Skip to content
Post Views: 781
அத்தியாயம் – 21
ஆரியன் , “ அந்த விடுகதையை அப்புறம் பார்க்கலாம் . இப்ப மொதல்ல இந்த டிரெஸ்ஸ மாத்தணும் ” என்றான் .
Advertisement
மற்ற இருவருக்கும் அது சரியெனப் படவே மூவரும் உடைமாற்றி வந்தனர் . மூவரும் எவ்வளவு முயன்றும் முதல் இரண்டு வரிகளைத் தவிர மற்ற வரிகளுக்குப் பொருளைக் கண்டுபிடிக்க முடியவில்லை .
ஆரியன் , “ Hail the searchers we say அப்படின்னா அந்த கல்ல தேடுறவங்கள பாராட்டுறாங்க . அப்புறம் இன்னும் ஆறு கதவுகள் இருக்குன்னு போட்டிருக்கு ” என்றான் .
மற்ற இருவரும் அவனை முறைத்துப் பார்க்க , நந்தினி , “ அதுதான் எங்களுக்கே தெரியுதே . இதுல நீ எதுக்கு ட்ரான்ஸ்லேட்டர் வேலை பாக்குற ?” என்று கூற அசடு வழிந்தான் ஆரியன் .
Advertisement
ஆதித்யன் , “ போன தடவை மாதிரி இந்த தடவையும் ஏதாச்சும் ஒரு நம்பர் தான் விடையா இருக்குமோ ? இங்க கூட நாலுன்ற எண் வந்துருக்கு ” என்றான் .
Advertisement
நந்தினி , “ இல்ல ஆதி , போன தடவை அந்த நம்பர்க்கான க்ளூ (clue) இருந்துச்சு . அந்த நம்பரை பத்தி தனியா சொல்லிருந்துச்சு . இந்த தடவை
வெறும் நாலுனு தான் இருக்கு . அது மட்டுமில்லாமல் தங்கத்தால சுற்றப்பட்டு இருப்போம்னு இருக்கு . ஏதாச்சும் ஒரு சிலையா இருக்குமோ ” என்று கூறினாள் .
ஆரியன் , “ அப்படின்னா நாலு பேரு இருக்கக்கூடிய ஒரு சிலைனா ?” என்று யோசித்தவன் , மூளையில் ஒரு யோசனை உதிக்க , “ கண்டுபிடிச்சுட்டேன் ” என்று கத்தினான் .
Advertisement
ஆதியும் நந்தினியும் அவனை யோசனையுடன் பார்த்தனர் . “ அமெரிக்கால இருக்குற Mount Rushmore- ல , நாலு ஜனாதிபதிகள் ஓட முகச்சிலை இருக்கு . ஜார்ஜ் வாஷிங்டன் , தாமஸ் ஜெஃபர்சன் , தியாட்ரே ரூஸ்வெல்ட் , ஆபிரகாம் லிங்கன் இவங்க நாலு பேரும் ஆட்சி செஞ்சத அமெரிக்காவோட பொற்காலம்னு சொல்லலாம் ” என்றான் .
எதையோ பெரிதாக எதிர்பார்த்து இருந்த ஆதிக்கும் , நந்தினிக்கும் புஸ்ஸென்றானது .
நந்தினி பொறுமையாக , “ ஆரி ! நாம இப்ப யோசிக்கிற விஷயம் எல்லா கிரகத்துக்கும் பொருந்துற மாதிரி இருக்கணும் . ஆனா , இப்ப நீ சொன்னது பூமிக்கு மட்டும் தான் பொருந்தும் . அப்படி இருந்தாலும் தங்கத்தால சுற்றப்பட்டு இருப்போம்னு போட்ருக்கு . இதுல லாஜிக்கே இல்லை ” என்று முடித்தாள் . மறுபடியும் முயன்றும் அவர்கள் ஒரே டெட் எண்டுக்கு வந்தார்கள் .
ஆதி , “ இதுல நண்பன் என்ற வார்த்தை யாரை குறிக்குது ? அப்ப இது கண்டிப்பா மனிதர்களைத் தான் குறிக்குதா ?” என்று கேட்டான் . நந்தினி அவளே குழம்பியிருந்ததால் , பதில் அளிக்க முடியவில்லை .
ஆரியன் , “ மனிதர்களா இருந்தா அவங்க எப்படி பூக்களிடமோ இல்ல மரத்துலயோ இருக்க முடியும் ? அது என்ன பூவிலும் இருப்பேன் புயலிலும் இருப்பேன்னு ? ஒரே Irony – ஆ (முரணா) இருக்கு ” என்றான் .
“ இதுல இருக்கிற ஏதோ ஒரு சின்ன விஷயத்த நாம பார்க்க மாட்டோங்குறோம் . ஆனா , அது என்ன ?” என்று தன்னைத் தானே கேட்டு கொண்டாள் நந்தினி .
அந்தப் பொருட்கள் ஒவ்வொன்றையும் சம்பந்தப் படுத்த முயன்று தோற்றாள் .
இறுதியில் , “ இதுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு இருக்கும்னு எனக்குத் தோணல ” என்றாள் நந்தினி .
ஆதி , “ எனக்கென்னமோ நாம மேல இருந்து கீழ பாக்குறது தான் பிரச்சனைனு தோனுது . இந்த தடவை ரிவர்ஸ்ல பார்த்தா என்ன ? உதாரணத்துக்கு நாம இந்த ஆறு பொருட்களுக்கும் நடுவுல இருக்கிற லிங்க்க கண்டுபிடிச்சுட்டா , இந்த விடுகதையோட ஆன்சர ஈஸியா கண்டுபுடிச்சுடலாம் ” என்றான் .
