Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

பாகம்-10

நட்பு என்னும் கோட்டில் ஆரம்பித்தது இருவரின் பந்தம். வேலினிக்கு இப்போது எந்த குழப்பமும் இருக்கவில்லை. தெளிவான மனநிலையில் இருந்தாள்.

குருவுடன் இப்போது தனக்கு இருப்பது நட்பு என்னும் பெரும் பந்தம். இது இப்படியே தொடர்ந்தால், நன்றாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டாள்.

அந்த வயதான தம்பதியிடம் விடைபெற்ற இருவரும் பேருந்தில் ஏறி தங்களின் பயணத்தை தொடர்ந்தனர். போகும் வழி எல்லாம் தன் திட்டம் என்ன என்பதை தெளிவாக எடுத்துரைத்தான் குரு. ஒரு கடை ஆரம்பிக்கும்போது என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும்.



Advertisement

முக்கியமாக அந்த இடத்தில் என்னென்ன தேவை இருக்கிறது என அனைத்தையும் அவன் எடுத்துரைக்க, இரண்டு நாட்களில் இத்தனை திட்டங்கள் போட்டு விட்டானா? என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

முதலில் வீட்டில் எப்படி அவள் பேச வேண்டும். எப்படி குடும்பத்தினரை ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும் என்பதை தெளிவாக அவன் எடுத்துரைத்திருக்க, சில விஷயங்களை தன் குடும்பத்தை பற்றி அவளுக்குத்தானே தெரியும்.

அதனால் எப்படி அதை செய்தால் சரியாக இருக்கும் என்பதை எடுத்துரைத்து அவன் திட்டத்தை இன்னும் ஒரு மடங்கு கூர் தீட்டினாள். இவனுக்கும் அவள் சொல்வது சரியாக தோன்ற அதன்படியே இருவரும் திட்டங்களை சரியாக வகுத்து அதை செயல்படுத்த ஆரம்பித்தனர். வீட்டிற்கு சென்ற பின்னும் அமைதியாகவே இருந்தாள்.

Advertisement

அவள் தந்தை முதல் நாள் இப்படி ஒருவன் பேசி சென்றதை கூறியிருந்தார். ஆனால் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவே இல்லை. அவரைப் பொறுத்தவரை தன்னுடைய தொழில் இப்போது எப்படி சொல்கிறதோ அப்படியே சென்றால் கூட பரவாயில்லை, ஏதாவது புது முயற்சி எடுத்து மொத்தமாக பள்ளத்தில் விழ கூடாது என்று எண்ணினார்.

Advertisement

இரண்டு பெண்களைப் பெற்ற அவருக்கு இந்த எண்ணம் தோன்றுவது ஒன்றும் தவறில்லை. ஆனால் வாழ்க்கையில் வேலினியின் எண்ணமோ, இன்றைக்கு நன்றாக இருந்தால் மட்டும் போதாது. உழைக்க முடியாத சூழ்நிலையில் கூட யாரிடமும் கையேந்தா நிலை வேண்டும் என்று எண்ணினாள்.

தந்தையும் மகளும் அமைதியாகவே இருக்க, வீட்டில் இருந்த மற்ற உறுப்பினர்கள் இருவரும், “என்ன ரெண்டு பேரும் ஒரு மாதிரி அமைதியா இருக்காங்க?” என்று எண்ணி அவர்களே அதை கலைக்க முடிவெடுத்தனர்.

சிவகாமி பாட்டி தான் முதலில் ஆரம்பித்தார், “என்னடா ஆறுமுகம், உன் மக இன்னைக்கு என்னமோ அமைதியின் சொரூபமா இருக்கா? வெளியே தானே அவ சாந்த சொரூபினி, வீட்டில பத்திரகாளி ஆச்சே? என்னமோ ரொம்ப அமைதியா இருக்கா? என்று அவர் கேட்க, வேலினி அவரை ஒரு முறை முறைத்து விட்டு பேசாமலே இருந்து கொண்டாள்.

