மழை 1
உ
அந்த மகளிர் விடுதியின் ஓர் மேல்தள அறையில் தனது உடைமைகளை எல்லாம் சேகரித்துக்கொண்டிருந்தாள் கௌசி.
கிட்டத்தட்ட அத்தனையும் எடுத்து வைத்துவிட்ட பிறகும் எதையோ விட்டு செல்வதை போன்றதொரு உணர்வு அவளுள். ஏனெனில், நான்கு வருட பொறியியல் படிப்பை அவள் முடிக்கும் வரை இதே விடுதி வாசம் தான். அவள் விருப்பு, வெறுப்பு, சோகம், ஏக்கம் அத்தனையும் அந்த நான்கு சுவர்களுக்குள்ளே முடிந்திருக்கும்.
Advertisement
இடையே விடுமுறை எனில் உள்ளூரில் இருக்கும் அவள் அத்தை வந்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவார். இப்போது இறுதிபரிட்சை முடித்துவிட்டு மொத்தமாய் அவ்விடம் விட்டு பெயர்ந்து நான்கு வருடங்களுக்கு பின்னே தன் சொந்த ஊருக்கு பிரயாணமாக இருக்கிறாள்.
ஆனால், அதற்கான மகிழ்வோ, உற்சாகமோ அவளிடம் இருப்பதற்கான அடையாளம் தான் இல்லை.
“மேடம், ஜாலியா ஊருக்கு கிளம்பிட்டீங்க போலருக்கே?” அறை வாசலில் வந்து நின்றாள் மீனா. இவள் ஓரளவு நெருங்கி பேசி சிரிக்கும் ஒரே ஜீவன்.
Advertisement
திரும்பி அவளை பார்த்த கௌசி எப்போதும் வீசும் மிதமான புன்னகையுடன், “நீ இன்னும் கிளம்பலையா?” என்றாள் அவளிடம்.
Advertisement
“கிளம்பிட்டேன்… அப்பா வெளில நிக்குறாரு! உன்கிட்ட சொல்லிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்!” என்றவள் அவளை நெருங்கி பின்னோடு ஆதரவாய் கட்டிக்கொள்ள, அந்த மெல்லிய அணைப்பு சொன்னது அவளின் பிரிதுயரை.
தன் வயிற்றின் மீது படிந்திருந்த அவள் கரத்தை அழுத்திப்பிடித்த கௌசி, “நேரமாச்சு பாரு! கிளம்பு” என்றாள்.
லேசான கடுப்பு எழ, தன் தலை கொண்டு அவள் முதுகில் இடித்த மீனா, “சரியான ஜடம்டி நீ! நாலு வருஷம் கூடவே இருந்தவளை பிரியுறோமேன்னு எதாவது வருத்தம் இருக்கா? போ, போ’ன்னு விரட்டுற?!” என சடைத்துக்கொண்டாள் உரிமையாய்.
Advertisement
அதற்கும் அதே மெல்லிய புன்னகையே!!!
இவள் இப்படிதான் என அறிந்தவள் தானே மீனா!
அதற்குமேல் அப்பேச்சை நீட்டிக்காது, “உன் அத்தை வந்தாச்சா? எத்தனை மணிக்கு ட்ரெயின்?” என்றாள்.
“ட்ரெயின் எட்டு மணிக்கு! ஆனா, அத்தை வரல! ஏதோ பெரிய காரியம்ன்னு போயிருக்காங்க!” தோள்ப்பையை எடுத்து மாட்டிக்கொண்டவள், ஒரு கையில் ட்ராலி பேகை தள்ளிக்கொண்டும் மறுகையில் மற்றொரு பையை எடுத்துக்கொண்டும் வெளியே வர,
“அப்போ நீ எப்டி போவ தனியா? லக்கேஜ் வேற இருக்கே?” என கேட்ட மீனா, கௌசி பதில் சொல்லும் முன்னே, “நீ என்னோடவே வா! உன்னை ரயில்வே ஸ்டேஷன்ல விட்டுட்டு நாங்க அப்புறம் கிளம்புறோம்!” என்றாள்.
“அதெல்லாம் வேண்டாம்! நீங்க நேரமே கிளம்புங்க! அப்போதான் இருட்டும் முன்ன வீட்டுக்கு போகலாம்!” என்ற கௌசி அறையை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு கீழ் தளம் நோக்கி செல்ல,
“ம்ச்… ஒழுங்கா வாடி என்னோட!” என்றபடி அவளிடம் இருந்த ஒரு பையை தன் கையில் வாங்கிக்கொண்டாள் மீனா.
