Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மழை 6

போட்டோ ஸ்டுடியோ வாசலில் நின்ற அவன், காரில் இருந்து இறங்கிய கௌசியை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

இவளும் அவனை நிமிர்ந்துப்பார்க்க, வெயில் பட்ட சில்வர் தட்டைப்போல அப்படி ஒரு பிரகாசம் அவன் முகத்தில்.

அவனது இந்த பார்வை இப்போது அல்ல… கடந்த சில மாதங்களாகவே நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், பதிலுக்கு இவள் பார்க்க ஆரம்பித்தது சில நாட்கள் முன்பிருந்து தான்.

கௌசி எங்கோ பார்த்துக்கொண்டு நிற்கவும், ஓட்டுனர் இருக்கையில் இருந்து இறங்கிய மனோ, அவள் பார்வை போன திக்கை நோக்க, அங்கே ஒருவரும் இல்லை.



Advertisement

“என்ன பாக்குற?”

அவன் அப்படி கேட்டதும் மெல்லிய தடுமாற்றம் எழ, “இல்ல நோட்டு ஒன்னு வாங்கணும்” என்றாள்.

“வாங்கிட்டு வரவா?”

Advertisement

“இல்ல இல்ல… லேட்டாச்சு! நாளைக்கு வாங்கிக்குறேன்” என்றவள், “நீங்க கிளம்புங்க மாமா” என்றாள்.

Advertisement

“நீ உள்ள போ!!!”

மனோகரை கண்டதும் அங்கிருந்த தூணின் பின்னே ஒளிந்தவனை இப்போது விட்டால் மறுபடியும் மாலை தானே பார்க்க முடியும்? என்ற பதைப்பில்,

“நீங்க கிளம்புங்க மாமா! அதோ என் பிரன்ட் வரா பாருங்க” அவள் நேரத்திற்க்கென்றே சற்று தள்ளி வந்துக்கொண்டிருந்த பெண்ணை சுட்டிக்காட்டி சொன்னாள்.

Advertisement

அவனும் அப்பெண்ணை கண்டதும், “சாயங்காலம் இங்கேயே நில்லுங்க.. வரேன்” என்றுவிட்டு சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் மீண்டும் தூணின் வழி எட்டிப்பார்த்தவனை கண்டு லேசாக சிரிக்க முயன்றாள் கௌசி.

வாட்ச்மேன் வேறு இவளை ஒருமாதிரி பார்த்து வைக்க, அருகே வந்துவிட்ட தோழியிடம், “எவ்ளோ நேரமா உனக்காக நிக்குறது?” என கேட்டுக்கொண்டு அவளோடு கைக்கோர்த்து உள்ளே நுழைந்தாள்.

கால்கள் முன்னே சென்றாலும் கண்கள் பின்னே தான் சென்றது.

அவனும் தன்னால் முடிந்தவரை எக்கி எக்கி இவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்னடி உன்னோட ரோமியோ ரொம்ப எக்குறாரே?” நக்கலடித்தாள் தோழி.

அவன் கண்ணை விட்டு மறையும்வரை பார்த்துவிட்டு திரும்பியவள், “சும்மா கிண்டல் பண்ணாத! அவர் ஒன்னும் ரோமியோ இல்ல” என்றவளுக்கு முகம் சிவக்க தொடங்கியது.

“அடடடா! நம்பிட்டேன் நம்பிட்டேன்!” என்றவள், “என்ன திடீர்ன்னு ஜூலியட் பார்வை ரோமியோ பக்கம் வீசுது?” என்று கேட்க,

முளைக்க துவங்கிய வெட்கத்தை மறைக்க முயன்றபடி, “போன வாரம் நம்ம ஸ்பெஷல் கிளாஸ் முடிஞ்சு போனப்போ செம்ம மழைல?” என்றாள்.

தோழியும், ‘ஆமாம் சாமி’ போட, “எங்கூருக்கு போற வழில புளியந்தோப்புக்கிட்ட சைக்கிள் பஞ்சர் ஆகிபோச்சு!” என்றிட,

“அச்சச்சோ!!!” போட்டாள் தோழி.

