Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedவசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 8

கடைக்கு செல்வதுரை வந்ததும், மகன்கள் தந்தையின் முகத்தை குறு குறு என ஆர்வத்துடன் பார்த்தனர்.

ஆனால் செல்வதுரை வாயே திறக்கவில்லை.  சரி வீட்டிற்கு சென்று பேசிக்கொள்ளலாம் என அவர்களும் தள்ளிபோட்டனர்.  அங்கு தேவநாதனுக்குதான் இருப்பு கொள்ளவில்லை.

நேற்று தந்தை கூப்பிட்டு அவனது சம்மதம் கேட்டதிலிருந்து, இப்போது வரை கலவையான உணர்வுகளின் பிடியில் இருந்தான் மனதிற்குள்ளேயே.  நினைவு தெரிந்ததிலிருந்து அத்தை குடும்பத்தைப் பற்றியோ…, அவரது மகளைப் பற்றியோ எதுவும் அறியாதவன்.  ஏன் சொல்லப் போனால் அதை பற்றின எந்த சிந்தனையும் இல்லாமல்தான் இருந்தான் நேற்றுவரை.

தந்தை அவனை அழைத்து பொறுமையாக நடந்ததை எல்லாம் கூறி… அவனது சம்மதத்தை கேட்ட பொழுது, அவனுக்கு மறுக்க முடியவில்லை.  மறுப்பதற்கான காரணங்களும் இல்லையென்பதால், உடனேயே ஒத்துக்கொண்டான்.



Advertisement

மறுநாளே தாய் தந்தை அத்தை வீட்டிற்கு கிளம்பி செல்வதை பார்த்தவனுக்கு, மனதில் இன்னும் ஆர்வம் கூடியது தன்

போல்.

Advertisement

இதோ செல்வதுரை திரும்பி வந்ததைப் பார்த்தவனுக்கு, என்ன பேசியிருப்பார்கள்…? அங்கு என்ன நடந்திருக்கும் என ஆர்வமாக தந்தையை பார்த்தான்.  ஆனால் செல்வதுரையிடம் இதற்கான எந்த எதிர்வினையும் இல்லை.

Advertisement

தந்தையின் முகத்தைப் பார்த்தே அவனால் ஓரளவு ஊகிக்க முடிந்தது.  இருந்தும், ஏதும் கேளாமல் வேலையில் கவனம் செலுத்த முயன்றான்.

இங்கு ரோகிணிக்கு மனம் முழுவதும் அண்ணன் வந்து சென்றதை பற்றின சிந்தனையாகவே இருந்தது.  முந்தைய நினைவுகள் எல்லாம் அலைவரிசை போல் மனதில் வலம் வரத்துவங்கியது.

அன்னைக்கு மட்டும் எல்லாம் சரியாக நடந்திருந்தால்,  என் அண்ணனுடான உறவு சரியாக இருந்திருக்குமோ….?  என்ற ஆதங்கம்… தவிப்பு… இன்னும் தீரவில்லை ரோகிணியின் மனதில்.  பிறந்த வீட்டைப்பற்றின ஏக்கம் எழும் போதெல்லாம், கூடவே இந்த எண்ணமும் எழுந்து, தாக்கத்தை கொடுத்துவிடும் ரோகிணியின் நெஞ்சத்தில்.

Advertisement

வெகு வருடங்கள் கழித்து அண்ணனும், அண்ணியும் வந்து சென்றது சந்தோஷமாக இருந்தாலும், மனதின் ஆழத்தில் புதைந்திருந்த, அந்த கசப்பான சம்பவங்களை எல்லாம் கீறிவிட்டிருந்தது, அவர்களின் வருகை.

அஞ்சனாவுக்கு ஒரு வயதாக இருக்கும்போதே மொட்டை அடித்து காதுகுத்த ஏற்பாடு செய்திருந்தார் வேல்முருகன்.

அவர்களது குலவழக்கப்படியே குலதெய்வக் கோயிலில் மொட்டை அடித்து அங்கேயே காதுகுத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்திருந்தது.  உற்றார் உறவினர் எல்லோரையும் அழைத்து விமரிசையாக செய்ய எண்ணி அதுபோலவே, கோலாகலமாக நடத்திக் கொண்டிருந்தனர் காதுகுத்தும் விழாவை.

