Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 9

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 9

ஆதிரையனுக்கு இன்று விடுமுறை. ஆகையால் விழிப்பு தட்டியும் அவன் தன் படுக்கையிலே புரண்டுக் கொண்டிருந்தான். எப்பொழுதுமே இப்படி இருப்பவன் அல்ல. எல்லாம் பாழாய் போன அவளால் வந்தது. பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்று சொல்லுவதில் என்ன பெரிய சிக்கல் இருந்துவிட போகிறது.

சர்வ நிச்சயமாய் அவள் பிடித்திருக்கிறதென்று தான் சொல்லுவாள் என நினைத்திருந்தான் ஆதிரையன். அவள் மறுப்பாள் என்று துளி கூட நினைக்கவே இல்லை. பிறகு எப்படி எல்லாம் தலைகீழானது? எல்லாவற்றிற்கும் அவன் வாய் தான் காரணம். உள்ளூரே அவளிடம் மட்டும் இருக்கும் போட்டி மனப்பான்மை, கொஞ்சம் திமிர், மறுக்கவே மாட்டாள் என்ற இறுமாப்பு எல்லாம் அன்றைய அவன் பேச்சில் வெளி காட்ட, அவளின் கோபமோ ஆதியினை தலைகீழாக விழச்செய்தது.

கொஞ்சம் கூடவா தன்னை அவள் தேடி இருக்க மாட்டாள்? என்று எண்ணிக் கொண்டே கட்டிலில் உருண்டுக் கொண்டிருந்தான் ஆதிரையன்.

“டேய் ஆதி நீ என்னடா இப்படி ‌ உருளுற?” என்று அவனின் செய்கையை வித்தியாசமாக பார்த்தபடி கேட்டார் அவனின் அன்னை தான்யலட்சுமி.

“ம்மா…” என்று பதறிவிட்டான் ஆதி.

சக்தியை நினைத்து பைத்தியக்காரன் போல உருண்டுக் கொண்டிருந்ததை கண்டு கொண்டிருப்பாரோ என்று பயந்தான் ஆதி.

“என்ன டா பைத்தியக்காரன் போல உருளுற…?” சந்தேகத்தோடு கேட்டார்.

“நைட்டு படிச்சிட்டு கொஞ்சம் லேட்டா தான் படுத்தேன். அதான் இப்ப தலை வலிக்குது.” என்று சரளமாக பொய் சொன்னான் ஆதி.

காதல் வந்தால் களவு தானே வந்துவிடும் போல.

“சீக்கிரம் கீழ இறங்கி வாடா. காபி போட்டு தர்றேன். சூடா குடிச்சா தலைவலி பறந்து போயிடும்.” என்றார் தான்யலக்ஷ்மி. அன்னையாக மகனின் உடல்நலம் மீது அக்கறையோடு.

அன்னை சென்றதும் தலையை தட்டிக் கொண்டவன், தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கீழே சென்றேன்.

ஆதி படி இறங்குவதை பார்த்ததுமே, கணவருக்கு பறிமாறிக் கொண்டிருந்த தான்யலட்சுமி அதை அப்படியே விட்டுவிட்டு சமையலறைக்குள் காபி போட சென்றார். மகனுக்கும் கணவருக்கும் அவர் கையால் சமைத்து பறிமாறினால் மட்டுமே நிம்மதி.

“குட் மார்னிங் டாட்” என்ற படியே வந்து அமர்ந்தான் ஆதி.

“மார்னிங் சன்…” என்றார் சிரித்தபடியே தேவநாதன்.‌ ஆதியின் தந்தை.

“என்ன உங்க பொண்டாட்டி உங்களை அந்தரத்துல விட்டுட்டு போயிட்டாங்களாட்டுக்கு?” கிண்டலோடு கேட்டான் ஆதி.

“அதுக்கு காரணமே நீ நானே மை சன்…” என்று விடாமல் திருப்பி குடுத்தார் தேவநாதன்.

கணவனும் மகனும் பேசிக் கொண்டே இருக்கையிலே, காபியோடு வந்தார் தான்யலட்சுமி.

“காலையிலையே வெறும் வயித்துல கெபைன் குடுக்கற. பிரேக்பாஸ்ட்க்கு எண்ணை வழிய பூரி அதுக்கு தொட்டுக்க உருளைக்கிழங்கு செஞ்சிருக்க. டெட்லி காம்பினேசன் மா!” என்று பாராட்டுவது போல அன்னையை வாறினான் ஆதி.

