Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யார் குற்றம்?

யார் குற்றம்?

 

  

 



Advertisement

கதிரவன் தன்னுடைய கதிர்களை மெல்ல சுருக்கிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரம்……….

 நான் என்னுடைய கல்லூரி வகுப்புகளை முடித்துக்கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன்.

பொதுவாகவே பேருந்துகளில் பயணம் செய்வது என் விருப்பத்திற்குரிய ஒன்று. அதுவும் பேருந்து நிறுத்தத்தில் நின்று……. ஒரு பேருந்துக்காக காத்திருந்து ஏறுவதை விட……. பேருந்து நிலையத்தில் நமக்காக காத்திருக்கும் பல பேருந்துகளில்…….. பிடித்தமான ஒரு பேருந்தை  தேர்ந்தெடுத்து…….. அதில் இருக்கும் பல இருக்கைகளில் பிடித்தமான ஜன்னலோர இருக்கையை தேர்ந்தெடுத்து அமர்ந்து பயணிப்பது என்னை சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்.

Advertisement

இப்படியான சில பயணங்களில் நான் என்னை மறந்து………. மெய்மறந்து உலகை மறந்து……. சில நேரங்களில் பயணச்சீட்டு எடுக்கவும் மறந்திருக்கிறேன்.

Advertisement

எனக்கு எப்பொழுதும் கல்லூரி மதியம் ஒன்று முப்பது மணியோடு முடிந்துவிடும். அப்பொழுதெல்லாம் கல்லூரியின் மணிச்சத்தம் ஆரம்பிக்கும் நொடியில் என் கால்கள் எனது வகுப்பறையை தாண்டினால் அந்த மணிச்சத்தம் முடியும்போது நான் கல்லூரி வாயிலேயே தாண்டி இருப்பேன்….. அப்படி ஒரு வேகம் இருக்கும் என் ஓட்டத்தில்……. ஒலிம்பிக் வீரர்களையும் தோற்கடிக்கும் வேகம், அந்த ஒரு ஜன்னலோர இடத்திற்காக. இல்லையெனில் அந்த பேருந்தில் நிற்கக் கூட இடம் இருக்காது…….
இதனால் என் கல்லூரி தோழிகள் கூட என்னை எப்பொழுதும் கிண்டலடிப்பார்கள். “மணி அடித்தால் மாயமாகி விடுவாள்” என்று…..

அவர்களுக்கு எங்கே புரியும் என்னுடைய அந்த 40 நிமிட பயணம் சொர்க்கமாவதும் நரகமாவதும் என்னுடைய கால்கள் ஓடும் அந்த இரண்டு நிமிடத்தை பொறுத்தே உள்ளது என….

ஆனால் மதியம் மட்டுமே நான் இந்த பேருந்தை  பிடித்து நேரடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என நினைப்பேன். ஏனென்றால் நான் இங்கிருந்து ஒரு ஷேர் ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் சென்று மீண்டும் ஒரு பேருந்தில் ஏறி என் வீட்டை அடைவதற்குள் பசி என்னை கொன்று தின்று விடும்.

Advertisement

ஆயினும் சில நாட்களில் எங்களுடைய சிறப்பு வகுப்புகள் காரணமாக நாங்கள் மாலையிலும் வீடு திரும்புவது உண்டு. அப்படி போகும்போது நான் நேரடியாக செல்லும் இந்த பேருந்தை எதிர்பார்ப்பதில்லை. பேருந்து நிலையத்திற்கு ஷேர் ஆட்டோ மூலம் சென்று அங்கிருந்து எனக்கு விருப்பமான ஒரு பேருந்தை தேர்ந்தெடுத்து செல்வேன். பாடல்கள் ஓடும் தனியார் பேருந்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் என் வழக்கம்.

அப்படியாக மாலை நேரத்தில் வீடு திரும்பும் ஒரு நாளில்தான் இந்த சம்பவம் நடந்தது

பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலிலேயே என்னைக் கண்ட ஒரு சிறுவன்…… என்னிடம் வந்தான். “அக்கா எனக்கு கண்ணு தெரியாது பிச்சை போடுங்கள்” என்றான்.

கண்கள் தெரியாத ஒரு சிறுவன்…… எப்படி என்னை நோக்கி வந்தான்? சரியாக என்னை அக்கா என்று எப்படி அழைத்தான்?

என்னை என் பெற்றோர் வெகுளியாக வளர்ந்திருந்தாலும் அவன் கூறுவது பொய் என்று கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பகுத்தறிவு இல்லாதவளாக வளர்க்கவில்லை.

கண்களை இழந்து தவிக்கும் எத்தனையோ மனிதர்கள் தன்னம்பிக்கையோடு தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

சிறு தொழில்களில் தொடங்கி…….. ஆசிரியராக…… மாவட்ட ஆட்சியாளராக……. என  எண்ணற்ற துறைகளில் அவர்கள் சாதனை புரிந்து கொண்டிருக்கையில்………. இப்படியும் சிலர் அவர்களுடைய பெயரை கெடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த  அந்த நொடியில் என்னுடைய கோபம் சிறிது எட்டிப்பார்த்தது.

