Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 115

Advertisement

SHALU shalu

Well-known member
Member
“ருத்ரா!” என்று அவளது அறைக் கதவைத் தட்டியவுடன்,

“யாரு?” என்று உள்ளேயிருந்து வினவினாள் ருத்ராக்ஷி.

“நாங்க தான்!” என ஒருவருடைய குரல் மட்டும் வரவும் இப்போது வந்திருப்பது யார், யாரென்று அவளுக்குப் புரிந்து விட்டது.

அதனால்,”உள்ளே வாங்க” என்று அவர்களுக்கு அனுமதி அளித்தாள் ருத்ராக்ஷி.

அறையினுள் நுழைந்தவுடன், அங்கே, ருத்ராக்ஷி, மஹாபத்ரா மற்றும் அவளது அன்னையும் இருப்பதைக் கண்டு, அவர்களுக்கு முதலில் வணக்கம் தெரிவித்து விட்டு,”காலையில் வந்தவுடனேயே உன்னைப் பார்த்துப் பேசனும்னு நினைச்சோம். அப்பறம் சாப்பிடப் போயிட்டோம். அதுக்கப்புறம், நீ ஸ்டேஜில் ஏறிட்டதால் அப்பவும் பேச முடியல. நல்லவேளையாக, இப்போ சான்ஸ் கிடைச்சிருச்சு” என்றனர்.

“ஓஹ்! நீங்க எல்லாரும் என்னைப் பார்க்க வந்ததுக்குத் தாங்க்ஸ்” என்று கூறிப் புன்னகைத்தாள் ருத்ராக்ஷி.

“இருக்கட்டும், இருக்கட்டும்” என்று கூறிச் சிரித்தவர்கள், அவளிடமும், அவளுடன் இருந்தவர்களிடமும் பேசத் தொடங்கி விட்டனர்.

“இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்கீங்களா மாப்பிள்ளை?” என்று தன்னருகே அமர்ந்தவனிடம்,

“ஆமாம் சார்!” என்றான் ஸ்வரூபன்.

அவனது வார்த்தைகளில் இருந்த அழுத்தம் அவனுடைய கோபத்தைக் காஷ்மீரனுக்கு நன்றாக உணர்த்தியது.

எனவே,”அதையெல்லாம் அப்படியே மறந்துடனும். இல்லைன்னா, உங்களால் இந்த நிச்சயத்தை என்ஜாய் பண்ண முடியாது!” என்று அவனைச் சமாதானப்படுத்த முயன்றான் ருத்ராக்ஷியின் தமையன்.

“ம்ம். ஆனால், அவங்களுக்கு எப்படி இப்படியெல்லாம் பேசத் தோனுது?” என்றவனிடம்,

“இதுக்கே இப்படி கோபப்பட்றீங்களே? என்னையும், என் தங்கச்சியையும் இதை விடப் பேசியிருக்காங்க! ஸ்கூல் நடிக்கும் போது இருந்து, இப்போ வரைக்கும் அது தொடர்ந்துட்டுத் தான் இருக்கு! அப்போ எங்க நிலைமையை யோசிச்சுப் பாருங்க!” எனக் கூறிப் புரிய வைத்தான் காஷ்மீரன்.

“ம்ஹ்ம். எனக்குப் புரியுது சார்!” என்று அவனிடம் உரைத்தான் ஸ்வரூபன்.

“அதான் சொல்றேன் மாப்பிள்ளை. நீங்க இதை விட்டுத் தள்ளுங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் ஸ்டேஜூக்குப் போகனும்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது,

அறைக்குள் வந்த வித்யாதரன்,“என்னாச்சு?” என்று அவர்களிடம் வினவவும்,

“நிச்சயதார்த்த மோதிரங்களை மாத்துறதுக்கு முன்னாடி ஒரு பிரச்சினை நடந்துச்சு ண்ணா” என்றபடியே, நடந்த சம்பவத்தை அவரிடம் தெரிவித்தான் காஷ்மீரன்.

“அதனால் தான், டென்ஷனாக இருக்கியா?” என்று கேட்டவாறே தானும், அவனுடன் சேர்ந்து ஸ்வரூபனைச் சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கினார் வித்யாதரன்.

அதன் பின், மணமகனைப் பார்க்க அவனது ஊரில் இருக்கும் நூலகத்தின் உரிமையாளர் துரைமுருகனும் வந்து விடவே அவருடன் அளவளாவத் தொடங்கி விட்டார்கள் மூவரும்.

பெரியவர்கள் அனைவரும் விழாவிற்கு வந்தவர்களைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்தார்கள். ஆகவே, அவர்களுக்கு நின்று பேசக் கூட நேரமில்லாமல் போயிற்று.

“அண்ணி! நீங்க எல்லாரும் இன்னும் சாப்பிடாமல் இருக்கீங்க! அண்ணா, அப்பா, அத்தை, உங்க அப்பா, அம்மா இவங்க எல்லாரையும் கூட்டிட்டுப் போய் முதல்ல சாப்பிட்டு வாங்க. நீங்க வந்ததுக்கு அப்பறம் நாங்க மேடைக்குப் போறோம்” என்று தன்னுடைய அண்ணிக்கு அன்புக் கட்டளை விடுத்தாள் ருத்ராக்ஷி.

