Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kannaa Varuvaayaa

Kannaa Varuvaayaa 1 1

கண்ணா வருவாயா – ரம்யா ராஜன்

அத்தியாயம் – 1

தென்தமிழகத்தைச் சேர்ந்த பாலையம்பட்டி என்னும் கிராமம், பச்சை போர்வையை விரித்தது போல் பார்க்க பசுமையாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.  ஏனென்றால் இங்கு எல்லாம் பருவ மழை என்பது மூன்று, நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தான். அதனால் தண்ணீர் அதிகம் தேவைப்படாத பருத்தியோ அல்லது மக்காசோளமோ தான் பயிரடப்படும்.



Advertisement

வருடம் முழுவதும் சூரியன் சுட்டெரிக்கும் காரணத்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதும் உண்டு.  பசுமை தான் குறைவே தவிர மற்றபடி கிராமத்திற்கு ஏற்ற இலக்கணத்தைப் பெற்ற ஊர்.  இந்த ஊரில் இருக்கும் சாலைகளைத் தார் சாலைகள் என்று சொல்வதை விட, தார் பூசப்பட்ட சாலைகள் என்று சொல்லலாம். பெயருக்கு தாரை பூசிவிட்டு சென்றதால், ரோடு குண்டும் குழியுமாகத் தான் இருக்கும். 

அந்த ரோட்டிலும் யாரோ சைக்கிள் ரேஸ் வர்றாங்கப்பா யாரு அதுன்னு பார்ப்போமா.  முதலில் ஒரு சைக்கிள் வேகமாக வர, அந்தச் சைக்கிளில் இருந்தவள் மாநிறத்தில் உயரமாக அதே சமயம் மெலிவாக இருந்தாள். பள்ளி சீருடை அணிந்து இரட்டை ஜடை போட்டிருந்தாள். 

அதற்கு அடுத்து ஒரு சைக்கிள் வந்தது. அதில் இருந்தவள் உயரம் குறைவாக, ரொம்ப மெலிவாகக் கருப்பாக இருந்தாள். பின் சற்று தள்ளி மற்றொரு சைக்கிள் வந்தது. அதில் இருந்தவள் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் வெள்ளை நிறத்தில் இருந்தாள். சைக்கிள் பெடலுக்கு வலிக்கும் என்று நினைத்தாளோ என்னவோ, மெதுவாக மிதித்தபடி வந்தாள். 

Advertisement

சைக்கிள் ஓட்டிக்கொண்டே திரும்பி பார்த்த சந்தியா தனக்குப் பின்னால் வந்தவளிடம் “ஹே சித்ரா, இந்த நந்தினி சைக்கிள் ஓட்டுறாளா இல்லை உருட்றாளா….” என்று பேசியபடி தன் சைக்கிளின் வேகத்தைக் குறைக்க,

Advertisement

அவளுடன் இணைந்த சித்ரா “சரி தான் நீ சொல்றது. இந்தப் புள்ள இந்த வேகத்தில வந்தா, நாம பரிட்சைக்கு போய்ச் சேர்ந்த மாதிரி தான்…” என்று சொல்லும்போதே அவர்களுடன் மூச்சு வாங்க இணைந்த நந்தினி “எதுக்கு டி இவ்வளவு வேகமா போறீங்க. நாம என்ன பந்தயத்துலயா வண்டி ஓட்டுறோம்.” என்றாள். 

“உன்னோட சேர்ந்து நாங்க பந்தயத்துல வண்டி ஓட்டிட்டாலும் வெளங்கிடும்…” என்று சித்ரா அலுத்துக்கொள்ள,

 “வெளங்காம, முயல் ஆமை கதை கேட்டதில்ல. நாங்க எல்லாம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல…” என்று நந்தினி சைக்கிள் ஓட்டியபடி தன் சுடிதாரில் இல்லாத காலரை தூக்கிவிட,

Advertisement

அவளைக் கேலியாகப் பார்த்த சந்தியா “இன்னும் இதையே எத்தனை காலத்துக்குச் சொல்வீங்க. எல்லா முயலும் தூங்கிடாது நந்தினி….” என்றவள் வேகமாகத் தன் சைக்கிளை மிதிக்க, சித்ராவும், நந்தினியும் அவளுடன் இணைந்து சென்றனர். 

மூவரும் அவர்கள் ஊர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர். பள்ளியின் உள்ளே வந்ததும், சைக்கிளை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்திவிட்டுச் செல்லும் போது, சந்தியா அடிக்கடி பின்பக்கம் திரும்பி தன் உடையைப் பார்த்தபடி செல்ல, அவளை சித்ராவும், நந்தினியும் விசித்திரமாகப் பார்த்தனர். 

