Skip to content
Post Views: 2,383
ராஜு பாங்க் மேனேஜரை ஒரு ஓ.டி. விஷயமாக பார்க்க சென்று இருந்தவன் அவன் போனை சைலண்டில் போட்டு இருந்தான்.
அவரைப் பார்த்து பேசி விட்டு, திரும்பவும் அதை மாற்றவும் மறந்திருந்தான்.
பைக்கில் பஸ் ஸ்டான்ட் நோக்கி சென்றான்.
அங்கு கும்பகோணத்திற்கு அவசர வேலையாக சென்று இருந்த பரமேஸ்வரி திரும்பி வந்து அவன் வந்து வீட்டிற்கு அழைத்துப் போவதற்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருப்பார்.
Advertisement
இந்நேரம் அத்தை வந்திருப்பாங்களே, எங்க போனையே காணோம் என்று நினைத்தவன்,
சரி.. நாமளே கால் பண்ணுவோம் என்று போனை எடுத்தவன் அதிர்ந்து போனான்!
இருபதிற்கும் மேற்பட்ட மிஸ்டு கால்கள்.
Advertisement
பரமேஸ்வரியில் ஆரம்பித்து, சந்துரு, மகி என்று!
Advertisement
அய்யோ மகிக்கு அதுக்குள்ள பெயின் ஏதும் வந்துருச்சா?
அவ வயிற்றில் இருப்பது இரட்டைக் குழந்தைகள் வேறு! பதறியபடி மகியை அழைத்தான்.
போனில் அவள் குரல் கேட்ட பின் தான் அவனுக்கு கொஞ்சம் நிம்மதி!
Advertisement
“மகி.. சாரிடி.. நான் போனை சைலெண்டில் போட்டு இருந்தேன்! ஏன் இத்தனை போன்?
நீ இப்ப எங்க இருக்க?” என்று கேட்டு விட்டு மனைவியின் குரல் கேட்டு அடைந்த நிம்மதி, சில நிமிடங்கள் கூட நீடிக்க வில்லை!
“நான் இப்ப ஹாஸ்பிட்டலில் இருக்கேங்க. நீங்க சீக்கிரம் இங்க வாங்க” என்று ஹாஸ்பிடல் பெயரை சொன்னாள்.
“மகி உனக்கு என்னாச்சு? இல்ல வேற யாருக்கும் எதாச்சும் ஆகிடுச்சா? அம்மா எங்க? அவங்களுக்கு ஏதும் முடியலையா?”
“எனக்கு ஒண்ணும் இல்லங்க. அம்மாச்சிக்கும் ஒண்ணும் இல்லை! உங்க அண்ணனுக்கு தான் ஆக்சிடென்ட் ஆகி இருக்கு!
ரொம்ப நேரமா விழுந்து கிடந்திருக்கிறார்!
ஆனா பாவம்! யாருமே அவர பார்க்கல போல!
நம்ம சந்துரு அண்ணன் தான் பார்த்துட்டு அட்மிட் பண்ணிட்டு உங்களுக்கு கால் பண்ணி எடுக்காததால, எனக்கு போன் பண்ணிட்டாரு!
நீங்க சீக்கிரம் வாங்க” என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.
அவன் மருத்துவமனைக்கு விரைந்தான்.
அதற்குள் ராமுவை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
ரிசப்சனில் காத்திருந்தாள் மகி.
“ஏங்க.. இங்க இருக்கேன்” என்றவளிடம் ஓடி வந்தான் ராஜு.
“எப்படி ஆச்சு?” என்றவன்,
“நீ இரு.. நான் சந்துரு கிட்ட கேட்டுக்கிறேன்” என்று அவனைத் தேடி உள்ளே சென்றான்.
அவனைக் கண்டதும் ஓடி வந்தான் சந்துரு.
“டேய்.. எப்படிடா?” என்று கேட்ட ராஜுவிற்கு அழுகை வரும் போல இருந்தது.
“ஹிட் அண்ட் ரன்டா. அண்ணனை அடிச்சுப் போட்டுட்டு நிறுத்தாம போய் இருக்காங்க!
