Skip to content
Post Views: 152
வெந்நீரில் நீராடும் கமலம் 04
ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்ப்பிறையின் முன்பு அமர்ந்திருந்தான் இளங்கதிரோன். அவன் உள்ளே நுழையும்போது அவனை நிமிர்ந்து பார்த்தவள் மரியாதை நிமித்தமாக “வாங்க.” என்று அழைத்திருந்தாள். அவன் வந்து அவள் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்துவிட, அவனை எதுவும் சொல்லாமல் தன் கையில் இருந்த பேனாவை நிதானமாக மூடி அதனிடத்தில் வைத்தாள்.
Advertisement
தனக்கு முன்னே இருந்த கோப்பை சற்று நகர்த்தி வைத்தவள் “சொல்லுங்க சார்.. என்ன விஷயம்.” என்று அலுவலகத் தொனியில் கேட்க, இளங்கதிரோனிடம் பதிலில்லை.
தமிழ்ப்பிறை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக “என்ன விஷயம் சார்.” என்று அழுத்தம் கொடுக்க, அவளை காதலாக நோக்கியது கதிரோனின் கண்கள். ஆனால், இந்தப் பார்வைக்கெல்லாம் எதிர்வினையாற்றி விட்டால் அவளின் இத்தனை ஆண்டுகால பயிற்சி என்னாவது.
Advertisement
Advertisement
“என்ன விஷயம் ன்னு சொன்னா, என்னால முடிஞ்ச ஏதாவது உதவியை செய்றேன். ஒருவேளை சொல்ற அளவுக்கு ஏதும் பிரச்சனை இல்லன்னா, என் நேரத்தை வீணாக்காம கிளம்புறீங்களா.. ப்ளீஸ்.” என்று கம்பீரமான குரலிலேயே கூறினாள். கொஞ்சம் கூட இளக்கமே காட்டாத கத்திமுனைப் போன்ற கூர்மையான குரல் அவளுடையது.
“ஒரு உதவிக்காக தான் உங்களை தேடி வந்திருக்கேன் கலெக்டர் அம்மா..” என்று பக்கா கிராமத்தானாக அவன் பேச
Advertisement
“சொல்லுங்க..” என்றாள் ஒற்றைவார்த்தையில்.
“என் பொண்டாட்டியை ஏழு வருஷத்துக்கு முன்னாடி தொலைச்சுட்டேன் கலெக்டர் அம்மா. இப்போ அவ எனக்கு வேணும். நீங்கதான் மனசு வச்சு அவளை எனக்கு திருப்பிக் கொடுக்கணும்.” என்று இளங்கதிரோன் உருக்கமான குரலில் உருக
“பொண்டாட்டி மேல ரொம்ப அக்கறையோ உங்களுக்கு..” என்றாள் தமிழ்ப்பிறை. குரலில் நக்கல் தூக்கலாக வெளிப்பட்டது அவளையும் மீறி.
அவன் பேச வாய் திறக்க, அவனை கையை உயர்த்தி காட்டி தடுத்தவள் “மிஸ்ஸிங் கேஸ் எல்லாம் நான் டீல் பண்றது இல்ல. போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் கொடுங்க. அவங்க ஆக்ஷன் எடுப்பாங்க.” என்றாள்.
“அங்கெல்லாம் போய் என் பொண்டாட்டியைக் காணும்ன்னு சொல்ல முடியாது கலெக்டர் அம்மா. அவ ரொம்ப மரியாதையான இடத்துல இருக்கா…”
“ஒஹ்.. அப்போ ஏன் என்னை தேடி வந்திருக்கீங்க..”
“நீங்க மனசு வச்சா என் பொண்டாட்டியை தேடிக் கண்டுபிடிச்சு கொடுக்க முடியும். ஊருக்கெல்லாம் நல்லது பண்றிங்க. என்னை மட்டும் விட்டுடுவீங்களா என்ன??” என்றான் கதிரோன்.
