Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

வரம் 💘 20

அத்தியாயம் – 20

 

“தயவு செஞ்சு நீ கிளம்பிரு அத்த!! அப்பறம் கோவத்துல நான் ஏதும் பேசிப்புட போறேன்” என முயன்று கோபத்தை உள்ளடக்கிய குரலில் மலர் இளவரசியிடம் எகிறிக் கொண்டிருக்க, 

 



Advertisement

இளவரசியோ குற்றவுணர்ச்சியுடன் அந்த கண்ணாடித் தடுப்பின் வழியே காய்ந்த சருகாய் படுத்துக் கிடக்கும் தன் மகளைத் தான் பார்த்தபடி லேசாய் விசும்பிக் கொண்டிருந்தார்.

 

அதில் மேலும் கோபம் கொண்ட மலர், “இந்தா அத்த!! பெத்த புள்ளை ராவெல்லாம் காய்ச்சல்ல துடிச்சிட்டு இருக்கது கூடத் தெரியாம நீயும் உன் வீட்டுக்காரும் உங்க கோவம் தான் பெருசுன்னு திருப்பிட்டு போனீங்க தான?? அப்பறம் இப்போ மட்டும் எதுக்கு வந்து இங்க ஒப்பாரி வச்சிட்டு இருக்க?? நீங்க கோபப்பட்டு கண்டுக்கலைனா அவளைப் பார்க்க ஆள் இல்லைன்னு நினைச்சியா??? நான் இருக்கேன் அவளுக்கு.. நான் பார்த்துக்குவேன்.. நீ முதல்ல கிளம்பு” என மலர் முறைப்புடன் கூறவும், 

Advertisement

 

Advertisement

“சத்தியமா அவளுக்கு காய்ச்சல்ன்னு தெரியாது மலர்!! அவ காதலிச்சான்னு தெரிஞ்சது அதிர்ச்சி ஒரு பக்கம்.. அது என்னைத் தவிர எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கேன்னு கோபம் ஒரு பக்கம்னு இருந்துட்டேன்.. அவ பேச வந்தப்போ கூட இனி பேசாதன்னு திட்டி அனுப்பிட்டேன்.. பிள்ளை என்னவெல்லாம் நினைச்சு துடிச்சுச்சோ!!” என யோசிக்காமல் தான் செய்த தவறை எண்ணி அவர் இப்போது கண்ணீர் சிந்த, 

 

அதைப் பார்த்து பரிதாபப்படுவதற்கு பதில் கோபம் தான் இன்னும் அதிகரித்தது மலருக்கு.

Advertisement

 

“உங்க வீட்டுக்காரு அடிச்சு வச்ச அடிக்கு காய்ச்சல் வராம என்ன வரும்?? அவ கன்னத்தை பார்த்தீங்களா?? பன்னு மாதிரி எப்படி வீங்கிப் போய் இருக்குன்னு.. அப்படி என்ன வீம்பும் வீராப்பும் உங்க ரெண்டு பேருக்கும்?? புள்ளை வாழ்க்கையைத் தவிர உங்க வறட்டு கௌரவம் தான் பெருசா போச்சோ??? மாமா அப்படித்தான்னு கூட மனசைத் தேத்திக்குவேன்த்தை.. ஆனா நீ பண்ண பார்த்தியா?? அதை என்னால ஏத்துக்கவே முடியாது!!!” என இன்னும் ஆத்திரம் தீராமல் மலர் வெடித்துக் கொண்டே இருந்தாள்.

 

“அவ பாவம் த்தை!! அந்த அண்ணேன் மேல பிடித்தம் வந்ததை கூட உங்களை நினைச்சு மனசுக்குள்ளேயே போட்டு மருகிகிட்டு கிடந்தா இத்தனை நாளும்.. உங்களுக்கு துரோகம் செய்யுறோமோன்னு உங்களுக்காக யோசிச்சு யோசிச்சே அவளையும் கஷ்டப்படுத்தி அந்த அண்ணனையும் போட்டு வாட்டி எடுத்துட்டா இவ!! அவளும் உங்களுக்காக அவரை மறந்துடலாம்னு என்னென்னமோ பண்ணி பார்த்தா!!! ஆனா முடியலையே.. சட்டையை மாத்துற மாதிரி மனசை மாத்துறது அவ்ளோ சுலபம் இல்லையே த்தை!! உங்களை யோசிச்ச புள்ளையை நீங்க யோசிக்காம விட்டு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க” என மலர் வந்தனாவின் மனநிலையை இளவரசிக்கு புரியவைக்க, 

 

இளவரசிக்கு முன்பே தவறிழைத்து விட்டோமா என லேசாய் இருந்த குற்ற உணர்ச்சி இப்போது அதிகரித்தது.

