Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 121

Advertisement

SHALU shalu

Well-known member
Member
“நீங்க இங்கே வந்து தங்குறதுக்கு நல்ல இடமாகப் பார்த்து வச்சிருக்கோம் சார். அதுவும் கல்யாண மண்டபத்துக்குப் பக்கத்தில் தான் அந்த இடம் இருக்கு” என்று தன் செல்பேசியில் காஷ்மீரனிடம் பேசிக் கொண்டு இருந்தான் ஸ்வரூபன்.

“அப்படியா? நாங்க முதல்ல வந்தப்போ தங்குனோமே? அங்கேயே இந்த தடவையும் இருந்துக்கிறோம் மாப்பிள்ளை. உங்களுக்கு எதுக்குச் சிரமம்?” என்று அவனுக்குச் சொல்லிப் பார்த்தான் ருத்ராக்ஷியின் தமையன்.

“அப்படியெல்லாம் விட முடியாது சார். நாங்க அங்கே வரும் போது எங்களை எப்படியெல்லாம் பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறீங்க? இப்போ உங்களைப் பார்த்துக்கிற சந்தர்ப்பம் எங்களுக்குக் கிடைச்சிருக்கு. அதுக்கு நீங்க எந்த மறுப்பும் சொல்லக் கூடாது!” என்று அவனிடம் கறாராக உரைத்தவனிடம்,

“சரிங்க மாப்பிள்ளை. உங்க இஷ்டம்” என்று அவனிடம் சொல்லி விட்டான் காஷ்மீரன்.

அவர்கள் தங்களது ஊருக்கு வரும் போது அவர்கள் அனைவரையும் எங்கே தங்க வைக்க வேண்டும் என்பதை முடிவெடுத்து விட்டு அந்தத் தகவலை ருத்ராக்ஷியின் அண்ணனிடம் தெரிவித்துக் கொண்டிருந்த ஸ்வரூபனோ,

“நீங்க எப்போ கிளம்புறீங்க?” என்று அவனிடம் வினவ,

“நாளைக்குச் சாயந்தரம் கிளம்பிருவோம் மாப்பிள்ளை. காலையிலேயே வரலாம் தான், ஆனால், மஹாபத்ராவோட ஆஃபீஸில் இன்ஃபார்ம் பண்ணனும். அதான்” என்றான் காஷ்மீரன்.

“ஓகே சார். நீங்க எல்லாரும் கிளம்பும் போது சொல்லுங்க” என்று கூறி, மற்ற சில விவரங்களையும் அவனிடம் பகிர்ந்து விட்டு அழைப்பை வைத்தான் ஸ்வரூபன்.

அதற்குப் பிறகுத் தன்னுடைய குடும்பத்திடம் இந்த விஷயத்தைச் சொல்லி விட்டுத் தன் மனைவியிடம் அவளது பெற்றோர் நலங்கு அன்றே வருவார்களா? அல்லது திருமணத்தன்று வரும் நோக்கமா? என விசாரித்தவனிடம்,

“அவங்களையும் நம்மக் கூடயே கூட்டிட்டுப் போகலாமா ங்க?” என்று கேட்டு நின்றாள் மஹாபத்ரா.

“சரிம்மா. அவங்களோட விருப்பத்தையும் கேட்டுக்கோ” என்று அவனுக்குச் சம்மதம் தெரிவித்து விட்டான் காஷ்மீரன்.

உடனே தன் தந்தைக்குக் கைப்பேசியில் இருந்து அழைப்பு விடுத்து,”அப்பா! ருத்ராக்ஷியோட கல்யாணத்தை அட்டெண்ட் பண்றதுக்கு எப்போ ஊருக்கு வர்றீங்க?” என்று அவரிடம் வினவினாள் மஹாபத்ரா.

“நாங்களும் கல்யாணத்துக்கு முந்தைய நாளே வந்தால் தானே நல்லா இருக்கும் மா? அதனால், அடுத்த வாரம் கிளம்பி வந்துட்றோம்” என்க,

“அப்படியா ப்பா? சரி” என்று தனது குரலில் சுரத்தே இன்றி பதிலளித்தவளிடம்,

“என்னாச்சு டா? இதில் நீங்க ஏதாவது பிளான் செய்து இருந்தீங்களா?” என்று அவளிடம் கனிவுடன் கேட்டார் அவளது தந்தை.

