Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

வரம் 💘 24

அத்தியாயம் – 24

“மாமோய்!!! அந்தத்தம்பி வந்திருக்கு!!!!” என வரப்பிலிருந்து கத்திக்கொண்டே ஓடி வந்தான் மாயன் – நாட்டரசனின் வயலில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி.

வெங்காய மூட்டைகளை சந்தைக்கு அனுப்ப, சரிபார்த்துக் கொண்டிருந்த நாட்டரசனுக்கு, “இப்போ எதுக்கு வந்திருக்கான்???” எனத் தோன்றினாலும்,

“தென்னந்தோப்புல உட்கார வை!!! வரேன்” என மாயனிடம் சொல்லி அனுப்பியவர்,



Advertisement

அவன் சிறிது தூரம் சென்றதும், “டேய் மாயா!!! இளநீ ஏதும் வேணுமான்னு கேட்டு வெட்டிக் கொடு” என வேறெங்கோ பார்த்துக் கொண்டே சொல்லிய தன் முதலாளியைத் தான் நம்பமாட்டாமல் பார்த்திருந்தான் மாயன்.

ஏனெனில் இதே நாட்டரசன் தான் ஆறு மாதங்களுக்கு முன்பு வினய் முதன் முதலில் அவரைச் சந்திக்க இங்கே வந்த பொழுது, “இவனை யாருடா உள்ள விட்டா???” எனக்கேட்டு அன்று கோபத்தில் அப்படி ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்திருந்தார்.

ஆம், மருதூரில் வைத்து இனி வந்தனாவைப் பார்க்க மாட்டேன் என நாட்டரசனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு வந்த வினய், வார்த்தை மாறவில்லை.

Advertisement

வந்தனாவைத் தானே பார்க்கக் கூடாது என்றவன், எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் காதல் கைகூடாது என நினைத்து, தன் காதலுக்காக நாட்டரசனுடன் போராட கிளம்பி வந்திருந்தான் அவரின் வயலிற்கு.

Advertisement

முதலில் அவனை அங்கு கண்டு, ஆத்திரம் கண்ணை மறைக்க சட்டையைப் பிடித்து அடிக்கவே வந்துவிட்டார் நாட்டரசன்.

இருந்தும் சோர்ந்து போகாமல், அதற்கடுத்து அவனுக்குக் கிடைத்த ஓய்வு நாட்களில், பெற்றவர்களைக் கூட காணச் செல்லாமல், இங்கே இவரை சமாதானம் செய்ய கிளம்பி வந்துவிடுவான்.

அவர் எவ்வளவு தான் கோபம் கொண்டாலும், இவனோ தன் வந்தனாவை மனக்கண்ணில் நிறுத்தி பொறுமையுடனே தன் தரப்பு நியாயங்களை அவருக்கு புரிய வைத்து, அவரின் மனதை மாற்ற தன்னாலான முயற்சிகளை செய்தான்.

Advertisement

‘அடிக்க அடிக்க அம்மியும் நகரும்’ என்பது போல், அவனின் விடாமுயற்சிக்கும் பலன் இருந்தது.

முதல் இரண்டு முறை கோபம் கொண்டு அவனை விரட்டி அடித்தவர், அடுத்த வந்த பொழுதுகளில் எல்லாம், அவனின் பொறுமையையும் நிதானத்தையும் கண்டு வியந்து, அவனுடன் பேசவில்லை என்றாலும் அமைதியாய் அவன் சொல்வதை மட்டும் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கி இருந்தார்.

அவரின் மாற்றத்தைக் கண்டு பூரித்துப் போன வினய், நிச்சயம் விரைவில் இவர் தங்களின் காதலை புரிந்து கொள்வார் என நம்பிக்கையுடன் கடைசி முறை வந்து சென்றபோது நினைத்திருக்க, அவரோ அடுத்த ஒரு வாரத்திலேயே அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியிருந்தார்.

அவரின் மனமாற்றத்திற்கு அடித்தளம் போட்டது வினய் தான் என்பது மாமனார் மற்றும் மருமகனைத் தவிர வேறு யாருக்கும் இன்றளவும் தெரியாது.

இன்றும் பழைய நியாபகம் தந்த புன்னகையில் அவன் அவருக்காய் காத்துக் கொண்டிருக்க,

தன் வேலைகளை முடித்துவிட்டு அங்கே வந்த நாட்டரசனின் முகம், ‘இப்போ எதுக்கு வந்திருக்கான்? அதான் கல்யாணத்துக்கே நாள் குறிச்சாச்சே!!’ எனும் கேள்வியைத் தாங்கி அவனை பார்த்திருக்க, இன்னும் அவனுடன் பேச மட்டும் மனம் வரவில்லை அவருக்கு.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல், முதன்முதலில் அவன் சங்கீதாவின் முகத்தின் அருகில் குனிந்து உதட்டுச் சாயம் பூசிக் கொண்டிருந்த காட்சியே அவனைக் காணும் போதெல்லாம் கண் முன் தோன்றி, அவரை அவனிடமிருந்து தள்ளியே நிறுத்தியது.

