Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 4 1

Advertisement

Admin

Admin
Member
பகுதி – 4

அன்று அனிதா தன் மாமா வீட்டில் அஸ்வத் மற்றும் அவனின் நண்பன் ப்ரணவ்வோடு விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்போது நான் இங்கே சென்றேன், அங்கே சென்றேன் என்று அனிதா பெருமை பேச.... குழந்தைகளுக்கே உரிய போட்டி குணம் தலைதூக்க... அவர்களும் பதிலுக்குப் பெருமை பேசினர்.

அஸ்வத் வீட்டில் பெற்றோர் இருவருமே வேலை பார்ப்பதால் அவர்கள் எப்போதோ ஒருமுறை தான் வெளியே செல்வார்கள். அதுவும் செலவு இல்லாத இடமாகத் தான் பார்த்து செல்வது. பார்க், கோவில், உறவினர்கள் வீடு என்று இதுபோலத் தான்.

அதனால் அஸ்வத்தால் அனிதாவுடன் போட்டியிட முடியவில்லை... அவன் வெற்றிகரமாகப் பின்வாங்க.... ஆனால் ப்ரணவ் விடவில்லை...

“ஹே... நாங்க கூடத்தான் இங்கெல்லாம் போய் இருக்கோம்.”

“நான் நேத்து ப்னிக்ஸ் மால்ல த்ரிடி படம் பார்க்க போனேனே....கண்ணாடியெல்லாம் போட்டுப் படம் பார்க்க எவ்வளவு சூப்பரா இருந்தது தெரியுமா....” அனிதா குஷியாக சொன்னதும், ப்ரணவ்வுக்குக் கோபம் வந்துவிட்டது, அவன் அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டான்.

அவனும் அவன் வீட்டில் நிறைய நாட்களாக அந்தப் படத்திற்கு அழைத்துச் செல்ல சொல்லி கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் அவன் வீட்டில் அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை.... இப்போது அனிதா அதே படம் பார்த்துவிட்டு வந்ததும், அவனுக்குக் கோபத்தில் அழுகையும் வர... வீட்டிற்குச் சென்று ஒரே ரகளைச் செய்தான்.

கோபத்தில் எல்லாவற்றையும் அவன் தூக்கி போட.... அவனை மலை இறக்க பெரும்பாடு ஆகிவிட்டது. அவனுக்குப் பிடித்த ஐஸ்கிரீம் கொடுத்து அவனிடம் அவன் பாட்டி விசாரிக்க... அவன் அனிதா தன்னைக் கேலி செய்ததாகச் சொல்ல.... பாட்டிக்குக் கோபம் வந்து விட்டது.

அஸ்வத்தோடு விளையாடிக்கொண்டிருந்த அனிதாவை தேடி வந்தவர் “என்ன உனக்கு வாய் ரொம்ப அதிகமாகிடுச்சு? ஊர் சுத்துறோம்ன்னு திமிரா... இன்னும் எத்தனை நாள் சுத்துவ? அந்தச் சார் இங்க கிளாஸ் எடுக்க வரும்வரை தான.... என்னவோ உங்க அப்பன் கூடச் சுத்துற மாதிரி பெருமை பேசுற.... அப்பன் யாருன்னே தெரியாத போதே.... உனக்கு இந்த ஆட்டமா... நானும் பார்க்கிறேன் இன்னும் எத்தனை நாளைக்குன்னு......” என்று அவர் கருவிட்டு செல்ல.... அவர் பேசியது அந்தப் பிஞ்சு நெஞ்சிற்குள் பல குழப்பத்தை ஏற்படுத்தியது.
அங்கிருந்து தன் வீட்டிற்குச் சிட்டாகப் பறந்தவள், பாக்கெட் போட்டுக்கொண்டிருந்த மீனாவின் முன்பு சென்று தான் நின்றாள்.

“அம்மா ! ஹரி சார் இங்க கிளாஸ் இல்லைன்னா வர மாட்டாரா மா...” என்று அவள் மூச்சு வாங்க கேட்க...

