Skip to content
Post Views: 1,266
அத்தியாயம் – 5
கிரகம் : பூமி
Advertisement
நாம் அனைவரும் பல நேரங்களில், பல இடங்களில் இந்தச் சூழ்நிலையைச் சந்தித்திருப்போம். அதாவது, நாம் அறிந்த செய்திகளைக் கொண்டு நமது அறிவால் ஒரு கோட்டையைக் கட்டி வைத்திருப்போம். அப்படிப்பட்ட கோட்டையின் அடித்தளம், திடீரென்று ஒரு புதைகுழியாக மாறினால், அந்த மொத்த கோட்டையுமே சரிந்துவிடும்.

Advertisement
நந்தினியின் செமினார்–ஐ கவனித்துவிட்டு வந்த ஆதித்யனும் தற்போது தன் மனக்கோட்டை சரிந்த நிலையில் தான் இருந்தான்.
Advertisement
முதலில் ஆரியன் நந்தினியைப் பற்றிக் கூறியபோது, அவன் அந்த விஷயத்தைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தன் திறமை மீது முழு நம்பிக்கை கொண்ட ஆதித்யனுக்கு, ஏனோ ‘வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு’ என்பது நினைவில் வரவில்லை போலும்.
ஆனால், தற்போது அவள் பேச ஆரம்பித்த பிறகு, “ஆதி, நீ இத்தன வருஷமா படிச்ச எல்லா விஷயத்தையும் அவள் தூள் தூளாக சிதறடித்துக் கொண்டிருக்கிறாள்டா” என்ற எண்ணம் எழுவவதை தவிர்க்க முடியவில்லை.
“இந்தச் சின்ன பெண்ணால எப்படி…? இவ்வளவு ஆழமான சிந்தனையா?” என்று அவனால் வியக்காமலும் இருக்க முடியவில்லை.
Advertisement
ஆனால், இடையே பல நூற்றாண்டுகளாக போதிக்கப்பட்டு, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டக் கோட்பாடுகளை அவள் தவறு என்று கூறுவதையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இவ்வாறு சிந்தித்துக்கொண்டே அவன் வர, அவனுக்காக காத்திருந்த ஆரியன் அவனது சிந்தனையைக் கலைக்கும் விதமாக இடையிட்டான்.
“ஆதி, என்னடா ஆச்சு ? நந்து நான் சொன்ன மாதிரி பிரில்லியன்ட் பெர்சன்–னு இப்ப ஒத்துக்குறியாடா ?” என்று கேட்டான்.
பல்வேறு யோசனைகளில் மூழ்கியிருந்த ஆதித்யன், “ம்… ஆமாம்… இல்லை… என்ன கேட்ட?” என்று உளறினான்.
ஆரியன் குழம்பியவாறே, “ஆர் யூ ஓகே, ஆதி?” என்று கேட்டான்.
ஆரியனின் அளவெடுக்கும் பார்வையைக் கண்ட ஆதித்யன், “ஒன்னும் இல்லடா, ஐ ஆம் ஃபைன் நவ். நந்தினி உண்மையிலேயே ஒரு அறிவாளி டா. அவளோட மாடல்-அ (model) லார்ஜ் ஸ்கேல்ல எல்லா சூழ்நிலையிலயும் வேலை செய்யும்னு நிரூபிச்சுட்டா, சயின்டிபிக் வேர்ல்டுல ஒரு பெரிய திருப்புமுனை (breakthrough).
Classical Physics-ஸையே ஆட்டம் காண வைக்குற அளவுக்கு ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி கோட்பாடுகள் 1905 –இல் வெளிவந்திருந்தாலும், அப்ப இருந்த சயின்டிபிக் கம்யூனிட்டியால அது ஏத்துக்கப்படல.
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பல வருஷம் கழிச்சு தான் ஏத்துக்க ஆரம்பிச்சாங்க. அதே மாதிரி நந்தினியோட தியரி-ய ஒத்துக்குற அளவுக்கு நாம் இன்னும் விஞ்ஞானத்தில் வளரலனு தான் சொல்லனும்” என்று தன் மனதில் தோன்றியதை அப்படியேக் கூறினான்.
“அப்போ நந்தினியோட பிராஜெக்ட்ஸ் எல்லாம் நடைமுறைப் படுத்தவே முடியாதுங்கிறியாடா ?” என்றுக் கேட்டான் ஆரியன்.
அதற்கு, “நம்மால் முடிந்த அளவு முயற்சி செய்வோம்டா. ஆனா, அதுக்கு கொஞ்சம் இல்ல நிறையவே டைம் தேவைப்படும்” என்றான் ஆதித்யன்.
அவனுக்குத் தெரியவில்லை இனி வரும் காலங்களில் அவளுடைய கண்டுபிடிப்புகள் எவ்வளவு பயன்படப் போகிறது என்பதை.
