Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் -14

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
வீட்டின் உள்ளே செல்ல " ஒரு சுவரில் சாய்ந்து கண்மூடியிருந்தாள் முத்துச்செல்வி.

கண்மணி சென்று அவள் அருகில் அமர்ந்து அவள் கைகளை பற்றி கொள்ள மெல்ல கண் திறந்து பார்த்தவள் ..."கண்மணி " என்று கதறியபடி இவள் தோள் சாய்ந்தாள் .
அன்று விடியலில் தங்கையை தேடி சென்றவள் கண்டது அவளது அறைக்குள் கயிற்றில் உயிரற்ற உடலாய் தொங்கி கொண்டிருந்த தன் தங்கையை தான்.

அப்போது முதல் அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து வர வாய் விட்டு கதறியவளைஅடக்கியது அவளது அத்தையொருத்தியின் குரல்.

"எதுக்குடி இப்போ அழுவுற ..இவ பண்ணி வச்ச காரியத்துக்கு ..இதோட போச்சேன்னு நெனச்சுக்கோ..இல்லைன்னா என் தம்பி மானம் போயிருக்கும் .." என்று அதட்ட ..இந்த மனிதர்களுக்குள் மனிதம் என்பதே செத்து விட்டதோ என்று தான் தோன்றியது கண்மணிக்கு.

இவளது தாய் வடிவும் அங்கு தான் அமர்ந்திருந்தார்.

தன் மீது சாய்ந்து அழுத தோழியை மெல்ல தட்டிக் கொடுத்தபடி இருக்க அவளது கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை .

இதற்குள் பிரேத பரிசோதனை முடிந்து உடலை தந்து விட்டதாக போன் வரவும் ..முதலில் ஆண்கள் எல்லாரும் எழுந்து ஊர் எல்லையை நோக்கி நடக்க ..பெண்களும் பின் தொடர்ந்து சென்றனர் .முத்துசெல்வியோ அசையாமல் அமர்ந்திருக்க .. கண்மணி தான் அவளை உலுக்கி எழுப்ப வேண்டியதாயிருந்தது.
பேந்த பேந்த விழித்தவளுக்கு சுற்றிலும் இருந்த அமைதி தன் உறவினர்கள் அனைவரும் சென்றுவிட்டதை உணர்த்த ..இப்போது கட்டுப்படுத்த முடியாமல் வெளிப்பட்டது ஒரு கேவல்.

"கண்மணி ..கண்மணி " என்று அவளை கட்டிக் கொண்டு அழ ..கண்மணியாலும் தன் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை !

இதுவரை முத்துசெல்வியிடம் இருந்த ஒருவகையான தயக்கம் விடைபெற்று இருப்பது போல் பட்டது . எப்போதும் ஒரு கூட்டுக்குள் முடங்கியவள் போல் இருப்பாள்.. என்னதான் தோழி என்று சொல்லிக் கொண்டாலும் ஒரு ஒதுக்கம் இருக்கும் ..இன்று அவளது விழிகளில் இந்த உணர்வுகள் எதுவுமே தென்படவில்லை!

"போதும் முத்து.. எவ்வளவு நேரம் இப்படியே அழுவ? வா போகலாம் ..லக்ஷ்மியை கூட்டி வந்திடுவாங்க " அழகாக துள்ளித் திரிந்து கொண்டிருந்த அப்பெண்ணை உடல் என்று கூற கூட வாய் வரவில்லை.

"இனிமே பாத்து என்ன ஆகப் போகுது கண்மணி ? அவ முகத்தை பாக்குற தைரியம் இல்ல எனக்கு " பெருகும் கண்ணீரை துடைக்க கூட மறந்து அமர்ந்திருந்தவளை பார்க்கையில் ஆயாசமாக இருந்தது கண்மணிக்கும் தன்யஸ்ரீக்கும்.

