Skip to content
Post Views: 753
அத்தியாயம் – 21
ஆரியன், “அந்த விடுகதையை அப்புறம் பார்க்கலாம். இப்ப மொதல்ல இந்த டிரெஸ்ஸ மாத்தணும்” என்றான்.
Advertisement
மற்ற இருவருக்கும் அது சரியெனப் படவே மூவரும் உடைமாற்றி வந்தனர். மூவரும் எவ்வளவு முயன்றும் முதல் இரண்டு வரிகளைத் தவிர மற்ற வரிகளுக்குப் பொருளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆரியன், “Hail the searchers we say அப்படின்னா அந்த கல்ல தேடுறவங்கள பாராட்டுறாங்க. அப்புறம் இன்னும் ஆறு கதவுகள் இருக்குன்னு போட்டிருக்கு” என்றான்.
மற்ற இருவரும் அவனை முறைத்துப் பார்க்க, நந்தினி, “அதுதான் எங்களுக்கே தெரியுதே. இதுல நீ எதுக்கு ட்ரான்ஸ்லேட்டர் வேலை பாக்குற?” என்று கூற அசடு வழிந்தான் ஆரியன்.
Advertisement
ஆதித்யன், “போன தடவை மாதிரி இந்த தடவையும் ஏதாச்சும் ஒரு நம்பர் தான் விடையா இருக்குமோ ? இங்க கூட நாலுன்ற எண் வந்துருக்கு” என்றான்.
Advertisement
நந்தினி, “இல்ல ஆதி, போன தடவை அந்த நம்பர்க்கான க்ளூ (clue) இருந்துச்சு. அந்த நம்பரை பத்தி தனியா சொல்லிருந்துச்சு. இந்த தடவை
வெறும் நாலுனு தான் இருக்கு. அது மட்டுமில்லாமல் தங்கத்தால சுற்றப்பட்டு இருப்போம்னு இருக்கு. ஏதாச்சும் ஒரு சிலையா இருக்குமோ” என்று கூறினாள்.
ஆரியன், “அப்படின்னா நாலு பேரு இருக்கக்கூடிய ஒரு சிலைனா ?” என்று யோசித்தவன், மூளையில் ஒரு யோசனை உதிக்க, “கண்டுபிடிச்சுட்டேன்” என்று கத்தினான்.
Advertisement
ஆதியும் நந்தினியும் அவனை யோசனையுடன் பார்த்தனர். “அமெரிக்கால இருக்குற Mount Rushmore- ல, நாலு ஜனாதிபதிகள் ஓட முகச்சிலை இருக்கு. ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன், தியாட்ரே ரூஸ்வெல்ட், ஆபிரகாம் லிங்கன் இவங்க நாலு பேரும் ஆட்சி செஞ்சத அமெரிக்காவோட பொற்காலம்னு சொல்லலாம்” என்றான்.

எதையோ பெரிதாக எதிர்பார்த்து இருந்த ஆதிக்கும், நந்தினிக்கும் புஸ்ஸென்றானது.
நந்தினி பொறுமையாக, “ஆரி ! நாம இப்ப யோசிக்கிற விஷயம் எல்லா கிரகத்துக்கும் பொருந்துற மாதிரி இருக்கணும். ஆனா, இப்ப நீ சொன்னது பூமிக்கு மட்டும் தான் பொருந்தும். அப்படி இருந்தாலும் தங்கத்தால சுற்றப்பட்டு இருப்போம்னு போட்ருக்கு. இதுல லாஜிக்கே இல்லை” என்று முடித்தாள். மறுபடியும் முயன்றும் அவர்கள் ஒரே டெட் எண்டுக்கு வந்தார்கள்.
ஆதி, “இதுல நண்பன் என்ற வார்த்தை யாரை குறிக்குது ? அப்ப இது கண்டிப்பா மனிதர்களைத் தான் குறிக்குதா ?” என்று கேட்டான். நந்தினி அவளே குழம்பியிருந்ததால், பதில் அளிக்க முடியவில்லை.
ஆரியன், “மனிதர்களா இருந்தா அவங்க எப்படி பூக்களிடமோ இல்ல மரத்துலயோ இருக்க முடியும் ? அது என்ன பூவிலும் இருப்பேன் புயலிலும் இருப்பேன்னு ? ஒரே Irony–ஆ (முரணா) இருக்கு” என்றான்.
“இதுல இருக்கிற ஏதோ ஒரு சின்ன விஷயத்த நாம பார்க்க மாட்டோங்குறோம். ஆனா, அது என்ன ?” என்று தன்னைத் தானே கேட்டு கொண்டாள் நந்தினி.
அந்தப் பொருட்கள் ஒவ்வொன்றையும் சம்பந்தப் படுத்த முயன்று தோற்றாள்.
இறுதியில், “இதுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு இருக்கும்னு எனக்குத் தோணல” என்றாள் நந்தினி.
ஆதி, “எனக்கென்னமோ நாம மேல இருந்து கீழ பாக்குறது தான் பிரச்சனைனு தோனுது. இந்த தடவை ரிவர்ஸ்ல பார்த்தா என்ன ? உதாரணத்துக்கு நாம இந்த ஆறு பொருட்களுக்கும் நடுவுல இருக்கிற லிங்க்க கண்டுபிடிச்சுட்டா, இந்த விடுகதையோட ஆன்சர ஈஸியா கண்டுபுடிச்சுடலாம்” என்றான்.
