Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 20.2

இரண்டையும் மாற்றி மாற்றி யோசித்து பார்த்து இறுதியில் இரண்டுக்கும் விடை கிடைக்காமல் சிகை கசங்கி தான் கீழே வந்தான்.

“என்னடா இது பாராட்ட மண்டை?”

அர்ஜுனுக்கு பிறகு வந்த வருண் சகோதரனிடம் கேலி பேச, உச் கொட்டியவன், “வந்து சீவி விடு வா”

“உன் பொண்டாட்டி இருக்குறப்போ நான் எதுக்குடா உன் பக்கத்துல வர போறேன்?”



Advertisement

“சரி தான், நீ எதுக்கு என் பக்கத்துல வர போற, உனக்கு தான் விடிய விடிய பேச ஆள் இருக்கே”

“டேய் அண்ணா”

வருண் வேகமாக வந்து சகோதரன் கையை பிடித்தான், “உனக்கு எப்படிடா தெரியும்?”

Advertisement

“தெரியும் அதெல்லாம். டெய்லி வீட்டுல இருக்க கேமரா பாத்துட்டு தான இருக்கேன்”

Advertisement

“தோட்டத்துலயும் செட் பண்ணிட்டியா?”

அர்ஜுன், “தோட்டத்துல போடுற வெங்காயம் மல்லி எல்லாம் வரவே மாட்டிக்கிது, ஏதோ நாய் வந்து மண்ணெல்லாம் தோண்டி போடுற மாதிரி இருக்குன்னு பாட்டி சொல்லிட்டு இருந்தாங்க. கேமரா வச்சதும் தானே தெரியிது அஞ்சு அறிவுள்ள நாய் இல்ல, ஆறறிவு உள்ள நாய்னு”

அலட்சியமாக முன்னே இருந்த ஒரு நாளிதழை எடுத்த அர்ஜுன் நாடியை பிடித்து வெடுக்கென திருப்பினான் வருண்.

Advertisement

“வீட்டுல சொல்லாதடா. நானே இப்ப தான் கொஞ்சம் கப்பல் ஓட்டிட்டு இருக்கேன்”

“முடியாது. சொல்ல போறேன்” என்றான் பெரியவன் வேண்டும் என்றே.

“நீ சொன்ன, அப்றம் அஞ்சுஸ்ரீய நீ கிஸ் பண்ண வீடியோவ நான் இலக்கியாகிட்ட காட்டிடுவேன்” இப்பொழுது அதிர்ச்சியாவது அர்ஜுன் முறையானது.

“என்னடா சொல்ற?”

“உன் நிச்சயம் அன்னைக்கு ஒரு ஸ்னாப் போடலாமேன்னு நானும் தர்ஷனும் சும்மா வீடியோ எடுத்துட்டு வந்து ரூம்ல பாத்தோமா, அப்போ தெரியாம ப்ரேம்ல நீ வந்துட்ட”

“சரி அதை எதுக்கு டெலீட் பண்ணாம வச்சிருக்கீங்க?”

வருண், “மறந்தே போச்சுடா. இப்போ தான் நியாபகம் வந்துச்சு. என் சீக்ரெட் உன்கிட்ட இருக்குறப்போ உன் சீக்ரெட் என்கிட்ட பத்தரமா தான் இருக்கட்டுமே”

வருண் குதூகலம் மாறாமல் சென்றுவிட, அர்ஜுனுக்கு தான் கடுப்பாக இருந்தது, “இன்னைக்கு உனக்கு நாளே சரியில்லடா அர்ஜுன்”

“என்ன புலம்பல்?” அர்ஜுனுக்காக தேநீர் எடுத்து வந்து கொடுத்த இலக்கியா அவனின் சூம்பிய முகத்தை பார்த்து கேட்க, “ஒன்னுமில்ல” என்றான்.

“ஏன் தலை எப்படி இருக்கு, சீவிருந்திங்க தானே” அவன் முன்னே ஒட்டி நின்றவள் கலைந்திருந்த அர்ஜுனின் கேசத்தை விரலாலே சரி செய்ய, மனைவியின் இடை வளைத்து அவள் வயிற்றில் தன் முகம் புதைக்க இலக்கியா அரண்டு போனாள்.