நந்தினி , “ நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துவிட்டேன் ” என்று கூறியவளுக்கு , மனதில் , “ See us through your mind ” என்ற வரி நினைவுக்கு வந்தது .
ஆதி முயன்று முயன்று பார்த்துவிட்டு , கடைசியாக , “ அடப்போங்கப்பா ! இதுல எனக்கு ரெண்டு பொருட்களுக்குத் தான் லிங்க் தெரியுது ” என்றான் .
மற்ற இருவரும் அவனை ‘ என்ன ’ என்பது போலப் பார்க்க , “ சொன்னா சிரிக்கக் கூடாது ” என்று முகவுரையுடன் ,
“ அந்த Shells மற்றும் Galaxies தான் என்னால ரிலேட் பண்ண முடிஞ்சுச்சு . இரண்டையும் அதோட Patterns வச்சு பார்த்தா ஒரு ஒற்றுமை இருக்கு . ரெண்டுமே ஸ்பைரல் Pattern கொண்டு அமைஞ்சிருக்கும் ” என்றான் .
நந்தினி , “ நாம் இந்தக் கோணத்தில் யோசிக்காமல் விட்டுடோமே ” என்று நினைத்தவள் ,
“ ஆனா ஆதி , முகத்துல என்ன Pattern இருக்கு ?” என்று கேட்டாள் .
ஆதி யோசித்துக் கொண்டிருக்கும்போது , ஆரியன் , “ அதை நாங்க தான் உன்கிட்ட கேட்கணும் . நீதான Drawings- லாம் வரைவ ?” என்று கூற , நந்தினியின் மூளை அந்த ஓவியம் என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டது .
ஏனோ அந்த வார்த்தையை அவளால் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை . ஓவியம் என்ற வார்த்தைக்கும் , Spiral என்ற வார்த்தைக்கும் இடையே அவளது அறிவு போராட , இறுதியில் அவள் அறிவுக்கு அவள் எதிர்பார்த்தது கிடைத்தது . அந்த ஓவியம் லியானர்டோ டா வின்சி வரைந்த மோனலிசா ஓவியம் . இப்பொழுது அவளுக்கு ஒவ்வொரு பொருளுக்கும் இடையே இருந்த ஒற்றுமை புலப்படத் தொடங்கியது .
அனைத்து பொருளும் ஒரே புள்ளியில் இணைய , விடை கிடைத்த சந்தோஷத்தில் , நந்தினி , “ Fibonacci Sequence ” என்றாள் .
ஆதியும் , ஆரியனும் “ Fibonacci நம்பர்ஸா ?” என்று ஒருமித்த குரலில் கேட்க ,
“ ஆமாம் . அது தான் இந்த ஆறு பொருட்களுக்கும் இடையே இருக்குற பொதுவான விஷயம் ” என்றாள் நந்தினி .
பின்னர் அவளே தொடர்ந்து , “ Fibonacci நம்பர்ஸ்னா அது ஒரு சீக்குவன்ஸ் . அந்தத் தொடர்ச்சியில் முதலில் இருக்கிற ரெண்டு நம்பர்ஸ add பண்ணினா , அடுத்த நம்பர் வரும் . இதே மாதிரி இந்த sequence தொடர்ச்சியா வந்துகிட்டே இருக்கும் . இது ஒரு முடிவில்லா sequence . இன்னும் அந்த sequence – அ , சொல்லனும்னா 0 ,1, 1 ,2 ,3, 5 ,8 ,13, 21 … இப்படி போயிட்டே இருக்கும் ” என்றாள் .
“ அது இருக்கட்டும் நந்து , அதுக்கும் இந்த ஆறு பொருட்களுக்கும் என்ன தொடர்பு ?” என்று கேட்டான் ஆரியன் .
“ நாம நினைச்சுப் பார்க்க முடியாத அத்தனை விஷயத்திலும் இந்த Fibonacci Sequence தான் இருக்கு ” என்றாள் நந்தினி .
ஆதியும் , ஆரியனும் அதிர்ந்து போய் பார்க்க , நந்தினி , “ இந்தப் பொருட்கள் ஒவ்வொன்னுத்துலயும் அதப் பார்க்கலாம் . பூக்களில் இருக்குற pollen grains ( மகரந்தங்கள் ) அடுக்கி இருக்குற விதம் இந்த sequence படி தான் இருக்கும் . சில பூக்களில் அதோட இதழ்களுக்குத் தேவையான சூரிய ஒளி கிடைக்கிறதுக்கும் , இந்த பேட்டர்ன் தான் பயன்படும் . மரத்தோட கிளைகள் பிரியும் விதமும் இதன் அடிப்படையில் தான் . முதலில் ஒரு கிளை ரெண்டாப் பிரியும் . அப்புறம் , அவ்விரண்டுள் ஒன்னு வளராம இருந்துடும் மற்றொன்று இரண்டாகப் பிரிந்து மொத்தம் மூன்றாக மாறும் . இப்படியே 5,8,13 என்று பெருகும் . இப்ப Spiral – க்கு வருவோம் . இந்த எண்கள ஒவ்வொன்றையும் வச்சு சதுரம் சதுரமா வரைந்து ஒவ்வொரு புள்ளியையும் இணைச்சோம்னா , ஒரு ஸ்பைரல் பேட்டர்ன் உருவாகும் . அந்தப் பேட்டர்ன் தான் கேலக்ஸி , Shells , Hurricanes இதுலலாம் இருக்குது . அதே மாதிரியான பேட்டர்ன் – ஐ நம்ம முகத்துல கூட பார்க்கலாம் ” என்றாள் நந்தினி .