 

நேற்று அங்கிருந்து கிளம்பி வந்த பின் வந்தனா தன்னிடம் பேச முயன்ற போது, கோபம் கொண்டு அவளை வார்த்தைகளில் வஞ்சித்திராமல் பொறுமையாய் அமர்ந்து அவளின் பேச்சிற்கு செவி மடுத்திருக்க வேண்டுமோ!!?? என காலம் கடந்து வருந்தினார் அவர்.

 

“அந்த அண்ணே தங்கம் அத்த!! நீ எந்த ஜில்லாவுல தேடினாலும் உன் மவளை அவர் தாங்குற மாதிரி ஒரு மனுசனை நீ கண்டேபிடிக்க முடியாது.. இதோ!! நேத்து உன் வீட்டுக்காரர் அந்தப் பேச்சு பேசி அவரை அவமானப் படுத்தியும் கூட, அவர் தான் இன்னைக்கு காலையில சங்கீ அக்கா கிட்ட நம்பரை வாங்கி எனக்கு போனைப் போட்டு, ‘வேலையா ஊருக்கு கிளம்பிட்டேன்.. ஆனா வந்தனாக்கு ஏதோ கஷ்டம்ன்னு மனசு படபடன்னு இருக்கு. போய் அவளை பார்த்துட்டு வரியான்னு’ என்னை அனுப்பி வச்சாரு.. அவர் சொல்லி நான் மட்டும் வராம இருந்திருந்தா இவளோட கதி என்ன இப்போ??” என அங்கே மயக்கத்தில் கிடந்த தோழியைச் சுட்டிக்காட்டி அவள் ஆற்றாமையுடன் கேட்கவும், 

 

இளவரசியின் தலை தன்னாலே கவிழ்ந்தது.

 

“அவளோட ஒரே வீட்டுல இருக்க உங்களுக்குத் தெரியாத அவளோட நிலை.. எங்கேயோ மைல் கணக்குல தள்ளி இருக்க அந்த மனுசனுக்கு தெரிஞ்சிருக்கு.. அப்படிப்பட்ட மனுசனை வேணாம்னு நீயும் உன் புருசனும் சலம்பலை கூட்டிட்டு திரியுதிங்க.. உனக்கும் என்ன உன்னை மாதிரியே ஒரு ஆளுக்கு உன் மவ கழுத்தை நீட்டி காலம் பூரா கஷ்டப்படனுமா?? ” என மலர் விடாமல் அவரைப் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டிருக்க, 

 

சரியாக அதே நேரம் பதட்டத்துடன் அங்கே வந்தார் நாட்டரசன்.

 

“என்ன?? என்னாச்சு?? எதுக்கு அவளை ஆஸ்பத்திரியில சேத்துருக்கீங்க??” என என்னவோ ஏதோவென்று அவர் பதறிப் போய் கேட்க, 

 

மலரோ அவருக்கு பதிலளிக்காமல், அவரைத் தான் ஆராய்ச்சியாகப் பார்த்திருந்தாள்.

 

“ஏய் இளவரசி!! உன்கிட்ட தான கேக்குறேன்?? வெளியே போனவனுக்கு போனைப் போட்டு புள்ளையை ஆஸ்பத்திரியில சேர்த்திருக்குன்னு மட்டும் மொட்டையா சொல்லிட்டு வச்சிட்ட.. என்ன ஆச்சுன்னு சொல்லித் தொலையேன்!!” என எங்கே மகள் தவறான முடிவை ஏதும் தேடிக் கொண்டாளோ என பயத்தில் அவரின் இதயத்துடிப்பு வெளியே வரை கேட்க, 

 

அவரை எண்ணி மலருக்கு ஆத்திரமாய் வந்தது.

 

“ஹலோ சார்!! இது ஹாஸ்பிடல்.. இங்க இப்படி எல்லாம் சத்தம் போடக்கூடாது.. பேஷண்ட்க்கு டிஸ்டர்ப் ஆகும்” என ஒரு செவிலியப் பெண் வந்து கண்டித்து விட்டுப் போக, 

 

அந்தப் பெண்ணையே நிறுத்தி, “இந்தாம்மா பொண்ணு!! என் பொண்ணுக்கு என்னாச்சு??” என விசாரித்தார் அவர்.

