Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 28

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 28

அத்தியாயம் 28

‘இத்தனை நாளும் இந்தத் தாயை நான் எப்படி மறந்து போனேன், இவள் என் உயிர் ஆயிற்றே!” என்று தன் தாயின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான் கௌதம்.

“அப்பா!" என்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்ட குழந்தை, அவன் கழுத்தை வளைத்து ஏதோ ரகசியம் கூறுவது போல்

“அப்பா, பாட்டி ஒரு பாட்டுப் பாடினாங்கப்பா!” என்று குசுகுசுவென்று கூறியதாய் நினைத்துச் சத்தமாய்க் கூறியது!!!

“நீ இன்னும் பாடுறதை நிறுத்தலையாமா!” என்ற கேள்வியோடு தன் தாயின் அருகில் சென்று அந்தப் பெண்மையின் கண்களில் வழிந்த தாய்மையைப் பார்த்து மனம் சிலிர்த்துப் போனான்.

“என் விசுவுக்கு யாரும் அழுதாப் பிடிக்காது! ஆனால் ஏன் தம்பி நம் வாழ்க்கையில் மட்டும் இவ்வளவு கண்ணீர்?”

“பிளீஸ்மா நீ இப்ப அழுதுராதம்மா! நான் கடந்த ஒரு வாரமா அழுதழுது ஓஞ்சு போயிட்டேன், வா ரெண்டு பேரும் சேர்ந்து சிந்துவுக்கு ஒரு கண்ணீர் அஞ்சலி செலுத்திருவோம்!”

“என்ன தம்பி சொல்ற?”

“அவ என்னைவிட்டுட்டுப் பறந்து போயிட்டாமா, அவளைப் பற்றிய என் ஞாபகங்களை நான் மறந்தே ஆகணும்!”

‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ ன்னு! நீ அடிக்கடி பாடுவியே! அந்த மருந்துதான் எனக்கு இப்ப வேணும், எனக்கு என் நினைவுகள் திரும்பாமலே இருந்திருக்கலாம், அவை அனைத்தும் என் மனதைக் குத்திக் கிழிக்கும் ஞாபகங்கள். குழந்தை எதையோ டீவியில் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருக்க தாயும் மகனும் பேசத் தொடங்கினார்கள்!

“இங்க பாரு தம்பி வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் எப்பவும் ஒண்ணை ஒண்ணு விரட்டிக்கிட்டேதான் இருக்கும். சிந்துவோடான உன் வாழ்க்கையில் துன்பங்களோடு இன்பங்களும் சேர்ந்துதான் இருந்திருக்கும்! பாலிலிருந்து தண்ணியைப் பிரிக்கிற மாதிரி அதை மட்டும் பிரிச்செடுத்து உன் மெம்மரி ஃபைலில் போட்டுக்க! காலப் போக்கில் துன்பியல் நாடகங்கள் உன் மனசைவிட்டு மறையத் தொடங்கிவிடும். கண்டிப்பா ஒரு பெரிய காயம் ஆறும்போது அந்தக் காயத்தின் வடு நிரந்திரமா தங்கிப் போற மாதிரி உன் மனக் காயம் ஆறினாலும் அதன் வடு இருக்கும்!

“சரிமா நீயும், தாராவும் கண்டிப்பா நல்ல மருந்தா இருப்பீங்கன்ற நம்பிக்கை எனக்கிருக்கு!!! நீ உன் மகனைக் காணோம்னு ரொம்பத் தேடி அலஞ்சியாமா!”

“இந்தப் பெத்த வயிறுக்குத் தெரியும்டா நீ பட்ட வேதனைகள். அதைத்தான் தொப்புள் கொடி உறவுனு சொல்றோம். நீ அதீதமா, சந்தோஷப்படும் போதும், கதறி அழும் போதும், நமக்கிடையே உள்ள உறவு வயர்லெஸ் கனெக்ஷன் மாதிரி அதை எனக்கு ட்ரான்ஸ்மிட் பண்ணிரும்!