பள்ளியில் இருக்கும் மரத்தடியில் வந்து அமர்ந்தும் சித்ராவும், நந்தினியும் புத்தகத்தை எடுத்து படிக்க, சந்தியா தன் விரல் நகத்தைக் கடித்தபடி அமர்ந்திருந்தாள். எப்போதும் கலகலப்பாக இருப்பவள் இன்று தீவிரமாக எதையோ யோசிப்பதை பார்த்துத் தங்கள் புத்தகத்தை மூடி வைத்த சித்ராவும், நந்தினியும் சந்தியாவையே பார்க்க,

சிறிது நேரம் சென்று தான் அவர்கள் இருவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்த சந்தியா, இப்ப என்ன இங்க பார்வை என்பது போல் அவர்களைப் பார்த்து முறைத்தாள். அவள் பார்வையை லட்சியம் செய்யாத சித்ராவும், நந்தினியும் “இன்னைக்கு என்ன தில்லாலங்கடி வேலை செஞ்சிருக்க? உன் முகமே சரியில்லையே. உண்மைய சொல்லு…” என்று மிரட்ட,

‘இவங்க சொல்லலைன்னா விடமாட்டங்க, எப்படியும் கொஞ்ச நேரத்தில ஊருக்கே தெரிய போகுது…’ என்று நினைத்தவள் “எல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் தான்.” என்றாள் அலட்சியமாக.

அதைக் கேட்டு அதிர்ந்த சித்ராவும் நந்தினியும் “என்னடி சொல்ற பொம்பளைங்க சமாச்சாரமா? நீ இன்னும் வயசுக்கே வரலியே….” இருவரும் கோரசகாக இழுக்க,

“ஷ்ஷு! கத்தி மானத்தை வாங்காதீங்க.  அது நேத்து…” என்ற சந்தியா அவர்களைப் பார்த்து கண் சிமிட்டினாள். 

“அடிப்பாவி பிறகு எப்படி ஸ்கூலுக்கு வந்த. வா போய் முதல்ல டீச்சர்கிட்ட சொல்லுவோம்….” நந்தினி வேகமாக எழுந்திருக்க,

அவள் கைபிடித்துத் தடுத்த சந்தியா “காரியத்தையே கெடுக்கப் பார்க்கிறியே. நானே எங்க அப்பத்தா கண்ணுல படாம தப்பிச்சு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. அப்பத்தா என் முகத்தைப் பார்த்தே கண்டுபிடிச்சிடும். இன்னைக்குத் தான கடைசிப் பரிட்சை, எழுதிட்டுப் போய்ச் சொல்லிக்கலாம்…” என்றவள் தானும் எழுந்து வகுப்பறைக்குச் செல்ல,

 அவளைத் தொடர்ந்த சித்ராவும், நந்தினியும் எப்போதும் போல் சந்தியாவை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.  தாங்கள் எல்லாம் விஷயம் தெரிந்ததும் பயத்தில் வைத்த ஒப்பாரி என்ன? இவள் பார் தைரியமாகப் பரிட்சை எழுத வந்திருக்கிறாள் என்று நினைத்தபடி பரிட்சை அறைக்குள் நுழைந்தனர்.

பெண்கள் பருவம் அடைவது நகர்புறத்தில் சாதாரணமான விஷயமாகத் தெரிந்தாலும், கிராமப்புரத்தில் இன்றும் பெரிய விஷயமாகத் தான் பார்க்கப்படுகிறது. வேகமாகப் பரிட்சை எழுதி முடித்த சந்தியா பரிட்சை பேப்பரை கொடுத்துவிட்டு வெளியே வந்தவள், சித்திராவிற்கும், நந்தினிக்கும் காத்திருக்காமல் தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள். 

அவள் வீட்டிற்குச் செல்லும் வழியில் எதிரே புல்லெட் வரும் சத்தம் கேட்டது. அதன் சத்தத்தில் இருந்தே வருவது யார் என்று புரிந்துகொண்டவள் முகம் புன்னகையில்  மலர்ந்தது.  சந்தியாவின் தாய் மாமன் மகன் கதிர் என்கிற கதிர்வேலன் தான் வந்து கொண்டிருந்தான்.

அவன் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருக்கிறான். சந்தியா அவனிடம் நின்று பேசாமல் லேசாகப் புன்னகைத்தபடி அவனைக் கடந்து செல்ல, அவளை ஆச்சர்யமாகப் பார்த்தவன், தன் வண்டியை திருப்பிக் கொண்டு சந்தியாவின் முன்பு சென்று அவளை வழிமறித்தான். 

