Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kannaa Varuvaayaa

Kannaa Varuvaayaa 1 2

சந்தியாவின் சடங்கு முடிந்து நந்தினியும், சித்ராவும் சேர்ந்து சாப்பிட சென்றனர். அவர்கள் சாப்பிட அமர்ந்ததும் முதலில் ஒருவர் வந்து வாழை இலையைப் போட்டுவிட்டு செல்ல, அடுத்து ஒருவர் வந்து க்ளாஸில் நீர் ஊற்றிவிட்டு சென்றார்.  இலையில் நீர் தெளிப்பதற்காக டம்ளர்ரை கையில் எடுத்த நந்தினி அதைத் தவறவிட, அவள் இலை முழுவது நீர் கொட்டிவிட்டது. இப்போது என்ன செய்வது என்பது போல் அவள் பரிதாபமாக விழிக்க,

      சித்ரா இலையில் இருந்த நீரை கையால் வழிக்க, அப்போது “கொஞ்சம் கை எடுங்க…” என்ற கதிர், அந்த நீர் இருந்த இலையை மெதுவாக எடுத்துவிட்டு, வேறொரு இலையைக் கொண்டு வந்து போட,  அவன் செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நந்தினியின் முகம் மலர்ந்தது.

        அவள் கதிரை பார்த்து “தேங்க்ஸ்….” என்றாள். 

        கதிர் ஒரு புன்னகையுடன் அங்கிருந்து சென்றுவிட,  நந்தினியின் மனதில் கதிரின் முகம் சலனத்தை ஏற்படுத்தியது. கதிர் பந்தி நடப்பதை மேற்ப்பார்வையிட,  நந்தினி அவனை அடிக்கடி மேற்பார்வையிட்டு கொண்டிருந்தவள், மெதுவாகச் சித்ராவிடம் கதிரை காண்பித்து யார் என்று விசாரிக்க,



Advertisement

“யாரு கதிர் அண்ணனையா கேட்கிற,  உனக்கு அவங்களை  தெரியாது. அவங்க சந்தியாவோட மாமா பையன். சந்தியா அடிக்கடி கதிர் மாமான்னு சொல்வாளே, அது இவங்களத்தான். வெளியூர்ல ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறாங்க.” என்று சொல்லிவிட்டுச் சித்ரா தன் சாப்பாட்டில் கவனமானாள்.

முழுக்கை சட்டையும் அதற்க்கு பொருத்தமான பேண்ட்டும் அணிந்து முகத்தில் புன்னகையுடன் அவரவருக்கு ஏற்றபடி பேசி, அவன் விருந்தினரை உபசரிப்பதை பார்த்த நந்தினியின் மனதில் கதிர் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது.

“நம்ம பெரியசாமி மகன் கதிரு தான நீ, எப்படி இருக்க ராசா?….” 

Advertisement

“நல்லா இருக்கேன் பெரியம்மா.” 

Advertisement

“நீ வெளியூர்ல தங்கி காலேஜ் படிக்கிறேன்னு சொன்னாங்க…”

“ஆமாம் பெரியம்மா சிவகாசியில படிக்கிறேன்.” கதிர் சொன்னதும், அடுத்த இன்னொருவர் ஆரம்பித்தார்.

 “நீயும் உங்க அப்பா மாதிரி விவசாயம் பார்க்க போறியா? இல்ல மேற்கொண்டு படிச்சிட்டு வேலைக்குப் போகபோறியா?” 

Advertisement

“இன்னும் எதுவும் முடிவு பண்ணலை மாமா. இப்ப படிக்கிற வயசு படிச்சிடுவோம். வேலைக்குப் போறதா, விவசாயம் பார்க்கிறதான்னு, பிறகு தான் முடிவு பண்ணனும்.” என்றான் கதிர்.

“நீ ரொம்பத் தெளிவு மாப்பிள்ளை. அப்படியே உங்க அப்பாரு மாதிரி…” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கதிரின் தந்தை பெரியசாமியும் அங்கே வந்தார்.