விசேஷத்திற்கு… ரோகிணியின் தாய் வீட்டு மக்களும் வந்திருந்தனர்.  காலையிலிருந்து கோயிலில் அபிஷேகம் பூஜை என எல்லாம் பெரும்படியாக… சந்தோஷமாக நடந்து கொண்டிருந்தது.

ஜே ஜே என கூடியிருந்தது சொந்த பந்தங்கள் எல்லாம் அந்த விசேஷத்தில்.  வேல்முருகனின் தந்தைவழி தாய்வழி  ஜனக்கட்டுகளே கொஞ்சம் பெரியது.

அடுத்து கொஞ்ச நேரத்தில் குழந்தைக்கு மொட்டை போட்டு காதுகுத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது ஒருபக்கம்.

“ஏன்ப்பா வேலு… மொட்டை போடுறவருக்கு போனை போட்டியா…?  என்னா இவ்வளவு லேட் பண்றாரு….?  போனை போட்டு சீக்கிரம் வரச்சொல்லுப்பா அவரை…” என வேல்முருகன் உறவு வழி பெரியவர் ஒருவர் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார் கும்பலில்.

வேல்முருகன், “அவருக்குதான் வெயிட் பண்ணிட்டிருக்கேன் பெரியப்பா.  இப்பதான் போன் பேசினேன்.  வந்துட்டுருக்காராம்.  இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருப்பேன்னு சொன்னாரு”.

“என்ன…பா…?  இதையேதான் ஒருமணி நேரமா…. சொல்லிட்டிருக்கே. இராவுகாலம் வர்றதுக்கு முன்னாடி நல்ல நேரத்துல பண்ண வேணாமாப்பா…” என அரற்றிக்கொண்டிருந்தார் அந்த பெரியவர்.

வேலு, “என்ன பண்றது பெரியப்பா…….?  இங்க இருக்க சுத்துப்பட்டு ஊருக்கெல்லாம் அவர் ஒருத்தர்தான்…. இன்னைக்கு மட்டும் இதுமாதிரி, மூனு இடத்துல காதுகுத்து இருக்காம்….”.

“ம்ம்… இன்னைக்கு அந்தாள் காட்டுல மழைதான்.  சரி சரி… போய் ஆகவேண்டியத பாருங்க…” என அந்த பெரியவர் நகர்ந்துவிட்டார்.

செல்வதுரை, ஏன்டி காலையில உன்னை போனை சார்ஜ் போட கொடுத்தா என்ன பண்ணி வச்சுருக்க…? என்றார் கோவிலுக்குள் நின்றிருந்த மனைவியிடம்  வந்து நின்று.

மீனா, ஏங்க…? சார்ஜ் போட்டனே.  நீங்களும்தான பார்த்தீங்க… உங்க கண்ணெதிர்லதான போட்டேன்.  என்னாச்சு….?

செல்வதுரை, என்ன நொன்னாச்சு….?  ஒயர சொருவிட்டு ஸ்விட்ச ஆன் பண்ணாம விட்டிருக்கே போல.  உன்னை நம்பி நானும் அப்படியே வாங்கி பாக்கெட்ல போட்டுகிட்டேன்.  இங்க பாரு.  இப்பதான் பார்க்கிறேன்.  போன்ல சார்ஜ் பத்து பர்சென்ட்தான் இருக்கு”. என்றார் மீனாவை முறைத்துக்கொண்டே. மீனாவை.

மீனா, “அப்ப நீங்களே போட்டிருக்க வேண்டியதுதான.  என்ன ஏன் முறைக்கிறீங்க…?”

செல்வதுரை, “அங்க லேடீஸ் எல்லாம் உட்கார்ந்திருந்தாங்கன்னுதான உன்ன போட சொன்னேன்…”

மீனா, “ம்ப்ச்… சும்மாயிருங்க நிலைமை புரியாம.  நானே இங்க டென்ஷன்ல நின்னிட்டுருக்கேன்.  நீங்க வேற விவரம் புரியாம…”

செல்வதுரை, “ஏன் என்னாச்சு…?  என்ன டென்ஷன்…?”

