Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 9

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
அத்தியாயம் - 9

தாமரையை பெரும்பாலும் இவள் வீட்டு பெண்களுக்கு அதிகம் பிடிக்காது. வடிவு மட்டும் அவளுக்கு எதிராக எதுவும் பேச மாட்டார். அனால் அவரிடம் பேசவும் மாட்டார்.

"ஏன்கா இந்த தாமரை இருக்காளே ..கெரகம் புடிச்சவ ..அவ வீட்டுக்கு இந்த கண்மணி புள்ள எப்போ பாத்தாலும்போய் நிக்குது..நீ சொல்ல கூடாதா ?" பரிமளாதான் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"சின்ன புள்ள தான ..ஏதோ பேசிட்டு போறா . அவ பையனும் வெளியூர்ல படிக்கிறான்.சொக்கலிங்கம் வாத்தியாரும் எப்பவும் ஸ்கூலு வெளி வேலைன்னு சுத்துவாரு. இவ போய் பேசிட்டு வந்தா அவளுக்கு கொஞ்சம் சமாதானம் இருக்கும். விடு."

"இப்படியே விட்டு விட்டு தான்கா நம்ம குடும்பத்தையே கெடுத்தா மறந்துட்டியா?"

"ஆமாம் அண்ணி .நீங்க கொஞ்சம் கண்மணியை இழுத்து பிடிங்க ..அவகிட்டல்லாம் ஓட்ட விடாதீங்க "ஒத்து ஊதினாள் சங்கரி.

இவர்களுக்கு ஏன் தாமரை அத்தை மேல் இத்தனை வன்மம் என்று யோசித்தபடி மேலும் காதை தீட்டினாள் கண்மணி.

"வயசு காலத்திலேயே இவ ஒழுக்கமா இல்ல ..அவ அத்தை மகனுக்கு பேசி முடிக்க முன்னாலேயே அவன் கூட சோடி போட்டு சுத்துவா.ஊருக்கே தெரியும் . கடைசீல கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்ன அவன் பொட்டுனு போய்ட்டான். ஆறு மாசம் பித்து பிடிச்சவ மாதிரி இருந்தா . ஏதோ வாத்தியாரு அது வரைக்கும் கல்யாணமே வேண்டான்னு இருந்தாரு.அக்கா மகன்னு பரிதாபப்பட்டு கட்டிக்கிட்டாரு. அவர்தான் கட்டிக்கிட்டாருன்னா இவளுக்கு கொஞ்சமாவது கூச்ச நாசம் வேணாமாக்கும் .பல்ல இளிச்சுக்கிட்டு ஆள் கெடச்சா போதும்னு கட்டிக்கிட்டால்ல" ராஜதுரையின் மனைவி சாவித்ரி சொல்ல ..

இவர்கள் பேச்சு வடிவுக்கு ரசிக்கவில்லை "இப்போ அவ பேச்சு எதுக்கு ? பிள்ளைகளுக்கு புது துணியெல்லாம் எடுக்க வேண்டியிருக்கு .இன்னிக்கு சாயங்காலம் போவோமா ?" என்று பேச்சை மாற்றினார்.

“ம்க்கும்..பேச்ச மாத்துறீங்களாக்கும். உங்க உயிர் தோழியாச்சே! விட்டு குடுப்பீங்களா?" நொடித்தாள் தனசேகரன் மனைவி வள்ளி .

இது கண்மணிக்கு முற்றிலும் புதிய செய்தி. தன் தாயும் தாமரையும் தோழிகளா? ஒரு நாளும் இருவரும்நேருக்கு நேர் பேசிக் கொண்டதில்லை.

அது தன் தந்தையின் கட்டளை என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

எதுவும் பேசாமல் வடிவு குனிந்து வெங்காயம் உரித்துக் கொண்டிருக்க .. தான் அறியாத விஷயங்கள் பல தன் குடும்பத்தில் இருப்பதை புரிந்து கொண்டாள் கண்மணி.

