Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 10

Advertisement

Aathirai

Well-known member
Member
2032

(Episode-10)
ரகுராம் மதிய உணவை முடித்து சிறிது நேரம் அவர் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். இதுதான் சமயம் என்று மகேஷ் அவர் அறைக்குள் நுழைந்தார். சிறிது நேரத்தில் அஞ்சலியை அழைத்தார். அஞ்சலி பயத்துடனே சென்றாள்.

“ஆங்.. அஞ்சலி.. அப்பா உன்கிட்ட ஏதோ பேசணுமாம்.. பேசு..” என்று சிரித்துக்கொண்டே அவளை வசமாய் மாட்டிவிட்டுக் கிளம்பினார் மகேஷ்.

அஞ்சலி என்ன செய்வதென்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டே நின்றாள். ரகுராம் அவளை ஒரு பார்வை பார்த்தார்.

“உனக்கு எம்.எஸ்.சி பண்ணனுமா? மகேஷ் சொன்னான்.” என்றார்.

“ஆஆமா பா.. மெட்ராஸ் யுனிவர்சிட்டி தேர்ட் வந்திருக்கேன். காலேஜ் டாப்பர் பா.. இன்னும் மேல படிக்கலாம்னு இருக்கேன்.” என்றாள் தயங்கிக்கொண்டே..

“இப்போ, நீங்கல்லாம் படிச்சு, வேலைக்கு போய் என்ன பண்ணப் போறீங்க.? ஸ்வேதாவும் இதே தான் பண்ணா. ஏதோ சரின்னு வேலைக்குப் போக ஒத்துக்கிட்டேன். இன்னும் கொஞ்ச நாள் தான். நல்ல அலையன்ஸ் வந்துச்சுன்னா மேரேஜ்தான். அதுக்கப்பறம் எந்த வேலைக்கு போவீங்க.?” என்றார் சற்று கடுப்புடன்.
அஞ்சலிக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை. உண்மை தெரிந்தால் என்னாகுமோ?? என்று தொண்டைக்குழி அடைக்க நின்றாள்..

“சரி.. இப்போதைக்கு எம்.எஸ்.சி பண்ணு. ஆனால், அடுத்து வேலைக்கு போறேன்னு வந்து நிக்கக்கூடாது.” என்றார் கறாராக..

“ம்ம்.. ஓகே பா..” என்றாள் ஒருவித கலக்கத்துடன்..

அவ்வளவுதான், அஞ்சலிக்கு தான் காண்பது கனவா, நினைவா என்று இருந்தது... எப்படியோ ஒரு வழியாக சம்மதம் தெரிவித்ததே சந்தோஷம் என்று நினைத்தாள்.. இதை உடனே மதுவிடம் போன் செய்து சொன்னாள் அஞ்சலி... மதுவும் மிகவும் சந்தோஷப்பட்டாள்..

“ஹே... ரியல்லி ஐ ஆம் வெரி ஹாப்பி அஞ்சலி... திரும்பவும் நாம நாலு பேரும் ஒண்ணா சேர்ந்து படிக்கப் போறோம்.. ஹைய்யா...” என்று துள்ளிக் குதித்தாள் மது...

“ம்ம்ம்... ஆமா, மது.. நிஜமா இத நெனச்சு எவ்ளோ நாள் நான் தூங்காம இருந்தேன் தெரியுமா..? இனி நான் நிம்மதியா தூங்குவேன்...” என்றாள் அஞ்சலி..

“ஹும்ம்.. ஓகே மா... இனி நாம அப்ளிகேஷன் வாங்க ஒன்ஸ் சென்னை போகணும்... சீக்கிரமே போனா பரவால்ல.. நான், ரூபா, ஷாலினி அவங்ககிட்டயும் கேட்டுட்டு எப்போ போலாம்னு நாளைக்கு சொல்றேன்... ஓகே...” என்றாள் மது...

“ஓ! ஸ்யூர் டியர்.. கண்டிப்பா போலாம்.. நான் மாமாகிட்ட சொல்லிடறேன்...” என்றாள் அஞ்சலி உற்சாகமாக...

“ஓகே டியர்.. டேக் கேர்... ஸி யூ.. பை..” என்று போனை வைத்தாள் மது...