“ட்ரெயினுக்கு இன்னும் ரொம்ப நேரம் இருக்கு மீனா! நான் ஆட்டோ’ல போனா சரியா இருக்கும்! சொன்னா கேளு” கௌசி பேசிக்கொண்டே கீழே வந்திருக்க, எதிர்ப்பட்ட வார்டன்,
“கௌசி பொண்ணே! ஊருக்கு கிளம்பிட்டியா?” என கேட்டபடி அவள் நீட்டிய சாவியை பெற்றுக்கொண்டார்.
கௌசியிடமிருந்து அவருக்கும் அதே மிதமான புன்னகையே பதிலாய்!!!
ப்ரோசீஜர் எல்லாம் முடித்து அவளிடம் கையெழுத்து வாங்கியவர், “விஷ் யூ ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் ஃப்யூசர் கௌசல்யா! அலுமினி மீட்டிங் வைக்கும்போது கண்டிப்பா நீங்க வரணும்!” என்றார் மீனாவையும் சேர்த்து.
இருவரும் விடைபெற்று வெளியே வருகையில் மீனாவின் தந்தை நின்றுக்கொண்டிருந்தார்.
புன்னகையுடன் அவரை நோக்கி சென்ற கௌசி, “நல்லா இருக்கீங்களா அங்கிள்?” என பேச, சில பல பேச்சுகளுக்கு பின்னே, கௌசி தனியே செல்லப்போவதை பற்றி தந்தையிடம் சொன்னாள் மீனா.
“எங்களோட வாயேன்ம்மா! ஏன் தனியா போகணும்?” என்றார் அவரும்.
மீனாவிடம் சொன்ன அதே காரணத்தை சொல்லி அவரிடமும் தன்மையாய் மறுத்த கௌசி, “நீங்க கிளம்புங்க! நான் போய்க்குவேன்” என்றுவிட்டாள்.
வேறு வழியின்றி காரில் கிளம்பிய மீனா, “பிடிவாதக்காரி!” என வார்த்தையை கடித்துத்துப்ப, இப்போது கௌசியின் முகத்தில் மென்னகை நீண்டு குறுநகையானது.
கார் கிளம்பியப்பின்னும் ஜன்னல் வழியே தலையை நீட்டி, “ஊருக்கு போனதும் என்னை மறந்துடாதடி! அப்ப அப்ப போன் பண்ணு! கீப் இன் டச்!” மீனா கண்ணைவிட்டு மறையும் வரை கத்திக்கொண்டே போக, அதைப்பார்த்த கௌசிக்கு சிரிப்பு தான் வந்தது.
கௌசி கல்லூரியில் சேர்ந்த புதிதில் யாரிடமும் பேசாமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தபோது, தானாய் வந்து பேசி, சிரித்து, முறைத்து நட்பாகி அவளுக்கு உறுதுணையாய் நின்றவள் தான் மீனா.
நிறைய பேர் கௌசியின் தோற்ற பொலிவில் மயங்கியும், அவள் வாங்கும் மதிப்பெண்களை கண்டு வியந்தும் நட்புப்பாராட்ட வந்து, இறுதியில் ‘ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்’ என விலகி சென்றிருக்கின்றனர்.
ஆனால், இவள் ஒருத்தி தான்… நீ பேசாவிட்டால் என்ன? நான் பேசுகிறேன் நீ கேள்! என வம்படியாய் வந்து நின்றது.
ஏனோ அவளுக்கு கௌசியை பிடித்துப்போனது.
அவள் மட்டும் இல்லை என்றால், இந்த நான்கு வருடம்?
கௌசிக்கு நினைத்துப்பார்க்கவே மலைப்பாய் இருந்தது.
மீனாவை அனுப்பிவைத்ததற்காக கடவுளிடம் மானசீகமாய் நன்றி கூட சொல்லிக்கொண்டாள்.
எதிர்ப்பட்ட ஆட்டோவை கை காட்டி நிறுத்தி ஏறினாள்.
இருபது நிமிட பயணம்…
மனம் மீண்டும் மீனாவிடம் வந்தது.