அவனது பேச்சு சாதுர்யம் புதிதில்லையே அவளுக்கு. இப்படியே அவனை பேசவிட்டால் தன் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்குவான் என்பதால், அதோடு அவனை கத்தரிக்க முடிவு செய்து கொண்டாள் ஆட்சியர்.
“ஏதாவது உருப்படியான விஷயம் இருந்தா சொல்லுங்க. இல்ல.. எழுந்து வெளியே போய்டுங்க.. எனக்கு உங்ககிட்ட இப்படி வெட்டியா பேசுறதை தவிர, நிறைய வேலைகள் இருக்கு. என் நேரத்தை வீணாக்க கூடாது..” என்றாள் கட்டுத்திட்டமாக
“என் புகாருக்கு நீங்க இன்னும் முடிவு சொல்லலையே கலெக்டர் அம்மா…” என்று அப்போதும் கதிரோன் இழுக்க
“என்ன முடிவு சொல்லணும்.. என்ன சொல்லணும்… என்ன முடிஞ்சு போன கதையெல்லாம் பேசி, பழையபடி அவளை உன் கைக்குள்ள போட்டுக்கோ.. நாம பண்ற தில்லுமுல்லு அத்தனைக்கும் அவ தேவையா இருக்கா ன்னு சொல்லிக் கொடுத்தானா உன் அப்பன்.”
“இல்ல.. உன் அண்ணன் சொன்னானா.. அன்னைக்கு அவளை தொட்ட வரைக்கும் பத்தலை. நீ கட்டிக்கோ, உன் பேரை சொல்லி நான் அவளை வச்சுக்கறேன் ன்னு சொல்லி…” என்று அவள் முடிக்கும் முன்னமே
“தமிழ்…” என்று சத்தமாக அதட்டிக் கொண்டே எழுந்துவிட்டான் கதிரோன்.
அவன் அதட்டலுக்கும், அவன் வேகத்திற்கும் கொஞ்சம்கூட பயம் கொள்ளாமல் அசராமல் அவனை எதிர்கொண்டாள் தமிழ்ப்பிறை.
அவள் நிதானத்தில் அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள “என்ன உண்மையை சொன்னா வலிக்குதா… அப்படித்தான் இருக்கும். தேடி வந்து என்னை பலவீனப்படுத்த நினைச்சா, இப்படித்தான் வலிக்க வலிக்க வாங்கிக்க வேண்டி இருக்கும்…”
“ஆனா, இதுமட்டும் இல்ல. இன்னும் நிறைய வலி கொடுப்பேன். ஒவ்வொருத்தனும் பதில் சொல்லியாகணும் எனக்கு..” என்று ஏறத்தாழ கத்தியவள், தன்முன் இருந்த மணியை அழுத்தினாள்.
பழனி உள்ளேவர “சார் பேசி முடிச்சு பதில் வாங்கிட்டாங்க.. வெளியே அனுப்புங்க..” என்று கூறி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
அவர்முன் எதுவும் பேச முடியாமல், தமிழ்ப்பிறையை பார்வையால் வலியுடன் வருடிக் கொடுத்து விடைபெற்றான் கதிரோன். அவன் சென்ற பின்பும் வெகுநேரம் இயல்புக்கு வரமுடியாமல் திணறி நின்றாள் ஆட்சியர்.
அவனிடம் பேசியது, வலிக்க வைத்தது, வார்த்தைகளால் குத்தியது என்று அத்தனையும் அவள் பார்த்து பார்த்து திட்டமிட்டது தான். ஆனால், கண்ணெதிரில் அவன் கலங்கும் போது, இந்த பாழாய்ப் போன மனம் வலி கொடுக்கிறதே.. அதுவே பெரிய போராட்டமாக இருந்தது.