Advertisement

“ஒன்னும் இல்லம்மா, பாப்பா என்கிட்ட ஒன்னு கேட்டுச்சு. என்னால செய்ய முடியல. அதான் அதுவும் அமைதியா இருக்கு. நானும் அமைதியா இருக்கேன்”,

“என்ன விஷயம் கேட்டா இவ?”

“அதான் நேத்து சொன்னேனே ம்மா”,

“அந்த கடை விஷயமா.. நீ சொல்றது சரிதாண்டா. ஏதாவது புதுசா செஞ்சு பள்ளத்தில் ஏதும் விழுந்துட்டோம்னா என்ன பண்ண முடியும். ஆனா அதே சமயத்துல இப்போ உனக்கு வியாபாரமும் சரியா நடக்கல. இந்த நேரத்துல வேற ஏதாவது பண்ணா தான் நல்லா இருக்கும்னு எனக்கும் தோனுது”

அமைதியாக அமர்ந்திருந்த வேலினி சட்டென்று பாட்டியை திரும்பி பார்த்தாள், அவர் கூற்றில். தந்தையோ, பாட்டிக்கு பதில் கூறும் வகையில்,

“நீங்க சொல்றது சரிதான் ம்மா. ஆனா நானும் என்னென்னமோ அந்த வேர்வைல உட்காரும்போது தான் யோசிச்சு பாப்பேன் தான். ஆனா எதுவும் தோணாது ம்மா. எத்தனாவது புதுசா முயற்சி பண்ணி எங்கேயாவது போய் விழுந்துருவோமோனு பயம் தான் வருது. என்ன பண்ண சொல்ற?

ரெண்டு மகளும் நல்லபடியா இருக்கணும். எப்படியும் அவங்கவங்க படிப்பை முடிச்சதும் நல்ல வேலைக்கு போய் சப்பாத்திக்க ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம் எதுக்கு கவலைப்படணும்?” என்றதும் அவளுக்கு பொறுமை போய்விட வேகமாக எழுந்து,

“அப்பா நாங்க இன்னும் படிச்சு வேலைக்கு எல்லாம் போறதுக்கு நாலு வருஷம் ஆகும். அதுவரைக்கும் அந்த வெக்கயிலை உக்காந்துட்டு இருப்பீங்களா? அதுலையே இருந்து உங்களுக்கு ஏதாவது உடம்புக்கு சரியில்லாம போச்சுன்னா…என்ன பண்றது நாங்க. நீங்கதான் எங்களுக்கு ஆணிவேரே. வெறும் பணம் சம்பாதிப்பதற்காக நீங்க வேணும்னு நான் இதை சொல்லல, எங்க வாழ்க்கைக்கு நீங்க ரொம்ப முக்கியம்.

அப்படி இருக்கும்போது தினம் தினம், நீங்க அதுல கஷ்டப்பட்டு வேலை செய்யும்போது எங்களால மட்டும் எப்படி நிம்மதியா இருக்க முடியும். எங்க நிம்மதிக்காகவாவது ஏதாவது விஷயத்தை மாத்தி பண்ணலாமே ப்பா? கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ப்பா ப்ளீஸ்” என்று அவள் கோபத்தில் ஆரம்பித்து கெஞ்ச தொடங்கினாள்.

“சரி பாப்பா இப்ப நீ சொல்றது சரிதான்னு வச்சுக்குவோம். ஆனால் புதுசா கடைய மாத்தவோ, இல்ல புது பொருளா வாங்கி வைக்கனும்னாலும், எவ்வளவு செலவாகும் தெரியும் தானே. அவ்வளவு செலவெல்லாம் நம்மளால பண்ண முடியுமா?