ஆரியன், “சரி, நந்து காம்பட்டிஷன்-ல ஜெயிச்சுட்டாளா ?” என்றுக் கேட்டான்.
ஆதித்யன் கான்ஃபரன்ஸ் அறையில் நடந்ததைச் சொல்லத் தொடங்கினான்.
******
NOTE :
இனி PERPETUAL MOTION பற்றி பார்க்க போவதால், அதை பற்றிய ஒரு சிறு அறிமுகத்தைப் பார்த்துவிடலாம். தமிழில், இடையறா இயக்கம் அல்லது நீடித்த இயக்கம் அல்லது தொடரியக்கம் என்று கூறலாம். சரி, விஷயத்திற்கு வருவோம். நாம் அனைவரும் சின்ன வயதில் Law of Conservation of Energy (or First Law of Thermodynamics ) பற்றி படித்திருப்போம்.
அதாவது, ‘ஆற்றலை உருவாக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது; ஆனால், ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாற்ற முடியும்’ என்பதுதான். சுருக்கமாக, நாம் switch-ஐ தட்டினால், மின்விசிறி சுழல ஆரம்பிக்கிறது. இங்கு நாம் Electrical Energy-ஐ Mechanical Energy-ஆக மாற்றுகிறோம்.
அப்படியே Second Law of Thermodynamics-ஐயும் பார்த்துவிடுவோம். ‘எந்தக் கருவியும் 100% ஆற்றல் வெளிப்பாட்டுடன் இயங்காது’. உண்மைதானே ? ஆனால், தொடரியக்கம் இந்த விதிகளுக்கு விதிவிலக்கு.
எப்படி ? தொடரியக்கத்திற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், அந்தக் கருவியைத் தொடங்கி வைப்பதே. பிறகு, அதுபாட்டிற்கு இயங்கிக்கொண்டிருக்கும். ‘இயங்கிக்கொண்டிருக்கும்’ என்றால், எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், நிற்காமல் இயங்கிக்கொண்டே இருக்கும். இப்படி நடந்தால், நாம் ஆற்றலை உருவாக்குவது போல் ஆகிவிடும் அல்லவா ? அதுபோல, இங்கு நாம் குறைந்த அளவு உள்ளீட்டைக் கொடுத்து, பல மடங்கு உற்பத்தி பெறுவதால், 100% விட அதிகமாக ஆற்றல் கிடைக்கிறது.
சரி, உண்மையிலே தொடரியக்கம் சாத்தியமா ? பதில் : இல்லை. இப்போதைக்கு இது Hypothetical Idea தான்.
ஆனால், மனிதர்களை விட அதிக அறிவு படைத்தவர்களுக்கு ???
அதை விடுங்கள். இந்தப் பிரபஞ்சமே ஒரு சிறு புள்ளியில் ( Singularity ) இருந்துதான் உருவாகியிருக்கிறது. அப்படியென்றால், நமது பிரபஞ்சம் ஒரு Perpetual Machine-ஆ ???
******
விரைவிலேயே நந்தினி தன் செமினார்–ஐ எடுத்து முடிக்க, அதற்கு பிறகு, Permanent Magnets-ஐ வைத்து தான் உருவாக்கிய Model-ஐ டெமான்ஸ்ட்ரேட் செய்தாள். அங்கிருந்த மாணவர்கள் மட்டுமல்லாது நடுவர்களும் அதை ஆர்வத்துடன் கவனித்தனர். நந்தினி தனது கருவியில் இருந்த ஒவ்வொரு பாகத்தையும் விளக்கிக் கொண்டே, இறுதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து காட்டினாள். பின் அங்கிருந்த மற்ற மாணவர்கள் அனைவரும் தங்கள் சந்தேகங்களைக் கேட்டனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தயங்காமல் பதில் கூறினாள் நந்தினி.
பின்னர், நடுவர்கள் தங்களுக்குள் பேசிவிட்டு, கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர்.
“Nandhini, right ? Your idea is outstanding and mindblowing. You are the first one to prove perpetual motion mathematically. But many scientists had demonstrated Perpetual motion using Permanent Magnet Generators. So, What is the innovative thing in your machine ?” என்று ஒருவர் கேட்டார்.
(“நந்தினி, சரியா? உங்கள் யோசனை மிகச்சிறந்த மற்றும் பிரம்மிக்க வைக்க கூடியது. நிரந்தர இயக்கத்தை கணித ரீதியாக நிரூபித்த முதல் நபர் நீங்கள்தான். ஆனால், இதற்கு முன்னரும் பல விஞ்ஞானிகள் நிரந்தர காந்த ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி இடையரா இயக்கத்தை நிரூபித்துள்ளனர். எனவே, உங்கள் கருவியில் உள்ள புதுமையான விஷயம் என்ன ?” என்று ஒருவர் கேட்டார்.)