மோனோலிசா படத்தைப் பற்றிக் கூறிய பின்பு , அவர்கள் இருவரும் பேயறைந்தது போல இருக்க , முதலில் தெளிந்த ஆதி , “ சனா , நீ சொன்னது எல்லாம் கரெக்டா ஒத்துப் போகுது . ஆனா , இந்த இடத்துல நண்பன்னு யாரை குறிக்குது ?” என்று கேட்டவனிடம் ,
“ அதற்குப் பதில் அந்த விடுகதையிலேயே இருக்கு , ஆதி ” என்று நந்தினி கூறவும் ,
ஆரியன் , “ Covered by the gold we were ” என்று கூற ,
ஆதியும் நந்தினியும் இணைந்து , “ Golden ratio ” என்று கூற , ஆரியனுக்கும் ஓரளவு புரிந்துவிட்டது .
“ இந்த Sequence – ல வர்ற அடுத்தடுத்த நம்பர divide பண்ணா ஒரு கட்டத்துல 1.618 என்ற நம்பர் விடையா கிடைக்கும் . இதுதான் Golden Ratio- னு சொல்லுவோம் ” என்றாள் நந்தினி .
ஆரியன் , அந்த விடுகதையை முடித்து வைக்கும் விதத்தில் , “ அப்படின்னா நாம தேடிட்டு இருக்குற அந்த நாலு டிஜிட் நம்பர் 1618” என்றான் .
அதை அவன் அந்த பார்ச்மென்டில் குறிக்க , வழக்கம் போல அனைத்து குறியீடுகளும் மறைந்தன . பின்னர், சில நொடிகள் கழித்து , அதில் தோன்றிய சில எண்களை ஆதி குறித்துக் கொண்டு , அந்த விமானத்திலிருந்த Database – இல் தேடினான் .
சில நொடிகளில் அந்தத் திரையில் ‘ கைகன்டா ‘ என்ற பெயர் மிளிர்ந்தது . ஆனால் , அதைப்பற்றித் தேடும் ஆக்சஸை பொசய்டனின் கைரேகையைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தாலும் , அதில் எந்த விதமான தகவலும் இல்லை என்பதைக் கண்டதும் “ மறுபடியுமா ?” என்று சோர்ந்து போயினர் .
“ வேறு வழியில்லை ஆதி ” என்று நந்தினி கூறவும் , அந்தக் கிரகத்தை சென்றடையும் இடமாக குறிப்பிட்டு விட்டு ( destination – ஆக மாற்றிவிட்டு ) விண்கலத்தை இயக்கினான் ஆதித்யன் .
மூவரும் மறுபடியும் தங்களுடைய யோசனைகளில் மூழ்கியிருக்க , ஆரியன் , மற்ற இருவருக்கும் கரடியாக மாறாமல் , “ நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன் . அந்த கிரகத்திற்கு பக்கத்தில போனதும் என்னைய எழுப்புங்க ” என்று கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டான் .
நந்தினி சில நாட்களாகவே மனதிற்குள் ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு அவதிப்படுவதும் பின்பு அதை மறைக்க முயல்வதும் தெரிய , அவள் தவிப்பதை உணர்ந்த ஆரியன் , இப்பொழுது அவளுக்குத் தேவை ஒரு சைக்கியாட்ரிஸ்ட் அல்ல , அவளைப் புரிந்து கொண்டு அவளது கவலையை அகற்றும் அவள் காதலன் தான் என்று உணர்ந்து அவளை நெருங்கினான் .
அங்கு சில நிமிடங்கள் ஒருவித அமைதி நிலவ , “ இப்போ சொல்லு சனா , நீ உனக்குள்ளேயே ஒரு கஷ்டத்தை வச்சுகிட்டு மருகுற . அது என்ன ? நீ அப்படி இருக்கிறது ஆரியனுக்கு தெரிஞ்சு தான் அவன் நம்மைத் தனியா விட்டுட்டு போயிருக்கான் . எதுவா இருந்தாலும் இப்பவே பேசு சனா . இனிமே நம்ம இது மாதிரி பேசுறதுக்கு சான்ஸ் கிடைக்குமான்னு தெரியல ” என்று ஆதி கூறி சிரிக்கவும் அவனை முறைத்தாள் நந்தினி .
“ இதுக்குதான் நான் பயப்படுறேன் , ஆதி . இந்த பிரச்சனைல உங்கள இழுத்துவிட்டு , வாழ்வா ? சாவானு ? போராட வைக்கிறது எனக்குக் கஷ்டமா இருக்கு . போன தடவை கொஞ்சம் லேட்டாகி இருந்தாலும் நாம எல்லாருமே இறந்துருப்போம் . அதே நேரம் நீங்க ரெண்டு பேரும் இல்லாம இதெல்லாம் எப்படி தனியா செய்வேன்னும் இருக்கு . என் மனசு ரெண்டா பிரிஞ்சு வாதம் பண்ணிட்டு இருக்கு ” என்று கூறினாள் நந்தினி .