“என்னங்க” எவரேனும் வந்துவிட்டால் என்கிற பயத்தோடு அவனை பிரிக்க முடியல, முடியவில்லை.

ஆண் அவனின் பிடி அத்தனை ஸ்திரமாக இருந்தது, அதே சமயம் அவளுக்கு வலிக்காததாய்.

அவளின் நிலை புரிந்து முகத்தை சற்று பின் நகர்த்தி அவளின் புடவை தலைப்பை முகத்தால் ஒதுக்கி, புடவை மறைக்காத இடையில் அழுத்தமாய் ஒரு முத்தம் அவன் கொடுக்க துடித்தது பெண் உடல்.

கொடுத்த வேகத்தில் அவன் விலகிவிட, புடவையை ஒதுக்கும் சாக்கில் இடையில் மொத்தமாய் உலாவிய அவனின் நாசி நுனியும், உராய்ந்த அவனின் மீசை முடிகளும் தந்த சூட்டில் பெண்ணவள் ஆத்மா தான் ஒரு நொடி உடல் நீங்கி உயிர் சேர்ந்தது.

இலக்கியா தன்னுடைய நிலைக்கு மீண்டு வரும் பொழுது அர்ஜுன் அங்கு இல்லை. இருந்தால் விபரீதம் இருவருக்கும் ஆகுமே.

குட்டி தொப்பை, பளிங்கென மின்னும் அழகு தொப்பை, தொட்டாலே வழுக்கி செல்லும் அவளின் சருமத்தில் இதழ் வைத்த பிறகு ஒரு முத்தம் மோட்சத்தை கொடுத்திடுமா?

கொடுக்கவில்லை, மீண்டும் நாடி செல் என கட்டளையிட்ட மூளையை பிடித்து ஒதுங்கி வந்துவிட்டான் அர்ஜுன்.

*****

அன்று ராதா அனைவரையும் மதிய உணவிற்கு வீட்டிற்கு வர கூறிவிட்டார். காரணம் கூறவில்லை.

அதிகம் அவர்கள் வீட்டிற்கு வருவதில்லை. அனைவருக்கும் ராதா வீட்டின் பணியாளிடம் உணவை கொடுத்து அனுப்பி விடுவார். இன்று அவர் கேட்கவும் வேலை பொறுத்து நிச்சயம் வருவதாக கூறி சென்றனர்.

இலக்கியா கேட்டும் பதில் இல்லை. அவருக்கு எப்படி தெரியும், அவரை ஆட்டுவித்தது அவர் பேரன் ஆயிற்றே, அவருக்கே விடயம் இன்னதென தெரியாது.

கொடுத்த செய்தியை கிளி போல் ஒப்பித்துவிட்டார். வீட்டிற்கு அனைவரும் வருவதால் உணவு வகைகள் குழம்பு பொரியலில் ஒன்றி கூடியிருந்தது.

அனைத்தையும் தயாரித்து அமரும் பொழுது முதல் ஆளாய் அர்ஜுன் வந்திருந்தான்.

சிறு வாட்டத்தோடு வந்தவன் அருகே யாரும் இல்லாத பொழுது சென்று பார்க்கும் தைரியத்தை காலையிலே கணவன் பறித்திருந்தான்.

“என்னங்க…” சத்தம் வந்த திசை திரும்பி பார்த்தான். அவன் அமர்ந்திருந்த நீல்விருக்கையின் மற்றொரு முனையில் நின்று அழைத்திருந்தாள்.

இவன் பார்க்கவும், “என்னாச்சு” என கேட்க, “ப்ச் போடி” சலிப்பாக கண் மூடி தலை சாய்த்து படுத்துவிட்டான்.

“தலை வலிக்கிதா?” அக்கறையோடு இவள் கேட்க, இன்னும் தூரம் இருந்த குரலில் தலை திருப்பி பார்த்தவன், “பீவர் மாதிரி இருக்கு” மீண்டு சோர்வோடு அர்ஜுன் கண் மூட, வேகமாக அருகே வந்து அவன் நெற்றியை தொட்டு பார்த்தாள்.

“சூடு இல்…” உடல் சூடு இல்லை என்பதை அவள் கூறும் முன்பு காலையில் இருந்ததை விட இப்பொழுது அர்ஜுனின் நெருக்கம் அதிகமாக இருந்தது.

