ராகம் 24.3
சுகமதிக்கோ மகள் கலெக்டருக்கு படித்து கொண்டிருப்பதில் அத்தனை மகிழ்ச்சி பல மாதங்கள் கழித்து வீட்டிற்கு வந்தவள் அவருக்கு உதவ வரவும் வேண்டாம் என்று மறுத்து படிக்க சொல்லி அனுப்பி விட புத்தகத்தோடு அமர்ந்த யாழியோ அடுத்த சில நிமிடங்களில் அவரை தேடி வந்திருந்தாள்.
சுகமதி அருகே அமர்ந்தவள், ‘அம்மா மன்னிச்சிடும்மா..’ என்று அவரை அணைத்து கொண்டாள்.
‘எதுக்கும்மா..??’
‘ம்மா எங்களுக்கே தெரியாம உங்களுக்கு நிறைய கஷ்டம் கொடுத்துட்டோம் சொல்லபோனா அப்பாவை விட எங்களால நீங்க தான் ரொம்ப கஷ்ட்பட்டீங்க கல்யாணம் முடிவானதுல இருந்து ஒவ்வொருமுறையும் என்கிட்டே நீங்க பேசினப்போ எல்லாம் உங்களை அலட்சியபடுத்தி ரொம்பவே நோகடிச்சிடேன்ல மா சாரி…சாரிம்மா ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க..’ என்று அவர் கைகளை பிடித்து கொண்டவள் தொடர்ந்து,
Advertisement
‘நிஜமா எனக்கு அப்போ எதுவும் தெரியலை செல்போன் தான் உலகம்ன்னு இருந்துட்டேன்… நிச்சயமா அனுபவ அறிவுக்கு முன்னாடி எந்த மோட்டிவேஷனல் ஸ்பீச்சும் நிற்காது என் அம்மாக்கு அவங்களை மாதிரி பாயின்ட் பாயிண்ட்டா மத்தவங்களை கவரும் விதமா பேச தெரியாம இருக்கலாம் ஆனா நீங்க பேசுறது எல்லாமே என் நல்லதுக்காக தான்னு இப்பதான் புரியுது…’ என்று பேசிக்கொண்டு சென்ற மகளை விழியகலாமல் அவர் பார்த்திருந்தவர்,
‘நீயேன்டா சாரி சொல்ற…?? இங்க தப்பு எங்க மேலயும் தான்’
‘நீங்க என்னம்மா பண்ணீங்க..??’
Advertisement
‘இல்லம்மா என் பசங்க மேல இருக்க நம்பிக்கையில போனை கையில் கொடுத்தோம் கண்டிப்பா நீங்க தவறான வழியில் போகமாட்டீங்கன்னு நம்பிக்கை இருந்தது.., ஏன்னா இந்த போன் உங்க கைக்கு வரும் முன்ன வரை என் பிள்ளைகள் போல யாரும் இல்லை அவ்ளோ அன்பா.., பண்பா, மரியாதையோட, இருந்த பசங்க அது கையில் வந்த பிறகும் மொத்தமா மாறிபோயிட்டாங்க அதுக்கு நீங்க மட்டும் காரணம் இல்லையே நாங்களும் தானே…’
Advertisement
‘இல்லம்மா உங்க நம்பிக்கையை காப்பாத்தாம போன எங்க மேல தான் தப்பு’ என்று அவள் தன் தவறை உணர்ந்து கூற,
‘இல்லம்மா இதே போனால இன்னும் எவ்வளவோ மோசமான நிகழ்வுகள் நடந்துட்டு தான் இருக்கு ஆனா நீங்க அந்த மாதிரி தப்பா போயிடலை, என்ன ஒன்னு எது தப்பு எது சரின்னு புரிஞ்சிக்க முடியாம இன்ப்ளுயன்ஸ் ஆகிட்டீங்க…, அவங்க சொல்றதே வேதவாக்கா எடுத்துக்கிட்டீங்க…, அதுக்குள்ள மூழ்கிட்ட உங்களை காலம் கடந்து மீட்க எங்களால முடியலை…’
‘போனை கொடுத்த நாங்க அதை எப்படி பயன்படுத்தணும்ங்கிற அடிப்படை விஷயத்தை உங்களுக்கு சொல்லி கொடுத்திருக்கணும்… ஆனா கண்மூடித்தனமான பாசமும் அளவு கடந்த நம்பிக்கையும் வச்சு நாங்களே நீங்க தடுமாற காரணமாகிட்டோம்.., நான் தான்டா உங்க கிட்ட சாரி சொல்லணும்…’ என்று மகளை அணைத்துகொள்ள,
