Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 8 2

Advertisement

Admin

Admin
Member

வார இறுதியில் இருவரும் சேர்ந்து சினிமா, கோவில், மால் என்று எங்காவது சென்று விட்டு வருவார்கள். ஹரி ஹரிணியையும் அழைக்கத் தான் செய்வான். ஆனால் வைஷ்ணவி அவர்களோடு செல்ல விடமாட்டார்.

“உனக்கு உங்க அண்ணனோட உறவு எப்பவும் வேணும்ன்னு நினைச்சா கொஞ்சம் தள்ளியே இருந்துக்கோ....” என்பார்.

பிருந்தா ஹரியிடம் தனக்குத் தான் முதல் உரிமை என்று நினைப்பாள். அவளுக்கு வேறு யாரும் அவனிடம் உரிமை கொண்டாடுவது பிடிக்காது. அதற்காக அவளுக்கு மட்டுமே ஹரி என்று பட்டாவா எழுதி கொடுத்திருக்கிறது. அவன் தனக்கும் சகோதரன் தானே என்று ஹரிணிக்கு கடுப்பாக வரும்.

திருமணத்திற்கு முன்பு ஹரி அவளிடம் அவ்வளவு பாசமாக இருப்பான். அவள் தன் பெற்றோரை விட ஹரியிடம் தான் எல்லாவற்றையும் மனம் விட்டு பேசுவாள். இத்தனைக்கும் வெங்கட்டும் வைஷ்ணவியும் பிள்ளைகள் மனம் அறிந்து தான் நடந்து கொள்வார்கள்.

ஹரியின் பாசம் குறையவில்லை... ஆனால் அவனுக்கு வந்த மனைவி அப்படி. தமையன் மேலிருந்த கோபத்தை ஒருநாள் ஹரிணி விக்ரமிடம் காட்டி நன்றாக வாங்கியும் கட்டிக்கொண்டாள்.

“நீங்களும் இருக்கீங்களே எங்க அண்ணனை பார்த்து கத்துக்கோங்க பொண்டாட்டிய எப்படி வச்சிகிறதுன்னு.... நிறை மாசமா இருக்கிற பொண்டாட்டிய பார்க்க கூட நீங்க வரலை.... ஆனா எங்க அண்ணன் அவர் பொண்டாட்டியை எப்படித் தாங்கிறான் தெரியுமா....”
அவள் சொன்னதைக் கேட்ட விக்ரம் ஆடி தீர்த்து விட்டான்.

“என்னோட வியாபாரமும் உங்க அண்ணன்னோடதும் ஒண்ணா.... உங்க அண்ணன் ஆள் போட்டுப் பார்த்தா போதும். நான் அப்படி இருக்க முடியுமா....கொஞ்சம் ஏமாந்தா தலையில துண்டை போட்டு தான் உட்காரனும்.”

“உன் அண்ணிக்கு யார் முன்னாடி எப்படி நடந்துகிறதுன்னே தெரியாது. எல்லாரும் இருக்கும் போதே புருஷன் மடியில படுப்பா... அவன் தலையை வருடுவா.....யார்கிட்டையாவது அவனை முதல்ல பேச விடுவாளா.... அவளே தான் பேசிட்டு இருப்பா.....”

“நான் அவங்களைத் தப்பு சொல்லலை... அது அவங்க வாழ்க்கை அவங்க இஷ்டபடி இருப்பாங்க. அவங்களுக்கு அது சரியா வரும். நமக்கு வராது. இப்படி அடுத்த வீட்டோட நம்ம வீட்டை ஒப்பிட்டு பார்த்திட்டு இருந்தா...நம்ம நிம்மதி போய்டும்.”

“இனியாவது அடுத்த வீட்டை பார்க்காம ஒழுங்கா இருக்கிற வழிய பாரு....” என்று விக்ரம் வைத்து விட... அவன் பேசியதிலேயே பத்து நாட்கள் சென்று வர வேண்டிய பிரசவ வலி அன்றே ஹரிணிக்கு வந்துவிட்டது.

ஹரிணிக்கு வலி வந்ததும், ஹரி சென்று காரை எடுக்க.... வைஷ்ணவி அவளை மெதுவாக அழைத்துக்கொண்டு வந்தார். அப்போது அங்கே வந்த பிருந்தா “நீங்க அவங்களை ஹாஸ்பிடல்ல விட்டுட்டு வந்திடுங்க. நாம குழந்தை பிறந்ததும் சேர்ந்து போய்ப் பார்ப்போம்.” என்றதும், ஹரிக்கு வந்ததே கோபம்.

