Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 15

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ கதையின் அடுத்த பதிவு. நாளை இரண்டு பதிவுகள் தரப்படும். அதனால், கொஞ்சம் லேட்டானாலும் ஆகலாம். சென்ற பதிவிற்கு ஆதரவளித்தவர்களுக்கு மிக்க நன்றி. இந்த எபி எப்படி இருக்குன்னு படிச்சிட்டு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்...


காதல் 15

1266


அந்த மாளிகையின் முன் நின்று அதனை பார்த்து நின்றான் முகில். இங்கே தான் அவனை வரசொல்லியிருந்தார்கள். உள்ளே அவனுக்கு வரவேற்பு எவ்வாறு இருக்கும்? இப்படி யாரென்றே தெரியாதவர் வீட்டிற்கு வருகிறோமே என்று எண்ணியவாறே நின்றிருந்தான் அவன்.

அப்போது, அங்கிருந்த சாளரத்தின் வழியாக யாரோ தன்னை பார்ப்பதை உணர்ந்தவன், திரும்ப செல்லலாமா என்று யோசிக்கையிலே ஒருவர் வெளியே வந்தார். அவனை நோக்கி புன்னகை முகமாக வந்தவர், “வாப்பா…” என்று அவனை அணைத்து, “எங்க வீட்டு மாப்பிள்ளையாகப் போற. ஆரத்தி எடுத்து வரவேற்க முடியாத நிலைமை. கண்டிப்பா அடுத்த முறை எடுத்தர்றோம்” என்க, அதில் இருந்தே தெரிந்துவிட்டது, அவருக்கு அனைத்தும் தெரியும் என்பது.

ஆனாலும், அவர் யாரென்று தெரியாதே! அதனையே கேட்டும்விட்டான்.

“உன்னப்பத்தி எங்ககிட்ட அவ்வளவு சொன்ன அனிலா, என்னைப் பத்தி எதுவுமே சொல்லலியா? நான் அவளோட மாமா, அதாவது அவ அத்தைய திருமணம் செய்துகொண்டவன். இது போதுமா இப்போதைக்கு? உள்ளே போய் பேசலாம்” என்று அவனை அழைத்துச் சென்றவர் அனைவரையும் அழைத்து அவனை அறிமுகப்படுத்தினார்.

அங்கிருந்தவர்களில் அவன் அறியாதது அவள் மாமா, அத்தை மற்றும் சதாஃப் மட்டுமே. அதுபோக அனிலாவும் அவள் பெற்றோரும் இருந்தனர். மூவருமே அவனுடன் நன்றாக பழக, அவர்கள் பேசிய விதத்திலேயே அவன் அறிந்துகொண்டான், தன்னை அவர்களுக்கு பிடித்திருக்கிறதென்று.

அப்போது அங்கே ஒருவர் வர, சட்டென அமைதியாகினர் அனைவரும். அவர்கள் பார்வை அவரை நோக்கி திரும்ப, தானும் அது யாரென பார்த்தான்.

முடியின் நரையும், தோலின் சுருக்கங்களும் அவர் வயதை பறைசாற்ற, வெள்ளை நிற சுடிதார் வகையான ஒரு உடையணிந்து துப்பட்டாவை தன்னை சுற்றி பின் செய்திருந்தார். அவர் கண்களின் கூர்மை அவனில் வந்து நிலைக்க, தன்னைப்போல் எழுந்து நின்று வணக்கம் வைத்தான் அவன்.

அவன் வணக்கத்தை கண்டுகொள்ளாதவர் தன் மருமகனை பார்க்க, “இவரு என்னோட பிஸினஸ் பார்ட்னராக போறவரு. அத பத்தி பேச வந்திருக்காரு. அப்படியே நவராத்திரியையும் கொண்டாட அழைத்தேன்” என்று கூற,

அவர் புறம் இருந்து பார்வையை திருப்பிய அந்த பாட்டி, முகிலின் புறம் திரும்பி அவனை மேலிருந்து கீழ் நோக்கியவாறே, “பேர் என்ன?” என்று கேட்டார்.

