Skip to content
Post Views: 1,247
அத்தியாயம் 12
“இதயா…” என்ற வாசுவின் குரலில் தன் நினைவில் இருந்து வெளியில் வந்தவள் பக்கவாட்டில் அமர்ந்திருந்த வாசுவைப் பார்த்தாள்.
Advertisement
“ஊரு வந்துடுச்சு…” என்றதும் சரியென்றவள் அப்பொழுது தான் வந்த இடத்தை கவனித்தாள்.
Advertisement
மலையடிவாரத்தில் இருந்தது அந்தகால பாணியில் கட்டப்பட்ட மாடிவீடு… வீட்டை சுற்றிலும் மஞ்சள் நாற்றுகளும், ஊடு பயிராக துவரம் பருப்பும் பயிரடப்பட்டிருந்தது. அவ்விடம் முழுவதும் பச்சை பசேலென பார்க்கவே அத்தனை ரம்மியமாக இருந்தது. இதுவே மற்ற நாட்களாக இருந்திருந்தால் இந்த சூழ்நிலையை ரசித்து இருப்பாளோ என்னவோ. ஆனால் தற்பொழுது அவளிருந்த மனநிலைக்கு இதனை ரசிக்க தான் முடியவில்லை…
Advertisement
வாகனத்திலிருந்து கீழிறங்கி நின்றாள். மலைக் காற்று இவளின் வதனத்தை மென்மையாக தீண்டி சென்றது. காற்றின் வேகத்திற்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்த கூந்தலை செவியோரத்தில் ஒதுக்கிவிட்டு ஜானகியையும், வாசுவையும் பார்த்தாள்.
Advertisement
“போலாமா?…” என்பதை போல் ஜானகியை பார்த்து தலையாட்டினாள்.
“ம்ம்…” என்ற ஜானகியின் கால்கள் பின்னியது. தாய், தந்தையை மீறி திருமணம் செய்து நன்றாக வாழ்ந்திருந்தால் கூட இத்தனை தடுமாற்றமும், தயக்கமும் வந்திருக்காதோ என்னவோ. தற்பொழுது அத்தனை தயக்கமாக இருந்தது..
ஜானகியின் தடுமாற்றத்தை பார்த்த இதயாவோ அவரின் கைகளை பற்றி அழுத்தினாள். அது அவருக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்க வேண்டும் இதயாவை பார்த்து புன்னகை செய்தார். இதயாவின் கைகளை பற்றியபடி அந்த வீட்டை நோக்கி நடந்தார்.. அவர்களுக்கு பின்னால் வாசு சென்றான்…
பெரிய களம் போல் காட்சியளித்த வாசலை தாண்டி வீட்டை நெருங்கும் சமயம் தோட்டத்தில் வேலை செய்த ஆட்கள் மதிய உணவிற்கு கீழ் காட்டிலிருந்து மேலே வந்திருந்தனர். வந்தவர்களில் பாதிபேருக்கு ஜானகியை தெரியவில்லை என்றாலும் ஆரம்பித்திலிருந்தே வேலைக்கு வந்து கொண்டிருப்பவர்களுக்கு ஜானகியை நன்றாகவே தெரிந்தது…
ஜானகியை கண்டதுமே “ஆயா ஜானகி… எப்படியாயா இருக்கற…” என்ற கேள்வியில் மூவரும் குரல் வந்த திசையைப் பார்த்தனர். எழுபது வயதிற்கு மேற்பட்ட ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார்.
“நல்லா இருக்கனுங்க மாமா… நீங்க எப்படி இருக்கறீங்க…” எனக் கேட்டவரின் குரலில் மெல்லிய நடுக்கம்…அந்த நடுக்கத்திற்கு காரணம் வேலையாட்களுக்கு பின்னால் நின்றிருந்த மணியனை பார்த்து கூட இருக்கலாம்…
மகளின் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த மணியன் குரலை செருமியப்படி முன்னால் வந்தார்…
கலங்கிய கண்களுடன் நின்றிருந்த மகளை பார்த்தவர் வா என்பதை போல் தலையாட்டி வீட்டினுள் நுழைய, தயங்கியபடியே தந்தையின் பின்னாலேயே சென்றார் ஜானகி. அவரைத் தொடர்ந்து இளையவர்கள் இருவரும் சென்றனர்…
முற்றத்தை ஒட்டிய ஓர் அறைக்குள் பெரியவர் நுழைய, அவர்களை தொடர்ந்து இவர்கள் மூவரும் சென்றனர்…
வாடிய கொடிப் போல படுக்கையில் கிடந்தார் அய்யாம்மாள்.மனைவியின் அருகில் சென்று “இங்க பாரு அம்மிணி உன்ற புள்ளை வந்திருக்கறா..” என்றார் மணியன்.