நந்தினி, “As you said, sir, Permanent Magnet Generators have been found with life expectancy of 20-25 years. So, they are not Perpetual. But, I could assure you that my machine is Perpetual, Sir. When I said Perpetual, I meant it” என்றாள்.
(நந்தினி, “நீங்கள் சொன்னது கரெக்ட், சார். 20-25 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட நிரந்தர காந்த ஜெனரேட்டர்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அவை இடையரா இயக்கம் அல்ல. ஆனால், என் இயந்திரம் தொடர்ந்து இயங்கக்கூடியது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், சார். நான் நிரந்தரம் என்பதை அழுத்திக் கூறுகிறேன்” என்றாள்.)
ஆதித்யன், “We appreciate your efforts, Nandhini. But what we think is, we need some time to analyse your proofs and to test the falsifiability of your theory. Everyone here knows the gravity of this discovery. We are standing at the point where laws of physics fails. So, be patient and we have to discuss this” என்றான்.
(ஆதித்யன், “உங்கள் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம், நந்தினி. ஆனால் நாங்கள் நினைப்பது என்னவென்றால், உங்கள் சான்றுகளை பகுப்பாய்வு செய்வதற்கும் உங்கள் கோட்பாட்டின் பொய்யான தன்மையை சோதிப்பதற்கும் எங்களுக்கு சிறிது நேரம் தேவை. இந்தக் கண்டுபிடிப்பின் ஆழம் இங்குள்ள அனைவருக்கும் தெரியும். இயற்பியல் விதிகள் தோல்வியடையும் இடத்தில் நாம் அனைவரும் நிற்கிறோம். எனவே, பொறுமையாக இருங்கள், இதைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டும்” என்றான்.)
நந்தினி மனதில் ஏற்பட்ட வருத்தத்தை மறைத்துக்கொண்டு அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டாள்.
******
ஆதித்யன் நடந்ததை சொல்லி முடிக்க, ஆரியனுக்கோ தலையைப் பிய்த்து கொள்ளும் நிலை தான். “இவ்வளவு நேரம் நல்லா தானே பேசிட்டு இருந்தான்” என்று மனதுக்குள் நினைத்து கொண்டான். அவன் ஏதோ சொல்ல வருவதற்குள், நேரம் ஆகிடவே, ஆதி அவனிடம் விடைபெற்று சென்றான்.
பிறகு, சிறப்பு விருந்தினருள் ஒருவர் ‘Excello’ விருதை ஒரு மாணவருக்கு அறிவிக்க, விழா இறுதிக் கட்டத்தை நோக்கிச் சென்றது. கல்லூரியின் சேர்மன் வந்து நன்றி உரை கூறி விழாவை முடித்து வைத்தார்.
ஆனால், நந்தினியோ இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் பெரிதும் கவலை படவில்லை. ஆனால், அவளிடம் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது என்னமோ உண்மைதான்.
ஆரியன் இடையில் தனது காரை எடுத்துவர ஏற்பாடு செய்திருக்க, நந்தினியுடன் அவன் வெளியேரும்போது, அவர்களுடன் ஆதித்யன் இணைந்துக் கொண்டான்.
“மிஸ்.நந்தினி, நீங்கள் விரும்பினால், உங்களது கோட்பாடுகளை நிரூபிக்க என்னால் சில உதவிகளைச் செய்ய முடியும். எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால், உங்களது இடைக்கால இன்டர்ன்ஷிப்க்கு என்னால் அனுமதி பெற்றுத் தர முடியும்” என்றான் ஆதித்யன்.
நந்தினிக்குத் தான் கேட்டது உண்மையா பொய்யா என்று ஒரு நிமிடம் கிரகிக்க முடியவில்லை. புரிந்த பிறகு அவளுக்குத் தலைகால் புரியவில்லை. அதில் ஆரியனும் மகிழ்ச்சியாக உணர்ந்தான்.
அப்போது ஆரியன் கவனிக்காவிடினும், நந்தினியின் முகத்தையே பார்த்திருந்த ஆதித்யனுக்கு நந்தினியின் கருவிழிகள் தங்க நிறமாக மாறியது தெரிந்தது.
மறுபடியும் அவன் மனதில் சந்தேகங்கள் எழுந்தன. “எப்படியும் இவள் ஜெயஸ்ரீ அத்தையாக இருக்க முடியாது. ஒருவேளை, அவரது மகளாக இருக்குமோ? அப்படியென்றால் நந்தினி என்னுடைய அத்தை மகளாக இருப்பாளோ ?” என்ற எண்ணமே அவன் மனதில் இனம்புரியாத பரவசத்தை ஏற்படுத்தியது.
பிறகு, “ஏன் தாத்தா தன்னிடம் அத்தை இறந்ததாகக் கூற வேண்டும்? தந்தை ஏன் அவ்வப்போது அவரும் அத்தையும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தைப் பார்த்து கண்கலங்க வேண்டும்?” என்று யோசித்தான்.
