Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 22

Advertisement

SHALU shalu

Well-known member
Member
தன் தந்தையின் பெயரை முதலில் கூறியவள், அவருடைய தொழில் மற்றும் அதன் சிறப்பையும் அவர்களுக்கு விவரித்தாள் ருத்ராக்ஷி.

அதிலேயே, அவள் பணக்காரக் குடும்பத்தின் வாரிசு என்பது, அங்கேயிருந்தப் பெண்கள் அனைவருக்கும் புரிந்து விட்டது.

அத்தோடு நில்லாமல், அடுத்தபடியாக, தனது சகோதரனையும், அவனுடைய தொழில் திறமையைப் பற்றியும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டாள் ருத்ராக்ஷி.

அதை முழுமையாக கேட்ட கவிபாரதிக்கு, அவளுடைய பொருளாதார உயரத்தை, நன்றாகவே புரிந்து கொண்டார்.

அவற்றையெல்லாம் விட்டு விட்டு, இங்கே, இந்த ஊரில் வந்து அவள் வாழ்வதற்கு என்ன அவசியம் வந்தது? எதனால் இந்த முடிவிற்குத் தள்ளப்பட்டாள்? என்ற சந்தேகங்கள், ஸ்வரூபனின் தாய்க்குத் தோன்றாமல் இல்லை.

ஆனாலும், அவற்றை இப்போது அனைவரின் முன்னிலையிலும் கேட்பது முறையல்ல என்று மௌனமாக கவனிக்க ஆரம்பித்து விட்டார் கவிபாரதி.

“நீ சொல்றதைக் கேட்கும் போது, உன்னோட குடும்பமே பணக்காரவங்களா இருப்பீங்க போலயே?” எனக் கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி அவளிடம் வினவினார்.

அதில் சங்கடத்துடன் நெளிந்து,”ஆமாம் மா” என்று ஒப்புக் கொண்டாள் ருத்ராக்ஷி.

அதன் பின், அவளை பிரம்மிப்புடன் அனைவரும் பார்க்கத் தொடங்கி விட்டனர்.

அதனால்,”இப்போ என்னைப் பத்தி தெரிஞ்சிருச்சுல்ல? நான் உங்களை ஏமாத்திட்டுப் போயிட மாட்டேன்! என்னை நம்பலாம்!” எனத், தான் அவர்களை, அழைத்ததற்கானக் காரணத்திற்கு வந்தாள்.

“கண்டிப்பாக நம்புறோம் மா” என்று இப்போதும், அவளது துணைக்கு வந்தார் கவிபாரதி.

“ஆமா, ஆமா! உன்னோட ஃபோன் நம்பர் எல்லாம் தந்துரு ம்மா” என்று மற்றவர்கள் கூறினர்.

“சரிங்க. இப்போ உங்களுக்கு நான் சொன்ன விஷயத்துக்குச் சம்மதமா?” என்றாள் ருத்ராக்ஷி.

“சம்மதம் மா. உன் வீட்டுக்கு வந்து வேலை பாக்கனுமா?” என்று அவளிடம் கேட்டனர்.

“இல்லை ம்மா. அதுக்குப் பக்கத்திலேயே, மிருதுளா அக்காவோட வீடு ஒன்னு இருக்கு. அங்கே எல்லாரும் சேர்ந்து வேலை பார்க்கலாம்” எனக் கூறி விட்டு, அவர்களது பாவனைகளைக் கண்காணித்தாள்.

அதற்கு ஒப்புக் கொண்டவர்கள்,”அதையெல்லாம் நாம தான், ஒதுங்க வைக்கனுமா?” என்று வினவினர்.

“அதை நாம பண்ணத் தேவையில்லை ம்மா. எங்க அண்ணன் கிட்டச் சொல்லி எல்லாத்தையும், வாங்கி வைக்கச் சொல்லிடுவேன். அந்த வேலை முடிஞ்சதும், நாம சாமியைக் கும்பிட்டுட்டு ஆரம்பிச்சிடலாம்” என்று உறுதியாக கூறினாள் ருத்ராக்ஷி.

“ஓஹ்! அப்போ சரி ம்மா. எங்களுக்கு முழு சம்மதம்!” என்று கோரஸாக கூறி, அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆனால், ஸ்வரூபனின் அன்னையான கவிபாரதிக்கு, அவளிடம் இன்னும் கொஞ்சம் பேச வேண்டி இருந்தது போலும், எனவே, மற்றவர்கள் செல்லும் வரை காத்திருந்தார்.

அவர்கள், சென்ற பிறகு, அவரைக் குழப்பத்துடன் ஏறிட்டு,”உங்களுக்கு இன்னும் ஏதாவது சந்தேகம் இருக்கா ம்மா?” என்று அவரிடம் வினவினாள் ருத்ராக்ஷி.

“எனக்கு எல்லாமே புரிஞ்சது ம்மா. எனக்கும் உன் கூட சேர்ந்து வேலை பார்க்கனும்னு, ஆசை தான், ஆனால், உன் குடும்பத்தைப் பத்தி நீ சொன்னதும், ஒரு விஷயத்தைக் கேட்டுத் தெரிஞ்சுக்கனும்னு, நினைச்சுட்டுக் காத்திருந்தேன்” என்றார் கவிபாரதி.

