Skip to content
Post Views: 754
அத்தியாயம் – 26
Advertisement
அந்த விண்கலம் ஆர்ட்டர் கிரகத்தை நெருங்கிக் கொண்டிருக்க , நால்வரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் . லூனாவுக்கும் அந்தக் கிரகத்தின் பெயர் மட்டுமே தெரியுமே ஒழிய , அதைப்பற்றிய விபரம் ஏதும் தெரியாது . இப்போது அவர்களது கண்களுக்கு முன் அந்த அதிசயம் விரிந்திருந்தது .
‘ ஆர்ட்டர் ’ என்பது ஒரு கிரகமாய் அல்லாமல் ஐந்நூறு கிரகங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருப்பது போல அவர்களுக்கு தென்பட்டது . இதில் எந்த இடத்தில் இறங்கி , எங்குச் செல்வது என்று அவர்களுக்குப் புரியவில்லை . சிறிது நேரம் யோசித்தவர்கள் அந்தக் கிரகங்களின் மையத்திலிருந்த கிரகம் ஒன்றில் விண்கலத்தைத் தரை இறக்கினர் .
விண்கலத்தில் இருந்து வெளியே வந்து பார்த்த போது , முன்பைவிட அதிர்ச்சியில் உறைந்தனர் . அந்தக் கிரகம் முழுவதும் இயற்கையின் காவலர்கள் வசிக்கும் காடுகளால் நிறைந்து இருந்தது . ஆனால் , ஒரு மரத்தின் வேர் கூட மண்ணில் இல்லை . அனைத்தும் பறந்துகொண்டிருந்தன .
Advertisement
இவர்கள் நால்வரும் இறங்கியபோது கூட , அவர்கள் கால்கள் தரையில் படாமல் காற்றில் மிதப்பது போலவே உணர்ந்தனர் .
Advertisement
Advertisement
ஆதி , “ அடுத்து இப்ப நாம என்ன பண்றது ? எனக்கு என்னமோ இந்த இடம் சரியா இருக்கும்னு தோணல , ஏதோ தவறா தோணுது ” என்றான் .
லூனா , “ இது ஆர்கஸோட லெவல் . அதான் இப்படி இருக்கு . இந்த கிரகத்தோட பெயர் ஆர்ட்டர் . ஒருவேளை ஆர்கஸூம் நிக்கேடரும் சேர்ந்து இந்த கிரகத்தை உருவாக்கி இருக்கலாம் . அப்படினா , இந்த ரெண்டு பேரையும் தான் நம்ம இப்ப சந்திக்க போறோம் ” என்றாள் .
நந்தினி , “ எதுக்கும் இந்த கிரகத்துல நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்குறது தான் நல்லது ” என்றாள் .
ஆரியன் , “ அது சரி . ஆனால் , எப்படியும் இந்த இடத்துல ஒரு பிரச்சினை வந்தே ஆகணுமே . அத வச்சி தானே உன்னை சோதிக்க முடியும் . அதுக்கு நீ பதில் சொன்னதுக்கு அப்புறம் நாம அடுத்த லெவலுக்கு போவோம் . இதுதான் நடக்கப் போகுது . அதுக்கு ஏன் இவ்வளவு யோசனை பண்ணனும் ?” என்று கேட்டான் . ஆனால் அவனது எண்ணம் அன்று பொய்க்கப் போவது அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .
அவனது கூற்றிலிருந்த உண்மை புரிந்தாலும் , அனைவரும் அமைதியாகவே நடந்தனர் . அதாவது நடப்பது போல மிதந்தனர் . இப்படியே இவர்கள் பேசிக் கொண்டே செல்ல , திடீரென்று அந்த இடத்தில் பனிமூட்டம் உருவாக ஆரம்பித்தது . அவர்களுக்குள்ளேயே ஒருவருக்கு மற்றொருவர் இருக்குமிடம் தெரியாத அளவுக்கு அந்த இடம் மாறியது .
நந்தினிக்கு ஏதோ தவறு நடக்கப் போகிறது என்று அவளது உள்ளம் சொல்ல , “ எல்லாரும் யாருடைய கையையாவது கெட்டியா புடிச்சுக்கோங்க . இது நம்மள பிரிக்கிறதுக்கான ஒரு டிராப்பா கூட இருக்கலாம் ” என்று கத்த , அதே நேரம் அவர்கள் கால்களில் கொடி போன்ற தாவரங்கள் ஏறத் தொடங்கின .
ஆரியன் , “ ஐயோ ! பாம்பு ” என்று கத்தினான் . லூனாவுக்கும் தன் கால்களில் கூசுவது போன்ற உணர்வு ஏற்பட , அவளும் கீழே குனிந்து பார்த்தாள் .