அர்ஜுனின் இதழ் சேட்டை இல்லை என்பது மட்டுமே ஒரு குறை. ஆம் இலக்கியாவுக்கு அது ஒரு குறையாக தான் இருந்தது.

“சாரிடி” என்றான் அவளுள் இன்னும் ஒன்றி.

கணவனின் வருத்தம் என்னவென புரியாமல், “என்னாச்சு உங்களுக்கு?” அணைப்பிலிருந்து விலகி தன் சிரம் தடவிய மனைவி கையை எடுத்து உள்ளங்கையில் கன்னம் உரச,

“பாட்டி பசிக்கிது” வாயிலில் இருந்து சத்தம் கொடுத்து வந்த வருணின் வருகையில் மனைவியை விட்டு விலகி அமர்ந்தான்.

“வாங்க சின்ன பேரனே எல்லாம் ரெடியா இருக்கு” இவர்கள் வரவும் தேவையான உணவை எடுத்து உணவு மேஜையில் அடுக்க துவங்கினார் ராதா.

“சாக்ஸ் ரிமூவ் பண்ணிட்டு வாங்க தம்பி” இலக்கியாவின் விழிப்பில் பாட்டி, பேரன் இருவரும் இவளை வியப்பாக பார்க்க அர்ஜுன் மெலிதாக புன்னகைத்துக்கொண்டான்.

“எனக்கு சரியா தான கேட்டுச்சு?” ராதாவிடம் கேட்க,

அவர் அதிர்விலிருந்து வெளி வந்து, “சரியா கேட்டுச்சு. வா வந்து ரெண்டு பாத்திரம் எடுத்து வை” பேரனுக்கும் கட்டளையிட்டார்.

“எப்படி எப்படி?” இலக்கியாவை ஆராய்ந்தவன் பாட்டியிடம் மீண்டும் கேள்வி கேட்டான்.

“நானும் தர்ஷனும் சார் சொல்றப்போ எல்லாம் திட்டுவோம் பாட்டி. அப்போல்லாம் கேக்காம இப்போ என்னாச்சு அண்ணியாருக்கு?”

“இத்தனை நாள் குடும்பத்தோட மனசு முழுசா ஒத்து போகல. இப்போ அப்டி இல்லையே”

“ராதா புரியாத மாதிரி பேச கூடாது”

“டேய் உனக்கு புரியாது வாடா” உணவு எடுத்து வைக்கும் பொழுதே மற்ற அனைவரும் வர ஜோராக தான் சென்றது உணவு நேரம்.

மீண்டும் மருத்துவமனை கிளம்ப நேரம் இருக்க, “உங்க எல்லார்கிட்டயும் நான் கொஞ்சம் பேசணும்”

மருத்துவமனை சார்ந்து பேசுவான் என நினைத்திருக்க, “எங்க கல்யாணம் பத்தின முழு காரணம் யாருக்கும் தெரியாதுல?”

“சார்…” வேகமாக தடுத்த மனைவியை திரும்பி பார்த்தவன் கண் அசைத்து அவளை அருகில் அமர்த்திக்கொண்டான்.

“இலக்கியா என்ன லவ் பண்ணதால தான் எங்க கல்யாணம் நடந்துச்சுனு அன்னைக்கு நாங்க சொன்னது பொய் தாத்தா” இலக்கியா அர்ஜுன் கையில் சுரண்டினாள் உண்மையை கூற வேண்டாம் என.

உண்மை தெரிந்து அர்ஜுனை யாரும் குறை சொல்லிவிடுவார்களோ என பயம். சாதாரண விஷயம் இல்லையே அது, பெரிதான அடியாக இருந்திருக்கும் இவர்கள் மேல் தவறே இல்லை என்றாலும்.

இலக்கியாவை திரும்பி அழுத்தமாக பார்த்தவன், “உன்ன யாரும் தப்பா நினைக்க இதுக்கு மேலயும் விட மாட்டேன்” என்றான்.

அவன் வந்ததிலிருந்து அவனது நடவடிக்கையே மருத்துவமனையில் ஏதோ நடந்துள்ளதென புரிந்தது மனைவிக்கு.