“முகில்” என்று அவன் பதிலளிக்க, அவன் முகத்தில் என்ன கண்டாரோ, அடுத்த கேள்வி பறந்தது, “எங்கிருந்து வரே?”

சுற்றியிருப்பவர்களில் சிலர் அவனை தங்களை நோக்கி திசைதிருப்ப முயல, மாமா தான் பதிலளிக்க போக, அதற்கு முன்னே சொல்லிவிட்டிருந்தான் அவன், இந்தியா என்று.

அதில் அனைவரும் மானசீகமாக தங்கள் தலையில் கைவைக்க, அவனை பார்த்தவர் கண்களில் வெறுப்பு மண்டியிருந்தது. அவனிடம் இருந்து தன் பார்வையை விலக்கி அனைவரையும் பார்த்தவர், ஏதோ முனுமுனுத்தவாறு அவ்விடம் விட்டு நகர்ந்தார். மருமகன் அல்லவா அழைத்திருக்கிறான். அவரிடம் பட்டென எதுவும் கூறிட முடியாதே! ஒரு வேளை, இவ்விடத்தில் அவர் எதுவும் பேசமாட்டார் என்பதனால் தான் முகிலை இங்கே வரவைத்தார்களோ?

அவர் செய்கையிலேயே அவனுக்கு புரிந்துவிட்டது, தான் இங்கே இருப்பதில் அவருக்கு பிடித்தமில்லை என. சொல்லிவிட்டு வெளியேறிவிடலாம் என்று அவன் நினைக்க, அவனிடம் கண்களால் கெஞ்சிக்கொண்டிருந்தாள் அனிலா. தான் இங்கே வந்ததற்காக காரணம் நினைவிற்கு வர, காதலுக்காகவும் அவளுக்காகவும் அங்கே தங்க முடிவெடுத்தான் முகில்.

அவனை அழைத்துச் சென்று ஒரு அறையை காட்ட, அதில் சிறிது நேரம் ஓய்வெடுத்தவன் இரவு உணவுக்காக அழைக்கப்பட, கீழே வந்தான். அங்கே அனைவரும் இருக்க, அவர்களை பார்த்து புன்னகைத்தவன், ஒரு இருக்கையில் அமர்ந்தான்.

பரிமாறிய உணவு வகைகளை பார்த்தவனுக்கு அவை என்னவென்பதே புரியவில்லை. ‘இனி இட்லி சாம்பாரோட இதையும் பழகிக்கலாம்!’ என்று நினைத்தவன் அதனை எடுத்து சுவைக்க, அற்புதமாக இருந்தது. அந்த சுவையில் லயித்திருந்தவன் அதனை உண்ண ஆரம்பித்தான்.

சிரிப்பும் பேச்சுமாக நேரம் நகர்ந்துகொண்டிருக்க, அப்போது முகிலை நோக்கி பாய்ந்தது ஒரு குரல்.

“இடக்கையில் தான் சாப்பிடுவியா? என்ன பழக்கமோ!” என்று அங்கலாய்த்தார் அந்த பாட்டி.

மாலை அவன் வந்தபோது மருமகனை மீறி எதுவும் பேசமுடியாமல் நகர்ந்துவிட்டவருக்கு இப்போது அவன் செய்கை யாரையோ நினைவுபடுத்த, சட்டென இளகிய மனதை இறுக்கியவாறு கேட்டுவிட்டார் அவர்.

அவர் பேச்சை எப்படி எடுத்துக்கொள்வானோ என்று எண்ணியவர்கள் அவன் புறம் நோக்க, அவனோ சிரித்தவாறே, “அதனால என்ன பாட்டி? இடதுபுறம் என்ன பாவம் பண்ணுச்சு? ஏன், நம்ம உயிர்வாழ முக்கியமான இதயமே இடதுபுறம் தான இருக்கு?” என்று கேட்க, அவன் பேச்சு மேலும் அவரை ஏதோ செய்ய, அவ்விடம் விட்டு எழுந்துவிட்டார்.