நந்தினி, “நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துவிட்டேன்” என்று கூறியவளுக்கு, மனதில், “See us through your mind” என்ற வரி நினைவுக்கு வந்தது.
ஆதி முயன்று முயன்று பார்த்துவிட்டு, கடைசியாக, “அடப்போங்கப்பா ! இதுல எனக்கு ரெண்டு பொருட்களுக்குத் தான் லிங்க் தெரியுது” என்றான்.
மற்ற இருவரும் அவனை ‘என்ன’ என்பது போலப் பார்க்க, “சொன்னா சிரிக்கக் கூடாது” என்று முகவுரையுடன்,
“அந்த Shells மற்றும் Galaxies தான் என்னால ரிலேட் பண்ண முடிஞ்சுச்சு. இரண்டையும் அதோட Patterns வச்சு பார்த்தா ஒரு ஒற்றுமை இருக்கு. ரெண்டுமே ஸ்பைரல் Pattern கொண்டு அமைஞ்சிருக்கும்” என்றான்.
நந்தினி, “நாம் இந்தக் கோணத்தில் யோசிக்காமல் விட்டுடோமே” என்று நினைத்தவள்,
“ஆனா ஆதி, முகத்துல என்ன Pattern இருக்கு ?” என்று கேட்டாள்.
ஆதி யோசித்துக் கொண்டிருக்கும்போது, ஆரியன், “அதை நாங்க தான் உன்கிட்ட கேட்கணும். நீதான Drawings-லாம் வரைவ ?” என்று கூற, நந்தினியின் மூளை அந்த ஓவியம் என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டது.
ஏனோ அந்த வார்த்தையை அவளால் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஓவியம் என்ற வார்த்தைக்கும், Spiral என்ற வார்த்தைக்கும் இடையே அவளது அறிவு போராட, இறுதியில் அவள் அறிவுக்கு அவள் எதிர்பார்த்தது கிடைத்தது. அந்த ஓவியம் லியானர்டோ டா வின்சி வரைந்த மோனலிசா ஓவியம். இப்பொழுது அவளுக்கு ஒவ்வொரு பொருளுக்கும் இடையே இருந்த ஒற்றுமை புலப்படத் தொடங்கியது.
அனைத்து பொருளும் ஒரே புள்ளியில் இணைய, விடை கிடைத்த சந்தோஷத்தில், நந்தினி, “Fibonacci Sequence” என்றாள்.
ஆதியும், ஆரியனும் “Fibonacci நம்பர்ஸா ?” என்று ஒருமித்த குரலில் கேட்க,
“ஆமாம். அது தான் இந்த ஆறு பொருட்களுக்கும் இடையே இருக்குற பொதுவான விஷயம்” என்றாள் நந்தினி.
பின்னர் அவளே தொடர்ந்து, “Fibonacci நம்பர்ஸ்னா அது ஒரு சீக்குவன்ஸ். அந்தத் தொடர்ச்சியில் முதலில் இருக்கிற ரெண்டு நம்பர்ஸ add பண்ணினா, அடுத்த நம்பர் வரும். இதே மாதிரி இந்த sequence தொடர்ச்சியா வந்துகிட்டே இருக்கும். இது ஒரு முடிவில்லா sequence. இன்னும் அந்த sequence–அ, சொல்லனும்னா 0 ,1, 1 ,2 ,3, 5 ,8 ,13, 21 …இப்படி போயிட்டே இருக்கும்” என்றாள்.
“அது இருக்கட்டும் நந்து, அதுக்கும் இந்த ஆறு பொருட்களுக்கும் என்ன தொடர்பு ?” என்று கேட்டான் ஆரியன்.
“நாம நினைச்சுப் பார்க்க முடியாத அத்தனை விஷயத்திலும் இந்த Fibonacci Sequence தான் இருக்கு” என்றாள் நந்தினி.
ஆதியும், ஆரியனும் அதிர்ந்து போய் பார்க்க, நந்தினி, “இந்தப் பொருட்கள் ஒவ்வொன்னுத்துலயும் அதப் பார்க்கலாம். பூக்களில் இருக்குற pollen grains (மகரந்தங்கள்) அடுக்கி இருக்குற விதம் இந்த sequence படி தான் இருக்கும். சில பூக்களில் அதோட இதழ்களுக்குத் தேவையான சூரிய ஒளி கிடைக்கிறதுக்கும், இந்த பேட்டர்ன் தான் பயன்படும். மரத்தோட கிளைகள் பிரியும் விதமும் இதன் அடிப்படையில் தான். முதலில் ஒரு கிளை ரெண்டாப் பிரியும். அப்புறம், அவ்விரண்டுள் ஒன்னு வளராம இருந்துடும் மற்றொன்று இரண்டாகப் பிரிந்து மொத்தம் மூன்றாக மாறும். இப்படியே 5,8,13 என்று பெருகும். இப்ப Spiral–க்கு வருவோம். இந்த எண்கள ஒவ்வொன்றையும் வச்சு சதுரம் சதுரமா வரைந்து ஒவ்வொரு புள்ளியையும் இணைச்சோம்னா, ஒரு ஸ்பைரல் பேட்டர்ன் உருவாகும். அந்தப் பேட்டர்ன் தான் கேலக்ஸி, Shells, Hurricanes இதுலலாம் இருக்குது. அதே மாதிரியான பேட்டர்ன்–ஐ நம்ம முகத்துல கூட பார்க்கலாம்” என்றாள் நந்தினி.