“சரிம்மா” என்றவளைத் தனித்து விடக் கூடாது என்பதால், மிருதுளாவையும், அவரது பிள்ளைகளையும் தனது நாத்தனாருக்குத் துணையாக இருக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டு அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டவளோ,

ருத்ராக்ஷி கூறியதைப் போலவே, அனைவரையும் அழைத்துக் கொண்டு உணவருந்தும் இடத்திற்குச் சென்று விட்டாள் மஹாபத்ரா.

அவர்கள் வந்த பிறகு தான், ஸ்வரூபனும், ருத்ராக்ஷியும் மீண்டும் மேடையில் நின்று அனைவருக்கும் காட்சி அளித்தனர்.

இப்போது தனக்கிருந்த ஆத்திரம், சினம் தணிந்து, மனம் குளிரத் தன்னவளின் அருகில் நின்றிருந்தான் ஸ்வரூபன்.

அவனது முகத்திலிருந்த புன்னகையைக் கண்டதும் தானும் முகம் மலர்ந்து போனாள் ருத்ராக்ஷி.

அதற்குப் பிறகு, அந்த விழாவின் இறுதிக் கட்டத்தில் அனைத்து வெளியே இருந்து வந்த விருந்தினர்களும், அனைவரிடம் இருந்தும் விடைபெற்றுச் சென்றிருந்தனர்.

இப்போது மண்டபத்தில் தான் தங்கி இருந்த ஊர் மக்கள் மற்றும் தன்னிடம் பயிற்சி பெறும் பெண்கள் மட்டுமே இருக்கவே, தான் ஏற்கனவே முடிவு செய்து வைத்ததைப் போன்று, அவர்களை ஒரு இடத்தில் கூடி இருக்கச் சொன்னாள் ருத்ராக்ஷி.

அவள் என்னச் சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்க ஆவலாக இருந்தனர் விஷயத்தை அறியாதவர்கள்.

உடனே தன்னுடைய அறையிலிருந்து சில பொருட்கள் அடங்கிய பைகளை எடுத்து வந்து,”என்னோட நிச்சயதார்த்தத்துக்கு வந்த உங்க எல்லாரையும் நான் வெறுங் கையோட அனுப்பி வைச்சுடுவேனா என்ன?” என்று அவர்களிடம் கூறிப் புன்சிரிப்பை உதிர்த்தாள் ருத்ராக்ஷி.

‘அந்தப் பையில் என்ன இருக்கு?’ என்று ஆர்வத்துடன் அதைப் பார்வையிட்டனர்.

அவர்களைக் காக்க வைக்காமல், அந்தப் பையிலிருந்ததை வெளியே எடுத்து அனைவருக்கும் காண்பித்தாள் ருத்ராக்ஷி.

“ஹேய்! இது எல்லாமே சூப்பரா இருக்கு!” என்று தங்கள் விழிகளை விரித்து ஆச்சரியத்துடன் கூறினார்கள்.

“ம்ம். உங்க எல்லாருக்கும் கொடுக்கிறதுக்காகத் தான், நான் இதையெல்லாம் செஞ்சு வச்சேன்” என்று அவர்களுக்கு விளக்கிக் கூறிக் கொண்டே,

தன்னிடமிருந்தவற்றை அவர்கள் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து அளித்தாள் ருத்ராக்ஷி.

அதைக் கண்டதும், அனைவரது கண்களும் வியப்பில் விரிந்தது.

“என்னம்மா இவ்வளவையும் எப்போ, எப்படி? செஞ்சு முடிச்ச?” என்ற கேள்வியை முன் வைத்தனர் அனைவரும்.

“ஊருக்குப் போன அப்போ இருந்து இந்த வேலையாகத் தான் இருந்தேன் க்கா” என்று கூறிப் புன்னகை புரிந்தாள் ருத்ராக்ஷி.

“எங்களுக்காகவா?” என்று அவளிடம் நெகிழ்வான குரலில் வினவினர்.

“ஆமாம். உங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதால் தான், எனக்கு அதிகமான மன நிம்மதி கிடைச்சிருக்கு” என்றவளை, மரியாதையுடன் பார்த்தார்கள்.

“ரொம்ப நன்றி ம்மா!” என்று தங்களுடைய பரிசுப் பொருட்களைப் பரவசத்துடன் பார்த்து மகிழ்ந்து போயினர்.

இப்படியாக அனைவருடைய மனமும் சந்தோஷத்தில் நிறைந்திருக்கும் வேளையில், தன்னைப் பாராட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டுத் தன்னுடைய குடும்பத்தைப் பார்த்தாள் ருத்ராக்ஷி.

அவர்களும்,’அருமை!’ என்று அவளைப் பாராட்டினர்.