அனைவரும் அவரை தடுக்கப்பார்க்க, “எனக்கு போதும். நீங்க எல்லாரும் சாப்பிடுங்க” என கூறிவிட்டு நகர்ந்துவிட்டார். அவர் செய்கையில் முகில் தன்னால் தான் அவர் உணவருந்தாமல் சென்றாரோ என்னும் எண்ணம் எழ, முகிலால் அதற்கும்மேல் அங்கே ஒட்டமுடியவில்லை. இருந்தும், யாரும் வருந்தக்கூடாது என நினைத்தவன், அவர்களுடன் சிறிது நேரம் இருந்துவிட்டே நகர்ந்தான்.


******

நட்சத்திரங்களும் நிலவும் அந்த கரிய ஆகயத்தில் வரைந்த கோலத்தை பார்த்தவாறு நின்றிருந்தான் முகில். அவனருகே வந்து நின்றாள் அனிலா. அவள் வந்ததை கண்டுகொள்வதற்கு அவன் மனம் இங்கே இருந்தால் அல்லவா? இரண்டு நாட்களாக அங்கே நடந்ததையே நினைத்துக்கொண்டிருந்தான்.

சில முறை அவனுக்கு யாரடி நீ மோகினி தனுஷ் எவ்வாறு சுகுமாரியிடம் அடி வாங்குவாரோ, அதே போல் தோன்றும் பாட்டியின் செய்கை. அவன் நின்னால் குற்றம், நடந்தால் குற்றம், அட, எது செய்தாலும் குற்றம் என்றே கூறுவார். ஆனால், அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அவனை சொந்த மகனைப் போல் பார்க்கிறார்கள்.

அவன் மீதான அவர் வெறுப்பிற்கு காரணம் புரியாமல் தவிக்கிறான் முகில். இந்த லட்சனத்தில் இந்த விக்கெட்டை வேறு கைப்பற்ற வேண்டுமாம். சில சமயம் இவையெல்லாம் தேவைதானா? என்று கூட தோன்றுவதுண்டு.

அவர்களின் பழக்க வழக்கம் முற்றிலும் வேறு. அட, பேசும் மொழி கூட வேறு. சில முறை சிந்தியில் பேசுகின்றனர், சில முறை, வேறு ஏதோ ஒரு மொழி. கேட்டபோது ஏதோ ஒரு பெயர் சொன்னார்களே! தட்கி! ஆளில்லா அத்துவானக் காட்டில் விட்டால் கூட மகிழ்ந்திருப்பான் போல! ஆனாலும் அவனை தனியாள் என்று எண்ணாமல் தங்களோடே வைத்துக்கொண்டார்கள். முகிலும் அவர்களோடு ஒன்றிவிட, அவனுக்கு நேரம் நன்றாகவே போனது.

இவ்வாறு யோசிக்கையில் தான் அவனுக்கு மற்றொன்றும் தோன்றியது. அவனுக்காவது சில நாட்கள் தான். ஆனால், அனிலா அவனை திருமணம் செய்தால் அவள் வாழ்நாள் முழுவதும் இவ்வாறு தெரியாத மனிதர்கள், அறியாத மொழி, புரியாத பழக்கங்கள் என வாழ வேண்டும் அல்லவா? அதுவும் அவள் அனைத்தையும் எவ்வளவு நேசிக்கிறாள் என்பதை அவன் இங்கு வந்துதான் அறிந்துகொண்டான். என்னதான் அயல்நாட்டில் வளர்ந்திருந்தாலும், அவளுக்கும் சரி, அவளுடன் வளர்ந்த மற்றவர்களுக்கும் சரி, அனைத்தையும் கற்றுக்கொடுத்தே வளர்த்திருந்தனர். அதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான பண்டிகைகளை சொந்தங்களுடன் கொண்டாடுவதும் காரணமாக இருக்கலாம்.