ஏதோ தாவரம் போலத் தெரிய உற்றுப் பார்த்தவள் , “ அது சாதாரண கொடி இல்ல , அது ஒரு ராட்சச தாவரத்தோட கொடி . அதுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காததால நம்மள மாதிரி உயிரினங்கள தான் சாப்பிடும் . இததான் உங்க கிரகத்துல இன்செக்டிவோரஸ் தாவரங்கள்னு …” என்று அவள் கூறி முடிப்பதற்குள் , அவர்களை அந்தத் தாவரங்கள் இழுத்துச் செல்ல தொடங்கின .
ஆரியனும் ஆதியும் ஒரு பக்கம் செல்ல , நந்தினியும் லூனாவும் இன்னொரு பக்கம் சென்றனர் . இரு பிரிவினரும் அலறிக்கொண்டே செல்ல , நந்தினி தனது சக்தியைப் பயன்படுத்த முயன்றாள் .
லூனா , “ வேண்டாம் ” என்று கூறியது , அவள் காதில் விழாமல் போக , அவள் அந்தக் கொடியைத் தன் சக்தியால் அறுக்கவும் , அந்தக் கொடி மேலும் வளர்ந்து இறுக்கமானது .
அங்கு ஆதியும் அதே வேலையைச் செய்ய , கொடிகள் இறுக்கமாகியதே தவிர , வேறு எதுவும் நடக்கவில்லை .
இறுதியில், அந்தக் கொடிகள் அவர்களை ஒரு ராட்சச மலர் இருந்த இடத்திற்கு அழைத்து வந்தன . அதன் அழகில் லூனாவைத் தவிர மற்ற அனைவரும் மயங்க , அவள் மட்டும் கண்களை இறுக மூடிக் கொண்டாள் . பிறகு அந்த பூ அவர்களைத் தனது வாய் போல இருந்த ஒரு பகுதிக்குள் இழுத்துக் கொண்டது . அடுத்த நிமிடம் அவர்கள் நினைவிலிருந்து அனைத்தும் மறைந்தது .
******
( 1. இனி வரும் காட்சிகள் இருவேறு இடங்களில் நடக்கப் போவதால், அவற்றை பிரித்து காண்பிக்க இரு நிறங்கள் பயன்படுத்த பட்டிருக்கும்.
2. கீழே வரும் கணக்கு புரியவில்லையென்றால், ஆதி = நந்தினி, ஆரியன் = லூனா என்று வைத்துக் கொண்டு படிக்கவும்.)
******
எவ்வளவு நேரம் அப்படி மயங்கி இருந்தார்களோ தெரியவில்லை . இந்தப் பக்கம் நந்தினி முதலில் மயக்கம் தெளிந்து எழுந்தாள் . சுற்றும் முற்றும் பார்த்தவளின் கண்களில் , லூனா பட , அவளிடம் சென்று அவளை எழுப்ப முயன்றாள் . சில நொடிகளில் லூனாவும் மயக்க வலையிலிருந்து எழுந்தாள் .
******
அந்தப் பக்கம் ஆரியன் முதலில் எழுந்திரிக்க , அவன் ஆதியை எழுப்பினான் . அவனும் சுற்றிலும் இருந்த மாறுபட்ட சூழ்நிலையைக் கண்டு வேகமாக எழுந்தான் .
******
ஒரு பிரிவினர் , மற்ற பிரிவினரின் பெயரை அழைத்துப் பார்க்க , எந்த பதில் குரலும் வரவில்லை . அதற்குப் பதிலாக ஒரு பெரிய மரத்திலிருந்து தன்னை பிரித்துக் கொண்டு ஓர் உருவம் அவர்களை நோக்கி நகர்ந்து வந்தது .
அந்தச் சிற்றரசரை , நந்தினியும் லூனாவும் ஒரு கோணத்திலும் , ஆதியும் ஆரியனும் மற்றொரு கோணத்திலும் பார்த்தனர் .
அந்தச் சிற்றரசர் , “ என் பெயர் ஆர்கஸ் . எனது சக்தியைப் பற்றி இந்தக் கிரகத்தைப் பார்த்தவுடனேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் . இந்த இடத்தில் இருக்கும் பறக்கும் சக்திக்குக் கூட நான் தான் காரணம் . இப்போது உங்களுக்கான சோதனைக்கு வருவோம் . உங்களுடைய நண்பர்கள் இப்போது என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள் . அவர்களைப் பார்க்க வேண்டுமா ?” என்று கூறிவிட்டு , தன் கைகள் மூலம் ஏதோ செய்ய , இரு பிரிவினருக்கும் தனித்தனியாகத் திரை போன்ற அமைப்பு தோன்றியது .
ஆதிக்கும் , ஆரியனுக்கும் தோன்றிய திரையில் , நந்தினி ஒரு தீவிலும் லூனா ஒரு தீவிலும் இருப்பது போலத் தெரிந்தது . நந்தினிக்கும் , லூனாவுக்கும் தோன்றிய திரையில் , ஆதி ஒரு தீவிலும் , ஆரியன் ஒரு தீவிலும் இருப்பது போலத் தெரிந்தது .
