Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்காக நான் - அத்தியாயம் 3

Advertisement

Subhashri

Member
Member
வாசகர்களின் கவனத்திற்கு: இந்த அத்தியாயம் முதல் கதாபாத்திரங்களே தங்கள் பார்வையில் கதையை நகர்த்திச் செல்வார்கள்.

கனவெல்லாம் நீ..
காலை எப்போது விடியும்?-- என்
கழுத்தில் எப்போது நீ மாலையிடுவாய் என
காத்திருக்கும் சுகத்திற்கு
முற்றுப்புள்ளியாய் வந்துதித்தது

கல்யாண நாள்!!

########$$$###$$$$

கல்யாண நாள்!!!

திவ்யா:

இன்று அர்ஜுனுக்கும் எனக்கும் திருமணம். நான் மணப்பெண் அலங்காரம் முடிந்து மணமேடையிலிருந்து வரும் அழைப்புக்காக காத்திருக்கிறேன். அர்ஜுன் பெண் பார்க்க வந்த அன்று ஒரு வாரத்திற்குள் திருமணம் நடந்து முடிந்தாக வேண்டும் என்று கூறியபோது எல்லோருக்கும் மிகவும் மலைப்பாக இருந்தது. இவ்வளவு குறுகிய நேரத்தில் எப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிப்பது என்று எல்லோரும் கவலைப்பட்டோம். எல்லா ஏற்பாடுகளையும் அர்ஜுன் செய்துவிட்டு என் அப்பாவிடம் அதை சொல்லியபோது, அவன் மீது இருந்த காதலையும் தாண்டி பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. அர்ஜுனுக்கு ஒரு தங்கை இருப்பதாக தரகர் சொன்னதாக அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அர்ஜுன் என்னைப் பெண் பார்க்க வரும்போது அவள் வரவில்லை. ஆனால் இன்று அவளுடைய ஒரே அண்ணனின் திருமணத்திற்கு நிச்சயம் வந்திருப்பாள். பிறந்த வீட்டில் தனியாகவே வளர்ந்த எனக்கு புகுந்த வீட்டில் பழக ஒரு நல்ல தோழி இருக்கிறாள் என்பதை நினைக்கையில் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

என் அம்மா என்னுடைய அறைக்கு வந்தாள். என்னைப் பார்த்து அதிசயித்தபடி,
" என் கண்ணே பட்டுடும் போல இருக்கு திவ்யா. மஹாலக்ஷ்மி மாதிரி அழகா லட்சணமா இருக்கே" என்றபடி என் முகத்தை சுற்றி தன் கைகளால் திருஷ்டி கழித்தாள். அப்போது அர்ஜுனின் பாட்டி, அம்மா இருவருடன் என்னுடைய அறைக்கு இளம்பெண் ஒருத்தி உள்ளே வந்தாள்.
அர்ஜுனின் பாட்டி என்னைப் பார்த்து,
" ம்ம்ம்ம்... என் பேரன் அழகுக்கு ஏத்த மாதிரி நல்லா அலங்காரம் பண்ணி இருக்கே.. பரவாயில்லை" என்றாள் தன் பேரனை விட்டுக் கொடுக்காமல்.

அதற்குள் அர்ஜுனின் அம்மா இடைமறித்து," ஏன் அத்தை!! என் மருமக அழகுக்கு என்ன குறைச்சல்? குத்துவிளக்கு மாதிரி அழகா லட்சணமா இருக்கா" என்றபடி பக்கத்தில் இருந்த மைக்கூட்டிலிருந்து கொஞ்சமாக மையை எடுத்து என் காதிற்கு பின்னால் வைத்தாள்.

நான் அப்போது தான் கவனித்தேன். அந்த இளம்பெண் குறுகுறு வென என்னைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அதற்குள் அர்ஜுனின் அம்மா, " வந்த விஷயத்தை மறந்தே போனேன், பார்.. இவ தான் என்னோட பொண்ணு. பேர் நித்யா. ஃபேஷன் டிசைனிங் ல மாஸ்டர்ஸ் முடிச்சிருக்கா. நித்யா... இது திவ்யா.. உன் அண்ணனைக் கட்டிக்கப் போற பொண்ணு. இன்னும் கொஞ்ச நேரத்தில உனக்கு அண்ணி ஆகப்போறா" என்று ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்தி வைத்தாள்.