இப்போது முன்பு போல் அவன் மீது கோபமோ!! வெறுப்போ!! இல்லையென்றாலும்.. என்னவோ சட்டென மனிதரால் அவனுடன் ஒட்ட முடியவில்லை!! அதற்கு அவரின் இயல்பும் இடமளிக்கவில்லை.

அவரின் நிலை உணர்ந்த வினய்யும், அவர் தன்னுடன் பேசாததை பெரிதுபடுத்தாமல்,

“ரொம்பவே தாங்க்ஸ் சார்!!!” என தன் உள்மனதில் இருந்து உணர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்திருந்தான்.

‘நன்றியா?? எதற்கு??’ என அவர் குழம்பிப் போய் கேள்வியாய் அவனை நோக்க,

“இத்தனை வருஷம் பெத்து வளர்த்த பொண்ணை, இன்னொருத்தவங்களுக்கு தூக்கி கொடுக்குறது அவ்ளோ ஈஸி இல்லை!!! ஆனா நீங்க என்னை நம்பி!! என் குடும்பத்தை நம்பி உங்க பொண்ணை எனக்குக் கொடுக்க சம்மதிச்சது ரொம்பவே பெரிய விஷயம் இல்லையா சார்???” என அவன் கேள்வியாய் நிறுத்த,

அவரின் கண்கள் ஆச்சரியத்தில் மேலுயர்ந்தது.

“நான் நீங்க பார்த்த மாப்பிள்ளை இல்லை தான்… பட் டிரஸ்ட் மீ சார்!!! உங்க பொண்ணை பத்திரமா!! ரொம்பவே சந்தோஷமா நான் பார்த்துப்பேன்!! என்னடா இவனுக்கு போய் பொண்ணைக் கட்டி கொடுத்துட்டோமேன்னு நீங்க ஒரு நாளும் ஃபீல் பண்ற மாதிரி கண்டிப்பா நான் நடந்துக்க மாட்டேன் சார்!!! இட்ஸ் அ பிராமிஸ்!!!!” என அவருக்கு வாக்கு கொடுத்தவன்,

“எங்க அம்மா உங்களை ஏதோ கார்னர் பண்ணி தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருப்பாங்க!!! பட் எனக்கும் வந்தனாக்கும் உங்களோட முழு சம்மதம் வேண்டும் சார்!!! பெத்தவங்களை கஷ்டப்படுத்தி அதுல எங்க வாழ்க்கையைத் தொடங்க எனக்கு விருப்பமில்லை!!! நீங்க உண்மையான சந்தோஷத்தோட என்னையும் உங்க பொண்ணையும் ஆசிர்வாதம் பண்ணி, அவளை என் கையில கொடுத்தா தான் எங்க கல்யாணம் நடக்கும் சார்!!!” என அவன் சொல்லவும்,

‘என்ன செய்கிறான் இவன்??’ என அதிர்ந்து போய் பார்த்தார் நாட்டரசன்!!

“நான் விளையாடலை சார்!! ஐ அம் சீரியஸ்.. ஏதோ அன்னைக்கு எனக்கு அது பெருசா தெரியலை!! பட் இப்போ நடக்கப் போறது உங்களோட ஒரே ஒரு பொண்ணோட கல்யாணம்.. அதைப்பத்தி நீங்க எவ்ளோ கனவு வச்சிருப்பீங்க ?? ஆனா இன்னைக்கு நீங்க ஒரு மூணாவது மனுஷன் மாதிரி எல்லாத்துலயும் ஒதுங்கி நிக்குறது, எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு சார்!!! ஈவன் வதனாவுமே உங்களுக்கு இதுல விருப்பம் இல்லையோன்னு யோசிச்சு, வெளிய அதை சொல்லவும் பயந்து ரொம்ப அவளை கஷ்டப்படுத்திக்குறா!!! சோ நோ பிராப்ளம் சார்!! நாங்க வெயிட் பண்றோம்!! உங்களுக்கா எப்போ எங்களை முழுமனசா ஏத்துக்க தோணுதோ அப்போ கல்யாணத்தை நீங்களே முன்ன நின்னு நடத்தி வைங்க!!!” என அவன் உறுதியுடன் கூற,

நாட்டரசன் மனதில் வினய்யின் மீது பெரும் நன்மதிப்பு தோன்றியது.

இந்தக்காலத்தில் காதலிக்கும் பெண்ணின் சம்மதத்தை கூட எதிர்பார்க்காமல் கட்டாயமாக திருமணம் செய்யும் ஆண்களின் மத்தியில், தன் ஒருவனுடைய சம்மதத்திற்காக இத்தனை மாதங்கள் போராடி, இதோ இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம் என்றிருக்கையில், தனக்காகவும் தன் மகளுக்காவும் இவ்வளவு யோசித்து திருமணத்தையே நிறுத்த துணிந்த வினய் அவரின் கண்களுக்கு மற்ற ஆண்களை விட்டு தனித்துத் தெரிந்தான்.