"யாருக்கும் அவ போனதுல வருத்தமேயில்ல ..என்ன பேசிக்கிறாங்க தெரியுமா எல்லாரும் ..இப்படி கோயில் நோம்பி வர நேரம் எழவு உளுந்து போச்சேன்னு... ஒரு வாரம் கழிச்சி போயிருந்தா இன்னும் சந்தோசமா இருந்திருப்பாங்க " அவள் குரலில் அதுவரை அடக்கி வைத்திருந்த கோபமும் ஆற்றாமையும் வெடித்து வெளி வர அவள் முதுகை ஆறுதலாய் தடவியபடி அமர்ந்திருந்தனர் பெண்கள் இருவரும்.

"என்ன தப்பு செஞ்சிட்டா என் தங்கச்சி ? காதலிச்சா.. அவ்வளவு தானே ! அதுக்கு தான் ஒரு வாரமா அவளை போட்டு பாடா படுத்தினாங்க ..அதை கேள்விப்பட்டு தான் போன வாரமே நானும் ஊருக்கு வந்திட்டேன். வந்து மட்டும் என்ன பிரயோஜனம் ?" என்று தன் தலையில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டவளை சமாதானப் படுத்தவே இயலவில்லை கண்மணியால்.

"நான் ஒரு கிறுக்கச்சி.. காதல்லாம் வேணாம் விட்டுடுன்னு அவளுக்கு அட்வைஸ் பண்ணிக்கிட்டிருந்தேன் . அவளை காதலிக்க கூடாதுன்னு சொல்ல நான் யாரு .. அவளுக்கு புடிச்சவனோட வாழக் கூடாதுன்னு தடுக்க இவங்கல்லாம் யாரு ? இவ வேற ஒருத்தன கல்யாணம் பண்ணி போய்ட்டா தாலி கட்டுன அடுத்த நிமிஷம் மூக்கு முட்ட கொட்டிக்கிட்டு மொய் எழுதிட்டு போயிருவாங்க .அதுக்கப்புறம் அவ சீராடிக்கிட்டு நின்னாலும் கவலையில்லை ..சீரழிஞ்சி நின்னாலும் கவலையில்லை .. சாதி ,கௌரவம், மானம் ,மரியாதை எல்லாத்தையும் காப்பாத்திட்டோம்னு நெஞ்சை நிமித்திட்டு அடுத்த வேலையை பாக்க போயிருவாங்க " என்றவள் சட்டென்று எழுந்து எதிரில் இருந்த சுவரில் வேகமாக தலையில் முட்டிக்கு கொள்ள ..அவளது ஆவேசத்தைக் கண்டு பதட்டம் தொற்றிக் கொண்டது கண்மணிக்கு !

அவளை இழுத்து தன்யஸ்ரீ பிடித்துக்கொள்ள "என்ன விடு ..நான் உயிரோடவே இருக்க கூடாது.. நானும் செத்து போயிரணும் " என்று ஆவேசம் வந்தவள் போல் கத்த.. அவ்வளவு நேரம் அவள் வாய் விட்டு அழ கூட இல்லை என்பதை புரிந்து கொண்ட கண்மணி அமைதியாக நின்று அவளை அழ விட்டாள்.

"என்ன தான் நடந்திச்சு முத்து?"

"அவ அந்த பையனோட ஓடி போப்போறானு தெரிஞ்சதும் அவளுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கணும்.அவளுக்கு இப்படி ஆக நான் விட்டிருக்க கூடாது ..நான் தான் காரணம் அவ சாவுக்கு .. ரெண்டு பெரும் ஊருக்கு வெளியே இருக்க பாலத்துக்கிட்ட சந்திச்சு இருக்கும் போது ..ஊர்க்காரங்க பாத்துட்டாங்க .. அந்த பையனை தொறத்திட்டு போயிருக்காங்க ..இவளையும் அடிச்சு இழுத்திட்டு வந்திட்டாங்க . அதுக்கப்புறம் அவளை சாப்பாடு கூட குடுக்காம தான் அடைச்சு வச்சிருந்தாங்க .. எங்கம்மாகூட அவ மனச புரிஞ்சிக்கலை ..அவங்களுக்கு அவங்க புருஷனை யாரும் குறை சொல்லிடக் கூடாது ..அவங்க வளர்ப்பை குறை சொல்லிடக் கூடாது . பிடிக்குதோ பிடிக்கலையா அவங்க பாக்குற பையனை கட்டிக்கிட்டு காலம் முழுக்க கஷ்டப்பட்டாலும் கவலையில்லை ..அவங்க மானம் மரியாதை போக கூடாது. கடைசி வரை இந்த ஊருல வாங்க எந்த பேச்சும் இல்லாம வாழனும் .இதுதான் அவங்களுக்கு முக்கியம் .”