ஆர்கஸ் , “ உங்கள் நண்பர்கள் இருவரும் தனித்தனி தீவுகளில் உள்ளனர் . ஒருவர் இருக்கும் தீவை மற்றவர் பார்க்க முடியாது . இனி நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள் .
அந்த இரு தீவுகளுள் ஒன்றில் பன்னிரண்டு உருவச்சிலைகள் இருக்கும் , மற்றொரு தீவில் எட்டு உருவச்சிலைகள் இருக்கும் . ஒரு தீவில் இருக்கும் உருவச்சிலைகளை மற்றொரு தீவில் இருப்பவர்களால் பார்க்க முடியாது . ஒவ்வொரு நாளும் நான் அவர்கள் ஒருவரிடம் , ‘ இந்த இடத்தில் மொத்தமாக பதினெட்டு உருவச்சிலைகள் இருக்கிறதா இல்லை இருபது உருவச்சிலைகள் இருக்கிறதா ?’ என்று கேட்பேன் . அந்த நபர் பதில் தெரியவில்லை என்று கூறினால் , மற்றொரு நபரிடம் அதே கேள்வியைக் கேட்பேன் .
அந்த நபரும் தெரியவில்லை என்று கூறினால் , அடுத்த நாளும் இதே செயல்பாடு தொடரும் . அந்த இருவரில் யாராவது ஒருவர் தவறாகச் சொன்னால் கூட , அவர்கள் எப்போதும் இந்தக் கிரகத்திலே சிறை பட்டு இருப்பார்கள் . ஒருவர் சரியாகக் கூறினால் கூட , இருவரும் விடுவிக்கப்படுவார்கள் . இப்போது அவர்கள் எப்படி தப்பிப்பார்கள் என்று நீங்கள் கூறினால் , அவர்களை விடுதலை செய்வேன் ” என்றார் .
அவர் கூறியதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தனர் .
******
ஆரியன் , “ ஓ மை காட் ! எப்பவுமே நந்தினி தான் நம்மள காப்பாத்துவானு சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா , அதுக்காக இப்படியா பண்ணுவாங்க ? இப்ப நாம என்ன பண்றது ?” என்று கேட்டான் .
ஆதி , “ இப்ப நாம கவலைப்பட்டு பிரயோஜனம் இல்ல . நாம அடுத்து ஏதாவது செஞ்சு நந்தினியையும் லூனாவையும் காப்பாத்தணும் . அதுக்கு நாம இப்ப நந்தினி மாதிரி யோசிக்கணும் ” என்றான் .
******
அவர்கள் இருவரும் என்ன செய்வது என்று குழம்பிய , அதே நேரத்தில் , இங்கு நந்தினியும் லூனாவும் பேசிக் கொண்டனர் .
லூனா , “ நந்தினி அவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் தவறா சொன்னாலும் மாட்டிக்குவாங்க . எனக்கு என்னமோ ஆரியன் மேல சந்தேகமா தான் இருக்கு . அவங்க ரெண்டு பேரையும் எப்படி காப்பாத்துறது ?” என்று கேட்டாள் .
நந்தினி , “ இந்த கேள்விக்கு அவங்க ரெண்டு பேரும் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல . அவங்க என்ன சொல்வாங்கன்னு நாம சொன்னா போதும் , அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்திடலாம் லூனா ” என்றவள் , தரையில் அமர்ந்து ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினாள் .
***** *
அங்கு ஆதி , “ எனக்கு ஒரு யோசனை வந்திருக்கு . எல்லா விஷயத்தையும் பெருசா பார்க்காம ரிவர்ஸ்ல பார்த்தா ஈசியா பதில் சொல்லலாம் . இது சரியா தப்பான்னு தெரியல . வாடா , ட்ரை பண்ணி பாப்போம் . லெட்ஸ் திங்க் அவுட் ஆஃப் த பாக்ஸ் ” என்றான் .
******
இங்கு நந்தினி உற்சாகத்துடன் , “ கண்டுபுடிச்சிட்டேன் . அவங்க எப்படி தப்பிப்பாங்கன்னு இப்போ புரியுது ” என்றவள் , அந்தச் சிலைக்கு அருகில் சென்றவள் , தன்னுடைய பதிலைச் சொல்லத் தொடங்கினாள் .
நந்தினி , “ முதல் நாள் ஆதி பத்தொன்பது இல்லனா இருபது உருவச்சிலைகளைப் பார்த்தான்னா , அவன் மொத்தமாக இருபது உருவச்சிலைகள் இருக்கும்னு சொல்லிடுவான் . ஆனா , அவன் வெறும் பன்னிரண்டு உருவச்சிலைகள தான் பாக்குறான் . அதனால அவன் தெரியலன்னு சொல்லிடுவான் .