வேலையில் கவனமாக இருந்த மீனா அனிதாவின் முகத்தைப் பார்க்காமல் “ஆமாம், கிளாஸ் எடுக்கத் தானே வரார். இல்லைன்னா எதுக்கு வரார்?” என்றாள் சாதாரணமாக.

“இன்னும் எவ்வளவு நாள் கிளாஸ் எடுப்பார்?”

“அதை நீ உன் சார்கிட்ட தான் கேட்கணும்.” மீனா சொல்லிவிட்டு அவள் வேலையைப் பார்க்க....

ஹரி வேறு அப்போது ஊரில் இல்லை.... இரண்டு நாள் தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்தான். இரண்டு நாட்களே அவனைப் பார்க்காமல் அவளால் இருக்க முடியவில்லை... இதில் வகுப்பு எடுக்க ஹரி வரவில்லை என்றால்.... அவனைப் பார்க்கவே முடியாதே என அனிதாவுக்குத் தவிப்பாக இருந்தது.

சிறிது நேரம் சென்று தான் மகள் எதற்கு இதெல்லாம் கேட்டாள் என்ற எண்ணம் தோன்ற... மீனா அனிதாவை தேடி பார்வையைச் சுழல விட... அவள் கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள்.

மகளிடம் சென்று அவள் தலையைக் கோத... அனிதா விசும்பும் சத்தம் கேட்டு திகைத்தவள் “எதுக்கு அனி அழற? என்ன ஆச்சு மா? என்றாள்.

“சார் கிளாஸ் முடிஞ்சிட்டா வர மாட்டாரா மா... அப்புறம் நான் எப்படி அவரைப் பார்ப்பேன்.”

அனிதா சொன்னதைக் கேட்டதும் மீனாவுக்குச் சிரிப்பு தான் வந்தது. அவள் அப்போதும் அதைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை... சின்னக் குழந்தை தானே.... என்ற எண்ணத்தில் “இப்பவெல்லாம் கிளாஸ் முடியாது.... ரொம்ப நாள் ஆகும். அதுக்குள்ள அனி பெரிய பொண்ணு ஆகிடுவீங்க.” என அவள் தன் மகளைச் சமாதானம் செய்ய...

“நிஜமா...” அனி தலையணையில் இருந்து முகத்தை நிமிர்த்திப் பார்த்து கேட்க....

மகளின் கண்ணீரை துடைத்து விட்ட மீனா “நிஜமா தான். சாப்பிட வா...” என்றவள், மகளுக்கு உணவு எடுக்கச் செல்ல.... அனியும் அழுகையை நிறுத்திவிட்டு எழுந்து அமர்ந்தாள்.

அனி மனதில் ஹரிக்கு உள்ள முக்கியத்துவத்தை மீனா அறியவில்லை.... அந்தக் குழந்தையின் மனதில் வேறு ஒரு உறவுக்காக ஏங்கிக் கொண்டு இருப்பதும் அவளுக்குப் புரியவில்லை.

மறுநாள் அஸ்வத்திடம் சென்று அனி தன் அம்மா சொன்னதைச் சொல்ல... அவன் பெரிய மனிதன் போல் எதோ தீவிரமாக யோசித்தவன் “இல்லை அனி, உங்க அம்மா சும்மா சொல்றாங்க. இந்தச் சார் வர்றதுக்கு முன்னாடி வேற சார் தானே கிளாஸ் எடுத்தார். அதே மாதிரி இவரும் போயிட்டா....” என்றான் சந்தேகமாக.

“இல்லை போகமாட்டாங்க...” அனி திடமாகச் சொல்ல...

“சரி அப்படியே வச்சுக்கோ....” அஸ்வத் ஆர்வமில்லாதவன் போல் பேச.... அனிக்குத் திரும்பப் பயம் வந்துவிட்டது.

“இப்ப என்ன டா பண்றது?”