“ முழுசா சொல்லு சனா , இது மட்டும் தான் உன் பிரச்சனையா ? இல்லைனு நம்ம ரெண்டு பேருக்குமே தெரியும் . என்னைய டைவர்ட் பண்ண முயற்சி பண்ணாத ” என்றான் ஆதி .
அவனது பேச்சில் அதிர்ந்த நந்தினி , “ என்ன … நான் எதுவும் மறைக்கலையே …” என்று திக்கித் திணறிச் சொல்ல , அதைக் கண்ட ஆதியின் முகத்தில் குறுநகை பிறந்தது .
“ இன்னும் என்னோட சனா செல்லத்துக்கு பொய் சொல்லவே தெரியல . நான் சொல்லட்டுமா ? என்னைக் காதலிப்பதில் தானே பிரச்சனை ?” என்று ஆதி கேட்க ,
நந்தினி , ‘ இனியும் பொய் சொல்லவேண்டாம் ‘ என்று நினைத்து ,
‘ ஆம் ’ என்று தலையாட்டி விட்டு ,
“ நான் ஒரு சாதாரண காதலி மாதிரி உங்க கூட பழகுறதில்லையோன்னு ஒரு சின்ன உறுத்தல் . அவ்வளவு தான் ” என்றாள் .
அவள் கூறியதைக் கேட்ட ஆதி , விழுந்து விழுந்து சிரித்தான் . அவள் முறைப்பதைக் கண்டு , தன் சிரிப்பை அடக்கிக் கொண்டவன் ,
“ நான் கூட ஏதோ பெருசா சொல்ல போறியோனு நினைச்சேன் , சனா . இங்க பாரு , காதலிச்சா அவங்களோட ஊர சுத்திட்டு , படம் பார்த்துக்கிட்டே இருக்கணுமா ? இல்ல உனக்கு நானே ஏதாச்சும் பிரச்சினைய உருவாக்கிட்டு அதுக்கு நானே தீர்வா இருக்கணுமா ? அதெல்லாம் ஜஸ்ட் fantasy , சனா . ரியாலிட்டின்றது வேற . உனக்கு ஒரு கஷ்டம் வர்றப்ப நானும் அதே மாதிரி எனக்கு ஒரு கஷ்டம் வர்றப்ப நீயும் ஒருத்தருக்கொருத்தர் வாழ்க்கை முழுவதும் துணையா இருந்தா போதும் .”
“ காதல் என்பது ஒரு உணர்வு . அதை அளப்பதற்கு பாராமீட்டர்ஸ் வைக்காதே . இப்போதைக்கு நம்முடைய கடமையை இந்தப் பிரபஞ்சமே நம்பியுள்ளது . உன்னுடைய தனித்தன்மையை என்னோட காதல் அழிக்கக் கூடாது . அப்படி இல்லன்னாலும் யாருக்குத்தான் இப்படி கிரகம் கிரகமா தன்னோட காதலியோட ஒரு அட்வெஞ்சர் ட்ரிப் போவதற்கு வாய்ப்பு கிடைக்கும் ?” என்று தன்னுடைய சனாவிற்காக புது காதல் காவியத்தை உருவாக்கினான் அந்த காவியத் தலைவன் .
நந்தினி இப்போது தன் கவலையை தூரத் தூக்கி எறிந்தாள் .
அதற்குள் தூரத்தில் , ஒரு பெரிய கிரகம் இருப்பது போலத் தெரிய , நந்தினி ஆரியனை அழைக்கச் சென்றாள் . அதேசமயம் ஆதி கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றான் .
கைகன்டா கிரகம் அவர்களுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தது .
******
கிரகம் : கயா
இடம் : காட்டுப் பகுதி
சிற்றரசர்கள் அனைவரும் வரப்போகின்ற போருக்குத் தேவையானதை ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர் . அக்கிலஸ் அங்கே வரவும் , அவனை நோக்கி நடந்தார் வல்கன் .
அவன் கோபமாக இருப்பதைக் கண்டு , “ என்ன நடந்தது அக்கிலஸ் ? ப்ரொமேத்தியஸின் ஆட்களுடன் மோதல் ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா ?” என்றவர் கேட்க ,
“ அப்படி ஏதாவது பிரச்சனையாக இருந்தால் கூட பரவாயில்லை . ஆனால் , இனிமேல் ஒரு நாள் இப்படி நடந்தால் கூட நான் பொறுமையாக இருக்க மாட்டேன் ” என்று கூறிவிட்டுச் சென்றான் .
அவர் குழப்பத்தோடு நிற்க , அவனைத் தொடர்ந்து வந்த நபரைக் கண்டதும் அவருக்குத் தேவையான விடை கிடைத்து விடவே , சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார் .
அக்கிலஸ் , நேராக க்ரோனனிடம் சென்று , “ எவ்வளவு முறை தான் புத்திமதி கூறி கொண்டே இருப்பது ? இனி இது தொடர்ந்தால் தண்டனை கொடுக்காமல் விடமாட்டேன் ” என்று கூறி விட்டுச் செல்ல , இவ்வளவுக்கும் காரணமான அந்த நபர் க்ரோனனிடம் வந்தாள் .
அவர் சிரித்துக் கொண்டே , இந்த முறை , “ உன் தமையனிடம் என்ன செய்து மாட்டிக் கொண்டாய் ?” என்று கேட்டார் .