“நீயே சொல்லு அந்த காட்டு தடத்துல கொட்டுற மழைல பொழுதிருட்டுன நேரத்துல பஞ்சர் ஆன சைக்கிளோட தன்னந்தனியா நிக்குறப்போ எப்படி இருக்கும் உனக்கு?”

“ஐயையோ! பயந்தே போய் சேர்ந்துடுவேன் நானு” திகிலாய் சொன்னாள் தோழி.

“ம்ம்! எனக்கும் அப்படி தான் இருந்துச்சு! எப்படி இன்னும் ரெண்டு கிலோமீட்டர் போக போறோமோன்னு நான் பயந்துக்கிட்டு நிக்கும்போது தான் ‘இவர்’ வந்தாரு!” என்றாள் கௌசி.

“ஓ!!!” என ராகம் போட்ட தோழி, “உடனே லவ்வு பத்திக்கிச்சா?” என்று கேட்க,

“லவ்வா? ச்சீ…ச்சீ!” என பதறினாள் கௌசி.

“என்ன ச்சீ.. ச்சீ? இதுக்கு பேரு அப்பறம் என்னவாம்?”

“பார்த்தா உடனே லவ்வா?”

“லவ்வு இல்லாம ஒரு ஆம்பளையை எதுக்குடி பார்க்கணும்?”

தோழியின் கேள்வியில் ஏதோவொரு நியாயத்தை கண்டுக்கொண்டாள்.

ஆயினும், “லவ்வு எல்லாம் ஒன்னும் கிடையாது! அந்த இக்கட்டான நேரத்துல அவர் வந்து, எங்கிருந்தோ ஆளை வரவச்சு டயரை சரி செஞ்சு குடுக்கவும் தான் என்னால பத்திரமா வீட்டுக்கு போக முடிஞ்சுது! அப்போவே தேங்க்ஸ் சொல்லிட்டேன்னாலும், நேர்ல பாக்கும்போது ஜஸ்ட் ஸ்மைல் கூட பண்ணலன்னா நல்லாவா இருக்கும் சொல்லு?” என்று தோழியிடமே கேட்டாள் கௌசி.

“ஓ! இதான் ஜஸ்ட் ஸ்மைல்’லா?” அதற்கும் கிண்டலடித்தாள் அவள்.

வெட்கம் தான் வந்தது கௌசிக்கு!

“சும்மா போடி” என அவள் சொல்லிவிட்டு பிராத்தனை கூடத்திற்கு செல்ல, “எவ்ளோ நாளைக்கு ‘ஜஸ்ட் ஸ்மைல்’ன்னு சொல்லி ஏமாத்த போறன்னு நானும் பாக்குறேன்” என சொல்லிக்கொண்டே அவளோடு சென்றாள் தோழி.

பன்னிரெண்டாம் வகுப்பு என்பதால் பாடம் நடத்த, அதிலிருந்து தேர்வு வைக்க என்று நேரம் விரயம் இன்றி சென்றுக்கொண்டிருந்தது.

மாலை நான்கு முப்பதுக்கு பள்ளி முடிந்தபின்னும் ஆறு மணி வரை சிறப்பு வகுப்புகள் உண்டு என்பதால், ஆர்த்தி அக்காவுக்காக காத்திராமல் தோழிகளுடன் சென்றுவிடுவாள்.

அன்றும் அதேபோல ஆர்த்தி சென்றுவிட்டிருக்க, கெமிஸ்ட்ரி லேபில் அமர்ந்து ரெக்கார்ட் எழுதிக்கொண்டிருந்தாள் கௌசி.

ஐந்து முப்பது தாண்டியதும், ‘மழை வரும்போல இருப்பதால் எல்லோரும் கிளம்பலாம்’ என்று ஆசிரியர் சொல்லியிருக்க, தோழிகளுக்கு விடைக்கொடுத்தவள், பள்ளி வாசலில் மனோகருக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

அவள் வந்து நின்ற அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த தூணுக்கு பின்னிருந்து எட்டிப்பார்த்தான் அவன்.

இருப்பக்க சாலைகளை பார்த்துக்கொண்டிருந்தாலும், அவள் கண்களும் அவனைத்தான் தேடியதோ?! அந்த போட்டோ கடை கண்ணில் பட்டாலே ஒட்டுப்புல் போல ‘அவன்’ நியாபகமும் வந்து தொலைக்கிறதே!

