Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 109

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அவர்களது பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது. இன்னொரு புறம் அந்தக் கடையில் இருந்த அனைத்து புதுவித டிசைன்கள் கொண்ட சேலைகளை ஆர்வமாகப் பார்வையிட்டுக் கொண்டும், அளவளாவிக் கொண்டும் இருந்தார்கள் கனகரூபிணி, மஹாபத்ரா, ருத்ராக்ஷி மற்றும் கவிபாரதி.

இதில், ஸ்வரூபனின் அன்னைக்கு ஈடுபாடு இருந்தாலும் தனக்கு அவ்வளவாகப் புடவைகளைத் தேர்ந்தெடுக்கும் கலைத் தெரியாது என்று கூறி ஒதுங்கிக் கொள்ளப் பார்த்தார்.

அதைக் கேட்டதும்,”அப்படியா அத்தை? இதை நாங்க நம்பனுமா?”
என்று அவரிடம் பொய்க் கோபத்துடன் கேட்டாள் ருத்ராக்ஷி.

“ஏன் ம்மா?” எனத் தன் வருங்கால மருமகளிடம் பரிதாபமாக வினவினார் கவிபாரதி.

“அப்பறம் என்னத்தை? உங்களோட சேலையெல்லாம் எவ்வளவு அழகாக இருக்கும்? இதோ இப்போ கட்டி இருக்கிறது கூட எவ்வளவு நல்ல டிசைனாக இருக்குன்னு நாங்க எல்லாரும் பேசிக்கிட்டு இருக்கோம். நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்களே?” என்கவும்,

“உண்மையிலேயே எனக்கு இதெல்லாம் தெரியாது ம்மா. என் பையன் தான் கடைக்குக் கூட்டிட்டுப் போய் சேலை எடுக்கச் சொல்லுவான். நான் எனக்குப் பார்த்ததும் நல்லா இருக்கிறதை எடுத்துக்குவேன்” என்று வெள்ளந்தியாக கூறிய மனுஷியை மற்ற மூவரும் கனிவுடன் பார்த்தனர்.

“இதைத் தான் நாங்களும் சொன்னோம் அத்தை. நமக்குப் பிடிச்சதை எடுத்தால் அது கண்டிப்பாக நமக்கு ஏத்த மாதிரியாகத் தான் அமையும்” என்றாள் ருத்ராக்ஷி.

அதைக் கேட்டுப் புன்னகைத்தவரோ,”உண்மை தான் ம்மா” என்று தானும் அதை ஒப்புக் கொண்டார் கவிபாரதி.

“அப்போ வாங்க. எனக்குப் புடவையைச் செலக்ட் பண்ணிக் கொடுங்க” என்று அவரைத் தன்னுடன் இணைத்துக் கொண்டாள்.

அவளுக்கு மட்டும், ஒரு தனி நிறத்தில் சேவையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து விட்டுத், தங்களுக்குத் தேவையானப் புடவைகளை எடுப்பதில் ஒரு மாற்றம் செய்து கொண்டார்கள் மற்றவர்கள்.

“என்னம்மா? என்னோட பிளான் எப்படி?” என்று தனது தாயிடம் கேட்டாள் மஹாபத்ரா.

“ம்ம்! பேஷ் பேஷ்! இதையே செய்வோம்” என்று அவளைப் பாராட்டினார் கனகரூபிணி.

“ஹூம்! ஹூம்! அப்போ நான் மட்டும் தனியாகத் தெரியுவேனா? நீங்க எல்லாரும் ஒன்னாக, ஒரே மாதிரி இருப்பீங்களா?” என்று அவர்களிடம் அடம் பிடித்துப் பேசினாள் ருத்ராக்ஷி.

“இந்தாம்மா! ஏய்! நீ தானே கல்யாணப் பொண்ணு? அப்போ நீ மட்டும் தான் மேடையில் தனியாகத் தெரியனும்!” என்று அவளுக்கு வலியுறுத்திக் கூறினாள் மஹாபத்ரா.

“ஆமாம் அண்ணி. அதுக்காக நான் எப்பவும் அப்படியே இருக்கப் போறேன். என் மேரேஜ் முடிஞ்சதும் நானும் உங்களோட ஜோதியில் இணைஞ்சுருவேன்ல? அப்போ இந்த மாதிரி சேலைக் கட்டிக்கிறேன். ப்ளீஸ்! நானும் இதே மாதிரி ஒன்னு எடுத்துக்கப் பர்மிஷன் கொடுங்க” என்று அவர்களிடம் வேண்டிக் கேட்டுப் பார்க்கவும்,

“அவ கேட்கிறதும் நியாயமாகத் தானே இருக்கு ங்க. என்னோட மருமகளுக்காக கொஞ்சம் இறங்கி வாங்களேன்” என்று கனகரூபிணி மற்றும் மஹாபத்ராவிடம் இறைஞ்சினார் கவிபாரதி.

“ஹைய்யோ! நீங்க ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகுறீங்க? நாம இவளுக்கும் நம்மளோடது மாதிரியே சேலை எடுத்துடலாம்” என்று அவருக்கு உறுதி அளித்தனர் தாயும், மகளும்.

“ஹேய் ஜாலி! தாங்க்யூ அத்தை” என்று ஸ்வரூபனின் அன்னைக்கு நன்றி தெரிவித்தாள் ருத்ராக்ஷி.