“ஆமாம் ப்பா” என்றவளோ, ஊருக்குச் செல்வதற்காகத் தாங்கள் போட்டு வைத்தத் திட்டத்தை அவரிடம் உரைத்தாள் மஹாபத்ரா.

“ஓஹ்! இது தான் விஷயமா?” என்று அவளிடம் வினவிய பிரியரஞ்சனோ,

“இதைப் பத்தி நான் உங்க அம்மாகிட்ட பேசிட்டு சொல்லவா?” என்று கேட்கவும்,

“சரிங்க ப்பா” என்றவளது குரலில் இப்போது தான் காணாமல் போன துள்ளல் மீண்டு வந்ததைப் புரிந்து கொண்ட அவளது தந்தையும் கூட,

”இப்போ உடனே கேட்டுட்டுச் சொல்றேன் டா” என்று அவளிடம் கூறியவர், அந்த அழைப்பைத் துண்டித்து விட்டுத்,

தன்னுடைய மனைவியைத் தேடிச் சென்று,”நம்மப் பொண்ணு ஃபோன் பண்ணினா ம்மா” என்றவர், அவரிடம் தகவலைச் சொல்லவும்,

“அவங்களே சொன்னதுக்கு அப்பறம் இதில் நமக்கு என்னப் பிரச்சினை வந்துடப் போகுதுங்க? அவங்க கூடவே போயிட்டு வரலாம்” என்று தன் கணவனிடம் உரைத்து விட்டார் கனகரூபிணி.

அதைத் தங்கள் மகளிடம் சொன்னவரோ, எப்போது கிளம்ப வேண்டும் என்றெல்லாம் அவளிடம் கேட்டுக் கொண்டார் பிரியரஞ்சன்.

அதன் பிறகு,”முக்கியமான பொருட்களை எல்லாம் பாதுகாப்போட கொண்டு போகனும் மா. அதனால், நம்மக் கூடச் செக்யூரிட்டீஸூம் வருவாங்க” என்று அனைவருக்கும் அறிவித்தார் சந்திரதேவ்.

அதை அனைவரும் சம்மதித்து விட, முதல் வேளையாகத் தான் வேலை செய்யும் பள்ளிக்குச் சென்று விடுப்பு சொல்லி விட்டு வந்தாள் மஹாபத்ரா.

இங்கே, சந்திரதேவ் மற்றும் காஷ்மீரனோ, தங்கள் அலுவலக ஊழியர்களிடம் கட்டாயம் ருத்ராக்ஷியின் திருமணத்திற்கு வருமாறு மீண்டுமொரு முறை வேண்டுகோள் விடுத்து விட்டு வந்தனர்.

அப்போது, தன்னுடைய வீட்டிற்கு அழையா விருந்தாளிகளாக வந்திருந்தவர்களைக் கண்டுப் புருவத்தைச் சுருக்கியபடியே,”வாங்க!” என்று வீட்டினுள் வரவேற்றார் கவிபாரதி.

அவரது மகனின் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டது மட்டுமில்லாமல், ஸ்வரூபனின் நிச்சயத்தன்று தங்களுடைய மகன்கள் ஏன் சொல்லாமல் கொள்ளாமல் மறைந்து விட்டிருந்தனர் என்பதையும் அறிந்து கொண்டு தான் அவர்களது வீட்டிற்கு வந்து இருந்தார்கள் அவர்கள்.

அவர்களுக்குக் காஃபி கொடுத்து உபசரித்தவரோ, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவர்களே விஷயத்திற்கு வரட்டும் என்று காத்திருந்தார் போலும்.

