Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

29_2 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  29_2

 

காலை ஏழு, ராஜன் வீடு:

 



Advertisement

“துளசி..” சத்தம் அல்ல.. கர்ஜனை என்று சொல்லலாம். சிங்கம் சிலிர்த்து நடந்து வந்தது. நடந்த வேகத்திலேயே வேட்டியை மடித்துக் கட்டியவன் கண் நடுக் கூடத்தை அளவிட.. அவன் ஏற்படுத்திய இடிமுழக்கத்திற்கு அங்கு அப்படி ஒரு நிசப்தம்.

 

சலசலத்த வீட்டில் திடீர் அமைதி.. அனைவர் பார்வையும் இவன் மேல் தான். அவனும் அவன் தோரணையும்.. ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வைக்கும் அவனோடு பகைமை பாராட்ட! கிலி பரவ, ஒரு உருவம் மட்டும் கால்களைப் பின்னோக்கி வைத்துக்கொண்டே நழுவ.. மூர்த்தியின் பார்வையில் விழுந்தான் ரிஷி!

Advertisement

 

Advertisement

சட்டையை முழங்கை வரை ஏற்றியவன்.. காப்பை மேல் ஏற்றிவிட்டு கொண்டே நடந்த வேகத்தில் சபை தன்னால் அவனுக்கு வழி விட்டது.

 

நேரே அவன் கால் பதிந்தது ரிஷியின் நெஞ்சில் தான். விழுந்தவன் எழும் முன்னே.. அவன் எழ முடியாமல் போனது. இவன் ஒரு கல்லூரி பேராசிரியர் என்று சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள்.

Advertisement

 

கால் முட்டி ரிஷியின் கழுத்தில் இருக்க.. “கேக்க ஆள் இல்லன்னு ஆடி பாக்கறியா? பார்த்துக்கோன்னு சொல்லி அனுப்பினா.. ஒரேயடியா அனுப்பிட்டேன்னு நினைச்சியோ?”

 

மாப்பிளை சார் வாயிலும் மூக்கிலும் இரத்தம்… கையும் காலும் அசைக்க முடியாமல் கிடக்க.. ரிஷியின் தாய் தான் ஓடி வந்தார். வலியில் முனகிக் கொண்டிருந்த மகனைக் காக்க.. கரம் கூப்பி வேண்ட.. “அவ கண்ணுல மட்டும் ஒரு சொட்டு தண்ணி வந்திருக்கட்டும்…. ஒருத்தர் மிஞ்ச மாட்டீங்க..” என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவன் பார்வை மீண்டும் கூடத்தைச் சுற்றி அலச.. துளசியில் சுவடு இல்லை.

 

“துளசி ….” மீண்டும் ஒரு முழக்கம்.

 

சிறுவன் ஒருவன் மூர்த்தியிடம் ஓடி வந்தான். “மூர்த்தி சார்?”

 

‘ம்ம்… துளசி?”

 

எங்கிருந்தோ.. “அமர்” என்ற அதட்டல் சத்தம். மூர்த்தியின் பார்வை சத்தம் வந்த திசை நோக்க.. மாதுரி அப்பொழுது தான் உள்ளே நுழைந்தாள். மூக்கிலும் நெற்றியில் காயம். தலையை சுற்றி கட்டுப் போட்டிருந்தாள். அவளிடமும் ஆராய்ச்சி பார்வை.

 

[the_ad id=”6605″]

 

 

 

பார்த்திருக்கிறாள் இவனை முன்பே.. அன்றும் இப்படி தான் சண்டைக்கு வந்தான். ‘பிள்ளையை பார்த்துக்கொள்ளக் கூட துப்பில்லையா?’ என்று முகத்திற்கு நேராக கேட்ட அவனே தான்.. இவனைக் கண்டிப்பாக இங்கு எதிர்பார்க்கவில்லை. ‘இவன் தான் கோமலின் கார்டியனா?’ தொலைப்பேசியில் பேசினாளே.. அமைதியானவனாகத் தான் தெரிந்தான். ஆனால் இன்று? அவன் பார்வையே அச்சமூட்டியது.