“ஹாஸ்பிடல்ல விட்டுட்டு வர அவ யாரோ இல்லை... என்னோட தங்கை... அவளுக்குக் குழந்தை பிறக்கிற வரை நான் அங்க தான் இருப்பேன்.” என்றான் அவன் உறுதியாக.

அன்று தான் அவன் பிருந்தாவை கடிந்து பேசி ஹரிணி பார்த்திருக்கிறாள். அவளுக்குப் பிருந்தா கோபித்துக் கொள்வாளோ என்று பயம். ஆனால் பிருந்தா சண்டை எதுவும் போடவில்லை... அவளும் காரில் முன்புறம் ஏறி ஹரியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

அவள் எப்போதுமே அப்படித்தான். சண்டை என்று எதுவும் போட மாட்டாள். ஹரி சொன்னபடி வரவில்லை என்றால்... சாப்பிடாமல் இருந்து தன்னைத் தான் வருத்திக்கொள்வாள். அதிலேயே ஹரி உருகி விடுவான். அவள் அதிக அன்பை காட்டியே அவனைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தாள்.



ஹரிணி விக்ரமிடம் ஆசைப்பட்டுக் கேட்டது, பிரசவ நேரத்தில் அவளுடன் இருக்க வேண்டும் என்பதைத் தான். அவனும் வருவதாகச் சொல்லி இருந்தான். ஆனால் அவளின் அந்த ஆசை கூட நிறைவேறவில்லை.... விக்ரம் வருவதற்குள் அத்விகா பிறந்து இருந்தாள்.

தங்களையிட்டு ஹரி பிருந்தவுக்குள் பிரச்சனை வேண்டாம். அவர்கள் தனியாகச் சந்தோஷமாக இருக்கட்டும் என்று தான் தனிக் குடித்தனம் வைத்தனர். ஆனால் பிருந்தா இப்படி ஹரியை தவிக்க விட்டு செல்வாள் என்று யாருக்கு தெரியும்.

தன் அண்ணனுக்கு இந்தத் திருமணமாவது நல்லபடியாக நிலைக்க வேண்டும். அவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வேண்டியபடி ஹரிணி உறங்கி போனாள்.

மதிய உணவு முடிந்து சிறிது நேரம் சென்று அனிதா வீட்டிற்குக் கிளம்பினர். ஹரி வரவில்லை என்று விட்டான். விக்ரம் காரை ஓட்ட அவன் காரில் எல்லோரும் சென்றனர். முதலில் விமலாவை சென்று பார்த்துவிட்டு மீனா வீட்டிற்குச் சென்றனர்.

வைஷ்ணவிக்கு மீனா அவள் அண்ணன் வீட்டில் இருப்பது தெரியாது. அவர் நேராக அவள் வீட்டிற்குச் செல்ல.... அவர்கள் மாமா வீட்டில் இருந்து இவர்களைப் பார்த்த அனி துள்ளிக்கொண்டு ஓடி வந்தாள்.

“அம்மா அங்க இருக்காங்க. மாமா வீட்ல....” என்றவளின் கண்கள் மற்றவர்களைப் பார்த்ததும், ஹரியை ஆர்வமாகத் தேட... அவன் இல்லை என்றதும், அவள் முகம் வாடி விட்டது. ஆனால் தன்னைச் சமாளித்துக் கொண்டவள் “நான் போய் அம்மாகிட்ட சொல்றேன்.” என்று திரும்பி ஓட.... மற்றவர்களும் அவளைப் பின் தொடர்ந்தனர்.

“அம்மா அந்த ஆன்டி வந்திருக்காங்க.” என்று படுத்திருந்த மீனாவை பற்றி அவள் உலுக்க.... அதில் பதறி எழுந்து அமர்ந்தவள், யாரு என்று யோசிக்கும் போதே வைஷ்ணவியின் குரல் கேட்டதும் எழுந்து வெளியே வந்தாள்.

“வாங்க ஆன்டி...” என்றவளுக்கு, ஹரிணியும் விக்ரமும் யார் என்று தெரியாவிட்டாலும், ஒரு மரியாதைக்காக அவர்களையும் அழைத்து உட்கார சொல்லிவிட்டு உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு என்றாலும் சின்ன வீடு தான். அதனால் இவர்கள் உட்கார்ந்ததுமே ஹால் நிறைந்து விட்டது போல் இருந்தது. அங்கிருந்த இன்னொரு அறையில் விஸ்வம் படுத்திருக்க... அனியிடம் அவரையும் சென்று எழுப்ப சொன்ன மீனா உள்ளே சென்று டீக்குத் தண்ணீர் வைத்துவிட்டு வந்தாள்.

