Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! 02

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் இரண்டு!

கோகிலா! அவளது இந்த செய்கையை ஒருவரும் எதிர்ப்பார்க்கவுமில்லை, ஜீரணிக்க இயலவுமில்லை. அத்தனை பிடிவாதமாய் பேரின்பன் தான் வேண்டும் என அழுத்தி சொன்னவள், கழுத்தில் கிடந்த தாலியை கழட்டி கிஷோரின் முகத்தில் விசிறியடித்துவிட, அது என்னவோ ஒரு நொடியில் நிகழ்ந்துவிட்டது. ஆனால் அதன் தொடர்நிகழ்வுகள் கோகிலாவின் மனதிடத்தை உலுக்கியது என்னவோ உண்மை...!



மேடை வரை வந்து தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என ஒரு ஆண் சொன்னால் அவனை தூற்றாத சமூகம், அதையே ஒரு பெண் செய்தால் அவளை ஏனோ தீண்டத்தகாதவள் போல பார்ப்பது இன்னமும் இருந்து தான் வருகிறது. கிஷோரின் உண்மை முகம் உரிக்கப்பட்ட பின்னும் ‘ஒரு பொண்ணுக்கு இத்தனை ஆங்காரம் ஆகாதுப்பா!!’ என சொல்லத்தான் செய்தனர்.



அதையே செல்லமும் தன் மகளிடம் சொன்னது தான் இதில் ஆச்சர்யம்! அவருக்கு ஏனோ மறந்து போனது, சொந்த அக்காளின் திருமணத்தை நிறுத்தித்தானே அவளுக்கு நிட்சயமானவனை தான் திருமணம் செய்தோம் என! அந்த பிடிவாததில் பாதியேனும் தன் மகளுக்கு இருக்காதா என யோசிக்க தவறினார்.



தாலியை வீசிவிட்டு கோகிலா சென்றுவிட, கிஷோரை இழுத்துக்கொண்டு செல்லும் காவல்துறையின் பின்னையே ஓடினார் ஷங்கர். அவரால் தன் தேர்வில் பிழை இருக்கும் என சந்தேகிக்கக்கூட முடியவில்லை. எப்படியேனும் கிஷோரை மீட்டு தன் மகளுடன் சேர்த்து வைத்துவிட வேண்டும் என எண்ணினார்.



கணவரின் பின்னோடு செல்ல போன செல்லம் கண்ணீர் விடிய நின்றுக்கொண்டிருக்கும் தங்கத்தை பார்த்து, “ஆக்கிட்டல்ல? என் பொண்ணையும் உன்னைமாறியே ஆக்கிட்டல்ல, தாலியறுத்து நிக்க வச்சுட்டியே!!” என்று காரணமேயின்றி தங்கத்தை வெறுப்புடன் தேள் கொடுக்காய் கொட்டிவிட்டு சென்றார்.



மண்டபத்தில் இருந்து வெளியேறிய கோகிலா எங்கும் நிற்காது விறுவிறுவென தங்கள் வீட்டை நோக்கி நடக்க தொடங்கிவிட்டாள். திருமணத்திற்கு வந்திராத ஊராட்கள் சர்வ அலங்காரத்தில் களைந்த ஓவியமாய் மணப்பெண் இப்படி சாலையில் நடந்துசெல்வதை விசித்திரமாய் பார்த்து முனுமுனுத்துக்கொண்டனர்.



வீட்டிற்கு சென்ற கோகிலா, நேரே இன்பனின் அறைக்குள் புகுந்தாள். வெறும் தரையில் சுவரில் சாய்ந்து அமர்ந்தவள், தன் வெறித்த பார்வையை கொஞ்சமும் மாற்றாது அப்படியே இருந்தாள். யார் வந்து பேசியும் அவளிடம் விடையில்லை. சிறு விழிமொழி கூட இல்லை. தேவைக்கு சிறிது உணவு, மிக சொர்ப்பமாய் உறக்கம் என இன்பனின் அறைக்குள்ளே முடங்கிப்போனாள் கோகிலா. எத்தனை வற்ப்புறுத்தியும் அவள் தனது திருமண உடையில் இருந்து மாறவே இல்லை. அவளை அந்த நிலையில் பார்க்க பார்க்க மனது கதறியது.