 

இளவரசியுடன் பேசிக்கொண்டிருந்ததால், வந்தனாவை பற்றித் தான் கேட்கிறார் என யூகித்த அந்த செவிலியரோ, 

 

“ஏன் சார் பொண்ணுன்னு சொல்றீங்க நைட்டெல்லாம் அந்த பொண்ணு அவ்ளோ ஃபீவர்ல துடிச்சிட்டு இருந்திருக்கு.. அது கூட உங்க ரெண்டு பேருக்கும் தெரியலையா?? அவ்ளோ ஹை ஃபீவர்.. இப்படியே இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா ஃபிட்ஸ் வந்திருக்கும் அவங்களுக்கு.. இவளோ கேர்லெஸ்ஸாவா இருப்பீங்க?? அதென்ன அந்த பொண்ணு கன்னத்துல அப்படி வீங்கிப் போயிருக்குன்னு கேட்டா செவத்துல மோதிட்டதா இந்தம்மா சொல்றாங்க.. ஆனா அது நல்லா யாரோ அடிச்சா மாதிரி இருக்கு.. அதுனால தான் இந்த ஃபீவரே.. பிள்ளையைப் பெத்தா மட்டும் போதாது சார்.. பத்திரமா பார்த்துக்கணும்.. அவங்க ரொம்பவே வீக்கா இருக்காங்க!! டூ டேய்ஸ் ஆச்சும் இங்க அட்மிட் பண்ணி தான் இருக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. நீங்க இப்படி கண்டுக்காம இருக்கதுக்கு அந்தப்பொண்ணு சரியாகுற வரைக்கும் இங்கேயே அட்மிட் பண்ணிருங்க.. நாங்களே நல்லா பார்த்துப்போம்” என இப்படி இருக்கின்றனரே என ஆதங்கத்துடன் அந்த செவிலியர் அவர்களுக்கு வார்த்தையால் குட்டு வைத்து விட்டுச் செல்ல,

 

நாட்டரசன் முதன்முறை ஒருவர் தன்னை திட்டுவதை அமைதியாய் கேட்டபடி நிற்பதை மலர் வியப்புடன் பார்த்திருந்தாள்.

 

“என்ன மாமா?? உங்களை விட வயசுல சின்னபொண்ணு உங்களை திட்டிட்டு போகுது.. கம்முன்னு இருக்கீங்க.. இங்கேயும் உங்க ஆட்டத்தை எடுத்துவிட வேண்டிதான??” என அவள் நக்கல் வேறு பண்ண, 

 

அவளைத் திரும்பி முறைத்த நாட்டரசனுக்கு, தன்னால் தான் மகளுக்கு இந்த நிலையோ என்றெண்ணி வருத்தமாக இருந்தாலும், ‘இது அவளாக தேடிக் கொண்டது தானே?? அவளை யார் இடையில் வந்து அடி வாங்கச் சொன்னது??’ என பாழாய் போன புத்தி இடையில் வர, பெருமூச்சுடன் நிமிர்ந்தவர், 

 

“மலரு!! நீ உங்க வீட்டுக்குக் கிளம்பு!! இனி நாங்க பாத்துக்குறோம்.. உங்க வீட்டுல தேடுவாங்க” என அவளை அனுப்பி வைக்கப் பார்க்க, 

 

அவளா நகருவாள்?? அவரைப் போட்டு படுத்தி எடுத்து, அவரை அங்கிருந்து கிளம்ப வைத்த பின் தான் வாயை மூடினாள் மலர்

 

அவர் வெளியே கிளம்பிய பின், இன்னுமே கதவின் வழியில் தெரிந்த மகளைக் கண்டு கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த இளவரசியிடம் திரும்பிய மலர், 

 

“அவளுக்கு மாமன் பேசுனதை விட, நீ மூஞ்சியைத் திருப்பிட்டு போய் அவ மேல கோவப்பட்டதைத் தான் தாங்கிருக்க முடியாது த்த!!! பூனைக்குட்டி மாதிரி உன்னைச் சுத்திய வளர்ந்துட்டா தான?? அதான் அவளால இதை தாங்கிக்க முடிஞ்சிருக்காது.. அதான் எல்லாத்தையும் நினைச்சு மனசை அலட்டிகிட்டு, இதோ இப்போ இப்படி வந்து படுத்து கெடக்கா!!!” என மிகத் துல்லியமாக தோழியின் மனநிலையை மலர் விளக்க, 

 

‘இந்த சிறுபெண்ணிற்கு இருக்கும் புரிந்துணர்வும், நிதானமும் கூட நமக்கு இல்லாமல் போயிற்றே’ என தன்னைக் குறித்தே வெட்கிய இளவரசி, மேலும் தலைகுனிய, 

 

எப்பொழுதும் நிமிர்வாய் பார்த்துப் பழகிய அத்தையை இன்று இப்படி ஒரு நிலையில் காண சகிக்காத மலர், 