மோனோலிசா படத்தைப் பற்றிக் கூறிய பின்பு, அவர்கள் இருவரும் பேயறைந்தது போல இருக்க, முதலில் தெளிந்த ஆதி, “சனா, நீ சொன்னது எல்லாம் கரெக்டா ஒத்துப் போகுது. ஆனா, இந்த இடத்துல நண்பன்னு யாரை குறிக்குது ?” என்று கேட்டவனிடம்,
“அதற்குப் பதில் அந்த விடுகதையிலேயே இருக்கு, ஆதி” என்று நந்தினி கூறவும்,
ஆரியன், “Covered by the gold we were” என்று கூற,
ஆதியும் நந்தினியும் இணைந்து, “Golden ratio” என்று கூற, ஆரியனுக்கும் ஓரளவு புரிந்துவிட்டது.
“இந்த Sequence– ல வர்ற அடுத்தடுத்த நம்பர divide பண்ணா ஒரு கட்டத்துல 1.618 என்ற நம்பர் விடையா கிடைக்கும். இதுதான் Golden Ratio-னு சொல்லுவோம்” என்றாள் நந்தினி.
ஆரியன், அந்த விடுகதையை முடித்து வைக்கும் விதத்தில், “அப்படின்னா நாம தேடிட்டு இருக்குற அந்த நாலு டிஜிட் நம்பர் 1618” என்றான்.
அதை அவன் அந்த பார்ச்மென்டில் குறிக்க, வழக்கம் போல அனைத்து குறியீடுகளும் மறைந்தன. பின்னர், சில நொடிகள் கழித்து, அதில் தோன்றிய சில எண்களை ஆதி குறித்துக் கொண்டு, அந்த விமானத்திலிருந்த Database–இல் தேடினான்.
சில நொடிகளில் அந்தத் திரையில் ‘கைகன்டா‘ என்ற பெயர் மிளிர்ந்தது. ஆனால், அதைப்பற்றித் தேடும் ஆக்சஸை பொசய்டனின் கைரேகையைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தாலும், அதில் எந்த விதமான தகவலும் இல்லை என்பதைக் கண்டதும் “மறுபடியுமா ?” என்று சோர்ந்து போயினர்.

“வேறு வழியில்லை ஆதி” என்று நந்தினி கூறவும், அந்தக் கிரகத்தை சென்றடையும் இடமாக குறிப்பிட்டு விட்டு (destination–ஆக மாற்றிவிட்டு) விண்கலத்தை இயக்கினான் ஆதித்யன்.
மூவரும் மறுபடியும் தங்களுடைய யோசனைகளில் மூழ்கியிருக்க, ஆரியன், மற்ற இருவருக்கும் கரடியாக மாறாமல், “நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன். அந்த கிரகத்திற்கு பக்கத்தில போனதும் என்னைய எழுப்புங்க” என்று கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டான்.
நந்தினி சில நாட்களாகவே மனதிற்குள் ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு அவதிப்படுவதும் பின்பு அதை மறைக்க முயல்வதும் தெரிய, அவள் தவிப்பதை உணர்ந்த ஆரியன், இப்பொழுது அவளுக்குத் தேவை ஒரு சைக்கியாட்ரிஸ்ட் அல்ல, அவளைப் புரிந்து கொண்டு அவளது கவலையை அகற்றும் அவள் காதலன் தான் என்று உணர்ந்து அவளை நெருங்கினான்.
அங்கு சில நிமிடங்கள் ஒருவித அமைதி நிலவ, “இப்போ சொல்லு சனா, நீ உனக்குள்ளேயே ஒரு கஷ்டத்தை வச்சுகிட்டு மருகுற. அது என்ன? நீ அப்படி இருக்கிறது ஆரியனுக்கு தெரிஞ்சு தான் அவன் நம்மைத் தனியா விட்டுட்டு போயிருக்கான். எதுவா இருந்தாலும் இப்பவே பேசு சனா. இனிமே நம்ம இது மாதிரி பேசுறதுக்கு சான்ஸ் கிடைக்குமான்னு தெரியல” என்று ஆதி கூறி சிரிக்கவும் அவனை முறைத்தாள் நந்தினி.
“இதுக்குதான் நான் பயப்படுறேன், ஆதி. இந்த பிரச்சனைல உங்கள இழுத்துவிட்டு, வாழ்வா ? சாவானு ? போராட வைக்கிறது எனக்குக் கஷ்டமா இருக்கு. போன தடவை கொஞ்சம் லேட்டாகி இருந்தாலும் நாம எல்லாருமே இறந்துருப்போம். அதே நேரம் நீங்க ரெண்டு பேரும் இல்லாம இதெல்லாம் எப்படி தனியா செய்வேன்னும் இருக்கு. என் மனசு ரெண்டா பிரிஞ்சு வாதம் பண்ணிட்டு இருக்கு” என்று கூறினாள் நந்தினி.
“முழுசா சொல்லு சனா, இது மட்டும் தான் உன் பிரச்சனையா? இல்லைனு நம்ம ரெண்டு பேருக்குமே தெரியும். என்னைய டைவர்ட் பண்ண முயற்சி பண்ணாத” என்றான் ஆதி.