பார்ப்பவர்களால் அவள் மனதில் இருப்பதை கணிக்கவே இயலவில்லை. அவள் தன்னையே வருத்திக்கொண்டிருப்பதாய் தோன்ற, அவளை மீட்டெடுக்க வேண்டியவனோ மூன்று நாட்களாய் சுவடே இன்றி தொலைந்துப்போனான். கோகிலாவை உயிர்ப்பிக்கவேனும் இன்பன் வேண்டும் என்ற நிலை இருக்க, தீவிரமாய் அவனை தேடிக்கொண்டிருக்கிறான் காண்டீபன்.



“அம்மாடி, இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி ரூமுலையே அடைஞ்சி கிடப்ப? உன்னை பார்க்க பார்க்க மனசெல்லாம் அறுக்குதுடா?” சிவகாமி கோகிலாவின் அருகே அமர்ந்து அவள் தலை கோதியபடி சொல்ல, எப்போதும் போல அவளிடம் மறுமொழி இல்லை.



“எழுந்து வெளியில வா கண்ணு!!”

“....”

“இந்த கிழவிக்காக வாடா கண்ணு”

“....”

“கோக்கிம்மா...” வாஞ்சையாய் ஒலித்த அவர் குரலை தாண்டி பெரும் குரலாய் ஒலித்தது, “அம்மா.... இன்பன் வந்துட்டாஆஆஆன்....” என்ற தங்கத்தின் சத்தம்.



‘வந்துட்டானா?’ என்ற சிவகாமி தன் சரீரத்தை தூக்கிக்கொண்டு அவசரமாய் எழ, இன்பன் வந்துவிட்டான் என்ற செய்தி கிடைத்தும் கோகிலா எழவில்லை.



சிவகாமி மாடியிறங்கி கீழே செல்ல, கூடத்தின் நடுவே நின்றிருந்தான் பேரின்பன், அன்று அணிந்திருந்த அதே வேட்டி சட்டையில்! மூன்று நாட்கள் மழிக்காத தாடியுடன்! எப்போதும் போல இருப்பதாய் தோன்றினாலும் அவனிடம் ஏதோ ஒரு மாறுதல். ஒருவர் முகத்தையும் காணாது தலை குனிந்து நின்றிருந்தான் பேரின்பன்.



“எங்கடா போன? எங்க போன?” தங்கம் அவன் நெஞ்சில் அடிக்க, அவரை அவன் தடுக்கவுமில்லை, கேட்டதற்கு பதில் சொல்லவுமில்லை.



ஒண்டிவீரர் அவன் முகத்தை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தார். கண்களில் ஒளியற்று, வேதனையின் சாயலாய் முகம் கசங்க, தெம்பற்றவன் போல நின்றிருந்தான் பேரின்பன்.



அவனிடம் வந்த சிவகாமி, “எங்கடா போய் தொலஞ்ச? சொல்லுடா! உன்னை நம்பி ஒருத்தி இருக்காளேன்னு கொஞ்சமாவது அறிவிருக்கா? சொல்லாம கொள்ளாம ஓடி போயிருக்க?” என்று கத்த, “ஷ்.. சிவகாமி?” என்று அதட்டினார் ஒண்டிவீரர்.



அவனை அடித்து அடித்து ஓய்ந்த தங்கம் அப்படியே மடிந்து அமர்ந்து அழ, சிவகாமி, “என்னை எதுக்கு அதட்டுறீங்க? மூணு நாளா இவனை காணாம நம்ம தவிச்ச தவிப்பு நமக்கு தானே தெரியும்!! அதைவிட இந்த கோகிலா பொண்ணு எப்படி துவண்டு போய் கடக்குறா? அவளை இந்த நிலைக்கு தள்ளிட்டு இவன் எங்க ஊரை சுத்திட்டு இருந்தான்னு கேளுங்க நீங்களே!!!” என்றார் ஒண்டிவீரரிடம்.



