Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Anjuvathu Yaathondrumillai

Anjuvathu Yaathondrumillai 2

2 – அஞ்சுவது யாதொன்றுமில்லை

 

“ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ” அலைபேசியில் இளையராஜாவின்  தேன்குரல்  இனிமையாக இழைய அப்போது தான் ட்யூட்டி முடிந்து வந்து குளித்து தலைதுவட்டி நின்ற சித்தார்த் அலைபேசியின் தோடுதிரையைப் பார்க்க அதில் “மாமியார்” என்று மிளிர புருவங்கள் முடிச்சிட அழைப்பை ஏற்றான். மறுமுனையில் “என்ன மருமவனே!! எப்படி இருக்கீய? உச்சஸ்தாயியில் குரல் வர, சித்தார்த்துக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது.

 



Advertisement

அத்தை எப்போதுமே இப்படித்தான். அலைபேசியில் அழைப்பதால் குரலுயர்த்திக் கத்திப் பேசினால் மட்டுமே மறுமுனையில் இருப்பவருக்குக் கேட்கும் என்ற எண்ணம் அவருக்கு. மாமா அடிக்கடி கிண்டல் செய்வார் “அம்மாடி!! நீ ஃபோனைக் கீழே வச்சுட்டு அப்படியே பேசினாக் கூட அங்கிட்டு இருக்கவுகளுக்கு கேட்டிறும். காது சவ்வு பிஞ்சு போச்சு” என்பார். மாமா ராகவன் சித்தார்த்தின் அம்மாவுக்குக் கூடப்பிறந்த தம்பி. பூர்வீகம் தென்காசி அருகே பன்பொழில் கிராமம்.

 

இருவருக்குமே அரசாங்க வேலை என்பதால் வேலை நிமித்தம் இடமாற்றம். மாற்றலாகி வந்த இடம் பிடித்துப் போய்விட அங்கேயே வீடு கட்டிக் கொண்டு செட்டிலாகிவிட்டனர். இருந்தும் மண்மணம் மாறாது இருக்கும் இருவரது பேச்சும். இருவரும் சிலசமயம் சொல்லாடிக் கொள்வது கேட்கவே சுவாரஸ்யமாக இருக்கும். 

Advertisement

 

Advertisement

சித்தார்த்தனது தந்தைக்கு இராணுவத்தில் வேலை. பல வருடங்களாக டில்லியில் கழித்தவர்கள் அவன் கல்லூரி பட்டிப்பினை முடித்ததும் தான் ஊருக்கே திரும்பினர். அதன்பின் தான் தாய்மாமனையும் அவரது குடும்பத்தையும் பரிச்சயம். அவர்களது ஒரே மகளைத்தான் சித்தார்த்தனுக்கு மணமுடிக்க வேண்டும் என்று மாமா முடிவு செய்திருந்தார். சித்தார்த்தனுக்குமே இதில் இஷ்டம்தான் என்பதாலேயே அத்தையின் எண்ணை மாமியார் என்று சேவ் செய்திருந்தான் அலைபேசியில்.

 

இவனிடம் இருந்து பதில் இல்லாது போகவே “இருக்கீயளா மருமவனே??” அலைபேசி அலற சுதாரித்தவன் “சொல்லுங்கத்த. என்ன சமாச்சாரம்!! இன்னிக்கு மருமவன தேடிருக்கீய?” என்று கேட்க, “குசும்பு தானே மருமவனே!! என்னவோ புதுசா உங்களுக்கு கூப்புடறா மாதிரி பேசறீங்களே” என்று சடைத்துக் கொண்டார். “சும்மா கிண்டலுக்குத் தானே அத்தை. சொல்லுங்க. என்ன விஷயம்?” என்றான் சித்தார்த்.