நானும் ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி காற்றில் மிதந்து வந்த உன் பாட்டைக் கேட்டேன்மா,

“நீ, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாட்டை உருகி உருகிப் பாடின மாதிரி கேட்டுச்சு! அதை என் ரயில் ஸ்நேகிதிகிட்டக் கூடச் சொன்னேன். அதைக் கேட்டுத் தன் மகனின் முகத்தைத் திருப்பி அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தவள்,

“இப்பக் கூட என்னால் உன் மன அதிர்வுகளைப் புரிஞ்சுக்க முடியுது! உன் குழந்தையைப் பத்தி என்கிட்ட ஏதோ சொல்லணும்னு உன் மனசு கிடந்து அடிச்சிக்குது! தாரா அந்த ரயில் விபத்துக்கப்புறம், பள்ளத்தில் கிடந்த உன்னை அதிலிருந்து காப்பாத்தின முழுக்கதையும் சொன்னா! உன்னோடு சேர்ந்து ஒரு குழந்தையும் பள்ளத்திலிருந்து மேலே வந்ததாச் சொன்னா! அது உன் குழந்தை பவின்னுதான் நினைச்சேன். அவக்கிட்டயே என் பேத்தி பவி எப்படி இருக்கானு கேட்டேன்? நேர்ல பார்த்துத் தெரிஞ்சுக்குங்கனு சொன்னா!”

“நீ என்னமா தெரிஞ்சுக்கிட்ட?!” கற்பகத்தின் கண்கள் கலங்குவது போல் தெரிந்தது அவனுக்கு.

“உன்னுடைய ஒரு வயது குழந்தையை நீ பல தடவை வீடியோவில் காட்டியிருக்க; அதனால் அந்தக் குழந்தையின் உருவம் என் கண்களில் அப்படியே பதியப்பட்டிருக்கு.

அது போல சிந்துவையும் நான் ஃபோட்டோவில் பார்த்திருக்கேன் ராஜா! ஒரே ஒருமுறை நிறைமாதக் கற்பிணியா வீடியோவில் வந்திருக்கா! அம்மாவுக்கும் குழந்தைக்கும் அந்தச் சிறு வயதிலேயே முக அமைப்பில் அவ்வளவு ஒற்றுமைகள் இருக்கும்!

“உன் குழந்தைக்கு என்ன ஆச்சு ராஜா?” கௌதம் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று கற்பகத்திற்குத் தெரியும்!

“அவளும், அவ அம்மா மாதிரியே என்னைப் பிரிஞ்சு போயிட்டாமா! இன்றுவரை இந்தக் குழந்தை யாரென்று தாரா என்னிடம் சொன்னதில்லை! பவியின் முகத்தை ரொம்ப நுட்பமா பார்க்கும் போது தாராவின் முக ஒற்றுமை தெரிஞ்சாலும் என்னிடமும் அந்த ரகசியத்தைப் பகிர்ந்துக்கலை!

நிச்சயமா இது தாராவோட குழந்தையானு எனக்குத் தெரியாது! அந்த ரகசியம் எப்படிப் போனாலும் எனக்குக் கவலை இல்லை. இப்பொழுது என் கையில் உள்ள பவி என் குழந்தை. வேணும்னா தாரா அந்த உரிமையை என்னோடு ஷேர் பண்ணிக்கலாம்!

“ஏன்பா தாராவை திருமணம் செய்வதில் எதுவும் சிக்கலிருக்காப்பா”

“திருமணத்தைப் பொறுத்தவரை நான் ரொம்பத் தெளிவாத்தான் இருக்கேன்! ஆனால் அவள்தான் நான் அவளோட முழுக்கதையும் கேட்டதுக்கப்புறம் அவளைத் திருமணம் செய்யணுமா வேணாமான்னு என்னை முடிவெடுக்கச் சொல்றா!”

“இதுக்கு உன்னோட பதில் என்னப்பா?”

“ரொம்ப சிம்பிள்மா! வெறும் களிமண்ணாக் கிடந்த என்னை ஒரு அழகான பொம்மையா வடிவமைச்சு அதில் தன் அன்பு, பாசம், காதல், நட்பு, உறவுனு அனைத்து ஆவிகளையும் ஊதி உயிர் கொடுத்திருக்கா எனக்கு! எனக்கும் அவள் மேல் அதே அளவு பாசமும், காதலும் கொட்டிக் கிடக்கு! நான் என்ன பதில் சொன்னேன் தெரியுமா?” என்னப்பா சொன்ன என்பது போலக் கற்பகம் தன் மகனைப் பார்த்தார்.

“முதலில் நம் கல்யாணம்! அதுக்கப்புறம் நம் வாழ்க்கை ரகசியங்களை சாவகாசமா பகிர்ந்துக்கலாம்னு சொல்லி இருக்கேன்!”

