Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இறப்பதற்கு முன் ஓர் இறப்பு

“மறதியால் ஒருவர் தன்மானம் இழப்பதில்லை. மற்றவர்களின் எதிர்வினையால் மட்டுமே அது நடக்கிறது”                                    —  யாரோ

கிராமமும் அல்லாது நகரமும் இல்லாத ஒரு இடைப்பட்ட பிரதேசம். காலையில் நடைப்பயிற்சி செய்பவர்கள் அந்த சிறுபனியையும் தாங்க முடியாமல் ஸ்வெட்டரும் குல்லாயும் போட்டிருந்தார்கள். சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்த வீட்டின் ஜன்னல் கதவுகளுக் கிடையே ஊடுருவியது. எம் எஸ் அம்மாவின் குரலில் சுப்ரபாதம் சூரிய ஒளியோடு, ‘ஒளியும் ஒலியும்’ நடத்திக் கொண்டிருந்தது. ராமநாதன் நாற்காலியில் அமர்ந்து கொண்டு காபியை ருசித்தபடியே தினசரியில் மூழ்கி இருந்தார் , ஒரு கீர்த்தனையை முணுமுணுத்தபடியே.

“என்ன மீனாட்சி! டிபன் ரெடியா?”

“ரெடியா இருக்கு. டேபிளுக்கு வாங்க” மீனாட்சி அடுக்களையிலிருந்து.



Advertisement

தட்டின் முன் அமர்ந்த ராமநாதன் சிறிது தண்ணீரை குடித்துவிட்டு,

” என்ன மீனாட்சி நாம இன்னிக்கு சிவன் கோவிலுக்கு போயிட்டு வரலாமா? ” என்றார்.

“என்ன எங்கேயும் கூப்பிடாதீங்க. என்னால நகர முடியாது. ரெண்டு காலும்  ‘விண்’ ‘விண்’ ன்னு வலிக்கிது. ஆளை விடுங்க”.

Advertisement

“சரி, சரி. ரொம்ப சலிச்சுக்காதே. அதவத்தூர் பக்கத்திலே ஒரு சிவன் கோவில் இருக்காம். போயிட்டு வந்துடறேன்”.

Advertisement

“ஏன் நம்ம உஜ்ஜீவ நாதர் கோயிலுக்கு போனால் பத்தாதா? அவ்வளவு தூரம் போகணுமா என்ன?”

“இவர நாம எப்ப வேண்டுமானாலும் போய் பாக்கலாம். ஆனா நா சொல்றது பழங்காலத்து கோவில். சோழர் காலத்து கோவிலாம். இன்னும் அதைப்பத்தி நிறைய விஷேஷமா எழுதியிருக்கான். காலையிலதான் பேப்பர்ல படிச்சேன். ஒண்ணும் குறுக்க பேசாத. நான் போயிட்டு வந்துடறேன்”

“எப்பவுமே பிடிவாதம் தான். சொன்னா எங்க கேக்க போறீங்க? ஆனா போனோமா வந்தமான்னு இருக்கணும். வயசு ஆயிட்டு இருக்கு. ஞாபகம் இருக்கட்டும். டாக்டர் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்”.

Advertisement

” ஆமா ஒனக்கும் வேலயில்ல அந்த டாக்டருக்கும் வேலயில்ல . என்ன மீனாட்சி 65 எல்லாம் ஒரு வயசா. 40 வருடம் கவர்மெண்ட் சர்வீஸ். எத்தனை பிரச்சனைகளை பார்த்திருப்பேன். சும்மா பயப்படாதே.”

“சரி. சரி. ஃபோன், பர்ஸ் எல்லாம் ஜாக்கிரதை” அவர் பிடிவாதத்தின் முன் தன் பேச்சு எடுபடாது என்றறிந்த மீனாட்சி, அவரிடம் துண்டை நீட்டினாள்.

டிபன் முடித்து கையை கழுவி துண்டால் துடைத்துக் கொண்டார்.

“சரி சரி, நான் அதையெல்லாம் பார்த்துக்கிறேன்”

“வழி எல்லாம் தெரியுமா?”

“எதுக்கு இத்தனை கேள்விகள்? நான் என்ன பம்பாய்க்கும் டெல்லிக்குமா  போறேன். இங்க இருக்கிற அதவத்தூருக்கு தானே”
சொல்லிக்கொண்டே தன்னுடைய ஃபேசினோவை இயக்கினார்.

