Skip to content
Post Views: 5,231
அவன் சொன்னது போல குளித்துவிட்டு, சிரமப்பட்டு தூங்க முயன்றவள் அதில் சிறு வெற்றியும் கண்டாள்.
மீண்டும் அவள் கண் விழிக்கையில் மணி எட்டு முப்பது ஆகியிருந்தது. பசி வயிற்றை கிள்ள ஆரம்பிக்க,
முகத்தை கழுவி சீர்செய்துக்கொண்டு வீட்டின் மற்ற உருப்படிகளை சந்திக்க மனதை திடப்படுத்திக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள் கௌசி.
மாடியிறங்குகையிலேயே வீட்டில் ஆட்கள் நடமாட்டம் புலப்பட, ‘வேலையாள் எல்லாம் வந்தாச்சு போல’ என்று எண்ணிக்கொண்டாள்.
Advertisement
வழக்கத்தை விட வீடு சுறுசுறுப்பாய் இருப்பதை போல தோன்றியது அவளுக்கு.
யார் கருத்தையும் கவராமல் அடுப்படி பக்கம் நடையை போட்டவளை, “ஏய் எப்போ வந்த?” என்ற சிறு ஆச்சர்யம் கலந்த தங்கையின் குரல் நிறுத்தியது.
ஆர்த்தியை கண்டு லேசாக புன்னகைத்தாள் கௌசி. அவளை கடைசியாய் இரட்டை ஜடையில் அவளது ஒன்பதாம் வகுப்பு விடுமுறையின் போது பார்த்தது. இப்போது மொத்தமாய் மாறியிருந்தாள். பார்க்க பெரிய பெண் போல தெரிய, தங்கையின் வளர்ச்சியை கண்டு பிரகாசித்தது அவள் முகம்.
Advertisement
அவள் ஆராயும்வரைக்கூட பொறுமையற்றவளாய், “நீ என்ன வெயிட் லாஸ் எல்லாம் செஞ்சு சிக்குன்னு இருக்க? முன்ன விட கலரா கூட ஆகிட்ட போலயே?” என்றாள் ஆர்த்தி.
Advertisement
பள்ளிமாணவியாய் தான் பார்த்திருந்த அக்காவின் தோற்றம் கலைந்து மெருகேறி இருப்பது லேசாக வயிற்றில் காந்தல் உண்டாக்கியதோ!? என்னவோ!
கௌசி இயல்பிலேயே சிவந்த நிறம் தான்! இப்போது முழுக்க முழுக்க ஹாஸ்டலில் இருந்து வெயிலின் வாட்டம் படியாமல், பளிச்சென்று இருந்தாள்.
அவள் ‘வெயிட் லாஸ்’ என்றதும் ‘நானா?’ என்பதை போல தன்னைத்தானே பார்த்துக்கொண்டாள். இத்தனைக்கும் கௌசி முன்பு குண்டு என சொல்லும்படி கூட இருக்க மாட்டாள். சற்று பூசினார் போன்ற தேகம் அவ்வளவே! இப்போது சரியாய் உண்ணாமல் உறங்காமல் உடல் மெலிந்து நிற்க, ஏதோ வேண்டுமென்றே இவள் எடை குறைத்ததை போல கேட்கிறாள் அவள்.
Advertisement
ஆர்த்தியிடம் என்ன பதில் சொல்வது என புரியாது அவள் நிற்க, “எவனிங் ரொம்ப அலட்டலா மேக் அப் எல்லாம் பண்ணிக்காத! அதெல்லாம் உனக்கு சரி வராது… சரியா? சிம்பிளா எதாவது போடு போதும்!” என்று வேறு அவள் சொல்ல,
‘எவனிங் என்ன நடக்கப்போது? எதுக்கு நான் மேக்கப் பண்ணிக்கப்போறேன்?’ என குழம்பி நின்றிருந்தாள் கௌசி.
ஆர்த்தி தெளியாத முகத்துடன், “ம்மா… நான் ஸ்கூட்டில பார்லர் போயிட்டு வந்துடுறேன்” என்று உரக்க சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
நான்கு வருடம் சென்று பார்க்கும் தன் அக்காளிடம் பேச இது மட்டும் தான் இருந்தது போலும்!