மீனா, “பாப்பாக்கு சீர் செய்றதுக்காக… வாங்கின நகையெல்லாம் வீட்டுலயே வச்சுட்டு வந்துட்டேன்.  இப்பதான் தட்டுவரிசைக்கு எல்லாம் எடுத்து வைக்கும்போது பார்த்தா… நகைய காணோம்.  வீட்ல இருந்து எடுக்காமயே வந்திருக்கேன்….. போல”.

செல்வதுரை, “என்ன…டி… சொல்ற….?  உன்னை அங்கேயே எடுத்துட்டியான்னு…, எத்தனை முறை கேட்டேன்?  நல்லா மண்டைய…. மண்டைய… உருட்டிட்டு… இப்ப வந்து கோழி திருடுனவ மாதிரி முழிச்சிட்டு நிக்கற…..” என கத்த ஆரம்பித்துவிட்டார்.

ஐ…யோ.. இந்த மனுஷனை… என பல்லைக் கடித்த மீனா, “கொஞ்சம் மெதுவா… பேசுங்க.  கத்தாதீங்க….  யார் காதுலயாவது விழ போவுது.  உங்க தங்கச்சி வீட்டு சனம் எல்லாம் இங்கதான் இருக்காங்க.  யாருக்காவது தெரிஞ்சது அவ்வளவுதான்…” என கணவனை அடக்க முயன்றார்.

செல்வதுரை, “ம்ம்… இதுக்கு மட்டும் வக்கணையா… பேசு.  எது முக்கியமோ அதை மறந்துட்டு வந்திருக்க… ம்ப்ச்…. இப்ப என்ன பண்றது…?” என தலையில் கை வைத்துக்கொண்டார்.

“எனக்கும் அதா…ன் ஒன்னும் புரியலைங்க…?”

“இதை யார்கிட்டயாவது சொன்னா நம்பகூட மாட்டாங்க.  ஒரே ஒரு தாய்மாமன்.  இப்படி வெறுங்கைய வீசிட்டு வந்திருக்கியா…ன்னு, எல்லார் முன்னாடியும், சபையில நிக்க வச்சி மானத்தை வாங்குவாங்க….” என தலையில் அடித்துக்கொண்டார்.

மீனா, “ஒன்னு சொன்னா கத்த மாட்டீங்களே…?  சத்த யோசிக்காம ஒரு எட்டு வீட்டுக்கு போயிட்டு வந்துடறீங்களா….?”

“அப்படியே ஒன்னு வச்சேன்னா…. தெரியும்.  ஏன்டி… கொஞ்சமாவது மூளையிருக்கா…?  எந்த நேரத்துல…. என்ன பேசிட்டிருக்க…?.  இன்னும் கொஞ்ச நேரத்துல பிள்ளைக்கு மொட்டை அடிக்க ஆரம்பிச்சிடுவாங்க.  நேரம் காலம் தெரியாம…. பேசிட்டிருக்கா….” என கோவமாக எகிறினார்.

மீனா, “கொஞ்சம் நான் சொல்றத கோவப்படாம பொறுமையா கேளுங்க… தாய்மாமன் சீர்னு மத்தது எல்லாம் தட்டு தட்டா… வச்சாலும்…..  நகைய வைக்காம இருந்தா அது நல்லாயிருக்காதுங்க.  நாலு பேர் எதிர்ல செஞ்சாதான…. நமக்கும் கௌரவம்”.

செல்வதுரை, ம்ம்… எல்லாம்… இப்ப சொல்லு.  வீட்லயே… எத்தனை தடவை கேட்டேன்?  எல்லாத்தையும் எடுத்துட்டியான்னு….?

மீனா, “புரிஞ்சுக்காம பேசாதீங்க.  நான் என்ன வேணும்னேவா பண்ணேன்.  மறந்துட்டேன்…  தப்புதான்…  தெரியாம நடந்துடுச்சு….  அதுக்காக அதையே சொல்லிட்டிருப்பீங்களா….?”  என கண்ணை கசக்கினார்.

