Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மழை 2

புதுக்கோட்டை ரயில் நிலையம்…

அதிகாலை நான்கு மணி…

தடக்…தடக்…என்று தன் வேகத்தை குறைத்துக்கொண்டு மெதுவாய் தண்டவாளத்தில் இளைப்பாற நின்றது ரயில்.

தன் உடைமைகளுடன் ரயிலை விட்டு இறங்கியவள் சுற்றும் முற்றும் பார்க்க இவளை போல ஆங்காங்கே ஓரிரண்டு பேர் இருந்தனர்.



Advertisement

‘அவர் வந்துருப்பாரா?’

கண்கள் அவனைத்தான் தேடியது.

‘இப்போ எப்படி இருப்பாரு? அதே மாதிரி நெடுநெடுன்னு உயரமா, குட்டி மீசையோட, தொளதொள பேன்ட்’ல! கொஞ்சமாவது சதை போட்டுருப்பாரா?’

Advertisement

நான்கு வருடங்களுக்கு பின்னே தன் சொந்த ஊரில் காலெடுத்து வைத்தவளுக்கு, ஊரை பற்றியோ, நண்பர்களை பற்றியோ, இத்தனைக்கும் ஏன்… தன் அன்னை தந்தை சகோ’க்களை பற்றி கூட எண்ணம் எழவில்லை.

Advertisement

மாறாக நினைவு முழுக்க ‘அவன்’ மட்டுமே ஆக்கிரமித்திருந்தான்.

இது தவறு! என ஒருபக்கம் மனம் சொல்ல, ‘இருந்தால் தான் என்ன?’ என்று மறுமனம் சமாதானம் சொன்னது.

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தாள். ஆள் நடமாட்டம் இருப்பது போல தெரியவில்லை.

Advertisement

லேசான திகில் மனதை கவ்வ துவங்க, விரல்களை அழுந்த மூடி அவள் நின்றிருந்த நேரம், அவள் கரத்தில் இருந்த பை இழுக்கப்ட்டது.

சட்டென துள்ளி விலகி அவள் பையை பிடுங்க முற்ப்பட, “நான்தான்!!!” என்றான் அவன்.

‘நான்தானா?’

அந்த குரலில் அவள் பிடி தன்னால் இளகியது.

கட்டுமஸ்த்தான உடல்… முகம் முழுக்க ரோமங்கள்… வெளீர் என்ற நிறத்தில் வேட்டி சட்டை… கழுத்தில் ருத்திராட்சம்… கையில் பட்டையாய் சுற்றப்பட்ட கயிறு…

மொத்தத்தில் கரடுமுரடான வெளித்தோற்றம்…

ஆனால், குரல்!!! அது அவரது ஆயிற்றே!!!

ரோமங்களுக்கு நடுவே முகம் கிடைக்கிறதா என தேடிப்பார்த்தாள்.

அந்த கண்கள்…

அது மட்டுமே அவளுக்கு பரிட்சயமாய்…!!!

இது அவன் தானா?

அப்படியே நின்றிருந்தாள்.

அவள் கரத்தில் இருந்த இரு பைகளும் அவன் கரத்திற்கு மாறியிருந்தது.

‘வா’ என்பதை போன்ற தலையசைப்புடன் விடுவிடுவென முன்னே நடந்தான்.

இவள் பின்னோடு ஓட வேண்டிய நிலை.

காரின் பின்பக்க கதவை திறந்துவிட்டவன் முன்பக்கம் சென்று ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டான்.

இவள் மௌனமாய் அமர்ந்துவிட்டதும் கார் அந்த சாலையில் மிதமான வேகத்தில் பயணிக்க ஆரம்பித்தது.

கண்ணாடி வழியே வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள் கௌசி.

‘என்ன இப்படி மாறிப்போய்ட்டாரு?’ அவன் தோற்ற மாற்றத்தை வியப்பாய் எண்ணிக்கொண்டிருந்தாள் அவள்.

‘ஆள் வெளில தான் மாறியிருக்காரு! ஆனா குணம் அப்படியே தான் இருக்கு!’ என நினைத்தவளுக்கு மனம் சுண்டி போனது.