காய்ச்சலில் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தவர் ஜானகி வந்திருக்கிறாள் என்றதும் சட்டென விழிகளை மலர்த்தி கண்களால் தேடினார்..
கண்களில் நீரோடு தன்னையே பார்த்தபடி நின்ற மகளை “வா ஆயா…” என்றழைக்க, அடுத்த நிமிடம் சிறு பிள்ளைப் போல் கதறிக் கொண்டு தாயின் மடியில் சரணடைந்தார்… தங்களின் மகளின் கதறலில் இத்தனை வருடங்களாக இருந்த கொஞ்ச நஞ்ச கோபமும் காற்றில் கரைந்தது பெரியவர்களுக்கு…
ஒதுங்கி நின்ற மணியன் கூட
“அட அழுகாத சாமி,எதுக்கு இப்படி ஏங்கி ஏங்கி அழுகற, கண்ணம்மா அழுகாத டா…”என்று மகளை சாமாதனம் செய்தார்.
இங்கு வாசுவோ ‘நீங்க பால் ஊத்தினா போதும் போயிடும்…’ என்ற டிஸ்க்ளைமருக்கு சொந்தக்காரியா இந்த கிழவி என்பதை போல் தான் பார்த்து கொண்டிருந்தான்.
அவனது பார்வையில் தெரிந்த உஷ்ணம் அருகில் நின்றிருந்த இதயாவிற்கு தெளிவாக புரிந்தது…
“என்னாச்சு டா…எதுக்கு இப்படி விரப்பா நின்னிட்டு இருக்க…” மெல்லிய குரலில் வினாவினாள்.
“ம்…அது ஒன்னுமில்லை சாக போற கிழவியா இதுன்னு பார்த்திட்டு இருக்கேன்… ” என்றான் பெரியவர்கள் இருவரையும் முறைத்து கொண்டு… அதற்கு பதில் சொல்லாமல் ஜானகியை பார்த்தவள்
“அதை விடு, அத்தை முகத்தைப் பாரு ரொம்ப சந்தோசமா இருக்காங்க…” என்றாள்.
வாசுவும் தாயின் முகத்தைப் பார்த்து தான் பெரியதாக எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் கோபமாக வந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக நின்று கொண்டான்.
சிறிது நேரம் மெளனமாக நின்றவன்
நினைவு வந்தவனாக “ஊருக்கு ரீச் ஆயிட்டோம்ன்னு அண்ணாக்கு கால் பண்ணி சொல்லிடு மா…” என்றான். அதற்கு பதில் சொல்லாமல் அவள் நிற்க
“இதயா…” அழுத்தமாக அழைத்தான். அவனது குரலில் இருந்த அழுத்தமே இதயாவை சுதனுக்கு அழைக்க வைத்தது.
“கால் போகல…உன் போன் குடு…” அவனது அலைபேசியை வாங்கி கணவனுக்கு அழைக்க அழைப்பு செல்லவே இல்லை…
“உன்னோடதுலயும் ஃபோன் போகல…கொஞ்சம் நேரம் கழிச்சு சொல்லிக்கலாம்…” என்றவளுக்கு மீண்டும் கணவனின் நினைவுகள் ஆக்கிரமித்தது. அவனது மூச்சுக் காற்றின் வெப்பமும், கைகள் சென்ற வேகமும், இதழ்கள் கொடுத்த அழுத்தமான முத்தமும் அதற்கு பின்னான வார்த்தைகளும் நினைவு வர கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
பெருவிரலால் நிலத்தை ஊன்றி கொண்டவளுக்கு அவளது கண்ணீரை அடக்க முடியாமல் தான் போனது… கலங்கிய கண்களை மற்றவர்களுக்கு காட்டாமல் அறையில் இருந்து வெளியில் வந்தாள்.