அவனது பேச்சில் அதிர்ந்த நந்தினி, “என்ன… நான் எதுவும் மறைக்கலையே…” என்று திக்கித் திணறிச் சொல்ல, அதைக் கண்ட ஆதியின் முகத்தில் குறுநகை பிறந்தது.
“இன்னும் என்னோட சனா செல்லத்துக்கு பொய் சொல்லவே தெரியல. நான் சொல்லட்டுமா? என்னைக் காதலிப்பதில் தானே பிரச்சனை ?” என்று ஆதி கேட்க,
நந்தினி, ‘ இனியும் பொய் சொல்லவேண்டாம்‘ என்று நினைத்து,
‘ஆம்’ என்று தலையாட்டி விட்டு,
“நான் ஒரு சாதாரண காதலி மாதிரி உங்க கூட பழகுறதில்லையோன்னு ஒரு சின்ன உறுத்தல். அவ்வளவு தான்” என்றாள்.
அவள் கூறியதைக் கேட்ட ஆதி, விழுந்து விழுந்து சிரித்தான். அவள் முறைப்பதைக் கண்டு, தன் சிரிப்பை அடக்கிக் கொண்டவன்,
“நான் கூட ஏதோ பெருசா சொல்ல போறியோனு நினைச்சேன், சனா. இங்க பாரு, காதலிச்சா அவங்களோட ஊர சுத்திட்டு, படம் பார்த்துக்கிட்டே இருக்கணுமா ? இல்ல உனக்கு நானே ஏதாச்சும் பிரச்சினைய உருவாக்கிட்டு அதுக்கு நானே தீர்வா இருக்கணுமா ? அதெல்லாம் ஜஸ்ட் fantasy, சனா. ரியாலிட்டின்றது வேற. உனக்கு ஒரு கஷ்டம் வர்றப்ப நானும் அதே மாதிரி எனக்கு ஒரு கஷ்டம் வர்றப்ப நீயும் ஒருத்தருக்கொருத்தர் வாழ்க்கை முழுவதும் துணையா இருந்தா போதும்.”
“காதல் என்பது ஒரு உணர்வு. அதை அளப்பதற்கு பாராமீட்டர்ஸ் வைக்காதே. இப்போதைக்கு நம்முடைய கடமையை இந்தப் பிரபஞ்சமே நம்பியுள்ளது. உன்னுடைய தனித்தன்மையை என்னோட காதல் அழிக்கக் கூடாது. அப்படி இல்லன்னாலும் யாருக்குத்தான் இப்படி கிரகம் கிரகமா தன்னோட காதலியோட ஒரு அட்வெஞ்சர் ட்ரிப் போவதற்கு வாய்ப்பு கிடைக்கும் ?” என்று தன்னுடைய சனாவிற்காக புது காதல் காவியத்தை உருவாக்கினான் அந்த காவியத் தலைவன்.
நந்தினி இப்போது தன் கவலையை தூரத் தூக்கி எறிந்தாள்.
அதற்குள் தூரத்தில், ஒரு பெரிய கிரகம் இருப்பது போலத் தெரிய, நந்தினி ஆரியனை அழைக்கச் சென்றாள். அதேசமயம் ஆதி கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றான்.
கைகன்டா கிரகம் அவர்களுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தது.
******
கிரகம்: கயா
இடம்: காட்டுப் பகுதி
சிற்றரசர்கள் அனைவரும் வரப்போகின்ற போருக்குத் தேவையானதை ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். அக்கிலஸ் அங்கே வரவும், அவனை நோக்கி நடந்தார் வல்கன்.
அவன் கோபமாக இருப்பதைக் கண்டு, “என்ன நடந்தது அக்கிலஸ் ? ப்ரொமேத்தியஸின் ஆட்களுடன் மோதல் ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா ?” என்றவர் கேட்க,
“அப்படி ஏதாவது பிரச்சனையாக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், இனிமேல் ஒரு நாள் இப்படி நடந்தால் கூட நான் பொறுமையாக இருக்க மாட்டேன்” என்று கூறிவிட்டுச் சென்றான்.
அவர் குழப்பத்தோடு நிற்க, அவனைத் தொடர்ந்து வந்த நபரைக் கண்டதும் அவருக்குத் தேவையான விடை கிடைத்து விடவே, சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார்.
அக்கிலஸ், நேராக க்ரோனனிடம் சென்று, “எவ்வளவு முறை தான் புத்திமதி கூறி கொண்டே இருப்பது ? இனி இது தொடர்ந்தால் தண்டனை கொடுக்காமல் விடமாட்டேன்” என்று கூறி விட்டுச் செல்ல, இவ்வளவுக்கும் காரணமான அந்த நபர் க்ரோனனிடம் வந்தாள்.
அவர் சிரித்துக் கொண்டே, இந்த முறை, “உன் தமையனிடம் என்ன செய்து மாட்டிக் கொண்டாய்?” என்று கேட்டார்.