செல்வதுரை, “என்னை சொல்லிட்டு, நீ ஏன்டி… கண்ணை கசக்கிட்டு நிற்கிறவ…?  யாராவது பாரத்து… என்ன… ஏதுன்னு… விசாரிக்கவா…?”

மீனா, “ம்ப்ச்… பிள்ளைக்கு காதுல போடற கம்மல் முதல்கொண்டு அந்த டப்பாலதான் வச்சிருக்கேன்.  பொட்டில வச்சு பூட்டி பத்திரமா வச்சவ, கையில வச்சிருந்தா… தொலைச்சுடுவோம்னு, போகும்போது கடைசியா எடுத்துக்கலாம்னு இருந்தேன்”.

“கோயிலுக்கு கிளம்பும்போது இருந்த அலமலப்புல சுத்தமா மறந்துட்டேன்.  ஒரு எட்டு போயிட்டு வந்துடுங்களேன்….  நீங்க வர வரைக்கும், நான் இங்க ஏதாவது சொல்லி சமாளிசுக்கறேன்…. என் ராசா இல்ல…” என கணவனின் கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்து கொஞ்சி… விழிகளால் கெஞ்சினார்…

“ம்ப்ச்… கோயில்ல நின்னுட்டு என்னடி பண்றவ…” என மனைவியின் கையை இறக்கி விட்டார்.  அவருக்கே புரிந்தது மனைவியின் நிலைமை.  முகம் முழுவதும் வேர்த்து வழிந்து பயத்துடன் நின்றிருந்தார் மீனா.

செல்வதுரையின் மனதில் மீனாவை திட்டி மட்டும் பயன் இல்லை.  தானும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என நினைத்தவர்  “மாப்பிள்ளைக் கெல்லாம் தெரிஞ்சா என்ன சொல்லுவாங்கன்னே தெரியலையே….” என பதட்டப்பட்டார்.

மீனா, “அவங்களுக்கு எல்லாம் தெரிய வேணாங்க.  தெரிஞ்சா போக விட மாட்டாங்க.  எல்லார் முன்னாலயும் சபையில… செஞ்சாதான் உங்க தங்கச்சிக்கும் மரியாதையா…யிருக்கும்.  இல்லைனா……… காலத்துக்கும் இது ஒரு பேச்சா… போயிடும்.  அவங்க மாமியாரே நம்மள ஒரு வழி பண்ணிடுவாங்க…..”.

மீனா சொல்வதும் செல்வதுரைக்கு சரியாக தோன்றியது.  இங்கிருந்து வேல்முருகனின் வீட்டிற்கு போய் வருவதற்கு எப்படியும் நாப்பது நிமிடத்திற்கு மேலேயே ஆகும்.  என்னதான் வேகமாக சென்று வந்தாலும் போகவர என முக்கால் மணிநேரமாவது பிடிக்கும்.  ரோடு வேறு சரியில்லாமல் இருந்தது.  மண்ரோடுதான்.  அதுவும்… அது மழைகாலமாதலால் எங்கும் பள்ளமும் படுகுழியுமாக இருந்தது வரும்போதே…

எப்படியும் மொட்டை போடுறவர் இன்னும் வரவில்லை.  அதற்குள் சென்று வந்துவிடலாமா… என யோசிக்க ஆரம்பித்தார்.

வீட்டிற்கு போய் எடுத்து வந்துவிடலாம் என முடிவு செய்த செல்வதுரை, “சரி… நான் போயிட்டு வந்துடறேன்.  பொட்டி சாவிய கொண்டா…” என கேட்டு வாங்கியவர்… நகையை எங்கு வைத்திருக்கிறார் மீனா என்ற விவரத்தையும் கேட்டறிந்து வேகமாக புறப்பட்டு விட்டார்.

போவதற்கு முன் நான் வரவரைக்கும் ஏதாவது சொல்லி சமாளி.  முடிஞ்சளவு சீக்கிரம் வந்துடறேன் என மீனாவிடம் சொல்லிவிட்டு காரை எடுத்துகொண்டு… வேல்முருகனின் வீட்டிற்கு வேகமாக கிளம்பியிருந்தார்.