Advertisement

 

“வேறென்ன மருமவனே!! நா பெத்த ரத்தினம் ஃபோனே எடுக்க மாட்டேங்கிறா. அதான் என்னாச்சு உங்களுக்கு ஏதாவது ஃபோன் பண்ணாளானு கேக்கலாம்னு…” என்றார். “யாரு உங்க மவளா? ஹுக்கும் பண்ணிட்டாலும். அப்படி ஏதாவது நடந்தா உலகம் அழிஞ்சிராது? மணி என்ன? ஏழா? டான்ஸ் கிளாசுக்குப் போயிட்டு வந்திருப்பாளே அத்தை. இருங்க நான் கூப்பிட்டுப் பாக்குறேன்” என்று அவரது அழைப்பைத் துண்டித்து விட்டு அடுத்து அவளது எண்ணை அழைத்தான். 

 

இரண்டு முறை அழைத்தும் அழைப்பை எடுக்கவே இல்லை. அதனால் அவளுக்கு உடனே அழைக்குமாறு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இரவு உணவுக்கு ஏற்பாடு செய்ய சமையலறைக்குள் நுழைந்தவனது கவனத்தை அவனது அலைபேசியின் அலறல் மீண்டும் கலைத்தது. அவள் தான் அழைக்கிறாளோ என்று அவசரமாக வந்து பார்த்தவன் அது அவனது கண்ட்ரோல் ரூமில் இருந்தான அழைப்பு என்று உணர்ந்து சீரியஸ் மோடுக்கு மாறினான். ஆம் சித்தார்த் ஏசிபி சித்தார்த்தாக மாறினான்.

 

“ஹலோ ஏசிபி சித்தார்த் ஹியர்” என்றவனது முகம் மறுமுனையில் உதிர்க்கப்பட்ட செய்தியில் அதிர்ந்தது. “ஓகே!! ஐ வில் பி தேர் இன் சம்டைம். நீங்க போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிடுங்க. ரிப்போர்ட்டோட இன்ஸ்பெக்டர என்ன வந்து பார்க்கச் சொல்லுங்க.” என்று விட்டு உடைமாற்றக் கிளம்பினான். பசி மறந்தே போனது. அவனுக்கு அப்படித்தான், வேலை என்று வந்து விட்டால் பசி தூக்கம் எல்லாமே மறந்து போகும். ஆசைப்பட்டு சேர்ந்த வேலையாயிற்றே.

 

[the_ad id=”6605″]

 

 

மற்றனைத்தையும் மறந்தவனாய் பணிக்குக் கிளம்பினான். வீட்டைப் பூட்டி விட்டு தனது பைக்கைக் கிளப்ப வந்தவனது அலைபேசி மீண்டும் அழைக்க, அவள் தான் அழைத்திருந்தாள். அழைப்பை எடுத்து “எங்க மேடம் இருக்கீங்க?” என்று கேட்டவனை இடையிட்டது அவளது குரல். “அத்தான்…. கிளாஸ் முடிஞ்சு வந்து தூங்கிட்டேன். அதான்….. ஃபோன் பாக்கல….அதான்.. எடுக்கல” என்றாள் தயங்கித் தயங்கி. 

 

எப்போழுதுமே அவனிடம் அவள் சரளமாகப் பேசியதில்லை தான். அவனிடம் என்றில்லை. யாரிடமும் அவள் அவ்வளவு சரளமாகப் பேசியதில்லை தான். ஆனால் அவளது குரலில் இப்போது இருந்ததென்ன??? பதட்டமா? பயமா?? “லயா!!! என்னாச்சு? எனி ப்ராப்ளம்?” என்றான். “அதெல்லாம் ஒன்னுமில்லத்தான்.” என்று சற்றே அவசரமாக வந்ததோ பதில்?? இவன் சிந்தனையில் ஆழ “சரித்தான். நா வச்சிடறேன்” என்று வைத்து விட்டாள்.

 

லயா பொதுவிலே அவ்வளவு பேசமாட்டாள் தான். ஒருவேளை தான் தான் தேவையில்லாமல் யோசிக்கிறோமோ என்று நினைத்தவன் கடந்த சில நாட்களாகவே அவள் இயல்பாக இல்லையோ என்று மீண்டும் உறுத்தியது. அன்று அவனுக்கு கேஸ் விஷயமாக போக வேண்டிய இடம் இவளது கல்லூரிக்கு அருகில் என்பதால் அப்படியே அவளையும் பார்க்கச் சென்ற போதும் ஏனோ வித்தியாசமாக உணர்ந்தான். 