“ப்ரணவ்வோட பாட்டி சொன்னது கரெக்ட் தான். சார்ன்னா போய்டுவாங்க... இதே அப்பான்னா போக மாட்டாங்க. ஹரி சார் உனக்கு அப்பாவானா... அவர் எப்பவும் உன்னை விட்டு போகவே மாட்டார்.”

ஏற்கனவே மனதில் ஹரிக்கு முக்கிய இடம் கொடுத்திருந்த அனிக்கு, அவன் தனக்கு எந்தமாதிரி உறவு என்று இதுவரை புரியாமல் இருந்தது, இப்போது அஸ்வத் அப்பா என்றதும், அதை அப்படியே அவள் மனம் உள்வாங்கிகொண்டது. ஹரிஹரன் அனிதாவின் மனதில் அப்பா என்று பதிந்து போனான்.

“ஹரி சார் எனக்கு எப்படி அப்பா ஆவார்?”



திருமணம் பற்றித் தெரியாத அஸ்வத் “நான் எங்க அப்பாவை அப்பான்னு கூப்பிடுறது போல... நீயும் ஹரி சாரை அப்பான்னு கூப்பிடு. அவ்வளவு தான்.” என்றான் எளிதாக....

“அப்பான்னு கூப்பிட்டா ஹரி சார் அப்பா ஆகிடுவாங்களா...” அனி ஆச்சர்யப்பட.... அஸ்வத் ஆமாம் என்றான்.

டேய் அறிவாளி.... ஒரு வயசு ஆன பிறகு தான் நீ அப்பான்னு உங்க அப்பாவை கூப்பிட்டிருப்ப.... அதுக்கு முன்னாடி அவர் என்ன உனக்குச் சித்தப்பாவா?.... எதோ இவர் கூப்பிடதுனாலதான் இவங்க அப்பா இவனுக்கு அப்பா ஆனாறாம். இதெல்லாம் இவங்களுக்கு யார் சொல்லி புரியவைப்பது.

“அப்பா.... அப்பா....” என்று அனிதா சொல்லி பார்த்துக்கொண்டாள். இதுவரை தந்தை என்ற உறவையே அறியாத அந்தப் பிஞ்சிற்கு, ஹரி தனக்குத் தந்தை என்றால்... நினைத்து பார்க்கவே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

மறுநாள் அனிதாவின் பிறந்த நாள். காலையிலேயே வந்த ஹரி பிறந்தநாள் பரிசு கொடுத்து அனியை வாழ்த்த.... பிறந்தநாளுக்குத் தானே என மீனாவும் ஒன்றும் சொல்லவில்லை....அவன் இன்று தான் திரும்ப அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறான்.

வந்தவன் வாழ்த்திவிட்டு உடனே கிளம்ப.... மீனா அனியிடம் சாக்லேட் கொடுத்து அவனிடம் கொடுக்கச் சொன்னாள். அவன் அதைப் பிரித்து அனிக்கே ஊட்டிவிட்டான்.

“நீங்க சாயந்தரம் நான் கேக் வெட்டும் போது கண்டிப்பா வரணும்.” அனி அழைக்க...

“இல்லை அனி நான் வர முடியாது. நாளைக்கு நாம வெளிய போகலாம்.” ஹரி வராமல் இருக்கவே பார்த்தான். ஆனால் அனி விடவில்லை.... அவள் அழுகையில் சிணுங்க.

பிறந்தநாள் அதுவுமாக அவளை அழவைக்க மனமில்லாமல் மீனாவும் “கிளாஸ் முடிஞ்சதும் ஒரு பத்து நிமிஷம் வந்துட்டு போங்களேன்.” என்றாள். மகள் போட்டு வைத்திருக்கும் திட்டம் தெரியாமல். ஹரியும் சரி என்றான்.

ஹரி சென்றதும் அவன் வாங்கி வந்த பரிசை பிரித்துப் பார்க்க.... உள்ளே அனிதாவிற்குப் பிடித்த லாவண்டர் நிறத்தில் அழகான முழு நீள உடை இருந்தது. அதோடு அதற்குப் பொருத்தமான காலணியும்.