“தம்பி உன் பதில்தான் மிகச் சரியான பதில். முதலில் உங்க கல்யாணம்!”

“யாருக்குக் கல்யாணம் அத்தை?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் தாரா! கௌதம் கூறியது போல் செக்கச் சிவந்த ரோஜாமலராய் தன்னை அலங்கரித்திருந்தாள்! அவள் அணிந்திருந்த உடை அவளுடைய அழகை ‘நம்பர் டு த பவர் ஆஃப் இன்ஃபினிட்டி’ என்று நாம் கணக்கில் கூறுவோமே, அதுபோல எடுத்துக் காட்டியது! இவ்வளவு நாளும் கஞ்சி போடப்பட்ட மொட மொட காட்டன் புடவைகளில் மட்டுமே அதுவும் வெளிர் நிறங்களில் மட்டுமே அவளைப் பார்த்திருக்கிறான்.

அவள் வீட்டிலிருக்கும் போதோ கேட்கவே வேண்டாம்! கோமாளி போல தொள, தொள இரவு உடையில் இருப்பாள்! இந்த மாடர்ன் ஃபிட்டிங்கில் ஒரு வித்தியாச ட்யூலிப் மலராய்த் தோன்றினாள் அவள்! அவளின் அழகுத் தோற்றம் கௌதமனை, சித்தார்த்தனாய் மாற்றிக் கொண்டிருக்க; கற்பகத்தின் மனதிலோ, அவளின் இளமைக் காலத்தின் ஊர்வலம் தொடங்கியது.

“உங்க கல்யாணத்துக்குத்தான் நாள் குறிச்சுக்கிட்டிருந்தேன் தாரா! இங்க ஒரு கோவிலில் வச்சு உங்க கல்யாணத்தை முடிச்சுத் தம்பதியராய் நம்ம ஊருக்குக் கூட்டிட்டுப் போலாம்னு பார்க்கிறேன். கௌதம், ‘கரும்பு தின்னக் கூலியானு’ உடனே சரின்னு சம்மதம் சொல்லிவிட்டான். நீ என்னம்மா சொல்ற!”

அம்மாவின் பேச்சைக் கேட்க அவனுக்கே திக்கென்றிருந்தது! அவன் ஒரு புள்ளிதான் வைத்தான் அம்மாவோ அதைச்சுற்றி ஒரு பிரமாண்ட கோலமே போட்டு முடித்து விட்டார்கள்.

தாராவுக்கோ கற்பகத்தின் பேச்சைக் கேட்டு இதயமே ஒரு குலுக்கலோடு நின்று பிறகு துடிக்கத் தொடங்கியது! தன்னைப் பற்றி வாய் வரை வந்ததை சொல்லாமல் தொண்டைக்குள் முழுங்கியவள் சிறிது நீரெடுத்துப் பருகினாள்.

பின்னர் “இவ்வளவு நாளும் திருமணம் செய்யாம ரெண்டு பேரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழலியா? அதே மாதிரி இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அத்தை!” என்று நாசுக்காய் அவள் கூற,

“இல்ல தாரா, அப்ப அவன் ஒரு நோயாளி, நீ ஒரு டாக்டர்! தன் ஞாபகங்கள் முழுவதையும் இழந்த ஒரு பேஷன்ட்! இப்ப அவனுக்கு எல்லா ஞாபகமும் திரும்ப வந்திருச்சு! அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு விலையா தன் மனைவியைப் பறி கொடுத்துவிட்டு நிக்கிறான். நீ எவ்வாளவு தூரம் என் பையனை காதலிக்கிற என்று நீயே உன் வாயால புலம்பித் தள்ளி இருக்க! இப்ப நாம் நாள், நக்ஷ்த்திரம், ஜாதகப் பொறுத்தம் எதுவுமே பார்க்க வேணாம். உங்களுக்குள்ள இருக்க மனப் பொறுத்தத்தை மட்டும் பார்த்தால் போதும். என் பிள்ளை எந்த உறவுகளுமே இல்லாத அனாதையா கொஞ்ச நாள் கஷ்டப்பட்டு விட்டான். அவனுக்குனு ஒரு உறவை ஏற்படுத்தினா அது தப்பா மா!?” தன் பேச்சால் அவள் எங்கேயும் திரும்ப முடியாத அளவுக்கு ஒரு பூட்டுப் போட்டு விட்டார் கற்பகம்.