அதுவரை அமைதியாக இருந்த லூனா , “ எல்லோரும் ஏன் என்னையே குறை சொல்கிறீர்கள் ? மற்ற சிற்றரசர்களின் வாரிசுகள் அனைவரும் கடந்த முறை ஏற்பட்ட கன்வர்ஜென்ஸின் பொழுது இறந்து விட்டார்கள் . மீதமிருப்பது நானும் அக்கிலஸூம் தான் . அவன் மட்டும் போர் வீரர்களை வழி நடத்துவான் . நான் மட்டும் அமைதியாக இருக்க வேண்டுமா ?” என்று கேட்டு விட்டு ,
பின் அவளே தொடர்ந்து , “ அதான் அவனைக் கண்காணித்துக் கொண்டிருந்த இரு உளவாளிகளைக் கொன்றுவிட்டேன் . அதற்குப் போய் நான் அவனது திட்டத்தை பாழ் படுத்தி விட்டேன் என்று திட்டுகிறான் ” என்று கூறி முடித்தாள் .
இது எப்போதும் நடப்பது தான் என்பது போல தங்களது வேலையைத் தொடர்ந்தனர் மற்ற சிற்றரசர்கள் .
அவர்கள் பேசிக் கொள்ளும் போது , அங்கு வந்தனர் வல்கனும் அக்கிலஸூம் .
சிறியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொள்ள , வல்கன் , “ க்ரோனன் , முடிந்த அளவுக்கு அக்கிலஸ் படையைத் திரட்டி விட்டான் . ஆனால் , நமக்கு இப்போது இருக்கும் படை மட்டும் போதாது . சரி அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் . இப்போது அதைவிட முக்கியமான செய்தி ஒன்று உள்ளது ” என்றார் .
க்ரோனன் , “ என்னவாயிற்று வல்கன் ?” என்று பரபரப்புடன் கேட்க ,
“ சீரஸின் வாரிசை பொசய்டன் எனது மூதாதையரின் புனித கிரகமான 176C – க்கு அழைத்துச் சென்று விட்டார் என்று நினைக்கின்றேன் . ஆனால் , என்ன நடந்தது என்று தெரியவில்லை , இறுதியில் ஏதோ தவறு செய்து விட்டார்கள் போலும் . பாதுகாப்பு வளையங்கள் தீயைத் தூண்டி இருக்கின்றன . அப்போது அவர்கள் பொசய்டனுடன் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது . அப்படியென்றால் , பொசய்டன் எங்கே ? இனி வரும் கஷ்டங்கள் அனைத்தும் கடுமையாக இருக்குமோ ” என்று வருத்தப்பட்டார் வல்கன் .
க்ரோனன் , “ எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது . நம்மில் ஒருவர் யாராவது அவர்களுக்கு உதவி செய்யலாம் அல்லவா ?” என்று கேட்க , அக்கிலஸ் மற்றும் வல்கனின் பார்வை லூனாவிடம் திரும்பியது .
லூனா அதிர்ந்து , “ நானா ? வேறு கிரகங்களுக்குச் சென்று பயணிப்பது என்ன விளையாட்டா ? அதுவும் அந்த வாரிசுக்கு என்ன திறமை இருக்குமென்று நீங்கள் எல்லோரும் அவரை இப்படி மதிக்கின்றீர்களோ ?” என்று கேட்க ,
க்ரோனன் , “ இதற்கு மேல் நீ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது . என்ன இருந்தாலும் உன் வருங்கால பேரரசரை நீ இப்படி தான் கூறுவாயா ? நீ ஒரு சிற்றரசின் மகள் . அதற்குப் பின் இருக்கும் கடமையை மறக்காதே . உனக்கு இந்தக் கிரகத்திற்கு ஏதாவது உதவ வேண்டும் என்று தோன்றினால் , உடனடியாக அவர்களுக்கு உதவி செய் ” என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் .
லூனாவின் மனதில் இதுவரை பார்த்தே அறியாத அந்த பேரரசர் மீது கோபம் ஏற்பட்டது . அக்கிலஸ் , “ நீ கவலைப்படாதே லூனா , இதை உன் திறமைக்குக் கிடைத்த சவாலாக நினைத்துக்கொள் . வா , அவர்கள் அடுத்து எங்குச் செல்வார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் . இதைச் சாக்காக வைத்து நீ நிகேடரிடம் ஒரு வாகனத்தைக் கூட பெற்றுக்கொள்ளாலாம் அல்லவா ?” என்று கண் சிமிட்டி கேட்க ,
“ அதை ஒன்றும் நீ கூறத் தேவையில்லை . நான் வரும் வரைக்கும் யாரிடமும் உன் உயிரைப் பறிகொடுத்து விடாதே , ஏனென்றால் நான் தான் உன்னைக் கொல்வேன் ” என்று லூனா கூறி விட்டுச் செல்ல , அவளைச் சிரிப்புடன் பார்த்து தலையாட்டிக் கொண்டான் அக்கிலஸ் .
******
கைகன்டா கிரகம் Sapphire இரத்தின கல்லின் நிறத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது . நந்தினி அந்தக் கிரகத்தைத் திரை வழியாகப் பார்த்துக் கொண்டிருக்க , ஆதி சென்ற முறை அனுப்பிய Drone – களில் ஏதாவது சேதாரம் ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதித்துக் கொண்டிருந்தான் .
ஆரியன் அந்தப் பழைய பார்ச்மென்ட் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் .
இந்த முறை விண்கல் வளையம் ஏதும் இல்லாததால் , அவர்கள் எளிதாக கைகன்டா கிரகத்தின் காற்று மண்டலத்துக்குள் நுழைந்தனர் . வழக்கம்போல அவர்கள் ட்ரோன்களை அனுப்பி அந்தக் கிரகத்தைப் பற்றி அறிந்து கொண்டிருந்தனர் .