ஆனால், மனசாட்சி இல்லாத இந்த மனிதர்களை எதிர்கொள்ளும் நேரம் மனதின் வார்த்தைகளுக்கு எல்லாம் மதிப்பு கொடுப்பதாக இல்லை தமிழ்ப்பிறை. அவள் அழிக்கும் சக்தியாக ஆங்காரமாக ஆடி, கதை முடிக்க வேண்டிய நேரமிது. இங்கே எதற்கும் அவள் இடம் கொடுக்க முடியாது என்பதில் தெளிவாக இருந்தாள் அவள்.
அன்று மதியம் வரை கதிரோனின் தாக்கம் தமிழிடம் இருக்க, அதன்பின் அவளுக்கு கீழே இருக்கும் அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் இருந்தது. குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு நேரத்திற்கு வராத அதிகாரிகளுக்கு ஏற்கனவே கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டு இருக்க, இன்று அத்தனை பேரும் பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே ஆஜராகி இருந்தனர்.
அன்றைய கூட்டம் ஒரு இறுக்கத்துடனே தொடங்க, அதே இறுக்கத்தை முகத்தில் தேக்கியபடி பேச்சைத் தொடங்கினாள் தமிழ்ப்பிறை.
“பப்ளிக்கு சர்வீஸ் பண்ணத்தான் நாம எல்லாரும் படிச்சுட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கோம். ஆனா, எத்தனைப் பேர் நம்ம வேலையை சரியா செஞ்சுட்டு இருக்கோம். உண்மையை சொல்லணும்ன்னா, பலர் இங்கே பலவித தேவைகளுக்காக விலை போயிட்டு இருக்கீங்க.”
“உங்க தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி எல்லாம் எனக்கு எந்த கவலையும் கிடையாது. ஆனா, எனக்கு என் வேலை சரியா நடக்கணும். நான் இங்கே இருக்கவரைக்கும் நீங்களும் சரியா இருந்தாகணும். சரியா வேலை பார்க்க முடியாது ன்னு தோணினா, நீங்களே ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு கிளம்பிடுங்க. இங்கே இருந்துட்டு என்னை என் வேலையை பார்க்க விடாம தலைவலி கொடுக்க ட்ரை பண்ணா, எதிர்வினை அதைவிட பலமா இருக்கும்.”
“என்னடா நம்மைக் கூப்பிட்டு வச்சு சம்பந்தமே இல்லாம பேசிட்டு இருக்காங்களே ன்னு தோணலாம் உங்களுக்கு. ஆனா, நான் சொல்ற விஷயங்கள் புரிய வேண்டிய சிலருக்கு புரியும்.”
“நம்ம மாவட்டத்துல சரியான பெர்மிட் இல்லாத ஒரு லாரிகூட நாளையில் இருந்து ஓடக்கூடாது. படிக்கிற பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கு வந்தாகணும். படிக்கிறதை தவிர அவங்க வேற எந்த வேலையும் செய்யக்கூடாது.” என்று தமிழ்ப்பிறை கூற
“மேடம்.. லாரியை சீஸ் பண்றது கூட உங்க உத்தரவு ன்னு சொல்லிடுவோம். ஆனா, இந்த பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டு வர்றது அத்தனை சுலபமில்லை மேடம். சாப்பாட்டுக்கே வழியில்லாத பெத்தவங்க, அவங்க அடிமைகளா வேலை செய்யுறது இல்லாம பிள்ளைகளையும் அங்கேயே வேலைக்கு சேர்த்து விட்டுடறாங்க..”
“அவங்க மூலமா வர்ற அந்த நூறும் நூற்றைம்பதும் தான் பெரிய விஷயமா தெரியுது மேடம். இன்னும் சிலர் வாங்கின கடனுக்கு வட்டி கட்ட முடியாம பிள்ளைகளை கொத்தடிமைகளா வித்துட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க. அவங்களே மீட்கணும்ன்னு நினைச்சா கூட, அவங்க பிள்ளைகளை கடைசிவரைக்கும் மீட்க முடியாது அவங்களால..” என்று ஆதங்கத்துடன் கூறினார் வட்டாட்சியர்.