“ஹே! சில்வண்டு. எப்பவும் லொடலொடன்னு பேசுவ. இன்னைக்கு என்னைப்  பார்த்தும், பார்க்காத மாதிரி போற. பரீட்சை நல்லா எழுதலையா? அப்ப திரும்பவும் ஒன்பதாவது கிளாஸ் தானா…” என்று தன் அத்தை மகளைக் கதிர் கேலி செய்ய,

“போ மாமா, அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் நல்லா தான் எழுதிருக்கேன்.” என்றாள் சந்தியா ரோஷமாக.

“பிறகு ஏன் இவ்வளவு அமைதியா இருக்க. நீ எப்பவும் போல இருந்தா இந்நேரம் நூறு கதிர் மாமான்னு சொல்லியிருப்ப என்ன ஆச்சு?” கதிர் அவளை ஆராய்ச்சியாகப் பார்க்க,

சந்தியாவிற்கு அவனின் கூர்மையான பார்வை எதோ செய்ய, வெட்கத்தில் தலை குனிந்தவள், அங்கே மேலும் நிற்க முடியாமல் நெளிந்தாள்.  சந்தியாவையே பார்த்துக் கொண்டிருந்த கதிர் “பார்டா, என்னோட அயித்தை மகளுக்குப் புதுசா வெட்கம் எல்லாம் வருது…” என்று மேலும் கேலியில் இறங்க,

“போதும் மாமா என்னை விடு, நான் வீட்டுக்கு போகணும்…” என்றவளின் முகத்தில் வெட்கம் இருந்தாலும், கூடவே, அவள் களைப்பாக இருப்பதைப் பார்த்த கதிர், அவளுக்கு ஒருவேளை உடல்நிலை சரி இல்லையோ என்று நினைத்து, மேலும் தாமதிக்காமல் “சரி போ…” என்று வழிவிட்டவன், சற்று இடைவெளி விட்டு அவளைத் தொடர்ந்தான். 

கதிர் தன்னைத் தொடர்ந்து வருவதை உணர்ந்த சந்தியா, அவள் வீட்டு வாசலுக்கு வந்ததும் திரும்பி அவனைப் பார்த்தவள் “நீ போ…” என்றதும், கதிருக்குக் கோபம் வந்துவிட்டது. 

“இது உன் வீடு மட்டும் இல்லை என்னோட அத்தை வீடும் தான்…” என்ற கதிர் வீம்புக்கு தன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வர, சந்தியா தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

கதிர் இருந்ததால் சந்தியா தான் வயதுக்கு வந்தது பற்றித் தன் அம்மாவிடம் சொல்ல முடியாமல், அவள் அறைக்குச் சென்று கட்டிலில் படுத்துவிட்டாள். கதிரை பார்த்ததும் வேதவல்லி, தன் அண்ணன் மகனை சாப்பிட்டுவிட்டு செல்லும்படி சொல்ல, கதிரும் உள்ளே இருந்து வந்த மீன் குழம்பு வாசத்தில் ஈர்க்கப்பட்டுச் சரி என்று சாப்பிட அமர்ந்தான்.  கதிர் சாப்பிட அமர்ந்ததும் சந்தியாவையும் சாப்பிட வர சொல்லி வேதவல்லி அழைக்க, அவள் பசியில்லை என்றாள்.

அவள் சொன்னதை கேட்டுக்கொண்டே பின்கட்டில் இருந்து உள்ளே நுழைந்த சந்தியாவின் அப்பத்தா, கதிரை பார்த்ததும் “வாய்யா…” என்று சொல்லிவிட்டு தன் பேத்தியை தேடி சென்றார். 

“ஏன் தங்கம் சாப்பாடு வேண்டாம்னு சொல்ற. காலையிலயும் பரிட்சைன்னு சொல்லிட்டுக் கொஞ்சமா தான சாப்பிட்ட. இப்படிச் சாப்பிட்டா எப்படி உடம்பில தெம்பு இருக்கும். உன் வயசு பிள்ளைங்க எல்லாம் சமஞ்சு ரெண்டு மூன்னு வருஷம் ஆச்சு. நீ இன்னும் சின்னப் பிள்ளையாவே இருக்கியே…” என்று பேத்தியின் கால்மாட்டில் அமர்ந்து அவள் கால்களைப் பிடித்துவிட்டபடி புலம்பியவர், பேத்தி பதில் சொல்லாமல் இருக்கவும், தன் மருமகள் வேதவல்லியை  அழைத்து “இங்க வந்து உன் மகளைப் பாரு. எதுவும் பேச மாட்டேங்கிறா. உடம்புக்கு எதுவும் செய்யுதோ….” என்றார் சந்தேகமாக.

