இந்த பக்கம் வருவார், அவர் கூட வீட்டுக்கு போயிருப்பேன்”
“முட்டாள் முட்டாள். ஏண்டி உனக்கு அறிவே இல்லையா?”
“ஆமாங்க அறிவு இல்லாததால தான் நர்ஸா இருக்கேன்”
தன்னுடைய பேச்சே தன்னை சுற்றி சுற்றி வந்து அடித்தது, “இலக்கியா…” இயலாமையில் அர்ஜுன் இறங்கி வர,
“அப்பாக்கு கால் பண்ணி தரீங்களா இல்லையா?” இவள் முறுக்கிக்கொண்டு நின்றாள்.
“இப்பவும் என்ன விட சொல்ல மனசு வரல, எவனையோ நம்பி போவ. என்ன நம்பி வர மாட்ட?”
“எந்த உரிமைல சார் நான் கேக்க முடியும்?”
அவளை முறைத்தவன், “உரிமை இல்ல ம்ம்?” அவளை மேலும் கீழும் பார்த்தவன், “உரிமையில்லாதவளுக்கு என் போன் தர முடியாது போடி” என்றான்.
சரி போ என இவளும் மீண்டும் சென்று அமர்ந்துக்கொண்டாள் கைக்கடிகாரத்தை பார்த்து அந்த ‘அண்ணன்’ வருகைக்கு தான் காத்திருப்பதாக மறைமுகமாக கூறி.
குறுக்கும் நெடுக்கும் நடந்தவன் ஒரு முடிவோடு அவள் கையை பிடித்து இழுத்து வாகனத்தினுள் தள்ளினான்.
“என்ன பண்றீங்க நீங்க?”
“வீட்டுக்கு போறோம்” அவள் வீட்டிற்கு எதிர் திசையில் சென்றது அவன் வாகனம்.
“சார் தப்பான ரூட்ல போறீங்க” அவன் அவளை கண்டுகொள்ளவே இல்லை.
“இப்ப நிறுத்த போறிங்களா இல்லையா?” அவனோ நிறுத்தாமல் அவளுடைய கைபேசியை ஒப்படைத்தான்.
“இதை வச்சிட்டே தான் தராம ஸீன் போட்டீங்களா?” அவளோ கோவமாய் பொரிய.
“உன் அப்பாக்கு கால் பண்ணி வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம்னு சொல்லு”
“முடியாது. நிறுத்துங்க”
“எங்க நடு ரோட்டுலயா?”
“என்ன பெரிய வித்யாசம், உங்க வீட்டுல இருந்தாலும் அதே மாதிரி தான் பீல் ஆகுது” அவனிடம் போராடுவதை நிறுத்திவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.
புரியாத அவனின் புதிர் நடவடிக்கைகளுக்கு ஒப்பனை அவளது கண்ணீரானது.
error: Content is protected !!