பதின்மவயதில், செழித்து வளமாய் நிற்கும் காலத்தில் தன்னை ‘அழகு’ என யாரேனும் சொன்னாலே, கண்ணாடியில் பத்துமுறை உருவத்தை அளவெடுக்க தோன்றும் பருவத்தில், அவளையே ஆர்வமாய், ரசனையாய் ஒருவன் பார்த்தால்…?

அந்த பார்வை அவளை குறுகுறுக்க செய்தால்…?

ஒரு ஆணை தான் கவர்ந்திழுக்கிறோம் என்ற எண்ணமே சிலிர்ப்பை உண்டாக்கினால்…?

அவன் தனக்காகவே காத்துக்கிடக்கிறான் என்ற நினைவே கர்வத்தை கொடுத்தால்…?

பார்த்தாலே ‘காதல்’ என படங்களில் பார்த்து பழகிப்போய்விட்ட இரண்டும்கெட்டான் வயதிடம், இது ‘காதல்’ அல்ல… காதலிக்கும் வயதும் இதுவல்ல என்று யாரேனும் சொன்னால்…? புரியுமா? புரிந்துக்கொள்ள தான் முடியுமா?

ரகசிய பார்வை பார்ப்பவனையே மனதில் ஏற்றி மணாளனாக்க நினைக்கும் முட்டாள் வயது அது!!!

அறிவுரை சொல்பவனை எல்லாம் ‘அற்பப்பதரே… என் காதல் எப்பேர்ப்பட்ட தெய்வீக காதல் என்று தெரியுமா உனக்கு?’ என்று கேலி செய்யும் விதண்டாவாத வயது அது…

இந்த ‘சோ கால்டு காதல்’ கண்டிப்பாக கல்யாணத்தில் முடிந்து ஆசிகளை அள்ளிக்கொடுக்காது, காயத்தில் முடிந்து வலிகளை தான் வாரி இறைக்கும் என்று சொன்னாலும்,

‘மத்தவங்க மாதிரி நாங்க இல்ல… நான் அவரை தான் கட்டாயம் கல்யாணம் செய்வேன்! பாக்குறியா?’ என்று சவால் விடும் வயது அது…!

பதின்வயது புதைகுழிகளில் வீழாமல், தப்பித்தவறி… தட்டுத்தடுமாறி பெண்கள் எழுந்து நிற்பது இப்போது பிரம்மபிரயத்தனம் தான்!!!

மனோகாரின் காருக்காக காத்து நின்றவளின் பார்வைகள் பட்டும் படாமல் அந்த தூணின் பக்கம் அலைமோதத்தான் செய்தது.

அவள் பார்க்கும்போதெல்லாம் லேசாக கைகளை ஆட்டுவதும், சட்டென திரும்பிகொள்வதுமாய் ஏதேதோ அவன் செய்ய, ஒரு கட்டத்தில் அவனை ஊன்றி பார்க்க ஆரம்பித்தாள்.

அவனோ சைகையில், ‘இங்கே வா!’ என்று அழைத்துக்கொண்டிருந்தான்.

கௌசிக்கு ‘திக்’கென்றானது.

‘அங்கே வருவதா? என்ன விளையாடுகிறாரா?’

பயமாய் தான் இருந்தது அவளுக்கு.

ஆனாலும் ஆர்வம்…!

என்னதான் சொல்லுவார்?

நமக்காக தான் நிற்கிறார் போலும்!?

போகலாமா?

கருக்கள் கட்டிக்கொண்டிருந்த வானம், மெல்ல தூறல்களை வீச, கௌசிக்கு அவன் என்ன தான் பேசப்போகிறான்? என தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அதிகமானது.

‘போவதா? வேண்டாமா?’ என்ற அவள் குழப்பத்திற்கு மழையே முற்றுப்புள்ளி வைத்து, அந்த வளாகத்தை நோக்கி ‘போ’ எனும்படி மழை நீரை கொட்ட துவங்க, கையில் இருந்த லஞ்ச் பேகை தலைக்கு மேல் வைத்து மறைத்தபடி ஓடினாள் எதிரே.