“ஸ்ரீ விஷயம் நான் ஒன்னும் கண்டு புடிக்கல. இலக்கியா தான் சொன்னது” நடந்தவற்றை விளக்கமாக கூறினான் வீட்டினரிடம். இலக்கியா அதை நிரூபிக்க சென்ற எல்லை கூட கூறிவிட்டான்.

ராமச்சந்திரன், “உன் மேல தப்பில்லன்னு உன் கோவமே சொல்லுச்சு அர்ஜுன். இலக்கியாவையும் எங்களால வெறுக்க முடியல. இருந்தாலும் இவ்ளோ பெரிய விஷயத்தை அந்த பொண்ணு சொல்றப்போ யோசிச்சிருக்க வேணாமா நீ?”

வரதராஜன், “நாம எவ்ளோ கேட்டோம் அன்னைக்கு ஒரு வார்த்தை சொன்னானா?”

“ஒரு போன் கால் வச்சு மொத்தமா சந்தேகப்பட முடியாதுனு தான் மாமா அவங்க சொல்லல” கணவனுக்காக பேசினாள் பெண்.

சுந்தர்ராஜன், “சின்ன ஹாஸ்பிடல் இல்லமா இது. ஒரு சாம்ராஜ்யம் மாதிரி. கடுகளவு சந்தேகம் இருந்தா கூட பெரியவங்கனு எங்ககிட்ட சொல்லிருக்கணும்ல.

உன்னால நிரூபிக்க முடியலைன்னா அந்த ஆள் இன்னும் நம்ம ஹாஸ்பிடல்ல ஒரு வேர்ஹவுஸ் மாதிரி யூஸ் பண்ணிருப்பான். அது எவ்ளோ பெரிய அசிங்கம்”

ஆதங்கமாக அவர் கேட்க பதில் இருவராலும் கொடுக்க முடியவில்லை. இருந்தும் அர்ஜுன் இப்படி பேச்சற்று குற்றவாளி போல் அமர்ந்திருப்பது அவளை அதிகம் வருத்தியது,

“வேணாமே பெரியப்பா. அவருக்கு அவங்க மேல நம்பிக்கை இருந்துச்சு. கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு மேல அவர் நம்பிக்கை வச்சது தப்பில்லையே. இப்போ தான் எல்லாம் சரியாகிடுச்சுல”

“அவனுக்கு நீ ரொம்ப சப்போர்ட் பண்ணாத ம்மா. இவனுக்கு திமிரு அதிகம். மனுசங்கனா ஒரு இளக்காரம்”

வரதராஜன் மகனை சாட, “மாமா…” கரகரத்த அவளது குரலில் பேச்சை நிறுத்திக்கொண்டார்.

வீட்டின் பெண்கள் எதுவும் பேசவில்லை. பானுவின் பார்வை மகனை குற்றம்சாட்டியது, அதுவே இலக்கியாவுக்கு வேதனை தான்.

அவள் அழுகையை அடக்கியத்தில் மெல்ல உடல் நடுங்க, “நீ எதுக்கு பீல் பண்ற? வெளிய விஷயம் தெரிஞ்சிருந்தா ஊரே எல்லாரையும் பேசிருக்கும். இங்க நான் ஒருத்தன் தான வாங்குறேன், அதுவும் என் குடும்பத்துக்கிட்ட. தப்பில்ல இலக்கியா” அவள் விரல்களில் அழுத்தம் கொடுத்து ஆறுதல் கூறினான்.

“விடு வரதா. இனி இதை பத்தி பேச வேணாம். அவனே புரிஞ்சிப்பான்” ராதா கூறவும் கலையவிருந்த கூட்டத்தை மீண்டும் அமர்த்தினான் அர்ஜுன்.

“இப்போ என்னடா வச்சிருக்க?” சற்று பீதியோடு தான் தர்ஷன் அர்ஜுனை பார்த்தான். அர்ஜுன் பதிலுக்கு கொடுத்த பார்வையில் கப்சிப் தான் தர்ஷன்.

“எனக்கும் இலக்கியாவுக்கும் ஒரு ரிஷப்ஷன் வைக்கணும். எங்க கல்யாண நாள் அடுத்த மாசம் வருதுல அப்போவே வச்சிடுங்க. ஹாஸ்பிடல்ல அதுக்கு முன்னாடி அடுத்த வாரம் ஒரு லஞ்ச் போட்றலாம்.