நல்ல உயரமாக, நிறமாக இருந்தவர். அவர் வயதுக்கு ஏற்ற தோற்றத்துடன் பார்க்க கம்பீரமாக இருந்தார். அவரைப் பார்த்ததும் அதுவரை கதிருடன் பேசிக்கொண்டிருந்தவர், மரியாதைக்காக எழுந்திருக்க, அவரைப் பிடித்து உட்கார வைத்த பெரியசாமி “சாப்பிடும் போது எந்திரிக்கக் கூடாது, முதல்ல சாப்பிடு…” என்றார்.

“உங்க மகனும் அப்படியே உங்கள மாதிரியே தங்கமான குணமுங்க. நல்லா வருவாரு பாருங்க.” என்றதும், தன் மகனை பெருமையாகப் பார்த்தார் பெரியசாமி.

நந்தினி வீட்டுக்கு கிளம்பும்வரை அடிக்கடி திரும்பி கதிர் தன்னைப் பார்கிறானா என்று பார்க்க, கதிர் வேறு வேலையில் கவனமாக இருந்தான். நந்தினியும் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு, அவள் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள். கதிர் வெளியூரில் படிப்பதால் நந்தினியால் அதன்பிறகு அவனை மீண்டும் சந்திக்க முடியவில்லை. நந்தினியும் சிறிது நாட்களில் கதிரை மறந்துவிட்டாள்.

சந்தியா முன்பாவது கதிர் மாமா என்று எதாவது சொல்வாள். இப்போது வயதுக்கு வந்ததில் இருந்து அவள் கதிரை பற்றிப் பேசுவது இல்லை. அதற்கு காரணம் கதிர் தான். சந்தியா அவள் பெற்றோருக்கு ஒரே பெண் என்பதால் அவளை வெளியில் திருமணம் செய்ய அவள் பெற்றோருக்கு விருப்பம் இல்லை. அதனால் அவளுக்குக் கதிர் தான் தன் வருங்காலக் கணவன் என்பது சின்ன வயதிலிருந்தே தெரிந்த கதைதான். 

முன்பெல்லாம் கதிரை பார்க்கும் போது எதுவும் தோன்றாது. ஆனால் இப்போது கதிர் அவளைப் பார்க்கும் பார்வையில் வித்தியாசம் இருப்பதால், வித்தியாசம் என்றால் அவன் அவளைத் தவறாகப் பார்க்கவில்லை. அவன் பார்வையில் ஒரு உரிமை, இவள் என்னுடையவள் என்ற சொந்தம் தெரிந்தது. அதனால் சந்தியாவால் முன்பு போல அவனிடம் கலகலப்பாகப் பேசமுடியவில்லை. 

அவனைப் பற்றிப் பேசினாலே, அவன் பார்வை நினைவுக்கு வருவதால், அவள் அவனைப் பற்றி வெளியில் மற்றவர்களிடம் பேசுவதையும் தவிர்த்தாள். நாட்கள் வேகமாகச் சென்றது. சந்தியா இப்போது பத்தாம் வகுப்பில் இருந்தாள். கதிர் மேற்படிப்பை அதே கல்லூரியில் தொடர,  அவன் விடுமுறையில் ஊருக்கு வரும்போது, சந்தியாவின் வீட்டிற்கும் வருவான்.

 “எப்படி இருக்கச் சந்தியா?”

“நல்லா இருக்கேன் மாமா. நீங்க?”

“ம்ம்… நல்லா இருக்கேன், நீ நல்லா படிக்கிறியா..?” 

“படிக்கிறேன்….”

இவ்வளவுதான் எப்போதும் பேசிக்கொள்வார்கள். அதன் பிறகு கதிர் இருக்கும் அரை மணி நேரமும், சந்தியா எதோ வேலை இருப்பது போல் ஹாலிலேயே சுற்றிக்கொண்டிருப்பாள். கதிரின் பார்வை அவளையே தொடரும். அவன் இருக்கும் வரை அவன் வீட்டுப் பக்கம் செல்லாதவள், அவன் திரும்பக் கல்லூரிக்குச் சென்றதும், அவன் தங்கை காவேரியுடன் சேர்ந்து அங்குத் தான் ஆட்டம் போடுவாள். காவேரி இவளைவிட இரண்டு வயது மூத்தவள்.