Advertisement
‘ம்மா ப்ளீஸ்ம்மா நீங்க சொல்லாதீங்க.., எங்க மேல வச்ச நம்பிக்கையை காப்பாத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறதை மறந்துட்டு பிரெண்ட்ஸ் அனுப்புற லிங்க் அவங்க இருக்க க்ரூப்ன்னு எல்லாத்துலயும் போய் நாங்களே நாங்க செய்யறது தான் சரின்னு ஒரு மாதிரி மாயை குள்ள சிக்கிக்கிட்டோம்…’
‘ஆனா இப்போ புரியுது எப்படி கடிவாளம் இல்லாத குதிரையும் அங்குசம் இல்லாத யானையும் ஆபத்தானதோ அதை விட கட்டுப்பாடு இல்லாத குழந்தைகள் ரொம்பவே ஆபத்தானவங்க.., இது புரியாம இத்தனை நாள் உங்களோட கண்டிப்பை அலட்சியபடுத்தின என்னை ப்ளீஸ் மன்னிச்சிடுங்கம்மா’ என்றவளிடம் இருந்து வெளியேறிய கண்ணீர் துளி அவர் கையில் பட்டு தெறிக்க,
‘யாழி என்ன இது சின்ன பிள்ளை மாதிரி..?? முதல்ல அழறதை நிறுத்து என்று சுகமதி மகள் கண்களை துடைத்திட,
‘இல்லம்மா நீங்க சொன்னீங்களே போன் கைக்கு வரதுக்கு முன்னாடி இருந்த நாங்க ரொம்ப நல்ல பிள்ளைகளா இருந்தோம்ன்னு அதுக்கு காரணமும் நீங்க தானே..!! அந்த என்னோட நிஜமான குணம் எனக்குள்ள இருக்க போய் தான் அத்தை மத்தவங்களுக்கு என்னை பிடிச்சது.. அந்த உங்க வளர்ப்பு தானே இப்போ என்னை மீட்டு எடுக்கிற அவரோட முயற்சியில கை கொடுத்தது… ஒருவேளை அப்படி இல்லாம போயிருந்தா நான் உங்க முன்னாடி இப்படி இருந்திருக்க மாட்டேன்ம்மா…’ என்று கூற
‘அதுவும் ஒரு வகையில் சரி தானே தன் மகள் அவர்கள் முதல் முறை வந்த போது தண்ணீர் கொடுத்து வரவேற்று உபசரித்தது எல்லாம் அவருடைய வளர்ப்பின் பிரதிபலிப்பு தானே..!!’ என்று தோன்ற மகளிடம் ‘ஆம்’ என்று தலையசைத்தவர்,
‘என் பொண்ணு இந்த அளவு மாறினது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு யாழி, மாப்பிள்ளை இல்லைன்னா இதெல்லாம் சாத்தியமே இல்லை நீங்க ரெண்டு பேரும் என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்’ என்று மகளை நெட்டி முறிக்க,
‘ம்மா நீங்க சொன்ன மாதிரி பல திருமணங்கள் தோற்க பொறுப்பை எடுக்காம இருக்கிறது ஒரு காரணம்ன்னா அடுத்த காரணம் அவசரம்… புரிதல் இல்லாம தெளிவு இல்லாம ஒரு வேகத்துல ரெண்டு பேரும் இணையும் போது அது ரொம்ப நாள் நிலைக்கிறது இல்லை எனக்கு அவர் கிடைச்சார்.., பொறுமையா என்னை செதுக்கினதுல நான் சிற்பமா இருக்கேன்… நல்ல வேலை அவர் எந்த அலங்கார வார்த்தையும் இல்லாம இது தான் நான்னு இயல்புல இருந்ததே எனக்கு ஒரு வரம் தான்..’ என்றவளின் விழிகள் கணவனுக்கான நன்றியை பிரதிபலித்தது.