“அதான், என்னைப் பத்தி, எல்லாமே சொல்லிட்டேனே ம்மா? இன்னும் வேற என்ன இருக்கு?” என்று அவள் கேட்கவும்,

“உன்னோட அம்மா இறந்ததால், உனக்குச் சின்ன வயசுல இருந்தே, மன அழுத்தம் இருந்துச்சு. அப்போதிலிருந்து, நீ தனிமையில் இருக்கனும்னு விருப்பப்பட்டியா?” என்று அவளிடம் வினவினார் ஸ்வரூபனுடைய தாய்.

“ஆமாம் மா” என அவருக்குப் பதில் சொன்னாள் ருத்ராக்ஷி.

“அப்போ, உன் அப்பாவும், அண்ணாவும், உங்கூட இல்லையா? அவங்க உன்னைப் பாத்துக்கத் தயாராக இல்லையா?” என்று தன்னுடைய ஐயத்தைக் கேட்டார் கவிபாரதி.

“ஐயோ ம்மா! என்னைச் சின்ன வயசுல இருந்தே, நல்லா பாத்துக்கிட்டது என்னோட அப்பாவும், அண்ணனும் தான்! சும்மா பணத்தை மட்டும் சம்பாதிச்சுட்டு, எனக்குப் பிடிச்சதை எல்லாம், வாங்கித் தந்துட்டு மட்டும், என்னை அவங்க அப்படியே விட்டது இல்லை! நான் ஸ்கூல் படிக்கிற வரைக்கும், எங்க அப்பா பாத்துக்கிட்டார், அதுக்கப்புறம், எங்க அண்ணன் தான், எனக்கு எல்லாமே செஞ்சு, என்னைப் பத்திரமாக கவனிச்சுக்கிட்டார்! அவங்க இல்லைன்னா, நான் இப்படி தெளிவாகத், தைரியமாக, உங்க முன்னாடி நின்னுட்டு இருக்க மாட்டேன்!” என்று கூறி, அவருக்குப் புரிய வைத்தாள்.

அவளது தந்தையைப் பற்றியும், தமையனைப் பற்றியும், பேசும் பொழுது, ருத்ராக்ஷியின் முகத்தில், பெருமை தாண்டவம் ஆடியதைக் கவனித்த, ஸ்வரூபனின் அன்னையோ,”நல்லது ம்மா. எப்பவும் இப்படியே, நீ தன்னம்பிக்கையோட இருக்கனும்” என்று அவளது தலையில் கரத்தை வைத்து ஆசீர்வதித்தார் கவிபாரதி.

“நன்றி ம்மா” என்றாள் ருத்ராக்ஷி.

“அவங்க தான் உனக்குத் துணையாக இருந்து இருக்காங்களே! அப்பறமும், நீ ஏன் இவ்வளவு வருஷம் கழிச்சு, இங்கே வந்து தங்கி இருக்கிற?” என்ற வினாவை எழுப்பினார்.

அதற்கொரு பெருமூச்சுடன்,”நகரத்து வாழ்க்கை ஒரே போர் ம்மா. எனக்கு ஃப்ரண்ட்ஸ் அவ்வளவாக அமையவே இல்லை. படிச்சு முடிச்சதும், அங்கே வேலை பார்க்கவும் தோனலை. அதான், எங்க அம்மா பிறந்த, இந்த ஊருக்கு, வந்து தங்கி, வேலை பார்த்துட்டு இருக்கேன்!” என்று அவரிடம் உண்மையைக் கூறி விட்டாள்.

இப்போது, அவருக்கு எல்லாம் புரிந்து போனது.

தனிமை விரும்பியான இவளுக்கு, தன்னைச் சுற்றியிருக்கும், அமைதியும், பச்சைப் பசேலென்று இடங்களும் தான், பிடித்து இருப்பதை அறிந்து கொண்டார் கவிபாரதி.

“இன்னும் வேற ஏதாவது கேட்க இருக்கா ம்மா?” என்று மெல்லிய புன்னகையுடன் கேட்டாள் ருத்ராக்ஷி.

“ஊஹூம். என்னை நம்பி, உன்னோட சொந்த விஷயத்தைச் சொன்னதுக்கு, நன்றி ருத்ராக்ஷி” என்றார்.

“இருக்கட்டும் மா. நான் சொன்னதை நீங்களும் பொறுமையாக கேட்டீங்க! அதே மாதிரி, இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி, எனக்காகப் பரிஞ்சுப் பேசி, அவங்களைச் சம்மதிக்க வச்சதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்” என்று அவரிடம் பணிவுடன் கூறினாள்.

“பரவாயில்லை டா ம்மா. நான் போயிட்டு வரேன். நீ வீட்டுக்குப் போயிருவ தான? நான் கூடத் துணைக்கு வரவா?” என்று வினவினார் கவிபாரதி.

“அதெல்லாம் வேணாம் மா. நானே போயிருவேன்” என்றவாறு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு, தன்னிடம் வந்து நின்றவளிடம்,

“என்ன ருத்ரா?” எனக் கேட்டார் மிருதுளா.

“நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் க்கா” என்று அவரிடம் தயங்கி நின்றாள் ருத்ராக்ஷி.

- தொடரும்
 
கவிபாரதிக்கு, மிருது குடும்பத்தை ஏற்கனவே பரிட்சயம் இருககுமோ?🤔🤔🤔
 
Top