இவனின் பரிசுத்தமான அன்பில், நாட்டரசனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தயங்கங்களும் விடைபெற்றுப் போக, இவனை விட ஒரு நல்ல மணமகனை தன் மகளுக்கு இந்த பாரெங்கிலும் தேடினாலும் கண்டுகொள்ள முடியாது என உணர்ந்து கொண்டார் அந்த நொடி.

“இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணத்தை வச்சிட்டு இப்படித்தான் சின்னப்புள்ளைத் தனமா பேசிட்டு இருப்பாங்களா?? போங்க போய் கல்யாண வேலையைப் பாருங்க!!” என எங்கோ பார்த்துக் கொண்டு நாட்டரசன் அவனிடம் கூற,

இத்தனை மாதங்களில், கோபம் இல்லாமல் அவனுடன் அவர் பேசிய முதல் தருணத்தை நம்பமாட்டாமல் பார்த்திருந்த வினய்,

“சார்!!! அப்போ உங்களுக்கு ஓகே வா????” என மீண்டும் உறுதிபடுத்திக் கொள்ளக் கேட்க,

“உங்க ஊர் பழக்கத்தை இங்க கொண்டு வர வேண்டாம்.. மாமான்னு கூப்பிடுங்க!! இன்னுமென்ன சாரு மோருன்னு!!” என அவனைப் பார்க்காமல் மறைமுகமாக அவனிடம் தன் சம்மதத்தை தெரிவித்தவர்,

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல்,

“டேய் மாயா!! மாப்பிள்ளைக்கு இளநீ வெட்டிக் கொடுக்கலையா நீ???” என அங்கிருந்த அனைவருக்கும் இவனை ஒரே வரியில் அறிமுகப்படுத்திவிட்டு அவர் முன்னே நடந்து சென்று விட,

வினய்யும் முகம் கொள்ளா புன்னகையுடன், “அப்போ நான் வரேன் மாமா!!!!” என மனநிறைவுடன் அவரிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினான்.

***

நாட்களும் யாருக்கும் காத்திராமல் விரைந்தோட, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வினய் – வந்தனாவின் திருமண நாளும் அழகாய் விடிந்தது.

அனைவரின் விருப்பப்படி, மிகவும் நெருங்கிய சொந்தங்கள் சூழ அவர்களின் திருமணம், பிரசித்தி பெற்ற வயலூர் முருகன் கோவிலில் நடக்கவிருந்தது.

திருமணம் இங்கேயும், அதைத்தொடர்ந்து திருச்சியிலும் சென்னையிலும் உறவினர் மற்றும் தொழில்துறை நண்பர்களுக்காக வரவேற்பு ஏற்பாடாகி இருந்தது.

அதிகாலை முகூர்த்தம் என்பதால், அனைவரும் அரக்க பறக்க வேலை பார்த்துக் கொண்டிருக்க, நாட்டரசன் தன் கணீர் குரலால், அனைவரையும் அதைச் செய் இதைச் செய் என போட்டு படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார்.

அவரின் அலும்பு தாங்காமல் சதீஷ் கூட, “டேய் சந்தோஷு!! உங்க சித்தப்பா போன வாரம் வரைக்கும் யார் வீட்டு கல்யாணமோன்னு கண்டுக்காம தான இருந்தாரு!! அப்படியே இருந்திருக்க வேண்டிதானா?? திடீர்னு அவர் ஏண்டா இப்படி விருமாண்டி மாதிரி மாறி வேஷ்டியை மடிச்சு கட்டிட்டு அது நொட்டை இது சொட்டைன்னு போட்டு உசுரை வாங்குறாரு” என கேட்டேவிட,

சரியாக அதேநேரம், “என்ன மாப்பிள்ளை??” என அவர்களின் பின் நாட்டரசனின் குரல் கேட்கவும் ஜெர்க்கான சதீஷ்,

“அது ஒன்னும் இல்லை மாமா!! உங்களை மாதிரி பெரியவங்க இருக்கப்போய் தான் எல்லாம் கரெக்டா நடக்குதுன்னு சொல்லிட்டு இருந்தேன்!! ஆமாதான சந்தோஷ்??” என அவன் சமாளித்து சந்தோஷை வேறு துணைக்கழைக்க,

அவனும் அடக்கிய புன்னகையுடன், “ஆமா சித்தப்பா!!” என தலையசைக்க,

இருவரும் பொய் சொல்கிறார்கள் எனத் தெரிந்தாலும், அதைக் கண்டுகொள்ளாமல், “சரி நேரமாச்சு!! போய் கூட்டிட்டு வாங்க அவரை!!!” என அவர் அனுப்பப் பார்க்க,

“அவரா??? எவரு அந்த அவரு???” என இருவரும் சிரிப்புடன் ஒன்றுபோல் கேட்க,

“அதான் அவரு!!! உங்க சிநேகிதன்” என நாட்டரசன் மழுப்ப,

“யாரு மாமா?? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ரிசப்ஷனுக்குத் தான் வருவாங்க” என்ற சதீஷ் அவரை விடுவதாய் இல்லை.