“மகனே உன் டாக்டர் தொழிலை வீட்டுக்கு வெளிய வச்சிக்கோ..‌. என் சமையல்கட்டுல நான் தான் என்ன செய்யனும்னு முடிவெடுப்பேன்‌‌. குறுக்க மறுக்க ஓடினனு வையி‌…” என்று தான்யலட்சுமி இடைவெளி விட,

“பட்டினி போட்டுருவியா மா?” சின்ன சிரிப்போடு கேட்டான் ஆதி‌.

“ஹ்ஹூம்… சமைக்கவே தெரியாத பொண்ணா பாத்து கட்டி வச்சிடுவேன்.” என்று மிரட்டினார் தான்யலட்சுமி.

“உனக்கு எதுக்கு மா கஷ்டம். நானே பொண்ணு பாத்துக்கட்டுமா?” என்று கேட்டான் ஆதி.

“அதான் அல்ரெடி பாத்துட்டியே… இப்ப என்ன என்கிட்ட பர்மிஷன் கேக்குற?” சாதாரணமாக கேட்டார் தான்யலட்சுமி.

“அம்மா…‌!!” என்று அதிர்ச்சி ஆகிவிட்டான் ஆதி.

“ஷாக்கை குறைடா… நீங்க இன்னும் இரண்டு பூரி வச்சுக்கோங்க.” என்று ஆதியை கலாய்த்தபடியே தேவநாதனுக்கு பறிமாறினார் தான்யலட்சுமி‌.

“உன..உனக்கு எப்படி மா தெரியும்?” முகத்தில் சிறு வெட்கம் எட்டி பார்க்க கேட்டான் ஆதி.

“எப்பவுமே நேரமே எழுந்து வர்றவன், இன்னைக்கு அதிசயமா தூங்குறியேன்னு ரூமுக்கு வந்து பார்த்தா, நான் வந்து ஐஞ்சு நிமிசம் ஆனது கூட தெரியாம கட்டில்ல உருண்டுட்டு கிடக்க… கேட்டா அவசர அவசரமா பொய் சொல்லுற… இப்ப பொண்ணு பாக்கட்டுமான்னு கேக்குற. கனெக்டிங் தி டாட்ஸ் டா மவனே… உன் அம்மான்னா சும்மா இல்ல.” என்றபடியே கிட்சனுக்குள் எதையோ எடுக்க சென்றார் தான்யலட்சுமி.

மனைவியும் மகனும் வழக்காடிக் கொண்டிருந்ததை, அதி தீவிரமாக உண்ட படியே கேட்டுக் கொண்டிருந்தார் தேவநாதன்.

“மை சன் பொண்ணை எங்களுக்கு முன்னாடியே காட்டுவியா? இல்ல ஸ்ட்ரெயிட்டா கல்யாணத்தன்னைக்கு தானா?” என்று தன் பங்கிற்கு தானும் மகனை கிண்டலடித்தார் தேவநாதன்.

“டாட்…” என்றவனின்‌ முகம் வெட்கத்தில் இன்னும் மினுங்கியது.

“யார்ரா அந்த பொண்ணு?” தேவநாதன்.

“என் கூட ஸ்கூல்ல படிச்ச பொண்ணு டாட். அவகிட்ட என் பீலிங்கசை சொல்லிருக்கேன்.” என்றவனுக்கு அன்றைக்கு நடந்தது இப்பொழுது நினைவில் வந்து முகம் சுருங்கியது.

“என்னாச்சு ஆதி? அந்த பொண்ணு உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டாளா?” அக்கறையுடன் விசாரித்தார் தேவநாதன்.

“என் பையனை ஒருத்தி வேண்டாம்னு சொல்லுவாள்?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் தான்யலட்சுமி.

அதில் சிரிப்பு வர, “பிடிக்கலைனு சொல்லல… ஆனா பிடிச்சிருக்குனும் சொல்லல…” என்று ஆதி சொன்னான்.

“என்ன டா குழப்பற?” என்று ஆதியின் பக்கத்தில் வந்து அமர்ந்தார் தான்யலட்சுமி.

அன்று நடந்தது அனைத்தையும் மேலோட்டமாக தாயிடமும் தந்தையிடமும் சொன்னான் ஆதி. அவனுக்கு எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே? ஏனெனில் அவன் எதுவும் தவறு செய்யவில்லையே!