 

“சரி விடுத்த!!! அவ எழுந்ததும் பழசை போட்டு கிளராம நல்லபடியா பேசு.. எல்லாம் சரியா போவும்.. நீ வீட்டுக்கு போய் குளிச்சிட்டு, ஒழுங்கா சாப்பிட்டுட்டு, தெம்பா அவளுக்கும் சூடா கஞ்சி வச்சு கொண்டு வா!! அதுவரைக்கும் நான் பார்த்துக்கிறேன்” என மலர் அவரை சமாதானம் செய்ய, 

 

அவளை மட்டும் தனியே விட்டு நகரப் பிடிக்காமல் இளவரசி போக மறுக்க, 

 

“இந்தா நாசுக்கா சொன்னா உனக்குப் புரியாதா?? அங்க ஒரு மனுஷன் இவளுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு துடிச்சிட்டு இருக்காரு.. அவருக்கு போனைப் போட்டு உன் மவளை ஒருதடவை காட்டலைனா அந்த மனுஷன் மனசு அடங்காது.. அதுனால ஒழுங்கா நடையைக் கட்டு!!” என மலர் பட்டென விஷயத்தைப் போட்டே உடைத்து விட, 

 

அதைக்கேட்ட இளவரசிக்கு கோபம் வருவதற்கு பதில், நிம்மதி தான் மனதை நிறைத்தது.

 

வினய் மீது முன்பே அவருக்கு நல்ல அபிப்ராயம் தான் என்றாலும், காதல் என்று வருகையில் கொஞ்சம் தயங்கி இப்படி முட்டாள்தனமாக நடந்து கொண்ட பின், இப்போது புத்தி வந்து நல்ல முறையில் சிந்திக்கத் தொடங்கியிருக்க, மகளின் நலம் மீது வினய் எடுத்துக் கொள்ளும் அக்கறை, மேலும் அவனை பிடிக்கத் தான் வைத்தது.

 

‘ச்ச!! எவ்வளவு பொறுமை அந்தப்பையன்!! நிச்சயம் அவரோட தனு வாழ்க்கை நல்லா இருக்கும்’ என அவர் இப்போது முழுமனதாக நம்பினார்.

 

“எவ்ளோ தைரியம் இருந்தா இதை என்கிட்டயே சொல்லுவ நீ??” என பழைய இளவரசியாக மீண்டு மலரின் காதைத் திருகி அவர் கேட்க, 

 

“பின்ன நான் என்ன உங்க பொண்ணு மாதிரி தொடைநடுங்கியா?? நானெல்லாம் காதல் வந்ததும் மொதல்ல எங்க அப்பாகிட்ட போய் சொல்லிட்டு தான், லவ் பண்றவன் கிட்டயே சொல்லுவேன்!!” என மலர் கெத்தாய் சொல்ல, 

 

“சரியான வாலு!! சரி உங்க மாமா வெளியே தான் நிப்பாரு!! அவர் வரதுக்குள்ள அந்தத்தம்பிகிட்ட பேசிடு.. இல்லை இங்க வச்சும் கண்டபடி கத்திட்டு இருப்பாரு அவரு” என அவர் ஆலோசனை வழங்க,

 

“ப்பாஹ் பயங்கரமான முன்னேற்றம் தான் போ!!” என அவரை கேலி செய்து சிலாகித்த மலர், அவரோடு சேர்த்து நாட்டரசனையும் பேசிப்பேசி வீட்டிற்கு அனுப்பி வைத்தபின் வினய்க்கு அழைக்க, 

 

அங்கே அவன் அப்போது தான் மும்பை வந்து இறங்கியவன், இன்று இயக்குனர் விஸ்வஜித்துடன் ஏற்பாடாகியிருந்த சந்திப்புக்கு நொடிக்கொரு முறை கைபேசியை பார்த்துக் கொண்டே கிளம்பிக் கொண்டிருந்தான்.

 

அவனை ஏமாற்றாமல் மலரும் அழைத்து விட, 

 

“என்னம்மா?? ஆல் ஓகே தான?? வதனா நல்லாதான இருக்கா??” என எடுத்ததும் பரிதவிப்புடன் வந்து விழுந்த வினய்யின் கேள்வியில், மலரின் இதயம் இவர்கள் இருவரையும் எண்ணி பெருமூச்சொன்றை வெளியிட்டது.