———————————-

பெரிய தார் சாலையில் கொஞ்ச தூரம், சிறிய தார் சாலையில் நீண்ட தூரம், பின் மண் ரோடு என்று கோவிலை நோக்கி போய்க் கொண்டிருந்தார் ராமநாதன். சிறிது தூரத்தில் பாதை மாறிவிடுமோ என்ற சந்தேகத்தில்,

“ஐயா, இங்கு சிவன் கோயிலுக்கு வழி எந்த பக்கம்? “வழியில் எதிரில் வந்த இருவரிடம் கேட்டார்.

“சாமி, கிழக்காலே கொஞ்ச தூரம் போய், தெக்கால திரும்புங்க. அங்கு ஒரு ஒத்தையடி பாத வரும். அதுல நூறு அடி போனா கோவில்.”

“நல்லது. வரட்டுங்களா?” ராமநாதன் வண்டியை நகர்த்தினார்.

சொன்னபடியே ஒத்தையடி பாதை வந்தது. இருபுறமும் நெல் வயல். ‘என்ன செய்வது வண்டியை வைத்துவிட்டு நடந்து போலாமா, இல்ல வண்டியிலேயே போயிடலாமா?’

‘சரி 30 வருஷமா வண்டியை ஓட்டுரோம். இது முடியாதா என்ன?’ வண்டியை முடுக்கினார்.

சிறிது தூரம் சென்றபோது திடீரென்று இரண்டு மாடுகள் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு அவர் பாதையில் குறுக்கிட்டன. அவரும் ‘ஆ’, ‘ஊ’ என்று சப்தமிட்டு அவைகளை துரத்த முற்பட்டார். ஆனால் காலம் கடந்து விட்டது.

அவைகளில் ஒன்று அவரை முட்டவர,  தப்பிக்க அவர்  முயன்ற போது, கால் இடறி வயலில் விழுந்தார். வண்டி மறுபக்கம் விழுந்தது. மாடுகள் வந்த வேலை முடிந்தது போல் சாதுவாக வேறு பக்கம் போய் விட்டன. வயலில் விழுந்தவர் மெல்ல எழ முயற்சித்தார். வெள்ளையங்கி எல்லாம் சேறு. வேட்டியின் பின்புறம் முழுவதும் சேறு.  காலை முன் வைத்தால் வழுக்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.

தூரத்தில் இவர் படும் பாட்டை கவனித்த இருவர் ஓடி வந்தனர்.

“சாமி!  கையை குடுங்க” ஒருவர் இவருக்கு கையை நீட்ட, மற்றவர் வண்டி எடுக்க, மேலும் சிலர் ஓடி வந்தனர்.

ஒரு வழியாக அவரையும் வண்டியையும் ஏற்றி அவரை ஒரு ஆலமரத்தின் அடியில் கல்லிலான வட்டமான மேடையில் அமர்த்தி ஆசுவாசப்படுத்தினர். குடிக்க தண்ணீர் கொடுத்தனர்.

அதற்குள் ஊர் பஞ்சாயத்து தலைவர் அப்பக்கமாக வர, மக்கள் வழிவிட்டனர். விஷயத்தை கேட்டு அறிந்தவர்,

” ஐயா நீங்க எந்த ஊர்? எதுக்காக இங்க வந்தீங்க.  உங்க பேர் என்ன?”

ராமநாதன் மலங்க மலங்க விழித்தார் (சுஜாதாவின் ‘ஙே’ இதுதானோ?).

‘யார் இவர்கள். என்னை ஏன் கேள்வி கேட்கிறார்கள்’ என்பது போல் பார்த்தார்.

“சரி சரி, கூட்டம் போடாதீங்க. அவர் கொஞ்சம் பதட்டமா இருக்கார். கொஞ்சம் அவருக்கு நேரம் கொடுங்க ” என்றார் தலைவர்.

“டேய், குமாரு!  ஐயா வண்டிய சரி பாருடா. ஏதாவது பிரச்சனை இருக்கப் போகுது”  ஊர் பெரியவர் ஒருவர் குரல் கொடுத்தார்.

“சரிப்பா. அவர் செல்போன் எதாவது வச்சிருந்தாரா ? எடுத்தீங்களா?” என்றார் தலைவர்.