அடிச்சது தூக்கினதுல அவர் ரோடு ஓரமா ஒரு மரத்தடியில் விழுந்து கிடந்திருக்காரு.
அவரோட புல்லட் கொஞ்சம் தள்ளி விழுந்து கிடந்தது!
அவரை நிறைய பேர் கடந்து போய் இருக்காங்க.
அவர் கெட்ட நேரம், எவனோ குடிகாரப் பயல் குடிச்சுட்டு விழுந்து கிடக்கிறான்னு நினைச்சுட்டு யாருமே அவர காப்பாத்தல!
நான் அந்த பக்கமா போனவன், முதலில் வண்டியைத் தான் பார்த்தேன்.
நான் தானே உனக்காக அத புக் பண்ணி வச்சதும், ஃபேன்சி நம்பர் வாங்கி கொடுத்ததும்!
அதனால ராமு அண்ணன் வண்டி ஏன் இப்படி விழுந்து கிடக்குன்னு கொஞ்சம் இறங்கிப் போய் பார்த்தா அண்ணன் ரத்த வெள்ளத்தில் கிடக்காரு.
ரத்தம் பூராவும் மண் உறிஞ்சி இருக்கு! அதனால டக்குன்னு பார்க்கிறவங்க கண்ணுல அது படவே இல்லை!
உடனே உனக்கு போன் அடிச்சேன். நீ எடுக்கவே இல்லை!
அப்புறம் வேற வழியில்லாம மகிக்கு அடிச்சு, அதுவும் உடனே கிளம்பி வந்து ஹாஸ்பிட்டலில் கட்ட சொன்ன அட்வான்ஸ் அமவுன்ட்டும் உடனே நெட் பாங்கிங் மூலம் கட்டிடுச்சு. இப்ப ஆபரேசன் நடந்துட்டு இருக்கு!
என்னென்னமோ சொல்றாங்கடா..
கொஞ்சம் லேட் ஆகியிருந்தாலும் காப்பாத்தி இருக்க முடியாது.. அது இதுன்னு.
எனக்கே இவ்வளவு பதறுது.. மகி புள்ளதாச்சி வேற.. இங்க நிக்க வேண்டாம்னு டாக்டரே சொல்லிட்டாரு.
அதனால அது வெளியே வெயிட் பண்ணிட்டு இருக்கு” என்றான் சந்துரு.
“பார்த்துட்டு தான் வந்தேன். அண்ணிக்கு சொல்லியாச்சா?”
“ம்ம். அவங்களுக்கு மகியே சொல்லிடுச்சு. அவங்க டாக்ஸியில கிளம்பி வந்துட்டு இருக்காங்க.
அம்மாவுக்கு தான் இன்னும் தெரியாது”.
“வேண்டாம். ஆபரேசன் முடிஞ்சு வெளியே வரட்டும் அப்புறம் சொல்லிக்கலாம்” என்றான் ராஜு.
“அக்கா வந்துட்டாங்க” என்றபடி மகி அவர்கள் அருகே வர,
“மகி..நீ இங்க வர வேண்டாம்.
ரேடியேசன் இருக்கிற பகுதி. நீ அங்கேயே இரு” என்றபடி அவள் அருகில் சென்றார்கள் இருவரும்!
அதற்குள் சந்துரு ஓடிப் போய் வனிதா வந்து இறங்கிய டாக்சிக்கு செட்டில் பண்ணி அனுப்ப போய் விட்டான்.
கதறிக் கொண்டு விரைந்து ஓடி வந்தாள் வனிதா.
“அக்கா.. அக்கா. பதறாதீங்க.. ஒண்ணுமில்ல.
பெரிய மாமாவை சரியான நேரத்தில் அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சாச்சு.
நாம் இப்ப உள்ளே போக முடியாது. கொஞ்சம் இங்கயே உக்காருங்க”. என்றாள் மகி.
வனிதாவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வர, அடக்கியவள்,
தாம் இவ்வளவு கெடுதல் செய்தும், அத எல்லாம் மனசுல வச்சுக்காம..