 

அவனிடம் மிக பொறுமையாக வந்தனாவின் நிலை குறித்து அனைத்தையும் தெரிவித்த மலர், 

 

“நீங்க ஒன்னும் வெசனப்படாதீக அண்ணே!! இப்போ காச்சல் நல்லா கொறைஞ்சிருக்கு.. ஊசி போட்டதுக்கு நல்ல தூக்கத்துல தான் இருக்கா.. ஒன்னும் பயப்படத் தேவையில்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க… நான் கூடவே இருந்து பாத்துக்குறேன்.. நீங்க கவலைப்படாம போய் வேலையைப் பாருங்க” என அவனுக்கு தைரியம் அளிக்க, 

 

வினய்க்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

 

“நான் உன்னை அங்க தனியா விட்டுட்டு வந்து தப்பு பண்ணிட்டேனோ வதனா??” என மனதோடு அவளிடம் கேட்டுக்கொண்டவன், 

 

“சாரி ஏஞ்சல்!!!” என மெதுவாய் அவளிடம் மன்னிப்பு வேறு வேண்ட, 

 

அவனின் தவிப்பை உணர்ந்து கொண்டது போல், 

 

“அண்ணே!! இருங்க வீடியோ கால் வரேன்!! நீங்களே பாருங்க.. அப்போதான் உங்களால நிம்மதியா ஜோலியைப்(வேலை) பார்க்க முடியும்” என பட்டென அழைப்பைத் துண்டித்து விட்டு காணொளி இணைப்பில் வர, 

 

அவனும் தவிப்புடன் அழைப்பை ஏற்க, அவன் கண்களை நிறைத்தது வதனாவின் வாடிய வதனம்.

 

“வதனா!!!” என அவனின் மனதின் துடிப்பு அவளை அடைந்ததோ??? 

 

பெண்ணவளிடம் லேசாய் ஒரு முகச்சுழிப்பு.

 

இருவருக்கும் தனிமை அளிக்க வேண்டி மலர், வந்தனாவின் பக்கவாட்டுத் தோற்றம் தெரியுமாறு கைபேசியை பொருத்திவிட்டு அறையில் இருந்து வெளியேறி விட, 

 

வினய் பாஷைகள் மறந்து, வார்த்தைகள் தொலைத்து, மௌனமாய் அவளை மட்டுமே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான்.

 

“டேய் வதனா!!!” என ஆத்மார்த்தமாக அவன் அழைக்க,

 

மீண்டும் அவளிடம் மெல்லிய சலனம்.

 

ஆக, அவள் உணர்வின்றி படுத்திருக்கும் போது கூட, அவளின் உள்மனது அவனை உணர்கிறது, அதை அறிந்து கொண்டவனிடம் ஒரு வறட்சி புன்னகை.

 

“ஐ அம் சாரி ஏஞ்சல்!!! நான் உன்னை அங்க விட்டிருக்கக் கூடாதோன்னு இப்போ தோணுது!! தப்பு பண்ணிட்டேனோ டா??” என அவள் பேசமாட்டாள் என அறிந்தும் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான் அந்த காதல் கிறுக்கன்.

 

“நம்ம நல்லதுக்கு தான் டா இதெல்லாம்.. இன்னும் கொஞ்ச நாள் இந்தப் பிரிவு நமக்குத் தேவை வதனா.. இந்த கொஞ்ச காலம் உங்க அப்பா நம்மளை ஏத்துக்குறதுக்கு மட்டுமே இல்லை!!! உன்னை நீ முழுசா உணரனும் வதனா.. இன்னுமே உன் மனசுல, குழப்பம், பயம், தயக்கம் இது எல்லாமே இருக்குன்னு எனக்குத் தெரியும்.. இந்த சின்னப் பிரிவு உன்னை உனக்கே உணர்த்தும்.. அப்போ உன் மனசுல மத்ததெல்லாம் மேகம் போல விலகி, நம்ம காதல் மட்டுமே அந்த வானம் போல நிலைச்சு நிக்கும்.. அப்போ நம்ம சேர்ந்தா தானே சரியா இருக்கும் வதனா? சரி தானடா?? ” என கேட்டுக் கொண்டவன். தொடர்ந்து, 

 

“எனக்காக!! ம்ஹும் நமக்காக இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நாள் பொறுத்துக்கோ.. அதுக்குள்ள எல்லாம் சரியாகும்!! சரியாக்கி காட்டுவேன் உன் வினய்!!” என அவளுக்கு உறுதியளிக்க, 

 

வந்தனா அவனின் குரல் கேட்ட நிம்மதியில் இப்போது ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டதை அவளின் சீரான மூச்சுக்காற்று உறுதிப்படுத்த, வினய்யிடம் சோபையான புன்னகை ஒன்று அரும்பியது.