தாமரையை குடும்பத்தை கெடுத்தவள் என்று எல்லாரும் கூறியது அவளுக்கு மனதுக்கு துயரமாக இருந்தது.
இன்னொருபுறம் தாமரையையே இவ்வளவு வெறுப்பவர்கள் அவளது அக்கா மகனை எப்படி தன் மணமகனாக ஏற்றுக் கொள்வார்கள்? என்று புதிய கவலையும் முளைத்தது.
அதற்கு மேல் தாமதிக்காமல் உள்ளே செல்ல அன்னையர்கள் பேச்சு அதோடு நின்றது.

சமையல் அறைக்குள் சென்று தண்ணீர் மொண்டு வெளியே வந்தவளின் முகம் முற்றிலும் குழம்பியிருப்பதை கவனித்த தன்னுவின் முகமும் சுருங்கியது.



அந்த சிறிய மாந்தோப்பும் அதனை சுற்றி இருந்த காய்கறி தோட்டமும் சொக்கலிங்கத்திற்கு சொந்தமானது. வழி வழியாக வந்த பரம்பரை நிலம். அவர் எதையும் பெருக்கவில்லையென்றாலும் தரிசாகவும் போடவில்லை.
தன்னால் இயன்ற அளவு காய்கறிகளும் மாந்தோப்புமாக உருவாக்கி இருந்தார்.

தோப்பின் குளிர்ச்சியிலும் வீசிய தென்றலின் இதத்திலும் சூழ்ந்த அமைதியின் ஏகாந்தத்திலும் லயித்தபடி, தன்னவளை குறித்து மனம் அசைபோட ..ஒரு அடிமரத்தில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான் கதிர்.

கிளம்பும்போதே அவனது அய்யா முட்டுக்கட்டை போட்டார் "தாமரை ..இவன் எங்க இப்போ வெளிய கிளம்புறான். வீட்டுக்குள்ள அடங்கி இருக்க சொன்னேன் " என்றார் எங்கோ பார்த்தபடி.
ஆம் ! வந்ததிலிருந்து இன்னும் அவரது கோபம் குறையவில்லை.. பேச்சுகளும் தாமரை வழியாக தான்.

"கைல டிரஸ் எதுவும் கொண்டு வரல அய்யா . கடைத்தெருவில் போய் ரெண்டு செட் ட்ரெஸ்ஸும், சப்பலும் வாங்கணும் ..." இவனும் தரையை பார்த்தபடி சொன்னான்.

அவர் இவனிடம் பாராமுகம் காட்டினாலும் இவனால் முடியாது.அவர் தன்னிடம் இங்கு வர வேண்டாம் என்று சொன்னதற்கு கண்டிப்பாக ஒரு முக்கிய காரணம் இருக்கும் என்பது அவனுக்கு புரிந்து தான் இருந்தது. ஆனாலும் காதல் நம்மை கூட்டி செல்லும் வழியில் செல்லத்தானே வேண்டும்.
எப்படியோ அவரிடம் தப்பித்து இங்கு வந்தாகி விட்டது.

அவனது மனதிற்கினியவள் வருவாளா?
கண்மணியை நினைக்கையில் அவன் மனதின் அடியாழம் வரை ஒரு சில்லிப்பு.
ஏனோ அவளை முதல் முறை பார்க்கையிலேயே ஒரு அதீத ஈர்ப்பு.

ரொம்ப அழகு, ரொம்ப அறிவு ,ரொம்ப கலகலப்பு என்று இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் அவள் தனித்துவமாக தெரிந்தாள் அவன் கண்களுக்கு.

ஏதோ ஒரு வசீகரம் அவளிடம் ..ஒரு வேளை அவனை தழுவும் ஆர்வ பார்வைகளுக்கிடையில் அவள் வெகு சாதாரணமாகவும் அமைதியாகவும் அவனை கடந்து விடுவதாக இருக்கலாம்.அவளது நடை உடை எல்லாவற்றிலும் ஒரு நளினம் கொட்டிக் கிடைக்கும். உடையில் செல்வச்செருக்கு இல்லாவிட்டாலும் அசிரத்தை இருக்காது. அதீதமும் இருக்காது.