 

“துளசி?” அமரிடம் பார்வை செல்ல.. சிறுவன் மாடியைக் காட்டினான். “செக்கண்ட் லெஃப்ட் ரூம்”

 

ஒருவரையும் பொருட்படுத்தாமல் கால் மாடியை நோக்கி விரைந்திருந்தது. “துளசி…” உடலில் ஒரு பதட்டம். திருமணம் வைபவம் முடிந்து விட்டதா? துளசி என்ன ஆனாள்? ஏதேனும் ஆகியிருக்குமா? நெஞ்சு கனத்தது. படபடத்த இதயத்தோடு கதவருகே வர.. உடைபட்டிருந்த கதவு அரையும் குறையுமாகச் சாத்தி வைக்கப் பட்டிருக்க.. இதயம் படு வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

 

“துளசி மா…” கதவை தள்ளி உள்ளே நடக்க…. அறை அலங்கோலமாக இருக்கவும்… மூச்சு தடைப் பட ஆரம்பித்தது. கால் எதிலோ சிக்க.. குனிந்து பார்த்தான்.. புடவை. கை நடுங்கப் புடவையை எடுத்தவனுக்கு தெரிந்தது.. அது அவன் வாங்கி கொடுத்த பிங் நிற புடவை.

 

“துளசி மா..” எங்குச் சென்றாளோ.. அறையில் அவள் இல்லையே…

 

அறை முழுவதும் பார்வை ஓட்ட.. துளசி இல்லை. பயம் அடி வயிறு வரை சென்று பிடித்துக் கொண்டது.

 

அறையில் ஆங்காங்கே இரத்த துளிக்கள். அதை கண்டவனுக்கு உடல் முழுவதும் நடுக்கம்.

 

“துளசி மா..” குரல் கரகரத்தது. அவனுக்கே கேட்காத குரல்! ஒற்றை பார்வையில் எதிரில் இருப்பவனைக் கலங்க வைக்கக் கூடிய ஆண்மகன் கலங்குவானா? இதோ செய்வதறியாது கலங்கி நிற்கிறானே..

 

“மூர்த்தி சார்?” குளியலறையிலிருந்து சத்தம் வர…

 

“துளசி மா..” குரல் நடுங்கியது.

 

“தனியா இருக்கீங்களா?”

 

“ம்ம்… ஆ ஆஆமா துளசி..” குளியலறை வாசல் வந்திருந்தான்.

 

கதவை திறந்து அவள் வெளியே வரும்முன் அவன் ஜீவனில் பாதி வடிந்துவிட்டது. மார்புக்குக் குறுக்காக ஒரு கையும் வயிறுக்கு குறுக்காக மறுகையும் வைத்துக்கொண்டு தயங்கித் தயங்கி வெளியே வர முடியாமல் நின்றவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

மூர்த்தி வரவேண்டும் என்ற வேண்டுதல் விண்ணைத் தொட்டிருக்கும். இருந்தும் வரச் சாத்தியம் இல்லை என்று நினைத்தாள். ஆனால் வந்தே விட்டான். அவள் மூர்த்தி, அவளைத் தேடி வந்தே விட்டான். சத்தமில்லாத கேவல்… ‘மூர்த்தி சார்…’ வார்த்தை வரவில்லை. வெடித்துவிடும் அழுகை அடக்க வழி தெரியவில்லை.

 

இருவருக்கமே நா எழவில்லை. மழையில் நனைந்த கோழிக் குஞ்சு போல் உடல் நடுங்க நின்றவளை இன்னும் இன்னும் இறுக்கிக்கொள்ள.. அவன் அணைப்பு இன்னும் வேண்டும் என்றது. அவன் உடல் குலுங்கவும்.. அவளை விட அவன் பயந்துபோனது தெரிந்தது.

 

இருவருக்கும் இடையே இருந்த அவள் கை மெல்ல அவனை அணைத்துக்கொண்டது. அவன் அவஸ்தை அவளால் சகிக்க முடியவில்லை. அவன் முதுகைத் தடவிக் கொடுக்கவும்.. “சாரி சாரி சாரி… நிஜமாவே.. ரொம்ப சாரி துளசி….” குரல் கரகரத்தது.

 

“மூர்த்தி சார்..”

 

“ம்ம்..” அணைப்பை தளர்த்தினானில்லை.

 

“அழறீங்க..”

 

“ம்ம்..”