ஆனா , ‘ ஆரியன் இத வச்சு ஆதி அதிகபட்சமா பதினெட்டு சிலைகள தான் பார்க்க முடியும்னு கண்டுபிடிச்சுடுவான் . ஏன்னா அதுக்கு மேல ஆதி பார்த்திருந்தா பதில் சொல்லிருப்பான் ’.
அதே மாதிரி ஆரியன் , ஜீரோ இல்லனா ஒரு உருவச்சிலைய பார்த்தா , ஆதியோட அதிகபட்ச பதினெட்டு சிலைகளையும் சேர்த்து மொத்தமா பதினெட்டு சிலைகள் இருக்குன்னு முடிவு பண்ணிடலாம் . ஆனா , அவன் எட்டு சிலைகள பாக்குறான் . அதனால , அவனும் தெரியலன்னு சொல்லிடுவான் . ‘ இத வச்சு ஆதி, ஆரியன் குறைந்தது இரண்டு சிலைகளையாவது பாக்குறான்னு தெரிஞ்சுக்குவான் ’. ஏன்னா ஆரியன் எந்த உருவச்சிலையையும் பார்க்காம இருந்தா பதில் சொல்லிருப்பான் ” என்றாள் .
******
அங்கு ஆதி , “ இரண்டாவது நாள் , நந்தினி பதினேழு இல்லன்னா பதினெட்டு உருவச்சிலைகள பார்த்தா , லூனாவோட குறைந்தபட்ச இரண்டு சிலைகள சேர்த்து மொத்தம் இருபது உருவச்சிலைகள் இருக்குனு சொல்லிடுவா . ஆனா , அவ பன்னிரண்டு உருவச்சிலைகள தான் பாக்குறா . அதனால நந்தினி தெரியலனு சொல்லிடுவா . ‘ இத வச்சு லூனா நந்தினி அதிகபட்சமா பதினாறு சிலைகள தான் பார்க்க முடியும்னு தெரிஞ்சுக்குவா ’.
அதே மாதிரி , லூனா ரெண்டு இல்லனா மூணு சிலைகளப் பாத்தா , நந்தினி அதிகபட்சமா பதினாறு சிலைகள பார்க்க முடியும்ன்றத வச்சி , மொத்தம் பதினெட்டு சிலைகள் இருக்குனு சொல்லிடுவா . ஆனா லூனா வெறும் எட்டு சிலைகள தான் பாக்குறா . அதனால அவளும் தெரியலன்னு சொல்லிடுவா . ‘ இத வச்சு நந்தினி , லூனா குறைந்தது நாலு சிலைகளயாவது பாக்குறான்னு தெரிஞ்சுக்கலாம் ’” என்றான் .
******
இங்கு லூனா , “ இந்த முறை , நான் முயற்சி செய்கிறேன் நந்தினி . மூன்றாம் நாள் , ஆதி பதினஞ்சு இல்லன்னா பதினாறு சிலைகளைப் பார்த்தா , ஆரியனோட குறைந்தபட்ச நான்கு சிலைகள சேர்த்து மொத்தம் இருபது சிலைகள்னு சொல்லிடுவான் . ஆனா , அவன் பன்னிரண்டு சிலைகள தான் பார்க்குறான் . அதனால தெரியலனு சொல்லிடுவான் . ‘ இத வச்சு ஆரியன் ஆதி அதிகபட்சமா பதினாழு சிலைகள தான் பாக்கமுடியும்னு தெரிஞ்சுக்குவான் ’.
அதே மாதிரி ஆரியன் , நாலு இல்லன்னா அஞ்சு சிலைகள பாத்தா , ஆதியோட பதினாழு சிலைகளோட சேர்த்து மொத்தம் பதினெட்டு சிலைகள் இருக்குன்னு சொல்லிடுவான் . ஆனா அவன் எட்டு சிலைகள பாக்குறதால தெரியலன்னு சொல்லிடுவான் . ‘ இத வச்சு ஆதி , ஆரியன் குறைந்தபட்சம் ஆறு சிலைகள பார்ப்பான்னு தெரிஞ்சுக்குவான் ’ ” என்றாள் .
நந்தினி , “ சூப்பர் லூனா ! சரியா சொல்லிட்ட ” என்றாள் .
******
அங்கு ஆரியன் , “ இப்ப நந்தினி , பதிமூனு இல்லனா பதினாழு சிலைகள பார்த்தா , லூனாவோட ஆறு சிலைகள சேர்த்து மொத்தம் இருபது சிலைகள் இருக்குன்னு சொல்லிடுவா . ஆனா அவ வெறும் பன்னிரண்டு சிலைகள தான் பாக்குறா . அதனால அவ தெரியலன்னு சொல்லிடுவா . இதை வச்சு லூனா , ‘ நந்தினி அதிகபட்சம் பன்னிரண்டு சிலைகளை தான் பாக்க முடியும்னு தெரிஞ்சுக்குவா ’.