விஷ்வம் வந்ததும் வைஷ்ணவி “இவ ஹரிணி ஹரியோட தங்கை.... இவர் அவளோட கணவர் விக்ரம். சென்னையில இருக்காங்க. இன்னைக்குக் காலையில தான் வந்தாங்க. அது தான் அனிதாவையும் மீனாவையும் பார்க்க வந்தோம்.” என்றதும், விஸ்வம் மகிழ்ச்சியோடு அவர்களை வரவேற்றார்.

மீனா வேலை பார்ப்பது போல் சமையல் அறையிலேயே இருந்து கொள்ள... அனி அவர்களை எட்டி பார்ப்பதும், பின் தன் தாயிடம் செல்வதுமாக இருந்தாள். ஹரிணி அழைத்ததற்கும் செல்லவில்லை... விக்ரம் அழைத்ததற்கும் செல்லவில்லை... கடைசியில் வைஷ்ணவி அழைத்ததும் தான் அவரிடம் சென்று உட்கார்ந்தாள்.

மீனா டீ கொண்டு வந்த போது அவளைப் பார்த்து புன்னகைத்த ஹரிணி “நீங்களும் இங்க உட்காருங்களேன்.” என்று அவளை அழைத்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டாள். இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியவில்லை....

ஹரிணிக்கு மீனாவிடம் பேசும் ஆர்வம் நிறைய இருந்தாலும், தான் ஆர்வக்கோளாரில் எதாவது உளறப்போய்... அது திருமணத்திற்குத் தடங்கலாக எதாவது நடந்து விடுமோ என்ற பயத்திலேயே பொதுவான சில விஷயங்களைப் பத்தி மட்டும் பேசினாள்.

சிறிது நேரத்தில் அஸ்வத்தோடு விளையாட அனி சென்றுவிட.... அத்வியும் எழுந்து சென்று அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். வீட்டிற்கு முன் நிறையக் காலி இடம் இருந்ததால்.... பெரியவர்களும் எழுந்து அங்கே சென்றனர்.

விஸ்வம் அவர்களுக்கு நாற்காலிகளைக் கொண்டு வந்து போட... அப்போது ரதியும் வந்துவிட.... எல்லோரும் அங்கேயே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். மீனா அவள் தந்தையை எதாவது சாப்பிட வாங்கி வர சொல்லி கடைக்கு அனுப்பினாள்.

சிறிது நேரத்தில் ஹரியின் பைக் சத்தம் கேட்க.... அனி துள்ளிக்கொண்டு எழுந்து ஓடினாள். அவ்வளவு விளையாட்டு மும்முரத்திலும் அவளுக்கு எப்படித் தான் அவன் வண்டி சத்தம் மட்டும் தனியாகக் கேட்குமோ....

இரும்பு கேட்டை திறந்து கொண்டு வெளியே சென்றவள், திரும்பி வரும் போது ஹரியின் கையைப் பிடித்து அழைத்து வந்தாள்.

மீனா அவனைப் பார்த்து வாங்க என்று கூடச் சொல்லவில்லை.... வேறு எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தாள். ஹரியும் அவளைக் கண்டுகொள்ளவில்லை... அவன் அனியை பார்க்கும் ஆசையில் தான் வந்தான். இதையெல்லாம் மற்றவர்கள் கண்டும் காணாமல் இருந்தனர்.

ஹரியின் கையை உரிமையோடு பிடித்துக்கொண்டு வந்த அனியை பார்த்து அத்விக்குச் சின்னப் பொறாமை. இவள் என்ன தன் மாமாவின் கையை உரிமையாகப் பிடித்துக் கொள்வது என்று நினைத்தவள், ஓடிசென்று அவளைத் தூக்க சொல்ல... அவனும் அவளைத் தூக்கிக் கொண்டான்.

அவளைப் பார்த்து அனி தன்னையும் தூக்க சொல்ல... அத்வி ஹரியிடம் இருந்து இறங்க மறுத்தாள். அதைக் கவனித்த ஹரிணி “அத்வி நீ இறங்கு டா...” என்றதற்கு அவள் மறுக்க....

“நீ இவ்வளவு நேரம் இருந்த இல்ல... இப்ப நான்னு...” அனி அழகாகத் தலையைச் சரித்துக் கேட்க.... அதைப் பார்த்த எல்லோருக்கும் சிரிப்பாக வந்தது.

“இல்ல... இவங்க என்னோட மாமா...” என்ற அத்வி இன்னும் இறுக்கமாக ஹரியின் கழுத்தை சுற்றிக்கொள்ள.... ஹரிதான் தன்னை அப்பா என்று அழைக்கக் கூடாது எனச் சொல்லிவிட்டானே.... அதனால் என்ன சொல்வது என்று தெரியாமல் ஹரியையே பார்த்த அனிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவளுக்குப் பெரியவர்கள் பேசியது எதுவும் தெரியாது இல்லையா....