 

“லவ் யூ வதனா!!!” என கரகரத்த குரலில் அவன் தன் காதலை தெரிவிக்க, 

 

தூக்கத்தில் கூட அவனின் காதலை உணர்ந்ததைப் போல் அவளிடம் இளநகை ஒன்று மலர, அதுவே அவன் ஜீவனை உயிர்ப்பிக்க போதுமனாதாய் அமைந்தது.

 

கைபேசியில் தெரிந்த அவளின் பிம்பத்திற்கு தன் முதல் முத்தத்தை வழங்கிய வினய், 

 

“டேக் கேர் வதனா!! நான் இன்னைக்கு போயே ஆகணும்.. ஆல்ரெடி ரொம்ப லேட்!!! பாய் டா!!” என அவன் மீண்டும் ஒரு முறை அவளை கண்களில் நிரப்பிக் கொண்டு அழைப்பை துண்டித்துவிட்டு, மலருக்கு நன்றி தெரிவித்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பியவன்,

 

வந்தனாவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தனக்குத் தெரிவிக்குமாறும் கூறிவிட்டு, முயன்று தன் மனதை வேலை மீது செலுத்தியவன், அதில் வெற்றியும் கண்டு, நாளை துவங்கப் போகும் படப்பிடிப்புக்கு எப்படிப்பட்ட அலங்காரம் தேவை என்பது போன்ற விஷயங்களை விவாதிக்க விஸ்வஜித்தை சந்திக்கக் கிளம்பியிருந்தான்.

 

 

ஆழ்நிலையில் கூட வந்தனாவால் வினய்யின் பேச்சுக்களை உணர முடிய, அதுவே அவளுள் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்க, விரைவிலேயே குணமடைந்தாள்.

 

அவள் மருத்துவமனையில் இருந்த இரண்டு நாளும், நாட்டரசன் தூரத்தில் நின்றே அவளை முறைத்துப் பார்த்து விட்டு சென்றுவிட, இளவரசி அவள் அருகிலே இருந்து அவளுக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்தாலும், தான் செய்த தவறினால் உண்டான குற்றவுணர்ச்சியில் அவளிடம் பேசாமலே இருக்க, வந்தனாவும் யாரிடமும் பேச முயற்சிக்கவில்லை. 

 

மலர் வரும் நேரம், அவளின் கைபேசி வழியாக வினய் தன்னைப் பார்ப்பதை வந்தனா உணர்ந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மலர் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் அளவாய் பதிலளித்திருப்பாள்.

 

அவள் தன்னைக் கண்டுகொண்டால் என வினயால் உணர முடிய, இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் கூட சுவாரசியமாய் இருப்பதாய் எண்ணி புன்னகைத்துக் கொண்டவன், அதையே தனது வழக்கமாக்கிக் கொண்டான்.

 

இரண்டு நாளில் அவள் ஓரளவிற்கு உடல் தேறி வீட்டிற்கு வந்ததுமே, நாட்டரசன் மீண்டும் தன் பல்லவியை ஆரம்பித்திருந்தார்.

 

“அவனை மறந்து விடு!! நான் பார்த்த மாப்பிள்ளையோடு தான் உன் திருமணம்” என்பது போல் அவர் பேசிக் கொண்டே போக, 

 

வந்தனா அதற்கு எவ்வித எதிர்வினையும் காட்டாமல் அமைதியாய் தன் அறையில் புகுந்து கொள்ள, 

 

அதற்கும் குதி குதியென குதித்தார் அந்த வறட்டு கௌரவத்தின் கொள்கை பரப்புச் செயலாளரான நாட்டரசன்.

 

“என்ன கொழுப்பு பார்த்தியா?? இத்தனை நாளும் என்னைப் பார்த்தாலே பயந்துட்டு ஓடுற கழுதை இன்னைக்கு என் பேச்சையே மதிக்காம உள்ள போகுது.. எல்லாம் அவன் கொடுக்குற தைரியம்!!! என்னைய மீறி ஏதாவது செய்யலாம்னு மட்டும் நினைக்கட்டும் நான் சும்மா விடமாட்டேன் ரெண்டு பேரையும்..” என சலங்கை கட்டாமலே அவர் ஆடிக் கொண்டிருக்க, 

 

இளவரசிக்கு கோபமாய் வந்தாலும், இப்போது தானும் அவரை எதிர்த்துக் கொண்டு பேசினால், வந்தனாவை கல்லூரிக்கு கூட அனுப்ப மாட்டார் இந்த மனிதர் என சரியாய் அவரை கணித்த இளவரசியும் பொறுமையாய் அதை கையாண்டார்.