“புது கடைக்கு போனாதானே பிரச்சனை. பழைய கடையிலேயே புதுசா வியாபாரம் பாருங்க. பொருள் மட்டும் வாங்கலாம், கூடவே உங்களுக்கு பேட்டரியல ஓடுற மாதிரி ஒரு ஃபேனும், லைட்டும் வாங்கிடலாம். அங்க கரண்ட் யூஸ் பண்ண வேணாம். அப்போ செலவு கம்மியா தான் ஆகும்”

“அப்படின்னாலும் காசு வேணும் இல்ல?”

“இந்த வீட்ல நாலு பொம்பளைங்க இருக்கோம். எங்க கிட்ட ஏதோ ஒரு நகையை வாங்கி, அடமானம் வச்சு, அந்த காசை வாங்கிட்டு போனா கூட, உங்களால் அதுல பொருள் வாங்கி அடுக்க முடியும்.

இப்ப வாங்கிட்டு போயிட்டு அந்த நகையை ஒன்னுக்கு ரெண்டா ஒரு நாள் திருப்பி கொடுத்துடுங்க. அவ்வளவுதானே. இதுக்கு நீங்க ஏன் இவ்வளவு வருத்தப்படணும்”

“என்னடா பாப்பா சொல்ற? பாட்டியும் அம்மாவும் அவங்க நகையையும் சேத்து தான் உங்க ரெண்டு பேருக்கும் பிரிச்சு வச்சிருக்காங்க. அதுல இருந்து நான் எடுக்க முடியுமா?”

“ப்பா உங்க வியாபாரம் நல்லா போனா, வீட்டில தானா செல்வம் சேர போது. ஏன் பாட்டி நீ ஒரு நகைய கூட உன் மகனுக்கு கொடுக்க மாட்டியா?” என்று வேலினி பாட்டியிடம் கேட்க, ‌

“நான் ஏண்டி கொடுக்காம இருக்க போறேன். என் மகன் கேட்டா, நான் கொடுக்கத்தான் போறேன். இருந்தாலும் நகையை வைச்சு, அது மூழ்கிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு ஒரு பயம்தான்.” என்றார் பாட்டி.

“அம்மாவும் மகனும் பயந்துக்கிட்டே இருந்தா, எப்ப தான் முயற்சி பண்றது”
“போதும்டி பெரிய மனுஷி மாதிரி பேசாத. அவங்க பெரியவங்க அவங்களுக்கு தெரியாதா என்ன பண்ணனும்னு” என்று இப்போது தாய் அவள் குறுக்கே வந்து பேச,
“அம்மா எனக்கு எதுவும் இவங்க அளவுக்கு தெரியாது தான். ஆனா நம்ம எந்த முயற்சியும் பண்ணாம ஏன் இருக்கணும்? எல்லாம் தெரிஞ்சு இவங்க முயற்சி பண்ணாம இருக்கிறது ,எங்களுக்கு எப்படி வாழ்கை மேல் பிடிப்ப உண்டு பண்ணும்.
வாழ்க்கையில் முன்னேறனும்னு எங்களுக்கு எப்படி தோணும். நீங்க பண்ற மாதிரி பின்னாடி நான் வேலைக்கு போனா கூட அதுக்கடுத்து மேலே மேலே போறதுக்கு எந்த முயற்சியும் பண்ணாம, உங்களை மாதிரி தானே நானும் இருப்பேன்.

ஒரு தடவை ஒரே ஒரு தடவை எனக்காக முயற்சி பண்ணுங்க. புதுக்கடைக்குள்ள போக வேண்டாம், நான் சொன்ன மாதிரி பழைய கடையிலேயே நம்ம பொருள் வாங்கி வைக்கலாம்.