“மகனே உனக்கு வாய்ல வாஸ்து சரி இல்ல. திரும்ப இதே போல பேசி அடி வாங்கிகாத…” என்று சிரிப்புடனே எழுந்து சென்றார் தான்யலட்சுமி.

“நான் வேணா அந்த பொண்ணுட்ட பேசவா?” என்று கேட்டார் தேவநாதன்.

தன் காதல் கதையை கேட்டதும், எந்தவித கோணங்கி சேட்டையும் செய்யாமல், ‘காதலுக்கு உதவட்டுமா?’ என்று பெற்றோர் கேட்பதே அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது‌‌.

“வேணாம் டாட். நான் பாத்துக்கறேன்‌. ஆனா உங்க கம்பெனி இமெயிலை மட்டும் நான் யூஸ் பண்ணிக்கறேன்.” என்றான் சிரிப்புடன்.

“நீ நடத்து…” என்றபடியே தன் அலுவல் கவனிக்க சென்றார் தேவநாதன்.

தேவநாதனிடம் சொன்னபடியே, அவரது அலுவலகத்தில் தற்பொழுது பயன்பாட்டில் இல்லாத ஒரு மெயில் ஐடியில் இருந்து, சக்தியின் மின்னஞ்சலுக்கு, ஒரு சிறிய அளவிலான புராஜெக்ட்டை அவளுக்கு தர விரும்புவதாகவும், அதற்காக நாளை மறுநாள் ஒரு காபேவிற்கு வந்து தன்னை சந்திக்குமாறு செய்தியினை அனுப்பினான். அவளது அலைபேசி எண்ணோ அல்லது வேறு சமூக வலைதள தொடர்போ அவனிடம் தற்சமயம் இல்லை. ஆகையால், தன்னால் முடிந்த அளவில் அவளை தொடர்பு கொண்டான்.

ஆதியின் மின்னஞ்சலை பார்த்த சக்திக்கு கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. ஏனெனில், அது ஒரு பெரிய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சப்சிடரி கம்பெனி. அங்கிருந்து ஒரு சிறிய ஸ்டார்ட்அப்பான தங்களை முதலில் தொடர்பு கொள்ளுவதை அவளால் நம்ப முடியவில்லை. எதற்கும் மின்னஞ்சலை வரிக்கு வரி விடாமல் படித்தவள், லோகோ உட்பட எங்கேனும் ஏதாவது மாறுபாடு உள்ளதா என்று ஆராய்ந்து பார்த்தாள். யாரேனும் தங்களை ஏமாற்ற போட்ட திட்டமோ இது என்ற ஐயம் அவளுக்கு!

நீண்ட நேரமாகியும் சக்தியிடம் இருந்து பதில் வராததால் பதற்றத்துடனே அமர்ந்திருந்தான் ஆதிரையன். அவன் இயல்பில் இருந்து வழுவிப் போய் இருந்தான்; அவனை போக வைத்தாள் சக்தி.

வந்திருந்த செய்தியை பற்றி துவாரகேஷிடமும் பூர்ணாவிடமும் பகிர்ந்து கொண்டாள் சக்தி.

“ஒரு முறை போயிட்டு வா சக்தி. போனா தானே தெரியும் நிஜமாவே அவங்க தான் கூப்பிட்டுருக்காங்களா இல்லையானு…” பூர்ணா.

“ஒரு வேளை பூர்ணா சொல்லுற மாதிரி அவங்க நிஜமாலுமே கூட வொர்க் பண்ண இன் வைட் பண்ணிருந்தா, நம்ம பிசினஸ் நினைச்சதை விட சீக்கிரமே சக்ஸஸ் ஆகிடும்.

உனக்கு அவங்க ஃபேக்கா இருப்பாங்களோனு கவலையா இருந்தா பயப்படதா. நீ இதுவரைக்கும் சொன்னதை வச்சி பார்த்தா, எப்படியும் உன் பின்னாடி ஒரு பாடிகார்டாச்சும் வரும். அவங்க மீதத்தை பாத்துப்பாங்க…” என்று துவாவும் சொல்லவே,‌ அரை மனதாகவே கிளம்பி சென்றாள் சக்தி.