‘இத்தனை வருஷத்துக்கு பிறகு பார்க்குறாரு! நல்லா இருக்கியான்னு ஒரு வார்த்தை கேட்டா என்ன?’

அவன் அப்படி தான் என தெரிந்தும் மனதில் எழும் ஏக்கத்தை அடக்க முடியவில்லை அவளால்.

அமைதியாய் சென்றுக்கொண்டிருந்த வண்டி திடுமென ஓரிடத்தில் நிற்க, அவள் கேள்வியாய் பார்க்கவும், “டீ” என்ற ஒரு வார்த்தையோடு வண்டியை விட்டு இறங்கி சென்றான்.

இரு கோப்பையை வாங்கிக்கொண்டு அவள் ஜன்னல் அருகே வந்து ஒன்றை அவள்புறம் நீட்டினான்.

மறுப்பாய் அவள் தலையசைக்க, “இன்னைக்கு வியாழக்கிழமை விரதம்! வீட்டுல மதியம் தான் சாப்பாடு கிடைக்கும்!” என்றவன், மீண்டும் அந்த கடைக்கு சென்று எதையோ வாங்கி ஒரு துண்டு காகிதத்தில் கொண்டு வந்தான்.

“இதையும் சாப்பிடு!” என அவன் நீட்ட, அதில் இருந்த வெண்ணை ரொட்டிகளை பார்த்துக்கொண்டே இருந்தாள் கௌசி.

வாங்கிக்கொள்ள ஏனோ மனம் வரவில்லை.

“எடுத்துக்கோ”

“வேண்டாம்!”

“ஏன்?”

“பசிக்கல”

“இப்போ பசிக்காது! வீட்டுக்கு போனதும் பசிக்கும்! சாப்பிடு”

அவன் இத்தனை பேசியதே பெரிது என அவள் மனம் சொல்ல, உடனே எடுத்துக்கொண்டாள்.

அடுத்த பத்து நிமிடங்கள் அங்கே கழிய, மீண்டும் அமைதியான கார் பயணம்.

கௌசிக்கு வாய் வரை வார்த்தை துடித்தது.

‘என்ன எப்படி இருக்கன்னு கூட கேட்க கூடாதா?’ என்று.

‘என்னிடம் பேசக்கூட ஒன்றும் இல்லைபோல!!!’

‘என்னை மறந்தே போயிட்டீங்களா?’

‘கேட்டுவிடலாமா?’

‘கேட்டா என்ன பதில் சொல்வாரு?’

‘அவர் என்னை கேவலமா நினைச்சுட்டா?’

‘அப்படியெல்லாம் நினைக்கவே மாட்டாரு!!!’

‘சரி நம்மளே பேசுவோம்!’

அப்படி முடிவெடுத்த பின்னும் எந்த உரிமையில் கேட்பது என்று வேறு மனம் குடைய, எச்சில் கூட்டி விழுங்கியவள்,

“எ…எ…எப்படி இருக்கீங்க?” என்றாள் சன்னமாய்.

அவள் அப்படி கேட்கவும் வண்டி அவர்கள் வீட்டு வாசலில் நிற்கவும் சரியாய் இருந்தது.

“எதாவது சொன்னியா?” என்றான்.

அவள் அனுமதி இன்றி அவள் சிரம், ‘இல்லை’ என்பதை போல அசைந்துவிட்டது.

‘ஹாரன்’ அடிக்காமல் அவனே இறங்கி சென்று கதவை திறந்துவிட்டு வந்தான்.

அந்த பெரிய கேட்டை தாண்டி கார் உள்ளே நுழைந்தது.

நெடிய தோட்டத்தை கடந்து கொஞ்சமாய் வளைந்து வீட்டின் முன்னே இருக்கும் செயற்கை நீரூற்றின் அருகே வண்டியை நிறுத்தினான் மனோகர்.

பக்கவாட்டில் தலை திருப்பி அவள் இருந்த திக்கில் ஒரு பார்வை வைக்க, ‘இப்படி பார்த்தா நான் இறங்கிக்கனும்ன்னு அர்த்தமா?’ என நினைத்துக்கொண்டாள் கௌசி. ஆனாலும் நகரவில்லை.

