Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 13

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 13

இராஜாதித்யனின் மூலமாக அரச அறிவிப்பாக, இளவரசி பொற்செல்வியின் திருமண நிட்சயம் நாடெங்கும் தெரிவிக்கப்பட்டது.

முதலில் இதை கேட்ட சக்திக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. எப்படி சுந்தரேஷ்வரி இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் என்பதை பற்றி நினைத்து குழம்பி, பிறகு இது என்ன தன் திருமணமா என்று தோளை குலுக்கி கொண்டு சென்றுவிட்டாள்.

நாள்கள் நகர நகர, பொற்செல்விக்கு பயம் அதிகரித்தது. பணம், செல்வாக்கு, அதிகாரம் என எதுவுமற்றவனை, தான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலையை எண்ணி நொந்தாள் பொற்செல்வி.

விவேக்கின் பெற்றோருக்கு இராஜாதித்யனின் அரசியல் விளையாட்டுகள் புரியாது. ஆகையால், ராஜ குடும்பத்து சம்பந்தம் என்பதால் மிக மகிழ்ச்சியுடன் இருந்தனர். அவர்களின் மகிழ்ச்சிக்கு சிறிதும் குறைவு வராதபடி, இராஜாதித்யனும் கவனமெடுத்து செய்து கொண்டிருந்தான்.

விவேக்கிற்கு தான் எல்லாம் கடுமையாக இருந்தது. திடீரென அரச குடும்பத்தில் ஒரு ஆளாய் மாறியதால், மற்றவர்களிடம் இருந்து கிடைத்த அதிகபடி மரியாதை, அவனை கூச செய்தது. முன்பும் மரியாதை அதிகம் உண்டு அவனுக்கு. அது அவன் செய்யும் வேலையின் பொருட்டு கிடைத்தது. ஆகையால் கொஞ்சம் கர்வம் கூட இருந்தது விவேக்கிற்கு. ஆனால், இப்பொழுது எல்லாம் தலைகீழ். முகத்திற்கு முன்பு வாழ்த்து சொல்லி புகழுபவர்கள், பின்னால் சென்று பேசும் கேலியை விவேக் அறிவான். அது ஆண்மகன் அவனின் ஒழுக்கத்திற்கு கலங்கத்தை விளைவிப்பது போல இருந்தது. யாரிடமும் தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள கூட முடியவில்லை அவனால்.

அரச வேலை என்று திமிரோடு வேலைக்கு சேர்ந்த பொழுது, நண்பர்களை கொஞ்சம் எள்ளலாய் தான்‌ பார்த்தான். அதன் பிறகு, வேலை பளுவின் காரணமாக, அவனது நண்பர்கள் வட்டம் சுருங்கி இல்லாமலே போனது. என்றாவது கிடைக்கும் ஓய்விலும், உண்டு உறங்கி எழுந்தால் நாள் ஓடிவிடும். அப்பொழுதெல்லாம் நண்பர்களின் தேவை இருக்கவில்லை. தேவை இருக்கும் பொழுது நண்பர்கள் இல்லை.

இந்த வாழ்க்கை ஏதோ தன்னிடம் சொல்ல வருவதை போல உணர்ந்தான் விவேக். ஒரே நாளில் புத்தரை போல ஆகிவிட்டதாக தன்னை தானே நினைத்துக் கொண்டான்.

‘இங்கிருந்து, இப்படியே, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிட்டால் என்ன?’ ஒரு நொடி‌ விவேக்கின் மனம் ஆசையாய் நினைத்து பார்த்தது.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இராஜாத்தியன் குண்டுக்கட்டாக இவனை தூக்கி வந்துவிடுவான்.

இராஜாத்தியன் அலுவலக அறையினுள் இருக்க, வெளியே நின்றிருந்த விவேக்கின் எண்ணங்கள் இப்படியாக தான் சென்றது‌‌.