“அட போய் மாப்பிள்ளையை கூட்டிட்டு வாங்கப்பா!! இன்னும் சின்னப்பிள்ளை மாதிரி விளையாடிக்கிட்டு!! ” என அவர்களை நேராக பார்க்க முடியாமல், எங்கோ பார்த்தபடி கூறிவிட்டு அவர் விலகிச் சென்றுவிட, அவர்களின் சிரிப்பொலி நாட்டரசனை பின்தொடர்ந்தது.

நேரம் ஆவதைத் தொடர்ந்து, வினய்யை முதலில் அழைத்து வர,

“தாய்மாமாவை வரச்சொல்லி மாப்பிள்ளைக்கு ஆசிர்வாதம் பண்ணி மாலை போடச் சொல்லுங்கோ!!!” என ஐயர் பணிக்க,

“என்ன அண்ணன்!! ஐயர் சொல்றது கேட்டுச்சு தான!! வந்து உங்க மருமகனை ஆசிர்வாதம் பண்ணி மாலை போட்டு விடுங்க!!” என அகிலா அழைக்க, நாட்டரசன் பேச்சிழந்து போனார்.

ஏதோ தன்னை சம்மதிக்க வைப்பதற்காக அகிலா தன்னை அண்ணன் என அழைத்து நாடகம் போட்டார் என நாட்டரசன் இது வரை நம்பிக்கொண்டிருக்க, அவரோ உண்மையில் அவருக்கு அண்ணன் எனும் ஸ்தானத்தை மனதில் அளித்து, இதோ இன்று அனைவரின் முன்பு மரியாதையும் செய்து விட, நெகிழ்ந்து விட்டார் மனிதர் அவர்.

லேசாய் நடுங்கிய கரங்களுடன், வினய்க்கு மாலை அணிவித்து, சந்தனம் குங்குமம் வைத்துவிட,

அவனோ மனம் நிறைந்த புன்னகையுடன், “என்னை பிளஸ் பண்ணுங்க மாமா!!” என அவரின் பாதம் பணிந்திருந்தான்.

“நீண்ட ஆயுளோட சந்தோஷமா இருக்கணும்” எனும் வேண்டுதலோடு முழுமனதுடன் அவனை அவரும் வாழ்த்தியிருந்தார்.

“நாழி ஆய்டுத்து!! பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ!!” என ஐயர் குரல் கொடுக்க,

வினய்யின் கண்கள் இரண்டும் காதலும் ஏக்கமும் போட்டிபோட தன்னவளை எதிர்பார்த்து அவள் வரும் பாதையில் காத்துக் கிடக்க,

“இப்படி பிஸ்கட்டுக்கு காத்துட்டு இருக்க டாக் மாதிரி நாக்கைத் தொங்கப் போட்டுட்டு காத்துட்டு இருக்கதுக்கு!!! ஒழுங்கா நீயே அவளுக்கு மேக்கப் போடுற சாக்குல ரொமான்ஸ் பண்ணிருக்கலாம்ல??? பேருக்கு தான் பெத்த மேக்கப் ஆர்டிஸ்ட்ன்னு பேரு!! ஆனா தன்னோட பொண்டாட்டிக்கே மேக்கப் போட மாட்டாராம்!! இதைக் கண்டிப்பா வரலாறு கேவலமா பேசும் பாரு!!” என சதீஷ் அவன் காதுக்குள் பொரும,

“யோவ்!! கல்யாணம் ஆனவன் தான நீ?? உனக்கு இன்னுமா என் நிலமை புரியலை??? அவளைப் பார்த்தாலே நான் நானவே இல்லை!! இதுல அவ்ளோ நெருக்கமா அவ கண்ணைப் பார்த்து மேக்கப் மட்டும் போடுற அளவுக்கு நான் நல்லவன் இல்லை!!” என அவன் குரலில் தெரிந்த தவிப்பிற்கும் முகத்தில் இருந்த புன்னகைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.

அவனின் பதிலைக் கேட்டு அசட்டுச் சிரிப்புடன் சதீஷும் திரும்பிக் கொண்டான்.

எப்படியும் இன்று அவளுக்கு, வினய் தான் அலங்காரம் செய்வான் என நினைத்து வேறு யாரையும் புக் செய்யாமல் அனைவரும் விட்டுவிட, வினய்யோ முடியவே முடியாது என மறுத்துவிட்டான்.