மழை வரும் போல இருந்தது. சுற்றிலும் விவசாய நிலங்களாக இருக்க, பின்னால் தொடர்ச்சி மலைகள் இருக்க, காற்று ஈரத்தை சுமந்திருந்தது. கலங்கிய கண்களை இறுக மூடித் திறந்தவள் வீட்டிற்கு பின்னாலிருந்த திட்டில் சென்று அமர்ந்து கொண்டாள். கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல வெளிவர அக்கணம் பொழிந்தது பெரும் மாமழை.
மழை நீரோடு பெண்ணவளின் கண்ணீரும் கலக்க, மழையில் நனைந்தப்படியே அமர்ந்திருந்தாள். அவளின் எண்ணம் முழுவதும் அவன் மட்டுமே…முதலில் அவனது அணைப்பிலும் இதழ் தீண்டலிலும் அதிர்ச்சியடைந்தாள் தான்…அதன் பிறகு மறவோனது அன்பிலும், அருகாமையிலும் அனைத்தும் மறந்து போனாள்.
அவனுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவளுக்கு நடந்த அனைத்தும் பின்னால் சென்று விட அவன் மட்டுமே என்ற நிலை தான் பெண்ணிற்கு. ஆனால் அவன் இன்னும் அதையே நினைத்து கொண்டிருப்பான் என்று நினைக்கவில்லை. பாதிக்கப்பட்ட நானே அதிலிருந்து வெளியில் வர நினைக்க… இவனோ அதை நினைத்து தன்னை நெருங்கி கொண்டிருக்கிறான் என்ற எண்ணமே அவளைக் கொன்றது.
உண்மையாகவே அவனின் மனதை அறியவில்லையோ இந்த மெல்லினம்…
கண்கள் கண்ணீரை பொழிந்து கொண்டே இருக்க மழையும் தன் இருப்பை காட்டிக் கொண்டே இருந்தது. நேரம் செல்ல செல்ல கண்ணீரைப் பொழிந்து கொண்டிருந்த கண்கள் இருட்டி கொண்டு வந்தது… அமர்ந்திருந்த வாக்கிலேயே மயங்கி சரிந்தாள்.
அக்கணம்… இங்கு மூவரின் பாசமழையை முகம் இறுக பார்த்துக் கொண்டிருந்தான் வாசுதேவன். ஏனோ அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. அந்த கோபத்தை காட்டும் விதம் தான் தெரியவில்லை… கேசத்தை அழுத்திக் கோதி கொண்டே தன் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்தான்.
அவளோ அங்கில்லாமல் இருக்க,சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவன் அவ்வறையில் இருந்து வெளியில் வந்தான். சற்றும் யோசிக்காமல் மேல் தளத்தை நோக்கி நடந்தான். அங்கும் அவள் இல்லாமல் இருக்கவே, பயம் பிடித்து கொண்டது வாசுவிற்கு…
“இதயா… இதயா…” எனக் கத்திக் கொண்டே கீழ் இறங்கி வந்தான். இவன் கத்தலில் மணியணும், ஜானகியும் வெளியில் வந்தனர்.
“இதயாவை காணோம் மா…” என்றான் பதட்டமான குரலில்.
” இங்க தான் எங்காவது இருப்பா ப்பா, பாத்ரூம் போயிருக்கும் நீ பதட்டப்படாத,…” ஜானகி சொல்ல, அதை அவன் காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை…
மீண்டுமொருமுறை வீட்டை சுற்றிலும் தேடி பார்த்தவன் கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல் வெளியில் ஓடினான்.
வாசல் முழுக்க தேடியும் அவள் இல்லாமல் போக வீட்டிற்கு பின்னால் சென்று பார்த்தான். வீட்டு சுவற்றை ஒட்டியிருந்த திட்டில் மயங்கிய நிலையில் அவன் இளவரசி கிடக்க, துடித்து போனான் வாசுதேவன்.