“இதுக்கெல்லாம் காரணம் பெத்தவங்க மட்டும்தான..” என்று தமிழ்ப்பிறை அவரிடம் கேட்க, பதில் கூற முடியவில்லை அவரால்.
“ஏழைகளோட ரத்தத்தை உறிஞ்சு அட்டையாகவே வாழத் தொடங்கி, இன்னைக்கு அவங்களை அடிமைகளா மாற்றி வச்சிருக்காங்க. நாம சரியானவங்களா இருந்தால், நாம அந்த முதலாளிகளை தான் குறி வைக்கணும். “
“இதுவரைக்கும் போனது போகட்டும்… இனி நாம நம்ம வேலையை சரியா செய்வோம். முதலாளிகளுக்கு விசுவாசம் காட்டுறதை நிறுத்திட்டு தொழிலாளிகள் மேல அக்கறைப்படுங்க..” என்று ஒரு குட்டு வைத்து அன்றைய கூட்டத்தை நிறைவு செய்தாள் அவள்..
அடுத்தடுத்த நாட்களில், தூத்துக்குடியின் முக்கிய சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டது. வாகனங்கள் வழி நெடுக நிறுத்தப்பட்டு முறையாக சோதனை செய்யப்பட, உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் அப்போதே பறிமுதல் செய்யப்பட்டது..
இந்த வாகனச் சோதனையின் போது இருசக்கர வாகன ஓட்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட, ஹெல்மெட் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, அதிக வேகம், குடித்துவிட்டு வண்டியை ஓட்டியது என்று அத்தனையும் கண்காணிக்கப்பட்டது.
கலெக்டர் உத்தரவு பிறப்பித்துவிட்டு அலுவலகத்தில் அமர்ந்திருந்தால் காட்சிகள் எப்படியோ, ஆனால், தமிழ்ப்பிறை களத்தில் நின்று விடாமல் அதிகாரிகளை விரட்டிக் கொண்டிருக்க, வேலைகள் வேகமாக நடந்தது.
அவளின் துரித நடவடிக்கையில் பழையம்பெருமாளின் லாரிகளில் மூன்றில் ஒரு பங்கு அடுத்த இரண்டு நாட்களில் அரசாங்க சொத்தாக மாறி இருக்க, சரவணபெருமாள் அங்கே ஆடிக் கொண்டிருந்தான். அவன் தந்தையின் பேச்சையும் மீறி, தமிழ்ப்பிறையை தானே எதிர்கொள்ள துணிந்துவிட்டான்.
அவனுக்கு நம்பிக்கையான சிலரை வைத்து, தமிழ்ப்பிறையை ஒரேடியாக ஒழித்துக் கட்ட அவன் ஒரு திட்டம் தீட்ட, அதற்கு முன்பாகவே அவனுக்கான குழியை வெட்டி இருந்தாள் தமிழ்ப்பிறை.
பழையம்பெருமாளுக்கு சொந்தமான மீன் பண்ணைக்கு முன் அறிவிப்பு ஏதுமின்றி சோதனைக்கு வந்து நின்றிருந்தாள் அவள். அவள் வந்த நேரம் பழையம்பெருமாள், சரவணபெருமாள் இருவருமே பண்ணையில் இல்லை. அங்கிருந்த வேலையாட்கள் “ஐயாவுக்கு சொல்றேன் மேடம். அவர் வர்ற வரைக்கும் உங்களை உள்ளே விடமாட்டோம்..” என்று தமிழ்ப்பிறையை வழிமறிக்க
“உங்க ஐயா வந்தால், வாசல்ல நிற்க சொல்லு.. முடிச்சுட்டு வந்து பார்க்கிறேன்..” என்றதோடு காவலர்களிடம் கண்ணைக் காண்பித்துவிட்டு உள்ளே நடந்தாள் அவள். அவளுடன் துறை ரீதியாக சில உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும், வேளாண் அதிகாரிகளும் வந்திருக்க அவர்களும் அவளுடனே உள்ளே நுழைந்தனர்.