“சரி அத்தை பார்க்கலாம்!” என்று கூறிவிட்டு அவள் கிளம்ப, கற்பகம் மகனை அழைத்து, நாளைத் திருமணத்திற்கு வேண்டிய பட்டுப் புடவை, தாலிக் கொடி, பூ பழம் இவற்றோடு அறைக்குத் திரும்பி வா” என்று ஆர்டரை காதில் வாங்கிக் கொண்டே அவன் தாராவுடன் இணைந்து கொள்ள இருவரும் ஜோடியாக வெளியே இறங்கினார்கள்.

“பார்த்துப் பத்திரமா போயிட்டு வாங்க நான் குழந்தையைப் பத்திரமா பார்த்துக்கிறேன்”!” என்று அவர்களை வழி அனுப்பி வைத்தார் கற்பகம்.

“இது என்னடா புது விளையாட்டு? நாளைக்கு நம் திருமணமா!? நான்தான் என் கதை முழுவதும் கேட்டபின் அதுக்கப்புறம் நம் திருமணம் பற்றி முடிவெடுன்னு சொன்னேன் இல்லையா அம்மாக்கிட்ட அதை சொல்லாம வாயில் என்ன கொழுக்கட்டையா வச்சிருந்த!?”

“அந்தக் கேள்விக்கு நானும் உன்கிட்டப் பதில் சொன்னதா ஞாபகம், முதலில் நம்கல்யாணம், பின்னர் நம் கதை பகிர்ந்துக்கலாம்னு சொல்லி இருந்தேன்! சத்தியமா இது என்னோட ஏற்பாடு இல்லை தாரா! என்னோட அம்மா இன்ஸ்டன்டா ஒரு முடிவெடுத்தாலும்; அது எப்பவுமே சரியான, உறுதியான, வலுவான முடிவாத்தான் இருக்கும். இப்ப எதையாவது பேசி என்னோட பாசிட்டிவ் மூடை ஸ்பாயில் பண்ணாதடி!”

“ஓஹோ! அப்படி என்ன சார் மூடு ம்,,,"

"இது ரோடுனு பார்க்கிறேன் இல்லைனா உன் உடல் முழுவதும் என் சத்தமில்லாத முத்தங்களால் சேதாரமாகிவிடும் ஜாக்கிறதை!?” என்றவன், அவளைக் காதலுடன் பார்த்துக் கொண்டே,

“முதலில் ஒரு டாக்சி புக் பண்ணு, நேரா நொய்டா செக்டர் 61க்கு ட்ராப் லொக்கேஷன் போடு!”

“அது யாரோட வீடுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?!”

“ம்,,,என் ரயில் ஸ்நேகிதியோட வீடு! நாளைக்கு அவ ஆஃபிஸ் போயிருவா! அவ மாலிக்குலார் உயிரியலில் ஒரு ரிசர்ச் சயின்டிஸ்டா ஒர்க் பண்றா!

“பரவா இல்லையே நம்ம கேட்டகரிக்குள்ள வர்றாங்க!”

“ஆமாம் ரொம்ப நல்ல பொண்ணு! இந்தச் சின்ன வயசில் அவளோட லாஜிக்கல் திங்கிங் என் மனசை ரொம்ப பாதிச்ச விஷயம்” அதற்குள் அவர்கள் புக் பண்ணிய டாஃசி வர, அதில் ஏறித் தங்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள்.

“இவ்வளவு நாளும் உன்னோட அழகை நீ எங்கடா ஒளிச்சு வச்சிருந்த!” அவன் கண்களில் ஒரு புது ஒளி புகுந்திருந்தது! அந்தப் பார்வையே அவள் மனதை சிலிர்த்தெழச் செய்ய,

“இந்த அழகெல்லாம் என் கணவன் மட்டுமே பார்த்து ரசிக்க வேண்டிய அழகு! அது கஞ்சி போட்ட பருத்திப் புடவைக்குள்ள பத்திரமா ஒளிஞ்சிருந்தது!” என்று சொல்லும் பொழுதே அவள் குரல் குழைந்து போனது

“நீ ஏன் தாரா எப்பவும் முரண்பாடாவே பேசுற?”