இதற்கான விடைகள் அவனது பெற்றோரிடம் மட்டுமே இருக்கும் என்று நினைத்தவன், அன்று இரவே சென்னை செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான் ஆதித்யன்.
இதெல்லாம் சில நொடிகளில் முடிந்துவிட, நந்தினியிடம், “ஆனால், அதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு நந்தினி” என்றான் ஆதித்யன்.
நந்தினியும் ஆரியனும், அவனை என்னவென்று பார்க்க, அவனோ சிரித்தவாறே, “எனக்கும் ஆரியனுக்கும் ஒரே வயசு தான். அதனால, என்னையும் ஆதித்யன்-னோ இல்லனா ஆதி-னோ தான் நீ கூப்பிடணும் “ என்றான்.
என்ன சொல்லப் போகிறானோ என்று ஆவலாக இருந்த நந்தினிக்கு அவன் கூறியதை கேட்டதும், ‘ஃப்பூ, இவ்வளவு தானா ?’ என்றாகி, சற்று தயங்கியபடியே, “ஓகே, ஆதி” என்றாள்.
ஆதித்யன் புன்னகையுடன், “குட் லக், நந்தினி” என்றான்.
******
கிரகம் : கயா
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, நீர் சூழ்ந்திருந்தது. பெருங்கடல் போல எல்லை இல்லாமல் கயா கிரகத்தின் மீது படர்ந்து இருந்தன அந்த நீர் படுகைகள்.
அந்தப் பெருங்கடலுக்கும் கயா கிரகத்தினர் பாதுகாப்பு மண்டலம் அமைத்திருந்தனர். தண்ணீருக்கு மேலே பல கயா கிரக வீரர்கள், கோழி தன் முட்டைகளை அடை காப்பது போல காத்துக் கொண்டு நின்றிருந்தனர்.
நீருக்குள் சென்றால் எங்கும் இருட்டு. ஒரு சிறு உயிரினம் கூட அந்தப் பெருங்கடலில் தென்படவில்லை. கீழே செல்ல செல்ல அந்தக் கடலின் ஆழ் மட்டத்தில் ஒரு பெரிய கோட்டை ஒன்று, ‘இந்தப் பெருங்கடலால் கூட என்னை அசைக்க முடியாது’ என்று மார்தட்டியபடி கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.
அது வெலாரிஸ் கோட்டை போன்று அழகாக இல்லாவிட்டாலும், கண்ணைக் கவரும் வண்ணம் இருந்தது. இன்னும் சற்று உற்று நோக்கினால், ஐயகோ… அந்தக் கோட்டையை இரண்டு ராட்சச டிராகன்கள் வேகமாகச் சுற்றிச் சுழன்று பாதுகாத்துக் கொண்டிருந்தன. அவற்றின் வாயிலிருந்து எரிமலை குழம்புகள் வேறு வழிந்து கொண்டிருந்தன.
இவ்வளவு பாதுகாப்புடன் அந்தக் கோட்டைக்குள் இருப்பவர்கள் யார்? என்ற கேள்வி நம்மில் எழும்.
அவர்கள் செலினாவால் அங்கீகரிக்கப்பட்டு, சீரஸால் பதவி அளிக்கப்பட்ட, கயா கிரகத்தின் எழுவர் வழிவந்த சிற்றரசர்கள் தான். கடந்த முறை கன்வர்ஜென்ஸ் ஏற்பட்ட பொழுது, ப்ரொமேத்தியஸால் தோற்கடிக்கப்பட்ட சிற்றரசர்கள் தான் இன்றுவரை இந்தப் பெருங்கடலின் அடியில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கோட்டைக்குள்ளே சிற்றரசர்கள் அனைவரும் தங்களது தேஜஸ் குறைந்து, பல ஆண்டுகள் வெளியுலகைப் பார்க்காமல், மிகவும் சோர்வோடு காட்சியளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் கண்களில் இருந்த ஒளி மட்டும் சிறிதும் குறையவில்லை.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பெருங்கடல் சிறையில் இருந்தாலும், அவர்களது செலினாவின் மீது உள்ள நம்பிக்கையோ அல்லது சீரஸ் மீது கொண்டிருந்த விசுவாசமோ அல்லது எழுவர்கள் மீது இருந்த பற்றோ சிறிதும் குறையவில்லை அவர்களுக்கு.
இப்பொழுது அவர்களுக்குள் ஒரு பெரிய விவாதமே நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் ஒரு காவலன் மறைமுகமாக அவர்களுக்குக் கூறிச் சென்ற செய்திதான்.