வேலையாட்கள் ஓரிரண்டு பேர் இவளைக்கண்டு அறிமுக புன்னகையை உதிர்த்தனர்.
பதிலுக்கு இவளும் மென்னகை புரிந்து வைத்தாள்.
அவர்களுடன் நின்று சரிக்கு சரியாய் பேசுவது என்பது அறவே கூடாது. அது புவனேஸ்வரிக்கு துளியும் ஒவ்வாது என்பதால் யாரும் நேரிடையாய் வந்து நலம் விசாரிக்கவில்லை.
அடுப்படியில் ஏதேதோ உத்தரவுகள் மின்னல் வேகத்தில் பிறப்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.
அழகாய் முடிந்த கொண்டையில் நெருக்க கோர்த்த குண்டு மல்லியை அரைவட்டமாய் வைத்து, சின்ன கரையிட்ட பட்டு புடவையில் இவளுக்கு முதுகுக்காட்டி நின்றிருந்தார் புவனேஸ்வரி.
தயங்கியபடியே, “ம்மா…?” என்று அழைத்துவிட்டாள் கௌசி.
திரும்பியவர் இவளை கண்டதும், ‘வந்துட்டியா?’ என்றதொரு பாவத்தை விழியில் ஏற்றி, “ஒழுங்கா வந்து சேர்ந்தியா?” என்றார் உர்ரென.
கௌசி தலை தன்னால் கீழிறங்கியது. அவர் கேட்டதற்கு, ‘ம்ம்ம்’ என்ற ஆமோதிப்பு அவளிடம்.
“அப்ப எதாவது நல்லதா அலங்காரம் செஞ்சுட்டு இரு! கல்யாண வீட்டுக்கு யாராது வந்து போக இருப்பாங்க!” என்றார் அவர்.
அவள் ‘ம்ம்ம்’ என்றுவிட்டு நிற்க, இவர் வேலையாட்களின் பக்கம் திரும்பிவிட்டார்.
“சம்பந்திக்கு ப்ரெட் பஜ்ஜின்னா ரொம்ப பிரியமாம்! அதனால அவருக்கு தனியா அதெல்லாம் செஞ்சு வைங்க! சிக்கன் பொரிச்ச எண்ணையில போட்டு தொலைஞ்சுடாதீங்க!” என்று சமையல் பெண்ணிற்கு சொல்லிவிட்டு திரும்பியர், இன்னமும் கௌசி அங்கே நிற்பதைக்கண்டு, “என்ன?” என்றதொரு பார்வை பார்த்தார்.
அவள் ‘இல்லை’ என வேகமாய் தலையாட்ட, “போ, போய் நான் சொன்னதை செய்! கிளம்பு!” என துரத்தினார்.
இவள் வந்ததை உவப்பாய் ஏற்று இயல்பாய் நலம் விசாரிக்க கூட நாதி இல்லை என்ற எண்ணம் கௌசியை மனதுக்குள் ஒடுக்கியது.
மௌனமாய் மேலேறி அறைக்கு சென்றுவிட்டாள். அந்த வீட்டில் தான் அதிகப்படியாய் நிற்ப்பது போல உறுத்தியது. எதிலும் யாரிடமும் ஓட்டமுடியும் என்று தோன்றவில்லை அவளுக்கு.
இன்னமும் அவள் சந்திக்காதது அவள் அண்ணனை மட்டும் தான்! பார்த்தாலும் ஒன்றும் மாறிவிட போவதில்லை. அவன் எப்போதும் இவளை மதித்து பேசியதில்லையே! அதிலும் அவளது இப்போதைய நிலையில்… ம்ஹும்!
ஓய்ந்துப்போய் படுத்திருந்தவளின் அறைக்கதவை வேலையாள் வந்து தட்ட, எழுந்து சென்று கதவை திறந்தாள்.
தட்டில் சில பழங்களுடன் நின்றிருந்தாள் அப்பெண்.
கௌசிக்கு ஆச்சர்யமாய் இருந்தது. தன் வயிற்றை எண்ணி உணவு கொடுத்துவிட கூட இந்த வீட்டில் ஆள் இருக்கிறதா என்ற ஆச்சர்யத்துடன் அதை பெற்றுக்கொண்டவள், “அம்மா குடுத்தாங்களா?” என்றாள்.