என்னென்ன எப்படி வாங்கி எவ்வளவு வைக்கணும் என்கிற அளவுக்கு நான் திட்டம் போட்டு வச்சிருக்கேன். நீங்க ஒரே ஒரு தடவை சொல்லுங்க, எப்படியாவது நகை வச்சு பணத்தை மட்டும் ஏற்பாடு பண்ணுங்க. அதுக்கப்புறம் எல்லா விஷயத்தையும் நான் பார்த்துக்கிறேன்” , இப்படி அவள் கூறியதும்

“நீ மட்டும் எப்படி டி பாப்ப, இரண்டாவது வருஷம் தான் படிக்கிற உன்னை நம்பி இவ்வளவு பணத்தை எப்படி கொடுக்கிறது”, தெய்வானை மீண்டும் குரல் ஒசத்தி கேட்க,

“அம்மா என்ன நம்ப வேணா சரி அப்பா நேத்து வந்தார் இல்ல, அவர நம்புவீங்களா நீங்க?” என்று கேட்டாள் தந்தையிடம்.
“புதுசா பாத்த ஒருத்தரை எப்படி டி நம்பிறது” அம்மா மீண்டும்.

“தெய்வானை குரு தம்பி நல்ல மனுஷன் தான். நம்ம மகளுக்கு அந்த நேரத்தில் சரியான உதவி செஞ்சிருக்காரு. இவ்வளவு பெரிய விஷயத்தை செய்றேன்னு சொல்றாரு. அவரை நம்ப மாட்டேன் எல்லாம் சொல்ல முடியாது..” என்றதும்

“அப்ப கண்டிப்பா அவர் கிட்ட பேசலாம் அவரும் தொழில் தொடங்கப்போறாரு. அது மட்டும் இல்லாம அவரோட ஃப்ரெண்டு ஒருத்தர் இங்க பக்கத்துல ஒரு துணி கூட வச்சிருக்கார். ஓரளவுக்கு அவங்களுக்கு வியாபாரத்தை பத்தி தெரியும்.

நீங்க பேசுனீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கும் அதுல ஒரு தெளிவு கிடைக்கும். அவங்ககிட்டையும் பேசிட்டு நம்ம முடிவு பண்ணி கூட பொருள் வாங்கலாம். நீங்க என்ன சொல்றீங்க?” என்று வேலினி நீளமாக பேச, குழலினி தமக்கை யின் முயற்சியை கண்டு,

“அப்பா அக்கா தான் இவ்வளவு சொல்றாளே, நம்ம இப்போ ஒன்னும் பழைய தொழிலை விட்டுட்டு, புதுசு பண்ண போறதில்லையே. பழசையும் சேர்த்து தானே பண்ண போறோம்‌. உங்களுக்கு உதவியா நான், அக்கா அம்மா, பாட்டி, எல்லாரும் இருக்கோம்.

அங்க உக்காந்துட்டே பார்க்கிற வேலையா தானே இருக்கும். ஸ்கூல் முடிச்சிட்டு வந்து உங்களுக்கு உதவி பண்றோம். ப்ளீஸ் ப்பா செய்வோம் ப்பா”, என்று அவள் கூறவும் சரி என்று அரை மனதாக தான் தலையசைத்தார்.

வேலினிக்கு அதுவே போதும் என்ற மனநிலை. மறுநாள் வந்து குரு இவர்களுடன் பேசி சென்ற பின் தான் வீட்டில் அனைவருமே அந்த முடிவை முழு மனதாக ஏற்றனர். அப்பா சம்மதித்து நகையை வாங்கிக் கொண்டு சென்று, இரண்டு நாட்களில் பணத்தோடு வீடு திரும்பியிருந்தார்.

வீட்டுக்கு வந்ததும் தந்தை முதல் வேலையாக தன் மகள் வேலினியை அழைத்து, அவள் கையில் பண்த்தை கொடுத்தார்.

“பாப்பா இந்தா பணம்..இதுல என்னலாம் வாங்க போறேன்னு யோசிச்சு இருக்க, இப்போ உன் கையிலேயே கொடுக்கிறேன். நம்ம ரெண்டு பேரும் போய் வாங்கிட்டு வரலாம் என்னென்ன வாங்கனும்னு சொல்லு போய் வாங்கிட்டு வரலாம். சரியா?” என்று அவர் கேட்டதும் வேலினிக்கு அப்படி ஒரு ஆனந்தமாக இருந்தது.