ஒரு நாள் சந்தியா தன் மாமா வீட்டிற்கு சித்ராவையும் அழைத்துக் கொண்டு சென்றாள். அவள் மாமாவும் அத்தையும் ஒரு திருமணத்திற்கு செல்வதால்,  காவேரிக்கு துணைக்குச் சென்றவள், மாடி ஹாலில் சத்தமாகப் பாட்டு வைத்துக் கொண்டு ஆடிக்கொண்டிருந்தாள். 

அன்று கல்லூரி ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவர்களுக்கிடையே சண்டை வந்ததால், கல்லூரிக்கு மூன்று நாட்கள் விடுமுறை கொடுத்து எல்லோரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். திடீரென்று விடுமுறை கிடைத்ததால், கதிர் வருகிறேன் என்று ஃபோன் செய்யாமல் கிளம்பி வந்தான்.

தன் வீட்டின் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்த கதிரின் காதில் பாட்டுச் சத்தம் கேட்க…. நம்ம வீட்ல யாரு இவ்வளவு சத்தமா பாடு கேட்கிறாங்க என்று யோசித்துக் கொண்டே நின்றவனுக்கு, பாட்டுச் சத்தம் மாடியில் இருந்து வரவும், அழைப்பு மணியை அடிக்காமல் பின் பக்கம் இருக்கும் தன் சித்தப்பா வீட்டிற்கு சென்றவன், அவர்கள் வீட்டின் மாடி வழியாக இவர்கள் வீட்டிற்கு சென்றான்.  சத்தம் போடாமல் மெதுவாகக் கீழே இறங்கியவன், பாதிப் படியிலேயே நின்று முதல் தளத்தில் என்ன நடக்கிறது என்று கவனித்தான்.

சந்தியா சுடிதார் போட்டிருந்தவள், அதன் துப்பட்டாவை இடுப்பில் இறுக்கிக் கட்டி கொண்டு,  தலையை விரித்துப் போட்டு விட்டு, உடலை வளைத்து, நெளித்துக் ஆட, அதைக் காவிரியும், சித்ராவும் வாயை பிளந்தபடி ரசித்துக் கொண்டிருந்தனர். கதிர் தன் செல்லில் அவள் ஆடுவதைப் படம் பிடித்து வைத்துக் கொண்டான். 

‘இருடி! இன்னைக்கு மாட்டின…’ என்று நினைத்தபடி அவன் படியிறங்க, பாடலின் கடைசி வரிகளுக்கு இன்னும் வேகமாக, ஆவேசமாக ஆடிக்கொண்டிருந்த சந்தியா, தள்ளாடியபடி நிற்கவும் கதிர் வந்து அவள் முன்பு நிற்கவும் சரியாக இருந்தது.

முதலில் சந்தியாவிற்கு ஒன்றும் தெரியவில்லை. அவள் ஆடிய ஆட்டத்திற்கு தலை கிறு கிறுவென்று சுத்தியதால், அங்கு நிற்ப்பது கதிர் என்று புரியாமல் நின்றவள், அவன் நிஜமாகவே அங்கே நிற்கிறான் என்று உணர்ந்த கணம், வேகமாக அங்கிருந்து ஓட பார்க்க, கதிர் அவளை எட்டி பிடிக்க, அவன் கைகளில் அவளின் கூந்தள் தான் மாட்டியது.