அப்பெண்ணோ, ‘பே’ என முழித்து, “இல்ல, அண்ணே தான் குடுக்க சொன்னாங்க” என்று சொல்ல,
“யார்?” என்றாள் கௌசி.
“மனோகர் அண்ணா!”
அப்பெண் சொல்லிவிட்டு சில நொடிகள் நின்றாள். கௌசியிடம் பதில் இல்லை என்றதும் வந்தவிழியே சென்றுவிட்டாள்.
கௌசிக்கு அவனை உடனே பார்க்க வேண்டும் போல இருந்தது.
‘வீட்டில் ஆளே இல்லையே? எங்கிருந்து என்னை கவனித்திருப்பார்?’ என்ற எண்ணத்துடன் மாடிவளைவில் நின்று கூடத்தை மொத்தமாய் அலச, அவன் இருக்கும் சுவடே இல்லை.
ஏமாற்றத்துடன் அறைக்குள் சென்று முடங்கியவள் அதன்பின்னே வெளியே வரவே இல்லை.
அன்பழகன் தனது அலுவலகத்தில் இருந்தார். மனதுக்குள் யோசனைகள் வட்டம் போட்டு சுற்றியது.
மகன் காதலிக்கிறேன் என்று வந்து நின்றதும் எல்லா தகப்பனையும் போல ‘தாம் தூம்’ என்று குதித்தவர் தான்! ஆனால், மகன் பிடித்திருப்பது எம்.எல்.ஏ வீட்டு வாரிசு என்று தெரிந்ததும் கொஞ்சம் அடங்கினார் என்றால், ஒரே இனம் என்று அறிந்ததும் முழு மனதாய் பெண் கேட்க சென்றுவிட்டார்.
என்னதான் அன்பழகன் சொத்துபத்தில் பெரியாளாய் இருந்தபோதும் அரசியல்வாதியின் செல்வாக்குக்கு நடுவே கொஞ்சம் சாயம் மங்கித்தான் தெரிந்தது.
மாப்பிள்ளை வீடு என அலட்டிக்கொள்ள முடியவில்லை. அமைதியாகத்தான் போகவேண்டி இருந்தது. ஆனால், அப்படி இருப்பது அன்பழகனுக்கு பழக்கம் இல்லாத ஒன்று என்பதால், தன்னை ஓரம்கட்டும் இந்த சம்பந்தத்தில் முழு ஈடுபாடு வர மறுக்கிறது இப்போதெல்லாம்!
இதோ, இன்று கூட பெண்வீட்டார் பல சொந்தங்களுடன் மாப்பிள்ளை வீடு பார்க்க வருவதாய் இருக்கிறது. அதில் எந்த சுணக்கமும் இல்லை அவருக்கு. ஆனால், ‘வந்தால் உங்களுக்கு தோதுப்படுமா?’ என வாய்வார்த்தையாய் கூட கேட்காமல், ‘வரோம்!’ என்று மட்டுமே சொன்ன பெண் வீட்டார் மேல் எரிச்சல் மூண்டது.
அவர்கள் பேச்சிற்கு மறுப்பே சொல்ல முடியாத தன் நிலையை எண்ணி ஆத்திரம் தான் வந்தது அவருக்கு.
இவர் ஒரு வார்த்தை சொன்னால், அதை கேட்டு செய்ய நூறு பேர் இருக்க, ஆணையிட்டே பழகியவருக்கு ஒருவர் ஆணையை ஏற்று நடக்க கெளரவம் இடம் தரவில்லை.
அதற்காக, சம்பந்தத்தை வேண்டாம் என்று சொல்லி, கிறுக்குத்தனம் செய்யவும் பிடித்தமில்லை.
ஆகமொத்தத்தில் அவர் விரும்பியும் விரும்பாமலும் ஒரு கலக்கத்திலேயே மகனது திருமண வேலைகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
யோசனையிலேயே அமர்ந்துவிட்டவரின் மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டை மிதமான வேகத்தில் இருமுறை தட்டினான் மனோகர்.