“டேய் திடீர்னு மேக்கப் ஆர்டிஸ்ட்க்கு எங்க போக?? இங்க லோக்கல்ல யாரையாச்சும் பிடிச்சு சொதப்பிறப் போறாங்க” என அகிலா கூட கவலைப்பட,

“மாம்!!! வதனா நிலா மாதிரி மாம்!!! எப்படி இருந்தாலும் அழகாத் தான் இருப்பா!!! எனக்குத் தெரிஞ்சு வந்தனா மேக்கப் போடுறதை பிரிஃபர் பண்ண மாட்டா!!! இருந்தும் உங்க ஆசைக்ககா ஸ்டல்லாவை அனுப்பி வைக்கிறேன்.. ஷி வில் டேக் கேர்!! டோண்ட் வொர்ரி” என்றிருந்தான் அவரின் மகன்.

“ரொம்பத்தான் பண்ற டா நீ!!!” என மகனை செல்லமாய் முறைத்து விட்டுச் சென்ற அகிலாவிற்கும் மகனின் இப்போதைய தவிப்பைக் கண்டு சிரிப்பாய் இருந்தது.

ஐயர் மீண்டும் அவசரப்படுத்த, உறவுப்பெண்கள் சூழ, தாமரை வண்ணப் பட்டுடுத்தி அப்சரஸ் போல அவனை நோக்கி நடந்து வந்தாள் அவனின் வதனா!!!!

அவன் எண்ணியதைப் போல, ஸ்டெல்லாவிடம் ஒப்பனை ஏதும் செய்ய வேண்டாம் என வந்தனா சொல்லிவிட, இறுதியில் சங்கீதாவின் கட்டளையின் பேரில், ஒப்பனை செய்தது போலும் இல்லாமல், செய்யாதது போலும் அல்லாமல், மினிமல் லுக் என அழைக்கப்படும் வகையில் அவளை தயார் செய்திருக்க, பார்த்தவனுக்கு அவளை விட்டு கண்களை பிரிக்க முடியவில்லை.

“கொன்னுட்ட வதனா!!” என மனதில் சொல்லிக் கொண்டவன் யாரைப் பற்றிய கவலையும் இல்லாமல் அவளைத் தான் கண்ணெடுக்காமல் ரசித்திருந்தான்.

“அச்சோ!!! இவங்க என்ன இப்படி பார்க்கிறாங்க!!!” என ஒரு நொடி நிமிர்ந்த வந்தனா அவன் பார்வை வீச்சை தாங்கமாட்டாமல் மீண்டும் தலை குனிந்து கொள்ள,

“புள்ளை!! குனிஞ்சு குனிஞ்சு கழுத்து பிடிச்சிக்கப் போகுது!!! கொஞ்சம் நிமிர்ந்து நட!!” என மலர் வேறு கிண்டல் செய்ய,

அதுவெல்லாம் அவள் கருத்தில் கூட பதியவில்லை.

எத்தனை நாள் கனவிது!!!! அவளின் கனவு இதோ அவள் கண்முன்னே!!! காதலாய் அவள் ஒருத்தியை மட்டுமே உலகமென நினைத்து, அவளுக்காக காத்திருந்தது.

நாட்டரசனின் மகளாய் பிறந்துவிட்டு காதலை எல்லாம் கனவில் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது எனும் முடிவோடு இருந்தவளின் வாழ்வில் புயலாய் நுழைந்து, மனதில் மழைச்சராலைத் தூவி, இதோ இன்று அவள் வாழ்க்கையை வசந்தமாய் மாற்றிவிட்டான் அந்த மாயக்கண்ணன்.

காதல் திருமணம்!! அதுவும் பெற்றவர்களின் ஆசியுடன் என்பது இங்கே பலருக்கு கனவு தான் அல்லவா???

அந்தக் கனவை நிஜமாக்க இவர்கள் இருவருக்கும் தான் எத்தனை எத்தனை போராட்டம், எவ்வளவு வலிகள், எத்தனை காத்திருப்புகள்?? இதோ அவை யாவும் இந்த நொடி மாயமாய் மறைந்து போக, அவர்கள் காதல் மட்டுமே பிரதானமாய் அவர்களின் மனதை நிறைத்திருந்தது.

வந்தனாவை அழைத்து வந்து வினய்யின் அருகில் அமர வைக்க, இமைகளுக்கும் இதழ்களுக்கும் இடையில் உள்ள தூரம் அளவு இடைவெளியில் இருவரும் அமர்ந்திருக்க, வினய்யின் இதயத்தில் இன்பமாய் சில அதிர்வலைகள்.

இவர்களின் திருமணத்தை உறுதி செய்த நாளில் இருந்து அவ்வப்போது அலைபேசியில் பேசிக்கொண்டாலும், சில சமயம் நேரில் பார்த்துக் கொண்டாலும் இருவருக்கும் தனிமையோ, நெருக்கமோ இன்றுவரை கிடைத்ததில்லை.

இப்போது இவ்வளவு அருகில் அவள் அமர்ந்திருக்க, அவனின் மனம் தன்னாலே அன்றைய நாளின் நினைவுக்குச் சென்று, அவள் கொடுத்த முத்தத்தின் தித்திப்பை இப்போது நினைத்து ஏங்க,

“வதனா!!!” என ஐயர் சொல்லியவற்றை செய்து கொண்டே அவளை மெதுவாய் அவன் அழைக்க,

“ம்ம்!!!” என மெதுவாய் ஒரு சப்தம்!!! அவனுக்கு மட்டும் சங்கீதமாய்!!!