 

“அவளே முடியாம ஆஸ்பத்திரியில இருந்து வந்திருக்கா!! இப்போவே இதை பேசனுமா?? விடுங்க.. ஓஞ்சு போய் கிடக்கா புள்ளை.. மேலும் அவளை தொந்தரவு செய்யாதீங்க” என அவரை சமாளித்து அனுப்பி விட, 

 

வந்தனாவிற்கு இவை அனைத்துமே செவியில் விழுந்தாலும், அவள் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

 

தாயும் தந்தையும் விஷயம் அறிந்து அவளை கோபம் கொண்டு ஒதுக்கி வைக்க நினைக்க, இந்த சிறிய வயதில் இத்தனை இன்னல்களை சந்திக்க பக்குவப்படாத அவளின் இதயம், இவர்களின் புறக்கணிப்பில் தனக்குள் மிகவுமே இறுகிப் போனவள், அவர்கள் உணரும்முன்னே அவர்களிடமிருந்து ஒதுங்கி நின்றாள்.

 

நாட்களும் அதன்போக்கில் எவ்வித மாற்றமும் இன்றி நகர்ந்து கொண்டிருந்தது.

 

ரஞ்சித் வீட்டில் விஷயம் அறிந்து இவர்களை வந்து நேரில் சந்தித்து, வந்தனாவின் காதல் விவகாரம் தெரிந்ததை காண்பித்துக் கொள்ளாமலே,

 

“பாப்பாவும் படிப்பை முடிக்கட்டும்.. இங்க இரஞ்சித்துக்கும் பிரமோஷன் வரப்போகுது போல.. எல்லாம் முடியவும் கொஞ்ச மாசம் கழிச்சு வீட்டுலயே உறுதி பண்ணிக்கலாம்” என ரஞ்சித் சொல்லிக் கொடுத்ததைப் போல் விநாயகம் பேசி சென்றிருக்க, 

 

நாட்டரசனும், மகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, உடனே அவளை மேலும் படுத்தி, அவளைத் தவறான முடிவெடுக்க தூண்டுகோலாக அமைய வேண்டாம் என யோசித்து, அவர்களிடம் சம்மதம் தெரிவித்து அனுப்பியிருந்தார்.

 

வந்தனாவும் உடல் தேறவும் மீண்டும் கல்லூரிக்குக் கிளம்ப, இப்போது அவளைத் படிப்பில் இருந்து நிறுத்தினால் சுற்றத்தாருக்கு வீணாய் சந்தேகம் கிளம்பும் என்றெண்ணி, பலத்த அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதித்து அவளை கல்லூரிக்கு அனுப்பி வைத்தார் நாட்டரசன்.

 

அப்படி ஒரு நாள் அவள் கல்லூரிக்கு சென்றிருந்த சமயம், அவளை நேரில் சந்தித்து நடந்ததை விசாரித்து அறிந்து கொண்ட ரஞ்சித், 

 

“ரொம்ப யோசிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க!! இன்னும் குறைஞ்சது ஆறு மாசம் உங்க அப்பா உங்களை கல்யாணம்ன்னு தொல்லை பண்ண மாட்டாரு.. அதுக்குள்ள உங்க அப்பா மனசு மாத்த முடியுதான்னு பாருங்க.. அப்பயும் அவர் மாறலைனா.. அவர் மனுஷனே இல்லை, வினோத உயிரினம்ன்னு சொல்லி அவரை பிடிச்சு உள்ள போட்டுட்டு உங்க கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க” என அவளுக்கு ஆறுதல் அளிக்க, 

 

வந்தனாவிடம் அதே அமைதியான புன்னகை தான்.

 

மலர் தான், “நீங்களே ஒரு வினோத ஜந்துதேன்.. இதுல நீங்க அவரைச் சொல்றீங்களா??” என கிண்டல் செய்ய, 

 

இருவருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் தொடர்ந்த போதும், வந்தனாவின் நிலையில் மாற்றமே இல்லை.

 

தோழியை எண்ணி மலர் வருந்த, மலரின் இந்த உண்மையான நட்பைக் கண்டு ரஞ்சித் வியந்தான்.

 

சிறிது நாட்கள் கடந்த நிலையில், இளவரசி கொஞ்சம் கொஞ்சமாக வினய்யைப் பற்றி நல்லவிதமாக நாட்டரசனிடம் பேசி அவர் மனதை மாற்ற முயல, அவரோ அன்று ஆடித் தீர்த்து விட்டார்.

 

ஆனாலும் தன் முயற்சியை கைவிடாமல் அவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் மனதைக் கரைக்க தன்னாலான முயற்சிகளை செய்து கொண்டே இருக்க, 

 

முன்பு கோபம் கொண்டவர், இப்போதெல்லாம் என்னமும் பேசிக்கொள் என்பதைப் போல் கண்டுகொள்ளாமல் சென்று விடுவார்.