“ப்ரொமேத்தியஸ் இப்போது போருக்குத் தயாராக புதிய யுக்தி ஒன்றை கண்டுபிடித்து விட்டான். அதைச் செயல்படுத்த ஒவ்வொரு கிரகத்திலும் இருக்கும் உயிரினங்களைக் கடத்தி வரச்சொல்லி உத்தரவிட்டிருக்கிறான். இப்போது நாம் என்ன செய்வது ?” என்று கேட்டார் மெட்லடன்.
“ப்ரொமேத்தியஸ் ஒரு பெரிய அறிவாளி தான். ஆனால், அவனது அறிவை இப்படியா வெளிப்படுத்த வேண்டும் ? இன்னும் அவன் சிறிது கடினமாக யோசித்தால், அவன் சோல் பாக்ஸையே திறக்கக் கூடும். அதற்குள் நாம் ஏதாவது செய்ய வேண்டும். இந்த கன்வர்ஜென்ஸின் பொழுது நாம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் இந்த அண்டச் சராசரமே அழிந்து விடும்” என்றார் ஆர்கஸ்.
“அதற்கு முதலில் நாம் இங்கிருந்து தப்பிக்க வேண்டும். அதற்கு ஏதாவது வழியை யோசியுங்கள்” என்றார் நிகேடர்.
“நமக்கு இருந்த ஒரே வழி பொசய்டன் தான். இங்கேயும் ப்ரொமேத்தியஸ் தனது புத்தி சாதுரியத்தை காட்டியுள்ளான். அவன் பிரதம அமைச்சர் பொசய்டனை, ஏதோ கட்டளையிட்டு அனுப்பி உள்ளான். இப்பொழுது அவரிடமும் உதவி பெற முடியாது” என்றார் எரேகன்.
“நமக்கு இருந்த ஒரே வழியும் மூடி விட்டதா ? இப்போது நாம் என்னதான் செய்வது ? பேரரசர் சீரஸ் மட்டும் இப்போது இருந்தால், நமக்குப் பக்கபலமாக இருந்திருப்பார். ஆனால், அவரும் அரசி மினர்வாவும் நமது எதிர்காலத்துக்காக அவர்களது உயிரைத் தியாகம் செய்து விட்டனர். அந்தக் குழந்தை என்ன ஆயிற்றோ தெரியவில்லை?“ என்று வருத்தத்துடன் கூறினார் ஹெஸ்பரஸ்.
“அதை பற்றிய கவலை தேவையில்லை. செலினா சரியான நேரத்தில் அந்தக் குழந்தையை கயா கிரகத்துக்கு அழைத்து வருவார். அவருக்கு இந்நேரம் அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்கும். தேவையான நேரத்தில் அந்தக் குழந்தைக்கு கயா கிரகத்துச் சிந்தனைகளைக் கொடுப்பார்” என்றார் க்ரோனன்.
“நாமும் அதை நம்பித்தான் இருபத்து மூன்று ஆண்டுகள் கிட்ட வாழ்ந்து விட்டோம். ஆனால், கன்வர்ஜென்ஸின் பொழுது அந்தக் குழந்தை வந்தாலும் அந்தக் குழந்தையிடம் எவ்வளவு திறமை இருந்துவிடும் ? எப்படிச் சக்திவாய்ந்த ப்ரொமேத்தியஸை அதனால் எதிர்க்க முடியும் ?” என்று கேட்டார் மெட்லடன்.
“அதைவிட நமக்கு இப்பொழுது ஒரு பிரதானமான பிரச்சனை இருக்கிறது” என்றது ஒரு குரல்.
இதுவரை, பேச்சிலே ஈடுபடாமல் இருந்தவர் பேசவும், அனைவரும் அமைதி காத்தனர். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வல்கன். அவருக்கும் கயா கிரக அரசுக்கும் முன்பொரு காலத்தில் நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் சீரஸின் நெருங்கிய நண்பர் மட்டுமல்லாது மினர்வாவின் அண்ணனும் கூட.
அனைவரும் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்க, “ப்ரொமேத்தியஸ் ஈரின் கல்லை தேடத் தொடங்கி விட்டான். என் கணிப்பு சரியாக இருந்தால், அவன் அதைத் தேடத்தான் பொசய்டனை கயா கிரகத்தை விட்டு அனுப்பி இருப்பான்” என்று கூறி அந்த மௌனத்தை உடைத்தார்.
அவர் கூறி முடித்த சில நிமிடங்கள் வரை யாரும் அதிர்ச்சியில் இருந்து விடுபடவில்லை. இப்பொழுது என்ன செய்வது என்று ஒருவருக்குமே புரியவில்லை ?
அனைவர் மனதிலும், “இத்தனை வருடங்கள் அனுபவித்த கஷ்டமெல்லாம் வீணாகப் போய் விட்டதே” என்ற எண்ணமே ஓடியது.