கொஞ்சம் மூச்சு முட்டுவது போல இருக்க, அங்கிருந்து நகர்ந்து பால்கனி இருக்கும் பக்கம் வந்து நின்றான். ஆனால், அங்கே சக்தி கையில் காபி மக்குடன் நின்றுக் கொண்டிருந்தாள். அது அவளின் காபி நேரம்.

‘இங்கேயும் நிம்மதி போயிற்றா!’ என்று எண்ணியவன் நகர போக, “நீங்க இருங்க ப்ரதர். நான் வேணா போறேன்.” என்றாள் சக்தி.

சில நாள்களாக தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கவனத்தில் வைத்துக் கொண்டே தான் இருக்கிறாள் சக்தி. பொற்செல்வியின் கல்யாண பேச்சில், அவள் மகிழ்ந்தாளோ இல்லையோ சக்திக்கு மிகுந்த மகிழ்ச்சி தான். எப்படியும் திருமணம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஒரு மாதம் அரண்மனையே அதகளப்படும். அதில் எல்லாம் சக்தியை பற்றி நினைக்க யாருக்கும் நேரமிருக்காது. கொஞ்சம் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்கலாம். முடிந்தால் ஆதிரையனை சென்று பார்த்துவிட்டு கூட வரலாம்.

பொற்செல்வியின் திருமணம் முடிந்த பின்பு, சுந்தரேஷ்வரி மகளை சீராட்டுவதில் தன்னை கண்டு கொள்ள மாட்டார் என இஷ்டத்திற்கு மனக் கோட்டைகளை கட்டி வைத்திருந்தாள் பெண்.

கல்யாண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து, விவேக்கிற்கு வேலை பளுவே இல்லை. உண்மையில் வேலைகளே இல்லை. வெறுமனே அரண்மனைக்கு வந்து தன் இருப்பை காட்டிவிட்டு சென்றுக் கொண்டிருக்கிறான். அவன் வருவதையும் போவதையும் வாடி போய் நிற்பதையும் அவ்வப்பொழுது சக்தி பார்த்துள்ளாள். அவனை பார்த்தால் பாவமாக தான் இருந்தது சக்திக்கு. திடீரென, ‘Pot calling the kettle black’ என்ற ஆங்கில பழமொழி நினைவுக்கு வந்ததும், தலையில் அடித்துக் கொண்டு சிரித்தாள். அதன் நீட்சி தான், இப்பொழுது அவனுக்காக இடத்தை தந்துவிட்டு தான் செல்வதாக கூறியது.

“இல்லங்க மேடம். நீங்க இருங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என்று பொய் சொன்னான் விவேக்.

“அங்கேயும் போயி சும்மா தானே நிக்க போறீங்க. அதுக்கு இங்கேயே நில்லுங்க ப்ரதர். நான் கிளம்பறேன்.” என்று புன்னகையுடன் சொன்ன சக்தி, மிச்சம் இருந்த காபியை ஒரே மூச்சில் குடித்தவள், “ஸ்டே ஸ்ட்ராங்!” என்றபடியே திரும்பினாள்.

பொற்செல்வி அங்கே இருவரையும் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தாள். உள்ளுக்குள்ளே அய்யோ என்று இருந்தது சக்திக்கு. இருந்தாலும் வாய் திறக்காமல் அவள் நகர, பொற்செல்வி சக்தியிடம் எதுவும் வம்பு செய்யவில்லை.

பொற்செல்வியிடம் இருந்து தப்பித்ததன் அடையாளமாக‍, நெஞ்சில் கையை வைத்து, வாயை குவித்து காற்றை ஊதினான் சக்தி.

எப்படி தன்னை பார்த்தும் ஒன்றும் பேசாமல் விட்டுவிட்டால் என்ற கேள்வி சக்தியின் மனதிற்குள் எட்டிப்பார்த்தது. விடையாக விவேக் வந்தான். விவேக் அங்கே இருப்பதால் தான், பொற்செல்வி தன்னை எதுவும் பேசவில்லை என்று நினைத்துக் கொண்டாள் சக்தி. உண்மையான காரணகர்த்தாவோ இராஜாதித்யன் தான்!