“அனி இங்க வா....” என மீனா அழைக்க... தன் தாயின் குரல் கேட்டு திரும்பிய அனியை, ஹரி குனிந்து தன் மற்றொரு கையில் தூக்கிக் கொண்டான்.

“இப்ப ஹாப்பியா...” என ஹரி முறுவலுடன் கேட்க... அனி அவன் கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டாள். அவள் விசும்புவதில் இருந்து அவள் அழுகிறாள் என எல்லோருக்கும் புரிந்தது.

அத்வி போல் அவளால் அவனிடம் உரிமை கொண்டாட முடியவில்லையே என்ற வருத்தம் அவளுக்கு. மகளின் தவிப்பை பார்த்து மீனவுக்கும் அழுகை வர... சட்டென்று எழுந்து அவள் உள்ளே சென்றுவிட்டாள்.

“அனி குட்டி இப்ப எதுக்கு அழறீங்க? இங்க பாரு என்னை?” ஹரி பேசிக்கொண்டே இருக்க... அனி பதில் சொல்லாமல் அப்படியே அவன் கழுத்தில் முகத்தைப் புதைத்தபடியே இருந்தாள்.

“இங்க பாரு நான் சொல்றது கேளு....” என ஹரி சொல்ல அப்போதும் அவள் நிமிராமல் இருக்க...

“சரி அப்ப நான் போறேன்.” என்று அவன் சொன்னதும் தான் நிமிர்ந்தாள்.

“அத்வி அனிக்குக் கை கொடு...” என்றதும், அத்வி தன் கையை நீட்ட... “நீயும் கொடு....” என்றதும், அனி தயங்கித் தயங்கி கை நீட்ட... இருவரும் கை பற்றிக் கொண்டனர்.

“இவங்க என்னோட அப்பா. நான் என் அப்பாவை தான் தூக்க சொன்னேன்னு சொல்லு....” என்றதும், அனியின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.

“அப்பாவா ப்பா...” அவள் ஆச்சர்யமாகக் கேட்க... ஹரி ஆமாம் என்று தலை அசைத்ததும், அவனிடம் இருந்து வேகமாக இறங்கியவள் மீனாவை தேடி உள்ளே சென்றாள்.

“அம்மா...” அவள் கத்திக்கொண்டே வருவதைப் பார்த்து மீனா கண்களைத் துடைத்துக்கொண்டாள். அவளுக்கும் ஹரி சொன்னது கேட்டு தான் இருந்தது.

“அவங்க அப்பா சொல்ல சொல்லிட்டாங்க மா... நான் அப்பா சொல்லவா...” என ஆர்வமாகக் கேட்டவள், தன் தாயின் கலங்கிய கண்களைப் பார்த்து “வேண்டாமா...” எனப் பயந்து கொண்டே கேட்டாள். முன்பு ஹரியை அப்பா என்று அழைத்துவிட்டு வாங்கிய அடி நினைவுக்கு வந்தது.

மகளின் தவிப்பை மீனாவும் பார்த்துக்கொண்டு தானே இருந்தாள். இனி நடப்பது நடக்கட்டும் என்று நினைத்தவள் “அப்பாவே சொல்லு...” என்றவள், மகளின் கண்ணீரை துடைத்து விட....

அனி துள்ளலுடன் மீண்டும் ஹரியிடம் வந்தவள் “அம்மா அப்பா சொல்ல சொல்லிட்டாங்க.... என்னைத் தூக்குங்க அப்பா...” என்றதும், அத்வி அவளாகவே ஹரியிடமிருந்து இரங்கி தன் தந்தையிடம் சென்று விட... அனியை ஹரி தூக்கிக் கொண்டான்.

எப்படியோ ஹரி மீனா வாயில் இருந்தே அப்பா என்று சொல்ல சொல்லும்படி அனி செய்து விட்டாள். அனிக்காகத் திருமண பந்தத்தில் இணையும் இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ....





 
???

அனிதா அப்பாவாயாச்சு ஹரி.......
அனிதா ஹாப்பி....... ஹரியும் மீனாவும்???
வைஷ்ணவி எல்லாமே தாடலாடி........ பையனுக்கு இனியும் யோசிக்க time கொடுக்கக்கூடாதுன்னு முடிவில் இருக்காங்க........

மீனா ஹரி வாழ்க்கையை படிக்க waiting ......
 
Last edited:
Top