"என்ன நீ படிக்கிற காலேஜில் சேத்தது கூட உன்ன கண்காணிக்க தான் தெரியுமா ?" என்றதும் மனம் அதிர்ந்தது கண்மணிக்கு. தன் தந்தை இப்படி செய்வார் என்று சில நாட்களுக்கு முன்னால் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டாள். இப்போது அவர் செய்ய கூடியவர் தான் என்று தோன்றியது.

" பசியே தாங்க மாட்டா அவ . நாந்தான் ரகசியமா அவளுக்கு சாப்பிட குடுத்தேன் ..என்ன எப்படியாவது வெளிய போக விட்டுருக்கா ..நான் ஓடிடுறேன்னு சொன்னா..நான் செஞ்சிருக்கணும் ..பயத்தில முடியாதுன்னு சொல்லிட்டேன். போனையாவது குடுக்கான்னு கேட்டா ..சரின்னு குடுத்தேன் ..அந்த பையனுக்கு அவன் பேரு சுரேஷ் ..அவனுக்கு போட்டு போட்டு பார்த்தா..ஸ்விட்ச் ஆப்புனு வந்துக்கிட்டேயிருந்தது. அவன் பிரெண்டு ஒருத்தனுக்கு பேசிப்பார்த்தா ..அவன் திரும்ப ஊருக்கு வரவேயில்லன்னு சொன்னான் ..அவனை ஏதோ செஞ்சிட்டாங்கக்கான்னு அழுதுக்கிட்டே இருந்தா .. காலையில இப்படி பண்ணிக்கிட்டா ..இங்க பாரு எனக்கு சாக முந்தி மெசேஜ் அனுப்பியிருக்கா " என்று தன் செல்போனை காட்டினாள்.


' அக்கா.. என் சுரேஷை ஏதோ செஞ்சிட்டாங்களோன்னு பயமா இருக்கு.. அன்னிக்கு ராத்திரிக்கு அப்புறம் அவன் வீட்டுக்கு திரும்பிப் போகலன்னு அவன் பிரெண்டு சொன்னான். இப்போ நான் என் உயிரை விடறது தான் எனக்கு இருக்க ஒரே வழி.. அவன் செத்து போயிருந்தா ரெண்டு பெரும் சாவிலேயாவது ஒண்ணா சேருவோம் ..அப்படி அவன் உயிரோட இருந்தா இனி அவனை ஒன்னும் செய்யாம விட்டுருவாங்க ..அவனாவது நல்லா இருக்கட்டும் . நீயாவது எனக்காக அழுவியாக்கா ?" என்ற கேள்வியோடு முடிந்த குறுஞ்செய்தியை படித்த சகோதரிகளுக்கும் கண்ணீர் பொங்கி வழிந்தது..

தன் தங்கையின் அலைபேசியை கையில் எடுத்த முத்துச்செல்வி லக்ஷ்மியின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக காட்டியவள் .."பாரு கண்மணி ..பாரு.. எப்படி வாய் நிறைய சிரிச்சுக்கிட்டே இருக்கா ..பாரு .." என்றபடி ஒவ்வொன்றாக தள்ளிவிட ..சட்டென்று ஒரு புகைப்படம் வந்ததும் அதை கண்டு அதிர்ச்சியில் அலைபேசி கண்மணியின் கைகளில் இருந்து நழுவி விழுந்தது!


அதில் ராமலக்ஷ்மியின் அருகில் மலர்ந்த புன்னகையோடு நின்றிருந்தான்.. இவர்களது தோப்பில் குற்றுயிரும் குலையுயிருமாக விழுந்து கிடக்கும் அந்த இளைஞன் !




 
யப்பா ...என்ன கொடுர மனம் படைத்தவர்கள் இவங்ள்
சின்ன பொண்ணு இறந்த துக்கம் கூட இல்லை 😡
சூப்பர் 😀
 
Top