இராஜாதித்யனின் மறைமுக மிரட்டல்களை சரியாக புரிந்துக் கொண்ட சுந்தரேஷ்வரி, தக்க சமயம் வரும் வரை, சக்தியுடன் முட்டி, மோதி, மல்லு கட்டாமல் இருக்குமாறு பொற்செல்வியிடம் கூறி உள்ளார்.

மனதில் நினைத்ததை பேச முடியாமல் ஆத்திரத்தில் தவித்துக் கொண்டிருந்தாள் பொற்செல்வி. அப்பொழுது தான், விவேக் தனியாக பால்கனியை நோக்கி செல்வது கண்ணில் பட்டது. குறைந்தபட்சம் அவனிடம் பேசி, அவனாக திருமணத்தை நிறுத்துமாறு செய்ய வேண்டும் என்று நினைத்து அவனை பின் தொடர்ந்தாள் பொற்செல்வி. அங்கோ சக்தியும் விவேக்கும் பேசிக் கொண்டிருப்பதை கண்டு புகைச்சல் ஆனது அவளுக்கு. அதுவும் சக்தி கடைசியாக சொல்லி சென்ற, “ஸ்டே ஸ்ட்ராங்க்” என்ற வார்த்தைகள் எல்லாம், எரியும் தீயிற்கு எண்ணெய் வார்த்தது போல இருந்தது.

சக்தி சென்று சில விநாடிகள் ஆன பின்பும் யாரோ பின்னல் நிற்பது போல் தோன்ற, திரும்பி பார்த்தான் விவேக். சிறு அதிர்ச்சி அவனுக்கு! சரி எப்பொழுது என்றாலும், பொற்செல்வியை அவன் சந்தித்து தானே ஆக வேண்டும். எத்தனை நாள்கள் தான் அவளை தவிர்க்க முடியும். ஆகையால் அங்கேயே நின்றான் விவேக்.

கொஞ்சம் உக்கிரமாய் தான் நின்றிருந்தாள் பொற்செல்வி. விவேக் அமைதியாக இருந்தான். எதுவாகினும் அவள் வாயிலிருந்தே வரட்டும் என்று காத்திருந்தான்.

“எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை.” என்றாள் பொற்செல்வி. குரலில் அதிகார தோரணை தூக்கலாக இருந்தது‌.

“நல்லது. எனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.” என்றான் விவேக்.

விவேக் சட்டென தனக்கும் விருப்பமில்லை என்று சொல்லுவான் என பொற்செல்வி எதிர்பார்க்கவில்லை. தன் அண்ணன் உடனே எப்பொழுதும் இருக்கிறானே, இவன் தான் ஏதோ செய்து அண்ணன் மனதை மாற்றி, தனக்கும் இவனுக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டான் என்று நினைத்திருந்தாள் பொற்செல்வி. வெளியேவும் அப்படி தானே பேசிக் கொண்டார்கள்.

“சும்மா நடிக்காதீங்க… நீங்க தான் எங்க அண்ணனோட மனசை ஏதோ சொல்லி மாத்திருக்கீங்க…” என்று அவனை குற்றம் சாட்டினாள் பொற்செல்வி.

விவேக்கிற்கு தலையிலே அடித்துக் கொள்ளலாமா என்று இருந்தது.

பணக்கார வீட்டு பெண், திமிராய் தோன்றியதெல்லாம் பேசுகிறாள் என்று கூட இதை எடுத்துக் கொள்ள முடியாது. முட்டாளுக்கு முந்தைய நிலையை போல இருந்தது அவளது பேச்சு.

“நான் சொன்னா உங்க அண்ணன் கேட்பாரா என்ன? அந்த அளவுக்கு உங்க அண்ணனோட மனசு வீக்கா? என்னால உங்க அண்ணனோட மனசை மாத்தி முடியும்னா, இளவரசி உங்காளல மாத்த முடியாதா?! இந்த கல்யாணம் வேண்டாம்னு நீங்களே உங்க அண்ணன் மனசை மாத்துங்க…” என்று வெறுப்பாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் விவேக்.