‘என்னென்னமோ சொல்லத் தோணுது!!! ஆனா நெஞ்சை முட்டுற சந்தோஷத்தில வார்த்தையே வரலை வதனா!!!’ என தனக்குள் கூறிக் கொண்டவன்,

“ஒன்னுமில்லை!!!” என்பதாய் தலையசைத்து விட்டு திரும்பிக் கொள்ள,

அவனின் நிலையை ஒத்து இருந்த வந்தனாவிற்கும், அவனின் தவிப்பு புரிய, இதழோரம் ஓர் ரகசியப் புன்னகை!!!

நல்லநேரமும் கூடி வர, “இந்தாங்கோ!!!” என வினய்யின் கைகளில் பொன் தாலியை எடுத்துக் கொடுத்தார் ஐயர்.

அவன் காதல் கைகூடும் தருணம்!!!

யார்?? எவர்?? என ஏதும் அறியாமல், ஒரு மாலைப் பொழுதில் அவன் மனதில் வந்து குடியேறியவள், இன்று உறவாய், உரிமையாய் அவனுக்கே அவனுக்கென கிடைக்கப் போகும் தருணம்!!!

லேசாய் கண்ணீர் கூட வரும் போல் இருந்தது வினய்க்கு!!

“ஊஃப்!!!!” என பெருமூச்சு விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்ட வினய்,

“என்னைப் பாரு வதனா!!!” என குனிந்திருந்தவளை நிமிர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன்,

வார்த்தைகளால் சொல்லாத காதலையும், சொற்களால் கொடுக்க முடியாத நம்பிக்கையையும் அவன் கண்களால் அவளுக்கு கடத்தியிருக்க,

அவன் கண்களில் தெரிந்த எல்லையில்லா காதலில் கட்டுண்டு அவள் மயங்கிக் கிடக்க, அவள் சங்குக் கழுத்தில் பொன் தாலியை அணிவித்து, அவளைத் தன் சரிபாதி ஆக்கிக் கொண்டான் அந்த அன்பாளன்!!!!

“யாஹூ!!!” என சதீஷ், சந்தோஷ், ரஞ்சித் மூவரும் சேர்ந்து சந்தோஷக் கூச்சல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த,

பெரியவர்கள் யாவரும் புன்னகையுடன் அர்ச்சதை தூவி மணமக்களை மனதார வாழ்த்தி, மகிழ்வுடன் இருவரையும் கண்டிருந்தனர்.

கணேசன் மற்றும் அகிலாவிற்கு, வினய்யின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில், மனமே நிறைந்து போக, ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

இளவரசிக்கோ, நல்லபடியாக மகளின் வாழ்க்கை அமைந்துவிட்டதை எண்ணி ஆனந்தக் கண்ணீரே வந்து விட, வைஜெயந்தி தான் அவரைத் தேற்றினார்.

நாட்டரசனுக்கு மகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி நிம்மதியைக் கொடுத்தாலும், இன்றிலிருந்து அவர் இன்னொருவருக்கு சொந்தம் எனும் உண்மை அவரை கலங்க வைத்தது.

என்னதான் பாசத்தைக் காட்டத் தெரியாத மனிதராக இருந்தாலும், இத்தனை நாளும் படிப்பிற்காக கூட அவளை பிரிந்திடாத மனிதருக்கு, இன்று அவள் மொத்தமாய் வேறொரு வீட்டிற்கு கிளம்பிச் செல்வது, தாங்க முடியா பாரமாய் நெஞ்சை அழுத்த, கண்கள் கூட லேசாய் கலங்கியது.

அதன் பின் ஐயர் சொல்லியதை எல்லாம் செய்து பெரியவர்களிடம் ஆசி வாங்கி, கடவுளை வணங்கிவிட்டு, புகைப்படம் எல்லாம் எடுத்து முடித்து, சாப்பிட்டு முடித்து அவர்கள் நாட்டரசனின் வீட்டிற்கு வர மதியம் ஆகி விட்டது.

அதுவரை, இளசுகள் அனைவரும் இருவரையும் கேலி, கிண்டல் செய்து ஒரு வழியாக்க, அதிசயித்திலும் அதிசயமாய் நாட்டரசன் அவர்களை ஏதும் கண்டிக்காமல், அமைதியாய் அவர்களை ரசித்துக் கொண்டு வந்தார்.

வீட்டிற்கு வந்ததும் விளக்கு ஏற்றி கடவுளை வழிபட்டு, பால், பழம் கொடுக்கும் சம்பிரதாயம் முடிந்து, இருவரையும் ஓய்வெடுக்க தனித்தனியே அனுப்பி வைத்திருந்தனர்.