"முரண்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை சித்தார்த்! மறு ஜென்மம் எடுத்துள்ள உன்னை அப்படித்தான் கூப்பிடத் தோணுது!” என்று அவன் தோள் மேல் மிகவும் உரிமையுடன் அவள் சாய்ந்து கொள்ள,

“அப்ப நான் உன்னைக் கண்ணனின் ராதையா நினைச்சு, தாராவை ராதான்னு கூப்பிடவா!”

“நோ, நோ! என்னால பாமா, ருக்மணி, ராதைனு நிறையப் பேரோடவெல்லாம் சண்டை போட முடியாது”

“என்கிட்ட இவ்வளவு உரிமையோட பழகுற நீ, கல்யாணம்னு சொன்னா மட்டும், பாம்பை உன் கழுத்தில சுத்திக்கச் சொல்ற மாதிரி ஏன் இவ்வளவு பயப்படுற? அதுவும் நான் நினைவிழந்திருந்த நாட்களிலெல்லாம் திருமணத்தைப் பத்தியே பேசிக்கிட்டிருந்த நீ, இப்ப ஏன்டீ என்னைக் குழப்பத்தில் திண்டாட வைக்கிற!?”

“ஒரு குழப்பமும் இல்லை இளவரசே! உன்கிட்ட மட்டும்தான் இவ்வளவு உரிமை எடுத்துக்கிறேன், ஏன்னா என் மனம் உன்கிட்ட ஒரு பாதுகாப்பை உணருது, நீ என் கழுத்தை சுத்தி உன் கைகளைப் போடும் போது அப்படியே நமக்குப் புடிச்சவங்களோட வானத்தில் பறக்கிற மாதிரி ஜிவ்வுனு ஒரு உணர்வு!”

“அதை லீகலைஸ் பண்ணிக்கலாம்னு தானே அம்மா சொல்றாங்க!”

“ஏன் என்னைக் கட்டிக்க உனக்கா தனி ஆசை இல்லையா?!”

“நம் கல்யாணத்தை முன்மொழிஞ்சதே நான்தான்; எங்கம்மா அதை வழி மொழிஞ்சிருக்காங்க அவ்வளவுதான்!” என்று, அதைக் கூறும் பொழுதே வெட்கம் விளையாட்டாய் அவன் முகத்தில் வந்து அமர்ந்து கொண்டது,

“இவ்வளவு வயதிலும் உனக்கு வரும் வெட்கம் ரொம்ப அழகா இருக்குடா! அதிலும் ஆண்கள் வெட்கப்பட்டா அதை கின்னஸ் சாதனைக்கு அனுப்பலாம்.

“ஆண்கள் வெட்கப்படுவதே அவர்களை ஆத்மார்த்தமாய்க் காதலிக்கும் பெண்களிடம் மட்டும்தான்!” என்று அவனும் அவள் மார்பில் சாய்ந்து கொண்டான். "ஏய் நீ ரொம்ப சாஃப்டா இருக்கடி!” என்று ஹஸ்கி வாய்சில் அவன் கூறியதைத் தன் காதுகளில் வாங்காதவள் போல,

அவனைத் தன் துடிக்கும் இதயத்தோடு தன் உயர்ந்த மெத்தைகளில் தாங்கிக் கொண்டவள், ஆமா, இப்ப எதுக்கு அந்தத் தாமரை மலரோட வீட்டுக்குப் போறோம்!?” என்றாள்.

“தாமரைக்கிட்ட கல்யாணம் பத்திய மேலான கருத்துக்களைக் கேட்கத்தான்!”

“என்ன அவளையும் கல்யாணம் பண்ணிக்கப் போறியா?”

“சீ! போடி!" என்றவன், நம்ம கல்யாணம் பத்தி, அவங்களோட ‘எஃஸ்பர்ட் கமென்ட்ஸ்’ அவளோட அதி உன்னதமான கருத்துக்களைக் கேட்கப் போறேன்! இந்தா, இது நீ எனக்கு வாங்கிக் கொடுத்த கைபேசி! இதில் நேத்து வரை உன் நம்பர் மட்டும்தான் இருந்தது. எனக்கு நினைவு வந்தவுடன் அம்மா நம்பரை சேர்த்துக் கொண்டேன், அதுக்கப்புறம் அதில் சேவாயிருப்பது தாமரை நம்பர்தான், நீயே அவக்கிட்ட பேசு! என்று நம்பரை அழுத்திவிட்டுக் கைபேசியை அவளிடம் கொடுக்க,

“சொல்லுங்க ரயில் ஸ்நேகிதரே! என்ற இனிமையான குரலுடன் தாமரை அழைக்க, “தாமரை. நான் கௌதம் இல்லை டாக்டர் தாரா!” என்றாள் அவள்.