எப்போதும் துருதுருவென இறக்கை இல்லாத பட்டாம்பூச்சி போல துள்ளித்திரியும் குணம் மீனாவுக்கு. வாய்மூடாமல் பேசிக்கொண்டே இருக்கும் இயல்பு. பல் வரிசை தெரிய எந்த விகல்ப்பமும் அன்றி அவள் வெள்ளையாய் சிரிக்கும்போது எதிரே இருப்பவர் தன்னியல்பாய் புன்னகித்து விடுவர்.
யாரிடமும் பேசபிடிக்காமல் ஒதுங்கி இருந்தபோது, இவளிடம் மட்டும் தன்னை பேசத்தூண்டியது கூட அவளது அந்த துருதுரு குணம் தானோ?!
எண்ணிக்கொண்டாள்…
ஒருவேளை நான்கு வருடம் முன்பு வரை தானும் இப்படி இருந்ததால், தன்னைப்போல் ஒரு ஜீவனை கண்டதும் தன் மனம் ஒன்றி விட்டதோ?!
இருக்கும்!!!!
இதழ்கள் கசப்பாய் சுழிந்தன.
மனம் விட்டு சிரித்து தான் எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது!?
நினைத்தவளுக்கு தன்னைப்போல பெருமூச்சு வந்தது.
ஆட்டோ சடாரென பிரேக்’கடித்து நிற்க, “என்னாச்சு?” என்றாள்.
“கரண்ட்டு கம்பி அறுந்து கடக்கு பாப்பா! வெளில மழை வேற கொட்டுது! எதுக்கு வம்பு? அதான் சுத்தி போலாம்ன்னு வண்டியை திருப்புறேன்!”
அவர் சொன்ன பிறகு தான் வெளியே பார்த்தாள்.
மழை பெய்துக்கொண்டிருந்தது.
மழை!!!
மழையை கண்டதும் அவள் மனதின் ஆழத்தில் ஆணியென பதிந்து போயிந்தவை எல்லாம் நீரிலிட்ட பந்து போல நொடிக்குள் மேலெழும்பி வந்து நிற்க, மனம் கணமாகிப்போனது நொடிக்குள்.
இந்த மழை… மழை நாட்கள்…. அவள் வாழ்வில் எத்தனை காயங்களை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறது.
மீண்டும் ஆட்டோ நின்றது.
நிமிர்ந்துப்பார்த்தாள்…
ரயில்நிலையம் வந்துவிட்டிருந்தது.
பணத்தை கொடுத்துவிட்டு, தனது உடைமைகளுடன் குறித்த பிளாட்பார்முக்கு வந்து நின்றாள்.
எத்தனை பதுங்கி வந்தும் மழை அவளை பாதிக்கு மேல் நனைத்துவிட்டிருந்தது.
ரயில் வர இன்னும் நேரம் இருக்க, ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தவள், நனைந்த சுடிதாரின் முன்பக்கத்தை முறுக்கிப்பிழிந்தாள்.
கைக்குட்டைக்கொண்டு முகத்தை அழுந்த துடைத்தவள், திரும்பியபோது சற்று தள்ளி ஒரு இளைஞன் இவளையே பார்ப்பதை போன்று தோன்றியது.
அது வக்கிரமான பார்வையோ, துகிலுரிக்கும் பார்வையோ அல்ல.
ஒரு அழகான பெண்ணை கண்டால் ஆர்வத்தில் தன்னை மீறி அவளை ரசிக்கும் சில யோக்கியமான ஆண்களின் இயல்பான பார்வை.
இருபத்தி இரண்டு வயதில் ஒரு ஆண் தன்னை ஆர்வமாய் பார்ப்பதை கண்டதும், லேசான படபடப்போ, அல்லது கர்வமோ தோன்றுவதற்கு பதில், கௌசிக்கு திடுமென கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்து இருந்தது.
கொட்டும் மழையின் குளிரிலும் அவளுக்கு வியர்த்துக்கொட்ட, சொல்லொண்ணா பயம் வந்து நெஞ்சை அடைக்க மூச்சுவிட கூட சிரமம் என்பது போல ஆனது அவளுக்கு.
இது இப்போது என்று இல்லை… இந்த நான்கு வருடமாகவே இப்படிதான்! எந்த ஆணின் பார்வை அவள் மீது விழுந்தாலும் அடிவயிற்றில் பயபந்து உருள ஆரம்பித்து விடுகிறது.