இன்பனை காணாதவரை இருந்த பரிதவிப்பு, பதட்டம் அனைத்தும் அவனை கண்டதும் கோவம் என்ற போர்வைக்குள் ஒளிந்துக்கொண்டது.



ஒண்டிவீரர், “எங்க கண்ணு போன? ஏதாவது பிரச்சனையா உனக்கு? ஆளே சரியில்லையே?” அருகே சென்று இதமாய் அவர் கேட்க, எச்சில் கூட்டி விழுங்கினான் இன்பன். பேச மறுக்கும் தொண்டையை செருமிக்கொண்டு, “காண்டீபனை யாரோ அடிச்சு போட்டுருக்காங்கன்னு ஒருத்தன் வந்து சொன்னான் தாத்தா! அவனோட போனேன்! திரும்பி வர லேட் ஆகிடுச்சு!!” என்றான் எங்கோ பார்த்தபடி.



“தேடிட்டு திரும்ப வர மூணு நாள் ஆச்சாப்பா?” இப்போது ஒண்டிவீரர் சற்று காரமாகவே கேட்டார். அவனிடம் இருந்து பதில் வரும் அறிகுறியே இல்லை.



அடுத்து அவர் கேட்கும்முன், “எனக்கு கோகிலாவை பார்க்கணும்” என்றான் பேரின்பன். சில நிமிடங்கள் அங்கே பேரமைதி நிலவ, “உன் ரூம்ல இருக்கா” என்றார் சிவகாமி.



வந்தவனுக்கு கோகிலா அந்த வீட்டில் தான் இருக்கிறாள் என்று எப்படி தெரியும் என ஒருவரும் துருவவில்லை.



மாடியறைக்கு படியேறுபவன் நடையில் அத்தனை வித்தியாசம். எதற்கோ தயங்கி தயங்கி ஏறினான். நடையும் அத்தனை துடிப்பாய் இல்லை. கீழுதட்டை கடித்தபடி அவன் மாடியேறும் தோற்றம் ஒண்டிவீரருக்கு கலக்கத்தை கொடுக்க, செல்லும் அவனை சிந்தனையோடு பார்த்துக்கொண்டே நின்றார்.



ஒருக்களித்திருந்த அவன் அறைக்கதவை படபடக்கும் கரங்களால் அவன் திறக்க, அகண்டு திறந்த கதவின் வழியே சென்றான் இன்பன். சுவரோடு சுவராய் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் அவன் காதலியை அந்த ஒரு கோலத்தில் காண்போமென அவன் கிஞ்சித்தும் எண்ணவில்லை. தலை களைந்து சூடியிருந்த பூக்களெல்லாம் காய்ந்து உதிர்ந்து, புடவை நலுங்கி, காய்ந்த உதடுகள் நீர்சத்தையே மறந்ததை போல வெளுத்திருக்க, தூசு படிந்த பழங்கால ஓவியமாய் கண்களில் வெறுமையுடன் அமர்ந்திருப்பவளை காண, அவன் நெஞ்சுக்குழியை கத்திக்கொண்டு அறுப்பது போல வலித்தது அவனுக்கு.



அவள் கால்மாட்டில் குனிந்து அமர்ந்த இன்பன், முயன்று வரவழைத்த முறுவலுடன், “ஏய், அழுக்குருண்டை, குளிக்கலையா?” என்றான்.



அவள் பார்வை அவனை கூறுப்போட, ‘எங்க போனேன்னு மட்டும் கேட்டுடாதடி! ப்ளீஸ்!’ என கண்களால் கெஞ்சிக்கொண்டிருந்தான் பேரின்பன்.