அதற்கு பின்னான நிமிடங்கள் முழுவதும் இதயாவிற்காக சென்றது… கொட்டும் மழையில் நனைந்ததாலோ இல்லை சுதனின் அருகாமைக்கு ஏங்கியதாலோ ஏதோ ஒன்று அவளுக்கு காய்ச்சல் வந்திருந்தது… அன்று மட்டுமல்ல அதற்கு பின்னான நாட்கள் கூட இதயாவிற்கு காய்ச்சலில் தான் சென்றது. அதற்கு நேர் மாறாக வாசுவின் பாட்டி எழுந்து நடமாடிக் கொண்டிருந்தார்…
இந்த மனம் எப்பொழுதும் விசித்திரமானது. மனதிற்கு இனியவர்களை காணும் வரை மட்டுமே சோர்ந்து முடங்கி கிடக்கும்… அதுவே அவர்களை கண்டுவிட்டால் அடுத்த நிமிடம் சிறு பிள்ளை போல் துள்ளிக் குதிக்கும்… தற்பொழுது அய்யாமாளின் நிலையும் இது தான். இத்தனை நாட்கள் காய்ச்சலில் கிடந்தவர் மகளை கண்டதும் மெல்லத் தெறிவிட்டார்…
அவருக்கு நன்றாக உடல்நிலை சரியானதும் முதல் வேலையாக மலைக் கருப்பசாமி கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நின்று விட்டார். இதயாவை காரணம் காட்டி வரவில்லை என்று மறுத்தவனை இதயாவை வைத்தே கோவிலுக்கு செல்லென்று கூற வைத்து விட்டார் அய்யாம்மாள்.
இதற்கிடையில் சுதனிற்கு எவ்வித தகவல்களும் செல்லப்படவில்லை… முயற்சி செய்திருந்தால் அவனுக்கு தகவல் கொடுத்து இருக்கலாம் ஆனால் வேண்டுமென்றே தான் அவனுக்கு தகவல் கொடுக்கவில்லை.
கொட்டும் மழையில் நனைந்து அதிலேயே மயங்கி சரிந்து அதற்கு பின் காய்ச்சலில் கிடக்கிறாள் என்றால் அதற்கு முதற் காரணம் சுதனை தவிர வேறு யாராக இருக்க முடியும் என்று நினைத்தான் வாசு. சுதனின் வீட்டுலயே இருவரின் பாரமுகத்தை கவனித்தான் அப்பொழுது அதனை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் தற்பொழுது அது மட்டுமே வாசுவிற்கு நினைவு வந்தது. அது மட்டுமல்ல அவள் மயங்கி சரியும் முன் பேசியது கூட சுதனைப் பற்றி என்பதால் அவனின் சந்தேகம் உறுதியானது.
இவனுக்கு யார் சொல்லி புரிய வைப்பது இங்கு சண்டையிட்டது வந்தது சுதன் அல்ல இவனின் இளவரசி என்று…
*******
அதே சமயம் சுதனின் வீட்டில்
பட் பட்டென்று பாத்திரங்கள் உருட்டும் சத்தத்தில் சமையலறையை எட்டி பார்த்தார் ஈஸ்வர். அவரின் மனைவி தான் பாத்திரங்களை உருட்டி மிரட்டிக் கொண்டிருந்தார்.
மனைவியின் கைகள் பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தாலும் அவளின் எண்ணம் முழுவதும் இங்கில்லை என்பதை உணர நிமிடங்கள் தேவைப்படவில்லை. அமைதியாக மனைவியின் அருகில் நின்றார்.
இங்கு காமாட்சியோ கணவர் தன்னருகில் வந்தது கூட அறியாமல் தன் நினைவில் மூழ்கியிருந்தார்.
அன்று மாலையே வருகிறேன் எனக் கூறிவிட்டு சென்ற மருமகள் இரண்டு நாட்கள் கடந்தும் வரவில்லை. மகனுடன் சென்றிருந்தால் அதுவேறு, தனியாக அவள் மட்டுமே சென்றது சரியாகப்படவில்லை.
திருமணம் முடிந்து இரண்டே வாரங்களில் மகனும், மருமகளும் பிரிந்து இருக்கிறார்கள் என்றால் இருவருக்கும் ஏதாவது முறைச்சலோ என்று யோசித்தவருக்கு அன்று மழை நாளில் மகன், மருமகளின் இருண்ட முகம் நினைவு வந்தது. நொடி பாத்திரங்களை கழுவி கொண்டிருக்கும் கை நின்றது.