அவளை பல முறை பார்வையால் தொடர்ந்தபோதும் அவளிடம் பேசவும் பழகவும் அவனது உள்ளம் துடித்தாலும் கல்லூரி ஆதலால் அதற்கு மேல் எதுவும் அவன் முயன்றதில்லை. அது அவனது பதவிக்கு அழகல்ல அல்லவா?

ஆனால் அவளுக்கும் அவனை பிடித்திருக்கிறதென்று கடந்தசில மாதங்களில் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
இப்போது கிடைத்த சந்தர்ப்பத்தை அவன் வீணாகவும் போக விடவில்லை.இறுக்க பற்றிக் கொண்டுவிட்டான்.

அவள் சொன்ன இரண்டு மணி கடந்து நொடிகள் நிமிடங்களாகி கடந்து கொண்டிருக்க ..இனி அவள் வரமாட்டாளோ என்று மனம் சுணங்க..ஒரு மனமோ அவளுக்கு வக்காலத்து வாங்கியது.
ஆண் பிள்ளை அவனே ஆயிரம் சாக்குகளை சொல்லி வரவேண்டியிருக்கிறது.

அவளோ வீட்டின் செல்ல பெண். பொத்தி பொத்தி வளர்க்கப்படுபவள். கட்டுக்காவலும் அதிகம். இதில் திருவிழாவிற்காக அவள் வீடு நிறைய உறவினர் கூட்டம். அவள் வருவது அசாத்தியம் தான் என்று நினைத்து அவன் கிளம்ப போகையில் சுற்றும் முற்றும் பதட்டமாக நோக்கியபடி வந்து சேர்ந்தாள் அவனது தேவதை.

"சாரி ...சாரி.. லேட் ஆயிடுச்சி."என்று மூச்சு வாங்கியபடி அவனது எதிரில் வந்து அமர்ந்தவளை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.

"ஹாய் ஷாலு ..இவ்வளவு நேரமா வர்றதுக்கு ?"
"என்னன்னு கூப்டீங்க ?"
"ஷாலுன்னு ..உன் பேர் விசாலினி தானே "
"ஆமா ..அது வெறும் சர்டிபிகேட் நேம் தான்..காலேஜ் ஸ்கூல்ல டீச்சர்ஸ் மட்டும் தான் விசாலினின்னு கூப்புடுவாங்க . என் பிரெண்ட்ஸ் கூட கண்மணின்னு தான் கூப்புடுவாங்க. ஆனா ஷாலுன்னு யாரும் கூப்பிட்டதேயில்லை .. "

"எல்லாரும் கூப்புட்ற மாதிரியே நானும் கூப்பிட முடியுமா? நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷலாச்சே!" கூறியவனின் குரல் கனிந்திருக்க.. கேட்டிருந்த பெண்ணவளின் மனமும் கனிந்தது

தன்னவளை தலை முதல் கால் வரை ஆராய்ந்தது அந்த காதலனின் விழிகள்!
சற்றே அசங்கிய தோற்றம் ..தலை குளித்த முன் கூந்தல் ஒரு சிறு கிளிப்பில் அடங்கியிருக்க.. ஒரு கற்றை குழல் மட்டும் அடங்காமல் நெற்றியின் மீது விழுந்தது. பின் கூந்தலோ அலை அலையாய் விரிந்து கிடந்தது.

விழாக்காலம் அல்லவா..அவளது அலங்காரமும் சற்று கூடியிருந்தது.
இன்று ஒரு மயில் பச்சை நிற பட்டு சல்வார் அவளது உடலை தழுவியிருக்க எப்போதும் விட அதிகமாக ஒரு சில நகைகள் உடலை அலங்கரிக்க .. அதுவும் அவளது சங்கு கழுத்தில் வீற்றிருந்த மரகத பதக்கம் வைத்த அட்டிகை அவளது சௌந்தரியத்திற்கு மெருகூட்டியது.