திரையிலிருந்த நிழற்படங்களைப் பார்த்து வந்த ஆரியன் , “ என்ன தரை முழுவதும் பனிக்கட்டியால் இருக்கும் போல ? போன தடவை என்னென்னமோ சொல்லி என்னைய தண்ணிக்குள்ள தள்ளி விட்டுட்டீங்க . ஆனா , இந்த தடவை நான் ஏமாற மாட்டேன் ” என்று கூறியவனின் பேச்சை உதறித் தள்ளிவிட்டு ,
நந்தினி , “ ரெண்டு பேரும் இங்க பாருங்க . இவ்ளோ பனிக்கட்டியாய் இருக்குற இடத்துல எப்படி Temperature level ( வெப்பம் ) சாதாரணமா இருக்க முடியும் ?” என்று கேட்டாள் .
அவள் கேட்ட கேள்வி சரியாக இருக்கவே , ஆதித்யன் சிறிது யோசித்தான் . “ எனக்கு ஒரு யோசனை தோணுது . ஆனால் , அதை அங்கு போய் சரி பார்த்த பிறகு தான் என்னால் சொல்ல முடியும் ” என்றான் .
ஆரியன் , “ அதெல்லாம் விடுங்கப்பா , போன தடவை ஒரு கோட்டை இருந்ததற்கு அடையாளம் தெரிஞ்சுச்சு . ஆனா , இந்த தடவை அது மாதிரி எதுவுமே இந்த நிழற்படங்களில் இல்லையே . இப்ப எப்படி அந்த கோட்டையைக் கண்டுபிடிக்கிறது ?” என்று கேட்டான் .
ஆதி ஏதோ சொல்ல வரவும் , “ இப்ப என்ன சொல்ல போற ? நமக்கு இது மட்டும் தான் இருக்கிற ஒரே வழி . வேற எதுக்கும் வாய்ப்பில்ல இதுதான ?” என்று ஆரியன் அவனைப் போல நடித்துக் காட்ட , அவனை முறைத்தான் ஆதித்யன் .
பிறகு, அந்த வாகனத்தை கைகன்டா கிரகத்தில் தரையிறக்கினர் . விண்கலத்திலிருந்து மூவரும் வெளியே வர , முதலில் சிறிது மூச்சுத் திணறல் ஏற்பட்டது . பிறகு அவர்கள் உடல் தங்க நிறத்தில் ஒளிர ஆரம்பிக்க , அவர்களது உடல்கள் அந்தக் கிரகத்திற்கு ஏற்றவாறு மாறின .
பிறகு அவர்கள் அந்தக் கிரகத்தின் தரையை உற்றுப் பார்த்ததும் , அதிர்ச்சி அடைந்தனர் . இதுவரை அவர்கள் பனிக்கட்டி என்று நினைத்து இருந்தது , இப்பொழுது பார்ப்பதற்கு ? ? ?
அவர்களால் அதனை நம்ப முடியாமல் , வேகமாகத் தரையில் இறங்கி அவற்றை எடுத்துப் பார்த்தனர் .
ஆரியன் , “ இவை இரத்தினக் கற்கள் . கொஞ்சம் கூட கலப்படம் இல்லை ” என்று ஆச்சரியத்துடன் வாயைப் பிளந்தான் .
நந்தினிக்கு , ஆதி என்ன கூற நினைத்தான் என்று இப்பொழுது புரிந்தது .
ஆதித்யன் , “ இந்த கிரகத்தில் வைர மழை பெய்திருக்க வேண்டும் ” என்றான் .
ஆரியன் , “ பூமியில வைரம் ஃபார்ம் ஆகுறதுக்கு , பல்லாயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும் . அதுமட்டுமில்லாமல் அதிக அழுத்தமும் வேணும் . இங்க என்னன்னா வைர மழையா ?” என்று வியந்தான் .
ஆதி , “ ஏதாவது பெரிய இடிமின் புயல் (Thunderstorm) வந்திருக்கணும் . அப்போ காற்றிலிருந்த மீத்தேன் (CH4) வாயுவில் கார்பன் பிரிந்து Charcoal – ஆக மாறி இருந்திருக்கணும் . அப்போ இருந்த தட்பவெப்பநிலையாலும் காற்றழுத்தத்தாலும் இவை வைரமழையாக மாறி இருக்க வேண்டும் ” என்றான் .
நந்தினி , “ ஆனா எப்படி இப்ப மட்டும் சாதாரண வெப்பநிலை இருக்கு ” என்று யோசித்தாள் .
ஆரியன் , “ சரி இப்பக் கோட்டை விஷயத்துக்கு வருவோம் . அவளோ பெரிய கோட்டையை யாராலயும் ஒளிச்சு வைக்க முடியாது ” என்றான் .
அவன் கூறியதைக் கேட்ட நந்தினியின் மனதில் ஏதோ தொடர்வண்டியாக நினைவுகள் தோன்ற , “ ஒளிச்சு வைக்க முடியாது . ஆனா , மறைச்சு வைக்க முடியும் ” என்றாள் .
மற்ற இருவரும் அவளைக் கேள்வியுடன் பார்க்க , “ அன்னைக்கு நாம நினைவுகளில் பார்த்த மாதிரியே ஏழு சிற்றரசர்களும் அகஸ்டஸூம் சேர்ந்துதான் இந்த லெவல்ஸ உருவாக்கி இருக்கணும் .