வழக்கம் போலாக ஜீன்சும், ஒரு காட்டன் குர்த்தியும், போனிடெயிலுமாக கிளம்பி சென்றாள் சக்தி.

குறிப்பிட்ட நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே சென்று அங்கே காத்திருந்தாள் சக்தி.

குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி, பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் யாரும் வரவில்லை என்பதால், இனி யாரும் வரப்போவதில்லை என முடிவெடுத்தவள், கிளம்பி எத்தனிக்கையில், கையில் பூங்கொத்தோடு கம்பீரமாக ஆதி நடந்து வந்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்த மாத்திரம், பழையதெல்லாம் மறந்து போய், அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

கடைசி நேரத்தில் ஒரு வகுப்பு முடியாமல் இழுத்துக் கொண்டே இருக்க, அது முடிந்ததும், வேகமாக வந்தவன், வழியிலே அவளுக்கென ஒரு பூங்கொத்தை வாங்கிக் கொண்டு வர, அதற்குள், அவன் சொன்ன நேரம் கடந்து போய்விட்டிருந்தது. ஆதியின் நல்ல வேளையாக சக்தி சிறிது நேரம் அவனுக்காக காத்திருந்தாள்.

அவள் எதிரே வந்து நின்றவன், கையில் இருந்த பூங்கொத்தை அவளிடம் நீட்ட, அவளை அறியாமலே கைகள் நீண்டு, அதை வாங்கிக் கொண்டது.

“வந்து ரொம்ப நேரம் ஆச்சா? சாரி க்ளாஸ் முடிய லேட் ஆகிருச்சு. ஏன் நிக்கிற உக்காருற…” என்றான் ஆதி.

அவன் என்ன பேசுகிறான்? எதற்கு இங்கு வந்தான்? எதுவுமே புரியாமல் மூளை மசமசக்க நின்றுக் கொண்டிருந்தாள் சக்தி.

“ஹே சக்தி…” என்று அவள் முகத்தான்‌ முன்பு, வலது கையால் ஆட்டி, அவள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தான். இவ்வளவிற்கு பிறகு, இப்பொழுது தான் நடப்பதே உணர்ந்தாள் சக்தி.

ஏனோ காதல் என்று வரும் இடங்களில் மட்டும் மூளை வேலை நிறுத்தம் செய்கின்றது!

“உக்காரு…” என்று அவன் மறுபடி சொன்னதும் தான் அமர்ந்தாள் சக்தி. அவன் சொல்லும் வரை நின்றுக் கொண்டே, பராக் பார்த்துக் கொண்டிருந்த தன்னை எண்ணி, வெட்கத்தில் குறுகினாள் சக்தி.

ஓரளவிற்கு தன் உணர்வுகளை சமாளித்துக் கொண்டு பேச்சை ஆரம்பித்தாள் சக்தி.

“நீங்க… நீங்க தான் எனக்கு மெயில் அனுப்பினதா?” என்று கேட்டாள் சக்தி.

ஆதிரையன் வந்து அமர்ந்து, வாய் திறந்து பேசி பின்னாடியே அவளின் மூளை வேலை செய்தது. பரபரப்பாக யோசித்தது. அன்று இவள் தானே அவனுக்கு தன்னுடைய மின்னஞ்சல் முகவரியை குடுத்தாள். அப்பாவின் அலுவலகத்திற்கு தேவையென்றால் கூப்பிடுகிறேன் என்றானே… அதை எப்படி மறந்து போனாள்‌?

மானசீகமாக தனக்கு தானே குட்டு வைத்துக் கொண்டாள் சக்தி. அவளின் முக பாவங்களையே பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கு சிரிப்பு வந்தது.

“எல்லாம் புரிஞ்சிடுச்சு போல?” கேட்டவனுக்கு கடைவாய் ஓரம் சிரிப்பில் துடித்தது. அதை பார்த்தவளுக்கு நாணம் வந்து கூசியது.

“உன்னை எப்படி மீட் பண்ணுறதுனே தெரியலை. ஏதோ மர்மமான பொண்ணு போல இருக்க.” என்றான் முகத்தில் அதிருப்தியுடன். அவளை காணாமல், அவளுடன் பேச முடியாமல் தவித்த தவிப்பு அவனுக்கு.