வேதவல்லியும் பதறியபடி தன் மகள் இருந்த அறைக்குச் செல்ல, அவர்கள் அடிக்கும் கூத்தை எல்லாம் பார்த்தபடியே கதிர் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சந்தியா வேதவல்லிக்கு  திருமணமாகி எட்டு ஆண்டுகள் கழித்துத் தான் பிறந்தாள். அதோடு அவருக்கு வேறு குழந்தையும் உண்டாகாததால் அவளே அந்த வீட்டின் மஹாராணி, ராணி, இளவரசி எல்லாம். மற்றவர்கள் சேவகர்கள் போலத் தான் அவளுக்குப் பணிவிடை செய்வார்கள். 

வேதவல்லியும் சென்று தன் மகளைக் கண்ணே! மணியே! என்று கொஞ்சி சாப்பிட அழைக்க, சந்தியா தன் வலது கையால் கண்களை மறைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.

 “கண்ணு தலை வலிக்குதா? இல்லை பரீட்சை எழுதி கை வலிக்குதா…. கார்ல போன்னு சொன்னா கேட்காம சைக்கிள்ள போற. ஒருவேளை கால் வலிக்குதா…..”  ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வந்த அப்பத்தாவுக்குத் திடிரென்று பல்பு எரிய,

“ஏன் வேதவல்லி ஒரு வேளை பாப்பா பெரிய மனுஷி ஆகியிருக்குமோ…” என்று இழுக்க,

“ஹப்பா! இப்பவாவது கரெக்டா சொன்னீயே…” என்றபடி சந்தியா எழுந்து அமர்ந்தாள்.

 அவள் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த வேதவல்லியும் அவரின் மாமியாரும், சந்தியாவைச் சந்தோஷமாகக் கட்டி கொண்டனர். பின்னே இரண்டு மூன்று வருடங்களாகவே அவர்கள் ஆவலாக எதிர்ப்பர்ற்கும் விஷயம் அல்லவா. அதோடு ஊரில் இருக்கும் மற்ற பெண்கள் எல்லாம் வயதுக்கு வந்த போது, நம் வீட்டில் இருக்கும் பூ எப்போது மலரும் என்று காத்திருந்தவர்கள் ஆகிற்றே அதனால் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும்.

வெளியில் அமர்ந்து அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்ட கதிரின் முகம் மலர்ந்தது. ‘ஓ! அதுதான் ஒரு மாதிரி இருந்தாளா?’ என்று நினைத்தவன், மேலும் தாமதிக்காமல் வேகமாகச் சாப்பிட்டுவிட்டு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தன் வீட்டுக்குச் சென்றான். 

அவனுக்குத் தெரியும் இப்போது தான் சந்தியாவைப் பார்த்தால், அவளுக்குச் சங்கடமாக இருக்குமென்று. வீட்டுக்குள் வந்தவனைப் பார்த்து அவன் அம்மா லக்ஷ்மி “வாடா வேலா சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா…” என்றார்.

“வேண்டாம்மா அத்தை வீட்ல சாப்பிட்டேன்.” என்றவன் தொடர்ந்து “அம்மா,  நான் இப்ப ஒரு விஷயம் சொன்னா… நீங்க ரொம்பச் சந்தோஷப்படுவீங்க…” என்றதும்,

அவனை ஆர்வமாகப் பார்த்த லக்ஷ்மி “என்னடா சீக்கிரம் சொல்லு?” என்று அவசரப்பட “உங்க செல்ல மருமக பெரியமனுஷி ஆகிட்டா….” என்றான் கதிர் புன்னகையுடன்.

“நிஜமாவா?! என் மருமக பெரியமனுஷி ஆகிட்டாளா?! ஊர்ல இருக்கிற பிள்ளைங்க எல்லாம் வயசுக்கு வந்துடுச்சு, இவ மட்டும் இன்னும் வரலையேன்னு அவ அம்மா கவலைப்பட்டுக்கிட்டு கிடந்தா… நல்லவேளை கடவுள் கண் திறந்திட்டார்….” என்றவர்

“நான் போய் என் மருமகளைப் பார்த்துட்டு வரேன்.” என்று கை  நிறையச் சந்தியாவிற்கு திண்பண்டங்களை அள்ளிக்கொண்டு தன் மகள் காவேரியையும் அழைத்துக்கொண்டு சென்றார்.