அஞ்சலி அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை... அதன் பிறகு தான் வீட்டில் அவள் கொஞ்சம் உற்சாகமாக இருந்தாள்... வீட்டில் இருந்த அனைவரும் சந்தோஷப்பட்டனர்... வீடே கலகலப்பானது...

அதன் பிறகு வந்த நாட்களில், மகேஷிடம் பேசி அதே வாரத்தில் அவள் சென்னைக்கு கிளம்பியே விட்டாள்.. அதே நேரம் அங்கே ரூபா, ஷாலினி, மது மற்றும் மதுவின் அப்பா என அனைவரும் கிளம்பியிருந்தனர்...

மதுவின் அப்பா, அவருடைய நண்பரின் வீட்டில் அனைவரும் தங்க ஏற்பாடு செய்திருந்தார்... மூன்று நாட்கள் தங்குவதாகத் திட்டம்... நீண்ட நாள் கழித்து தோழிகள் அனைவரும் ஒன்றாக சந்தித்ததில் அந்த வீடே குஷியானது...

முதல் நாள், கொஞ்சம் ஓய்வில் இருந்தனர்... இரண்டாம் நாள், தாங்கள் படித்த கல்லூரிக்குச் சென்று அவர்களது செர்டிபிகேட் அனைத்தையும் வாங்கி விட்டு, கல்லூரி விரிவுரையாளருடன் கலந்து பேசி எந்தெந்த கல்லூரியில் அப்ளிகேஷன் வாங்குவது என்று முடிவு செய்தனர்...

மூன்றாம் நாள், அலைந்து திரிந்து மூன்று கல்லூரியில் அப்ளிகேஷனை பில் அப் செய்து கொடுத்து விட்டு வந்தனர்... எந்தக் கல்லூரியில் நால்வருக்கும் இடம் கிடைக்கிறதோ அங்கேயே சேர்ந்து விட வேண்டும் என்பது அவர்களின் முடிவு...
எப்படியோ கல்லூரியில் சேர்ந்து விடுவோம் என்று நிம்மதியோடு வீடு வந்து சேர்ந்தனர்... வரும் போதே மதுவின் அப்பாவும், அவருடைய நண்பரும் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர்... இவர்களும் அதில் கலந்து கொண்டனர்...

“என்னாச்சு அங்கிள்..?? ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமா பேசிட்டு இருக்கீங்க...” என்று மது ஆரம்பித்தாள்...

“ஒன்னும் இல்ல மா.. நீங்க எல்லாரும் இங்க காலேஜ்ல ஜாயின் பண்ணதும் எங்க தங்குவிங்கன்னு உங்க அப்பாகிட்ட கேட்டேன்.. அதுக்கு அவன் கண்டிப்பா ஹாஸ்டல் தான்னு சொல்றான்... நானும், அத்தையும் இங்க தனியா தான் இருக்கோம்... என் பையன் பிரவீன் சிங்கப்பூர்ல இருக்கான்.. எப்பவாது அவன் கூப்பிட்டா மூணு மாசம், ஆறு மாசம்னு போய்டுவோம்... அப்போல்லாம் இங்க வீடு பூட்டியே இருக்கும்... என்னதான் செக்யுரிட்டி இருந்தாலும் நம்ப முடியாது... மாடில என்னோட பையனோட ரூம் ப்ரீயா தான் இருக்கு... அவன் வந்தாலும் அங்க அதிகமா போறதில்ல... யாருக்காவது வாடகைக்கு விடலாம்னா, என் மனைவி தயங்கறா... அதனால தான் உன் அப்பன் கிட்ட, நீங்க எல்லாரும் உங்க படிப்பு முடியற வரைக்கும் இங்க தங்கலாமேன்னு கேட்டேன்... அதுக்கு அவன் முடியாதுன்னு சொல்றான் மா... நீயே யோசிச்சு பாரு...” என்றார் வெங்கடேசன்...

“ஹே... பரவாலையே இது கூட நல்ல ஐடியா தான்... எப்போ பாரு அந்த ஹாஸ்டல்ல போடற சப்பாத்தி வறட்டிய சாப்ட்டு சாப்ட்டு போர் அடிச்சு போச்சு... இனி நாங்களே குக் பண்ணிக்குவோம்...” என்றாள் ரூபா குஷியாக...