அவள் அப்படியே இருக்க, “வீடு வந்தாச்சு” என்றான்.

‘என் முகத்தை பார்த்துக்கூட பேச முடியல அவருக்கு!’

“அப்பா கூடத்துல தான் இருப்பாரு! நீ வந்ததும் உன்னை பார்க்க!” என்றான்.

‘அப்பா!’

அப்பா’வை நியாபகப்படுத்தியதுமே வயிற்றுக்குள் ஏதோ உருள ஆரம்பித்தது.

“இறங்கு” என அவன் சொல்லிவிட, அவள் இறங்கிகொண்டதும், வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் ஷெட்டுக்குள் காரை நிறுத்த சென்றுவிட்டான் மனோ.

வீட்டு வாசலில் தனித்து நின்றிருந்தாள். அதிகாலை வேளையில் பெரிதாய் ஆட்கள் நடமாட்டம் இல்லை.

வேலையாட்கள் எல்லாம் வந்து சேர ஆறு மணி ஆகிவிடும்.

தனபாக்கியம் இருந்தவரை புவனேஸ்வரி ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துக்கொண்டிருந்தார். நான்கு வருடங்களுக்கு முன் அவர் தவறிவிட, அதன்பின்னே அவரை அங்கு முறைத்துப்பார்க்கக்கூட ஆள் இல்லாமல் போக, ஏழு மணிக்கு குறையாது படுக்கையை விட்டு எழுவதில்லை அவர்.

அவள் அண்ணன் மதன் இங்கு இருக்கிறானா இல்லை வெளியூரியில் சுற்றிக்கொண்டிருக்கிறானா என்று தெரியவில்லை. தூரத்தில் இருப்பது அவனுடைய ‘புல்லட் வண்டி’ போல அவள் கண்ணுக்கு தெரிய, வீட்டுல தான் இருக்கான் போல! என்று எண்ணினாள். அப்படியே அவன் இருந்தாலும் அவனது அதிகாலை பத்து மணியாக தான் இருக்கும்.

கடைக்குட்டி ஆர்த்தி மற்றவர் அளவுக்கு மோசம் இல்லை. எட்டு மணிக்கு கல்லூரி பேருந்து வந்துவிடும் என்பதால் ஆறு முப்பதுக்கெல்லாம் எழுந்து வந்துவிடுவாள்.

ஆக இந்நேரம் அவளை வரவேற்க அவள் தந்தை மட்டுமே தனியாளாய் காத்திருக்கிறார்.

ஆனால், வரவேற்கவா? அல்லது வறுத்தெடுக்கவா? என்பது தான் தெரியாது.

அவள் மனம் அடித்து சொன்னது கண்டிப்பாக வறுத்தெடுக்கத்தான் போகிறார் என்று!!!

அவள் நினைப்பை பொய்யாக்காமல், “கார் வந்து இவ்ளோ நேரம் ஆச்சு! யாராது ஆரத்தி எடுத்து அழைப்பாங்கன்னு வாசல்லையே நிக்குறியா?” என்று அமைதியை கிழித்துக்கொண்டு கர்ஜனையாய் ஒலித்தது அன்பழகனின் குரல்.

அவர் குரலில் உடல் தூக்கிவாரிப்போட, அடுத்த நொடி வீட்டிற்குள் பிரவேசமானாள்.

ஒரு திருமணமே நடத்தும் அளவு முற்றத்துடன் கூடிய பெரிய கூடம். ஓராள் அகல தூண்கள் பளபளவென கண்ணை பறித்தது. அவள் இருந்தபோது இருந்த வீட்டின் நிறம் அப்படியே மாறி வேறு நிறத்தை உடுத்தி இருக்க, தரை கூட சிமெண்டில் இருந்து டைல்ஸ் கல்லுக்கு மாறியிருந்தது.