“ஹோ! ஹோ! வென்று சிரித்தவள், அவருடைய அந்தரங்கக் காதலியா? நான் அவரோட அந்தரங்கக் காரியதரிசி பேசுறேன்! இப்பச் சொல்றேன் கேட்டுக்குங்க டாக்டரம்மா,

“இப்படி ஒரு இளவரசன் உங்களுக்குக் காதலராக் கிடைக்க நீங்க குடுத்து வச்சிருக்கணும்! உங்களைப் பத்தி என்கிட்ட நிறைய விஷயங்கள் சொன்னான் கௌதம்! அதுல ரெண்டு விஷயங்கள் என் மனசுக்குள்ள இளநொங்கு மாதிரி வழுக்கிச் சென்று விழுந்தது. தாரா முகத்தில் நாணம் வெட்கச் சிவப்பாய் மாறத் தொடங்கியது!

அவன் கூறிய முதல் பதிவு, “என் மார்பில் ஸ்ட்தஸ்கோப் வச்சுப் பார்க்காமலேயே என் இதயத்தில் எந்தனை துடிப்பு, என் நாடியில் எத்தனை அதிர்வுகள்னு தாரா கண்டுபிடிச்சிருவாங்க!” இது நீங்க எவ்வளவு தூரம் கௌதமை தெரிஞ்சு, புரிஞ்சு வச்சிருக்கீங்கனு சொல்றதுக்காக அவர் கொடுத்த குறிப்பு;

ரெண்டாவது எதுக்கு உங்களைவிட்டு டில்லி நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அவர் கொடுத்த விளக்கம் இது. தாமரை பேசப் பேச தாராவின் கன்னங்கள் ரூஜ் தடவியதுபோல் அடர் சிவப்பிற்கு மாறிக் கொண்டிருந்தது! வேறொரு பெண்ணின் வாயிலாக கௌதமின் பேச்சைக் கேட்ட பொழுதுதான் அவளின் அன்பின் ஆழம் அவளுக்கே புரிந்தது!

“ம்ம்ம்,,,” னாவது பதில் சொல்லுங்க!” என்று தாமரை கூற, பதிலுக்கு

“ம்,,,ம்,,,ம்,,,” சொல்லுங்க என்று மென்குரலில் கூறினாள் தாரா.

ரெண்டாவது கௌதம் கூறி என் மனசில் பதிஞ்சது

“எனக்குத் தாராவின் அன்பு வளையத்திலிருந்து தப்ப வேண்டும். என்னைத் தன் கைகளோடு பிணைத்துக் கொண்டு ஒரு கோவிலுக்கு இழுத்துச் சென்று ‘கட்டுடா தாலியை’ என்றால் என்னால் மறுக்க முடியாது! ஏனென்றால் அவள் அன்பு அவ்வளவு ஆழமானது! அகலமானது! என்னால் நீந்திக் கடக்க முடியாதது! நான் நினைவிழந்திருந்த நாட்களில் என்னை அறியாமலேயே என் மனதை முற்றிலுமாய் ஆக்கிரமித்தவள் அவள்!” கௌதம் பேசிய இந்தப் பேச்சுக்களெல்லாம் கல்வெட்டு மாதிரி என் மனசுல பதிஞ்சிருச்சு!”
என்று தாமரை கூற,

“சரி தாமரை, நாங்க ரெண்டுபேரும் உங்க வீட்டுக்குத்தான் வந்துக்கிட்டிருக்கோம்; உன் தோழருக்கு உன்னைப் பார்த்துப் பேசலைனா தூக்கம் வராதாம்!”

“போங்கக்கா என்னை ரொம்ப கிண்டல் பண்ணாதிங்க” என்று அவள் கொஞ்ச, “போகவா? வரவா?” என்று கேட்டுவிட்டுக் காலை கட் செய்தாள் தாரா

“இதெல்லாம் உண்மையாவே நீ பேசிய வசனங்களாடா? என் அன்பை உன்னால முழுசா உணர முடிஞ்சதா?”