வீட்டில் சில உறவினர்கள் தங்கியிருந்ததால், வீட்டு சாவி கேட்டு வேல்முருகனையோ….. ரோகிணியையோ….. பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

அவர் நினைத்தது போலவே வெகு சீக்கிரம் வீட்டை அடைந்து, எடுக்க வேண்டிய தங்க நகைகளையும் எடுத்து புறப்பட்டுவிட்டார் வீட்டிலிருந்து.  காரை வேகமாக ஓட்டி வந்ததில், அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே  வீட்டை அடைந்திருந்தார்.

பெட்டியை திறந்து நகையை எடுத்து பத்திரப்படுத்தியவர், திரும்ப காரை எடுத்துகொண்டு சிறிது தூரம்கூட வந்திருக்க மாட்டார்… வழியில் இருந்த பள்ளத்தின் சகதியில் கார் சிக்கிகொண்டு, டயர் பஞ்சராகியிருந்தது.

செல்வதுரைக்கு பதட்டமாகிவிட்டது.  கார் நின்ற இடத்தை சுற்றி வெறும் வயல்வெளிகள்தான்.  ஊருக்குள் இருந்திருந்தாலாவது யாரையாவது பிடித்து, ஏதாவது டூவீலரிலாவது கேட்டு போக முயன்றிருக்கலாம்.  இப்படி ஒருத்தரும் இல்லாத நடுகாட்டில் மாட்டியது போல ஊருக்கு வெளியே உள்ள வயில்வெளிகளுக்கு நடுவே வந்து மாட்டிக் கொண்டோமே என பதைபதைத்து நின்றார்.

அங்கேயே நின்று யாராவது வருகிறார்களா… உதவி கேட்கலாம் என சாலையின் இரு பக்கமும் திரும்பி திரும்பி டென்ஷனுடன் பார்த்திருந்தார்.

நேரம்தான் ஆனதே தவிர, யாரும் வந்தபாடில்லை.  ரோடே வெறிச்சோடியிருந்தது.  அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.  ஒற்றையாளால் செய்யக்கூடிய காரியம் அல்ல அது.  எப்படியும் மூன்று நான்கு நபர்களாவது வேண்டும்.  காரை சேற்றில் சிக்கியிருந்த பள்ளத்தில் இருந்து தூக்கி தள்ளி மேட்டிற்கு கொண்டு வருவதற்கு.

இப்படி பள்ளத்தில் சிக்கியிருந்த காரை எழும்ப முடியாமல் தனியாளாக தத்தளித்து கொண்டிருந்தார்.  மழையின் ஈரத்தில், சேரில் நன்றாக மாட்டி சிக்கிக்கொண்டிருந்தது வண்டி.  போன் ஏற்கனவே சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.

காரை அப்படியே விட்டு நடந்து செல்லவும் மனமில்லை.  யாராவது அந்த வழியில் வருவார்களா….? என காத்து நின்றார்.  எல்லாம் இவளை சொல்லனும்…, என மீனாவை மனதில் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்.

உடல் அலைச்சல், காலையில் இருந்து ஏதும் சாப்பிடாமல் இருந்தது…, என எல்லாம் சேர்ந்து அவரை உக்கிரப்படுத்தி கொண்டிருந்தது.

அங்கு கோயிலில் மீனாவோ இவரை எதிர்பார்த்து வாயிலிலேயே நின்றிருந்தார்.  எங்கே போன் செய்தால்… அதற்கும் திட்டுவாரோ என பயமாக இருந்தது.  அதனால் போனும் செய்யவில்லை.

ரோகிணி, அண்ணி…. அண்ணன் எங்க….? அங்க எல்லாரும் அண்ணன கூப்பிடுறாங்க…… இங்க என்ன பண்றீங்க…?  அண்ணன கூட்டிட்டு வாங்க…”

……………….

“என்ன ………ண்ணி?  ஒன்னும் பேசாம இருக்கீங்க…………. அங்க பாருங்க…… எல்லாரும் தாய்மாமாவ கூப்பிடுன்னு சத்தம் போட்டுட்டு இருக்காங்க….” என்று வந்து நின்றாள் ரோகிணி மீனாவிடம்.

