Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

வெள்ளியும் சனியும் பெண்களுக்கு மட்டும் தானா?

நம்மில் பலர் கேட்டிருப்போம் இந்த வாசகத்தை “வெள்ளிக்கிழமை அதுவுமா பொம்பள புள்ள”

நான் பார்த்து வியந்த பெண்மணிகளில் ஒருவர் இவர். ஒரு மருமகளையே சமாளிக்க முடியாத காலத்தில் மூன்று மருமகள்களை நேர்த்தியாக வாழ வைப்பவர். மருமகள்களை கண்டிப்பார் ஆனால் யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டார். பேரப்பிள்ளைகளை அன்னை தந்தையை விட அதிக அக்கறையுடன் கவனித்துக் கொள்வார். சில சமயம் எனக்கு அவரைப் பார்த்தால் வியப்பாக இருக்கும் இப்படியும் ஒரு பெண்மணியா? இவ்வளவு கஷ்டங்களை தாண்டியும், மகன்கள் பேசும் வார்த்தைகளை தாண்டியும், அவர்கள் மீது அன்பு செலுத்த முடியுமா?  “முடியும்” ஒரு தாயால் மட்டுமே அது முடியும் என்று எனக்கு அவ்வப்போது காட்டுபவர். மருமகள்களையும் தாயாக அரவணைத்துச் செல்லும் அவரிடம் இருந்து இந்த வார்த்தைகளை கேட்டது தான் எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சி.

அன்று வெள்ளிக்கிழமை…
இது எனக்கு மிகவும் பழக்கமான நெருக்கமான ஒரு மங்கைக்கு என் கண் முன்னால் நடந்த நிகழ்வு. ‌ நான் புகழ்ந்த பெண்மணியின் முதல் மருமகள். அவர்களுடைய திருமண வாழ்வு எட்டு வருடங்கள். கணவர் குடிப்பழக்கம் உடையவர், இப்பொழுது புதிதாக புகைப்பிடிக்கவும் ஆரம்பித்திருக்கிறார். கணவன் குடிப்பது எந்த மனைவிக்கு தான் பிடிக்கும்? எப்பொழுதும் அவர்கள் வீட்டில் சண்டைதான். அவர் குடிப்பார் என்பதற்காக அவர் கெட்டவர் என்று நான் சொல்ல வரவில்லை. சொல்லப்போனால் என் கதையில் கெட்டவர்கள் என்று யாரும் இல்லை. என்னைச் சுற்றியும் அப்படி யாரும் இல்லை. குடித்துவிட்டு வந்து மனைவியை அடிக்கும் பழக்கமும் அவருக்கு இல்லை. ஆனாலும் அவருடைய மனைவி அவர் குடிப்பதை கண்டிப்பார், கடந்த வெள்ளி அன்று அவர்களுடைய இரண்டாவது மகனுக்கு பிறந்தநாள். நல்ல நாள்… மங்களகரமான நாள்… அன்று  காலை எழுந்ததுமே கணவர் புகை பிடித்தார். ‌அதனால் மனைவிக்கு கோபம். அவரை கண்டித்தார், கத்தினார், கோபப்பட்டார். சில வார்த்தைகள் கோபத்தின் மிகுதியில் அதிகப்படியான வார்த்தைகளாகவும் வந்தது. இது அவர்கள் வீட்டில் தினமும் நிகழ்வது தான். அதனால் இந்நிகழ்வு என்னை பாதிக்கவில்லை. என்னை பாதித்தது என்னவோ நான் மிகவும் வியந்த அந்த பெண்மணி கூறிய வார்த்தைகள் தான்..
“வீடான வீட்டுல வெள்ளிக்கிழமை அதுவுமா பொம்பள புள்ள இப்படி கத்திக்கிட்டு இருந்தா குடும்பம் விளங்குமா?”

வீடான வீட்டுல வெள்ளிக்கிழமை அதுவுமா ஆண்கள், புகை பிடிக்கலாம், மது அருந்தலாம். அதனால் எல்லாம் குடும்பத்திற்கு எந்த ஆபத்தும் வராது. ஆனால் பெண்கள் கத்தினாலோ, கோபப்பட்டாலோ, இல்லை ஆற்றாமையால் அழுதாலோ, குடும்பம் விளங்காது.

“என்ன கொடும சரவணன் இது?”



Advertisement

 

நல்ல மாமியாருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒருவர்…

மருமகளின் மாதவிடாயை புரிந்து கொண்டு அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் ஒருவர்…

Advertisement

மருமகளுக்கு உடம்பு முடியாத சமயத்தில் கசாயம் வைத்து கொடுத்து தாயை விட அக்கறையாய் பார்த்துக் கொள்ளும் ஒருவர்….

Advertisement

கூறிய வார்த்தைகள் தான் இது.

இதுதான் பெண்கள் வாங்கி வந்த வரமா? சாபம் அல்லவா இது?

 

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!