அந்த விசாலமான வீட்டில் அவள் கண்ணில் பட்டதெல்லாம் கருத்தில் ஏறவில்லை. தந்தை எங்கிருக்கிறார் என அலசிக்கொண்டே அவள் உள்ளே போக, பூஜையறையின் முன்னே ஈரமான உடலில் விபூதி பட்டை அடித்து ஒற்றை வேட்டியுடன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார் அன்பழகன்.

இவள் வந்து நின்றதும், எழுந்து கடவுளை பார்த்து பெரிய கும்பிடு போட்டவர், ஆராதனை தட்டில் இருந்த விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டு திரும்பினார்.

பார்த்தவரின் விழிகள் மகளது முகத்தில் சில வினாடிகள் நிலைகுத்தின. பின், விரலில் இருந்த விபூதியை அவளது சின்ன நெற்றியில் கீற்றாய் இழுத்துவிட்டார்.

கனமான மௌனம் அங்கே…

குரலை செருமி, “படிப்பு முடிஞ்சுதா?” என்றார் அன்பழகன்.

“ம்ம்ம்”

அடுத்து என்ன கேட்பது என தெரியாத மௌனம்…

“உன் அண்ணனுக்கு இந்த வாரத்துல நிச்சயம்! நம்ம வீட்டோட தான் நடக்குது! பொண்ணு வீட்டுல உங்க மூத்த பொண்ணை எப்போ கண்ணுல காட்டுவீங்கன்னு கேட்டுட்டே இருந்தாங்க! அதான் உன்னை படிப்பை முடிஞ்சதும் கிளம்பி வர சொன்னேன்” என்றார்.

‘ஓ!’ என்றாள் உதட்டசைவில்.

ஏதோ மூன்றாம் மனிதருக்கு சொல்வதை போல சொந்த அண்ணனின் திருமண சேதி தெரிய வருகிறது.

‘பெண் வீட்டில் கேட்டதால் மட்டும் தான் தன்னை உடனே வர சொன்னதா?’

அவள் அப்படியே இருக்க, “போய் கொஞ்ச நேரம் உன் ரூம்ல ரெஸ்ட் எடு! போ” என்றார்.

சரியென திரும்பி மாடியறைக்கு செல்லும் படிக்கட்டருகே செல்ல, “போன மாறியே தானே திரும்பி வந்திருக்க?” என்ற அன்பழகனின் சந்தேக தொனியில் ஒலித்த சொற்கள் அவள் உடல் முழுக்க அமிலத்தை கொட்ட, கண்கள் முணுக்கென்று கண்ணீரை சுரந்தது.

தான் கேட்டது தன்னையே சுட்டதோ? என்னவோ? அவள் பதிலை எதிர்ப்பார்க்காமல் சென்றுவிட்டார் அங்கிருந்து.

கண்களில் இருந்து கொட்டும் கண்ணீரை துடைக்க கூட மனமில்லாது தன் அறையின் கட்டிலில் சென்று விழுந்தாள்.

தன் கண்ணீர் சுரப்பியே வற்றிவிட்டது என கொஞ்ச காலமாய் எண்ணியிருந்தவளுக்கு, ‘அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை’ என அவள் கண்கள் உண்மை கூறின.

முதுகு குலுங்க அவள் சத்தமின்றி அழுகையில் கரைய, வாசல் கதவு தட்டப்பட்டது.

திறந்திருந்த கதவை தட்டுவது அவனை தவிர யாராக இருக்க முடியும்?

படுத்த வாக்கில் முடிந்தமட்டும் முகத்தை அழுந்த துடைத்தாள்.

பின் எழுந்து வாசல் பக்கம் போக, அவள் உடைமைகளை கையில் ஏந்திக்கொண்டு நின்றிருந்தான் மனோகர்.

அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட முடியவில்லை அவளால்.

நிலைப்படி தாண்டி பைகளை வைத்தவன், “குளிச்சுட்டு கொஞ்சம் தூங்கு… எல்லாம் சரி ஆகிடும்” என்றுவிட்டு நிற்காமல் சென்றுவிட்டான்.

அவன் போன திக்கையே வெறுமையாய் பார்த்துக்கொண்டிருந்தாள் கௌசி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!