இவங்களுக்கு போய் என்னவெல்லாம் பண்ணி இருக்கோம்.
பேசி இருக்கோம் என்ற குற்றஉணர்ச்சி வேறு சேர்ந்து கொண்டு அவளை மிகவும் அழ வைத்தது!
“அக்கா.. ப்ளீஸ் அழாதீங்க.. தைரியமா இருங்க. பாருங்க அவர் கூடவே தான் இருக்கார்.
டாக்டர் கிட்ட பேசியாச்சு. மாமா ஆபத்து கட்டம் எல்லாம் தாண்டியாச்சு” என்று ஆறுதல் சொன்னவள், டக்கென்று நினைவுக்கு வந்தவளாய்,
“பாப்பா ஸ்கூலுக்கு போன் பண்ணி சொல்லிடுங்க அக்கா.
சந்துரு அண்ணன் போய் அழைச்சுட்டு போய் அவங்க அப்பாயி கிட்ட விட்டுடுவாரு” என்று அவளுக்கு யாழினியை நினைவுப் படுத்த, அவள் சொன்னவாறே செய்தாள் வனிதா.
சந்துரு யாழினியை அழைக்க வர கிளம்ப, அதற்குள் பிரியாவும் அழுத படி அங்கு வந்து விட்டாள்.
பின் பரமேஸ்வரியும் கூட வந்து விட, ராஜு அவருடன் மகியை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
ஆபரேசன் முடிந்து ராமுவை ஐ.சி.யூவிற்கு மாற்றி விட்டார்கள்!
ஐ.சி.யூவில் ஒரு அட்டெண்டர் மட்டுமே கூட இருக்க அனுமதி!
அதுவும் அவர்களுக்கு என்று இருக்கும் ஒரு காத்திருப்பு அறையில்!
அதனால் ராஜு, “நான் இருக்கேன் அண்ணி. நீங்க வீட்டுக்கு போங்க” என்று சொல்லி அவளை வீட்டுக்கு போக சொல்ல,
அவள் மறுத்து அங்கேயே இருப்பதாக சொல்ல,
பின் நர்ஸ்கள் வந்து வற்புறுத்தி போக சொன்ன பின்னே,
ஒரு முறை தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொண்டு ஒரே ஒரு முறை அவளையும் ராஜுவையும் பார்க்க அனுமதித்தார்கள்!
ராமுவை உடல் முழுக்க கட்டுகளோடு பார்க்க பார்க்க மீண்டும் அழுகை வந்தது இருவருக்கும்!
அண்ணி முன்னால் தான் அழக் கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டான் ராஜு.
சந்துருவே மீண்டும் வந்து அவளையும் ராஜுவின் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டான்.
கூடவே ஒரமாக நின்று அழுது கொண்டிருந்த பிரியாவையும்.
மாமியாரைக் கண்டவுடன் கதறினாள் வனிதா.
“அத்தை.. அத்தை.. அவருக்கு ..” என்று விம்மியவளை,
“அவனுக்கு ஒண்ணும் ஆகாது. நீ தைரியமா இரு” என்று சொல்லியபடி தானும் அழுது விட்டார் கமலா அம்மா.
கோபம் இருந்தது தான் ராமுவின் மேல்!
ஆனால் அவன் அடிப்பட்டு கிடக்கும் போது அந்த கோபம் எல்லாம் காற்றில் போய் விட்டது அந்த அன்னைக்கு!
இருவரையும் அணைத்து ஆறுதல் சொன்னாள் மகி.
“என்ன அம்மாச்சி.. இப்ப தான் இவ்வளவு நேரம் நானும் புவனாவும் உங்களுக்கு அவ்வளவு தைரியம் சொல்லி வச்சுருந்தோம்.
பாருங்க பிள்ளை எப்படி பயப்படறா” என்று யாழினியைக் காட்டினாள்.
“என்னடி பிரச்சினை உங்களுக்கு? அதான் ராஜு எல்லாத்தையும் குடுத்துட்டு தானே வந்தான்?”
வனிதா அவள் வீட்டில் நடந்ததை சொன்னாள்.