அதே மாதிரி , லூனா ஆறு இல்லன்னா ஏழு சிலைகள பார்த்தா , நந்தினியோட பன்னிரண்டு சிலைகள சேர்த்து மொத்தம் பதினெட்டு சிலைகள் இருக்கனு சொல்லலாம் . ஆனா , அவ எட்டு சிலைகள பாக்குறதால , தெரியலன்னு சொல்லிடுவா . இதை வச்சு நந்தினி , ‘ லூனா குறைந்தபட்சம் எட்டு சிலைகள பாப்பானு தெரிஞ்சுக்குவா ’ “ என்றான் .
ஆதி புன்னகையுடன் , ‘ ஆமாம் ’ என்பது போல தலையசைத்தான் .
******
இங்கு நந்தினி , “ கடைசியா அஞ்சாவது நாளப்ப , ஆதி பன்னிரண்டு சிலைகள பாப்பான் . அதுமட்டுமில்லாம அவனுக்கு ஆரியன் குறைந்தபட்சம் எட்டு சிலைகள பார்ப்பான்னு தெரியும் . அதனால அது ரெண்டையும் சேர்த்து அஞ்சாவது நாள் ஆர்கஸ் கிட்ட , மொத்தம் இருபது சிலைகள் இருக்குன்னு சொல்லிடுவான் . ரெண்டு பேரும் தப்பிச்சுடுவாங்க ” என்றாள் . அதே நேரம் அங்கு ஆதியும் அதே விளக்கத்தை கூறி முடிக்க , இருபக்கமும் இரு வேறு சூறாவளிகள் தோன்றின .
******
சிறிது நேரத்தில் , அது வானுயரத்திற்கு வளர , மரங்கள் அனைத்தும் அதில் சிக்கிக் கொண்டன . அவர்கள் நால்வரும் எவ்வளவு முயன்றும் அதிலிருந்து தப்பிக்க முடியாமல் , அதில் விழுந்து அதனுடன் சுழல தொடங்கினர் . அந்தக் காற்று சுழல் அவர்களை அப்படியே ஒரு பெரிய மரத்திற்கு அடியில் வந்து விட்டு சென்றது .
சிறிது நேரத்திற்குப் பிறகு , அவர்கள் ஒவ்வொருவராக எழ , அந்த இடத்தை சுற்றிப் பார்த்து ஆராய்ந்தனர் . அந்த மரம் ஓர் ஊரையே மறைக்கும் அளவிற்குப் பெரியதாக வளர்ந்திருந்தது . அவர்கள் நால்வரும் பழைய நிலைக்குத் திரும்பி விட ,
ஆரியன் , “ பார்த்தீங்களா ? இந்த தடவை நாங்கதான் உங்கள காப்பாத்துனோம் ” என்று தற்பெருமையாகக் கூற ,
உடனே லூனா , “ சுழல்ல மாட்னதுல இருந்த கொஞ்ச நஞ்ச அறிவும் போயிடுச்சு போல , உங்க ரெண்டு பேரையும் தான் நாங்க காப்பாத்துனோம் ” என்றாள் .
ஆரியன் , ‘ இல்லை ’, லூனா , ‘ ஆமாம் ’ என்று கூறி , தங்களது போரைத் தொடர ,
நந்தினி , “ ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் சண்டை போடாம இருக்கீங்களா ?” என்று அழுத்தமாகக் கேட்கவும் , தான் ஆரியனும் லூனாவும் அமைதியானார்கள் .
பிறகு நந்தினி ஆதியிடம் , என்ன நடந்தது என்று கேட்க , அவன் நடந்ததை விளக்கிக் கூறினான் .
நந்தினி , “ அப்படின்னா நாம எத்தனை பேர் வந்திருக்கோம்றத பொறுத்து சோதனைகள மாத்துறாங்க .அதாவது, நம்மள அவங்க உன்னிப்பா கவனிக்கிறாங்க . யாருமே ஆபத்துல இல்லாதப்ப இருக்குற மாதிரி காமிச்சிருக்காங்க . பிரில்லியண்ட் பிளான் ” என்றாள் .
மற்ற இருவரும் , ‘ ஆமாம் ’ என்பது போல தலையசைக்க ,
லூனா , “ நாம இப்போ அடுத்த கட்டத்துக்கு , அதாவது நிகேடரோட லெவலுக்கு போகப் போறோம் ” என்றாள் .
ஆரியன் , “ எப்படி ?” என்று வேகமாகக் கேட்க , லூனா , மேலே கையை உயர்த்திக் காட்டினாள் . அனைவரும் மேலே பார்க்க , அங்கிருந்த மரத்தின் உச்சியில், ஒரு பெரிய வட்ட வடிவ துளை போல தெரிந்தது .