“ஐயா, செல்போன் வயலில் விழுந்ததில் முழுசா தண்ணி இறங்கிடுச்சு. எல்லாத்தையும் பிரிச்சு காய போட்டு இருக்கோம்னு சொன்னான் நம்ம செல்போன் ஜார்ஜ்”  என்றார் கூட்டத்தில் ஒருவர்.

“சரி. எப்படி இவர் பெயரையும் இடத்தையும் கண்டு பிடிக்கிறது? அவருக்கும் ஒண்ணும் சொல்ல தெரியல”

மீண்டும் ராமநாதனிடம் தலைவர் “ஐயா எங்கு இருந்து வரீங்க ஞாபகம் வருதா?”

தனக்குள் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று மட்டும் உணர்ந்த இராமநாதன், கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

“சரி சரி, எல்லோரும் இங்க இருந்து என்ன பண்ணப் போறீங்க? அவங்க அவங்க வேலையை பாருங்க. முருகா! அந்த மிலிட்டரி வேலுசாமியை கூட்டிட்டு வா. அப்படியே வீட்டுக்கு போய் என்னோட புது வேட்டி புது சொக்கா ஒண்ணு கொண்டு வா. அப்புறம் மத்தியான சாப்பாட்டுக்கு ஏதாவது கொண்டு வா.”

முருகன் கிளம்ப மற்றவர்களும் கிளம்பினார்கள்.

அழுக்கு வேட்டியும் அழுக்கு சர்ட்டுமாக ராமநாதன் தனித்து விடப்பட்டார். அவர் ஏதோ யோசிக்க முனைந்தார். ஆனால் ஒன்றும் தோன்ற மாட்டேன் என்கிறது.

அப்பொழுது சைக்கிள் டயரை ஒட்டி வந்த சிறுவர்கள் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“டேய் டேய், போங்கடா வேற வேலை இல்ல ” என்று விரட்டியபடியே வேலுசாமி வந்தார்.

“டேய் ஏதோ ஒரு லூசு போல இருக்குடா ” சிறுவர்கள் சிரித்துக்கொண்டே ஓடிப்போனார்கள்.

–———————————-

வீட்டில் மீனாட்சி இருப்புக் கொள்ளாமல் இஷ்ட தெய்வம் குலதெய்வம் என்று வித்தியாசம் இல்லாமல் எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டிருந்தாள்.

“சொன்ன பேச்சு கேக்குறது இல்ல. தனக்கு என்ன தோணுதோ அதையே செய்யணும். பிடிவாதக்கார மனுஷன்.”

நான்கு ஐந்து முறை போன் செய்தும் பதில் ஒன்றும் இல்லை. ‘ஸ்விட்ச் ஆஃப்’ என்றே வந்தது. ஒரு பக்கம் கோபம் மறுபக்கம் பயம். முடியாமல் சோபாவில் வந்து அமர்ந்தாள். ஏதேதோ நினைவுகள் வந்து ஓடின.

ஒரு பத்து நாட்களுக்கு முன்பு,

“குட் மார்னிங் டாக்டர்”

“வாங்க ராமநாதன். குட் மார்னிங். எப்படி இருக்கீங்க?” டாக்டர் சுந்தரமூர்த்தி.

“நான் நல்லா தான் இருக்கேன் டாக்டர். இவதான் தொணதொணன்னு. டாக்டர பாக்கணும் வாங்க வாங்கன்னு கூட்டிட்டு வந்துட்டா.”

“இஸ் இட் . எனி ஸ்பெசிபிக் ப்ராப்ளம்?”

“டாக்டர் இது இவருக்கு எடுத்த வருடாந்திர லேப் ரிப்போர்ட். இத உங்ககிட்ட காட்டிட்டு போலாம்னு தான் வந்தோம். அதோட இவரோட நடவடிக்கைல சில வித்தியாசம் இருக்கு”

“என்ன , அப்படியா ராமநாதன்?” என்று சொல்லிக்கொண்டே ரிப்போர்ட்டில் கண்களை மேய விட்டார் டாக்டர். சில இடங்களில் புருவங்கள் உயர்ந்தன. சில இடங்களில் கண்கள் குறுகியது.

“ராமநாதன் இங்கே உள்ள வாங்க”

தனி அறைக்குள் அழைத்துச் சென்றார். வெளியே வரும்பொழுது டாக்டர் மட்டும் வந்தார்.