நீளக்கை வைத்த அந்த சுரிதாரும் கவனமாக பின் செய்யப்பட துப்பட்டாவும் அவளது அழகை பொத்தி வைக்க கால்களின் கொலுசுகளும் நகப்பூச்சில் சிவந்த பாதவிரல்களும் மட்டுமே கண்ணுக்கு விருந்தாக.. அவனது ஆண் மனம் சிணுங்கியது.

அவள் கழுத்தில் பாந்தமாய் வீற்றிருந்த அந்த மரகத பதக்கத்தை கண்டதும் ஒரு வியப்பும் ஆச்சரியமும் வந்து போனது கதிருக்கு. எப்போதும் இவளை காணும் போது உள்ளுக்குள் எழும் ஐயமும் சேர்ந்து தோன்றியது.
சட்டென்று தன்னை சமாளித்துக் கொண்டவனாய் "நீ வர மாட்டியோன்னு பயந்திட்டேன் ஷாலு" என்றான்.

“இப்போதான் எல்லாரும் சாப்பிட்டு முடிச்சோம் ..அப்பா சித்தப்பா எல்லாம் கிளம்பிட்டாங்க..அவங்க கிளம்பியதும் தான் வர முடிந்தது.மத்தவங்க எல்லாம் தூங்கிட்டிருக்காங்க. அவங்கள்லாம் எழுந்திரிக்க முன்ன போகணும் ”
“வந்தவுடனே கிளம்பற கதையை பேசாத ஷாலு “ என்றான் மனத்தாங்கல் கொண்டு.

தன் கழுத்தையே மொய்த்த அவனது பார்வையில் நாணியவளாய் "வர வர உங்க பார்வையே சரியில்ல ! வேறென்ன கதையை பேசலாம்னு சொல்லுங்க சார் " என்றாள் அவனது ஷாலு.

அவளது சார் என்ற அழைப்பில் அவன் முகம் பாகற்காய் கடித்தவன் போல் மாறியது." ம்ம் ராமாயண கதை வேணும்னா சொல்லவா“ கிண்டல் குரலில் கூறினான் கதிர்.
“அதுக்கு எதுக்கு இங்க வரணும் ? நம்ம கோயில்லயே இன்னிக்கு வில்லுப்பாட்டு கச்சேரி இருக்கு அங்க போனாலே போதும். எனக்கு ராமாயண கதையெல்லாம் நல்லா தெரியும் .ஸ்கூல்லயே சொல்லி கொடுத்திருக்காங்க " என்று படு சின்சராய் முகத்தை வைத்துக் கொண்டு நக்கலாய் சொன்னாள் கண்மணி ." அது சரி ..இப்போ எதுக்கு இராமாயண கதை ?”

"இல்லை ஒருத்தன் ராத்திரி எல்லாம் ராமாயண கதை கேட்டுட்டு சீதைக்கு ராமன் என்ன வேணும்னு கேட்டா சித்தப்பான்னு சொன்னானாம்.அது மாதிரி இருக்கு "
"எது ?"
" நீ என்னை சாருன்னு கூப்புடறது .. கேக்கவே என்னவோ போலிருக்கு … என் பேர் சொல்லி கூப்பிடு ஷாலு. ப்ளீஸ் "
"காலேஜுல கூப்புட்டு பழகிடுச்சி சார்.. திடீர்னு மாத்த கஷ்டமா இருக்கு .."