லூனா , “ உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா , அது ஒரு ட்ரான்ஸ்போர்டேசன் டிவைஸ் மாதிரி தான் . செலினாவிடம் மட்டும் நேரத்தையும் கடந்து செல்லும் இது மாதிரி டிவைஸ் இருக்கும்னு கேள்வி பட்டிருக்கேன் ” என்றாள் .
நந்தினி , “ அப்படின்னா உங்களால , அதாவது நம்மளால டைம் ட்ராவல்லாம் பண்ண முடியாதா ? இன்னும் சொல்லப்போனா செலினா அதைப் பயன்படுத்தி டைட்டனுக்கு அந்த சக்திய கொடுக்காம இருந்திருக்கலாமே ?” என்று கேட்டாள் .
லூனா , “ நந்தினி டைம் ட்ராவல் – னா நீ எதை சொல்வ ? எங்களப் பொறுத்த வரைக்கும் டைம் ட்ராவல் – னா எங்களோட நினைவுகள கடந்த காலத்துக்கு அனுப்புறத தான் . ஆனா நீ செலினா ஏன் அப்படிச் செய்யக் கூடாதுன்னு கேட்டீல , அதற்குக் காரணம் ஏதாவது இல்லாமல் இருக்காது . இல்லையென்றால் பிரச்சினையை இவ்வளவு பெரியதாக வளர விட்டிருக்க மாட்டார் ” என்றாள் .
ஆதி , “ ஓகே இப்ப பிரச்சனை என்னன்னா , நாம இங்கே இருந்து அந்த டிவைஸ் மூலமா வேறு கிரகத்துக்கு போயிட்டோம்னா , மறுபடியும் எப்படி இங்க வரது ? எனக்கு தெரிஞ்சு அதுல ஸ்பேஸ் ஷிப் நுழையமுடியாது ” என்றான் .
லூனா , “ அது கரெக்ட் தான் . ஆனா என்னாலயும் இது மாதிரி போர்ட் ஹோல உருவாக்க முடியும் . அதனால பிரச்சனை இல்லை ” என்றாள் . பிறகு அவர்கள் நால்வரில் லூனா எளிதாக அந்த மரத்தில் ஏறி விட , நந்தினி தன் சக்தியைப் பயன்படுத்தி பறந்து மரத்தில் ஏறினாள் . ஆதிக்கும் ஆரியனுக்கும் மற்ற இருவரும் அவர்கள் ஏறுவதற்கு உதவி செய்தனர் . பிறகு நால்வரும் ஒன்றாக அந்த porthole- க்குள் நுழைந்தனர் .
******
கிரகம் : கயா
இடம் : வெலாரிஸ் கோட்டை
ப்ரொமேத்தியஸ் , ஏதோ ஓர் அவசரத்தில் இருப்பது போல தென்பட்டான் . இதுவரை தான் தீட்டிய திட்டங்கள் அனைத்தையும் சரி பார்த்தான் . அவை ஓரளவுக்கு அவன் எதிர்பார்ப்பை எட்டியிருக்க , அவற்றை மூடி வைத்துவிட்டு தனது சிம்மாசனத்தில் அமர்ந்தான் . அவன் மனதை ஒருவித வெறுமை ஆட்டிப் படைத்தது . எதுவுமே செய்யாமல் அமர்ந்திருப்பது நல்லது இல்லை என்று தோன்ற , தனக்கு முன்னால் இருந்த மூன்று பொருட்களையும் சரிபார்த்தான் .
முதலாவது , பிரம்ம கிரந்தம் . இரண்டாவது , அவன் தன் சக்திகளைப் பயன்படுத்தி உருவாக்கிய டோக் (TORC) . மூன்றாவது , எதிர் படையினரைத் தன் பக்கம் திருப்பிக் கொள்ளப் பயன்படும் கருவி . அவை அனைத்தையும் தனது கவசத்தில் மறைத்தவன் , அந்தக் கோட்டையை விட்டு வெளியேறினான் .
மெல்ல அவன் சக்தியைப் பயன்படுத்தி , பெருங்கடல் சிறைக்குச் சென்றான் . அங்கிருந்த டிராகன்கள் அவன் முன் வந்து மண்டியிட , “ இனி வரும் போரில் , உங்கள் உதவி எனக்குக் கண்டிப்பாக தேவைப்படும் . அதுவரை சுதந்திரமாகச் சுற்றுங்கள் ” என்றவன் கூற , அவன் கூறியது புரிந்தது போல அவை வேகமாகப் பறந்து தண்ணீரில் இருந்து வெளிவந்து காற்றில் பறந்தன .
பின் ப்ரொமேத்தியஸ் , பல ஆண்டுகளுக்கு முன் அங்கு தான் இருந்த அறைக்குச் சென்றான் . அந்தக் காலத்தில் அவன் எழுதியிருந்த குறிப்புகள் இன்றும் அப்படியே இருக்க , அதை பார்த்த அவன் மனதில் பல எண்ணங்கள் தோன்றின .