பட்டென நிமிர்ந்தவர் அருகில் நின்ற கணவரை அப்போது தான் கவனித்தார். “நீங்க எப்ப வந்தீங்க…” எனக் கேட்டவர் பைப்பை திறந்து கையில் வைத்திருந்த பாத்திரத்தை கழுவினார்.
“பைப்பை கூட திறந்து விடாம பாத்திரத்தை கழுவி வைக்கும் போதே வந்துட்டேன்…” என்றதும் சட்டென திரும்பி பாத்திரங்களை பார்த்தார். கணவர் கூறியது போல தான் இருந்தது அவர் அந்தப்பக்கம் வைத்த பாத்திரங்கள் அனைத்தும். அசடு வழிந்தப்படி தலையில் அடித்துக் கொண்டவர் பாத்திரங்களை மீண்டும் சிங்கில் போட்டார்.
“சரி சொல்லு, உன் மனசுல என்ன ஓடுது…” என ஈஸ்வர் கேட்கவும் “ஒன்னும் ஓடல…” வெடுக்கென கூறிவிட்டு திரும்பிக் கொண்டார்.
“அப்படியா? சரி” என நகர போனவரை நேரடியாகவே முறைத்தாள் காமாட்சி. மனைவியின் முறைப்பில் சத்தமாக சிரித்தவர் “என்னமா…” என மீண்டும் கேட்கவும்
“ஊருக்கு போனன்னைக்கு இரண்டு பேரோட மூஞ்சியும் சரியில்லைங்க. அவ போனதும் வரன்னு சொல்லிட்டு போனவ இரண்டு நாளாகியும் காணல. மூணு பேருக்கும் போனும் போக மாட்டேங்குது.
இவனும் அதை பத்திக் கண்டுக்காம இருக்கான். எனக்கு என்னவோ பயமாவே இருக்குங்க. இப்ப இருக்கிற பசங்களுக்கு கல்யாண வாழ்க்கையை பத்தியும் பயம் இல்லை. அவங்களை சார்ந்து இருக்கற குடும்பத்தை பத்தியும் கவலையில்லை. கல்யாணமாகி இரண்டு வாரம் கூட முடியல அதுகுள்ள இரண்டு பேரும் தனித்தனியா இருக்காங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் தேடற மாதிரியும் தெரியல” என மனதின் பயத்தை கணவனிடம் கூறினார் காமாட்சி.
மகனின் வாழ்க்கையை நினைத்து கவலையாக கூறிய மனைவியை பார்த்து புன்முறுவல் செய்தவர் ” நீ பயப்படற அளவுக்கு நடக்காது தங்கம். யார் எப்படியோ நம்ம பசங்க பாதியிலயே உறவை முடிச்சுட்டு போறவங்க கிடையாது” என்றார்.
“நீங்க சொல்றது புரியுதுங்க, ஆனா மனசு தான் ஏத்துக்க மாட்டேங்குது. கல்யாணம் முடிஞ்சு இரண்டு வாரம் கூட இல்லாம இப்படி கிளம்பி அந்த பொண்ணு போனதுல எனக்கு நல்லதா தோனலைங்க.
இப்படியெல்லாம் நடக்கும் நினைச்சு தான் இந்த பணக்கார சம்பந்தம் வேண்டாம்னு தலைப்பாடா அடிச்சுகிட்டேன். யாரு கேட்டீங்க, இப்ப பாருங்க நான் இப்படி தான் இருப்பேன்னு சொல்லாம சொல்லிட்டு போயிட்டா, போயி இரண்டு நாளாச்சு ஒரு கால் பண்ணல, இப்படியிருந்தா என்னங்க பண்றது. உண்மையாவே நம்ம பையன் வாழ்க்கையை நினைச்சா பயமா இருக்கு” என கண்களில் நீரை தேக்கி எப்போதும் சொல்லும் பழைய புராணத்தை கூறினார் காமாட்சி.
நீண்ட நெடிய பெருமூச்சு விட்டவர் மனைவியின் கண்களை அழுத்தி துடைத்து விட்டு “நான் பேசறேன் மா…” என்றவர் மகனின் அறையை நோக்கி நடந்தார்.
error: Content is protected !!