அதை அறிந்து கொண்டவர்கள்,”கவி! உன்னோட பையனோட நிச்சயத்தில் நடந்ததுக்கு நாங்க மன்னிப்புக் கேட்டுக்கிறோம்” என்று தன்னிடம் கூனிக் குறுகிப் போய்க் கேட்டவர்களிடம்,

“இருங்க. என் பையனை வரச் சொல்றேன். அப்பறம் இதைப் பத்தி எல்லாம் விரிவாகப் பேசலாம்” என்று தன்னுடைய மகனுக்கு அழைத்து வீட்டிற்கு வருமாறு அறிவுறுத்தி விட்டுக் காத்திருந்தார் கவிபாரதி.

சிறிது நேரத்திலேயே அவனும் வந்து விட, இப்போது தாயும், மகனும் தங்களுக்கு எதிரில் இருந்தவர்களைக் கூர்மையாக நோக்கினர்.

உடனே அவர்களும்,”ஸ்வரூபா! எங்களை மன்னிச்சிரு” என்று அவனிடமும் மன்னிப்புக் கேட்டனர்.

“எதுக்கு?” என்று அழுத்தமான குரலில் வினவினான் ஸ்வரூபன்.

“உன்னோட நிச்சயத்தப்போ எங்களோட மகனுங்க செஞ்ச கேவலமான வேலைக்காகத் தான்!” என்றவர்களிடம்,

“ஓஹ்ஹோ! அதுக்குத் தான் வந்திருக்கீங்களா? சரி. அந்த வேலையைப் பார்த்த உங்க மகனுங்க எங்கே? அவங்களைக் கூட்டிட்டு வரலையா?” என்று நக்கலாக கேட்டான் ஸ்வரூபன்.

அதில் எச்சிலை விழுங்கிக் கொண்டு,”அவங்க வரலை ப்பா” என்று அவனிடம் பதிலளித்தனர்.

“ஏன்? அவங்க தானே இப்போ நீங்க கூனிக் குறுகி மன்னிப்புக் கேட்கிறதுக்குக் காரணம்! அப்போ அவங்களும் வந்திருக்கனுமே?” என்கவும்,

“அவங்க ஏற்கனவே உன்னைக் கஷ்டப்படுத்தி இருக்கானுங்க. அதான், இங்கே அழைச்சிட்டு வரலை” என்று திக்கித் திணறிக் கூறினார்கள்.

ஆனால், உண்மையான காரணம் இதுவல்ல என்பது அங்கேயிருந்த அனைவருக்குமே தெரியும்!

அன்றைய தினம், தங்களது பேச்சைக் கேட்டு ஸ்வரூபனோ கோபத்தின் உச்சியில் இருந்ததும், அவனுடைய வருங்கால மனைவியின் தமையன், அதை விடக் கொலைவெறியில் தங்களை நையப்புடைத்து அனுப்பி வைத்ததை மறக்க முடியாமல் அது உண்டாக்கிய பயத்தினால் தான் அந்த ஆண்கள் இங்கே வரவில்லை.

அதனால் தான், தங்களது தாய்மார்களை மட்டும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது அவர்களுக்கு மட்டுமல்ல, கவிபாரதி மற்றும் ஸ்வரூபனுக்கும் கூடத் தெரியும்.

தாயும், மகனும் இப்படி அமைதியாக இருப்பது அவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. அதுவும், அவர்கள் சம்பந்தம் வைத்திருக்கும் குடும்பத்தைப் பற்றி வெளியே விசாரித்த போது ருத்ராக்ஷியின் செல்வாக்கைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டார்கள்.

அப்போதிருந்தே ஸ்வரூபன் மற்றும் கவிபாரதியை எந்தக் காரணத்தைக் கொண்டும் தாங்கள் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று உறுதியாக இருந்தனர். அதனால் தான், இங்கே இவ்வளவு மெனக்கெட்டு வந்திருக்கிறார்கள்.

அதை அவர்கள் வெளிப்படையாக, வாய் விட்டுச் சொல்லாத போதிலும் கூடக் கவிபாரதிக்கும், ஸ்வரூபனுக்கும் நன்றாகவே புரிந்திருந்தது.