அதுவரை அமைதியாக இருந்த லூனா, “எல்லோரும் ஏன் என்னையே குறை சொல்கிறீர்கள்? மற்ற சிற்றரசர்களின் வாரிசுகள் அனைவரும் கடந்த முறை ஏற்பட்ட கன்வர்ஜென்ஸின் பொழுது இறந்து விட்டார்கள் . மீதமிருப்பது நானும் அக்கிலஸூம் தான். அவன் மட்டும் போர் வீரர்களை வழி நடத்துவான். நான் மட்டும் அமைதியாக இருக்க வேண்டுமா?” என்று கேட்டு விட்டு,
பின் அவளே தொடர்ந்து, “அதான் அவனைக் கண்காணித்துக் கொண்டிருந்த இரு உளவாளிகளைக் கொன்றுவிட்டேன். அதற்குப் போய் நான் அவனது திட்டத்தை பாழ் படுத்தி விட்டேன் என்று திட்டுகிறான்” என்று கூறி முடித்தாள்.
இது எப்போதும் நடப்பது தான் என்பது போல தங்களது வேலையைத் தொடர்ந்தனர் மற்ற சிற்றரசர்கள்.
அவர்கள் பேசிக் கொள்ளும் போது, அங்கு வந்தனர் வல்கனும் அக்கிலஸூம்.
சிறியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொள்ள, வல்கன், “க்ரோனன், முடிந்த அளவுக்கு அக்கிலஸ் படையைத் திரட்டி விட்டான். ஆனால், நமக்கு இப்போது இருக்கும் படை மட்டும் போதாது. சரி அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது அதைவிட முக்கியமான செய்தி ஒன்று உள்ளது” என்றார்.
க்ரோனன், “என்னவாயிற்று வல்கன் ?” என்று பரபரப்புடன் கேட்க,
“சீரஸின் வாரிசை பொசய்டன் எனது மூதாதையரின் புனித கிரகமான 176C–க்கு அழைத்துச் சென்று விட்டார் என்று நினைக்கின்றேன். ஆனால், என்ன நடந்தது என்று தெரியவில்லை, இறுதியில் ஏதோ தவறு செய்து விட்டார்கள் போலும். பாதுகாப்பு வளையங்கள் தீயைத் தூண்டி இருக்கின்றன. அப்போது அவர்கள் பொசய்டனுடன் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. அப்படியென்றால், பொசய்டன் எங்கே ? இனி வரும் கஷ்டங்கள் அனைத்தும் கடுமையாக இருக்குமோ” என்று வருத்தப்பட்டார் வல்கன்.
க்ரோனன், “எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நம்மில் ஒருவர் யாராவது அவர்களுக்கு உதவி செய்யலாம் அல்லவா ?” என்று கேட்க, அக்கிலஸ் மற்றும் வல்கனின் பார்வை லூனாவிடம் திரும்பியது.
லூனா அதிர்ந்து, “நானா ? வேறு கிரகங்களுக்குச் சென்று பயணிப்பது என்ன விளையாட்டா ? அதுவும் அந்த வாரிசுக்கு என்ன திறமை இருக்குமென்று நீங்கள் எல்லோரும் அவரை இப்படி மதிக்கின்றீர்களோ ?” என்று கேட்க,
க்ரோனன், “இதற்கு மேல் நீ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது. என்ன இருந்தாலும் உன் வருங்கால பேரரசரை நீ இப்படி தான் கூறுவாயா ? நீ ஒரு சிற்றரசின் மகள். அதற்குப் பின் இருக்கும் கடமையை மறக்காதே. உனக்கு இந்தக் கிரகத்திற்கு ஏதாவது உதவ வேண்டும் என்று தோன்றினால், உடனடியாக அவர்களுக்கு உதவி செய்” என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
லூனாவின் மனதில் இதுவரை பார்த்தே அறியாத அந்த பேரரசர் மீது கோபம் ஏற்பட்டது. அக்கிலஸ், “நீ கவலைப்படாதே லூனா, இதை உன் திறமைக்குக் கிடைத்த சவாலாக நினைத்துக்கொள். வா, அவர்கள் அடுத்து எங்குச் செல்வார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். இதைச் சாக்காக வைத்து நீ நிகேடரிடம் ஒரு வாகனத்தைக் கூட பெற்றுக்கொள்ளாலாம் அல்லவா?” என்று கண் சிமிட்டி கேட்க,
“அதை ஒன்றும் நீ கூறத் தேவையில்லை. நான் வரும் வரைக்கும் யாரிடமும் உன் உயிரைப் பறிகொடுத்து விடாதே, ஏனென்றால் நான் தான் உன்னைக் கொல்வேன்” என்று லூனா கூறி விட்டுச் செல்ல, அவளைச் சிரிப்புடன் பார்த்து தலையாட்டிக் கொண்டான் அக்கிலஸ்.
******
கைகன்டா கிரகம் Sapphire இரத்தின கல்லின் நிறத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது. நந்தினி அந்தக் கிரகத்தைத் திரை வழியாகப் பார்த்துக் கொண்டிருக்க, ஆதி சென்ற முறை அனுப்பிய Drone– களில் ஏதாவது சேதாரம் ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதித்துக் கொண்டிருந்தான்.
ஆரியன் அந்தப் பழைய பார்ச்மென்ட் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்த முறை விண்கல் வளையம் ஏதும் இல்லாததால், அவர்கள் எளிதாக கைகன்டா கிரகத்தின் காற்று மண்டலத்துக்குள் நுழைந்தனர். வழக்கம்போல அவர்கள் ட்ரோன்களை அனுப்பி அந்தக் கிரகத்தைப் பற்றி அறிந்து கொண்டிருந்தனர்.