 

மெல்ல நிமிர்ந்தாள். கலைந்திருந்த தலையைத் தடவி விட்டவன் பார்வை கிழிந்திருந்த ரவிக்கையில். கிழிந்து தொங்கிய துணியை மேலே எடுத்துவிட்டவன் கண்ணிலிருந்து வழிந்த நீர் அவள் மேல் தெரிக்க.. “வந்துடீங்களே மூர்த்தி சார்” என்றாள், வழிந்த அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கொண்டே.

 

ஒன்றுமே பேசவில்லை. மூர்த்திக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவன் துளசி அலங்கோலமாக நிற்பதா?

 

அவன் உடைந்து போயிருக்க.. அவள் தேறியிருந்தாள்.

 

“ரிஷியா?” என்றான்.

 

முதலில் அவன் கேள்வி புரியவில்லை. மூர்த்தியின் வலி நிறைந்த பார்வை   விளக்க.. “அச்சோ… அப்பாவோட பொண்டாட்டிக்கும் எனக்கும் சண்டை மூர்த்தி சார். கல்யாண பொண்ணு உடுத்தற மாதிரி ஒண்ண கொண்டுவந்து என்னை போட்டுக்க சொன்னா.. நான் மாட்டேன் சொன்னேனா, அவ சட்டுன்னு என் புடவையை உருவிட்டா.. கைல கிடைச்சத வச்சு அவ மூஞ்சிய பேத்துட்டேன்.. அவ அடிக்க.. நான் அடிக்கன்னு சண்டை ஆகிடுச்சு! அதுகுள்ள யாரோ வரவும் பாத்ரூம்ல போய் பூட்டிகிட்டேன். கதவு பாதி திறந்து கிடக்கவும் ரொம்ப நேரமா அங்க தான்!! ‘ஆஸ்பத்திரி போயிட்டு வரேன்.. உனக்கு பார்த்ரூம்ல வச்சு தான் கல்யாணம்ன்னு’ சொல்லிட்டு போனா.. இன்னும் வரலியா அவ?”

 

மூர்த்தி வராது போயிருந்தால் அவள் வந்திருப்பாள், ரிஷியோடு!

 

முடியை வருடிக் கொண்டே, “உனக்கு ஒண்ணும் இல்லியே… நல்லா இருக்க தானே..?” பயம் மறைந்திருக்க, உள்ளுக்குள் ஒரு நிம்மதி.

 

“இல்ல மூர்த்தி சார். நான் நல்லா இல்ல! நீங்க இல்லாமா நான் நல்லாவே இல்ல மூர்த்தி சார்.” இறுக்கிக்கொண்டாள்.

 

அரை மணி நேரம் கழித்து வந்திருந்தால்.. இந்த கேள்விக்கான பதில் உண்மையிலுமே இதுவாகத் தான் இருந்திருக்குமோ..

 

ஊச்சந் தலையில் கன்னம் பதித்தவனிடம்..“உங்க கூடவே வச்சுபீங்களா என்னை..” முகம் பார்க்காமல் நெஞ்சில் புதைந்துகொண்டே கேட்டாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

சட்டென்று அவளைத் தன்னை விட்டுப் பிரித்தவன்.. “என்ன சொன்ன?” அவலாய் துளசியின் முகம் பார்க்க..

 

அவள் எங்கே அவனைப் பார்த்தாள். அவள் எதிரே இருந்த மார்பைத் தான் பார்த்திருந்தாள். புன்னகை முகமாய் நின்றிருந்தவள் நாடி பிடித்து முகத்தை உயர்த்தி… “ஓய்… என்ன(னை) பாரு..” என்றான் காதல் கைகூடிய களிப்பில்.

 

கண்கள் தழுவ.. உள்ளங்கள் உரச.. ஆனந்த களிப்பில் இரு இதயங்கள்.

 

“நிஜமா தான் சொல்றியா துளசி?” இருந்த கலக்கம் போன இடம் தெரியவில்லை. சாரலாய் ஒரு இதம் பரவியது. 

 

பதில் வார்த்தையாய் வரவில்லை… கன்ன சிவப்பே காட்டிக்கொடுக்க.. ஏதோ வாழ்வில் ஏறமுடியா எவரெஸ்ட் சிகரத்தை ஏறிவிட்ட பூரிப்பு அவனிடம். அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கினான்.