இந்த அளவிற்கு முகத்திற்கு நேராக யாருமே பொற்செல்வியை இதுவரை அவமானம் செய்ததில்லை. அதில் திகைத்து போய் அப்படி நின்றிருந்தாள் பொற்செல்வி.

கணவர் இறந்த பின்பு, மகனையும் மகளையும் அழைத்துக் கொண்டு சுந்தரேஷ்வரி அரண்மனைக்கே வந்துவிட்டார். கணவரின் குடி மற்றும் சூதாட்ட பழக்கத்தின் காரணமாக, சுந்தரேஷ்வரிக்கு கணவன் வழியில் சொத்து என்று எதுவும் இல்லை. வந்தவரை இருகரம் நீட்டி வரவேற்றார் நான்காம் இராஜாதித்யர்.

சுந்தரேஷ்வரிக்கும் பர்வதத்திற்கும் பெரிதாக ஒற்றுமை என இருந்ததில்லை. வெளிப்பார்வைக்கு இருவரும் இனிமையாக பழகுவது போல இருந்தாலும், உள்ளுக்குள்ளே இருவருக்குமே ஒருவரை ஒருவர் பிடிக்காது. அதுவும் சக்தி பிறந்தது முதலாக அவள் தான் தன் மருமகள் என்று சுந்தரேஷ்வரி அலட்டுவது அறவே பிடிக்காது பர்வதத்திற்கு. ஆனாலும் பர்வதம், சுந்தரேஷ்வரியின் குழந்தைகளான (ஐந்தாம்) இராஜாதித்யன் மற்றும் பொற்செல்வியிடம் வேற்றுமை காட்டியதில்லை. அவ்வகையில் பொற்செல்விக்கு சிறு வயதில் இருந்தே கேட்டதெல்லாம் கிடைத்து.

பொற்செல்வி நினைத்ததெல்லாம் நடந்தது. மனதால் நினைத்து அதை வாய்விட்டு சொல்லும் சிரமம் ஒன்று மட்டும் தான் அவளுக்கு. அரச குடும்ப மரியாதை மற்றும் பயம், அவளை மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டியது எல்லாம் அவளை ஒரு கனவு உலகத்திலே இதுவரை மிதக்க வைத்து கொண்டிருந்தது. இன்று தான் அவளின் பாதம் தரையிலே பட்டது. பட வைத்தான் விவேக்.

முதல் உதாசீனம் அவனுக்கும் திருமணம் வேண்டாம் என்றது. இரண்டாவது அவமரியாதை அவளை எதிர்த்து பேசியது! மூன்றாவது அவளை முட்டாளாக்கி செல்வது! ஆனாலும் அவன் சொன்னது உண்மை தானே? இவன் சொன்னால் மட்டும் அவள் அண்ணன் எப்படி கேட்பான்? பிரியமான தங்கையின் பேச்சே அவன் காதில் விழவில்லை. இவன் பேச்சா அவன் கேட்க போகிறான். இதை எல்லாம் விட, தன்னை பிடிக்கவே பிடிக்காத ஒருவனை திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் தன் நிலையை எண்ணி அவமானமாக உணர்ந்தாள் பொற்செல்வி.

எவரின் மனதிலும் துளி மகிழ்ச்சி இன்றியே ஒரு சுப நிகழ்வு நடக்க ஆரம்பித்தது.

திருமண வைபோகத்தின் முதல் நாள் மஞ்சள் குளியல் வைத்திருந்தனர். இரண்டாம் நாள் பன்னீர் குளியல். மூன்றாம் நாள் மண பெண்ணிற்கு மாப்பிள்ளை வீட்டார் சார்பாக பரிசு பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். இதுவரையில் விவேக்கிற்கு எதுவுமே பிரச்சனை இல்லை. நான்காம் தான் அவனுக்கு பிரச்சனையே ஆரம்பித்தது.