மதுவின் அப்பா விநாயகம் ரூபாவை ஒரு பார்வை பார்த்தார்... ரூபா அமைதியானாள்... அப்போது மது பேசினாள்...

“அது அங்கிள்... அப்பாவுக்கு, என்னோட சின்ன வயசுல இருந்தே என் மேல கொஞ்சம் பயம் அதிகம்... ஒரே பொண்ணுன்றதால எங்கயும் அவ்ளோ சீக்கிரம் விட மாட்டார்... நான் சென்னை வந்ததே அம்மா கொடுத்த தைரியத்துல தான்... அப்போவே அவர் அரை மனசோட தான் சம்மதிச்சார்.. அதுவும் ஹாஸ்டல்னால... இப்போ நீங்க இப்படி கேக்கறதால அவருக்கு ரொம்ப யோசனையா இருக்கும்... அதனால தான் அப்படி சொல்றாரு... அதுவும் இல்லாம அவர் மட்டும் பர்மிஷன் கொடுத்தா போதாது அங்கிள்... இவங்க மூணு பேர் வீட்லயும் கேக்கணும் இல்லையா... இருக்கட்டும் அங்கிள், நீங்க வொர்ரி பண்ணிக்காதிங்க... இன்னும் நாங்க காலேஜ்ல ஜாயின் பண்ண ஒரு மாசம் இருக்கு... அதுக்குள்ள யோசிச்சு ஒரு நல்ல பதிலா சொல்றோம்..” என்றாள் மது தெளிவாக...

மதுவின் இந்த தெளிவான பதில் அவள் அப்பாவிற்கு மட்டுமல்ல, வெங்கடேசன் மற்றும் அவரது மனைவிக்குமே திருப்தியாக இருந்தது... அப்போதே மது அவர்களது நெஞ்சில் இடம் பிடித்து விட்டாள்... ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்திவிட்டாள்...
அஞ்சலிக்கு, மதுவை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது... எத்தனை ஒரு தெளிவு அவளிடம் என நினைத்தாள்... யார் மனதையும் புண்படுத்தாமல், அதே சமயம் அவர்களுக்கு சாதகமாகவும் அவள் பேசிய விதம் அவளை ரசிக்க வைத்தது...

இப்போது மட்டுமல்ல, அஞ்சலிக்குத் தெரிந்தவரை தனிப்பட்ட முறையில் அவளது நெருங்கிய மற்றும் சிறந்த தோழி மது தான்... எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுப்பாள் மது...

நல்லதோ, கெட்டதோ அதை எப்படி எதிர்நோக்க வேண்டும் என்பதை அவளிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அஞ்சலி அடிக்கடி நினைப்பாள்... இப்படியாக அவர்கள் சென்னையை விட்டுச் சென்று கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகி இருந்தது...

ஒரு வழியாக நால்வருக்கும் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் ஒன்றாக சீட் கிடைத்தது... நால்வரும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை... அதுமட்டுமல்லாமல், அவர்களது வீட்டில் உள்ளவர்கள், சென்னையில் உள்ள வெங்கடேசன் வீட்டில் தங்கிப் படிக்க சம்மதித்தது தான் மிகப் பெரிய சந்தோஷமே...

மதுவின் அப்பா விநாயகம், அஞ்சலியின் மாமா மகேஷ் என அவர்கள் வீட்டிலிருந்து அனைவரும் அவர்களை கல்லூரியில் சேர்க்க கூடவே வந்திருந்தனர்.. அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து விட்டுச் சென்றனர்... வெங்கடேசன் வீட்டில் அவர்கள் தங்குவது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது அவர்களுக்கு...

அடுத்த நாள் புதிதாய் தாங்கள் செல்லும் கல்லூரியைப் பற்றித் தோழிகள் நால்வரும் பேசிக்கொண்டிருந்தனர்... சிறிய பயம் கூட தோன்றியது ஷாலினிக்கும், ரூபாவுக்கும்.. மது சிறிது ஆர்வமாய் இருந்தாள்.. ஆனால், அஞ்சலிக்கு ஏனோ ஒரு புதுவித சந்தோஷம் ஏற்பட்டது.. அது, எதனால் என்று தான் அவளுக்குத் தெரியவில்லை...
 
Top