“ஈரின் கல் மட்டும் அவனுக்குக் கிடைத்து விட்டால், செலினா கூட நம்மைக் காப்பாற்ற வாய்ப்பு குறைவுதான். இதற்கு என்னதான் தீர்வு ?” என்று அனைவரும் வல்கனைப் பார்க்க,
“ப்ரொமேத்தியஸ் ஈரின் கல்லை அடைவதற்கு முன் செலினா சீரஸின் குழந்தையைக் கண்டு பிடித்து கயா கிரக வாசியாக மாற்ற வேண்டும். நாமும் அதற்குள் இங்கிருந்து தப்பிக்க வேண்டும்” என்றார்.
அப்போது, ஏதோ காலடி சத்தம் கேட்க, அவர்கள் அனைவரும் அமைதியானர். சில நொடிகளில், அங்கு வந்து நின்றவனைப் பார்த்ததும் அவர்களுக்கு அதிர்ச்சியும் கோபமும் ஒருசேர எழுந்தது.
தன்னை மையமாக வைத்து நடக்கும் இந்த யாகத்தில் நந்தினி வெற்றி பெறுவாளா ? செலினா அவளுக்கு ப்ரொமேத்தியஸை அழிக்க உதவுவாரா ?
******
கிரகம் : பூமி
இந்த உலகத்திலே இப்போது யார் மிகவும் சந்தோசமாக இருக்கும் நபர் என்று கேட்டால்.. நான்தான் என்று கூறும் அளவிற்கு நந்தினி மகிழ்ச்சியாக இருந்தாள். ஆதித்யன் தனது வாதத்தை ஏற்றுக் கொள்ளாவிடினும் அதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுத்ததால், அவன் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் தோன்றியிருந்தது அவளுக்கு.
அவளுக்கு தன்னை ஒருவர் புரிந்து கொண்டு உதவ நினைப்பதே பெரிதும் ஊக்கம் அளித்தது.
காரில் தனது அருகில் அமர்ந்திருந்த நந்தினியின், மனநிலையைப் புரிந்துகொண்ட ஆரியன், “என்ன நந்துமா ? இப்போ ஹாப்பியா ? எல்லாத்துக்கும் ஐயாவோட ரெக்கமெண்டேஷன் தான் காரணம். ஒழுங்கா எனக்கு ட்ரீட் கொடுக்குற” என்றான்.
“ஐயகோ மன்னர் மன்னா ! உங்க பவர் தெரியாம இத்தனை நாள் உங்கள ‘எருமமாடு’, ‘வளர்ந்து கெட்டவனே’ என்று தாறுமாறாக அழைத்து விட்டேனே! தயைக் கூர்ந்து இந்த அறிவிலி பெண்ணின் சிறு குற்றத்தை பொறுத்துக் கொள்ளுங்கள் மன்னா” என்று நாடக பாணியில் கூறிவிட்டு,
“எருமமாடு, பொய் சொல்லாத, நீயே அங்க டெம்பரரியா தான வேலை பார்க்குற. இதுல, இவரு எனக்கு ரெக்கமெண்டேஷன் பண்றாராம். ட்ரீட்டு தானே வேணும். வா உனக்கு என் கையால வெந்நீர் வச்சு தர்றேன்” என்றாள் நந்தினி.
“வெந்நீரா? அதை எப்ப சாப்பாடு லிஸ்ட்ல சேர்த்தாங்க?” என்று எண்ணிய மானங்கெட்ட மனசாட்சியைத் துரத்தி விட்டு,
“ஏய், ஆமா நான் டெம்ப்ரரியா தான் வேல பாக்குறேன்னு உனக்கு யார் சொன்னா ?” என்று கேட்டான் ஆரியன்.
“ஜெயந்தி ஆன்ட்டி முன்னாடியே சொல்லிட்டாங்களே” என்று பழிப்பு காட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் நந்தினி.
ஆரியனோ, “அம்மா…” என்று பல்லைக் கடித்துக் கொண்டான்.
நந்தினி வேக வேகமாக தன் அம்மாவைத் தேடினாள். அவளைக் கண்டவுடன் அவளது வாயில் கைவைத்து அவளது கையில் பாயசத்தைத் தந்தார் துர்கா.
“நீ எப்படியும் ஜெயிச்சுருவனு எனக்குத் தெரியும் நந்து. அதான் முன்னாடியே ரெடி பண்ணிட்டேன்” என்றார் துர்கா.
“சூப்பர் மம்மி! நானும் இனிமே வேலைக்கு போவனே” என்று அவர் கன்னம் கொஞ்சினாள் நந்தினி.
அதற்குள் ஆரியன் வந்துவிட, அவனை வரவேற்று அவனுக்கும் இனிப்பு வழங்கினார் துர்கா.
அவனைக் கண்டதும் நந்தினி, “ஆரி, வா, நாம போய் மூமுவைப் பார்த்து இந்த விஷயத்த சொல்லலாம்” என்று கூறி மாடிக்கு ஓடினாள்.