கொஞ்சம் பெருசா தான் செய்யணும் பிஸ்னஸ் சர்கில்ல, அப்றம் சொந்தத்துல. நியூஸ் பேப்பர்ல வர்ற ஏற்பாடும் பண்ணிட்டேன். தேதி மட்டும் நாம சொல்லணும்.

ஒரு போட்டோ ஷூட் பண்ண தேக்கடி கூட்டிட்டு போக போறேன் இலக்கியாவை. ஹாஸ்பிடல்ல அதுக்கு தகுந்த மாதிரி ஏற்பாடும் பண்ணிட்டேன்” இவன் வரிசையாக அடுத்திக்கொண்டே போக மொத்த குடும்பமும் ஒவ்வொரு அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

“டேய் இருடா. என்ன இது திடீர்னு?” என்றார் பானு மகனின் இந்த திடீர் பரிமாணத்தில். அடங்கி அமர்ந்து பேசுபவன் இல்லையே அர்ஜுன். அதோடு தான் செய்ய போவதையும் வீட்டினரிடம் தெரிவிக்கிறான்.

“இப்ப எடுத்த முடிவில்லா ம்மா இது. நம்ம ஹாஸ்பிடல்ல அப்பா சேர்மேன் பதவி ஏத்துக்கவும் எங்க கல்யாணத்தை அனவுன்ஸ் பண்றது தான் என்னோட பிளான். ஆனா சூழ்நிலை மாறிடுச்சு. இனியும் லேட் பண்ண வேணாம்னு தான் சொல்றேன்” என்றான்.

தர்ஷன், “டேய் அர்ஜுனு நீ வாழ்க்கைலயே ரெண்டே ரெண்டு விசியம் தான் உருப்படியா பண்ணிருக்க”

வருண், “முதல் விஷயம் உங்களோட ரிஷப்ஷன்”

தர்ஷன், “இன்னொன்னு அன்னைக்கு கோவத்துல இலக்கியா பக்கத்துல நெருங்கி நின்னது”

அர்ஜுன், “அடிங்க” இவர்களை அடிக்க அர்ஜுன் எழுந்து வர இருவரும் ஓட்டம் பிடித்தார்,

“வர வர நீங்க கல்லூரி படத்துல வர்ற ட்வின்ஸ் மாதிரி பேசுறீங்கடா. பல்ல உடைக்க போறேன் பாருங்க”

இந்த நொடிக்காகவே காத்திருந்த வீட்டினர் நாளையே வேலையை துவங்கிவிடலாம் என கூறிவிட்டனர்.

அர்ஜுன் மருத்துவமனையில் உணவுக்கு ஏற்பாடு செய்வதாக கூற அவன் பொறுப்பில் விட்டனர்.

“நாங்க வீட்டுக்கு கெளம்புறோம் தாத்தா” அர்ஜுன் எழுந்து நிற்க, “இன்னும் ரெண்டு நாள் இருக்கலாமே” கிளம்ப மனமே இல்லாமல் கணவனிடம் இலக்கியா.

“ஆறு மாசம் கழிச்சு இங்கையே தான இருக்க போறோம் இப்போ வா” என்றான் மீண்டும் குடும்பத்திற்கு அதிர்ச்சியூட்டும் தகவலாய்.

“அர்ஜுன், நிஜமா இங்க வர போறியா?” ராதா பேரனிடம் நம்பாமல் கேட்டார்.

“வா வா-னு சொல்லிட்டு இப்போ வர்றியானு கேக்குறீங்க”

“ஏலேய் என்னடா என் பொண்டாட்டிகிட்ட சண்டைக்கு போற? அவ பேரன் வர போற சந்தோஷத்துல கேக்குறா. கெளம்புடா, வேகமா மூட்டை முடிச்சை எடுத்துட்டு வந்து சேறு”

அவருக்கும் பேரன் வீட்டினரோடு வந்து சேர்ந்திடுவான் என்கிற நிம்மதி முகத்திலே தெரிந்தது. வீட்டினரிடம் விடைபெற்று தன்னுடைய அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்தான் மனைவியோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!