மாப்பிள்ளை வேட்டைக்கு சென்று, ஏதோ ஒரு மிருகத்தினை வேட்டையாடி கொண்டு வந்து, அதன் இரத்தத்தில் மணப்பெண்ணிற்கு திலகமிட வேண்டும். அதன் பின்பு ஐந்தாம் நாள் சூரியன், நீர் மற்றும் இயற்கையின் சாட்சியாக திருமணம் நடைபெறும்.

நான்காம் நாள் மதிய வேளையில் ஒரு துப்பாக்கியினை குடுத்து விவேக்கை வேட்டியாடி வருமாறு அவனை தனியே ஒரு காட்டிற்குள் அனுப்பி விட்டனர்.

தலையெழுத்தே என்று கானகத்திற்குள் நுழைந்தான் விவேக். நீண்ட தூரம் நடந்து சென்றுக் கொண்டே இருந்தவன், ஒரு இடத்தில் அமர்ந்துக் கொண்டான். வலித்த கால்களை கொஞ்சம் நீவி விட்டுக் கொண்டான்.

“இவனுங்க முறைப்படி கல்யாணம் பண்ணனும்னா பண்ணிட்டு போக வேண்டியது தானே? நடுவுல என்னை இழுத்துவிட்டு, என்னை ஏன் தான் இப்படி சாக அடிக்கறாங்களோ!” புலம்பிக் கொண்டே மீண்டும் எழுந்து நடக்கலானான்.

இராவணத்தீவில் சுவற்றிற்கும் கூட காதுகள் உண்டு என்பதை அனுபவத்தால் அறிந்தவன் விவேக். அதுவும் அவனுக்கே ஒற்று வைத்த பார்த்த பொழுதெல்லாம், உடலுக்குள் ஒரு நடுக்கம் ஓடிக் கொண்டே தான் இருந்தது. ஆயினும் தான் உண்டு தன் வேலை மட்டும் உண்டு என்று இருந்தபடியால், அவன் தலை பல நேரங்களில் தப்பி கொண்டே வந்தது.

காட்டில் ஏதேனும் மிருகம் தென்படுமா என்று சுற்றி பார்த்துக் கொண்டே வந்தான் விவேக். கிட்டதட்ட இருட்டி கொண்டு வந்தது. நேரம் இரவை சமீபத்துவிடும் போல இருந்தது. சறுகுகள் மிதிபடும் ஓசை கேட்க, காதுகளை கூர்மையாக தீட்டிக் கொண்டான் விவேக். கையில் துப்பாக்கியினை தயாராய் வைத்துக் கொண்டான்.

தற்பொழுது விவேக்கின் பின்னால் இலைகள் மிதிபடும் சப்தம் நன்றாக கேட்க, துப்பாக்கியை சுடுவதற்கு ஏதுவாக பிடித்தபடி அவன் திரும்ப, எதிரேயோ இராஜாதித்யன் நின்றுக் கொண்டிருந்தான்.

ஒரு நாட்டின் மன்னன் தன் எதிரே நிற்கிறான்‌. அவன் தங்கையையே தனக்கு மணம் முடித்து தரப்போகிறான். அப்படியானவனுக்கு எதிராகவே துப்பாக்கியினை தூக்கிக் கொண்டு நிற்கிறான் விவேக்!
 
🙂🙂🙂 ஹீரோ யாருன்னு கன்பார்ம் பண்ணா தான் இனி கமெண்ட் 🤨🤨🤨🤨🤨

சக்தி ஆதிரையனை நினைச்சு கிட்டு இருக்க மாதிரி காட்டிட்டு திடீர்னு ராஜாவை கல்யாணம் செஞ்சு வைக்க போறிங்களா 🥶🥶🥶🥶🥶🥶
 
Last edited:
சக்தி, விவேக் மேல பரிதாப படுகிறதை பார்க்கும் போது ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது.

பழுத்த ஓலையை பார்த்து குருத்தோலை சிரிச்சதாம்.
 
Last edited:
Top