"ஏன் ஷாலு ..இப்போ வர சீரியல்ல எல்லாம் ஹஸ்பண்ட சார் சார் னு கூப்புடறாங்களே அந்த ட்ரெண்ட்ல இருக்கியா என்ன ?"
"ஹஸ்பண்டா ?" இவள் வாய் பிளக்க
"எதுக்கு இவ்ளோ ஷாக்கு?"
"இன்னும் யாரோ ப்ரபோஸ் பண்ணி ஒரு நாள் கூட முடியலயாம் அதுக்குள்ள ஹஸ்பண்டாம் " தனக்குள் முணுமுணுத்தாள் கண்மணி.

"என்னது என்ன சொன்ன ஷாலு ..கேக்கலையே ?"என்றான் காதோரம் கையை குவித்து வைத்தபடி.
"விடிய விடிய ஒரு பையனும் பொண்ணும் கேக்க வேண்டிய கதையை கேக்கணும். அதை விட்டுட்டு ராமாயண கதை கேட்டா சார்னு கூப்புடாம மாமான்னா கூப்பிடுவாங்க .."ன்னு சொன்னேன் .
"ஓஹ்..அதென்னம்மா கேக்க வேண்டிய கதை"
"அதுவே தெரியாதா? உன் பாடு ரொம்ப கஷ்டம்டி கண்மணி " என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் கண்மணி.

"அடிப்பாவி ..உன்னை போய் அப்பாவின்னு நெனச்சிட்டேனே! " முகம் மலர வாய் விட்டு கம்பீரமாய் சிரித்த அவனது முகத்தையே ரசித்துக் கொண்டிருந்தாள் அவனது ஷாலு.

மேலும் சிறிது நேரம் 'ஸ்வீட் நத்திங்ஸ் ' பேசியவர்களிடம் பிரிய மனமில்லாத ஒரு விடைபெறல்!

"சரி நான் வர்றேன். எல்லாரும் தூங்குறாங்க.முழிக்கிறதுக்குள்ள நான் போகணும்."
"இப்போவே போணுமா ஷாலு ?" ஏக்கமான அவனது கேள்வியில் மங்கையவள் மனம் உருகினாலும்..அறிவு மண்டையில் குட்டியது.' அடியே கண்மணி.. அங்க ஒண்ணுக்கு பத்து சி.ஐ.டி இருக்கு நம்ம வீட்ல..மொத நாளே தொக்கா மாட்டிப்ப' என்று அது செவ்வனே அறிவுறுத்த .."இல்லல்ல நான் இப்போ போயே ஆகணும் "

"சரி நான் கேட்டது என்னாச்சு ..?" விழிகள் கொஞ்சி கெஞ்ச தன்னவளின் வதனம் பார்த்து நின்றான் கதிர்.
"என்ன கேட்டிங்க? " என்றாள் படபடப்பாக! கற்பனை குதிரை தறி கெட்டு ஓட.. என்ன கேட்டான் என்று யோசித்து பார்க்க. ஒன்றும் தோன்றவில்லை!
அவள் முகத்தையே பார்த்திருந்தவனுக்கு சிரிப்பு பொங்கியது.
"என்னை பேர் சொல்லி கூப்புட சொல்லிக் கேட்டேன்….நீ என்ன நினைச்ச டியர் ? " என்று இளஞ்சிரிப்போடு அவன் கூற ..
உன்னை நானறிவேன் என்ற செய்தியை அவன் குரலே எடுத்துரைக்க "அது திடீர்னு பேர் சொல்லி கூப்புட வரல ..நாளைக்கு கூப்புடுறேன் " என்றாள் தப்பிக்கும் முகமாக.

உண்மையில் மனதிற்குள் பல்லாயிரம் முறை அவன் பெயரை உருப்போட்டிருப்பாள். ..கடந்த மூன்று மாதங்களாக!
"அப்போ நாளைக்கும் மீட் பண்றோம் இல்லையா ?"

ஐயோ ..என்ன இன்னைக்கு இவன்கிட்டே சிக்கிட்டே இருக்கோம் என்று நினைத்தவள் "ட்ரை பண்றேன் ..முடியுமான்னு தெரியல " என்றாள்.