தன் தவிப்பை மறைத்தபடி, “சாப்பிட்டியா மூக்கி?” என்றான் மென்மையாய். காலையில் தங்கம் கொண்டு வந்து வைத்த உணவு தட்டில் அனாதையாய் கிடக்க, அதை எடுத்தவன், ஒரு உருண்டை பிடித்து அவன் வாயருகே கொண்டு சென்று, “சாப்புடுமா” என்றான். என்ன முயன்றும் அவன் குரலில் கரகரப்பு மறைக்க முடியாது போக, கண்கள் கூட பனித்து போனது.



‘அவன் எதையோ மறைக்கிறான்’ என தெரிந்தும், அவன் மீது கொள்ளை கொள்ளையாய் கோவம் இருந்தும், அவள் முன்னே நடுங்கியபடி உணவை ஏந்தி நிற்கும் அவன் கரத்தை தட்டிவிட அவளுக்கு மனம் ஒப்பவில்லை. அவள் இதழ்கதவு மெல்ல திறந்து உணவுக்கு வழிவிட்டது.



அவள் ஒரு வாய் உண்டதிலேயே அவன் முகம் அவ்வளவு நிறைவை பூசியது. ஒரு பருக்கை விடாமல் அவளுக்கு ஊட்டி முடித்தவன், “எழுந்துருச்சு குளிடா!! முதல்ல இந்த புடவை நகையெல்லாம் கலட்டி தூர போடு! உன்னை இந்த கோலத்துல பார்க்க பார்க்க உயிரோட சாகுறமாறி இருக்கு! நான் உன்னை எந்த நிலைமைல விட்டு போனேன்னு சொல்லாம உணர வைக்குது கோகிலா” என்றான் கரகரப்பாய்.



‘இதற்க்குதானே இத்தனை நாளாய் இதே கோலத்தில் காத்திருந்தேன்!’ என சொன்னது அவளது நயனங்கள். அதை புரிந்துக்கொண்டவனின் வேதனை இன்னமும் தான் அதிகமானது. பொறுமையாய் எழுந்து நின்ற கோகிலா, சுவரை பிடித்துக்கொண்டே மரத்துக்கிடந்த தன் கால்களை குளியலறை நோக்கி நடை பழக்கினாள்.



கட்டுப்பாட்டை மீறி வழிந்த கண்ணீரை முகத்தோடு அழுந்த துடைத்த இன்பன், வேக பெருமூச்சோடு எழுந்து வெளியே சென்றான்.

மாடியிறங்கும்போதும் அவனிடம் எப்போதும் இருக்கும் ஒரு துள்ளல் காணாமல் போயிருந்தது. மிக மெதுவாய் இறங்கியவன், கூடத்தை நோக்கி செல்ல, “வந்து சாப்புடு” என்ற தங்கத்தின் குரலில் திரும்பினான்.



“வந்து சாப்பிடுன்னு சொன்னேன்!” மீண்டும் சொன்னவரின் குரல் அந்நியமாய் ஒலிக்க, கசப்பாய் வளைந்தது அவன் அதரங்கள்.

“இல்ல, வேண்டாம்” என மறுத்த இன்பனுக்கு பசி வயிற்ரை கிள்ளியது. மாத்திரை போட வேண்டிய நேரமும் வந்துவிட்டது. இருந்தும் அவனால் சகஜமாய் அமர்ந்து அங்கே உணவுண்ண ஒப்பவில்லை.



“அத்தை தான் சொல்றால்ல! நீயும் பார்க்க சோந்தாப்புல இருக்க! ரெண்டு வாய் சாப்புடு! மத்ததெல்லாம் அப்பறமா பேசுவோம்!” ஒண்டிவீரரின் வார்த்தையை தட்ட முடியாமல், அமர்ந்தான். உணவு அவன் தொண்டைக்குழி தாண்டி இறங்க மறுக்க, தண்ணீரை குடித்து குடித்து முழுங்கினான்.