ஆரியன் வருவதற்குள் தன்னுடைய தோழனைப் பார்த்த நந்தினி, “மூமு , இன்னைக்கு உனக்கு ஒரு ஹேப்பியான விஷயம் சொல்லப் போறேன் ” , என்றவளின் கண்களின் கரு விழிகள், திடீரென்று தங்க நிறத்திற்கு மாறின.
கிளியின் கண்களும் அவளது கண்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டன. அதற்குள், மாடிக்கு வந்த ஆரியன், நந்தினி பேசாமல் நிற்பதைப் பார்த்து, “ என்ன நந்தினி பேசாம வேடிக்கை பார்த்துட்டு இருக்க ?” என்று கேட்கவும்,
விழித்த நந்தினி, “இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு தான இருந்தேன். உனக்கு கண்ணு சரியா தெரியலையா ?” என்று கேலி பேச ஆரியன் தான் குழம்பிப் போனான்.
அப்பொழுது தான் ஆரியன் கவனித்தான், நந்தினியின் விழிகள் தங்க நிறத்தில் ஜொலிப்பதை.
“ஒருவேளை, நந்தினிக்கு அவளது பழைய பிரச்சனை திரும்ப வருகிறதோ?” என்ற சந்தேகம் ஏற்பட்டது அவனுக்கு.
ஆரியன் அவளைத் திடீரென்று உலுக்கியதில், அவளது விழிகள் கருப்பு வண்ணத்தை அப்பிக்கொள்ள, “வந்துட்டியா ஆரி ? இவ்வளவு நேரமா மேல வர்றதுக்கு ?” என்று கேட்டாள்.
“என்ன இவ மாத்தி மாத்தி பேசுறா ? ஒருவேளை, Multiple Personality Disorder வந்துவிடுச்சோ ?” என்று சிந்திக்கத் தொடங்கினான் ஆரியன்.
“டேய் என்னடா திடீர்னு அப்பப்போ ஏதோ யோசனைல மூழ்கிடுற ?” என்று கேட்டாள் நந்தினி.
“நந்தினி, பீ சீரியஸ். நான் இப்ப கேக்குற கேள்விக்கு யோசிச்சு பதில் சொல்லு. உனக்கு சின்ன வயசுல ஒரு கனவு வந்துச்சுன்னு சொல்லுவில, அது மாதிரி இப்ப ஏதாச்சும் வந்துச்சா ரீசன்டா ?” என்று கேட்டான் ஆரியன்.
“ஆமாண்டா ஆரி, சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கு காலையில தான் இன்னொரு கனவு வந்துச்சு” என்று கூறிவிட்டு, தான் கண்ட கனவை விவரமாகக் கூறினாள் நந்தினி.
அதைக் கேட்ட ஆரியன், “சாதாரணமா ஒரு கனவு வந்தா, அதுல நமக்கு காலையில எழுந்திருச்சதுக்கு அப்புறம் ஞாபகத்துல இருக்குறது சில விஷயங்கள் மட்டும்தான். ஆனா, நந்தினி எப்படி இவ்வளவு தெளிவா சொல்லுறா ? ஒருவேளை, இது அவளுக்கு ஏற்கனவே நடந்துருக்குமோ ? அதற்கு வாய்ப்பே இல்லையே. இல்லைனா இது ஜஸ்ட் அவளோட கற்பனைதானா ?” என்று யோசித்தான்.
******
கிரகம் : கயா
இடம் : வெலாரிஸ் கோட்டை
ப்ரொமேத்தியஸ் அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது திட்டங்கள் மற்றவர்களுக்கு வெற்றியைத் தருவது போல தெரிந்தாலும், அவனுக்கு தானே இதெல்லாம் வெறும் இடைக்கால வெற்றிகள் மட்டுமே என்று தெரியும்.
என்னதான் அவன் சக்தியை எடுக்க வழியைக் கண்டுபிடித்தாலும், அதனைச் சேமிக்க அவனால் முடியாதே. அதற்கு சோல் பாக்ஸின் சாவி வேண்டுமே. எங்கே போயிருக்கும் அந்தச் சாவி என்று தலையைப் பிய்த்துக் கொண்டான் அவன்.
ஆனால் அவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. “கண்டிப்பாக, அந்தச் சாவியை சீரஸ் தான் எடுத்துச் சென்றிருப்பான். ஆனால், சீரஸ் உயிர் நீத்த பிறகு, அந்தச் சாவி கிடைக்கவில்லையே ? ஒருவேளை அந்தச் சாவியைக் குழந்தையிடம் வைத்து அனுப்பி இருந்தாலும், அது எங்கே இருக்கிறது என்று என்னால் உணர முடியுமே” என்று குழம்பினான்.
