Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 1

Advertisement

TNWContestWriter009

New member
Member
நிலா 1:

வானத்தின் சிறு ஒளி கூட தென்படா நடுநிசி வேளையில், அந்த நிசப்த இருட்டில், எதையோ தேடிய படி முன்னேறின அவனின் கால்கள். மிக கவனமாய் யாரும் தன்னை அறிந்து கொள்ளாத வகையில் அடி மேல் அடி எடுத்து வைத்தவன், தன் கையில் இருந்த டார்ச்சின் உதவியுடன் அவ்விடத்தில் தான் தேடி வந்ததை அடைய முற்பட்டான் அவன்.

நிலவும் கூட ஓய்வு வேண்டி விடுப்பு எடுத்து கொண்ட அமாவாசை இருட்டில், இவனின் கண்கள் மட்டும் ஆந்தையின் சக்தியை பெற்றதை போல கூர்மையாய் தன் குறியை மட்டுமே எண்ணியப்படி முன்னேறியது.

எதையோ தேடிக் கொண்டு இருந்தவனின் சட்டையை யாரோ பற்றி இழுப்பது போல தோன்றவே திடுக்கிட்டவன், அச்சத்துடன் திரும்பி பார்த்தவனுக்கோ, அவ்விடத்தின் மரத்தின் கிளையில் அவனின் சட்டை மாட்டி கொண்டு இருப்பதை பார்த்ததும் தான் உடல் உயிர் பெற்றது.

தன் சட்டையை சரி செய்தவன், மேலும் சில அடிகள் அவ்விடம் எடுத்து வைத்தது மட்டும் தான் அவனின் நினைவில் பதிந்த இறுதி நொடிகள்.

ஏதோ கூர் கொண்ட பொருள் ஒன்று அவனின் கழுத்து வளைவை பாதம் பார்த்து இருக்க, கத்தவும் கூட இயலா வண்ணம், அவ்விடம் சரிந்தான் அந்த மானுடன்.

******

'புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..'

எதிரே இருக்கும் டீ கடையின் ரேடியோவில் இந்த பாடல் ஒளிக்க, அதை கேட்ட வண்ணம் அவ்விடத்தின் சூழலை ரசித்து, தன்னையே மறந்த வண்ணம் அமர்ந்து இருந்தான் அவன்.

ஆலமரத்தின் ஜில் காற்றில், காலை குயிலின் இன்னிசை கணத்தில், மரங்களும், பூக்களும் களித்திருந்த வேளையில் ஒலித்த அந்த பாடல் எதையோ நினைவு படுத்தியதை போல் இருக்கவே, அந்த ஆலமரத்தின் அடியில் மெய்மறந்து அமர்ந்து கிடந்த அவன் ராகவ்.

கடந்த இரண்டு மணி நேரமாய் அவன் அமர்ந்து இருப்பதை கவனித்து வந்த டீ கடை மணியன்,

"இந்தாப்பா தம்பி.. யார் நீ? உனக்கு என்ன வேணும்? நானும் பாக்குறே கனவு கண்டுக்கிட்டு உக்காந்து இருக்குறது போல ஒரு மணிநேரமா எதையோ யோசிச்சிகிட்டு இருக்கியே? யார பாக்க வந்து இருக்க?" கேட்டார் அவர்.

அவரின் கேள்விக்கு சிறிதாய் ஒரு புன்முறுவல் மட்டும் புரிந்தவன், எழுந்து எதிரே இருக்கும் டீ கடைக்கு சென்று, எதையும் கேட்காமல் அவன் போக்கில் அங்கு இருந்த ஜாடி ஒன்றில் இருந்து தேன் மிட்டாயை எடுத்து உண்ணவும் துவங்கி இருந்தான்.. அதை கண்டு கோவம் கொண்ட மணியன்.,

"இந்தாப்பா, என்ன நாகரீகம் தெரியாத பையனா இருக்க? ஊர் திருவிழா நேரம்.. பழக்கம் இல்லாத ஆளா இருக்கியேனு கேக்குறே, இப்டி நீ பாட்டுக்கு கடையில வந்து நீயா எடுத்து தின்னா என்ன அர்த்தம்? நீ என்ன பைத்தியக்காரனா?" குரல் உயர்த்தியே வந்தது.

"நான் பைத்தியமா இல்லையானு அப்புறம் யோசிக்கலாம்.. நீங்க பைத்தியமா சுத்துனீங்களே பாமா அக்கா பின்னாடி.. அந்த கதை என்ன ஆச்சு? கல்யாணம் ஆச்சா? இல்ல இன்னும் காதல் முரளி மாதிரி தூரத்துல நின்னே பொழப்பு ஓடுதா?" குறும்பாய் கேட்டான் ராகவ்.

"பாமாவா? அது வந்து... " திணறியவர் பதில் சொல்லும் முன்பே முந்தி கொண்ட அவ்விடம் இருந்த மற்றொருவர்,

"அவன் எங்க சொன்னான்.. அவள பார்த்தாலே வெட்கம் வந்துடும் மாப்பிளைக்கு.. இவன் சொல்லுவான்னு காத்து இருந்து, அந்த பொண்ணே ஊரு மத்தியில இவங்க காதலை ஒடச்சி, இவனுக்கு தாலி கட்டி கூட்டிகிட்டு போச்சு?" என்றான் பழைய நினைவை புதுப்பித்து, மணியணை வாரிய படி.