ஒவ்வொருத்தரும் அவங்கவங்க சக்திகள வச்சு தான் பாதுகாப்பு வளையத்த உருவாக்கி இருக்கணும் . போன தடவை நாம வல்கனோட பாதுகாப்புல இருந்த பார்ச்மென்ட் – அ எடுத்தோம் . அப்பதான் அவர் நம்மோட மன வலிமையைச் சோதித்ததா சொன்னாரு . அதாவது அவரோட சக்தியான வலிமையை . இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது ” என்று சிறு இடைவெளி விட்டவள் ,
“ நாம் இப்போது எரேகனுடைய கட்டத்துல இருக்கோம் . அவரோட சக்தி Invisibility ( கட்புலனாகாமை ). சோ லாஜிக் இஸ் சிம்பிள் . அந்தக் கோட்டை யார் கண்ணுக்கும் தெரியாது ” என்றாள் .
“ அப்ப நம்ம கதை முடிஞ்சிடுச்சு , கண்ணுக்கு தெரியுற கோட்டைலயே பெரிய ஆப்பா இருக்கு . இதுல கண்ணுக்கே தெரியாத கோட்டையா ” என்று சலித்துக் கொண்டான் ஆரியன் .
நந்தினி , “ எனக்கு என்னமோ போன தடவை மாதிரி அந்த பார்ச்மென்ட்ல இருக்குற க்ளூஸ் (clues) வச்சு தான் இந்த முறை கோட்டையைத் தேடனும்னு தோணுது ” என்றாள் .
ஆதித்யன் “ Covered by the gold, we were அப்படின்னா , அந்த கோட்டைய தங்கத்தால அலங்கரித்திருப்பாங்க . ஆனா , கண்ணுக்கே தெரியாத கோட்டை எப்படி இருந்தா என்ன ?” என்றான் .
நந்தினி , “ Our friend will help you to se e k அப்படின்னா , யாரோ நமக்கு உதவ வருவாங்கனு அர்த்தம் ” என்று கூற ,
“ நம்ப வந்து இவ்ளோ நேரம் ஆகியும் , யாரையும் காணமே . சரி கொஞ்ச தூரம் நடப்போம் ” என்றான் ஆதி .
ஒரே இடத்தில் இருப்பதற்கு, ஏதாவது முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஆரியனுக்கும் , நந்தினிக்கும் தோன்ற , மூவரும் கால நேரம் தெரியாமலே நடந்தனர் . வெகு நேரம் ஆகியும் எதுவும் தென்படாததால் அங்கேயே சற்று அமர்ந்தனர் .
அப்பொழுது ஒரு தேனீ வந்து ஆரியனைத் தொல்லை செய்ய , அவனுக்குக் கோபம் வந்தது . அந்த இடத்தில் தேனீ எப்படி வந்தது என்று மூவரும் சிந்திக்கவில்லை .
நந்தினியின் மனதில் , “ See us through your mind ” என்ற வார்த்தைகளே மீண்டும் மீண்டும் ஒலிக்க , அவள் தனது சிந்தனைகளை ஒருங்கிணைத்தாள் . சிறிது நேரத்தில் அந்தத் தேனீ , நந்தினியிடம் வந்து ரீங்காரமிட , அவள் மனதில் இருளில் தோன்றிய மின்னல் போல ஒரு யோசனை தோன்றியது .
நந்தினி , “ யுரேக்கா ” என்று கத்தினாள் .
பின் மற்ற இருவரிடமும் , “ அந்த நண்பன் நமக்கு உதவ வந்துட்டாங்க ” என்றாள் .
ஆரியன் , சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு , “ நந்து அவங்களும் யாரு கண்ணுக்கும் தெரிய மாட்டாங்களா ?” என்று பயத்துடன் கேட்க ,
அவனை முறைத்து விட்டு நந்தினி அந்தத் தேனீயைக் காட்டினாள் . ஆதியும் , ஆரியனும் “ வாட் ?” என்று ஒரு சேர கத்த ,
நந்தினி , “ ஆமாம் மனிதர்களோட நண்பன்னு பார்த்தா ஒரு வகையில் தேனீயை எடுத்துக் கொள்ளலாம்ல ” என்று கூறியவளை இடைமறித்து , “ இதுக்குதான் பெருசா ஏதோ கண்டுபிடிச்ச மாதிரி யுரேக்கானு கத்துனியா ?” என்று ஆரியன் கேட்க ,
“ கொஞ்சம் சும்மா இருடா , எரும . தேனீக்களோட Reproduction- லையும் Fibonacci sequence வரும் . அதனால , அந்த பார்ச்மென்ட்ல இருந்த எல்லா கேள்விக்கும் விடை இந்தத் தேனீ தான் . இனிமே இது தான் நமக்கு வழி காட்டணும் ” என்றாள் .
மற்ற இருவரும் அவள் கூறியதை அதிசயமாகப் பார்க்க , நந்தினி தனது கையை நீட்டினாள் . அதில் அந்தத் தேனீ வந்து அமர , இருவரது கண்களும் நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டன . நந்தினியின் விழிகள் தங்க நிறத்திற்கு மாற அந்தத் தேனீ பறக்கத் தொடங்கியது . அதை நந்தினி பின்தொடர மற்ற இருவரும் நந்தினியைப் பின்தொடர்ந்தனர் .