 

லயாவுக்கு ஏதோ ப்ரச்சனை இருக்கிறது. அது என்ன என்று சீக்கிரமே கண்டுபிடிக்க வேண்டும் என்று மனதுக்குள் குறித்துக் கொண்டவன் அவனது அத்தைக்கு அழைத்து “உங்க பொண்ணு பத்திரமாத்தான் இருக்கா. அதுக்குள்ள ஊரைக் கூட்டிராதிங்க. போய் பிபி மாத்திரையைப் போட்டுட்டு படுங்க” என்று விட்டு தனது பைக்கை அலுவலகம் நோக்கிச் செலுத்தினான்.

 

———————————————————————————————————————————————

 

அலுவலகத்தை அடைந்தவனை வாயிலிலேயே வந்து சந்தித்த இன்ஸ்பெக்டர் ஜோசஃப் ஒரு விரைப்பான சல்யூட்டை அளிக்க ஒரு தலையசைப்புடன் அதனை ஏற்றுக் கொண்ட சித்தார்த் “எனி இன்ஃபர்மேஷன் ஆன் ஹூ இஸ் ஹீ?” என்றான். “சார் செத்துப் போனது ஒரு ஸ்டூடண்ட்” என்றதும் ப்ரேக்கடித்தது போல் நின்று விட்டான் சித்தார்த்.

 

“வாட்!!! ஸ்டூடண்ட்டா? வேற ஏதாவது…..????” என்று விவரம் கேட்க இல்லை என்பதாய் உதட்டைப் பிதுக்கினார் இன்ஸ்பெக்டர். “சார் இறந்து போன ஸ்டூடண்ட் பேரு மனோஜ் பட். இவன் இங்க  காலேஜ்ல மூணாவது வருஷ ஸ்டூடண்ட். ரீசண்ட்டா தான் பெங்களூர்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர்ல வந்துருக்கான். அவனோட ஐடிகார்ட் வச்சு தான் ஐடெண்டிஃபை பண்ணோம் சார். ஆனா என்ன மோட்டிவ், எப்படி நடந்தது எதுவும் தெரியல. இனி தான் இன்வெஸ்டிகேட் பண்ணனும். அடையார் டு திருவான்மியூர் திரும்புற சிக்னலுக்கு அடுத்து இருக்கிற ஒரு அப்பார்ட்மெண்ட் பேஸ்மெண்ட்ல வச்சு தாக்கப்பட்டிருக்கான். அவன் தலையில் ஏதோ கணமான பொருளால் தாக்கப்பட்டிருக்கான்.”

 

“அங்கிருந்து ரோட்டுக்கு கொலையாளி கொண்டு வந்து போட்டானா இல்லைன்னா இவனா தப்பிக்க முயற்சி செஞ்சு வந்து விழுந்தானா தெரியல சார். ஆனா நம்ம டைகர் எதையோ சென்ஸ் பண்ணி அந்த அப்பார்ட்மெண்ட் வரைக்கும் கொண்டு போச்சு. அங்கிருந்து ரோடு வரைக்கும் ரத்தம் சிந்தியிருக்கு.” என்று கடகடவென ஒப்பித்தார். டைகர் டிபார்ட்மெண்ட்டின் திறமையான மோப்ப நாய். வெல் ட்ரெயிண்ட் டாக். இதுவரை அது எந்தக் கேசிலும் தவறியதில்லை. கவனமாய்க் கேட்டிருந்த சித்தார்த் “ஓகே!!! பிஎம் ரிப்போர்ட் வந்தாச்சா?” என்றான். “இப்போதான் சார் வாங்கிட்டு வந்தேன்” என்று இந்த கேஸ் சம்பந்தமாக அனைத்தும் சேர்த்துவைத்திருந்த ஃபைலை சித்தார்த்தனிடம் நீட்டினார். 