அவன் கூறியதை கேட்டதில், கோவத்தில் சிவந்த முகம் இப்போது வெட்கம் பூத்து தலை குனிந்து அதை மறைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான் மணியன்.

"அது இருக்கட்டும் பெருமாள் அண்ணே, நீங்க எப்படி இன்னும் வருஷத்துக்கு ஒரு ரிலீஸ் பண்றீங்களா? இல்லை அத்தாச்சி பாவம்னு விட்டு வெச்சி இருக்கீங்களா?" பெருமாளை வாரினான் ராகவ்.

முதலில் அவன் கேள்விக்கு அசந்து போனாலும், பின் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் இருந்தவனை மாட்டிவிடும் பொருட்டு குதித்தான் மற்றொருவன்.

"அவனாவது பாவம் பாக்குறதாவது.. அவன் பாவம் பாக்கல.. அரசாங்கம் பாவம் பாத்து அந்த புள்ளைக்கு கருத்தடை பண்ணி அனுப்பிட்டாங்க" என்றான் அவ்விடம் இருக்கும் அனைவரும் சிரிக்கும் வண்ணம்.

"ஆமா, இவ்ளோ எல்லாம் கேக்குறீங்க.. தம்பி யாருனு இன்னும் சரியா தெரியலையே?" கூறினான் பெருமாள்.

"என்னை நல்லா பாருங்க.. இன்னும் என்னை யாருனு தெரியலையா?" கேட்டான் ராகவ் குறும்போடு.

"நான் பாமா கூட சேரனும்னு இந்த ஊர்லயே மனசார ஆசைப்பட்டது நீ தானே தம்பி.. உன்னை போய் மறப்போமா?" பேசியப்படி தோள் அணைத்து தன் அன்பை காட்டிய மணியன்,

"என்னல இன்னும் தெரியலையா? நம்ப ரகு தம்பி தான்.. இவருக்கு தானே ஒரு குடும்பமே இத்தன வருஷம் காத்து கிடக்கு" அறிவித்தான் மணியன்.

"அட தம்பி.. கடைசியா வந்துட்டியா? சின்ன பையான இருக்கும் போது கோச்சிக்கிட்டு போனவன்.. இப்போ தான் வர வழி தெரிஞ்சதா?" அவர் அவர் அன்பை பொழிய, சில நொடிகள் அதில் சிலிர்த்து கொண்டு இருந்தான் ராகவ்.

ஆயிரம் அன்பு மழை பொழிந்தாலும், அவன் விழி காண பூத்திருப்பது என்னவோ, அந்த தாமரையின் நிழலையாவது கண்டு விட மாட்டோமா என்று தான்.

"அவன் விழி தேடலை உணர்ந்து, புரிந்த மணியன், ராகவ் அருகே சென்று.

"தம்பி அன்னைக்கு நீ விட்டுட்டு போகும் போது இருந்தது போல இப்போ எதுவும் இல்ல.. எல்லாமே மாறிடுச்சு.. பழசை நெனச்சுக்கிட்டு ரொம்ப குழப்பிக்காத.. புதுசா எந்த பிரச்சனையையும் இழுத்து போட்டுக்காத" என்றவர், இயல்பாய் இருப்பதை போலவே அவனுடன் நடந்து கொண்டார்.

"நீங்க வந்து இருக்குறது வீட்டுக்கு தெரியுமா தம்பி? அழைச்சிட்டு போக யாருமே வரலியே?" கேட்டான் பெருமாள்.

"வரேன்னு சொல்லி இருந்தேன்.. ஆனா இன்னைக்கு வரேன்னு தெரியாதுணே.. வந்து இறங்குனதும், பழசை எல்லாம் யோசிச்சிகிட்டு இப்படியே உக்காந்துட்டேன்" என்றவன் முகத்திலோ ஒரு நொடி விரக்தி வந்து மறந்ததை கவனிக்க தவறவில்லை பெருமாள்.

"தம்பி நான் மறுபடியும் சொல்றேன்.. முன்ன மாதிரி இப்போ இங்க எதுவும் இல்ல.. நீ அவசர பட்டு எதையும் செஞ்சிடாத.. கொஞ்சம் நிதானமா இந்த ஊர்ல நடக்குறத எல்லாம் வேடிக்கை பாரு.. அப்போ தான் உனக்கு சில விஷயம் புரிய வரும்.. அதுவரை பொறுமையா இரு" என்றவர்.

"சரி வா தம்பி.. நானும் ஊருக்குள்ள தான் போறேன்.. உன்னைய கொண்டு போய் விட்டுடுறேன்" என்றார் பெருமாள்.