அந்த சத்தத்தில் கலைந்தவர், “என்ன மனோ?” என்றார் அவரிடம்.
“இன்னைக்கு கணக்கு சீக்கிரமே முடிக்க சொல்லிருந்தீங்க! பசங்க காலைலேயே வசூல் முடிச்சுட்டாங்க” என்று ஒரு பெரிய கணக்கு நோட்டை அவர் முன் வைத்தான்.
கந்துவட்டிக்கு பணம் கொடுப்பது அவரது ஆதி கால தொழில். பரம்பரை தொழில் என்றுகூட சொல்லலாம்! அதில் முதல் போட்டு லாபம் எடுத்து தான் மற்றது எல்லாம்!
“முந்திரி லோடு எடுக்க ஆளுங்களை நாளைக்கு வர சொல்லிட்டேன்! இன்னைக்கு வானம் மூட்டமா இருக்கு!”
“ம்ம்ம்” என்று மட்டுமே சொன்னார் அன்பழகன்.
“வீட்டுக்கு வேண்டியதெல்லாம் வாங்கி குடுத்தாச்சு! சமையலுக்கு ரெண்டு ஆள் ஒத்தாசைக்கு அனுப்பிட்டேன்! பூ அலங்காரம் செய்யணும்ன்னு வீட்ல சொன்னாங்க! அதுக்கும் ஆள் அனுப்பிருக்கேன்!”
அவன் ‘வீட்ல’ என்று சொல்வது புவனாவை தான் என்பது அவருக்கு தெரியும்!
அதை கேட்டதும் வெளிப்படையாகவே நெற்றியில் அறைந்துக்கொண்டார் அன்பழகன்.
“வீடு பாக்க தானே வராங்க! இப்போ பூ அலங்காரம் எல்லாம் என்ன மயிருக்காம்? இவளோட என் பாடு இருக்கே!!!” என்று புலம்ப, அப்படியே நின்றான் மனோகர்.
‘என்னிடம் சொல்லாமல் எதற்கு ஏற்ப்பாடு செய்தாய்?’ என்றெல்லாம் அவர் கேட்கவில்லை. கேட்டும் பிரயோஜனமில்லை என்பது அவருக்கு தெரியும்!
ஊரில் பலர் இவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடிப்பணிய, இவர் தாலி கட்டியது மட்டும் அடங்காமல் ஆடியது.
அவர் எரிச்சலுடன் அமர்ந்திருக்க, “கணக்கு பார்த்திடலாமா?” என்றான் மனோகர்.
“நீ பார்த்துட்டியா?”
“பார்த்துட்டேன்”
“அப்ப சரியா இருக்கும்… விடு” என்றுவிட்டார்.
தினமும் வரும் வட்டி கணக்குகளை சரிப்பார்த்து இவரிடம் கொடுத்தால், மனோவுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை சலிக்காமல் கணக்கு பார்க்கும் அன்பழகன், ‘விடு’ என அசட்டையாய் சொல்லிவிட,
“எதாவது பிரச்சனையா?” என்றான் மனோகர்.
அவன் கேட்கவே காத்திருந்ததை போல, அவர் மனதை அழுத்தும் அனைத்தையும் அவர் கொட்டிவிட, நிதானமாய் அவரை பார்த்த மனோகர்,
“நம்ம பைனான்ஸ் வச்சுருக்கோம்! இப்போதைக்கு இந்த ஊருல முக்கால்வாசி பேருக்கிட்ட நம்ம பிரபலமா இருந்தாலும், மதன் கல்யாணத்துக்கு பிறகு நம்ம இன்னும் பிரபலமாவோம்!