 

நீட்டிய ஃபைலில் இருந்த ஒரு அரசு முத்திரையிட்ட கவரைப் பிரித்து வாசித்தவனின் புருவங்கள் முடிச்சிட்டுக் கொண்டன. மல்ட்டிபிள் இன்ஜுரீஸ் என்று இருந்தது. பலமான இரும்பு கம்பியினால் தலையில் பலமுறை தாக்கப்பட்டிருப்பதாகவும் இருந்தது. செரிப்ரல் ஹெமரேஜ் தான் சாவிற்கான காரணம் என்றும் இருந்தது. என்ன ஒரு கொடூரமான மரணம். அவ்வளவு வெறியா. வெறுப்பாக இருந்தது சித்தார்த்தனுக்கு. ஆரம்ப காலகட்டத்தில் இது போன்ற நேரங்களில் மிகவும் சோர்ந்து போவான். இப்போதெல்லாம் பழகிப் போயிருந்தாலும் அதனையும் மீறி தோன்றிய அயர்ச்சியைத் தடுக்க இயலவில்லை.

 

அடுத்து ஃபைலில் இருந்த புகைப்படங்களை ஒன்றொன்றாகப் பார்த்தான். இன்னும் வாழ்க்கையை ஆரம்பித்திராத வயது. தலையிலிருந்து ஒழுகிய ரத்தம் முகத்தில் தாடையில் என்று ஒரு கோடாக வழிந்திருந்தது. கண்கள் இரண்டும் நிலைகுத்தி இருந்தன. புகைப்படங்களில் ஏதாவது வேறு க்ளூ கிடைக்குமா என்று பார்த்திருந்த சித்தார்த்தின் பார்வை ஃபைலுடன் இருந்த பெரிய ப்ரௌன் நிறக் கவரின் மீது படிந்தது.

 

[the_ad id=”6605″]

 

 

கவரினுள் ஒரு வாலட்டும் ஒரு சாவியும் இருந்தன. இது ஒரு வேளை அந்த மனோஜின் வண்டி சாவி போல என்று எண்ணிக் கொண்டவனாய் பர்ஸைத் திறந்து பார்க்க அதனுள் சில விசிட்டிங் கார்டுகளும் சில ஏடிஎம் கார்டுளும் இருந்தன. பர்ஸின் ஒரு பக்கத்தில் இருந்தது அவனின் புகைப்படம். அடர்ந்த சுருள் கேசத்தை காதுவரை வெட்டியிருந்தான். மாநிறம். கூர்ந்து பார்த்ததில் இடது புருவத்தின் மீது ஒரு தழும்பு அரை இன்ஞ்சிற்கு ஓடியது.

 

அவனது டிரைவிங் லைசன்ஸ் அவனது ஜாதகத்தைக் காட்டியது. சித்தார்த்தனையே பார்த்திருந்த ஜோசஃப்பிடம் “இந்தப் பையனோட அட்ரஸ் எடுங்க. இவனோட செல்ஃபோன் எதுவும் கிடைக்கலியா?” என்றான். “இல்ல சார். பாடியைக் கைப்பற்றும் போது செல்ஃபோன் எதுவுமே இல்லை.  ஒருவேளை கொலையாளி அதை எடுத்துட்டுப் போயிருக்கலாம். நாங்க அந்த அப்பார்ட்மெண்ட் பேஸ்மெண்ட் ஃபுல்லா ஸர்ச் பண்ணிட்டோம்.” என்றார்.

 

அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே வந்த சித்தார்த் “எந்தக் காலேஜ் ஸ்டூடண்ட்?” எனவும் “இங்க தான் சார். நம்ம தருமராஜ் லா காலேஜ்.” எனவும் அதிர்ந்தான் சித்தார்த். மூளை பத்து மடங்கு சுறுசுறுப்பானது. மீண்டும் ஒரு முறை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டையும் இந்தக் கேஸ் சம்பந்தப்பட்ட ஃபைல்களையும் ஆழ்ந்து வாசிக்கத் தொடங்கினான் சித்தார்த்.