 

நெஞ்சோடு புதைத்துக்கொண்டவன் மனதில் பெருத்த நிம்மதி. விரும்பி புதைந்துகொண்டவளுக்கோ கூடு சேர்ந்த நிம்மதி. குருதி உடலில் எங்குச் சென்றாலும் இதயத்திடம் வந்துவிடுமாம். இதில் இருவருமே மற்றவரின் உயிர்முதல் (இருதயம்) என்பதால் இதயத்திடம் செங்குருதி வருவது இயல்பு தானே..

 

“ச்ச.. இது தெரியாம.. நல்லது செஞ்ச இந்த ரிஷி பையன் கைய கால உடச்சுட்டேன்.. நான் ரெண்டு வருஷமா சாதிக்க முடியாதத பத்தே நாள்ல சாதிச்சுட்டான். பச்.. இந்த ரகசியம் தெரிஞ்சிருந்தா.. ஆறு மாசம் முன்னமே அவன் கேட்டதும் டெல்லிக்கு ஒரு ட்ரிப் போட்டிருக்கலாம்!” சிரித்தவன் நெஞ்சில் இரண்டடி சுளீர் என்று விழ..

 

பெண்ணின் உள்ளங்கையை கன்னத்தோடு பதித்துக்கொண்டே.. “விஷயத்த உனக்கு புரிய வச்சு.. உங்கிட்ட சம்மதம் வாங்க என்ன பாடுபட போறேனோன்னு வந்தேன் துளசி மா.. மனசு நிறைஞ்சு போச்சு துளசி..”

 

“என்ன விஷயம் மூர்த்தி சார்?”

 

“நம்ம கல்யாணம்!”

 

வீட்டிற்கு வெளியே போலீஸ் சைரன் கேட்கவும்.. “நான் கதவுக்கு வெளில இருக்கேன்… முகம் கழுவி துணி மாத்து.”

 

அவன் காவலுக்கு நிற்க.. அடுத்த இரண்டாவது நிமிடம் சத்யன் வந்திருந்தான். சத்யன், மூர்த்தியை அங்கு எதிர்பார்க்கவில்லை. இவனோ… “என்ன டா.. சினிமா போலீஸ் மாதிரி ஆடி அசைஞ்சு வர..” தோளில் கைபோட்டுக்கொள்ள..

 

“அவசர டியூட்டியா வெளில போயிருந்தேன். நடு ராத்திரி வீட்டுக்குப் போனதும் துளசிக்கு ஏதோ அவசரம் உடனே என்னை பாக்கணும்னு சொன்னதா.. உன் வீட்டு மாமி சொன்னதா அப்பா சொன்னாங்க. இந்த ஃப்ளைட்ல வந்ததுக்கு ஓடி வந்திருந்தா கூட சீக்கிரம் வந்திருப்பேன்.. நீ எப்படி டா இங்க?”

 

“ஊர்ல ஏதோ பிரச்சினை ஓடுதுன்னு நினைக்குறேன். வீட்டுக்கு அக்கா வந்திருந்தாங்க.. உடனே ஊருக்கு வந்து சேருன்னு சொல்லிட்டு போனாங்க.  யாரோ ஒருத்திய என் தலைல கட்ட முடிவெடுத்திருக்காங்க போல.

 

இங்க, துளசி அப்பாக்கு முடியல.. ஒரு தரம் மனுஷன் கண்ண மூடறதுக்குள்ள பொண்ண பெத்தவன் கண்ணுல காட்டுங்கன்னு ரொம்ப கேட்டாங்கன்னு அனுப்பி வச்சேன். கிடைச்ச பத்து நாள் கேப்புல கல்யாணம் வரைக்கும் ரெடி பண்ணி வச்சிருக்கானுங்க.

 

நானும் தினமும் ஃபோன் மேல ஃபோனா போட்டா.. அவ கிட்ட பேசவே முடியறதில்ல. இது வேலைக்கே ஆகாதுன்னு அக்கா கிளம்பினதும் அடுத்த நாளே கிளம்பிட்டேன். நேத்து ஈவ்னிங் ஃப்ளைட்.. நைட்டே வந்துட்டேன். காலைல கையோட கூட்டிட்டு போகலாம்ன்னு கிளம்பிட்டு வர வழில உன் வீட்டுக்கு ஒரு ஃபோன போட்டா… அப்பா, துளசிக்கு ஏதோ பிரச்சினைன்னு சொன்னாங்க. அடிச்சு புடிச்சு இங்க வந்தா.. கல்யாண வீடு. ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சு!”