வெகு நேரம் அவர்கள் அவ்வாறு சென்று கொண்டிருக்க , அந்தத் தேனீ திடீரென்று ஒரு இடத்தில் நின்றிட , நந்தினியும் சாதாரணமாக மாறினாள் .
அனைவரும் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றனர் . நந்தினி அந்த இடத்தில் துழாவிப் பார்க்க அவள் கை எதையோ தீண்டியது போல உணர்வு ஏற்பட , அதே இடத்தில் மறுபடியும் தன் கையை வைத்தாள் .
அவள் உடல் தங்க நிறத்திற்கு மாற , அவள் கையில் இருந்து சக்தி வளையங்கள் வந்து காற்றுக்குள் மறைந்தன . சிறிது நேரத்தில் முன்னர் எதுவுமே இல்லாமல் இருந்த இடத்தில் இப்போது ஒரு பிரம்மாண்டமான தங்க நிற கோட்டை தூரத்தில் கம்பீரமாக நிற்பது தெரிந்தது . அதைப் பார்த்து மூவரும் அதிசயிக்க , அந்தத் தேனீ உள்ளே பறந்து சென்றது .
அதனைத் தொடர்ந்தே அவர்கள் மூவரும் உள்ளே சென்றனர் . உள்ளே செல்ல செல்ல தாங்கள் வேறு ஒரு கிரகத்திற்குள் நுழைந்தது போல உணர்ந்தனர் .
அந்தக் கோட்டை ஒரு மலையின்மேல் அமர்ந்திருக்க , மலை நீர் கோட்டைக்கு இருபுறமும் வழிந்து , அருவியாக மாறி மீண்டும் அடியில் ஒன்றோடு ஒன்று கலந்தன .
அவற்றை இன்னும் சிறிது நேரம் ரசிக்கலாம் என்று பார்த்தால் , அந்தத் தேனீ அதற்கு விடவில்லை . பின் அதனுடனே சென்று கொண்டிருக்க இறுதியில் ஒரு பெரிய வட்ட வடிவ அறைக்குள் நுழைந்தனர் . அந்த அறைக்கு நடுவில் ஒரு சிலை நிற்க , அதை எரேகன் என்று நினைத்துக் கொண்டனர் மூவரும் .
அந்தச் சிலைக்கு முன் ஐந்து பெட்டிகள் இருந்தன . அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தன . நந்தினி இந்த முறை சுதாரிப்பாக , தங்களுக்கு அருகில் ஏதாவது பெட்டி இருக்கிறதா என்று பார்த்து கொண்டாள் . அப்படி எதுவும் கிடைக்காமல் போகவே சிறிது ஏமாற்றம் அடைந்தாள் .
“ இது இவ்வளவு சுலபமாக முடியக் கூடியது இல்லையே ? வேறு என்ன ஆபத்து காத்திருக்கும் ?” என்று யோசித்தாள் .
அதற்குள் அவர்கள் வந்த வழித் தானாகவே அடைக்கப்பட்டது . “ ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கடா ” என்று நினைத்துக்கொண்டான் ஆரியன் .
அந்தத் தேனீ திடீரென்று ஒளி வடிவமாக மாறி , அந்தச் சிலைக்குள் புகுந்தது . அதுவரை எதிலோ அடைபட்டிருந்தது போல இருந்த அந்தச் சிலை உயிர்பெற்றது .
“ என்னுடைய பெயர் எரேகன் . எனது சக்தியைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் . வல்கனுடைய பாதுகாப்பு வளையத்தைத் தாண்டியதற்கும் என்னுடைய கோட்டையைக் கண்டுபிடித்ததற்கும் எனது வாழ்த்துக்கள் . உங்களுடைய அடுத்த கட்டத்துக்கு வழிகாட்டும் பார்ச்மென்ட் இந்த ஐந்து பெட்டிகளில் ஏதோ ஒரு பெட்டியில் தான் இருக்கிறது .
உங்களுக்குச் சரியாக ஆறு நிமிடம் கால அவகாசம் . ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை மட்டுமே இதில் ஏதாவது ஒரு பெட்டியைத் திறக்கலாம் . ஒரு நிமிடம் முடியும் போது அந்த பார்ச்மென்ட் தனது பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு பெட்டிக்குள் மாறிவிடும் .”
“ உதாரணத்திற்கு அந்த பார்ச்மென்ட் முதல் நிமிடத்தின் தொடக்கத்தில் மூன்றாவது பெட்டியிலிருந்தால் , அடுத்த நிமிடம் தொடங்கும் போது இரண்டு அல்லது நான்கு இவ்விரண்டு பெட்டிகளுள் ஒன்றில் இருக்கும் . சரியாக ஆறு நிமிடங்களுக்குள் பார்ச்மென்ட்டை எடுக்காவிட்டால் , இந்தக் கோட்டை மொத்தமும் நீருக்குள் மூழ்கி விடும் . அதனுடன் உங்கள் உடலும் சமாதியாகும் . சரியாகச் சிந்தித்து உரியக் காலத்துக்குள் பார்ச்மென்ட்டை எடுத்து விடுங்கள் ” என்று கூறிவிட்டு மீண்டும் சிலையாக மாறினார் எரேகன் .
அங்கிருந்த மணல் கடிகாரத்தில் மண் துகள்கள் குறைய ஆரம்பித்தன . அவர்கள் மூவருடைய ஆயுட்காலமும் குறையத் தொடங்கியது . நந்தினி இந்த முறை உயிரோடு அடுத்த கட்டத்திற்குச் செல்வாளா ?
error: Content is protected !!