திரையிலிருந்த நிழற்படங்களைப் பார்த்து வந்த ஆரியன், “என்ன தரை முழுவதும் பனிக்கட்டியால் இருக்கும் போல ? போன தடவை என்னென்னமோ சொல்லி என்னைய தண்ணிக்குள்ள தள்ளி விட்டுட்டீங்க. ஆனா, இந்த தடவை நான் ஏமாற மாட்டேன்” என்று கூறியவனின் பேச்சை உதறித் தள்ளிவிட்டு,
நந்தினி, “ரெண்டு பேரும் இங்க பாருங்க. இவ்ளோ பனிக்கட்டியாய் இருக்குற இடத்துல எப்படி Temperature level( வெப்பம் )சாதாரணமா இருக்க முடியும் ?” என்று கேட்டாள்.
அவள் கேட்ட கேள்வி சரியாக இருக்கவே, ஆதித்யன் சிறிது யோசித்தான். “எனக்கு ஒரு யோசனை தோணுது. ஆனால், அதை அங்கு போய் சரி பார்த்த பிறகு தான் என்னால் சொல்ல முடியும்” என்றான்.
ஆரியன், “அதெல்லாம் விடுங்கப்பா, போன தடவை ஒரு கோட்டை இருந்ததற்கு அடையாளம் தெரிஞ்சுச்சு. ஆனா, இந்த தடவை அது மாதிரி எதுவுமே இந்த நிழற்படங்களில் இல்லையே. இப்ப எப்படி அந்த கோட்டையைக் கண்டுபிடிக்கிறது ?” என்று கேட்டான்.
ஆதி ஏதோ சொல்ல வரவும், “இப்ப என்ன சொல்ல போற ? நமக்கு இது மட்டும் தான் இருக்கிற ஒரே வழி. வேற எதுக்கும் வாய்ப்பில்ல இதுதான ?” என்று ஆரியன் அவனைப் போல நடித்துக் காட்ட, அவனை முறைத்தான் ஆதித்யன்.
பிறகு, அந்த வாகனத்தை கைகன்டா கிரகத்தில் தரையிறக்கினர். விண்கலத்திலிருந்து மூவரும் வெளியே வர, முதலில் சிறிது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பிறகு அவர்கள் உடல் தங்க நிறத்தில் ஒளிர ஆரம்பிக்க, அவர்களது உடல்கள் அந்தக் கிரகத்திற்கு ஏற்றவாறு மாறின.
பிறகு அவர்கள் அந்தக் கிரகத்தின் தரையை உற்றுப் பார்த்ததும், அதிர்ச்சி அடைந்தனர். இதுவரை அவர்கள் பனிக்கட்டி என்று நினைத்து இருந்தது, இப்பொழுது பார்ப்பதற்கு ? ? ?
அவர்களால் அதனை நம்ப முடியாமல், வேகமாகத் தரையில் இறங்கி அவற்றை எடுத்துப் பார்த்தனர்.
ஆரியன், “இவை இரத்தினக் கற்கள். கொஞ்சம் கூட கலப்படம் இல்லை” என்று ஆச்சரியத்துடன் வாயைப் பிளந்தான்.
நந்தினிக்கு, ஆதி என்ன கூற நினைத்தான் என்று இப்பொழுது புரிந்தது.
ஆதித்யன், “இந்த கிரகத்தில் வைர மழை பெய்திருக்க வேண்டும்” என்றான்.
ஆரியன், “பூமியில வைரம் ஃபார்ம் ஆகுறதுக்கு, பல்லாயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும். அதுமட்டுமில்லாமல் அதிக அழுத்தமும் வேணும். இங்க என்னன்னா வைர மழையா ?” என்று வியந்தான்.
ஆதி, “ஏதாவது பெரிய இடிமின் புயல் (Thunderstorm) வந்திருக்கணும். அப்போ காற்றிலிருந்த மீத்தேன் (CH4) வாயுவில் கார்பன் பிரிந்து Charcoal– ஆக மாறி இருந்திருக்கணும். அப்போ இருந்த தட்பவெப்பநிலையாலும் காற்றழுத்தத்தாலும் இவை வைரமழையாக மாறி இருக்க வேண்டும்” என்றான்.
நந்தினி, “ஆனா எப்படி இப்ப மட்டும் சாதாரண வெப்பநிலை இருக்கு” என்று யோசித்தாள்.
ஆரியன், “சரி இப்பக் கோட்டை விஷயத்துக்கு வருவோம். அவளோ பெரிய கோட்டையை யாராலயும் ஒளிச்சு வைக்க முடியாது” என்றான்.
அவன் கூறியதைக் கேட்ட நந்தினியின் மனதில் ஏதோ தொடர்வண்டியாக நினைவுகள் தோன்ற, “ஒளிச்சு வைக்க முடியாது. ஆனா, மறைச்சு வைக்க முடியும்” என்றாள்.
மற்ற இருவரும் அவளைக் கேள்வியுடன் பார்க்க, “அன்னைக்கு நாம நினைவுகளில் பார்த்த மாதிரியே ஏழு சிற்றரசர்களும் அகஸ்டஸூம் சேர்ந்துதான் இந்த லெவல்ஸ உருவாக்கி இருக்கணும்.