 

சத்தியனைப் பார்த்த துளசிக்கு உண்மையிலேயே கண் பனித்து விட்டது. மூர்த்தி வந்து நிற்பதில் நியாயம் இருக்க.. சத்யன் எடுத்துக்கொண்ட சிரமம்? பெண் நெகிழ்ந்து போனாள்.

 

மூர்த்திக்காக மட்டுமல்ல.. மூர்த்தியைச் சார்ந்த அனைவருக்கும் சத்யன் இருப்பான் என்பது நெகிழ்ச்சியான விடயம் தான். நட்பிற்கு ஆழம் உண்டா? மற்றவரைப் பற்றித் தெரியவில்லை.. மூர்த்தி சத்யன் நட்பின் ஆழம் மிக அதிகம். மரம் மட்டும் தான் நம் கண்களுக்குத் தெரியும்.  பூமியைத் துளைத்து அதையே தன் வேர்களால் இறுகப் பற்றி.. அத்தனை பெரிய மரத்தை நிற்க வைத்திருக்கும் வேரின் ஆழம் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அப்படிப் பட்ட ஆழம் தான் இவர்களுடைய நட்பினதும்.

 

“தாங்கஸ் ண்ணா..” என்றவளிடம்

 

“அண்ணான்னு வாய் நிறைய கூப்பிட்டுட்டு.. தாங்கஸ் சொல்லணுமா? நாளைக்கு இவனே உன்னை படுத்தினா சொல்லு.. முட்டிக்கு முட்டி தட்டுறேன்.. காலேஜ் எல்லாம் எப்படி போகுது?” சுத்யனோடு வந்த தில்லி போலீசை அனுப்பிவிட்டு, பேச்சுவாக்கிலேயே நடந்த விடயங்கள் எல்லாம் பேசி முடித்தனர்.

 

செய்வதற்கு ஒன்றுமில்லை என்றுவிட்டாள் துளசி. “ரிஷிய படுக்க வச்சதே போதும். எனக்கு அவன் மேல இல்ல… அப்பாவோட பொண்டாட்டி மேல தான் எரிச்சல் வருது. பண பிசாசு! என் கிட்ட எப்படியோ.. அப்பாவ நல்லா பாத்துக்கிறாங்க. அவங்கள நாம என்ன பண்ண? ஒண்ணும் வேண்டாம்.. உடச்ச மூக்கும்.. மண்டை வரைக்குமே போதும். அப்பாட்ட சொல்லிட்டு, இவங்கள தலை முழுகீட்டு கிளம்புவோம்” என்ற அவள் முடிவுக்கும் இரு ஆண்களும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

 

ராஜன் கடைசியாக ஒரு முறை கண்குளிர மகளையும் மருமகனையும் பார்த்தார். “நான் கொடுக்க தவறின அன்பையும் பாதுகாப்பையும் நீங்க தான் தரிங்க. ரெண்டு பேரும் நல்லா இருங்க..” மனம் குளிர்ந்து வாழ்த்தி அனுப்பினார்.

 

“சத்யா.. நாங்க நாளைக்கு நேரா ஊருக்கு கிளம்பறோம். கண்டிப்பா காலேஜ் திறக்கதுக்கு முன்ன கல்யாணம் இருக்கும். வர ரெடியா இரு!” என்ற நல்ல செய்தியைப் பேச்சின் இடையே சத்யன் காதில் போட்டு வைத்தான்.

 

யார் பேசி முடிப்பதாம்? வேறு யார்? அவன் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான சாட்சாத் பானு அக்காவே தான்!

 

மாலை, தில்லி இரயில் நிலையம்:

 

ஒன்றோடு ஒன்றாய் கலந்துபோன நெஞ்சங்கள் இரண்டு மௌனவிரதத்தில் கைக்கோர்த்து அமர்ந்திருந்தது, அடுத்த பயணத்தை எதிர்நோக்கி. நேற்று காணமல் போயிருக்க… நாளை பற்றின கவலையற்று.. இன்று.. இந்த நிமிடம்.. இந்த நொடி மட்டுமே உண்மை என்பது போல் விரல்களை கோர்த்துகொண்டு.. வாழ்வில் ஒன்றாய் இணைந்து இசை எழுப்பும் தருணத்தை எதிர்நோக்கி.. புல்லாங்குழலும்-தென்றலும்!

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!