***************************************
பல மாதங்களுக்கு பின் யாழி வந்திருப்பதை அறிந்து அவள் நட்பூக்கள் வீடு தேடி வந்திருந்தனர்.. அதை கண்ட சுகமதிக்கு மகளை இவர்கள் திசை திருப்பி விட்டுவிடகூடாதே பதைபதைத்து போனது..,
உடனே அவர் மருமகனுக்கு அழைப்பு விடுக்க, ‘அத்தை பயப்படாதீங்க இனி என் பொண்டாட்டியை யார் வந்தாலும் அசைக்க முடியாதுன்னு தெரிஞ்சு தான் அவளை விட்டுட்டு வந்திருக்கேன் நீங்க கவலையை விடுங்க…’ என்று முடித்து கொண்டான்..,
‘என்ன யாழி இப்போலாம் உன்னை வாட்ஸப், ட்விட்டர், இன்ஸ்டா எங்கயும் பார்க்க முடியறதில்ல.., எப்பவும் ட்ரெண்டிங்ல இருப்ப ஆனா இப்போ எல்லாம் உன்னோட ஒரு போட்டோ கூட போடுறது இல்லை போல..’
எங்க போட்டோவை எதுக்காக நான் சோஷியல் மீடியால போடணும்…??
‘என்ன பேசுற யாழி..?? அப்போ தானே உன் ஹஸ்பன்ட் உனக்கான கெமிஸ்ட்ரி…’ என்று ஒருத்தி ஆரம்பிக்கவுமே,
‘ஜஸ்ட் ஸ்டாப் இட்’ என்று கத்தி இருந்தால் யாழி.
அதை எதிர்பாராதவர்கள் அதிர்ந்து நிற்க, “எனக்கும் என் புருஷனுக்கமான வாழ்க்கை எப்படி அமையணும்ன்னு நாங்க தான் முடிவு பண்ணனுமே தவிர மூணாவது நபரோ ஒரு போட்டோவோ, வீடியோவோ, ஷார்ட்ஸ்ஸோ இல்ல மத்தவங்களோ முடிவு பண்ண கூடாது… எங்களோட லவ்வை ஜட்ஜ் பண்ண நீங்க யாரு..?? அவரோட காதலை நானும் என்னோட காதலை அவரும் உணர்ந்தா போதும் நடுவுல நீங்க எல்லாம் எதுக்கு..? உங்களுக்கு எதுக்கு நான் ப்ரூவ் பண்ணனும் அப்படி ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்ல“
‘ஹே என்ன பேசுற ..? நம்ம பிரெண்ட்ஸ் எல்லாரும் அப்படி தானே..’
‘மத்தவங்க அப்படி இருந்தா நானும் அப்படி இருக்கனும்ன்னு என்ன கட்டாயம்..??’ என்று யாழி கேட்க அவர்களோ பதிலின்றி அவளை பார்த்திருந்தனர்.
“இங்க பாருங்க சபை நாகரீகம் மாதிரி பொது வெளி நாகரீகம் இருக்கணும்…, எங்க எப்படி நடக்கணும் எதை போட்டோ எடுக்கணும் எதை எடுக்க கூடாதுன்னு பொது அறிவு வேணும் அதை விட முக்கியமா சோஷியல் மீடியால எதை ஷேர் பண்ணனும் எதை பண்ண கூடாதுன்னு தெரிஞ்சிருக்கணும்.. எல்லாரும் ஒரு விஷயத்தை செய்துட்டா அது சரி தான்னு நாம முடிவுக்கு வந்து கண்மூடி தனமா அதை செய்ய கூடாது புரியுதா..??”