ஒவ்வொருத்தரும் அவங்கவங்க சக்திகள வச்சு தான் பாதுகாப்பு வளையத்த உருவாக்கி இருக்கணும். போன தடவை நாம வல்கனோட பாதுகாப்புல இருந்த பார்ச்மென்ட்–அ எடுத்தோம். அப்பதான் அவர் நம்மோட மன வலிமையைச் சோதித்ததா சொன்னாரு. அதாவது அவரோட சக்தியான வலிமையை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது” என்று சிறு இடைவெளி விட்டவள்,
“நாம் இப்போது எரேகனுடைய கட்டத்துல இருக்கோம். அவரோட சக்தி Invisibility (கட்புலனாகாமை). சோ லாஜிக் இஸ் சிம்பிள். அந்தக் கோட்டை யார் கண்ணுக்கும் தெரியாது” என்றாள்.
“அப்ப நம்ம கதை முடிஞ்சிடுச்சு, கண்ணுக்கு தெரியுற கோட்டைலயே பெரிய ஆப்பா இருக்கு. இதுல கண்ணுக்கே தெரியாத கோட்டையா” என்று சலித்துக் கொண்டான் ஆரியன்.
நந்தினி, “எனக்கு என்னமோ போன தடவை மாதிரி அந்த பார்ச்மென்ட்ல இருக்குற க்ளூஸ் (clues) வச்சு தான் இந்த முறை கோட்டையைத் தேடனும்னு தோணுது” என்றாள்.
ஆதித்யன் “Covered by the gold, we were அப்படின்னா, அந்த கோட்டைய தங்கத்தால அலங்கரித்திருப்பாங்க. ஆனா, கண்ணுக்கே தெரியாத கோட்டை எப்படி இருந்தா என்ன ?” என்றான்.
நந்தினி, “Our friend will help you to seek அப்படின்னா, யாரோ நமக்கு உதவ வருவாங்கனு அர்த்தம்” என்று கூற,
“நம்ப வந்து இவ்ளோ நேரம் ஆகியும், யாரையும் காணமே. சரி கொஞ்ச தூரம் நடப்போம்” என்றான் ஆதி.
ஒரே இடத்தில் இருப்பதற்கு, ஏதாவது முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஆரியனுக்கும், நந்தினிக்கும் தோன்ற, மூவரும் கால நேரம் தெரியாமலே நடந்தனர். வெகு நேரம் ஆகியும் எதுவும் தென்படாததால் அங்கேயே சற்று அமர்ந்தனர்.
அப்பொழுது ஒரு தேனீ வந்து ஆரியனைத் தொல்லை செய்ய, அவனுக்குக் கோபம் வந்தது. அந்த இடத்தில் தேனீ எப்படி வந்தது என்று மூவரும் சிந்திக்கவில்லை.
நந்தினியின் மனதில், “See us through your mind” என்ற வார்த்தைகளே மீண்டும் மீண்டும் ஒலிக்க, அவள் தனது சிந்தனைகளை ஒருங்கிணைத்தாள். சிறிது நேரத்தில் அந்தத் தேனீ, நந்தினியிடம் வந்து ரீங்காரமிட, அவள் மனதில் இருளில் தோன்றிய மின்னல் போல ஒரு யோசனை தோன்றியது.
நந்தினி, “யுரேக்கா” என்று கத்தினாள்.
பின் மற்ற இருவரிடமும், “அந்த நண்பன் நமக்கு உதவ வந்துட்டாங்க” என்றாள்.
ஆரியன், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “நந்து அவங்களும் யாரு கண்ணுக்கும் தெரிய மாட்டாங்களா ?” என்று பயத்துடன் கேட்க,
அவனை முறைத்து விட்டு நந்தினி அந்தத் தேனீயைக் காட்டினாள். ஆதியும், ஆரியனும் “வாட் ?” என்று ஒரு சேர கத்த,
நந்தினி, “ஆமாம் மனிதர்களோட நண்பன்னு பார்த்தா ஒரு வகையில் தேனீயை எடுத்துக் கொள்ளலாம்ல” என்று கூறியவளை இடைமறித்து, “இதுக்குதான் பெருசா ஏதோ கண்டுபிடிச்ச மாதிரி யுரேக்கானு கத்துனியா ?” என்று ஆரியன் கேட்க,
“கொஞ்சம் சும்மா இருடா, எரும. தேனீக்களோட Reproduction- லையும் Fibonacci sequence வரும். அதனால, அந்த பார்ச்மென்ட்ல இருந்த எல்லா கேள்விக்கும் விடை இந்தத் தேனீ தான். இனிமே இது தான் நமக்கு வழி காட்டணும்” என்றாள்.
மற்ற இருவரும் அவள் கூறியதை அதிசயமாகப் பார்க்க, நந்தினி தனது கையை நீட்டினாள். அதில் அந்தத் தேனீ வந்து அமர, இருவரது கண்களும் நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டன. நந்தினியின் விழிகள் தங்க நிறத்திற்கு மாற அந்தத் தேனீ பறக்கத் தொடங்கியது. அதை நந்தினி பின்தொடர மற்ற இருவரும் நந்தினியைப் பின்தொடர்ந்தனர்.
வெகு நேரம் அவர்கள் அவ்வாறு சென்று கொண்டிருக்க, அந்தத் தேனீ திடீரென்று ஒரு இடத்தில் நின்றிட, நந்தினியும் சாதாரணமாக மாறினாள்.