"கண்டிப்பா முடியும். நாளைக்கு எப்போ எங்கே பாக்கலாம்னு சொல்லு ?"
"உங்க பாசிடிவிடிக்கு அளவே இல்லையா? இன்னிக்கு பாத்ததே பெரிய விஷயம்.எவ்வ்ளோ கஷ்டப்பட்டு எல்லார் கண்லயும் மண்ணை தூவிட்டு வந்தேன் தெரியுமா? அதுலயும் என் தங்கச்சி ஒருத்தி இருக்கா..தன்யஸ்ரீனு! சரியான கழுகு மாதிரி பார்வை..நேத்துலருந்து அவகிட்ட சிக்கி தவிக்கிறேன்".

"அதெல்லாம் முடியாது ஷாலு..நாளைக்கு நீ வர்ற.எப்போ எங்கேன்னு மட்டும் மெசேஜ் போடு" என்றவன் அவளையே பார்த்து நிற்க அவனை திரும்பித் திரும்பிப் பார்த்து விழிகளில் நிரப்பியபடி தங்கள் தோட்ட வீட்டை நோக்கி நடந்தாள் கண்மணி.

இவள் தோட்ட வீட்டிற்கு வந்து சேர்ந்த நேரம் அன்னையர் எல்லோரும் விழித்து மாலை காபி வடை பஜ்ஜி என்று சமையலில் இருக்க.. இளைஞர் பட்டாளமோ முன் மதியத்தில் போட்ட ஆட்டத்தில் உடல் களைத்திருக்க, செல்வியின் சமையலில் வயிறு நிறைந்திருக்க இன்னமும் உறக்கத்தில் இருந்தது.அனைவரும் கீத்துக் கொட்டகையின் அடியில் அப்படியே உறங்கியிருக்க ..மெல்ல பூனை பாதம் வைத்து சென்று தான் படுத்திருந்த இடத்தில் படுத்துக் கொண்டாள் கண்மணி.

அப்படியே சிறிது நேரம் கண்களை மூடி படுத்திருந்தாள்.
கதிரின் முகம் மனக்கண்ணில் தோன்ற இளம் புன்னகை ஒன்று இவள் இதழ்களில் உதித்தது.

வெட்கம் ஒருபுறமும் காதல் ஒருபுறமும் மனதில் நிறைந்திருக்க.. அடக்கப்பட்ட சிரிப்பில் விழிகள் மின்னின. "கதிர்" என்று மெல்ல அழைத்துப் பார்க்க... உள்ளுக்குள் ஒரு ரகசிய சிலிர்ப்பு. மேனி சிலிர்த்து அடங்க ஒருபுறமாக திரும்பி படுத்த கண்மணியின் முகத்திற்கு நேரே தெரிந்தது கேள்வியுடன் விரிந்திருந்த இரு விழிகள்.

 
கதிரூ துணி செருப்பு வாங்கப்போறேனு சொல்லிட்டு வந்தியே வூட்டுக்கு போகும்போது வெறுங்கையோட போயி மாட்டிக்காதே.????? யாருப்பா அது கண்ணுலையே கேள்வி கேக்கறது? தனுவா?????
 
Nice ?
கண்மணி இந்த கூட்டத்துக்கு மத்தியில கதிரை போய் பார்த்துட்டு வந்துட்டாயே.. தைரியம் தான் உனக்கு.. இப்போ யார் பார்த்தது..
 
எப்படி சமாளிக்க முடிஞ்சது
கண்மணி
இது யாரு ரெண்டு விழி
 
அடிப்பாவி கண்ணுமணி போய்ட்டு வந்தாச்சா சூப்பர் 👌
இந்த கூட்டத்தை எப்படி சமாளித்தாய்
சரிதான் மாட்டினியா ..?யாரப்பா அது ??இவ்ளோ கிட்ட மூஞ்சிய காமிக்கிறது😂
சூப்பர் 😀
 
Top