அவர் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டு, “அப்பா, குடும்பமா சேர்ந்து தொழில் செஞ்சு நிச்சியமா உயரத்துக்கு வருவோம். கவலையே படாதீங்க”, என்று கூறினாள் அவள்.

முதலில் அந்த தொகையை மொத்தமாக தாயின் கையில் கொடுத்துவிட்டாள். அவர் கடவுளின் முன்பாக அதனை வைத்துவிட, குடும்பமா அவர்கள் குலதெய்வத்தை வணங்கினர். அதன் பின்னே பணத்தை எடுத்துக் கொண்டு, இரண்டு நாளில் ஒரு நல்ல முகூர்த்த நாளாக தேர்ந்தெடுத்து, அந்த நாளில் மகள்கள் இருவரோடும் ஆறுமுகம் கடைக்கு சென்றார்.

கூடவே குருவையும் அழைத்து இருக்க அவனும் அங்கு வந்து சேர்ந்தான். அனைவரும் தேவையான பொருட்களை வாங்கினர். முக்கியமாக வேலினி, தந்தைக்கு என்று அவள் சொன்ன அந்த பேட்டரி மின்விளக்கு மற்றும் மின்விசிறி வாங்க மறக்கவில்லை.
இதற்கிடையில் குருவிற்கு ஒரு குழப்பம் மட்டும் இருந்தது. அதை அவளிடம் கேட்டான்

“வேலினி நீ ஏன் பாதி பணத்தை எடுத்திட்டு வர, மொத்தமா செலவு செய்ய யோசனையா இருந்தா, முக்காவாசி பணமாது எடுத்திட்டு வந்திருக்கலாம்ல. இன்னும் நிறைய பொருள் வாங்கி இருக்கலாமே” என்று அவன் கேட்க,

அதற்கு அவள், “இல்லை குரு. நான் இன்னொரு திட்டம் வச்சிருக்கேன். இப்போதைக்கு இந்த பொருள்லாம் வாங்கலாம். ஆனா என்ன பண்ண போறேன்னு நான் இப்ப சொல்ல மாட்டேன். அந்த பொருளும் வாங்கி எல்லாம் நல்லா வித்ததுக்கு அப்புறம் சொல்றேன்” என்று கூறினாள்.

“ஓகே நீ என்ன பண்ண போறேன்னு நானும் வெயிட் பண்ணி பாக்கிறேன்” என்று அவள் மீது முழு நம்பிக்கை வைத்து அவன் கூறினான்.

இவளுக்கு தன் தந்தை, நண்பன் என்று அனைவரும் அவள் மீது இத்தனை நம்பிக்கை வைப்பது உள்ளே பெரும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்த்தது.

முன்பை விட அதிக துணிச்சலோடு ஒவ்வொரு விஷயத்தையும் செயல்படுத்த ஆரம்பித்தாள்‌. ஆனால் எங்கேயும் அசட்டு துணிச்சல் என்பது இல்லாமல் அவள் செயல்கள் ஒவ்வொரு இடத்திலும் வெளிப்பட ஆரம்பித்தது.

பள்ளி பிள்ளைகளுக்கு கால் பரீட்சை முடிந்து விடுமுறை விட்டு மீண்டும் பள்ளி தொடங்கப் போகும் ஒரு வாரத்திற்கு முன்புதான் கடையை திறந்தனர். நல்ல நாள் பார்த்து கடை திறக்கப்பட முதல் இரண்டு நாட்கள் அவர்கள் சொல்லி இருந்த பெரிய பலகை வந்து சேராததால் அங்கு நிறைய பேருக்கு அந்த கடை இருப்பதே தெரியவில்லை.

அது வந்து சேர்ந்ததும், அதை மாட்டிய பின்னர் தான் அங்கு நிறைய பேருக்கு தெரிய வந்தது. கடைக்கு முன்பாக குழந்தைகள் விரும்பும் வகையில் பொம்மைகள் போல் இருந்த பொருட்களை நிறைய வைத்திருந்தனர்.

