Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

5ல் உன் கனவு 25ல் வெறும் கனவு

இங்கு பல பெற்றோர்கள், ஏன்? என் பெற்றோர்கள் உட்பட தன் பெண் பிள்ளைகளின் மனதில் விதைக்கும் ஆசைதான் இது. ஐந்து வயதில் “நீ என்ன ஆகப் போகிறாய்?”என்று கேட்டு, அதற்கான பதிலையும் அவர்களே குழந்தைகளின் மனதில் விதைத்து விடுவார்கள். ஆனால் 25 வயதில் உன் கனவு என்னவென்று கேட்க மாட்டார்கள். அது நிறைவேறியதா என்றும் பார்க்க மாட்டார்கள். அப்பொழுது அவர்களுக்கு அவர்களுடைய கனவு பெரிதாக தெரியும். திருமணம் என்னும் கனவு. நீ திருமணத்திற்கு பின்பு என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்பார்கள். உன் கனவை உன் கணவர் நிறைவேற்றுவார் என்பார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் பெண், பெண்ணாக மட்டும் இருப்பதில்லையே…

மனைவியாக

தாயாக

மருமகளாக

அவளுக்கு இருக்கும் கடமைகள் எண்ணற்றவை. இதற்கு இடையில் அவள் கனவு கனவாகி தான் போய் விடுகிறது.

நதியா தன் பெயருக்கு பின்னால் மூன்று பட்டங்களை முயன்று பெற்றவர். இன்று ஒரு பெண் ஒரு ஆண் என இரண்டு பிள்ளைகளின் தாய். கணவரும் மனைவியும் வேலைக்கு செல்கின்றனர். மனைவி கல்லூரி பேராசிரியர். அதனால் காலை 8 மணிக்கெல்லாம் கிளம்பி விடுவார். அதற்கு முன்பாக வீட்டில் சமைத்து வைத்துவிட்டு, பிள்ளைகளுக்கும் தேவையான சீர்உடைகளை எடுத்து வைத்து விட்டுச் செல்வார். குழந்தைகளை கிளப்புவது மட்டும் கணவரின் வேலை. அதற்கும் சாப்பாடு ஊட்டி விட அருகிலேயே கணவரின் தாய் இருக்கிறார். வேலை முடிந்து மாலை 6 மணி அளவில் வீடு திரும்பும் மனைவி, மீண்டும் வீட்டில் துணி துவைப்பது, பாத்திரம் விளக்குவது, என அனைத்து வேலைகளையும் செய்வார். இதற்கு நடுவில் பிள்ளைகளின் வீட்டுப் பாடத்தையும் அவர்களை எழுத வைப்பார். அப்பொழுது கணவர் என்ன செய்து கொண்டிருப்பார்? இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் கணவரோ தந்தையோ என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதை தான் செய்து கொண்டிருப்பார். இருக்கவே இருக்கிறது… தொலைபேசி அது தொலைபேசியாக இருந்தவரை தொல்லை இல்லை. ஆனால் இப்பொழுது கைபேசி ஆகிவிட்டதே. கணவன் உதவி எதுவும் செய்யாததால் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வரும். அப்படி சண்டை வரும்போது எல்லாம் கணவர் என்ன கூறுவார் தெரியுமா? நீ வேலைக்கு செல்வதால் தானே நமக்குள் சண்டை வருகிறது, நீ வேலையை விட்டு விடு என்பார் இது அநியாயம் அல்லவா?

வீட்டிலேயே இருப்பதற்காகவா ஒரு பெண் அவ்வளவு படிக்க வேண்டும் பெண்கள் வாழ்க்கை முன்னேறி விட்டது என்று சிலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அப்படி எல்லாம் ஒன்றும்  இல்லை.

முன்பெல்லாம் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு  எதற்கு என்றார்கள்.

அதன் பிறகு, என் பிள்ளை படிக்க வேண்டும்… ஆனால் என் மனைவி வேலைக்கு செல்லக்கூடாது என்றனர்.

இப்பொழுது என் பிள்ளை படிக்க வேண்டும்… என் மனைவி வேலைக்கு சென்றாலும் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் முடித்து வைத்து விட்டு செல்ல வேண்டும் என்கின்றனர்.

இந்த கதையில் வரும் கணவர் கூட அப்படித்தான் அவருடைய பிள்ளையை படிக்க வைக்கிறார். அவளுடைய கனவு என்ன என்று கேட்டால், அந்த பெண்ணிற்கு ஐந்து வயது தான் ஆகிறது. அவளுக்கு கனவு, நான் என்ன ஆக வேண்டும்? என்பது இந்த வயதில் புரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் யார் கேட்டாலும் கூறுவாள், “நான் டாக்டராக வேண்டுமென்று” .

இதுவும் அந்த கணவரின் ஆசை தான். அதாவது அந்த பிள்ளையின் தந்தை உடைய ஆசை. அல்லது தந்தை தாய் இருவரின் ஆசையாக கூட இருக்கலாம். படிப்பு போக, ஸ்கேட்டிங்கிலும் சேர்த்து விட்டிருக்கின்றனர். எல்லாம் எதற்காக? அந்த பிள்ளையின் கனவு வெறும் கனவாக கூடுமே. ஒருவேளை கனவு நிறைவேறினாலும், அவளுக்கு வர போகும் கணவர் அதாவது இந்த தந்தை தேர்ந்தெடுக்கப் போகும் ஒருவர் இவரை போலவே இருந்து விட்டால்? ஒரு நிமிடம் மனைவியின் தந்தையாக யோசித்துப் பார்த்தால்… பதில் கிடைக்கலாம்.

ஒரு பெண்ணின் வாழ்வு எப்பொழுதுமே ஒரு ஆண்ணுடைய கையில் தான் இருக்கிறது இதில் என்ன வரம் இருக்கிறது? ஒருவேளை இது தான் வரம் என்றால் வேண்டுமா அந்த வரம்?? 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!