பின்னர் , மெல்ல அந்தப் பெருங்கடல் கோட்டையிலிருந்து வெளியேறியவன் , அடுத்து ஓர் இடத்திற்குச் சென்றான் . அந்த இடத்திலும் அவன் மறக்க நினைக்கும் நினைவுகள் அவனைத் துரத்த , அங்கு , தான் வந்த வேலையை முடித்தவன் , மறுபடியும் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தான் .
அடுத்து சோல் பாக்ஸ் இருந்த இடத்திற்குச் சென்றான் . கயா கிரகத்தின் முன்னாள் நிலவாகவும் இந்நாள் சோல் பாக்ஸை இருக்க, அங்கு சென்று , அந்தப் பொருளை முழுமையாகச் சரி பார்த்தான் . இனி தான் செய்ய வேண்டிய வேலை எதுவும் இல்லை என்று தோன்ற , வெலாரிஸ் கோட்டைக்குத் திரும்பினான் .
அவனது வரவுக்காகக் காத்திருந்த ஒரு காவலன் , “ பேரரசர் ப்ரொமேத்தியஸ் வாழ்க !” என்று கூற , ப்ரொமேத்தியஸின் முகத்தில் குறுநகை தோன்றியது .
“ பேரரசே இரு நாட்களுக்கு முன்பு , இந்தக் கிரகத்தை விட்டு வெளியேறிய விண்வெளி வாகனத்தில் க்ரோனனின் மகள் லூனா இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது . 176C, கைகன்டா , மெராடஸ் மேலும் இப்போது பொசய்டன் ஆர்ட்டர் கிரகத்தில் இருக்கிறார் . அவருடன் தான் இப்போது லூனாவும் இணைந்துள்ளார் ” என்று கூறினான் .
அதற்கு ப்ரொமேத்தியஸ் , “ இனி நீ அவர்களைக் கண்காணிக்கும் பணியை விட்டுவிடு . அடுத்து அவர்கள் எங்கே செல்வார்கள் என்று எனக்குத் தெரியும் அனைத்து சிற்றரசர்களையும் அவர்களது படைகளோடு வெலாரிஸ் கோட்டைக்கு நான் வரச் சொல்லி உத்தரவிட்டதாகச் செய்தி அனுப்பு ” என்றான் .
அந்தக் காவலாளி , வணங்கி விட்டுச் செல்ல , கண்மூடி அமர்ந்தான் ப்ரொமேத்தியஸ் . அந்தச் சதுரங்க விளையாட்டில் அவன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டான் . சதுரங்கத்தில் மற்ற காய்களை விட ராணிக்கே அதிக சக்திகள் உண்டு . ஆனால் , ஒரு திறமையான சதுரங்க விளையாட்டு வீரனுக்கு அனைத்து காய்களும் சரி சமமான பலங்கள் உடையவை தான் .
******
Porthole- இல் நுழைந்தவர்கள் , கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் அந்தப் பாலைவனத்தில் இருந்தனர் . கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த மணல் சாம்ராஜ்யம் பரந்து விரிந்திருந்தது .
லூனா , “ இந்த இடம் வெறும் பாலைவனமாக இருக்க வாய்ப்பில்லை . ஏன்னா இது நிகேடரோட கிரகம் . இப்படி எதுவுமே இல்லாம எப்படி இருக்க முடியும் ?” என்று கேட்டாள் .
நந்தினி , “ அப்படின்னா இந்த இடத்திலயும் நாம அந்த கோட்டை எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கறது கொஞ்சம் கஷ்டமான காரியம்னு தான் தோணுது ” என்றாள் .
ஆதி , “ கமான் கைஸ் ! நமக்கு நேரமில்ல இன்னும் நாம ரெண்டு லெவலை தாண்டணும் . நமக்கு லக் இருந்தா சீக்கிரமே கண்டுபுடிச்சிடலாம் ” என்றான் .
நால்வரும் அமைதியாக நடக்கத் தொடங்கினர் . எவ்வளவு தூரம் நடந்தாலும் , அது ஒரு முடிவில்லாத பயணம் போலவே தோன்றியது . முழுதாக கயா கிரக வாசியாக இருக்கும் லூனாவுக்கும் , நந்தினிக்கும் எந்தப் பிரச்சனையும் தெரியாவிட்டாலும் , திரிசங்கு நிலையில் இருக்கும் ஆதியும் , ஆரியனும் அந்தச் சூழ்நிலைக்குப் பொருந்த முடியாமல் கஷ்டப்பட்டனர் .