அவனும் அந்தக் கிரகத்தில் எவ்வளவோ தேடிப் பார்த்து விட்டான். ஆனால், அந்தச் சாவியின் இருப்பிடத்தை மட்டும் அவனால் கண்டறிய முடியவில்லை. தனது கோபத்தை, அந்தக் கிரந்தத்தின் மீது காட்ட முயன்ற போது அதன் சக்தி அவனைத் தூக்கி எறிந்தது.

தன்னைத்தானே சுதாரித்து கொண்டு எழுந்த ப்ரொமேத்தியஸ், பொசய்டனைக் கண்காணிக்கச் சொன்ன காவலனை அழைத்தான்.
அவன் வந்து நின்று, “பேரரசர் ப்ரொமேத்தியஸ் வாழ்க !” என்றான்.
“நான் உன்னிடம் கூறிய பணி என்னவாகியது காவலனே ?” என்று கேட்டான் ப்ரொமேத்தியஸ்.
“பேரரசே! அவர் ஒவ்வொரு கிரகத்திற்கும் மாறி மாறி சென்று தேடிக் கொண்டிருக்கிறார். முக்கால்வாசி நேரம் கண்ணை மூடி அமர்ந்து தனது சக்திகளை ஒருங்கிணைப்பதிலேயே மூழ்கி இருக்கிறார்” என்றான்.
“சரி அவருடைய நடவடிக்கையில் வேறு ஏதும் மாற்றம் தென்பட்டால் என்னிடம் வந்து கூறு” என்றான் ப்ரொமேத்தியஸ்.
“உத்தரவு பேரரசே” என்று கூறி விட்டுக் கிளம்பினான் அந்தக் காவலன்.
காவலன் சென்றதும் ப்ரொமேத்தியஸ் தன் மனதிற்குள், “உன் மேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன், பொசய்டன். சீக்கிரமாக அந்த வாரிசைக் கண்டுபிடி” என்று எண்ணிக்கொண்டான்.
பின்னர், இனிமேல் இந்தக் கிரந்தத்தைப் பார்ப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று நினைத்து, அதை மூடி வைத்தான்.
அதன்பின், பெருங்கடல் சிறையில் அனைத்து ஏற்பாடுகளும் சரியாக இருக்கின்றனவா என்று பார்க்கக் கிளம்பினான் ப்ரொமேத்தியஸ். தனது கவசத்தையும் அந்த Torc-ஐயும் அணிந்து கொண்டு, விண்ணில் பறக்கத் தொடங்கினான். சில நொடிகளில், அந்தப் பெருங்கடலின் கவசத்தைத் தனது சக்தியால் தாண்டிக் கொண்டு உள்ளே நுழைந்தான் ப்ரொமேத்தியஸ். அவனைக் கண்டதும் வீரர்கள் அனைவரும் அவனை நோக்கி வந்தனர். அவன் மெதுவாகத் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு தண்ணீரில் இறங்கினான்.
வீரர்கள் அனைவரும் மண்டியிட்டு, “பேரரசர் ப்ரொமேத்தியஸ் வாழ்க !” என்று ஒருமித்த குரலில் கூறினார்கள்.
அவர்களைப் போகச் சொல்லிவிட்டு, அவன் தண்ணீருக்குள் சென்று வேகமாக நீந்தியபடி, பெருங்கடலின் அடியில் இருந்த தரையில் இறங்கினான். கோட்டை சிறிது தூரத்தில் இருக்க, அதை நோக்கி நடக்க தொடங்கினான் ப்ரொமேத்தியஸ்.
அதுவரை அந்தக் கோட்டையை சுற்றிக்கொண்டிருந்த டிராகன்கள் எல்லாம் சுற்றுவதை நிறுத்திவிட்டு அவன் முன் வந்து மண்டியிட்டு அவனுக்கு வழிவிட்டன.
அவன் அந்தக் கோட்டைக்குள் கம்பீரமாக நுழைந்தான். உள்ளே அந்தக் கோட்டை பரந்து விரிந்து காணப்பட்டது. அவனைக் கண்டதும் அங்கிருந்த காவலாளிகள் அவனை அந்த மிருகங்களை அடைத்து வைத்திருந்த அறைக்கு வழி நடத்திச் சென்றனர்.
அங்கு இருந்த ஏற்பாடுகளைப் பார்த்து திருப்தி அடைந்தவன், அடுத்ததாக சிற்றரசர்களை அடைத்து வைத்திருந்த அறைக்குச் சென்றான். அவனை அந்த நேரத்தில் அங்கு எதிர்பாராததால், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவனும் அங்கிருந்தவர்களின் நிலையைக் கண்டு சிரித்தான்.
அவனது சிரிப்பில், “இதெல்லாம் நீங்களே உங்களுக்கு வரவழைத்துக் கொண்டது தான்” என்ற அர்த்தம் பொதிந்திருந்தது.
error: Content is protected !!