“எங்க தாண்டா போன?” இன்பனின் கேசம் வருடி சிவகாமி மெதுவாய் கேட்க, உதட்டை இறுக்க மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான் இன்பன், தப்பித்தவறிக்கூட பதில் சொல்லிவிடக்கூடாது என்ற எண்ணத்தில்...!



“சொல்லேண்டா”



“சிவகாமி? அவனை கொஞ்சம் ப்ரீயா விடு! உன் சின்ன பேரனுக்கு போன் போட்டு இன்பன் வந்துட்டான்னு சொல்லி போலிஸ் கம்ப்ளைன்ட்ட வாபஸ் வாங்க சொல்லு!!” ஒண்டிவீரர் நியாபகப்படுத்தியதும், “ஆமாங்க, இந்நேரம் அவன் எங்க எங்க சுத்திட்டு இருக்கானோ பாவம்” என்றவர் அவனை அழைத்தார்.



இரண்டு ரிங்கிலேயே அழைப்பை ஏற்றவன், “என்னாச்சு அம்மாயி?” என்றான் பதட்டமாய்.



“இன்பன் வந்துட்டான்ப்பா” என்று சிவகாமி சொன்னதும், உடலின் ஒட்டுமொத்த சக்தியும் ஓய்ந்ததை போல தளர்ந்துப்போனவன், கண்ணை மூடி ஆசுவாசமாய் மூச்சுவிட்டான்.



“உன்னை யாரோ அடிச்சுப்போட்டுட்டாங்கன்னு சொல்லி எவனோ ஒருத்தன் வந்து அழைச்சுட்டு போயிருக்கான்ப்பா இன்பனை” என்று தெரிந்த தகவலை அவர் பகிர, “என்ன? எனக்கு அடிப்பட்டுருக்குன்னு சொல்லி அழைச்சுட்டு போனானா?” என்றார் அதிர்வாய்.



“ஆமாப்பா, அப்படிதான் இன்பன் சொல்றான்” என்றதும், “சரிம்மாயி! நான் வீட்டுக்கு வரேன்” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு, கண்ணை மூடி ஒரு நீண்ட நிமிடம் யோசித்தான். யோசிப்பின் முடிவில் அவனது மில்லின் கணக்கர் ஜோதிலிங்கத்துக்கு அவன் விரல்கள் அழைப்பை விடுத்தது.



“சொல்லுங்க தம்பி?”

“கான்ட்ரேக்டை கேன்சல் பண்ணிட்டு, அரிசிமூட்டை சப்பளையை நிறுத்திட்டேன்னு ஒருத்தன் கும்பலா நம்ம மில்லுக்கே வந்து சத்தம் போட்டுட்டு போனானே? அவன் அட்ரஸ் சொல்லுங்க” என்றான்.



“அதுவா? இருங்க தம்பி!” என்றவர் நோட்டை எடுத்து முகவரி பார்த்து அவனிடம் சொல்ல, “சரி நீங்க மில்லை பார்த்துக்கோங்க, நான் நாளைக்கு தான் வருவேன்!!” என்றுவிட்டு அவர் கொடுத்த முகவரிக்கு காரை விரட்டினான். ஆழ யோசிக்காது அவசரப்படும் காண்டீபனின் குணம், வேலை செய்ய தொடங்கியது.




-வருவான்...
 
Last edited:
பேரின்பனுக்கு ஏன் கை நடுங்குது?
அந்த வீணாய்ப் போன கிஷோர் டாக் இன்பனுக்கு போதை ஊசி போட்டு இத்தனை நாளாய் இவனை மயக்கத்தில் வைச்சிருந்தானா?
 
Last edited:
ஒரு வழியாக இன்பனை அழைத்து வந்து விட்டீர்கள். இன்பனிடம் பேசாமல் காண்டீபனாக முடிவெடுத்து செல்கிறான். நல்ல பதிவுக்கு நன்றி.
 
Top