ஆகவே,”அப்படியா? முதல்ல அவங்க இங்கே உங்ககிட்ட என்னச் சொல்லி அனுப்பி இருக்காங்க?” என்று அவர்களிடம் வினவினார் கவிபாரதி.

“அஃது வந்து…” என்றவர்களுடைய நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது போலும்!

“ம்ம். சொல்லுங்க. கேட்போம்” என்றான் ஸ்வரூபன்.

“அன்னைக்கு அவங்கப் பேசியதை எங்ககிட்ட சொன்னாங்க தம்பி” என்று தயக்கத்துடன் உரைத்தனர்.

“ம்ஹ்ம்” என்று அவர்களை மேலும் பேச உந்தினார் கவிபாரதி.

“அதைக் கேட்டதும் எங்களுக்குக் குலையே நடுங்கிப் போச்சு! அவனுங்களுக்கு நல்லா அடியைப் போட்டுட்டுத் தான் வந்தோம்” என்றார்கள்.

“அப்படியா? தப்பு செஞ்சவங்க தான் மன்னிப்புக் கேட்க வரனும் ங்க. அவங்களுக்குப் பதிலாக நீங்க வந்து கேட்கிறது எந்த விதத்தில் நியாயம்?” என்று அவர்களிடம் வினவினான் ஸ்வரூபன்.

அதைக் கேட்டுப் பதறியவர்களோ,”என்னப்பா இப்படி சொல்ற? உங்க வீடு தேடி வந்திருக்கோம். எங்களை இப்படி பேசிட்டு இருக்கிற!” என்று சொல்லிக் குமைந்தனர்.

“நீங்க இங்கே வரவே தேவையில்லை ங்க. உங்கப் பையனுங்களுக்குக் கொஞ்சமாவது மரியாதையையும், அடுத்தவங்களைப் பத்தி என்ன வேணும்னாலும் பேசிடலாம்ன்ற எண்ணத்தை மனசில் இருந்து நீக்கவும் சொல்லிக் கொடுங்க போதும்!” என்று அவர்களிடம் தீர்க்கமாக கூறினார் கவிபாரதி.

அதில் விளக்கெண்ணெய்க் குடித்ததைப் போன்ற முகபாவனையை வைத்துக் கொண்டு,”சரிம்மா.நீங்க இன்னும் எங்களுக்குக் கல்யாணப் பத்திரிக்கை வைக்காமல் இருக்கீங்களே!” என்று அந்தத் தாய் மற்றும் மகனிடம் கேட்க,

அவர்கள் தங்கள் வீட்டைத் தேடி வந்து இருப்பதற்கான காரணத்தை இப்போது புரிந்து கொண்டு,“உங்களுக்கு எதுக்குப் பத்திரிக்கை வைக்கனும்?” என்று கிடுக்கிப்பிடி கேள்வியைக் கேட்டார் கவிபாரதி.

“என்னம்மா இப்படி கேட்டுட்ட? நிச்சயத்துக்கு எல்லாம் வந்தே ஆகனும்னு அம்மாவும், மகனும் வந்து நின்னீங்களே! இப்போ இப்படி கேட்கிறீங்க?” என்று ஏமாற்றத்துடன் வினவினர்.

“ஆமாம். அப்போ உங்க எல்லாரையும் எங்களுக்கு நல்லது நினைக்கிறவங்கன்னு நம்பி வந்து கூப்பிட்டோம். ஆனால் இப்போ தானே உங்களோட உண்மையான முகம் எல்லாம் வெளியே வந்துச்சு! அதான், உங்க யாரோட குடும்பத்தோட மூச்சுக் காத்தும் என் பையனோட கல்யாணத்தில் பட்டுடவே கூடாதுன்னு முடிவோட இருக்கோம்” என்று உறுதியாக கூறினார் ஸ்வரூபனின் அன்னை.