லேசாக மூச்சு வாங்க தூணின் அருகே ஒட்டி நின்றவளுக்கு துணையாய் மழைக்கு ஒதுங்கிய இன்னும் பலர்.

தூணின் மறுப்பக்கம் அவன்…!

கடைக்கண் பார்வையில் அவனை நோட்டமிட்டுக்கொண்டிருந்தாள் கௌசி.

அவன் ஏதோ சமிக்ஞை செய்து அவளை அழைக்க, லேசாக திரும்பிப்பார்த்தாள். அதற்கே பூரித்துப்போனவன், “என் பேரு ஹரி!” என்றான்.

“இது என் அண்ணனோட போட்டோ கடை தான்! நான் தொழில் கத்துக்க வந்துருக்கேன்”

‘அச்சோ! அப்போ படிக்கலையா?’ என அவள் நினைக்க,

“போன வருஷம் பன்னெண்டாவது முடிச்சேன்! அதுக்குமேல எதுக்கு படிப்புன்னு விட்டுட்டேன்”

‘அதுசரி!’

அதன்பின் சில நிமிட அமைதி!!!

அவனே குரலை செருமிக்கொண்டு, “நீ… நீ… நீ ரொம்ப அழகா இருக்க கௌசி” என்று சொல்லிவிட, அவள் வெட்கத்தை மறைக்க அரும்ப்பாடுப்பட்டாள்.

“நீ நெத்தில வைக்குற பொட்டுல இருந்து யுனிபாமுக்கு மேட்ச்’ஆ போடுற வளையல் வரை எல்லாமே அழகு!”

‘என்னை இவ்ளோ கவனிக்குறாரா?’ வியந்து போனாள்.

“உன்னை நாள் முழுக்க பார்த்துட்டே இருக்கலாம் போல… அவ்ளோ அழகு!!!”

ஒருவார்த்தை சொன்னாலே உருகிவிடும் பெண்ணிற்கு பனிமலை போல் அவள் மேலே பொழியும் வார்த்தைகளில் மென்மேலும் நனைய தான் ஆவல் பிறந்தது.

அவன் வார்த்தை ஜாலங்களை கேட்கும் ஆசையில் நின்றவளுக்கு மழை நின்றதோ, மனோகர் வந்ததோ? ஏன்.. அவள் முன் அவன் நிற்பதோ கூட தெரியவில்லை.

“கௌசி…ஈஈ….?” சற்று அழுத்தி அழைத்ததும் கனவில் இருந்து விழிப்பவள் போல விலுக்கென்று நிம்ர்ந்தவள் முன்னே நின்றவன்,

“எதுக்கு இங்க நிக்குற?” என்றான் கூர்மையாய்.

“அது… மாமா… மழை”

“மழைன்னா ஸ்கூல்க்குள்ள போய் நிக்க வேண்டியது தானே?” என்றவன் சுற்றும் முற்றும் ஆராய்ச்சியாய் பார்த்தான்.

அங்கிருந்த கடைகள் எல்லாம் தத்தம் அலுவல்களில் மும்மரமாய் இருந்தது.

“இனி இங்க வராத! ஸ்கூல் கிட்டேயே நில்லு” என்றவன், காரை நோக்கி செல்ல, இவளும் ஆட்டுக்குட்டியாய் பின்னே சென்றாள்.

காருக்குள் ஏறிய பின்னும் அவன் இவள் கண்களில் அகப்படவில்லை.

மனம் ஏமாற்றமாய் உணர்ந்தாலும்,

‘நல்லவேளை… அவர் என்கிட்ட பேசுனதை மாமா பார்க்கல’ என்ற நிம்மதி பிறவாமல் இல்லை.

கார் இயங்க ஆரம்பித்ததும் ஜன்னல் வழி எட்டிப்பார்த்தவளுக்கு அதே தூணின் பின்னிருந்து கையசைத்து விடைகொடுத்தான் ஹரி.

மனம் மத்தாப்பூவாய் பளிச்சிட, அதன் பின்னும்… வீடு சென்றும்… அவள் நியாபகமெல்லாம் அந்த ‘ஹரி’யை பற்றி தான்!!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!