எம்.எல்.ஏ சம்பந்திங்குறதுக்காக பெரிய தல எல்லாம் நம்மகிட்ட கை நீட்டி காசு கேட்க வருவாங்க! அதேமாறி இப்போ காசு தராம இழுத்தடிகுற ஒன்னு இரண்டு ****பயலுவ கூட அரசியல்வாதி சொந்தக்காரன்னு பம்முவான்!” என்றவன்,
“எப்படியும் இதெல்லாம் யோசிச்சு தான் இந்த கல்யாணத்துக்கு சம்ம்திச்சுருப்பீங்க! அதுக்கு பிறகு இப்படி ஒப்புக்காக தன்மானம், கெளரவம்ன்னு புலம்புறது வீண்!” என்று முகத்துக்கு நேரே பளிச்சென சொல்லிவிட,
ஆத்திரத்தில் அமர்ந்திருந்த நாற்காலியை தட்டிவிட்டு எழுந்தவர், “அப்போ என்ன மானம் கெட்டவன்னு சொல்றியா?” என்றார் கண்கள் சிவக்க.
துளி கூட அசராது நின்றவன், “அப்படின்னு நான் சொல்லலயே?” என்றுவிட, அடுத்து என்ன பேசுவது என திணறிப்போனார் அன்பழகன்.
அவர் கோபத்தில் துடிக்கும் உடலை அடக்கிக்கொண்டு நிற்க, “ஹரிணி ஜுவல்லரிக்காரன் இன்னைக்கு வட்டி தரேன்னு வாய்தா சொல்லிருந்தான்! நான் போய் வசூல் பண்ணிட்டு… இல்லனா தூக்கிட்டு வரேன்!!!” என்ற மனோகர் சென்றுவிட்டான்.
எகிறிய அவரது கோபம் அப்படியே மட்டுப்பட்டது.
பதினாறு வயதில் நாதியற்று இவரிடம் வந்து நின்ற மனோகர் அல்ல இவன்.
பார்க்கவும் சரி! பழகவும் சரி! மொத்தமாய் முரட்டுத்தனமாய் மாறியிருந்தான்.
முதலில் அவனை இப்படி மாற்றியதே அவர்தான்!
வட்டி சரியாய் வராத இடத்தில் எல்லாம் தட்டி கேட்டோ, தட்டி தூக்கியோ காசை வாங்க சம்பளம் இல்லாத அடியாளாய் உறவினன் என்ற போர்வையில் இவனை வைத்திருக்க வேண்டியே அவனை இப்படி மாற்ற நினைத்தது.
ஆனால் அவருக்கே சிலநேரம் அவன் உற்று பார்க்கையில் நெஞ்சுக்கூடு கிடுகிடுக்கும்!
அவன் பொதுவாய் எதிர்த்து பேசமாட்டான்! ஆனால், மனதில் தோன்றுவதை பளிச்சென சொல்லாமலும் இருக்க மாட்டான்!
முகஸ்துதி என்பதன் முன்னுரை கூட தெரியாது! வரவும் வராது அவனுக்கு.
இப்போது அவன் சொல்லிவிட்டு சென்றிருக்கும் நகைக்கடைக்கு கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் கொடுத்திருக்கிறார். இரண்டு மூன்று தவணைகள் வரை சரியாய் வட்டி கட்டியவர்கள், கடந்த இரு முறையாய் வாய்தா சொல்லிக்கொண்டே போக, போன முறை இவன் சென்று இறுதி வாய்தா பெற்று வந்திருந்தான்.
இம்முறை அவனிடம் பணத்தை கொடுக்காமல் மீண்டும் வாய்தா என்றால், கண்டிப்பாக சேதாரம் செய்கூலி அனைத்தும் பல மடங்கு ஜி.எஸ்.டி யுடன் அந்த நகைக்கடைககாரன் வாங்கப்போவது உறுதி என்று அவருக்கே தெரியும்!
மனோகர் முழு மூச்சாய் வட்டி விஷத்தில் தலையிட்ட பிறகு இவருக்கு முழு நிம்மதி கிடைத்தது மட்டும் மெய்!
பணம் வராத இடம், சிக்கல், பிக்கல், பிடுங்கல் என்ற எந்த கவலையும் கிடையாது!
‘அவன் பார்த்துப்பான்!’ என திடமாய் சொல்லுமளவு மனோகர் இருந்தான்.
அப்படிப்பட்டவனிடம் கோபம் காட்டி பகைத்துக்கொள்ள முட்டாள் கூட எண்ணமாட்டான் எனும்போது அன்பழகன் எம்மாத்திரம்!?
தன் கோவத்தை தானே அடக்கிக்கொண்டார்.
error: Content is protected !!