நிறைய பேர் அதைப் பார்த்து வாங்க வந்தனர். பின் பள்ளி மீண்டும் தொடங்குவதால் அதற்கு தேவையான பொருட்கள் என்று ஒவ்வொன்றாக வாங்க ஆரம்பித்தனர். கடை ஆரம்பித்து இரண்டு நாட்களில் இருந்து 10 நாட்களுக்குள்ளேயே நல்ல வருமானம் வந்தது.

தந்தையின் முகத்தில் மகிழ்ச்சி கூடியது. வீட்டு வேலை முடித்துவிட்டு தாயும் உதவ வந்தார். சிவகாமி பாட்டி கூட முதலில் மகனிடம் கேட்டு கேட்டு வியாபாரம் பார்த்துக் கொண்டு வந்தவர், இப்போது நன்றாக தேறி இருந்திருந்தார்.

இதற்கு இடையில் வேலினி தந்தையையும் ஒரே போல் மேல் சட்டை, கால் சராய் என்று மட்டும் தைக்கவிடாமல் வேறு ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று ஒரு புறம் யோசித்துக் கொண்டிருந்தாள்.

கடை திறந்து மூன்று வாரங்கள் ஆனபோது மீதம் இருந்த பணத்தில் நிறைய பொருட்கள் வாங்க வேண்டும் என்று தந்தையையும் குழலினியையும் அழைத்துக் கொண்டு கடைவீதிக்கு சென்றவள்.

தனக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி முடித்தாள். “இதெல்லாம் எதுக்கு பாப்பா? வாங்குவாங்களா?” என்று அப்பாவின் கேள்விக்கு, “நிச்சயமா வாங்குவாங்க. வேணா பாருங்க” என்று கூறி அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து கடையில் அடுக்கினாள்‌.

அவை எல்லாம் இங்கு கிடைக்கும் என்ற செய்தியையும் தகவலாக பலகையில் மாட்டி வைத்தாள். இதைப்பற்றி குருவிடமும் தெரிவித்து இருக்க அவனும், “இது எதுக்கு வேலினி?” என்றான்.
“இதெல்லாம் வித்ததுக்கு அப்புறம் சொல்றேன்” என்று அவள் மீண்டும் முன்பு போலவே அவனிடம் கூறிவிட, இவன் புன்னகையுடன் சரியென்று தலை அசைத்து வைத்தான், கைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பதை மறந்து.

அவள், “என்ன ஒன்னும் சொல்ல மாட்டீங்கறீங்க?” என்று கேள்வி எழுப்பிய பின்னே தான், தான் தலையை மட்டும் அசைத்திருக்கிறோம் என்பதை புரிந்து தலையில் தட்டிக் கொண்டு, “சரின்னு தலை அசைச்சே ப்பா”, என்றான்.

“அது சரி. அது எனக்கு எப்படி தெரியும்? இது வீடியோ கால் கூட இல்லை”, என்று அவள் சலித்துக் கொள்ள,

“சரிங்க மேடம்.. அந்த பிசினஸ் ட்ரிக்ஸ் என்னனு எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும். எனக்கு ஒரு சின்ன தொழில் பண்ண ஆசை இருக்கு.

நீங்க சொல்லி கொடுத்தீங்கன்னா நானும் அப்படியே கேட்டு தெரிஞ்சுக்கிட்டு முன்னேறிடுவேன். உங்க அளவுக்கு பெரிய அளவில இல்லைனாலும் கொஞ்சம் சின்ன அளவிலாவது முன்னேறிடுவேன்.”

“நிச்சயமா சூப்பரா சொல்லி தரேன். ஆனா நீங்க அதுக்கு பதிலா எனக்கு குரு தட்சணையான என்ன தருவீங்க குரு?” என்று அவளும் அவன் கிண்டல் பேச்சுக்கு பதிலடி கொடுக்க, இருவருக்கும் அன்றைய பொழுது மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!