 

———————————————————————————————————————————————

 

காலை எட்டு மணி. மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் தனது வழக்கமான பரபரப்பை ஏற்றிருந்தது. வந்த நின்ற சென்னை ஆம்னி பஸ் ஸ்ருதியைத் இறக்கிவிட்டுச் செல்ல, பாதி தூக்கம் கலைந்த நிலையில் எரிச்சலாய் உணர்ந்தாள் ஸ்ருதி. நேற்றைய இரவிலிருந்து தலை பாரமாக இருந்தது. ஏனோ இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி ஆகிவிடுகிறது. தலைவலி அதிகமாகி அடித்துப் போட்டாற் போன்று   தூக்கம் வருகிறது.  ‘இந்த அம்மாவால தானே இன்னைக்கு இப்படி தூக்கம் தொலைஞ்சு இங்கே வரவேண்டியதாப் போச்சு. இல்லைன்னா ஹாஸ்டல்ல இந்நேரம் நல்லாத் தூங்கிட்டிருந்திருப்பேன். ச்சே’ புலம்பியபடி தனது பேக்பேக்கை இழுத்து மாட்டியபடி ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தாள்.

 

வழக்கமாக எந்நேரம் வந்தாலும் பஸ் பயணத்தையே விரும்பும் ஸ்ருதி இன்று உறக்கம் கலையாத நிலையில் பஸ்ஸிற்குக் காத்திருக்க விருப்பமின்றி ஆட்டோவில் செல்லத் தீர்மானித்தாள். பேரம் எதுவும் பேசாமல் எஸ் எஸ் காலணிக்குச் செல்ல ஆட்டோவில் ஏறிக் கொள்ள ஆட்டோ எஸ் எஸ் காலணியை நோக்கி விரைந்தது. உறக்கச் சடவிருந்தாலும் அந்தக் காலை நேரத்துச் சில்லென்ற காற்று முகத்தில் பட அதுவே ஒரு தனி புத்துணர்வைக் கொடுத்தது அவளுக்கு.

 

தங்களைக் கடந்து செல்லும் வாகனங்களையும், தாங்கள் கடந்து செல்லும் மனிதர்களையும் ஆவென வாய்திறந்து வேடிக்கைப் பார்த்தபடியே வந்தாள். என்ன தான் சிங்காரச் சென்னை என்றாலும் மதுரைக்கு ஈடு கொடுக்க முடியாது என்ற பெருமிதம் அவளை நிமிர்ந்து அமரச் செய்தது. அவ்வளவு நேரப் பயணத்தையும் அம்மாவைத் திட்டியபடியேக் கடந்தவள் ஏனோ இப்போது தனது ஊரின் காலைநேரத்து அழகில் மயங்கியவளாய் அனைத்தும் மறந்து வேடிக்கைப் பார்த்து வந்தாள். அதுவரை இருந்த தலைவலி கூட இப்போது பெருமளவு குறைந்தாற் போன்று இருந்தது. 

 

இருபது நிமிட பயணத்தில் வீட்டை அடைந்ததும் ஆட்டோ டிரைவருககுப் பணம் கொடுத்துவிட்டு நுழையும் மகளையே வாஞ்சையோடு பார்த்திருந்த தந்தையிடம் சென்றாள். “வாடாம்மா! சோர்ந்து போயிருக்கியே! கண்ணெல்லாம் செவந்து போயிருச்சே. ராத்தூக்கம் சரியில்லைன்னா இப்படித்தான். வா வா. உன்னை இன்னும் ஆளைக்காணோம்னு உங்கம்மா தேடிட்டே இருந்தா.” மகளின் தலையில் ஆதூரமாகத் தடவியபடி அவளை அணைத்துக் கொண்டார்.