இவன் இவ்வாறு எல்லாம் எண்ணிக்கொண்டிருக்க, அவன் எண்ணத்தின் நாயகியே வந்து அருகில் நின்றிருந்தாள். சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்தவள், இருமி அவன் கவனத்தை ஈர்த்தாள்.

அதில் தன் கவனம் கலைந்தவன் அவள் புறம் திரும்ப, மாலையில் நடத்திய பூஜைக்காக உடுத்திய சோலியை மாற்றாமல் அதே புத்துணர்ச்சியுடன் நின்றிருந்தாள்.

“என்ன… யோசனை பலம் போல?” என்று அவள் கேட்க,

“நீ என்ன என்னை பாக்க எல்லாம் வந்திருக்க?” என்று சிறிது முறுக்கிக்கொண்டு கேட்டான். இந்த இரண்டு நாட்களில் இருவரும் நேரில் பார்த்துக்கொள்ள சந்தர்ப்பம் அமையவே இல்லை. அவ்வாறு அமைந்தாலும் அனிலாவால் இரு வார்த்தைகளுக்கு மேல் பேசமுடியாது. அதனை நினைவுப்படுத்தி அவன் இப்போது கேட்க, அதில் சிரித்தவள்,

“சாரி முகி! இந்த மாதிரி டைம் தான சேர்ந்து டைம் ஸ்பெண்ட் பண்ண முடியும்? அதுவும் நீ மட்டும் என்ன? கேங் உருவாக்கி அவங்கள கூட்டிட்டு எப்பவும் மட்டைய தூக்கிட்டு நிக்கற” என்று அவளும் அலுத்துக்கொள்ள, அதுவும் உண்மைதான் என்பதால் சிரித்துக்கொண்டான் அவன்.

“சரி சொல்லு… என்ன யோசிச்சுட்டு இருந்த?” என்று அவள் கேட்க, “விடமாட்டியே!” என்றுவிட்டு அவன் நினைப்பை கூற,

“இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம் முகி! எங்க பாட்டி தாத்தாவை திருமணம் செய்தபோது முதலில் ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். அப்போ எல்லாம் சண்டை கூட ரொம்ப வருமாம். அதுவும் அப்போதைய சூழ்நிலையில் அடுத்த வேளை உணவு இல்லைங்கறது ஒரு கொடுமைன்னா, அந்த உணவை தேட நாம உயிரோட இருப்போமான்னு தெரியாதது அதை விட கொடுமை இல்ல? இவை எல்லாத்தையும் தாண்டி வந்துதான் அவங்க வாழ்ந்தாங்க. அப்போ அவங்களுக்கு இருந்தது எல்லாம் ஒன்னே ஒன்னு தான், நம்பிக்கை. அதை அவங்க கணவன் மேல பரிபூரணமா வெச்சாங்க. ஒரு இடத்தில் தேங்கி நிற்பது மட்டுமே வாழ்க்கை இல்ல முகி. நாம அடுத்தடுத்த கட்டங்களுக்கு போயிட்டே இருக்கனும். என் வாழ்க்கையின் அடுத்த கட்டம் உன்னோட தான்னு நான் முடிவு செய்தபோதே அதை பழகிக்கனும்னு முடிவு செய்தாச்சு. உங்க ஊருலயும் பெரும்பாலும் இப்படி தான நடக்குது!” என்று அவள் முடிக்க, தன் அம்மாவின் எண்ணம் தோன்றாமல் இல்லை அவனுக்கு. அவரும் இதுபோல தான் தன் தந்தையை மட்டும் நம்பி வந்திருப்பாரோ?

அப்போது தான் அனிலா அவள் பாட்டியை பற்றி உரைத்தது கருத்தில் பட, “உன் பாட்டிக்கு ஏன் என்னை பிடிக்கலை? நான் இதுவரைக்கும் அவங்களை பார்த்தது கூட இல்லை” என்று கேட்டான்.