மீனாட்சியின் முகத்தில் கலவரத்தை கண்ட டாக்டர்,
“ஒண்ணும் பயப்படாதீங்க ஒரு சின்ன டெஸ்ட் செய்ய படுக்க வெச்சிருக்கேன். சரி அவர் கிட்ட என்ன வித்தியாசத்தை பார்த்தீங்க?”

“அன்னிக்கு ஒருநாள் டாக்டர் வீட்டுக்கு முன்னாடி கீரைகாரியிடம்  பத்து ரூபாய்க்கு 100 ரூபாய் கொடுத்தார். நானும் ஏதோ சில்லரை மாற்ற கொடுத்திருப்பாரோன்னு நெனச்சேன். ஆனா மீதி சில்லறையை வாங்காமலே வந்துட்டார்.  அப்புறம் கீரைக்காரியா கூப்பிட்டு “அம்மா பத்து ரூபா குடுங்க. சாமி 100 ரூபாய் கொடுத்துட்டு அப்படியே போயிட்டார்.”

சில சமயம் சாதாரண வார்த்தைகள் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார். கண்ணாடி, தீப்பெட்டி , படித்த புத்தகம் என்று எதையும் எங்கே வைத்தேன் என்று தெரியாமல் தேடிக் கொண்டே இருக்கிறார்.”

“ஓஹோ சரி சரி, பயப்பட ஒன்றும் இல்லை. நான் ‘டேப்லெட்’ எழுதித்தரேன். விடாம குடுங்க. வேற ஏதாவது பிரச்சனை இருந்த கூட்டிட்டு வாங்க, பார்க்கலாம்”.

“டாக்டர் அவருக்கு என்ன பிரச்சனை?”.

“சொல்றேன். அவரை தனியா எங்கேயும் போக விடாதீங்க? இந்தப் பிரச்சனை அவருக்கு இருக்குன்னு அவருக்கும் தெரிய வேண்டாம். இந்த பிரச்சனைக்கு பேரு………”

சொன்னார்.

அவளுக்கு அந்த வார்த்தை வாயிலும் மனதிலும் நுழையவில்லை.

திடீரென்று நினைவுக்கு வந்தவள்,

“அய்யய்யோ நான் ஒத்தயா எங்க போய் அவரை தேடுவேன்” என்று கூவிக் கொண்டே வெளியே வந்தவள், பக்கத்து வீட்டு சுப்ரமணியிடம் சொல்ல அவர் வீட்டின் முன் நின்றாள்.

–———————————————–

வேலுசாமி மிலிட்டரியிலிருந்து ஓய்வு பெற்று கிராமத்தில் தன் நில புலன்களை பார்த்துக் கொண்டிருந்தார். தலைவர் வீட்டிலிருந்து வந்த உடைகளை ராமநாதனுக்கு உடுத்தினார்.

“சார் சென்ட்ரல் கவர்மென்ட்டா?”

“ஆமாம் ரயில்வேல ஆபீஸ்ரா இருந்தேன்”

ராமநாதனுக்கு இங்கொன்றும் அங்கொன்றுமாக ஞாபகம் வந்தது.

“ஆபீஸ் எங்கே?”

“பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல.”

“பென்ஷன் எல்லாம் கரெக்டா வருதா?”

“ஆம் வருது”

*வீடு எங்க இருக்கு?”

இந்தக் கேள்விக்கு மாத்திரம் தடுமாறினார்.

“சரி சார் ஒண்ணு பண்ணுங்க. அ ஆ இ ஈ.,….க. ங…. இப்படி எல்லா எழுத்திலேயும் ஏதாவது வார்த்தைகளை முயற்சி செய்து பாருங்கள். ஒருவேளை ஞாபகம் வந்தாலும் வரும்.”

“அதவத்தூர், அபிராமி……. என்னென்னவோ வார்த்தைகள் வந்தன. ஆனால் பலனளிக்க வில்லை.

“சார் உங்க செல்போன் சாய்ந்திரம் தான் சரியாகும்னு ஜார்ஜ் சொன்னார். உங்க வீட்டுக்காரம்மா நம்பரோ இல்ல தெரிஞ்சவங்க யாராவது இருந்தாங்கன்னா அவங்க நம்பரோ ஏதாவது ஞாபகம் இருக்குதா?”