 

அதுவரை கொஞ்சநஞ்சம் பாக்கி இருந்த அலுப்பும் தந்தையின் அணைப்பில் கரைந்து போக உற்சாகமாக வீட்டிற்குள் நுழைந்தவளை அவளது அன்னையின் கூர்பார்வை நிறுத்தியது. “எத்தனை மணிக்கு வயவேண்டியவ எப்போ வந்து நிக்கிறா! ஏதாவது கேள்வி கேக்குறாரா பாரு மனுஷன். என்னவோ ஊருல இல்லாத பிள்ளையைப் பெத்துட்டா போல உருகுவாரு. அதுவும் நல்லா செல்லம் கொஞ்சுது.” முகத்தை மூன்றாம் மாடிக்குத் தூக்கி வைத்துக் கொண்டு கத்தினார்.

 

“உஷ்ணம் அதிகமா இருக்கு ஸ்ருதிம்மா. பாத்துக்கோ” என்று மகளின் காதுகளில் கிசுகிசுத்தவர் மெல்ல பின்கட்டினை நோக்கி நகர, மகளின் அருகில் வந்தவர் “பஸ் ஏறும்முன்ன ஃபோன் பண்ணுனு எத்தனை முறை சொல்றது. ஊரு இருக்குற இருப்புல எனக்குத் தான் பயமா இருக்கு. யாருக்கோ வந்த விருந்து மாதிரி நடந்துகிட்டா எப்படி?” என்று அதட்டும் அன்னையைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவரது பின்புறமிருந்து அவரை அணைத்துக் கொண்டாள் ஸ்ருதி.

 

“அதான் நைட் உன்னோட ஃபோன் பேசினேன்ல. அப்புறமா என்னவாம்?” என்றவளை இழுத்து தன் முன் கொண்டு வந்தவர் “அது நான் கூப்பிட்டு நீ பேசின. நீயா கூப்பிடல. உனக்கு ஃபோன் பண்ணிப் பண்ணி களைச்சுப் போய் உன் ரூம்மேட்டை எல்லாம் ஃபோன் பண்ணி படுத்தியிருக்கேன். ஏன் இப்படி பண்ற? சொன்னா கேட்கவே மாட்டியா?” விரக்தியும் அலுப்பும் இழையோடியது குரலில்.

 

“அம்மா!! அதான் பத்திரமா வந்துட்டேன்ல. கிளாஸ் முடிஞ்சு வந்ததும் சரியான தலைவலி. நல்லாத் தூங்கிட்டேன். டிக்கெட் புக் பண்ணியிருக்க பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன். அப்புறமா எஸ் ஆர் எஸ் டிராவல்ஸ்ல கெஞ்சி கூத்தாடி எங்கம்மா பெரிய டாண். நா சொன்ன டைமுக்கு ஊருக்குப் போகலைன்னா அவ்வளவு தான். மதுரைல பெரிய பூகம்பமே வெடிக்கும்னு எல்லாம் நிலவரத்த சொல்லி கலவரத்த உண்டாக்கி டிக்கெட் எடுத்து வந்து சேர்ந்தா, நீ எனக்கு ஒரு காப்பி கூட குடுக்காம வந்ததும் வராததுமா வாசல்லயே வச்சு விசாரணை பண்றியேம்மா” மூச்சு விடாமல் பேசியவளை பார்த்தவருக்கு சிரிப்பு அடக்கமாட்டாமல் வர அதை மறைத்தவராய் “போ! குளிச்சிட்டு வா” என்று விட்டு சமையலறையை நோக்கிப் போனார்.

 

[the_ad id=”6605″]

 

 

ஒருவழியாய் அன்னை என்ற பூகம்பத்தை புஸ்வாணமாக்கிய திருப்தியில் சீட்டியடித்தபடி தனது அறையை நோக்கி நடந்தாள் ஸ்ருதி. அவளது அலைபேசி சிணுங்கி அவளது கவனத்தைக் கலைக்க திரையில் சஞ்சு என்று ஒளிர்ந்தது. அவசரமாக தனது அறைக்குள் புகுந்து கதவை அடைத்தவள் அழைப்பை எடுத்தாள்.