அதன்பின், மிருதுளாவிற்கும் கால் செய்து இந்த விஷயத்தைக் கூறி அவரைத் தங்களிடம் வருமாறு அழைக்க, அவரும் அங்கே வந்து சேர்ந்து விட்டிருந்தார்.

அவர்களுடன் வந்திருந்த ஊர் மக்களில் சிலர் அங்கே தான் தங்களுக்கானப் புடவைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அதனால் இவர்களோ சத்தமில்லாமல் தங்களுக்குப் பிடித்தமான நிறத்தில் ஐந்து சேலைகளை எடுத்து வைத்துக் கொள்ளவும், அதை அங்கேயிருந்த யாரும் அறிந்திருக்கவில்லை.

அதுவும் நன்மைக்கே என்று இருந்து விட்டனர் ஐவரும்.

இதை மஹாபத்ராவின் மூலமாக அறிந்து கொண்ட காஷ்மீரனோ,”அவங்க மட்டும் தான் ஒரே கலரில் டிரெஸ்ஸை எடுக்கலாமா? நாமளும் எடுப்போம்! வாங்க” என்று வித்யாதரனையும் இணைத்துக் கொண்டு ஆண்களுக்கான ஆடைகள் பிரிவிற்குச் சென்று தங்களது மேற்சட்டைகளை ஒரே நிறத்தில் எடுத்துக் கொண்டனர் இந்த ஆண்கள் ஐந்து பேரும்.

இப்படியாக, அந்தத் துணிக்கடைக்குத் தங்களுடன் வந்திருந்த அனைவரும் அவரவருக்குப் பிடித்தமான உடைகளை அவர்களுடைய குடும்பத்திற்கும் சேர்த்து எடுத்துக் கொண்டதை அறிந்த சந்திரதேவ் மற்றும் ஸ்வரூபனோ, அதற்குரிய பணத்தைப் பங்கிட்டுக் கட்டி முடித்துக் கடையை விட்டு மகிழ்ச்சியுடன் வெளியேறினர்.

ஊர்மக்கள் சிலரை அந்த ஊரின் பொதுவான இடத்தில் இறங்கி விட்டு விட்டுத் தங்களது வீட்டிற்குச் சென்றார்கள் ருத்ராக்ஷியின் வீட்டினர்.

தங்களுக்கு உபசரிப்பாக வழங்கிய பழச்சாறுகளுடன் ஆயாசமாக அமர்ந்து கொண்டவர்களோ,”எல்லாம் நல்லதாகவே நடந்து முடிஞ்சது! கடவுளுக்கு நன்றி!” என்று மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டார் சந்திரதேவ்.

“ஆமாம் சம்பந்தி. நீங்க சொல்றது சரி தான்!” என்று அதை ஏற்றுக் கொண்டார் கவிபாரதி.

“நாங்களும் இவங்களோட நிச்சயத்துக்கு எங்கப் பிள்ளைங்களை ஹாஸ்டலில் இருந்து கூட்டிட்டு வரனும்” என்று அனைவருக்கும் அறிவித்தார் வித்யாதரன்.

“ஆமாம் ண்ணா. ஏன் அவ்வளவு நாள் வெயிட் பண்றீங்க? நாளைக்கு இல்லைன்னா, நாளா நாளைக்கே போய் அவங்களைக் கூப்பிட்டு வந்துருங்க” என்று அவருக்கு அறிவுறுத்தினான் ஸ்வரூபன்.

“ம்ம். தம்பி சொன்ன யோசனை எனக்குச் சரியாகப்படுதுங்க” எனத் தன் கணவனிடம் சொன்னார் மிருதுளா.

அவர்கள் இருவருக்குமே தங்களது பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால்,”சரிம்மா. நாம ரெண்டு பேரும் போயே கூட்டிட்டு வந்துடலாம்” என உடனே அந்த யோசனைக்குச் சம்மதம் தெரிவித்து விட்டார் வித்யாதரன்.

“அடுத்து என்னப் பண்ணப் போறோம்?” என்று அனைவரிடமும் வினவினார் பிரியரஞ்சன்.

“ஸ்வரூபன் அப்பறம் ருத்ராக்ஷியோட நிச்சயத்தார்த்த வேலையை ஆரம்பிக்கிற வேலை தான் மாமா!” என்று அவரிடம் உற்சாகமாக மொழிந்தான் காஷ்மீரன்.

“ஆமால்ல” என்று கூறியவுடன் அவனைப் போலவே மற்றவர்களுக்கும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது.

அதற்குப் பிறகு,”நாளைக்குச் சாயந்தரம் ஊருக்குக் கிளம்பலாமா?” என்று மெல்லப் பேச்சை எடுத்தார் கனகரூபிணி.

அவருக்கு இந்த ஊரில் தங்குவதில் எந்தவித சிரமமும் இல்லை தான், ஆனால், இப்படியே எத்தனை நாட்கள் தான் இங்கேயே இருப்பது? தங்களது சொந்த ஊருக்குப் போனால் தானே அவர்கள் அனைவரும் அங்கே உள்ள வேலைகளைப் பார்க்க முடியும்?

எனவே தான், இவ்வாறு வினவி விட்டுப் பதிலிற்காகக் காத்திருந்தார் கனகரூபிணி.

- தொடரும்
 
Top