அடுத்த அரை மணி நேரத்தில் சந்தியா பெரிய மனுஷி ஆனது, அந்த ஊர் முழுவதும் தண்டோரா போட்டு அறிவித்தது போல், எல்லோருக்கும் சென்று சேர்ந்துவிட்டது. கிராமம் என்றால் அப்படித்தான் ஒரு வீட்டில் ஒரு விஷயம் நடந்தால், அது காட்டுத் தீ போல் எல்லோருக்கும் பரவிவிடும். 

        அதே போல் நகரத்து மனிதர்கள் போல் அக்கம் பக்கம் என்ன நடந்தால் என்ன என்று கிராமத்து மனிதர்களால் இருக்க முடியாது. அவரவருக்கு என்ன முடியுமோ, அது பழமோ, பூவோ இல்லை இனிப்புகளோ வாங்கிக்கொண்டு வந்து சந்தியாவைப் பார்த்துவிட்டு சென்றனர்.

         மாலை சித்ரா வந்த போது, கன்னத்தில் சந்தனத்துடன், தலை நிறையப் பூ வைத்து முகத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்த சந்தியா, சித்ராவை பார்த்ததும் ஆசையாக அழைத்துத் தன் அருகில் அமர வைத்து கொண்டாள்.

        சித்ரா தயங்கி கொண்டே தன் அம்மா கொடுத்துவிட்ட பூவை கொடுக்க, சந்தியா அதை வாங்கி மகிழ்ச்சியுடன் அப்போதே தன் தலையில் வைத்து கொண்டாள். சித்ரா ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். நந்தினி சந்தியாவைப் போல் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். இருந்தாலும் மூன்று தோழிகளும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நெருக்கமாகப் பழகி வந்தனர். ஆனால், நந்தினி வீட்டில் அவள் அம்மாவும், அப்பாவும் அந்தஸ்த்துப் பேதம் பார்ப்பவர்கள். அதனால் சித்ரா சந்தியா வீட்டுக்கு வருவது போல், நந்தினி வீட்டிற்கு செல்லமாட்டாள்.

         சித்ரா வீட்டுக்குக் கிளம்பும் போது,  வேதவல்லி அவளிடம் விதவிதமான பழங்கள், இனிப்புகள் கொடுத்து அனுப்பினார். சித்ராவிற்கு ஒரு தம்பியும், தங்கையும் இருக்கிறார்கள். இங்குக் கிடந்து வீணாவதற்கு, அந்தப் பிள்ளைகளாவது வயிறு நிறையச் சாப்பிடட்டும் என்று நினைத்தார். சந்தியா அவளை ஐந்தாம் நாள் நடக்கும் சடங்கிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லி அனுப்பிவைத்தாள்.

          சந்தியா வயதுக்கு வந்ததை முன்னிட்டு, கதிர் தன் அத்தை வீட்டுக்கு செல்வது தடை செய்யப்பட்டது. இனி வயசு வந்த பொண்ணு இருக்கிற வீட்டிற்கு அடிக்கடி செல்லக் கூடாது என்று காரணம் சொல்லப்பட, கதிரும் சரி என்று கேட்டுக்கொண்டான். ஐந்தாம் நாள் வீட்டில் அனைத்து உறவினர்களையும் அழைத்து, சந்தியாவிற்குப் பெரிய அளவில் சடங்கு செய்யப்பட்டது. 

          கதிரின் மொத்த குடும்பமும் அங்கே தான் இருந்தது. பெண்கள் வீட்டின் உள்ளே இருக்க ஆண்கள் வெளியே நின்று கதை பேசிக் கொண்டிருந்தனர். வீட்டின் மாடியில் பந்தி நடந்து கொண்டிருந்தது. கதிர் தன் மாமாவிற்க்கு உதவிக் கொண்டிருந்தான். அப்போது அவன் தங்கை காவேரி வந்து பரண்மேல் இருக்கும் சாமானை எடுக்க, அவனை உள்ளே அழைக்க, கதிரும் எடுத்து கொடுத்துவிட்டு திரும்பி வரும் போது தான் சந்தியாவைப் பார்த்தான்.

         ஐந்து நாள் முன்பு பார்த்ததற்கும், இப்போது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ஒல்லியாக மாநிறத்தில் இருந்தவள், இப்போது சற்று பூசினார் போல்,  சந்தன நிறத்தில் பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்க,  அவள் அருகில் பட்டுப் பாவாடை தாவணியில் நந்தினி தேவதை போல் நின்று இருந்தாள். ஆனால் கதிருக்கு அப்போது தன் அத்தை மகள் மட்டும் தான் கண்ணிற்குத் தெரிந்தாள். எதார்த்தமாய்  திரும்பிய சந்தியாவின் விழிகளும் கதிரின் விழிகளைச் சந்தித்து விலகியது. 

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!