அப்பொழுது நித்யா பேசிய வார்த்தைகளைக் கேட்டு அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது. "ஓ!! இன்னும் கொஞ்ச நேரத்தில உனக்கும் என் அண்ணனுக்கும் தான் கல்யாணமா?. இந்த ஆம்பளைங்களை நம்பி ஆசையை வளர்த்துக்காதே திவ்யா. மணமேடையில் உன்னை மணக்கோலத்தில் அம்போன்னு நிறுத்திட்டு ஓடி போறதுக்கு கூட தயங்கமாட்டாங்க . நம்பி உன் வாழ்க்கையை பாழாக்கிக்காதே" என்றாள்.

அதைக் கேட்ட எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. என்ன சொல்கிறாள் இந்த பெண்? நான் யோசிப்பதற்குள் அர்ஜுனுடைய அம்மா நித்யாவை பார்த்து," நித்யா!! ஏன் இப்படி பேசுற? கல்யாண பெண் கிட்ட இப்படியா அபசகுனமா பேசறது? அம்மா!! இவளை கூட்டிட்டு நம்ம அறைக்கு போங்க.. நான் இவங்க கிட்ட பேசிட்டு வர்றேன்" என்றாள் அவள் அம்மாவிடம்.

நித்யாவும் அவள் பாட்டியும் சென்றவுடன் என் பக்கம் திரும்பிய அர்ஜுன் அம்மா, "அம்மா திவ்யா!! அவ பேசினத மனசில வெச்சுக்காதே. கொஞ்ச நாள் முன்னாடி அவ கல்யாணம் மணமேடை வரைக்கும் போய் நின்னுடுச்சு. அவ அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளியே வரல. அதான் அப்படி பேசிட்டா. நீ தப்பா நினைச்சுக்காதேம்மா. எல்லாம் நல்லபடியா நடக்கும். என் பிள்ளை உன்னை தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஒத்த கால்ல நிக்கறான். அதனால அவ பேசினத மறந்துட்டு நம்ம வீட்டுக்கு வந்து விளக்கேத்த தயாராக இரு" என்று ஆறுதலாக பேசினாள்.

அர்ஜுனின் அம்மா நித்யாவைப் பற்றி பேச பேச எனக்கு நித்யாவை நினைத்து பரிதாபமாக இருந்தது. பாவம் அந்த பெண். எவ்வளவு பெரிய கஷ்டத்தை அனுபவித்திருக்கிறாள். நான் மிகுந்த வேதனையுடன்," பரவாயில்லை அத்தை!! அவங்களோட நிலைமை எனக்கு புரியுது. நீங்க போய் அவங்களோட இருங்க." என்றேன்.

அர்ஜுனின் அம்மா என் கன்னத்தில் வாஞ்சையுடன் தடவிக் கொடுத்து விட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
நான் மறுபடியும் மணமேடையில் இருந்து வரும் அழைப்புக்காக காத்திருக்கிறேன். ஆனால் என் மனதில் இப்போது லேசான படபடப்பு இருந்தது.

அப்போது வெளியே ஐயரின் குரல் தெளிவாக கேட்டது. " முகூர்த்தத்துக்கு நேரமாச்சு. மாப்பிள்ளையையும் பொண்ணையும் அழைச்சுண்டு வாங்கோ"

அனு பின்தொடர நான் மணமேடைக்கு செல்ல அறையை விட்டு வெளியே வந்தேன். அப்போது யாரோ ஒருவர் வந்து அர்ஜுனின் தந்தையிடம்," மாப்பிள்ளை அறையில் அர்ஜுனை காணவில்லை" என்று சொன்னார். கல்யாண மண்டபமே ஒரு நிமிடம் அடங்கிப் போனது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தலை லேசாக சுற்றியது.

தொடரும்.....2928
 
Top