“தினமும் ஒரு நாளைப் போல நாலு மணிக்கு எழுந்து சமையல் செய்து கிளம்பி போயிட்டு வர்றது எனக்கு முடியல அத்தை.
வேலைக்குப் போயிட்டு அலுத்து சலிச்சு வீடு வந்து சேர எட்டு மணி ஆகிடுது ஒரு நாளைப் போல!
அப்புறம் ராத்திரி சாப்பாடு வேற செய்யணும்.
நேத்து காலையில அவரையே தோசை ஊத்தி சாப்பிட்டுக்க சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
அவர் சாப்பிட்டாரா. இல்லையா, இல்ல சுகர் லோ ஆகி, இப்படி விழுந்து கிடந்தாரான்னு தெரியல.
பாவி.. ஒழுங்கா நான் தோசை ஊத்திக் கொடுத்துட்டு போய் இருக்கணும்!
அவர் குணம் தெரிஞ்சும் கொடுக்காம போனது என் தப்பு தான்!” என்று தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் அழுதாள் வனிதா!
“அய்யோ அக்கா.. ப்ளீஸ்..நடந்ததுக்கு நீங்க காரணம்னு எல்லாம் தேவையில்லாம நினைச்சு உங்கள நீங்களே ஹர்ட் பண்ணிக்க வேண்டாம்!
அது தான் இப்ப எல்லாம் சரி ஆகிடுச்சே” என்று ஆறுதல் சொன்னாள் மகி.
என்ன சொல்லியும் வனிதா விடிய விடிய உறங்கவே இல்லை!
விடிந்து விடியாத நேரத்தில் ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் போய் விட்டாள் அவள்.
“நானும் வரேன்” என்று சொல்லி ப்ரியாவும் அவளுடனே சென்று விட்டாள்.
மகி, பரமேஸ்வரி உதவியுடன், கமலா அம்மாவுக்கும் யாழினிக்கு காலை உணவு சமைத்து சாப்பிட வைத்து விட்டு தானும் உண்டு விட்டு மாத்திரைகள் போட்டுக்கொண்டு அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றாள்.
எல்லோரும் இருவர் இருவராக சென்று ராமுவைப் பார்த்து விட்டு வந்தார்கள்.
ராமு கண் விழித்துப் பார்த்து அம்மாவையும் வனிதாவையும் கண்டு விட்டு அழுதான்.
பின் அங்கிருக்கும் நர்ஸ் மெல்லியதாக ஆனால் உறுதியாக அவர்களை வெளியே போக சொல்லி விட்டார்.
“ஏங்க.. அக்கா அண்ணி ரெண்டு பேருமே ஒண்ணுமே சாப்பிடாம வந்துட்டாங்க.
அவங்கள கேண்டீன் கூட்டிட்டுப் போய் சாப்பிட வைங்க” என்று சொன்னாள் மகி.
“இல்ல.. ஒண்ணும் வேண்டாம். சாப்பிடற மனநிலையில நான் இப்ப இல்ல” என்று உறுதியாக மறுத்து விட்டாள் வனிதா.
ப்ரியாவும் வேண்டாம் என்றே சொல்லி விட்டாள்.
“அப்போ எதிர்க்கடையில போய் ஃப்ரெஷ் ஜூஸ் எதாச்சும் வாங்கிட்டு வாங்க” என்று ராஜுவை அனுப்பினாள் மகி.
ஜூஸ் வாங்க போன ராஜுவை வெகு நேரம் காணவில்லை!
ஆளைக் காணோம் என்று போன் செய்து பார்த்தாள் அப்போதும் ராஜுவின் போன் எடுக்க படவே இல்லை!
என்னாச்சு? என்று தவித்து கொண்டிருந்தவளின் போன் கொஞ்ச நேரம் கழித்தே அடித்தது!
எடுத்தால் ராஜு தான்!
“மகி.. நீ யார்கிட்டயும் ஒண்ணும் சொல்லாமல் முடிஞ்சா அக்காவை மட்டும் கூட அழைச்சுட்டு வெளியே கார் பார்க்கிங் பக்கமா வா” என்றான் ராஜு!
error: Content is protected !!