“உன்னோடு ஏற்பட்டப் பிரிவில்தான் உன் அன்பை முழுசா கண்டுபிடிச்சேன்”

“இன்னும் என்னெவெல்லாம் அவக்கிட்ட பேசின!?”

“என் மனசை திறந்து காட்டக்கூடிய சிறந்த தோழியா அவ இருந்தா, அதே மாதிரி, அவள் கதையையும் என்கிட்டப் பகிர்ந்துக்கிட்டா!

அதைக் கேட்ட தாரா ஆ,,,வென்று வாயைப் பிளந்து, “தாமரையின் கதையை சொல்லுடா!” என்று அவள் கெஞ்ச, அவனும் கூறத் தொடங்கினான்!

“ரொம்ப அழகான லவ் ஸ்டோரி வித் காமடி!” என்று தாமரையின் கதையை ஆதியோடந்தமா கூறி முடித்தான் கௌதம்.

“எனக்கு இந்தக் கதையில் வர்ற அஷ்வினை ரொம்பப் பிடிச்சிருக்கு சித்தார்த்! அவங்க அவங்க மொழியவேக் கத்துக்காத காதலர்கள் இருக்கும் இந்தக் காலத்தில் தன் காதலிக்காக, அவன் சங்கத்தமிழ், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினென் கீழ் கணக்கு நூல்கள் மட்டுமில்லாம, பழைய சினிமாப் பாடல்கள்னு கத்துக்கிட்டு, அதை சரியான இடத்தில் சிட்டுவேஷன் சாங்கா பாடி, கலக்கியிருக்காருப்பா நம்ம மச்சான். அந்த ப்ரேக் அப் ட்ராமாவும், மறுபடியும் தன் காதலியோடு இணைந்ததும் சிம்ப்ளி சூப்பர்ப்பா! என் ஓட்டு ஹீரோ ஆர்மிக்குத்தான்!”

தாரா, கௌதமுடன் பேசிக் கொண்டே தாமரை வீட்டுக் கதவைத் தட்ட, அவள் வந்து கதவைத் திறந்தாள்.

“ஹையோ நீங்க ஃபோன் பேசவும் உங்க ஹோட்டல் அறையிலிருந்துதான் பேசுறீங்கனு நினைச்சேன்! எங்க என் ரயில் ஸ்நேகிதனைக் காணோம்?! மறுபடியும் ஓடிப் போய்விட்டானா?” என்று தாமரைக் கேட்க,

“என்னைப் பார்க்கலைனா தாமரை மலர் வாடிப் போயிரும்! கிளம்பு கிளம்புனு என்னைக் கிளம்ப வச்சிட்டான்; அவனுக்கு உன்னைப் பார்க்காம இருக்க முடியலையாம்; பார்த்துமா மறுபடியும் ப்ரேக் அப் ஆகிறாம பார்த்துக்க!”

“அப்ப என் கதை எல்லாம் கேட்டு முடிச்சாச்சுனு சொல்லுங்க!”

டாக்சியை அனுப்பிவிட்டு வந்தவன்,

“என்ற வீட்டுக்காரம்மா என்ன சொல்றாங்க தாமரை? என்று கேட்க,

“கௌதமிற்கு உங்க மேலிருந்த இந்த அழகான, ஆத்மார்த்தமான உரிமையைத்தான் நான் அந்த ரயில் பயணம் முழுவதும் பார்த்தேன்!”

“நீங்க ரெண்டு பேரும் சாப்டீங்களா, வாங்கச் சுடச் சுட சோறு பொங்கி வச்சிருக்கேன். நல்ல காட்டமா, பெருங்காய வாசனையோடு மிளகு ரசம் இருக்கு! ஒரு வார்த்தை நீங்க வர்றதா சொல்லி இருந்தா ஒரு பெரிய விருந்தே ரெடி பண்ணி இருப்பேன்.

“இப்ப என்ன கெட்டுப் போச்சு, வீட்டில் என்ன காய் வச்சிருக்க?”

“ஃப்ரிட்ஜ் காலியா இருக்கு! அக்கா செஞ்சு கொடுத்த ஊறுகாய் தொக்கு இருக்கு!”

“உட்காரு மூணு பேரும் பகிர்ந்து சாப்பிடலாம்!” என்று தாரா கூற மூவரும் சந்தோஷமா சாப்பாட்டைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள். தொடரும்IMG-EKKUM 888.jpg
 
Top