காலையில் இருந்து இருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனிமையை வழங்க, இரவும் வந்தது அவர்களுக்கு இன்பமான அவஸ்தை ஒன்றையும் தந்தது.

அனைவரின் கேலிப்பார்வையை கடந்து, பெரியவர்களிடம் ஆசிவாங்கி, படபடக்கும் நெஞ்சத்துடன் அவளின் அறைக்குள் வந்தனா காலெடுத்து வைக்க, இதமாய் அவள் நாசியை வந்து தீண்டியது அவனின் வாசம்!!!!

அதற்கே குப்பென சிவந்து விட்ட அவளின் முகத்தை கண்கொட்டாமல் ரசித்தவனின் பார்வை கணவனின் பார்வையாய் மாறி உரிமையாய் அவள் உடலில் பதிய, பெண்மையினுள் பேரவஸ்தை ஒன்று உண்டானது.

“வதனா!!!!” உயிரை உருக வைக்கும் அதே அழைப்பு, ஆனால் அதில் என்றும் கொட்டிக் கிடக்கும் காதலோடு சேர்த்து புதிதாய் ஒரு உணர்வும் ஒளிந்திருந்ததோ என அவளுக்கு ஐயம் தோன்ற, அவளின் இதயத்துடிப்பு இரட்டிப்பானது புதிதாய் வந்து தாக்கிய உணர்வில்.

அவளின் தவிப்பை உணர்ந்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன், மென்மையாய் அவளின் கரம் பற்ற, சட்டென உண்டான கூச்சத்தில் அவள் விலுக்கென நிமிர,

“ஹேய் ஈஸி கேர்ள்!!!” என அவளின் அதிர்வில் பக்கென சிரித்து விட்ட வினய்,

“கம் அன்ட் சிட்!!!” என கட்டிலை நோக்கிப் போக,

அவளும் அவனைப் பின்தொடர்ந்து சென்றாள். அவளின் தோள்களைப் பற்றி அங்கே அமர வைத்தவன், குடிக்க தண்ணீரை எடுத்து நீட்டி, “இதைக் குடி!! ரிலாக்ஸாகு கொஞ்சம்” என்றான்.

அவள் இயல்பாக சற்று அவகாசம் அளித்தவன், அவள் அருகில் அமர்ந்து,

“நம்பவே முடியலைல வதனா!!! நீ!! என் பக்கத்துல!! எனக்கே எனக்கான உறவாய்!!!” என அந்த உணர்வை ஆழ்ந்து அனுபவித்துக் கூறியவன்,

“இந்தக் காதலுக்குத் தான் எவ்வளவு பவர்ல??? எங்கேயோ பிறந்து, எங்கேயோ வெவ்வேறு குடும்ப சூழ்நிலையில வளர்ந்த நம்மளை, இத்தனை போராட்டத்துக்கு பிறகு, இதோ இன்னைக்கு நம்மளை ஒன்னா இணைச்சிருக்குல??” என பேசியவனின் கண்களையே அவள் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க,

அவன் சட்டென அவளை நோக்கி, “உன் விரலோட என் விரல்களை கோர்த்துக்கணும் போல இருக்கு வதனா!!! மே ஐ???” என அனுமதி வேண்ட,

“இதுக்கெல்லாம் பெர்மிஷன் கேப்பீங்களா நீங்க???” என பொய்யாய் முறைத்தவள்,

தானே விரும்பி அவனின் விரலுடன் விரல் கோர்த்துக் கொள்ள,

“பின்ன அதுக்கும் நீ ஷாக் ஆகிட்டா?? அதான்!!!” என்றவன், காதலாய் இருவரின் பின்னப்பட்டிருந்த கைகளையே பார்த்திருந்தான்.

“உங்களுக்கு ஏன் என்னை இவளோ பிடிச்சிருக்கு???? நம்ம ரெண்டு பேரும் பேசிக்கக் கூட இல்லை அவ்வளவா!!! என்னைப் பத்தி எதுவுமே தெரியாம இவ்வளவு லவ்?? எப்படி??” என இத்தனை நாட்களாய் மனதில் கேட்டுக்கொண்ட கேள்வியை இன்று அவனிடமே அவள் கேட்டுவிட,

“காதலுக்கு காரணம் எல்லாம் இல்லையே வதனா!!! காரணத்தோட வந்தா அது காதலா இருக்காதே!!! அன்னைக்கு அந்த கஃபேல, சன்செட் டைம்ல உன் முகத்துல பட்டு ரெஃப்லெக்ட் ஆன அந்த ஒளியில!!! காட்!!! மொத்தமா விழுந்துட்டேன் வதனா !!! என் பிரஃபஷன்க்கு எத்தனை பொண்ணுங்களை கடந்து வந்துட்டேன் தெரியுமா?? பட் உன்னைப் பார்த்தப்போ என் மனசுல வந்த ஸ்பார்க்!! இதுவரைக்கும் யார்கிட்டேயும் நான் உணர்ந்ததில்லை.. அது ஒரு டிவைன் ஃபீல்!!! நாம எதுக்காக வாழ்றோம்ன்னு ஒரு சில மொமண்ட்ல நாம ரியலைஸ் பண்ணுவோம்.. அன்ட் தாட் வாஸ் ஒன் சச் அ மொமெண்ட்(அப்படிப்பட்ட ஒரு தருணம் அது)” என அன்றைய நாளுக்கே சென்று விட்டது போல் வினய்யின் முகம் காதலில் கனிந்திருக்க,