“முகி… அவங்களுக்கு பொதுவாக இந்தியர்களைப் பிடிக்காது. பாயல்கூட நான் பழகுவதை அவங்க திட்டிட்டே தான் இருப்பாங்க. இப்போ உன்னை லவ் பண்றது தெரிஞ்சா என்ன நடக்குமோ?” என்று அவள் கூற,

“ஏன் அப்படி? முன்ன மாதிரி இல்லாம இப்போ எல்லாம் எவ்வளவோ மாறிடுச்சு. நம்ம இளைஞர்கள் கூட, ரெண்டு நாட்டிலுமே ஒற்றுமையைத் தான் விரும்பறாங்க. ஆனாலும், இவங்கள மாதிரி சிலர் இன்னும் மாறாமயே இருக்காங்களே!” என்று அவன் அங்கலாய்க்க,

தொலைவில் தெரிந்த வானை வெறித்தவள், “ஏன்னா, அவங்க இழந்தது அதிகம் முகி! நீ பொறந்தது, வாழ்ந்தது எல்லாமே நம்ம ரெண்டு நாட்டு பார்டர்க்கு வெகு தொலைவில். உன் அப்பா உங்கிட்ட அவரோட பார்டர் கதைகளை சொல்லிருப்பாரா இல்லையான்னு தெரியல. பொதுவாக எந்த ஒரு யுத்தமாக இருந்தாலும், அதில் பாதிக்கப்படுவது அரசாங்கம் இல்ல, அப்பாவி பொதுமக்களும், நாட்டுக்காக களத்தில் இறங்கற வீரர்களும் தான். அதுவும் சுதந்திரத்தின்போது தென்னிந்தியத்தில் சுதந்திர ரத்தம் மட்டும் சிந்திய சமயம் வட இந்தியாவில் சுதந்திரத்திற்காக சிந்திய ரத்தம் காய்வதற்கு முன்னாலே கொத்து கொத்தாக வேறொரு காரணத்திற்காக ரத்தம் சிந்தியது. நாம எல்லாம் சுதந்திரம் ரொம்ப ஈஸியா கெடைச்சதுன்னு நினைத்துவிட்டு போயிடுறோம். இன்னும் நமக்கு பின்னால் வரும் சந்ததிகள் அதை ஏதோ கடையில் விற்பதாக எடுத்துக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த சுதந்திரத்திற்கு பாடுபட்டதும், அதற்கு பின்னான அனைத்து சுக துக்கத்தையும் தாங்கியது அவங்க தலைமுறையும் அதற்கு முந்தைய தலைமுறைகளும் தான். அந்த வகையில் பார்த்தால், இப்போ ஒரு வேளை சாப்பாடும், உடுத்த உடையும், தங்க கூரையும் இருக்கும் ஒவ்வொருவரும் என்னை பொருத்தவரை Born with silver spoon தான்” என்றவள்,

“இப்போ நம்ம ரெண்டு நாட்டு இளைஞர்களும் பெரும்பாலும் ஒற்றுமையாக இருக்கனும்னு தான் விரும்பறாங்க. ஆனால், உண்மையை சொல்லு, நீ வளர்ந்து, இது நல்லது கெட்டதுன்னு பகுத்தறிவதற்கான வயது வரும்வரை எங்களை எதிரியாக தானே பார்த்திருப்ப?” என்று அவள் கேட்கையில் ஆம் என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது அவனுக்கு. சிறிய வயதில் இருந்து சமுதாயத்தால் திணிக்கப்பட்டது அது. அதன் முக்கிய காரணம் ஊடகம் என்றால் மிகையல்ல.

ஏன், கிரிக்கெட்டிலேயே மற்ற அணிகளோடு விளையாடுகையில் ஏற்படும் அலையை விட, இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின் போது மட்டும் அனைவரும் உற்று நோக்குவதாகத் தோன்றும் அவனுக்கு. அது எதனால்?
 
Top