அந்தப் பரிசுப் பொருட்களுடனும், நிறைவான மகிழ்ச்சியோடும் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கிளம்பினர் ருத்ராக்ஷியின் விருந்தினர்கள்.

அதன் பிறகுத், தன்னவளைக் கனிவுடன் நோக்கிய ஸ்வரூபனோ,’நீ எனக்கு மட்டும் இன்னும் எந்தப் பரிசையும் கொடுக்க மாட்டேன் என்கிறாயே?’ என்ற ஏக்கம் நிறைந்த கேள்வியுடன் அவள் முன்னால் நின்றான்.

‘நம்முடைய திருமணத்திற்குப் பிறகு உங்களுக்காக நிறையப் பரிசுகள் காத்திருக்கிறது!’ என்ற உள் அர்த்தத்தைக் கொண்ட பாவனையுடன் அவனைச் சமாதானம் செய்யத் தொடங்கி விட்டாள் ருத்ராக்ஷி.

அதனால் அவனும் கொஞ்சம் அமைதியடைந்து விட,

“எங்களுக்கும் கிஃப்ட்ஸ்ஸை எடுத்து வச்சி இருக்கியா ம்மா?” என்று அவளிடம் கேட்டார் கனகரூபிணி.

“ஆமாம் அத்தை. நீங்க புறப்படும் போது கண்டிப்பாக தர்றேன்” என்று அவருக்கு வாக்கு கொடுத்தாள் ருத்ராக்ஷி.

அன்றிரவு மட்டும் அங்கே தங்கிக் கொண்டு காலையில் கிளம்பி வீட்டிற்குச் செல்வதாக முடிவெடுத்து இருந்தார்கள்.

அதனால், தாங்கள் அனைவரும் ஓய்வெடுத்துக் கொள்வதற்காக அறைகளுக்குள் நுழைந்து கொண்டார்கள்.

விருந்தினர் இல்லத்திற்குச் சென்ற ருத்ராக்ஷியின் விருந்தாளிகள் அவள் கொடுத்தப் பரிசைப் பற்றித் தான் அன்றைய தினம் முழுவதும் உரையாடிக் கொண்டிருந்த போது,

“நாம எத்தனை தடவை ருத்ராவைப் பத்தி ஏதாவது புரளி பேசிட்டே இருப்போம். ஆனாலும், அவ நமக்குப் பாடம் சொல்லித் தர்றது மட்டுமில்லாமல், இப்படி நம்மளை கௌரவிக்கவும் செய்திருக்கா!” என்று குற்ற உணர்வுடன் பேசினர்.

அதை அவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளத் தானே வேண்டும்?

அந்த எண்ணத்துடனேயே அடுத்த நாள் காலையில் ருத்ராக்ஷி மற்றும் அவளது குடும்பத்தாரிடம் சொல்லிக் கொண்டு தங்களது ஊருக்குக் கிளம்பிச் சென்று விட்டார்கள்.

தாங்கள் இருவரும் ஊருக்குப் போவதற்கு முன்னர், ருத்ராக்ஷியின் வீட்டிற்குப் போயினர் கவிபாரதி, ஸ்வரூபன் மற்றும் மிருதுளா, வித்யாதரன் மற்றும் அவர்களது பிள்ளைகள். அவர்களுடன் மஹாபத்ராவின் பெற்றோரும் இருந்தனர்.

“உங்களுக்காக செஞ்சு வச்ச மெழுகுவர்த்திகளை எடுத்துட்டு வர்றேன்” என்று கூறிக் கொண்டே தன்னறைக்குச் சென்று சிறிது நேரத்திற்குப் பின் வந்தவளோ,

அவற்றைக் கவிபாரதி, மஹாபத்ரா, கனகரூபிணி மற்றும் மிருதுளாவிடம் கொடுத்தாள் ருத்ராக்ஷி.

அந்த தருணத்தில், அவளது செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வரூபனுக்கோ, இவ்வளவு நற்குணங்கள் கொண்ட பெண்ணவளுக்கு, ஏற்ற ஆண்மகனாகத், தான் திகழ்வோமா? என்ற ஐயம் தனக்குள் எழுந்ததை அவனால் மறுக்க முடியவில்லை.

- தொடரும்

 
ஸ்வரூபா அதெல்லாம் ருத்ராக்ஷியோட உனக்கு கல்யாணம் முடிந்தவுடன் வாழ்க்கை தானா பயணம் கூட்டிட்டு போகும். அப்போ எந்த சந்தேகமும் இல்லாம நீ சந்தோசமாக அவளோட பயணிப்ப.
 
ஸ்வரூபா அதெல்லாம் ருத்ராக்ஷியோட உனக்கு கல்யாணம் முடிந்தவுடன் வாழ்க்கை தானா பயணம் கூட்டிட்டு போகும். அப்போ எந்த சந்தேகமும் இல்லாம நீ சந்தோசமாக அவளோட பயணிப்ப.
Correct sis ... Thank you so much ❤️❤️
 
Top