பிறகு தூரத்தில் சின்ன காடு போல ஓர் இடம் தென்பட்டது . அதை நெருங்க நெருங்க அது விலகிப் போவது போலத் தெரிந்தாலும் , அவர்கள் விடாமுயற்சியுடன் தொடர , அந்தச் சோலைவனத்தை அடைந்தனர் . இந்த இடம் சிறிது குளிர்ச்சியாக இருக்க , அனைவரும் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்தனர் .
ஆரியன் , “ இன்னும் எவ்வளவு நேரம் தான் இந்த கிரகத்தையே சுத்துறது ?” என்று கேட்டான் .
லூனா , “ அந்த பார்ச்மென்ட் கிடைக்கும் வரையில் ” என்றாள் . நந்தினிக்கு திடீரென ஏதோ யோசனை தோன்ற வேகமாக அந்த இடத்தை சுற்றி விட்டு வந்தாள் .
நந்தினி , “ கண்டுபிடிச்சுட்டேன் ! அந்த புதிரில் Till it meet with square of side eleven – னு இருந்துச்சுல்ல , அதான் இந்த காடு எவ்ளோ அளவுன்லாம் தெரியல . ஆனா , இந்த இடம் கண்டிப்பா சதுர அமைப்பு தான் ” என்றாள் .
ஆதியும் , ஆரியனும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு , அந்த இடத்தின் மையத்திற்கு வந்தனர் . அந்த இடத்தில் ஒரு சிறிய குட்டை இருப்பது போல் தெரிய , அதைக் கண்டவுடன் மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பி வந்தனர் .
ஆதி , “ இந்த இடத்தில் ஒரு சின்ன நீர்நிலை ஏதோ இருக்கு . நாம பேசாம அதுல குதிச்சு பார்த்தா என்ன ?” என்று கேட்டான் . நந்தினிக்கும் அது சரியென படவே , ஆரியனையும் , லூனாவையும் பார்த்தாள் . அவர்களும் சம்மதமாக தலையசைக்க , நால்வரும் அந்தச் சோலைவனத்தின் மையத்திற்குச் சென்று , குட்டைக்குள் குதித்தனர் .
உள்ளே குதித்த நால்வருக்கும் , அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டது . அங்கு இருந்த கோட்டை அவர்கள் இதுவரை பார்த்ததிலேயே , இல்லையில்லை … வேறு எந்தக் கோட்டையையும் ஒப்பிட முடியாத அளவுக்கு இருந்தது .
அந்தக் கோட்டையை ரத்தினக் கற்களால் நிரப்பி , அதை மேலும் அழகுறச் செய்திருந்தார் நிகேடர் . அவர்கள் அந்த அழகை ரசித்துக் கொண்டிருக்கும்போதே , இரு விலங்குகள் அவர்களை நோக்கி வந்தன . கரிய நிறத்தில் , அவர்கள் நால்வரையும் ஒரே நொடியில் விழுங்கிவிடும் அளவுக்குப் பெரியதாய் இருந்தன அவை .
அவற்றைத் தாக்குவதற்கு லூனா தயாராக , நந்தினி அவளைத் தடுத்தாள் . பின்னர் , அவள் தனியாக முன்னே நீந்திச் செல்ல , அவளைத் தொடர்ந்து பின்னால் செல்ல முயன்ற ஆதியை , லூனா தடுத்தாள் .
ஆதி அவளைக் கேள்வியாகப் பார்க்க , அவனைப் பொறுமையாக நடப்பதைப் பார்க்குமாறு சைகை காட்டினாள் லூனா . அந்த விலங்குகளை நோக்கிச் சென்ற நந்தினி , க்ரிசான்டாவாக மாற , அதே நேரத்தில் அவளுக்குள் அடக்கப்பட்ட நந்தினியும் வெளியே வந்தாள் . அந்த விலங்குகள் அவளை நெருங்கியதும் , பூனை போல மாறி அவளிடம் அடங்கின .
நந்தினி தனது இரு கைகளாலும் , அந்த விலங்குகளைத் தொட , அவற்றின் விழிகளும் தங்க நிறமாக மாறின . இதையெல்லாம் ஆரியனும் , ஆதியும் வாய் பிளந்து பார்க்க , நந்தினி அந்த இரு விலங்குகளுள் , ஒன்றின் மீது ஏறி அமர்ந்தாள் . மற்ற மூவரையும் பார்த்துக் கையசைக்க , அவர்கள் அவளிடம் விரைந்து வந்தனர் . நந்தினி அமர்ந்திருந்த விலங்கின் மீது ஆதி அமர்ந்து கொள்ள , லூனாவை சிரிப்புடன் நோக்கினான் ஆரியன் . அவனைப் பார்வையால் எரித்த லூனா , அவனுடன் மற்றொரு விலங்கின் மீது அமர்ந்தாள் . நால்வரும் அமர்ந்ததும் , அந்த விலங்குகள் நிகேடரின் கோட்டையை நோக்கிப் பாய்ந்தன.
error: Content is protected !!