 

“ஊருக்குப் போய் சேர்ந்துட்டியா ஸ்ரூ?” என்றவனிடம் “இப்படி என் பேரைக் கொலை பண்றதுக்குத் தான் கால் பண்ணியா சஞ்சு?” என்று கடுப்படித்தாள். “அதென்னவோ ஸ்ருதினு அழகா பேரு வச்சாலும் எனக்கு ஸ்ரூனு அதைக் கொலைபண்ணிக் கூப்படித்தான் பிடிச்சிருக்கு” என்று சிரிப்பை அடக்கிய குரலில் சொன்னான் சஞ்சய்‌. அவனுக்கு நன்கு தெரியும் அவள் அருகில் இருக்கும் போது இப்படி பெயரைச் சுருக்கினால் குறைந்த பட்சம் இரண்டு அடியாவது விழும் என்று. 

 

“ஃபோன்ல அடிக்க முடியாதுனு தைரியமா சஞ்சு?” கேட்டவளிடம் “ரீச் ஆனதும் ஏன் மெஸேஜ் பண்ணல?? அதான்” என்றான் சஞ்சய். “இப்போ தான் சஞ்சு வந்து சேர்ந்தேன்” என்றாள். ஒருசில நொடிகள் அமைதிக்குப் பின் சஞ்சய் “ஏன் லேட். ஆறுமணிக்கே பஸ் ரீச் ஆகிருக்குமே?” என்றான் பதட்டமாக. “அதை ஏன் கேட்குற சஞ்சு?? நான் கிளாஸ் முடிஞ்சு ரூமுக்கு வந்தேனா, செம்ம தலைவலி. அதான் அப்படியே தூங்கிட்டேன். எழுந்து பார்த்தா மணி எட்டு. பஸ் மிஸ் பண்ணிட்டேன். அப்புறமா அடிச்சு பிடிச்சு வேற டிக்கெட் வாங்கி வந்து சேர்ந்தேன்.” என்றாள் ஸ்ருதி.

 

மறுமுனையில் சிறிது நேரம் அமைதியாக இருக்க “சஞ்சு?? லைன்ல இருக்கியா?” என்றவளிடம் “உனக்கு அடிக்கடி தலைவலி வருதே ஸ்ருதி. ஏன் இன்னும் டாக்டர்கிட்ட காட்டாம வச்சுருக்க? நீ ஊருக்கு ரிட்டர்ன் வந்ததும் ஃபர்ஸ்ட் வேலை அதான். நாம போய் டாக்டரை கன்ஸல்ட் பண்றோம்” என்றான் தீவிரமான குரலில். தனக்கிருக்கும் ஒரே நட்பு இவள் தான். இவளின் நலனில் தனக்குத்தான் முதல் அக்கறை என்ற தீவிரம் அவனது குரலில்.

 

அவனது அக்கறை புரிய “சரிங்க ஆபீஸர். வந்ததும் போலாம். சரியா. இப்போ ஸ்ருதி பாப்பாக்கு செம்ம பசியாம். குளிச்சா தான் சோறுனு எங்காத்தா சொல்லிடுச்சாம். அதான் நா போய் குளிச்சிட்டு கொட்டிக்கப் போறேன். பை” என்று விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டு பாத்ரூமை நோக்கி நடந்தாள்.

 

குளிக்க ஷவரைத் திறந்தவளுக்கு சுரீரென தலைக்குள் வலி சொடுக்க கண்கள் இரண்டும் எமரிப் பேப்பரை வைத்துத் தேய்த்து போன்ற உணர்வு ஏற்பட்டது. உடல் நடுங்கியது. மனதுக்குள் ஏதேதோ நிகழ்வுகள் திரைப்படம் போல் வரிசை கட்டின. யாரோ துரத்த உயிரைக் கையில் பிடித்தபடி ஓடினாள். 

 

எங்கே ஓடுகிறோம் என்று கூடத் தெரியவில்லை. உயிரைக் கையில் தேக்கியவளாய் ஓட்டம். மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓட்டம். வெகுநேரம் ஓடி உடல் களைத்து அதற்கு மேல் ஒத்துழைக்காமல் அப்படியே மடிந்து சரிய பாத்ரூம் சிங்க்கினைப் பற்றியிருந்தவள் அப்படியே மடங்கிச் சரிந்தாள்.

 

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!