“காலையில தூங்கி எந்திரிக்கிறதுல இருந்து பிரஷ் பண்றது குளிக்க போறது சாப்பிடறதுன்னு எல்லாமே போட்டோ எடுத்து போடணும்ன்னு எனக்கு எந்த கட்டாயமும் இல்ல அப்படி என்னோட பர்சனல் ஸ்பேசை கடைபரப்பி உங்க ட்ரென்ட்ல சிக்கி சின்னாபின்னமாக நான் தயாரா இல்லை…”
‘அது தான் ட்ரென்ட் யாழி…’ என்று ஒருத்தி கூறவும் பொறுமை இழந்து போன யாழி,
‘என்னடி ட்ரென்ட் பெரிய புடலங்காய் ட்ரென்ட்..??’ என்று அவளை முறைத்தவள்,
“எப்படி முதல்ல நைட் தூங்கிற வரை எல்லாமே போட்டோ வீடியோன்னு எடுத்து போட்டது இல்லாம இப்போ எதை போடணும் எதை போடக்கூடாதுன்னு விவஸ்த்தையே இல்லாம சிலர் பிரஸ்ட் நைட் ரூமை டெக்கரேட் பண்ணி போடுறது… என்ன நடக்கும்ன்னு போடறது இது தான் நாகரீக வளர்ச்சியா..?? இப்படி இல்லாத நம்ம அம்மா பாட்டி எல்லாம் அடிமைகளா இருந்தாங்க நாம தான் சுதந்திரமா செயல் பட்டுட்டு இருக்கோம்ன்னு பேசிட்டு இருக்கோமா..??” என்று அவள் ஆதங்கத்தோடு அவர்களை பார்க்க,
‘ஏய் என்னடி என்னென்னமோ பேசுற..?? இங்க பாரு யாழி நாம இருக்கிறது டிஜிட்டல் வோர்ல்ட் அதுக்கு ஏத்த மாதிரி நம்மளை அடாப்ட் பண்ணிக்கணும் விதவிதமா போட்டோஷூட் நடத்தி போட்டோஸ் எடுக்கிறதும் தான் இப்போ ட்ரெண்ட்டிங் அதை நாம நினைக்கிற இடத்துல ஷேர் பண்றதும் நம்மோட சுதந்திரம் அதை எப்படி நாம விட்டு கொடுத்திட முடியும்’ என்று மற்றொருத்தி கேட்க,
‘ஷட் அப் !!’ என்று உருமியவள் விழிகள் சிவக்க அவளை பார்க்க அப்பெண்ணோ யாழியின் விழிகளில் மிளிர்ந்த ரௌத்திரத்தை கண்டு அஞ்சி ஈரடி பின்வாங்கி இருந்தாள்..
“என்ன பேசுற நீ போட்டோ ஷுட்ன்னு சொல்லி அந்தரங்கத்தை கடை பரப்புறது தான் ட்ரெண்டிங்கா இப்படி சொல்றியே உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா..??” என்று கேட்க அப்பெண்ணோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்க,
“கல்யாண மேடையில அத்தனை பேர் முன்னிலையில பெத்தவங்க பெரியவங்க எதிர்ல கொஞ்சமும் கூச்சமில்லாம, வரைமுறை இல்லாம கணவன் மனைவியின் நெருக்கத்தை மற்றவர்கள் சங்கடப்படும் வகையில் அதிகபடியான அளவில் காட்டுறது தான் நாகரீகம், அதை சோஷியல் மீடியால கடைபரப்பி மற்றவர்களின் பார்வைக்கு விருந்தளிப்பது தான் சுதந்திரம்ன்னா எனக்கு அப்படி பட்ட சுதந்திரமே வேண்டாம்… போங்கடி…, என்னை கேட்டா முதல்ல செல்பியை ஒழிக்கணும் அது வந்ததுல இருந்தே மக்களோட வாழ்க்கை முறையே மாறிடுச்சி..”
“என்ன பேசுற யாழி நம்ம செல்பி போட்டோக்கு லைக்ஸ் எப்படி அள்ளும்.. அதெல்லாம் மறந்துட்டியா..??”
“ஏய் அறிவுகெட்டவளே போட்டோன்னு ஒன்னு வந்ததே கடந்து போக கூடிய எத்தனையோ நொடிகளில் சிலது ரொம்ப முக்கியமானதா, மனதுக்கு நெருக்கமானதா இருக்கும் அதை தவற விடக்கூடாதுன்னு வந்தது தான் கேமராக்களும் போட்டோக்களும்.., ஆனா இப்போ அப்படி இல்ல போட்டோ எடுக்குறது ஒன்னு தான் வாழ்க்கைன்னு மாறி போச்சு, எங்க எடுக்கனும் எங்க எடுக்க கூடாதுன்னு அடிப்படை அறிவில்லாம விதிமுறைகளை மீறி போட்டோ எடுக்குறேன் என்ற பெயரில் எத்தனை கவனகுறைவுகள், விபத்துக்கள் என்ன நடக்குது நாட்டுல..??” என்று யாழி மனதில் இருந்த ஆதங்கத்தை மொத்தமாக அவர்களிடம் கொட்ட அப்பெண்களோ அவளது புது ரூபத்தை கண்டு மிரண்டு போயினர்.
********************************************