அங்கிருந்து எழுந்து சென்றுவிடலாம் என ஆயத்தமானபோது அவளுக்கான தொடர்வண்டி ஆடி அசைந்து வந்து நின்றது.
பாதுகாப்பு வளையத்தை கண்டுவிட்டவள் போல வேகவேகமாய் சென்று அவளுக்கான பெட்டியை தேடி அவள் சீட்டில் சென்று அமர்ந்துக்கொண்டாள்.
வெளியே எட்டிப்பார்க்க அவளை பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காண கிடைக்கவில்லை.
இழுத்து பிடித்த மூச்சு அக்கணம்தான் சீராக வெளிவந்தது.
நிம்மதியாய் சாய்ந்து அமர்ந்தவள் அப்போது தான் அருகே இருந்தவர்களை பார்வையிட்டாள்.
அவளுடன் சேர்த்து அறுவருமே பெண்கள்…!
வெகு நிம்மதியாய் மூச்சு விட்டாள்.
லேசான குலுங்கலுடன் ரயில் தண்டவாளத்தில் நகர ஆரம்பித்தது.
மழை சாரல் ஜன்னலோரம் இருந்த அவள் முகத்தில் பட்டு தெறிக்க, அந்த குளுமையில் மனம் இதமாக, கண் மூடி அமர்ந்திருந்ததாள்.
சில நிமிடங்களில் அவள் அலைபேசி சிணுங்கியது. அவள் அன்னை தான் அழைத்திருந்தார்.
“சொல்லுங்கம்மா!” என்றாள்.
மறுமுனையில், புவனேஸ்வரி, “ரயில் கிளம்பிடுச்சா?” என்றார்.
“ம்ம்ம்”
“உன் அத்தை கடைசி நேரத்துல சொந்தத்துல எழவு… போயே ஆகணும்ன்னு சொன்னதால தான் உன்னை தனியா வர வச்சுருக்கோம்! ராத்திரி நேரம்… பாத்து பத்திரமா இருந்துக்கோ! புரிஞ்சுதா?”
பாசமா? கடமையா? கடுப்பா?
எல்லாம் கலந்து ஒலித்தது அவர் குரல்.
“சரிம்மா!” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
“ட்ரெயினு விட்டு இறங்குனதும் எங்கயும் அலையாத! மனோகர் வந்து கூட்டிகிட்டு போவான்! என்ன?”
அன்னை சொல்ல… அந்த பெயரை கேட்டதுமே வார்த்தைகள் தொண்டைகுழியில் சிக்கி நின்றுவிட்டது அவளுக்கு.
“என்னடி காதுல விழுகுதா?” அன்னையின் குரல் மிரட்டலாய் மாற, அவசரமாய், “சரி!” என்று அழைப்பை துண்டித்தாள் கௌசல்யா.
அவன் பெயரை கேட்ட பிறகு அவனே அருகே வந்து நிற்ப்பதை போல தோன்றியது அவளுக்கு.
பார்த்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.
என்னிடம் பேச வேண்டும் என்றுக்கூட தோன்றவில்லையா? எப்போதும் அவளுக்குள் எழும் விடைதெரியா கேள்வி இது!
இந்த நான்கு வருடத்தில் அவளுக்கு தேவைப்பட்டதெல்லாம் அவன் மூலமாக தான் அவளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால், ஒருமுறை கூட நேர்க்கொண்டு அவனை பார்க்க முடிந்ததில்லை.
வேண்டுமென்றே தவிர்க்கிறாரோ?
அப்படியாகத்தான் இருக்கும்!
பின்னே, இப்படி ஒருத்தியை யாருக்கு தான் பிடிக்கும்!? அவளே நினைத்துக்கொண்டாள்.
வேகமாய் அடித்த சாரல் மழை சலேரென அவள் முகத்தில் அடிக்க சிலிர்த்தது அவளுக்கு.
இதே போன்றதொரு மழை நாளில் தானே அவரை முதன்முதலில் பார்த்தேன்!!!
மனம் பின்னோக்கி ஓடியது.
கௌசல்யாவின் வீட்டு வாசலில் கொட்டும் மழையில் நனைந்தபடி கட்டிய கைகளுடன் நின்றிருந்தான் பதினாறு வயது மனோகர்.