மீன் பண்ணையில் வளர்க்கப்படும் மீன்கள், அதற்கான உணவுகள் என்று ஒவ்வொரு மூலை முடுக்கையும் கூட விடாமல் அதிகாரிகள் பிரித்தெடுக்க, மீன் பண்ணையின் ஒரு மூலையில் மலையக குவிக்கப்பட்டு இருந்தது மாட்டிறைச்சி கூடவே இறைச்சி கழிவுகள்.. அந்தப்பகுதியே ஒருவித துர்நாற்றம் வீசுவதுப் போல் இருக்க, மூக்கைப் பொத்திக் கொண்டு அந்த பகுதியை ஆராய்ந்தனர் அதிகாரிகள்.
அதிக உற்பத்திக்கு ஆசைப்பட்டு அந்த மாட்டிறைச்சியையும், இறைச்சி கழிவுகளையும் மீன்களுக்கு உணவாக கொடுத்திருப்பது அங்கே விசாரித்ததில் தெரிய வந்தது. அந்தப்பகுதியை மொத்தமாக காணொளியில் பதிந்து கொண்டவர்கள் அங்கிருந்த ஊழியர்களையும் கைது செய்து நிறுத்தி தங்கள் சோதனையை தொடர, மீன்களை பதப்படுத்தும் பகுதியில் கேன்களில் வரிசையாக சில திரவங்கள் அடுக்கப்பட்டிருக்க, அவற்றை சோதித்து பார்த்ததில் அது “பார்மலின்” என்பது தெரிய வந்தது.
தமிழ்பிறைக்கு அந்த திரவத்தின் பெயரைக் கேட்டதுமே புரிந்துவிட்டது. பணத்திற்காக எந்த அளவுக்கு இறங்கி இருக்கிறார்கள் என்று அருவருத்துப் போனாள் அவள். பிணவறையில் பிணங்கள் அழுகிவிடாமல் இருப்பதற்காக, அந்த இறந்த உடலின் மீது தெளிக்கப்படும் அமிலம் அது. அதை மீன்களின் மீது தடவி, அதை ஏற்றுமதி செய்து, அதில் அதிக லாபம் பார்த்திருந்தான் சரவணப் பெருமாள்.
தமிழ்ப்பிறை எதிர்பார்த்து வந்த அத்தனையும் அங்கே கிடைத்திருக்க, அவள் மனம் ஒருவகையில் திருப்தியாக உணர்ந்தது. அங்கிருந்த பழனியிடம் கூறி, பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்துவிட்டாள் அவள்.
அரைமணி நேரத்தில் சரவணபெருமாள் அந்த இடத்திற்கு வந்து சேர, நாற்காலி ஒன்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் தமிழ்ப்பிறை. அவன் இடத்தில் அவன் குற்றவாளியாக நிற்க, தமிழ்ப்பிறை அத்தனை நிமிர்வாக அமர்ந்திருந்தாள்.
சரவணப் பெருமாளுக்கு ஆத்திரம் தலைக்கு ஏற,. “ஏய்..” என்று உறுமலுடன் அவன் தமிழ்ப்பிறையை நெருங்கும் நேரம், காவலர்கள் அவனைப் பிடித்து நிறுத்தி இருந்தனர். அவன் சத்தத்திற்கெல்லாம் அசையாமல் தமிழ் அமர்ந்து கொண்டிருக்க, அவளைக் கொன்றுவிடும் உத்தேசத்தில் முறைத்துக் கொண்டிருந்தான் சரவணப்பெருமாள்.
அதிகாரிகள் அந்த பண்ணையின் மூலப்பத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருக்க, தொழில், வணிக உரிமை என்று அத்தனையையும் பெரிய மகன் பெயரிலேயே பதிந்து வைத்திருந்தார் பழையம் பெருமாள். அவரின் பாசம் தமிழுக்கு சாதகமாக அமைந்துவிட, அவன் அந்த இடத்திற்கு வந்த அடுத்த பத்தாவது நிமிடம் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தான்.