அனைவரும் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றனர். நந்தினி அந்த இடத்தில் துழாவிப் பார்க்க அவள் கை எதையோ தீண்டியது போல உணர்வு ஏற்பட, அதே இடத்தில் மறுபடியும் தன் கையை வைத்தாள்.
அவள் உடல் தங்க நிறத்திற்கு மாற, அவள் கையில் இருந்து சக்தி வளையங்கள் வந்து காற்றுக்குள் மறைந்தன. சிறிது நேரத்தில் முன்னர் எதுவுமே இல்லாமல் இருந்த இடத்தில் இப்போது ஒரு பிரம்மாண்டமான தங்க நிற கோட்டை தூரத்தில் கம்பீரமாக நிற்பது தெரிந்தது. அதைப் பார்த்து மூவரும் அதிசயிக்க, அந்தத் தேனீ உள்ளே பறந்து சென்றது.

அதனைத் தொடர்ந்தே அவர்கள் மூவரும் உள்ளே சென்றனர். உள்ளே செல்ல செல்ல தாங்கள் வேறு ஒரு கிரகத்திற்குள் நுழைந்தது போல உணர்ந்தனர்.
அந்தக் கோட்டை ஒரு மலையின்மேல் அமர்ந்திருக்க, மலை நீர் கோட்டைக்கு இருபுறமும் வழிந்து, அருவியாக மாறி மீண்டும் அடியில் ஒன்றோடு ஒன்று கலந்தன.

அவற்றை இன்னும் சிறிது நேரம் ரசிக்கலாம் என்று பார்த்தால், அந்தத் தேனீ அதற்கு விடவில்லை. பின் அதனுடனே சென்று கொண்டிருக்க இறுதியில் ஒரு பெரிய வட்ட வடிவ அறைக்குள் நுழைந்தனர். அந்த அறைக்கு நடுவில் ஒரு சிலை நிற்க, அதை எரேகன் என்று நினைத்துக் கொண்டனர் மூவரும்.
அந்தச் சிலைக்கு முன் ஐந்து பெட்டிகள் இருந்தன. அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தன. நந்தினி இந்த முறை சுதாரிப்பாக, தங்களுக்கு அருகில் ஏதாவது பெட்டி இருக்கிறதா என்று பார்த்து கொண்டாள். அப்படி எதுவும் கிடைக்காமல் போகவே சிறிது ஏமாற்றம் அடைந்தாள்.
“இது இவ்வளவு சுலபமாக முடியக் கூடியது இல்லையே ? வேறு என்ன ஆபத்து காத்திருக்கும் ?” என்று யோசித்தாள்.
அதற்குள் அவர்கள் வந்த வழித் தானாகவே அடைக்கப்பட்டது. “ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கடா” என்று நினைத்துக்கொண்டான் ஆரியன்.
அந்தத் தேனீ திடீரென்று ஒளி வடிவமாக மாறி, அந்தச் சிலைக்குள் புகுந்தது. அதுவரை எதிலோ அடைபட்டிருந்தது போல இருந்த அந்தச் சிலை உயிர்பெற்றது.

“என்னுடைய பெயர் எரேகன். எனது சக்தியைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். வல்கனுடைய பாதுகாப்பு வளையத்தைத் தாண்டியதற்கும் என்னுடைய கோட்டையைக் கண்டுபிடித்ததற்கும் எனது வாழ்த்துக்கள். உங்களுடைய அடுத்த கட்டத்துக்கு வழிகாட்டும் பார்ச்மென்ட் இந்த ஐந்து பெட்டிகளில் ஏதோ ஒரு பெட்டியில் தான் இருக்கிறது.
உங்களுக்குச் சரியாக ஆறு நிமிடம் கால அவகாசம். ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை மட்டுமே இதில் ஏதாவது ஒரு பெட்டியைத் திறக்கலாம். ஒரு நிமிடம் முடியும் போது அந்த பார்ச்மென்ட் தனது பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு பெட்டிக்குள் மாறிவிடும்.”
“உதாரணத்திற்கு அந்த பார்ச்மென்ட் முதல் நிமிடத்தின் தொடக்கத்தில் மூன்றாவது பெட்டியிலிருந்தால், அடுத்த நிமிடம் தொடங்கும் போது இரண்டு அல்லது நான்கு இவ்விரண்டு பெட்டிகளுள் ஒன்றில் இருக்கும். சரியாக ஆறு நிமிடங்களுக்குள் பார்ச்மென்ட்டை எடுக்காவிட்டால், இந்தக் கோட்டை மொத்தமும் நீருக்குள் மூழ்கி விடும். அதனுடன் உங்கள் உடலும் சமாதியாகும். சரியாகச் சிந்தித்து உரியக் காலத்துக்குள் பார்ச்மென்ட்டை எடுத்து விடுங்கள்” என்று கூறிவிட்டு மீண்டும் சிலையாக மாறினார் எரேகன்.

அங்கிருந்த மணல் கடிகாரத்தில் மண் துகள்கள் குறைய ஆரம்பித்தன. அவர்கள் மூவருடைய ஆயுட்காலமும் குறையத் தொடங்கியது. நந்தினி இந்த முறை உயிரோடு அடுத்த கட்டத்திற்குச் செல்வாளா?



error: Content is protected !!