 

நாட்களும் நகர்ந்து, மாதங்களாய் கடந்திருக்க, மலரும் வந்தனாவும் படிப்பை முடித்து விட்டிருக்க, மற்றபடி இவர்களின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

 

நாட்டரசன் மட்டும் இப்போதெல்லாம் சில நாட்களாய் மிகுந்த யோசனையுடன் சுற்றிக் கொண்டிருக்க, அதற்கான காரணம் தான் யாருக்கும் விளங்கவில்லை.

 

ஒரு நாள் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருக்க, அவர் பேச்சுவாக்கில், 

 

“அரசா!! உனக்கு விசயம் தெரியுமா?? நம்ம நடேசன் இருக்கான்ல.. அதான் பா அன்னைக்கு கூட வாயை வச்சிட்டு சும்மா இருக்காம நம்ம வீட்டு புள்ளைகளை தப்பா பேசி உன்கிட்ட வாங்கிக் கட்டுனானே. இப்போ அவன் மகன் லட்சணத்தை தான் ஊரே பேசி சிரிச்சிட்டு இருக்கு” என அவர் கூறவும்,

 

“என்னாச்சு மச்சான்??” என இளவரசி கேட்கவும், 

 

“அட நீ அதை ஏன்மா கேக்குற?? அவன் ரொம்ப பகுமானமா அவன் பையனுக்கு இங்க பொண்ணைப் பார்த்துட்டு போனான் தான?? கடைசியில அவன் மகன் கல்யாணத்தன்னைக்கு வேறொரு பொண்ணை இழுத்துட்டு வந்திருக்கான்.. அதுவும் எப்படி?? அந்தப் பொண்ணு அஞ்சு மாசம் முழுகாம இருக்காம்.. அதை ஏமாத்திட்டு வீட்டுல பாக்குற பொண்ணைக் கட்ட தயாரானவன் கடைசியில அது மிரட்டவும் வேற வழியில்லாம காதலிச்ச பொண்ணையே கட்டிட்டு வந்துட்டானாம்” என அவர் கதை சொல்ல, 

 

கேட்டுக்கொண்டிருந்த நாட்டரசனுக்கு, ‘இப்படியெல்லாமா இருக்காங்க?? எவ்ளோ தைரியம் இருந்தா ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க வாழ்க்கையை நாசம் பண்ண பார்த்திருப்பான்??’ என நடேசனின் மகனை எண்ணி ஆத்திரமாக வந்தது.

 

“உன்னை என்னவெல்லாம் பேசினான்?? அதுவும் அறிவழகன் எவ்வளவு மரியாதையா புள்ளையோட ஆசைப்படி நல்லமுறையில நம்ம பொண்ணை கட்டிக் கொடுத்தான்.. அதுக்கே அப்படி பேசுனவன் இன்னைக்கு அவன் மகன் பண்ணுன காரியத்துக்கு தூக்குல தொங்கனும்.. ஆனாலும் அவன் எல்லாத்தையும் ஊத்துப்போட்டுட்டு மானங்கெட்டு போய் தான் சுத்திட்டு திரியுறான்.. இவன் எல்லாம் என்ன ஜென்மமோ?? அவன் முதுகுல இவ்வளவு கரையை வச்சிட்டு இப்படி ஊரானை குறை சொல்லிட்டு சுத்த்திட்டு திரியுறான் வெக்கங்கெட்ட பய!!” என நடசனை எண்ணி அவர் கோபத்துடன் பேசிக்கொண்டிருக்க, 

 

இளவரசி நாட்டரசனைத் தான் குறிப்பாகப் பார்த்திருந்தார்.

 

அதில், “இதுபோல் உள்ள மனிதரை எல்லாம் கருத்தில் கொண்டு, நம் மகளின் வாழ்க்கையை நீ எப்படி பந்தாடிக் கொண்டிருக்கிறாய் பார்த்தாயா??” எனும் செய்தி அவரின் பார்வையில் பொதிந்திருக்க, 

 

அதிசயத்திலும் அதிசயமாய் அவரின் பார்வையை புரிந்து கொண்ட நாட்டரசனின் முகம் தன்னாலே யோசனையுடன் சுருங்க, 

 

முதன்முதலாய் நாம் தவறு செய்கிறோமோ என அந்த மனிதருக்கும் தோன்ற, இந்த மாற்றம் வினய் – வந்தனாவின் வாழ்க்கையில் நல்லதொரு திருப்பத்தை கொண்டு வருமா?? பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!