Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 100

Advertisement

SHALU shalu

Well-known member
Member
தங்களது நிச்சயத்தார்த்த உடைகளை எடுக்க ஸ்வரூபன் மற்றும் தனது அன்னையும் ருத்ராக்ஷியின் ஊருக்குத் தான் வந்திருந்தனர்.

அவர்களோ, மிருதுளா மற்றும் வித்யாதரனைத் தங்களுடன் வருமாறு அழைத்த போது,”நீங்கப் போயிட்டு வாங்க. நாங்க எங்கப் பிள்ளைங்களைப் பார்க்கப் போறோம்” என்றவுடன்,

துணிக்குத் தேவையானப் பணத்தை அவர்களுக்கு அனுப்பி வைத்தார் சந்திரதேவ்.

அதன் பின்னர், கவிபாரதி மற்றும் ஸ்வரூபனுடன் சேர்ந்து ஜவுளிக் கடைக்குச் சென்றனர்.

“நாங்க தானே பொண்ணுக்குத் துணி எடுத்துக் கொடுக்கனும்?” என்று சந்திரதேவ்விடம் வினவினார் கவிபாரதி.

“ஆமாம் சம்பந்தி” எனவும்,

“அப்போ சரிங்க சம்பந்தி” என்று கூறியவரோ,

தனது வருங்கால மருமகளிடம்,”உனக்குப் பிடிச்ச சேலையைத் தயங்காமல் எடுத்துக்கோ ம்மா” என்று வலியுறுத்தினார் கவிபாரதி.

ஆனால், இயற்கையாகவே ருத்ராக்ஷிக்கு மிகவும் விலையுயர்ந்த ஆடையில் அவ்வளவாகப் பிடித்தம் இல்லை.

எனவே,”எனக்கு கிராண்ட் ஆக சேலை கட்டப் பிடிக்காது அத்தை. அதனால், விலையைப் பார்க்காமல் எனக்குக் கட்டுறதுக்கு நல்லா இருக்கிறா மாதிரியான புடவைகளை எடுத்துக்கிறேன்” என்று அவருக்கு வாக்கு கொடுத்தாள் ருத்ராக்ஷி.

“சரிம்மா” என்று அவளிடம் கூறி விட்டு,”இவளுக்கு நீ உதவி பண்றியா ம்மா?” என்று மஹாபத்ராவிடம் வினவினார் கவிபாரதி.

“கண்டிப்பாக ம்மா” என்று அவரிடம் சொல்லி விட்டு ருத்ராக்ஷியுடன் சேலை செக்ஷனுக்குச் சென்று விட்டாள் காஷ்மீரனின் மனைவி.

“அப்படியே இவனுக்கும் நீங்க உதவி பண்ணனும் தம்பி” என்று அவளது கணவனிடம் கேட்டுக் கொண்டார்.

“ஷூயர் ம்மா” என்றதோடு,”எங்க கூட வாங்க மாப்பிள்ளை” என ஸ்வரூபனைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு போனார்கள் காஷ்மீரன் மற்றும் சந்திரதேவ்.

அது போலவே, ருத்ராக்ஷி, மஹாபத்ரா மற்றும் கவிபாரதியும் சேர்ந்து சேலைகளை அலச ஆரம்பித்து விட்டனர்.

சிறிது நேரத்திலேயே, “உன் கலருக்கு இதெல்லாம் நல்லா இருக்கும். உனக்கு என்னப் பிடிச்சிருக்கு?” என்று தன் நாத்தனாரின் விருப்பத்தைக் கேட்டு நின்றாள் அவளது அண்ணி.

தன்னுடைய விருப்பமான நிறங்களை நினைவில் வைத்துக் கொண்டு அவற்றையெல்லாம் நன்றாக ஆராய்ந்து பார்த்தவளோ, மூன்று புடவைகள் தனது கருத்தைக் கவர்ந்து இழுத்ததால், அவற்றைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு,

“இந்த மூனும் எனக்குப் பிடிச்சிருக்கு. உங்களுக்கு ஓகேவான்னுப் பாருங்க” என்று கவிபாரதி மற்றும் மஹாபத்ராவிடம் வினவினாள் ருத்ராக்ஷி.

“உனக்கு ஓகே தானே? அப்பறம் என்ன? மூனுமே பார்க்க ரொம்ப நல்லா இருக்கே!” என்றார்கள் இருவரும்.