பிடித்தபிடி விடாமல் கதிர் நிற்க…. “மாமா… மாமா விடு மாமா வலிக்குது….” சந்தியா கெஞ்ச,

“ ஏன் இவ்வளவு நேரம் காக்கா வலிப்பு வந்தது மாதிரி ஆடின, அப்ப வலிக்கல. இப்ப மட்டும் வலிக்குதா? இரு நீ போட்ட ஆட்டத்தைச் செல்ல பதிஞ்சியிருக்கேன், உன் அம்மாட்டயும், அப்பத்தாட்டயும் போட்டு காட்றேன்…” என்றதும்,

அரண்ட சந்தியா “ஐயோ  மாமா! ஏன் உனக்கு இந்தக் கொலைவெறி. அவங்க ரெண்டு பேரும் இதைப் பார்த்தா,  இனிமே என்னை வெளியிலேயே போக விடமாட்டாங்க. நான் ஸ்கூல இன்னைக்கு ஆடப்போறதுக்குச் சும்மா ப்ராக்டிஸ் பண்ணேன்…” என்று சொன்னதும், 

“என்னது! இப்ப ஆடின மாதிரி ஸ்கூல்ல வேற ஆடப்போறியா? நீ ஆடுறத நம்ம ஊர் பயலுங்க பார்த்தா, என்ன ஆகும் தெரியுமா….” என்று கதிர் சத்தம் போட,

“ஐயோ! ஏன் மாமா நீ வேற,  நான் இங்க ஆடினது தெரிஞ்சாலே, எங்க அம்மா என்னைப் பேய் ஓட்டிடும். இதுல நான் ஸ்கூல்ல ஆடினா அவ்வளவு தான்! விறகுக்குப் பதில் என் காலை உடைச்சி அடுப்பில வச்சிடும். நான் வேற பாட்டுக்கு தான் ஆடறேன். அதுவும் எங்க ஸ்கூல்ல சாமி பாட்டுக்கு மட்டும் தான் ஆடனும். நான் சும்மா காவேரி மதினிக்காக ஆடினேன்.” என்றாள்.

 கதிர் அவளைச் சந்தேகமாகப் பார்க்க  “நிஜமா மாமா, நீ வேணா சித்ராவை கேளு….” என்று சந்தியா பரிதாபமாகச் சொல்ல, சித்ராவும் வேகமாக “ஆமாம்ணே அவ சாமி பாட்டுக்கு தான் ஆடுறா…” என்றாள். 

கதிர் சந்தியாவின் கூந்தலை விட,  சந்தியா வலித்த தன் கழுத்தை தடவி விட “உன்னை நம்ப முடியாது. நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு வருவேன்…” என்றான் கதிர்.

“தாராளமா வா. வரும் போது கார்ல வா. ஃபங்ஷன் முடிய எப்படியும் ராத்திரி ஆகும். நானும் உன்னோடயே வீட்டுக்கு வந்திடுறேன்…” என்று சொல்லிவிட்டுச் சந்தியா சித்ராவை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றாள்.

சொன்னது போல் கதிர் அன்று மாலை சந்தியா படிக்கும் பள்ளிக்குச் சென்றான். அங்குத் தான் அவன் தங்கை காவேரியும் படிக்கிறாள். பெரியசாமி தான் அந்தப் பள்ளியின் கரெஸ்பாண்டென்ட். அதனால் அவன் தந்தையுடன் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்தான். 

சிறிது நேரம் சென்று சந்தியா மஞ்சள் நிறத்தில் ரவிக்கை, புடவை அணிந்து, இன்னும் சில மாணவிகளுடன் மேடைக்கு ஏறினாள். ஒரு கையில் வேப்பிலையும் இன்னொரு கையில் மண் சட்டியும் வைத்துக் கொண்டு 

“மாரியம்மா கருமாரியம்ம
உன்னை வணங்குகின்றோம் கருமாரியம்மா…” என்று அவள் பயபக்தியுடன் ஆடுவதைப் பார்த்ததும், கதிருக்கு இன்று மதியம் அவன் வீட்டில், அவள் போட்ட ஆட்டம் நினைவுக்கு வர,  பொத்துக் கொண்டு வந்த சிரிப்பை இதழுக்கிடையில் அடக்கியபடி அமர்ந்திருந்தான். அப்போது தான் நந்தினி அவனை மீண்டும் பார்த்தாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!