“இவனின் காதலைப் பெற என்ன தவம் செய்தேன்???” என எண்ணி பூரித்திருந்தவள்,

உணர்ச்சி மிகுதியில் அவனின் தோள் சாய, ஆனந்தமாய் அதிர்ந்த வினய், அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.

உலகம் அவன் கைவளைவில் வந்துவிட்டதைப் போல் ஒரு மாயை தோன்ற, அவன் உல்லாசமாக சீட்டி அடித்தான்.

“ஷ்!!! வெளியே கேட்கப் போகுது!! ஆல்ரெடி எல்லாரும் என்னை பங்கமா கலாய்க்குறாங்க!!” என அவள் செல்லமாய் சிணுங்க,

அந்த அழகில் அவனுள் பல இரசாயன மாற்றங்கள் ஏற்பட, அவனின் பார்வை மாறியது.

அந்த மாற்றம் அவளுள் தடுமாற்றத்தை தோற்றுவிக்க, அவன் கண்ணோடு கண் நோக்குவதை தவிர்த்தது பெண்மை!!

காத்திருப்பின் ஏக்கத்தை கொண்டவளிடம் கொட்டித் தீர்க்க, அவன் உடலும் உள்ளமும் பரபரக்க, இருந்தும் அவள் அனுமதி வேண்டி காத்துக் கிடந்து கண்ணியம் காத்தவனை, இதற்கு மேலும் சோதிக்க அவளின் உள்ளம் விரும்பவில்லை.

காதலை மீறி அவள் கண்களில் தெரிந்த பயத்தை கண்டுகொண்டவன்,

“ஈஸி வதனா!!! வினய் அவனோட வதனா கஷ்டப்படுத்த மாட்டான்!! கட்டாயப்படுத்தவும் மாட்டான்!! உனக்குப் பிடிக்காத எதுவும்!! எப்போதும் நடக்காது!!!” என அப்போதும் காதலாய் அவன் கூறவும்,

‘இத்தனை அன்பை என் இதயம் தாங்காது’ என்பதைப் போல் அவனின் நெஞ்சத்திலே அவள் சரணடைய,

அவன் அப்போதும் அவள் வாய்மொழிக்காக காத்திருக்க, “டியூப்லைட்!!!” என அவள் முணுமுணுத்தாள்.

“என்ன????” அவன் அதிர்ந்து போய் கேட்க,

“லைட் ஆஃப் பண்ண சொன்னேன்!!!” என அவள் உதட்டைக் கடித்து சமாளிக்க, கடித்த உதடுகளுக்கு தன் உதடுகள் மூலம் மருந்திட்டிருந்தான் அந்த கள்வன்.

அவனின் அதிரடியை எதிர்பாராமல், பெண்ணவள் அதிர்ந்து விழிக்க, அவன் உதடுகள் பாடிய கவிதையில், அவள் உடலில் புதிதாய் ஊற்றெடுத்து பாய்ந்தது உணர்ச்சி அலைகள்.

இத்தனை நேரமும் காதல் மன்னனாய் இருந்தவன், அப்போது காதலில் மன்மதனாய் மாறி அவளை மொத்தமாய் தனக்குள் அள்ளிக் கொண்டான்.

மென்மையான முத்தத்தின் மூலம் அவளின் தயக்கங்களை களைந்தவன், காதல் கலந்த மோகத்துடன் அவள் மீது படர்ந்தான்.

அவளின் முகம் பார்த்து, மனம் அறிந்து அவன் மென்மையாய் அவளைக் கையாள, ஆடவனின் அன்பிலும் ஆளுகையிலும் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து, தவித்து, திணறி, அவனின் காதலில் மொத்தமாய் தன்னைத் தொலைத்திருந்தாள் தையலவள்!!!

காதல் அழகென்றால், காமம் கலந்த காதல் பேரழகல்லவா!!??

அங்கே பேரழகாய் ஒரு அழகியல் நிகழ்ந்தேற, நிலவும் இரவும் அவர்களின் காதலுக்கு சாட்சியாய்!!!

உயிரும் உடலும் கலந்த தருணம்!!!

அவன் காதலின் நிறைவில் அவள் கண்களில் இரு துளி கண்ணீரின் ஜனனம்!!

“லவ் யூ வதனா!!!!!” என காதலுடன் அவள் கண்ணீரில் முத்தமிட்டவன், அவளுள் தன்னை புதைத்துக் கொண்டான் பெருங்காதலுடன்!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!