“அப்போ இதையே பில் போட எடுத்து வச்சிடலாம். அவங்ககிட்டேயும் காட்டிடலாம்”

“ஆங்! நான் அவருக்குக் கால் செஞ்சு வரச் சொல்லவா? இல்லைன்னா, வாட்சப்பில் ஃபோட்டோஸை அனுப்பி வச்சிடவா?” என்றாள் மஹாபத்ரா.

“ஃபோட்டோஸை அனுப்பிட்டுக் கால் பண்ணி சொல்லிடுங்க அண்ணி” என்று அவளிடம் சொல்லி விட்டாள் ருத்ராக்ஷி.

உடனே காஷ்மீரனுக்குக் கால் செய்து,”அந்த சேரீஸ் எல்லாம் நல்லா இருக்கான்னுப் பார்த்து சொல்லுங்க” என்று அவனிடம் சொன்னாள் அவனது மனைவி.

“இதோ பார்த்துட்டு சொல்லச் சொல்றேன் ம்மா” என்றவனோ, அந்த ஃபோன் காலைத் துண்டித்து விட்டுப் புகைப்படங்களைப் பார்வையிட்டார்கள் மூவரும்.

அதில் தெரிந்த மூன்று சேலைகளும் இவர்களுக்கும் பிடித்துப் போகவே,”இதையே எடுங்க. இந்தக் கலர்களுக்கு ஏத்த மாதிரி ஸ்வரூபனுக்கு டிரெஸ்ஸை எடுத்துடலாம்” என்று அவளுக்கு அழைத்துச் சொல்லி விட்டு வைத்தான் காஷ்மீரன்.

உடனே அதே நிறங்களில் தனக்கான சட்டைகளை ஆராய்ந்து பார்த்து எடுக்கத் தொடங்கி விட்டான் ஸ்வரூபன்.

அவனுக்கும், ருத்ராக்ஷிக்கும் உடைகளைத் தேர்ந்தெடுத்து முடித்தவுடன் தங்களுக்கும் துணிகளைத் தெரிவு செய்து முடித்திருந்தார்கள் மற்றவர்கள்.

இரண்டு இணைகளுடைய பார்வைகளும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்துக் கொண்டதும், அவர்களது உதடுகளும் மகிழ்ச்சியில் புன்னகைத்துக் கொண்டது.

இதுகாறும், உடைகளை எடுப்பதில் பிஸியாக இருந்த இருவரும், இப்போது தான், தங்களது ஜோடிகளைக் கண்டு ஆனந்தக் களிப்பில் மிதந்து கொண்டிருந்தனர்.

ஜவுளிகளைத் தேர்ந்தெடுத்து விட்டதும், அதற்குரிய பணத்தைக் கொடுத்தவர்கள், தங்களது வீட்டிற்குக் கவிபாரதி மற்றும் ஸ்வரூபனைக் கூட்டிச் சென்றனர் சந்திரதேவ், ருத்ராக்ஷி, காஷ்மீரன் மற்றும் மஹாபாத்ரா.

“இதையெல்லாம் உங்ககிட்ட இருக்கட்டும்” என்று தன்னுடைய மற்றும் மகனின் உடைகளை எல்லாம் ருத்ராக்ஷியின் வீட்டாரிடம் கொடுத்தார் கவிபாரதி.

“ஏன் அத்தை?” என்று அவரிடம் கேட்டான் காஷ்மீரன்.

“நாங்க எப்படியும் நிச்சயத்தார்த்தத்துக்கு இங்கே தானே வரப் போறோம்? அதான்” என்று அவனிடம் சொன்னார் ஸ்வரூபனின் அன்னை.

“சரிங்க” என்று அவர்களது உடைகள் அடங்கிய பைகளை எடுத்துக் கொண்டு போய் உள்ளே வைத்து விட்டு வந்தவளோ, அந்த வீட்டின் பொறுப்பான மருமகள் என்பதால், அவர்களுக்குக் குடிக்கக் குளிர்பானங்களை எடுத்து வந்து அவர்களுக்குத் தந்தவளிடம்,

“தாங்க்ஸ் ம்மா” என்றனர்.

“தாலிச்செயின் எப்போ செய்யக் கொடுக்கப் போறீங்க? நிச்சயம் முடிஞ்சதுக்கு அப்பறமா?” என்று அவர்களிடம் வினவினாள் மஹாபத்ரா.

“இல்லை ம்மா. இப்போ உங்க எல்லார்கிட்டயும் கேட்டுட்டுச் செய்யக் கொடுக்கலாம்னு நினைச்சோம்” என்று அவளிடம் தெரிவித்தார் கவிபாரதி.

“அப்போ உங்களோட தாலியோட டிசைன் எங்களுக்குக் காமிப்பீங்களா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் காஷ்மீரனுடைய மனைவி.