“9..  6… 4 தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு எண்கள் வாயிலிருந்து வந்தன. வேலுச்சாமி எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்தார். ஒன்றும் பலனளிக்க வில்லை.

“ஐயா சரி சாப்பிட்டு கொஞ்சம் தூங்குங்க. ஏதாவது வழி பொறக்குதா பார்க்கலாம்.”

மரத்தடியிலேயே படுத்தனர். தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தனர். ராமநாதன் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். கடிகாரத்தின் முட்கள் நான்கு மணிக்கும் ஐந்து மணிக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்தன.

பெண்கள் சிரிக்கும் சத்தம் கேட்டு எழுந்தனர்.

“என்ன ராஜேஸ்வரி இம்புட்டு சத்தமா சிரிக்கிற. என்ன விசயம்?” வேலுச்சாமி.

“ஒண்ணும் இல்லண்ணே. நம்ம கல்யாணி ஆறேழு வருஷமா குழந்தை இல்லாம இருந்தாள்ல..”

“அதுக்கு என்ன இப்போ?”

“அதுக்கு என்னவா ……….? காத்தவங்களுக்கு தெய்வம் அள்ளிக் கொடுக்குமாம்”

“இழுக்காதே. விஷயத்தைச் சொல்லு …….”  வேலுச்சாமி.

“அவளுக்கு டவுன் ஆஸ்பத்திரியில ரெட்டை குழந்தை பொறந்திருக்கு” மீண்டும் சிரித்தாள்.

திடீரென்று ராமநாதன் நிமிர்ந்தார். ‘ரெட்டை ‘,’ரெட்டை’ என்று சொன்னவர் ‘ரெட்டை வாய்க்கால்’ ‘ஆமா என் வீடு அங்க தான் இருக்கு” ஏதோ புதிதாக கண்டுபிடித்தவர் போல் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

வேலுச்சாமியும் சந்தோஷத்தில் எழுந்து குதித்தார். இதற்குக் காரணமான ராஜேஸ்வரியை பாராட்ட அவளை நோக்கி ஓடினார். அவள் என்னமோ ஏதோ என்று ‘ஐயோ சாமி ‘ என்று கத்திக் கொண்டே ஓட ஆரம்பித்தாள்.

தன்நிலை வந்த வேலுச்சாமி தலைவரையும் ஜார்ஜையும் மற்றவர்களையும் கூப்பிட்டார்.

ஜார்ஜும் போனை சரி செய்து கொண்டு வந்திருந்தார்.
போனில் ஏதாவது நம்பர் கிடைக்குமா என்று தேடினார்கள்.
‘சுப்பிரமணியன் நெய்பர்’ என்ற நம்பருக்கு போன் செய்தார்கள்.

“சார், சுப்பிரமணி பேசுகிறீர்களா?”

“ஆமா. நீங்க யாரு?”

“நாங்க அதவத்தூர் பக்கத்துல   இருந்து  பேசறோம். உங்க பக்கத்து வீட்டுக்காரர்  வழி தவறி இங்கே வந்திருக்கார். அவரை அனுப்பி வைக்கிறோம் வீட்ல சொல்லுங்க தேட வேண்டாம்னு. சாருக்கு வீடு எங்கேன்னு தெரியலை. இப்பதான் சொன்னாரு ரெட்டை வாய்க்கால்னு. அதனால இப்ப நாங்க ஒரு ஆள வச்சு அனுப்புறோம். அவரு வண்டிய ரிப்பேர் பண்ணி நாளைக்கே அனுப்பி வைக்கிறோம். பயப்பட வேண்டாம்னு சொல்லுங்க”

“ரொம்ப நன்றி சார். வீட்ல பாவம் ஒத்தையில கவலபட்டுட்டு இருக்காங்க”.

“டேய் முருகா. சார நம்ம வண்டியில கொண்டு போய் அவர் வீட்டில விட்டுட்டு வா . பாவம் அந்த வீட்டுக்காரம்மா” தலைவர்.

ராமநாதனின் வீடு நெருங்கிக் கொண்டிருந்தது. வீடு மட்டுமல்ல.

அவரோட ‘அல்சைமர்ஸ்’ம் தான்.

அது –

இறப்பதற்கு முன் உள்ள இறப்பு.
—–——————————-

இரா.ஸ்ரீதரன்
வாசன்வேலி, திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!