அனிதா அதைப் பார்த்ததும் துள்ளி குதிக்க.. தான் வாங்கியதை விட இந்த உடை அழகாக இருந்ததால் மீனா அதையே மகளுக்குப் போட்டு அனுப்பி வைத்தாள். அவனின் அத்தை வீட்டில் இருந்த ஹரி, அனி அந்த உடையில் பள்ளிக்கு வருவதைப் பார்த்துவிட்டே சென்றான்.

மாலை அலுவலகத்தில் இருந்து வந்த மீனா முடிந்தவரை வீட்டை ஒழுங்குபடுத்தி அலங்காரம் செய்து வைத்தாள். மற்றவர்கள் கொண்டாடும் போது... தான் மட்டும் பிறந்தநாள் கொண்டாடவில்லை என்றால் மகளின் மனம் வருத்தப்படுமே என்று தான்....

அனிதா காலையில் அணிந்திருந்த உடையே நன்றாக இருக்க... வெறும் முகம் மட்டும் கழுவி மகளுக்கு ஒப்பனை செய்துவிட்டாள். இவள் வாங்கிய உடையைத் தீபாவளிக்கு வைத்துக்கொள்ளலாமே என்ற எண்ணம்.

நிறையப் பேர்களை எல்லாம் அழைக்கவில்லை.... அனிதாவின் மாமா வீடு, ப்ரணவ் வீடு மற்றும் கீழே குடியிருப்போரை மட்டும் தான் அழைத்திருந்தனர்.

கேக்கை பார்த்து விட்டு.... அனிதா முகம் வாட “நான் டோரா போட்ட கேக் தான கேட்டேன். அது ஏன் வாங்கலை?” என்றாள்.

அவள் சொன்ன கேக்கின் விலையைக் கேட்டதும், இவளுக்கு வந்த மயக்கத்தைச் சொல்ல முடியாமல்.... “அதுல எல்லாம் நிறையக் கலர்ஸ் போடுவாங்க. உடம்புக்கு நல்லது இல்லை...” என்று வாய்க்கு வந்ததைச் சொல்லி சமாளித்து வைத்தாள்.

மற்றவர்கள் எல்லாம் ஆறரைக்கே வந்து விட...ஹரி வராமல் கேக்கை வெட்ட மாட்டேன் என்று அனிதா பிடிவாதம் பிடிக்க.... வேறுவழியில்லாமல் அனைவரும் காத்திருந்தனர்.

ஹரிக்குத் தனியாக வர தயக்கமாக இருந்ததால்... அவன் அத்தையுடன் தான் வந்தான். அவர்களை மரியாதையாக வரவேற்று உட்கார வைத்தனர்.

மீனா மெழுகுவத்தியை ஏற்றி விட்டு மகளைக் கேக் வெட்ட அழைக்க.... அனி சென்று ஹரியின் கையைப் பிடித்து இழுக்க... “நீ போ....” என்றான்.

“நீங்களும் வாங்க அப்பா.... கேக் வெட்டும் போது அம்மா அப்பா ரெண்டு பேரும் தான் இருக்கணும்.” அனிதா நிறுத்தி நிதானமாகப் பேச.... அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த ஹரியும் மீனாவும் நம்ம காதுல தான் தப்பா கேட்டுதா.... என்ற எண்ணத்தில் ஒருவரை ஒருவர் பார்க்க.... இருவர் முகத்திலும் இருந்த அதிர்ச்சியே அவர்கள் கேட்டது உண்மை தான் என்றது.

அவர்களுக்கு மட்டும் இல்லை மற்றவர்களுக்கும் தான் அதிர்ச்சி.

 
:love::love::love:

தொடங்கிட்டாளா அனிதா :love: ஹரி மீனா ???
அஸ்வத் ரொம்ப விவரம் அப்பான்னு கூப்பிட்டா அப்பா ஆகிடுவாங்க :LOL::LOL::LOL:
இந்த பாட்டிக்கு அறிவே கிடையாதா??? சின்ன புள்ளைங்க சண்டைக்கு பெரியவங்க போவாங்களா???
 
Last edited:
Top