“அது ஊரில் இருக்கே ம்மா” என்று அவளிடம் உரைக்கவும்,

“அதை நீங்க இங்கே எடுத்துட்டு வர வேண்டாம் மா. ஆனால், ஃபோட்டோ இருந்தால் காட்டலாமே?” என்று விடாமல் அவரிடம் கேட்டவளிடம்,

“என் பையன் கிட்ட இருக்கும்ன்னு நினைக்கிறேன் ம்மா” என்று கூறி விட்டு,

“டேய்! உன் ஃபோனில் இருக்கா?” எனத் தன்னுடைய மகனிடம் வினவினார் கவிபாரதி.

“இல்லையே ம்மா” என்று அவருக்குப் பதிலளித்தான் ஸ்வரூபன்.

“ப்ச்!” என்று சுனங்கிப் போய் விட்டாள் மஹாபத்ரா.

அதைக் கண்ட அவனுடைய கணவனோ,”அந்தத் தாலியைப் பார்க்கிறதுக்கு ருத்ராக்ஷியே எந்த ஆர்வமும் காட்டலை! நீ ஏன் ம்மா இவ்வளவு ஆர்வமாக இருக்கிற?” என அவளிடம் கேட்டுச் சிரித்தான் காஷ்மீரன்.

“எல்லாம் ஒரு ஆசை தான் ங்க‌. அதை நான் ருத்ராவும் பாத்துக்கலாம்ல?” என்றாள் அவனது மனைவி.

“ஆமாம் ண்ணா. எனக்கு இதிலெல்லாம் நிறைய ஆசை இருக்கு. ஆனால் வெளிப்படையாக கேட்கத் தயக்கம்! ஆனால், அண்ணியைப் பாருங்க. அவங்க நினைச்சதைக் கேட்டுடறாங்க, சொல்லிடறாங்க!” என்று மஹாபத்ராவைப் பாராட்டிப் பேசினாள் ருத்ராக்ஷி.

“என்னைப் பாராட்டிப் பேசினதுக்கு நன்றி டா” என அவளுக்கு நன்றி தெரிவித்தாள் மஹாபத்ரா.

“வீட்டுக்குப் போனதுமே முதல் வேளையாக அந்த தாலியை ஃபோட்டோ எடுத்து உங்களுக்கு அனுப்புறோம். ஓகேவா சிஸ்டர்?” என்று அவளுக்கு உறுதி அளித்தான் ஸ்வரூபன்.

“தாங்க்ஸ் ப்ரதர்” என்று அவனிடம் கூறினாள் காஷ்மீரனின் மனைவி.

“கல்யாணத்தன்னைக்கு மஞ்சள் தாலி தானே கட்டுவாங்க?” என்று தன் ஐயத்தைக் கேட்டார் சந்திரதேவ்.

“ஆமாம் சம்பந்தி. ஆனால், தாலிப் பிரிச்சுக் கோர்க்கிற சடங்குக்கு இப்போவே செஞ்சு வச்சிடலாம்!” என்று அவரிடம் கூறி விட்டார் கவிபாரதி.

காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவின் திருமணமோ, வெகு விமரிசையாக நடந்ததைப் போல, தனது செல்ல மகளின் கல்யாணமும் அதே மாதிரி, சுபமாக நடைபெற வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் ஸ்வரூபனின் வீட்டாரை வழியனுப்பி வைத்தார் சந்திரதேவ்.

ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியின் திருமணத்திற்கு மஹாபத்ராவின் சொந்த மண்டபத்தையே உபயோகித்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டார்கள் பிரியரஞ்சன் மற்றும் கனகரூபிணி.

இந்தச் சமயத்தில், தனது தாயைப் பற்றிய நினைவுகளைத் தன் மனதிலிருந்து தூர்வாரத் தொடங்கி விட்டாள் ருத்ராக்ஷி.

- தொடரும்
 
அம்மாடி ருத்ராக்ஷி போதும்மா மஹாவ ரொம்ப புகழாதீங்க பாவம் பிள்ள யதார்த்தமாயிருக்கா,அவள அவ போக்குல free ஆக இருக்க விடுங்க.😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
அம்மாடி ருத்ராக்ஷியோட போதும்மா மஹாவ ரொம்ப புகழாதீங்க பாவம் பிள்ள யதார்த்தமாயிருக்கா,அவள அவ போக்குவது free ஆக இருக்க விடுங்க.😍😍😍😍😍😍😍😍
Haha adhe dha sis... Thank you so much ❤️❤️❤️
 
Top