"இல்லணே.. நான் அப்படியே நடந்தே போய்க்கிறேன். நீங்க என்னோட பைகளை மட்டும் வீட்ல சேர்த்துடுங்க.. ஊர பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு.. நீங்க சொன்ன மற்றதை எல்லாம் பார்த்துகிட்டே அப்டியே வீட்டுக்கு வந்துடுறேன்.. வீட்ல தகவல் மட்டும் சொல்லிடுங்க" என்றான் தன் முடிவில் திடமாய்.

"அதானே.. உன்ன போய் மாத்த முடியுமா.. அன்னைக்கு பார்த்த அதே பிடிவாதம் இப்போவும் இருக்கு.. கொஞ்சம் கூட குறையல.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. இனி அந்த ஆத்தா தான் உனக்கு நல்லா வழிய காமிக்கணும்" கூறிய வாறே, ராகவின் பைகளுடன் புறப்பட்டார் பெருமாள்.

அது யார் அது ஊருக்குள்ள புது ஆத்தா? நம்ப ஊருலயும் போலி சாமியர்கள் புகுந்துட்டாங்களோ!!!" எண்ணியவன் அதே எண்ணத்தில் நடக்கவும் துவங்கி இருந்தான். அவனை தடுத்த மணியன்.,

"தம்பி, இருங்க தனியா போக வேணாம்.. எனக்கும் தோப்புல கொஞ்சம் வேலை இருக்கு.. நானும் கூட வரேன்" என்றவர் ராகவுடன் இணைந்து கொண்டு நடக்க துவங்கி இருந்தார்.

போகும் வழி மொத்தம், ஊரில் இருக்கும் மாற்றங்கள், அவன் விட்டு சென்ற நினைவுகள் என அனைத்தையும் கவனித்த படி நடந்து வந்து கொண்டு இருந்தவன் மனதில் மொத்தம் அவள் மட்டுமே நிறைந்து இருந்தாள்.

சில முறை அவளை பற்றி அறிய முயற்சித்தும் கூட, மணியன் அவனின் அந்த "அவள்" பேச்சை மட்டும் தவிர்த்து, வேறு திசையில் தன் பேச்சை கண்டு செல்லவே, அவரை அதிகம் வற்புறுத்த நினையாதவன், அதோடு அமைதி காத்து விட்டான்.

ஒரு முறை முயன்று, அவளின் பெயரை தன் நாவில் தரித்து உச்சரிக்க முயன்ற போது, அவனின் பேச்சு உணர்ந்த மணியன் பதறி.,

"தம்பி, தம்பி.. அந்த பேரை கூட சொல்லிடாதீங்க.. ஊருக்குள்ள அவுங்க பேரை சொல்ல வேணாம்" என்றார் அவர்.

"என்ன இது.. பெயரை சொல்லக் கூட அனுமதி இல்லாத நிலைமையிலா அவ இருக்கா? ஒருவேளை என்னால தான் அவ இந்த நிலைல இருப்பாளோ.. எப்படி இருக்கானு வேற தெரியலையே" நினைக்கும் போதே பதறியவனுக்கு, உடனே அவளை பார்த்து விட வேண்டும் என மனம் பதைக்க தான் செய்தது.

"இவங்க யாரும் நமக்கு உதவ போறது இல்ல.. இருந்தும் அவளை பத்தி நாம தெரிஞ்சிகிட்டு தான் ஆகணும்.. எப்படி?" யோசித்து கொண்டே வந்தவனுக்கு உதவ காலம் இலகுவாய் வாய்ப்பை உருவாக்கி வைத்திருந்தது.

மணியனின் தோப்பை நெருங்கும் போதே, அதன் எதிரே இருக்கும் தென்னை தோப்பில் ஆட்களின் கூட்டம் அதிகமாகவும், சலசலப்பும் கூட மிகுதியாகவும் காணப்பட்டது.

"என்ன அங்க ஒரே கூட்டம்.. என்ன ஆச்சு அங்க?" கேட்டான் ராகவ்.

"தெரியல தம்பி.. வாங்க போய் பார்ப்போம்" என்றவாறே மணியன் அவ்விடம் சென்று விவரம் விசாரிக்க,

"ஆத்தா தென்னை மரத்து மேல ஏறி இருக்காங்க.. இந்த வருஷம் அய்யனார் காட்டுல மழை தான்.. அவன் தோப்புல ஆத்தா இறங்கி இருக்கா.. இந்த வருஷம் மகசுல் அமோகமா இருக்க போகுது" என்றான் கூட்டத்தில் ஒருவன்.

"என்னது ஆத்தா தோப்புல இறங்கி இருக்கா? என்னடா புது பித்தலாட்டம்.. எவனோ ஒருத்தன் ஊர்க்காரங்களுக்கு நல்லா விபூதி அடிச்சி இருக்கான்.. எப்படி எல்லாம் நம்ப வெச்சி இருக்கான் பாரு" யோசித்தவன், அந்த தோப்பிற்குள் காலெடுத்து வைக்கும் போதே, மரத்தில் இருந்து ஏதோ ஒன்று நிலத்தில் அதிக சத்தத்துடன் விழவும், அதன் விளைவாய் அவ்விடம் மேலும் சலசலத்தது.
 
Top