மீனா, “அ…..து உங்கண்ணன்………… உங்க வீடு வரைக்கும் போயிருக்காங்க….. ரோகிணி….”.

“என்ன சொல்றீங்க….. ண்ணி…..?  இந்நேரத்துக்கு எதுக்கு அண்ணன் வீட்டுக்கு போச்சு……?”

“நாந்தான் அனுப்பி வச்சேன்.  பிள்ளைக்கு சீர் செய்யறதுக்காக…… தங்கத்துல வளையலு…. செயின்னு…. ஜிமிக்கி எல்லாம் எடுத்து வந்தோமில்ல.  அதை மறந்து வீட்டுலேயே வச்சிட்டு வந்துட்டேன் ரோகிணி.  அதான் அதை எடுத்துட்டு வர சொல்லி, உங்கண்ணன அனுப்பி வச்சேன்….”

“என்ன காரியம்….. செஞ்சிட்டீங்க……ண்ணி.  அண்ணன அனுப்புறதுக்கு முன்ன என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்க கூடாதா…?  வேற யாரையாவது அனுப்பி எடுத்துட்டு வர சொல்லியிருக்கலாமில்ல….”

மீனா, “இல்ல…. ரோகிணி. அந்த பொட்டில என்னோட நகை….. பணமெல்லாமும் சேர்த்து வச்சிருக்கேன்.  அதான் வேற யாரையும் நம்பிக்கையா அனுப்ப பயமாயிருந்தது”.

“என்ன அண்ணி…… இப்படி பண்ணிட்டீங்க…?  அச்சோ… இப்ப எங்க வீட்டு மனுஷங்களுக்கு, என்ன பதில் சொல்லுவேன்.. நான்…? என தலையில் கைவைத்து நின்றுவிட்டார் பயத்தில் ரோகிணி.

வேலு, ஹேய்… அங்க எல்லாரும் கத்திட்டிருக்கோம். இங்க வந்து கூலா.. கதை பேசிட்டு நின்னுட்டிருக்க…..” என மனைவியைப் பார்த்து கத்தி கொண்டே அவர்களை நெருங்கினார் வேல்முருகன்.

ரோகிணி, “இல்லங்க…… அது…..”

வேலு, “போ…. அங்க…. எல்லாரும் கத்திட்டு இருக்காங்க இல்ல…  பாப்பா வேற அழுதுட்டு இருக்கு… இங்க வந்து நின்னிட்டிருக்க…” என அதட்டினார்.

பாப்பா அழுகிறது என்றவுடனே ரோகிணி குழந்தையை கவனிக்க கோவிலுக்குள் சென்றுவிட்டார்.

வேலு, “நீ ஏன்… ம்மா…… கோவிலுக்கு வெளிய, இங்க தனியா…. நின்னுட்டிருக்க……?  மச்சான எங்க காணோம்……?”

மீனா, “அவரு…….க்காக……தான்……  நின்னிட்டிருக்கேன் ….ண்ணே.  இப்ப வந்திடுவாரு…..”

வேலு, “எங்க……. எங்க……… போனார்…………?”

மீனா, “வீடு வரைக்கும் அனுப்பியிருக்கேன்.  …ண்ணே”.

வேல், “வீடு வரைக்குமா….? எதுக்கு…?  எதுக்குமா…?”

மீனா, “இங்க….. தான், நம்ம வீட்டுக்குதான்………… அனுப்பியிருக்கேன் …..ண்ணே”.

வேலு, “ஏன்… ம்மா….?  இப்ப எதுக்காக   வீட்டுக்கு போ…னார்..?”

“அ…து வந்து…., பாப்பா…..க்கு எடுத்துட்டு வந்த நகைய, இங்க நம்ம வீட்டுலே மறந்து வச்சிட்டு வந்துட்டேன் ண்ணே….  அதுக்காக….தான்… அத எடுத்து…ட்டு வர சொல்லி அனுப்பியிருக்கேன்”.