சட்டென முகம் கூம்பி போய் விட்டது அவளுக்கு. கண்கள் அங்கும் இங்கும் நர்த்தனம் ஆடியது. பதட்டத்தை தணிக்க தண்ணீரை எடுத்து குடித்தாள். அவளே சொல்லட்டும் என ஆதி காத்திருந்தவன்.

ஆதியிடம் சொல்லலாமா? வேண்டாமா? என்று நெஞ்சம் துடியாய் துடித்தது. அவனை இத்தனை தூரம் வளர விட்டு வேடிக்கை பார்த்த பின்பு, தன்னை பற்றிய உண்மையை சொல்லாமல் மறைப்பது என்பது அநாகரீகமாய் இருக்கும் என்பதால், முழுக்க சொல்லாமல், ஓரளவு சொல்ல நினைத்தாள்‌ சக்தி.

“மர்மமான பொண்ணா இருந்தா கூட உன்னை மீட் பண்ணுறது எனக்கு ஈசியா இருந்துருக்கும்.” என்று விரக்தியாய் சொன்னவள், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,

“உனக்கு தெரியும் நான் மஹாராஜாவோட வீட்டுல இருந்து வர்றேன்னு. நான் இப்ப சொல்லுவதை நீ நம்பறதுக்கு கஷ்டம் தான். ஆனா…” என்று எதையோ சொல்ல வாயெடுத்தவள், பெரு மூச்சை விட்டு, தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

“எனக்கு அப்பா அம்மா இல்லை ஆதி. அழையா விருந்தாளிகளுக்கு மதிப்பில்லை! புரியும்னு நினைக்கறேன்.” எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள். அவளால் நடந்ததை விளக்கி சொல்ல முடியும். ஆனால் இறுதியில் எஞ்சுவதோ, பரிதாபம் தான். யாருக்கு வேண்டும் அது? அவளுக்கு பரிசுத்த அன்பு வேண்டும். அதை மட்டும் அவன் தந்தால் போதுமானது!

காதல் என்பது என்னவென்று இப்பொழுது தான் ஆதிரையனுக்கு புரிவது போல இருந்தது‌.

பக்கத்தில் இருக்கும் பொழுது வாசமாய் இருக்கிறாள்; தூரத்தில் நின்றே கண்களை நிறைக்கிறாள். கொஞ்சம் போனால் வயதையும் வளைத்து விடுவாள். இது தான் காதல் என்றே எண்ணியிருந்தான் ஆதிரையான். அது அப்படி அல்ல போல. அவள் கண்கள் படபடவென்று கொட்டினாள், பட்டாம்பூச்சி பறப்பது போல இருந்தது. அவள் கண்மணிகள் அசைந்தால், அவன் உலகே ஸ்தம்பித்தது. அவறள் பதற்றம் கொண்டால், இவனுக்கு பூகம்பம் வந்தது. அவளுக்கு வலிக்கிறதென்று தோன்றினால், இவனுக்கு இரத்தமே வரும் போல! இது தான் காதலா? இதை தான் உலகமே போற்றி கொண்டாடுகிறதா? இவ்வளவு மட்டும் தானா? இல்லை இன்னமும் என்னை பைத்தியகாரனாக்குமா?

விநாடிக்குள் அவனின் எண்ணங்களை அவளையே உலகமாய் எண்ணி சுற்றி வந்தது. அவன் வாய் திறந்து எதுவும் பேசவில்லை. அவள் கையை மட்டும் அழுத்தமாக பற்றிக் கொண்டான். அவன் உள்ளங்கையின் சூடு, இந்த கணத்தை தாண்டி போக அவளுக்கு மிக அவசியமாக இருந்தது.
 
🙋‍♀️🙋‍♀️ நீங்கள் எவ்வளவு குட்டியா வேணாலும் எபி கொடுங்க 😉 😃 😄 😆 ஆனால் சக்தியை ஆதி கூட சேர்த்து வச்சிடுங்க 🤗 🤗 🤗

ஆதியோட அம்மா ஐந்து நிமிஷமா பையன் உருளுறதை வேடிக்கை பார்த்துக் கிட்டு நின்றுகாங்க 😄😄😄😄😆😄😄😄😄😆😄


இந்த ராஜா கூஜா எல்லாம் வேண்டாம் 🤭 🤭 🤭 🤭 🤭 அவனுக்கு சக்தியோட அக்காவை கண்டு பிடித்து வந்து கட்டி வைங்க 🤗 🤗 🤗 🤗
 
Last edited:
Top