“என்னது? உங்களுக்கு நாங்க அந்தளவுக்குக் கேவலமாகப் போயிட்டோமா? என்னமோ எங்கப் பசங்கப் பேசினதுக்காக மன்னிப்புக் கேட்டு வந்தால் நீங்க எங்களை இப்படித் தான் அவமானப்படுத்துவீங்களா?” என்று அவர்கள் கொந்தளித்துப் போய்க் கேட்க,

அதற்கு,”ஆமாம். அப்படித்தான் பண்ணுவோம்! இப்போ என்னங்குறீங்க?” என்று அவர்களுக்கு மேலாக கொதித்து எழுந்த கவிபாரதியைக் கண்டு, வந்தவர்கள் எல்லாரும் மிரண்டு போய் விட்டார்கள்.

“என்னம்மா!!!” என்று அவர்கள் ஆரம்பிப்பதற்குள்,

“ஹாங்! உங்க அருமைப் பசங்க என்னோட மருமகளைப் பத்திப் பேசினதை நான் மட்டும் என் காதால் கேட்டிருந்தேன், அவனுங்களைப் போட்டுத் துவைச்சு எடுத்திருப்பேன்! அதைத் தான் என்னோட சம்பந்தி வீட்டாளு பண்ணி இருக்கார்! ஒரு விசேஷத்துக்குப் போனால், யாரோட மனசையும் நோகடிக்காம இருக்கனும்ன்றதை அந்த வளந்த மாடுகளுக்குத் தெரியாதாமாம்? அவங்களைக் கண்டிக்கத் துப்பில்லை! எங்ககிட்ட மன்னிப்புக் கேட்க வந்துட்டாங்க” என்று பொரிந்து தள்ளினார் கவிபாரதி.

“அது இல்லை ம்மா” என்றவர்களிடம்,

“ஸ்ஸூ! நான் இனிமேல் உங்களை என் வீட்டில் நடக்கிற எந்த நல்லது, கெட்டதுக்கும் கூப்பிட மாட்டேன். தயவு செஞ்சுக் கிளம்புங்க!” என அவர்களிடம் கும்பிடு போட்டுக் கேட்டுக் கொண்டார்.

அதன் பிறகும் தாங்கள் அங்கே இருப்பது தவறு என்பதை உணர்ந்தவர்களோ சத்தம் காட்டாமல் அங்கேயிருந்து வெளியேறினர்.

அவர்கள் சென்றதும்,“நீங்க இந்தளவுக்குக் கோபப்பட்டு நான் இப்போ தான் பார்க்கிறேன் ம்மா” என்று தாயிடம் தெரிவித்தான் ஸ்வரூபன்.

“பின்னே என்னடா? நாம யாரோட தயவும் இல்லாமல் உன் கல்யாண ஏற்பாட்டை நடத்திட்டு இருக்கோம்! அதுக்கு வரலைன்னாலும் பரவாயில்லை, இப்படி பேசிட்டு இருக்கிறது என்ன மாதிரியான மனநிலையோ! அதான், நல்லா கொடுத்து அனுப்பி விட்டேன்!” என்று இன்னும் காந்தல் குறையாமல் உரைத்தார் கவிபாரதி.

“ம்ம். விடுங்க ம்மா. தண்ணீர் குடிங்க” என்று அவருக்கு நீர்க்குவளையைக் கொடுத்துப் பருக வைத்தான் அவரது மகன்.

அந்த விஷயத்தை அப்போதே மறந்து விட்டார்கள் கவிபாரதி மற்றும் ஸ்வரூபன்.

அடுத்த நாள் காலையில், தங்களுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டுத் தாங்கள் ஊருக்குச் செல்ல தயார் செய்து வைத்திருந்த கார்களில் பத்திரமாகப் பூட்டி வைத்தனர் ருத்ராக்ஷியின் வீட்டார்.

அதே சமயம், அங்கே வந்து சேர்ந்த பிரியரஞ்சன் மற்றும் கனகரூபிணியும் சந்திரதேவ் வீட்டுக் காரிலேயே பயணித்துக் கொள்ள முடிவெடுத்து அதில் ஏறிக் கொண்டார்கள்.

அதன் பிறகுத் தங்களது பயணத்தைப் பற்றிய தகவல்களை ஸ்வரூபனுக்குத் தெரிவித்தனர்.

- தொடரும்
 
Top