“என்ன…ம்மா…… நீ….. எந்த நேரத்துல… என்ன பண்ணனும்னு… தெரியாம? நான் இங்கதான… இருந்தேன்.  என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுருக்கலாமில்ல?  அப்படி போகனும்னா… நீ நம்ம டிரைவரை அழைச்சிட்டு போய் எடுத்துட்டு வந்திருக்கலாமில்ல.  மச்சான் இங்க இருக்கனும்னு தெரியாதா….?”

மீனா, “இ…தோ… இப்ப வந்துடுவாரு ண்ணே….  எப்படியும் வர.. நேரந்தான்…. போய் அரைமணி நேரத்துக்கு மேல ஆகுது.  இப்ப வந்துடுவாரு ண்ணே”.

வேல்முருகன் செல்வதுரைக்கு போனில் அழைத்து பார்த்தார்.  அவரது போன் ஸ்விட்ச் ஆஃப்… என வந்தது.

அதற்குள் வேல்முருகனைத் தேடி அவர்களது உறவினர்கள் வந்து சூழ்ந்து கொண்டனர்.

“என்னப்பா…. வேலு நேரம் ஆகுது.  அதான் மொட்டை அடிக்கிறவர் வந்துட்டாரே… இன்னும் இங்கேயே நின்னுட்டுருந்தா… என்ன சமாச்சாரம்…..?.  டைம் ஆகுது.  நல்ல நேரம் முடியறது….குள்ள, பிள்ளைக்கு முடியிறக்கி காதுகுத்தனும் ப்பா……” என்றார் கும்பலில் இருந்த ஒருவர்.

வேலு, “அ…து மச்சான்… வீடு வரைக்கும் போயிருக்காராம் மாமா…”

“என்னய்யா… நீங்க…. ஆளாளுக்கு ஏதாவது காரணம் சொல்லி இழுத்துட்டே… இருக்கீங்க.  போன போடு.  உன் மச்சானுக்கு…”

“வேலு, பண்ணிட்டேன் சித்தப்பா… போன் ஸ்விட்ச் ஆப்னு வருது.

“கிழிஞ்சது போ….” என சலித்துகொண்டார் வேல்முருகனின் பெரியப்பா.

அதற்குள் இன்னொருத்தர் இடையில் புகுந்து…….., சரி… அவர் பாட்டுக்கும் வரட்டுமே…யா… அதுக்குள்ள நாம பிள்ளைக்கு மொட்டையாவது அடிச்சுடுவமே. நம்ம பானு புருஷனும், உனக்கு மச்சான் முறைதான…ப்பா. அவர் மடியில உட்கார வச்சி மொட்டை அடி….ச்சுடலாம்.  அதுக்குள்ள தாய்மாமன் வந்துட்டாருன்னா…… அவர் மடியில உட்கார வச்சி காது குத்திடலாம்.  நேரம் ஆவுதுய்யா…..” என பரபரத்தார்.

நேரம் கடந்துகொண்டிருப்பதை எண்ணி வேல்முருகனுக்கும் ஏதும் மறுத்து சொல்ல முடியவில்லை.  “சரிம்மா…… மச்சானுக்கு போன் பண்ணுவோம்… நீ வா…… உள்ள….” என மீனாவையும் அழைத்துகொண்டு கோவிலுக்குள் சென்றார்.

மீனாவுக்கு செல்வதுரையை நினைத்து பயம் வந்தது மனதில்.  மனுஷன் வந்து என்ன திட்ட போறாரோ…… என பயந்துகொண்டே நின்றிருந்தார்.  அவருக்கு அங்கு நடக்கும் விசேஷத்தில் மனது பதியவில்லை.  கணவன் சீக்கிரம் வந்துவிடவேண்டுமே… என்ற வேண்டுதலுடன் வாயிலையே பார்த்து நின்று கொண்டிருந்தார்.

அங்கு செல்வதுரையோ டென்ஷனாக நின்றுகொண்டிருந்தார்.  அவரும் யாராவது…… அந்த வழியாக வரமாட்டார்களா………… என காத்திருந்ததுதான் மிச்சம்.  ஒருவரும் வரவில்லை.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!