தமிழ் அவனைத் தாண்டி நடந்த நேரம் “இதுக்கெல்லாம் இருக்குடி உனக்கு.. நீ அனுபவிப்ப தமிழ். உன்னை என் கால்ல விழுந்து கெஞ்ச வைக்கிறேனா இல்லையா பாருடி..” என்று ஆத்திரத்தில் அவன் இரைய, சட்டென நின்று அவனைத் திரும்பி பார்த்தாள் ஆட்சியர்.
“வசனத்தையாவது மாத்துடா.. நீதான் இன்னும் அப்டேட் ஆகாமல் இருக்க ன்னு பார்த்தால், வசனமும் அப்படியே இருக்கு. என்ன சொன்ன.. என்ன சொன்ன கால்ல விழணுமா.. யார் யார் கால்ல விழறாங்க ன்னு பொறுத்திருந்து பாரு. உன் குடும்பத்தையே இந்த ஊர் கால்ல விழ வைக்கிறேன். ஒண்ணுமே செய்ய முடியாம புழுங்கியே சாவ நீ. நீ சாகாம போனாலும் நான் சாகடிப்பேன்.” என்று வனுக்கு மட்டும் கேட்குமாறு கூறியவள் வேகமாக அங்கிருந்து நகர்ந்து கொண்டாள்.
அந்த பண்ணையின் வாயிலில் பத்திரிக்கையாளர்கள் நின்றிருக்க, எப்போதும் தவிர்த்து விடுபவன் இன்று தானாகவே அவர்களை நெருங்கினாள். அவர்கள் கேட்ட விவரங்களை நிதானமாக வரிசைப்படுத்தியவள் அத்தனைக் கேள்விகளுக்கும் விரிவாக பதில் கொடுத்தாள்.
அது போதாதென்று, சரவணபெருமாள் மற்றும் அங்கு இருந்த மற்ற தொழிலாளர்கள் என்று அத்தனைப் பேரையும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி வழங்க, பத்திரிக்கையாளர்களிடமும் நல்ல பெயர்தான் ஆட்சியருக்கு.
அடுத்தநாள் நாளிதழ்களும், அன்றைய தலைப்புச் செய்திகளும் இதை விரிவான அறிக்கையாக வெளியிட, தமிழ்ப்பிறையின் இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டது.
அதேநேரம் காவல் நிலையத்தில் இருந்த சரவணப்பெருமாள் அவமானத்தில் குறுகிப் போயிருந்தான். பிறந்தது முதல் கிட்டத்தட்ட ஒரு இளவசரனைப் போலவே நடத்தப்பட்டவன் அவன். அதனால் தானோ என்னவோ, வளர்ந்து நின்றபோது கொடுங்கோல் அரசனாகவே மாறிப் போயிருந்தான்.
அவன் பணத்திமிருக்கும், மற்றவர்களை அடிமையாக நினைக்கும் அவன் குணத்திற்கும் சரியான தண்டனையை கொடுத்திருந்தாள் தமிழ். ஆனால், அதை தாங்கி கொள்ள முடியாதவன் அவளை இல்லாமல் செய்வதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி இருந்தான்.
அவன் அந்த காவல் நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்குள் தமிழ்ப்பிறையை முடித்து விடுவது தான் அவன் பட்டிருக்கும் அவமானத்தை துடைத்து எறியும் என்று வெகு நிச்சயமாக நம்பினான் அவன். அடுத்து வருபவர்கள் தங்களை நெருங்கவே யோசிக்க வேண்டும் என்ற நோக்கில் அவன் திட்டத்தை தீட்ட, தன் அடுத்த இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தாள் தமிழ்ப்பிறை.
error: Content is protected !!