நான் அப்பொழுது தான் கல்லூரி முதலாம் ஆண்டில் அடியெடுத்து  வைத்திருக்கும் ஒரு சாதாரண பெண்.

கதைகளில் வரும் கதாநாயகிகளையோ அல்லது கதாநாயகர்களையோ போல் அந்த சிறுவனை சீர்திருத்தும் நிலையில் நான் இல்லை. சொல்லப்போனால் அவனிடம் மறுவார்த்தை பேசுவதற்குக் கூட என்னிடம் தைரியம் இல்லை.

இங்கு பலருடைய நிலையும் அதுதான் கோபம் எல்லோருக்கும் வந்தாலும் வெகு சில தைரியசாலிகள் மட்டுமே அந்த கோபத்தை அதற்குரியவரிடம் வெளிப்படுத்த முடியும்.

அந்த இடத்தில் நானும் ஒரு கோழையான சிறுமியே….. நான் அச்சிறுவனிடம் எதுவும் பேசாமல் அவனை கடந்து சென்று விட்டேன்.
ஆயினும் அவன் என் பின்னாலேயே தொடர்ந்து வந்தான்.

என் முகத்திலேயே நான் அவனுக்கு பயப்படுவது தெரிந்திருக்குமோ?  என்பது கூட எனக்கு சந்தேகம் தான்.

இல்லை எனில் பேருந்து நிலையத்தில் அத்தனை பேர் இருக்கையில் அவன் ஏன் என்னை மட்டும் தொடர வேண்டும்?

அந்த பயத்திலாவது நான் அவனுக்கு ஏதாவது கொடுத்து விட மாட்டேனா? என்று அவன் யோசித்திருக்கலாம்…..

ஓட்டமும் நடையுமாக நான் அவனை கடந்து செல்ல…… அவன், முதலில் கூறிய அதே வாக்கியத்தோடு என்னை பின் தொடர்ந்தான் இப்படியே நான் பேருந்திலும் ஏறிவிட்டேன்……. ஆயினும், அவனுடைய குரல் மட்டும் என்னை விடவில்லை. அன்றுதான் முதல் முறை கூட்டமாக இருந்தாலும் பரவாயில்லை சீக்கிரமாக வீட்டுற்கு சென்றால் போதும் என பேருந்து நிலையத்தில் முதலில் புறப்பட தயாராக இருந்த பேருந்தில் ஏறினேன். அப்பொழுதும் அந்த சிறுவன் என்னை விடவில்லை…….. பேருந்திலும் ஏறிவிட்டான்.
பின், பேருந்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி அந்த சிறுவனை திட்டியதும் தான் அவன் பயந்து அவ்விடம் விட்டு சென்றான்.

அந்த நொடியில் எனக்கிருந்த உணர்ச்சிகள்…… கோபம், படபடப்பு, பதட்டம், பயம் என எதிர்மறைத் தாக்கங்கள் உடையவை மட்டுமே.

ஆனால் வீட்டிற்கு வந்து அமைதியாய் உட்கார்ந்து சிந்தித்தேன். அப்போது என் மனதில் சில கேள்விகள் எழுந்தது.

நடந்த இந்த சம்பவத்தில் குற்றம் புரிந்தது யார்?

குறைகளோடு இருப்பவர்கள் கூட, தங்கள் குறைகளை மறைத்து தன்னம்பிக்கையோடு போராடும்போது……..
இல்லாத குறையை இருப்பதாய்க் கூறி பிச்சை யாசித்தானே……. அந்தச் சிறுவனின் குற்றமா?

இல்லை அறியாத வயதில், அவனுக்குத் தகுந்த கல்வியை அளிக்காது……..   அவனை முன்னேற்ற எந்த முயற்சியும் எடுக்காது…… அவனையும் தங்களுடனேயே பிச்சை எடுக்க அழைத்து வந்த பெற்றவர்களின் குற்றமா?

பிச்சை யாசித்தால் மட்டுமே வாழ முடியும் என அவர்களின் விதியை எழுதிய இறைவனின் குற்றமா?

இப்படி என்னுடைய சிந்தனை ஓட்டங்கள் இருக்க……. இறுதியில்

ஈ என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று, 
என்னும் புறநானூறு வரிகள்  என்னையே  குற்றவாளி ஆக்கியது

*********

இது கதையல்ல காலங்கள் கடந்தும் வருடங்கள் ஓடியும் எப்பொழுதும் என் மனதை அரிக்கும் ஒரு சம்பவம். இன்றும் என் மனம் என்னை கேள்வி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது அச்சிறுவனுக்கு ஒரு ரூபாயோ, ஐந்து ரூபாயோ கொடுப்பதனால் என்னுடைய பொருளாதாரத்தில் எந்தவகையான வீழ்ச்சியும் வந்திருக்கப் போவதில்லை……. ஆயினும் ஏனோ அந்த நொடியில் எனக்கு அவனுக்கு உதவ கைவரவில்லை……

ஏன்? என்ற கேள்விக்கு பதிலும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!